Showing posts with label சுயமரியாதை இயக்கம். Show all posts
Showing posts with label சுயமரியாதை இயக்கம். Show all posts

Monday, 13 July 2026

இன்றைக்கு இருக்கும் திராவிடர் கழகம் சுயமரியாதை இயக்கமே! - கலி.பூங்குன்றன்

 


நீதிக்கட்சி என்று சொல்லப்படும் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் தோற்றம் 1916ஆம் ஆண்டு.

இந்த அமைப்புத் தோன்றுவதற்கு மும்மூர்த்திகளாக இருந்த பெருமக்கள் டாக்டர் சி.நடேசனார், பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர் ஆகியவர்கள் ஆவார்கள்.

1912ஆம் ஆண்டிலேயே நீதிக்கட்சிக்கு முன்னோடியாக ஓர் அமைப்புத் தோற்றுவிக்கப்பட்டது. அதற்குரிய பெருமான் டாக்டர் சி.நடேசனார். அவ்வமைப்பின் பெயர் மெட்ராஸ் யுனைட்டெட் லீக் (Madras United League) 1913ஆம் ஆண்டில் திராவிடர் சங்கம் என்று பெயர் மாற்றம் பெற்றது.

1916 நவம்பர் 20ஆம் தேதி சென்னை வேப்பேரியில் வழக்குரைஞர் எத்திராஜுலு முதலியார் இல்லத்தில் பார்ப்பனர் அல்லாத பெருமக்கள் டாக்டர் சி.நடேசனார், பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர், ராமராய நிங்கர் (பனகல் அரசர்) உள்ளிட்ட 26 பார்ப்பனர் அல்லாத பிரமுகர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு தோற்றுவிக்கப்பட்டதுதான் இந்த நீதிக்கட்சி.

அதன் முதல் கொள்கை அறிக்கையை (Non-Bramin Manifesto) வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் வெளியிட்டார். (20_12_1916) 


சுயமரியாதை இயக்கம் என்கிறபோது அதற்கென்று தொடக்க விழா இல்லை; எந்த நாளில் தோற்றுவிக்கப்பட்டது என்றுகூட அறுதியிட்டுக் கூறமுடியாது. சமூகச் சூழலும், அந்தப் பருவத்தில் ஞான சூரியனாகத் தோன்றிய தந்தை பெரியார் அவர்களின் சிந்தனையில் வெடித்த கருத்துகளும் சேர்ந்து பெற்ற பிள்ளைதான் சுயமரியாதை இயக்கம்.

காங்கிரசில் இருந்தபோதே தந்தை பெரியார் குடிஅரசு இதழைத் துவக்கினார்களே _ அந்த மே 2ஆம் தேதி (1925)யை சுயமரியாதை இயக்கத்தின் தொடக்க நாள் என்று கூறுவோரும், தந்தை பெரியார் காஞ்சிபுரத்தில் சமூக நீதிக் கொள்கைக்காக காங்கிரசை விட்டு வெளியேறினாரே (22.11.1925) அந்த நாள்தான் சுயமரியாதை இயக்கம் பிறப்பெடுத்த நாள் என்றும் இரு வேறு கருத்துகள் உண்டு என்றாலும் 1925இல் தந்தை பெரியார் என்னும் பேராசானின் மூளையில் பிரசவிக்கப்பட்ட இயக்கம் இவ்வியக்கம் என்பது மட்டும் உண்மை. அதன் அடிப்படையில்தான் 1975இல் தஞ்சையில் பொன்விழா அன்னை மணியம்மையார் அவர்களால் சீரும் சிறப்புடனும் கொண்டாடப்பட்டது. 

சுயமரியாதை இயக்கத்தையும், நீதிக்கட்சியையும் இணைத்துதான் சேலத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் என்ற   வரலாற்றுத் திருப்பு முனையை உருவாக்கினார்! (27.8.1944)

இன்றைக்கு இருக்கும் திராவிடர் கழகம் சுயமரியாதை இயக்கமே! 


நீதிக்கட்சி நூறு சுயமரியாதை இயக்கம் தொண்ணூறு - கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் கட்டுரையின் சில பகுதிகள்.

-உண்மை இதழ்,16-30.11.15,


சுயமரியாதை இயக்கத்தை, நீதிக்கட்சியோடு இணைத்துதான், திராவிடர் கழகமாக இன்றைக்கு மாறி இருக்கிறது!

கடந்த 22.9.2026 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் சார்பில், திராவிட நாகரிகம் – சிந்துவெளி அகழாய்வு 102 ஆம் ஆண்டு விழா – ‘‘சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் ஒரு பகுதி வருமாறு.....

எனவே,  அப்படி திராவிட இயக்கம், திராவிடம், திராவிடன் என்ற பண்பாட்டுத் தளத்தை வேகமாக முன்னே கொண்டு செல்லக்கூடிய ஒரு கட்டம். அதேபோல நண்பர்களே, அடுத்த கட்டத்தில், தந்தை பெரியார் அவர்கள், அப்போது அந்த நீதிக்கட்சியை அவர்கள் எதிர்த்தாலும் கூட, பிறகு அதே நீதிக்கட்சியால்தான் விடியல் வரும் என்பதை உணர்ந்து, பிறகு அவர்கள் சுயமரியாதை இயக்கத்தை, நீதிக்கட்சியோடு இணைத்துதான், திராவிடர் கழகமாக இன்றைக்கு மாறி இருக்கிறது.

அப்போது தந்தை பெரியார் அவர்கள் ஒரு கருத்தை, நீதிக்கட்சியினருக்குச் சொன்னார்கள். ‘‘நீங்கள் ஏன் பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்று எதிர்மறை பெயரை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? பார்ப்பனர்கள் 100–க்கு மூன்று பேர். அல்லாதார்  97 பேர்.  97 பேர்களுக்கும் ஓர் அடையாளம் வேண்டுமே தவிர, இந்த மூன்று பேர் அல்லாதவர்கள் என்று சொல்வது இருக்கிறதே, அது பகுத்தறிவுக்கும் ஏற்புடையதல்ல; நியாயத்துக்கும் கட்டுப்பட்டது இல்லை’’ என்று அவர்கள் சொல்லிவிட்டு, நமக்கு அருமையான பண்பாட்டு அடிப்படையிலே, வெறும் இன அடிப்படையில் அல்ல – கவனிக்க வேண்டும், பண்பாட்டு அடிப்படையிலே, திராவிடம் என்று சொல்லக்கூடிய அளவில்,  ‘‘இதை திராவிடர் இயக்கம் என்று, திராவிடம் என்று அழையுங்கள்! திராவிடர் இயக்கம்’’ என்று அவரே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சுயமரியாதை இயக்கத்திற்கு நிறுவனத் தலைவர் – நீதிக்கட்சிக்குப் பனகால் அரசர்,  சர். பிட்டி தியாகராயர்  எல்லாம் வெளியேறிய உடனே, தேர்தலில் தோல்வி வந்த உடனே, அந்தக் கட்சியே இனிமேல் இருக்காது என்று சொன்ன காலத்திலேதான், 1940 இல் தந்தை பெரியாரைத் தலைவராக அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். 1938 ஆம் ஆண்டிலேயே அய்யா சிறைச்சாலையில் இருக்கும்போது அவரிடம் வந்து உரையாடினார்கள். அந்த இயக்கத்திற்கு, திராவிடர் என்ற அந்தப் பண்பாட்டு அடிப்படையில் பெயர் வைத்ததுதான் திராவிடர் இயக்கம் என்று ஆகி, அவை இரண்டும் இணைந்த போது, திராவிடர் கழகம் என்று ஆயிற்று.

- விடுதலை நாளேடு, 27.9.2026