Thursday, 6 August 2026

சீதை சிறை வைக்கப்பட்டது எங்கே! - மூலிகை மன்னன் செ.ர.பார்த்தசாரதி


சீதை சிறை வைக்கப்பட்டது எங்கே! 

- மூலிகை மன்னன் செ.ர.பார்த்தசாரதி


இலங்கை நாட்டில் நுவரெலியா என்ற இடத்தில் ‘சீதை அம்மன்’ கோயில் என்ற பெயரில் அண்மைக் காலத்தில் கட்டப்பட்ட கோவில் ஒன்று உள்ளது.

இக்கோவிலை 1982 ல் ரூ.10 இலட்சம் செலவில் பெரிய அளவில் எடுத்துக் கட்ட தமிழ் அமைச்சர் (அப்போதைய) இராஜதுரை அவர்கள் திட்டமிட்டிருந்தார். ஆனால், இதுவரை அத்திட்டம் நிறைவேறாமல் இருந்தது. 

ஆனால், தற்போது இலங்கை அரசு, வெளிநாட்டு பயணிகளை கவர சிதை அம்மன் கோயிலை புதுப்பித்து பெரிய அளவில் கட்ட திட்டமிட்டுள்ளது.

இந்த அறிவிப்பை கேட்டவுடன் இரண்டு பக்கமிருந்தும் வலிமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஒரு பக்கம் புத்த மதத்தைச் சேர்ந்த சிங்களவர்கள்; 'இந்து மத, கோயிலை பெரிய அளவில் விளம்பரப் படுத்த கூடாது' என்றும்; மறுபக்கம் இலங்கை நாட்டின் தொல்குடி மக்களான தமிழர்கள்; இராவணனை இணையற்ற வீரனாக கருதுவதால், 'இராவணனின் எதிரி யான 'இராமன்' சம்பந்தப்பட்ட கோயிலை பெருமைப் படுத்த கூடாது’ என்றும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இக்கோயிலைப் பற்றி அலசுவோம்!'குட்டித்தீவை எட்டிப்பார்த்தேன்' என்ற நூலில் இருந்து) 

“நுவரெலியாவில் இருந்து கதிர்காமம் நோக்கி இறங்கு முகமாக செல்லும் சாலையின் ஓரத்தில் ஒரு பள்ளத்தில் 'சீதை அம்மன்’ கோயில் என்ற பெயரில் இக்கோயில் உள்ளது.

இது, தம் ஊர் கிராமக் கோயில்கள் போல் சிறிய கோயில், அது சமீபத்தில் தான் கட்டப்பட்டிருக்க வேண்டும். பார்த்தால் மூன்று மலைகள் தெரிகின்றன. நடுவில் இருக்கும் மலை நல்ல உயரம்: இரு புறமும் சிறிய மலைகள்.

அந்த உயரமான மலையில் தான் இராவணன் சீதையை சிறை வைத்து இருந்தான் என்று சொல்லப்படுகிறது.

அந்த மாவைக்கு ‘சீதா எலியா’ என்று பெயர். சிங்கள மொழியில் ‘எலியா’ என்றால் மலை, சீதை சிறையில் இருந்த மலை என்பதால் ‘சீதா எலியா' என்று பெயர் ஏற்பட்டது.

சீதையை அசோகவனத்தில் சிறை வைத்ததாக நாம் படித்து இருக்கிறோம். ஆனால்; இந்த மலையில் அசோக மரமே கிடையாது. வேறு மரங்களும் இல்லை. ஆட்கள் செல்ல வசதியும் இல்லை” 

மேற்கண்ட செய்திகள் 'இராணி' வார ஏட்டின் ஆசிரியர் குரும்பூர் குப்புசாமி (அ.மா.சாமி) அவர்கள் இலங்கையைச் சுற்றிப் பார்த்து விட்டு வந்து 'குட்டித் தீவை எட்டிப்பார்த்தேன்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியாகும். 

ஆட்கள் செல்ல வசதி இல்லாத, மரங்களே இல்லாத ஒரு மலையைக் காட்டி ‘இங்குதான் சீதை'யை சிறை வைத்தனர்; என்று சொன்னால் யார் தான் நம்புவார்கள்! குரும்பூர் குப்புசாமி அவர்களுக்கு மனசாட்சி உறுத்தியதால் உண்மையை எழுதியுள்ளார். 

இராமாயணத்தில் அரண்மனையை ஒட்டியுள்ள அசோகவனத்தில் சீதையை சிறை வைத்ததாகத்தான் உள்ளது. ஆனால் இலங்கையில் ஒரு மொட்டையான மலையைக் காட்டி: இதுதான் சீதை சிறை வைக்கப்பட்ட இடம் என்கிறார்கள் என்பதிலிருந்து; இராமாயண கதையை உண்மை என்று காட்ட, தற்காலத்தில் இட்டுக் கட்டப்பட்ட இடமே  நுவரெலியாவும்  ‘சீதை அம்மன்' கோயிலும் ஆகும் என்பதை அறிய முடிகிறது.

- விடுதலை ஞாயிறு மலர், பக்கம் V , 18.4.1999



No comments:

Post a Comment