‘விடுதலை’ ஒளிப்படக் கலைஞரும், நம் சுற்றுப்பயண உதவியாளருமான துறையூரைச் சார்ந்த எல்.என்.பாலசுந்தரம், பா. ராஜம்மாள் ஆகியோரின் செல்வன் பா.சிவக்குமார் அவர்களுக்கும், கோவை புதூரைச் சார்ந்த பொறியாளர் ஆர்.கே.பாலமுருகேசன், பா.பத்மாசினி ஆகியோரின் செல்வி பா.சவுமியலலிதா அவர்களுக்கும் வாழ்க்கை இணை ஏற்பு விழா சென்னை – பெரியார் திடலில் 28.1.2007 அன்று மாலை 6 மணிக்கு எமது தலைமையில் மிகச் சிறப்பாக நடை பெற்றது.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் திருமகள் இறையன் வரவேற்றுப் பேசினார். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் முன்னிலை வகித்துப் பேசினார். மணமக்களை வாழ்த்தி தமிழ்நாடு சட்டப் பேரவைச் செயலாளர் மா.செல்வராஜ், நீதிபதிகள் சங்கப் பொதுச் செயலாளர் நீதிபதி பரஞ்சோதி, கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, அகில இந்திய மருத்துவ தேர்வாணையக் குழுத் தலைவர் டாக்டர் அ.ராஜசேகரன், கழகப் பொதுச்செயலாளர் சு.அறிவுக்கரசு கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ. சாமிதுரை ஆகியோர் உரையாற்றினர்.
நாம் நம் உரையில், “விடுதலை குடும்பத்தில் நடக்கக்கூடிய மணவிழா இந்த மணவிழா. சிவக்குமார் எங்களுடைய பிள்ளைகளில் ஒருவர். குடும்பத்து உறுப்பினர். அதுவும் போற்றத்தக்க குறை சொல்ல முடியாத பிள்ளைகளில் ஒருவர் என்ற பெருமைக்குரியவர். என் நண்பர்கள் சொன்னது போல் மாநிலம் தழுவியளவில் சிவக்குமார் அறிமுகமானவர் காரணம், எல்லோருடைய முகமும் இவருடைய கைப்பிடிக்குள் இருக்கிறது; அதாவது அவருடைய ஒளிப்படக் கருவிக்குள்ளே இருக்கிறது.
என்னுடைய உதவியாளர்கள் என்று சொல்லக்கூடிய தோழர்கள் கடும் பத்தியத்திற்கு ஆட்பட்டவர்கள். ஒரு உலைக்களத்திலே எப்படி இரும்பு காய்ச்சி அடிக்கப்படுகிறதோ அதைப் போல அவர்கள் கடும் பத்தியமாக இருந்தாலும் அவர்கள் உயிர் அனையவராவார்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு எந்த நிலையிலும், எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் எங்களை விட்டுப் போக மாட்டார்கள் என்று சொல்லக்கூடிய அந்த மனதைப் பெற்று இருக்கிறவை நம்முடைய குடும்பங்கள். எனவே, தந்தை பெரியார் அவர்களுடைய அறிவார்ந்த கொள்கைகள் எங்களை ஒன்று படுத்தி இருக்கிறது. இத்தனை ஆண்டுகள் சிவக்குமார் பழக்கம். எங்கள் குடும்பத்துப் பிள்ளைகளிலே ஒருவர். அப்படித்தான் கருதி இருக்கிறோம் என்றால் இன்னமும் சிவக்குமார் என்ன ஜாதி என்று எங்களுக்குத் தெரியாது தெரிய வேண்டிய அவசியம் இல்லை. இதுதான் பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்ட மானுட சமுதாயப் பற்றின் வெளிப்பாடு.
சுயமரியாதைத் திருமண நிலையத்தின் மூலமாக பலவகையான மண வாழ்க்கைத் உருவாக்கி வருகிறார்கள். ஒரு நல்ல புது வாழ்விணையை திருமகள் இறையன் அவர்கள் உருவாக்கி இருக்கிறார். இந்த அமைப்பின் மூலம் பல மணவிழாக்கள் வெற்றிகரமாக நடத்திக்காட்டி நல்ல அளவிற்கு வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, இந்த மணமக்களுக்கு அதிக அறிவுரை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சீனத்தில் மா-சே-துங் 1949 இல் திருமணம் முறையில் ஒரு புரட்சி செய்தார். ஆனால் தந்தை பெரியார் உருவாக்கிய சுயமரியாதைத் திருமணப் புரட்சி என்பது 1928லேயே தொடங்கிவிட்டது. ” என்று உரையாற்றினேன்.
பா.சிவக்குமார் – பா.சவுமியலலிதா இணையேற்பு நிகழ்வு
2025அய்யாவின் அடிச்சுவட்டில்ஏப்ரல் 16-30 359ஆவது கட்டுரையின் ஒரு பகுதி...
No comments:
Post a Comment