Monday, 13 July 2026

இன்றைக்கு இருக்கும் திராவிடர் கழகம் சுயமரியாதை இயக்கமே! - கலி.பூங்குன்றன்

 


நீதிக்கட்சி என்று சொல்லப்படும் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் தோற்றம் 1916ஆம் ஆண்டு.

இந்த அமைப்புத் தோன்றுவதற்கு மும்மூர்த்திகளாக இருந்த பெருமக்கள் டாக்டர் சி.நடேசனார், பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர் ஆகியவர்கள் ஆவார்கள்.

1912ஆம் ஆண்டிலேயே நீதிக்கட்சிக்கு முன்னோடியாக ஓர் அமைப்புத் தோற்றுவிக்கப்பட்டது. அதற்குரிய பெருமான் டாக்டர் சி.நடேசனார். அவ்வமைப்பின் பெயர் மெட்ராஸ் யுனைட்டெட் லீக் (Madras United League) 1913ஆம் ஆண்டில் திராவிடர் சங்கம் என்று பெயர் மாற்றம் பெற்றது.

1916 நவம்பர் 20ஆம் தேதி சென்னை வேப்பேரியில் வழக்குரைஞர் எத்திராஜுலு முதலியார் இல்லத்தில் பார்ப்பனர் அல்லாத பெருமக்கள் டாக்டர் சி.நடேசனார், பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர், ராமராய நிங்கர் (பனகல் அரசர்) உள்ளிட்ட 26 பார்ப்பனர் அல்லாத பிரமுகர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு தோற்றுவிக்கப்பட்டதுதான் இந்த நீதிக்கட்சி.

அதன் முதல் கொள்கை அறிக்கையை (Non-Bramin Manifesto) வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் வெளியிட்டார். (20_12_1916) 


சுயமரியாதை இயக்கம் என்கிறபோது அதற்கென்று தொடக்க விழா இல்லை; எந்த நாளில் தோற்றுவிக்கப்பட்டது என்றுகூட அறுதியிட்டுக் கூறமுடியாது. சமூகச் சூழலும், அந்தப் பருவத்தில் ஞான சூரியனாகத் தோன்றிய தந்தை பெரியார் அவர்களின் சிந்தனையில் வெடித்த கருத்துகளும் சேர்ந்து பெற்ற பிள்ளைதான் சுயமரியாதை இயக்கம்.

காங்கிரசில் இருந்தபோதே தந்தை பெரியார் குடிஅரசு இதழைத் துவக்கினார்களே _ அந்த மே 2ஆம் தேதி (1925)யை சுயமரியாதை இயக்கத்தின் தொடக்க நாள் என்று கூறுவோரும், தந்தை பெரியார் காஞ்சிபுரத்தில் சமூக நீதிக் கொள்கைக்காக காங்கிரசை விட்டு வெளியேறினாரே (22.11.1925) அந்த நாள்தான் சுயமரியாதை இயக்கம் பிறப்பெடுத்த நாள் என்றும் இரு வேறு கருத்துகள் உண்டு என்றாலும் 1925இல் தந்தை பெரியார் என்னும் பேராசானின் மூளையில் பிரசவிக்கப்பட்ட இயக்கம் இவ்வியக்கம் என்பது மட்டும் உண்மை. அதன் அடிப்படையில்தான் 1975இல் தஞ்சையில் பொன்விழா அன்னை மணியம்மையார் அவர்களால் சீரும் சிறப்புடனும் கொண்டாடப்பட்டது. 

சுயமரியாதை இயக்கத்தையும், நீதிக்கட்சியையும் இணைத்துதான் சேலத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் என்ற   வரலாற்றுத் திருப்பு முனையை உருவாக்கினார்! (27.8.1944)

இன்றைக்கு இருக்கும் திராவிடர் கழகம் சுயமரியாதை இயக்கமே! 


நீதிக்கட்சி நூறு சுயமரியாதை இயக்கம் தொண்ணூறு - கலி.பூங்குன்றன்

கட்டுரையின் சில பகுதிகள் -உண்மை இதழ்,16-30.11.15,

No comments:

Post a Comment