மூலிகை மன்னன் செ.ர.பாத்தசாரதி அவர்களின் படைப்புகளும், குறிப்பிடத்தக்க செய்திகளும் இடம்பெறும்.
Friday, 5 April 2024
மீண்டும் மையில் கற்களில் தமிழும் ஆங்கிலமும் நீக்கப்பட்டு இந்தியில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது.
Monday, 28 August 2023
'ஹிந்தி' யாருக்குத் தாய்மொழி?
Viduthalai August 05, 2023 ஞாயிறு மலர்,
ஹிந்தியை எப்படியாவது இந்தியாவின் தேசிய மொழியாக. உள்ளிட்ட எந்த இந்தியாவின் ஒற்றை மொழியாகக் கொண்டுவந்துவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும் மோடி, அமித்ஷா உள்ளிட்ட எந்த வடநாட்டாருக்கும் 'ஹிந்தி' தாய்மொழி அல்ல. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தின் தாய்மொழியும் கீழே தரப்பட்டுள்ளன.
தமிழ்நாடு: தமிழ்மொழி
கேரளம்: மலையாள மொழி
ஆந்திரா, தெலங்கானா: தெலுங்குமொழி
கருநாடகா: கன்னடம், துளு மொழி
மகாராட்டிரா: மராத்தி, கொங்கணி மொழி
குஜராத்: குஜராத்தி மொழி
பஞ்சாப்: பஞ்சாபி மொழி
ராஜஸ்தான்: ராஜஸ்தானி, மார்வாரி, மேவாரி மொழிகள்
அரியானா: அரியானா மொழி
இமாசலப்பிரதேசம்: மஹாசு. பஹாரி. மண்டேலி. காங்கிரி, பிலாஸ்புரி, சாம்பேலி மொழிகள்.
ஜம்மு-காஷ்மீர்: காஷ்மீரி. டோக்ரி. பாடி. லடாக்கி மொழிகள்
உத்தராகண்ட்: குடவாலி, குமோனி மொழிகள்
உத்தரப் பிரதேசம்: பிரஸ்பாஷா, கரிபோலி, அவதி, கன்னோஜி, போஜ்புரி, பந்தேலி. பகேலி மொழிகள்
பீகார்: போஜ்புரி, மய்திலி மொழிகள்
ஜார்கண்ட்: சந்தாலி மொழி
சதீஸ்கர்: கோர்பா மொழி
மத்தியப்பிரதேசம்: மால்வி, நிமதி, பகேலி மொழிகள்
மேற்கு வங்கம்: வங்க மொழி
ஒடிசா: ஒடியா மொழி
வடகிழக்கு மாநிலங்கள்: அசாமி, போடோ காரோ, தாமோங், நேபாளி, பங்காளி, காசி,கொக்பராக், மணிப்பூரி மொழிகள்
இப்படி யாருக்கும் தாய்மொழியாக இல்லாத ஹிந்தி மொழியை எந்தவித இலக்கண, இலக்கியத் தொன்மையும் இல்லாத ஒரு மொழியை யாருக்காகத் திணிக்க முயல்கின்றனர்? எதற்காகத் திணிக்க முயல்கின்றனர்? இந்தியாவின் பொதுமொழியாக ஹிந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன?
(நன்றி: 'முகம்' - நவம்பர் 2022)
Sunday, 19 March 2023
இந்தி மொழியின் இலக்கணப் பிழையா? அல்லது இலக்கணமே இல்லையா?
* இது நூல் ஆய்வுரையல்ல! அறிமுகவு ரையும் அல்ல! எனது அனுபவ உரை!
* ஒன்றிய அரசுப் பணியில், அதுவும் ஆல் இண்டியா சர்வீஸ் பதவிகளில் சேர்ந்த என்னைப் போன்றோர்க்கு பணியை கையில் கொடுத்ததால், இந்தி மொழியை நமக்கு கட்டாய திருமணம் செய்து வைத்து விடுவார்கள். பணியில் இருக்கும் வரை இந்தியோடுதான் வாழ்ந்து தீர வேண்டும்! இது ஒன்றிய அரசின் கட்டாய இந்தி மொழித் திருமணத் திட்டம்!
* ஒன்றிய பொதுப் பணித்துறையில் 1977ஆம் ஆண்டு, இளநிலை பொறியாளராக டில்லியில் பணியில் சேர்ந்தேன். தலை நகரம் அல்லவா? எங்கு திரும்பினாலும் இந்தி! நம் முன்னுக்கும் பின்னுக்கும் முந்தி வந்து நிக்குது இந்தி! அந்த கால வேளையில் நமது தமிழகமெங்கும் - எஸ்.டி, ஆர்.டி. பர்மன்களும், கிஷோர், லதா பாடல்களும் கொடிகட்டி பறந்த நேரம்.. அதனால் கொஞ்சம்... கொஞ்சம்.. இந்தி மாலும் ஹை!
* டில்லியில் இந்தி கட்டாயம் என்பதை அரசும் உணர்த்தியது, அன்றாடமும் உணர்த்தியது. இந்தி தெரியாத அந்நிய மொழியினருக்கு உதவ - Central Hindi Directorate, அஞ்சல் மூலம் தமிழ் வழியில் இந்தி கற்பிக்கும் திட்டம் இருந்தது. அதில் சேர்ந்து ஓராண்டு கற்று, ஓரளவு இந்தியை எழுத, பேசக் கற்றுக் கொண்டேன்!
* இனி தான் அனுபவம் பேசுகிறது :
ஒரு தமிழன் இந்தி கற்றுக் கொள்ளும் போது இரண்டு பெரிய சிக்கல்களை கடக்க வேண்டியுள்ளது! அவைகள் இரண்டுமே தமிழில் இல்லாததும் யாரும் அதுவரை நமக்கு சொல்லாததும்!
* முதலாவது சிக்கல் :
தமிழில் நமக்கு உயிரெழுத்துக்கள், க, ச, ட, த, ப போன்றவைகள் ஒவ்வொன்றும் ஒரே ஒரு எழுத்தாகவும் ஒரே ஒரு ஒலியாக வும் உள்ளன. ஆனால் இந்தியிலோ அவைகள் நான்கு க, நான்கு ச, நான்கு ட, நான்கு த, நான்கு ப என நான்கு எழுத்துக் களாகவும் நான்கு ஒலிகளை கொண்டதாக வும் உள்ளன! இந்த காரணத்தால், தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டோர் உச்சரிப்பில் பெரும் சிரமம் அடைகின்றனர்!
ஏதோ ..அந்த இந்திவாலாக்களிடையே வாழ வேண்டிய சூழல் கிடைத்ததால், இந்த உச்சரிப்பை கற்று, நச்சரிப்பிலிருந்து தப்பித் தேன்!
* இரண்டாவது சிக்கல் :
அந்த சிக்கலைப்பற்றி விளக்குவதே இந்த உரையின் நோக்கம்! தமிழில் நாம் உயிருள்ள பொருட்களை மட்டுமே ஆண் பால் - பெண்பால் என பிரிப்போம். உயிரற்ற எல்லா பொருட்களையும் அஃறிணை என்போம்! அதற்கு எந்த பால் வேறுபாடும் கிடையாது!
* இந்தி மொழியிலோ எல்லா உயிரற்ற பொருட்களுக்கும் பால் பிரிவினை உண்டு. அதை தெரிந்து கொண்டு தான் நாம் பேசவோ எழுதவோ முடியும்! அப்படி அதை தவறாக பயன்படுத்தினாலே அதை 'மதராஸியின் இந்தி ' என கண்டு கொள் வார்கள். இவைகளை உதாரணத்தோடு இங்கு விளக்குகிறேன்!
* தமிழில் நாம் இவ்வாறு பேசுகிறோம் / எழுதுகிறோம் :
1) நீளமான ரயில் வண்டி.
2) பெரிய வீடு.
3) நல்ல ரொட்டி.
இவைகளில் - ரயில், வீடு, ரொட்டி போன்ற உயிரற்றவைகளுக்குள் எந்த வேறுபாட்டையும் நாம் தரவில்லை.
* இவைகளையே இந்தியில் பேசுவது / எழுதுவது எவ்வாறு என்றால் :
1) லம்பி (நீளமான) ரயில் காடி.
இதில் ரயில் காடி பெண்பால் (பெ) என்பதால் ' லம்பி ' என எழுத வேண்டும். ஆண்பால் (ஆ) சொல் என்றால் ' லம்பா ' என எழுத வேண்டும்.
2) படா (பெரிய) கர். கர் அதாவது வீடு ஆண்பால். ஆகவே ' படா ' . பெண்பால் சொல்லுக்கு ' படி ' ..
3) அச்சி (நல்ல) ரோட்டி. ரோட்டி பெண்பால். எனவே ' அச்சி '. ஆண்பால் சொல்லுக்கு ' அச்சா '..
என்ன தலை சுற்றுகிறதா? அப்படித்தான் இருந்தது எனக்கும்!
* கால ஓட்டத்தில், பத்தாண்டுகளுக்குப் பின் அரசு அலுவலர்கள் கட்டாயம் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என நடைமுறை படுத்திய போது - 1989ம் ஆண்டு இந்தியை மீண்டும் முதலிலிருந்து கற்றுக் கொள்ள புது டில்லியின் ' ரயில் பவன் இந்தி வகுப்பில் ' சேர்ந்தேன். அதில் சேர்ந்ததிற்கு காரணமே இந்த இரண்டாவது சிக்கலின் அடிப்ப டையே அறிந்து கொள்ளத்தான்!
* இந்தி வகுப்பில் பாடம் நடத்திய ஆசிரியை திருமதி. சுனிதா இந்தி மொழியை தாய் மொழியாகவும் இந்தியில் முதுகலைப் பட்டம் பெற்ற அனுபவசாலி. அவரிடம் இந்த ஆண்பால் - பெண்பால் பிரித்தது எப்படி? எவ்வாறு உயிரற்றவைகளை பிரித் தீர்கள்? சிறிது - பெரிது என்ற அடிப்ப டையிலா? கடினம் - இலகு என்ற அடிப் படையிலா? புதியன - பழையன என்ற அடிப்படையிலா? உருவத்தினாலா அல் லது பருவத்தினாலா? ஒலி மாற்றத்தின் அடிப்படையிலா? வேறு மொழி சொற் களின் கலப்பினாலா? அழகு - அழகற்றது என்ற அடிப்படையா? என்று கேள்விகளால் துளைத்துப் பார்த்தேன்!
* இந்தியை தாய் மொழியாக கொண்ட அந்த ஆசிரியையிடம் எந்த பதிலும் இல்லை! இந்தி மொழியில் அப்படித்தான் உள்ளது - என ஒரே ஒரு பதில்தான்.. எங் களுக்கு இது பற்றி சொல்லியே தரவில்லை. இந்த சொற்களை சிறு வயதிலிருந்தே இப் படித்தான் பேசி வருகிறோம்.. ஏன், இப்படி என யோசித்ததும் இல்லை, என்றார் அழாத குறையாக!
* இதை இந்தி இலக்கணத்தின் பிழை என்று சொல்லலாமா? என்று கூட கேட்டுப் பார்த்தேன்! இதை பிழையென்றோ, குறை யென்றோ வைத்துக் கொள்ளுங்கள்.. அந்த குறையோடுதான் நீங்கள் இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என சமரசம் செய் தார்கள்! அதன் பின்பு வேறு வழியில்லாமல் நானும் வகுப்புகளில் தொந்தரவு செய்யா மல் கலந்து கொண்டு, படித்து முடித்தேன்!
* இவற்றை மேலும் விரிவாக அறிய, இந்தியின் விநோதமான வாக்கிய அமைப்பு களை காரணங்களுடனும், உதாரணங்க ளுடன் தந்துள்ளேன் :
1) குடி நீர் - இந்தியில் ' பாணி ' (ஆண்பால்). இந்த நீர் கரை புரண்டு ஓடுவதை நாம் ஆறு என்கிறோம் - இந்தியில் நதி (பெண்பால்).
ஆகவே -
அச்சா(நல்ல) பாணி (ஆ) |
அச்சி (நல்ல) நதி (பெ) |
ஏன் இரண்டையும் அச்சா என்றே சொன்னாலென்ன? பதிலில்லை!
2) காகிதம் - இந்தியில் ' காகஜ் ' (ஆ). நிறைய காகிதங்கள் கொண்டு உருவான புத்தகம் - இந்தியில் ' கிதாப் ' (பெ).
ஆகவே -
படா (பெரிய) காகஜ்(ஆ) |
படி (பெரிய) கிதாப் (பெ) |
ஏன் இரண்டுமே படா இல்லை?
3) வீடு - இந்தியில் ' கர் ' (ஆ). அதுவே பெரிய கட்டிடம் என்றால் - இந்தியில் ' இமாரத் ' (பெ).
ஆகவே -
புரானா (பழைய) கர் (ஆ) |
புரானி (பழைய) இமாரத் (பெ) |
ஏன் இரண்டுமே புரானியாக இருக்க கூடாது?
4) துணி - இந்தியில் ' கப்படா ' (ஆ). அந்த துணியில் தைத்த சட்டை - இந்தியில் ' கமீஜ் ' (பெ).
ஆகவே -
நயா (புதிய) கப்படா (ஆ) |
நயி (புதிய) கமீஜ் (பெ) |
ஏன் இரண்டுமே நயா என இருக்க கூடாது?
5) கப்பல் - இந்தியில் ' ஜகாஜ் ' (ஆ). ஆனால் ரயில் வண்டியோ - இந்தியில் ' ரேல் காடி ' (பெ).
ஆகவே -
லம்பா (நீளமான) ஜகாஜ் (ஆ) | லம்பி (நீளமான) ரேல் காடி (பெ) |
ஏன் லம்பி என்றே இரண்டையும் அழைக்க கூடாது?
6) குருமா - இந்தியிலும் குருமா (ஆ) . அதற்கு தேவையானது ரொட்டி - இந்தியில் ' ரோட்டி ' (பெ).
ஆகவே -
அச்சா (நல்ல) குருமா (ஆ) |
அச்சி (நல்ல) ரோட்டி (பெ) |
ஏன் இரண்டையும் அச்சாவென்றோ - அச்சியென்றோ அழைக்க கூடாது?
7) மேகம் - இந்தியில் ' மேக் ' (ஆ) .மேகங்கள் மோதும் போது மின்னல் - இந்தியில் 'பிஜ்லி '(பெ).
ஆகவே -
சோட்டா ( சிறிய) மேக் (ஆ) | சோட்டி (சிறிய) பிஜ்லி (பெ) |
ஏன் சோட்டா - சோட்டி?
8) மலை - இந்தியில் ' பர்வத் ' (ஆ) . பல மலைகளை கொண்டது உலகம் - இந்தியில் ' துனியா ' (பெ).
ஆகவே -
படா (பெரிய) பர்வத் (ஆ) |
படி (பெரிய) துனியா (பெ) |
ஏன் இரண்டையும் ஒன்றாக கருதவில்லை?
9) கோதுமை - இந்தியில் ' கேகூம் ' (ஆ). கோதுமையை உடைத்து தயாரித்த ரவை - இந்தியில் ' சூஜி' (பெ).
ஆகவே -
படா (பெரிய) கேகூம் (ஆ) |
படி (பெரிய) சூஜி (பெ) |
ஏன் ஆராயமல் வித்தியாசப் படுத்தினார்கள்?
10) பாவாடை - இந்தியில் ' காக்ரா ' (ஆ). அதைவிட பெரிய துணி வேட்டி - இந்தியில் ' தோத்தி ' (பெ).
ஆகவே -
சோட்டா (சிறிய) காக்ரா (ஆ) | சோட்டி (சிறிய) தோத்தி (பெ) |
ஏன் அறிவுக்கு பொருத்தமில்லாமல்?
* இவ்வாறு ஒவ்வொரு அஃறிணை பொருட்களையும் ஆண்பால் - பெண்பால் என எவ்வித அடிப்படையும் இல்லாமல் வகைப்படுத்தி, அறிவுக்கு விளக்கம் சொல்ல ஆதாரமில்லாமல், அதை சீர்திருத்த வேண்டுமென்ற சிந்தனையே இல்லாமல் வழக்கில் இருந்து வருகிறது - ஹமாரா இந்தி!
* ஆகவேதான் தமிழை தாய் மொழியாக கொண்டு, சிறப்பான இலக்கணத்தை அடிப்படையாக கொண்ட தமிழை கற்றவனுக்கு - இந்தியின் இந்த வாக்கிய அமைப்பை - இலக்கண பிழை என்றே சொல்ல வைக்கிறது!
* இந்த அடிப்படையிலும், கட்டாய இந்தி மொழித் திணிப்பை - தமிழை தாய் மொழியாக கொண்டவன், இந்தியை கற்ற பின்னும் எதிர்ப்பானல்லவா?
இது அனுபவம் கற்று தந்த பாடம்!
(ஆதாரம் - ஹிந்தி தமிழ் அகராதி - தட்சிண் பாரத் ஹிந்தி பிரச்சார் சபா - முதல் பதிப்பு 1978 - சென்னை)
- பொ. நாகராஜன்,
பெரியாரிய ஆய்வாளர்,
சென்னை. 27.07.2022.
Thursday, 3 March 2022
தமிழுக்கு மூன்றாம் இடமா?
சென்னை கோடம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட. நுழைவுவாயிலில் (தியாகராயர் நகர் வடமேற்கு பகுதி) நிலையத்தின் பெயர் பொறிக்கப்பட் டுள்ளது. அதில் முதலிடத்தில் ஆங்கிலமும் இரண்டாவது இடத்தில் இந்தியும் மூன்றாவது இடத்தில் தமிழும் பொறிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒன்றிய அரசு தமிழர் களிடம் இந்தியை திணிப்பதிலும் தமிழைப் புறம் தள்ளுவதிலும் மும்முரமாக இறங்கியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- செ.ர.பார்த்தசாரதி,
மாவட்டச் செயலாளர்,
தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம்
Wednesday, 24 February 2021
இந்தி எதிர்ப்பில் இறுதியில் இணைந்தவரா தந்தை பெரியார்?
எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (70) : இந்தி எதிர்ப்பில் இறுதியில் இணைந்தவரா தந்தை பெரியார்?
நேயன்
கடவுள் மறுப்பாளர் பெரியார் ஒன்றும் புதிதாய் செய்யவில்லை. அது ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது. வைக்கம் போராட்டமா, அதில் பெரியார் முதன்மையானவர் அல்ல, தமிழ்த் தேசியமா பெரியாரை விட அதற்குப் பாடுபட்டவர்கள் உள்ளனர் என்பன போன்ற கருத்துகளைக் கூறி பெரியாரின் அரிய பணிகளை எல்லாம் குறைத்துக் காட்டும் சதியை, எதிர்தரப்பு எத்தர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர். அதைப் போல இந்தி எதிர்ப்புப் போரிலும் பெரியார் இடையில் வந்து சேர்ந்தவர் எனக் கூறி அவருடைய அரும்பணியை ஒதுக்கி வைக்கின்றனர். ‘துக்ளக்’ பத்திரிக்கைகூட அண்மையில் அப்படி எழுதிவுள்ளது. எனவே, உண்மையான இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை ஆதாரத்தோடு எடுத்துக் காட்ட வேண்டி உள்ளது.
26.6.2019 துக்ளக் ஏட்டில், “ஹிந்தி எதிர்ப்பு மேலும் சில உண்மைகள்’’ என்ற தலைப்பில் பெரியாரின் பெருமையை, பித்தலாட்டப் பிரச்சாரம் மூலம் குலைக்க துக்ளக் ஏடு முயன்றுள்ளது.
இந்தி எதிர்ப்பில் பெரியாரின் பங்கு பெரிதாய் ஒன்றும் இல்லை.
என்று பித்தலாட்டப் பிரச்சாரங்களை துக்ளக் செய்துள்ளது.
இந்தி எதிர்ப்புப் போரில் இறுதியில் இணைந்தவரா பெரியார்?
1938இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தவர்கள் சைவப் பெரியோர்களான தமிழ்ப் பண்டிதர்களே. இதில் ஈ.வெ.ரா.வும் அண்ணாதுரையும் கடைசிக் கட்டத்தில்தான் கலந்து கொண்டனர். 1938இல் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தை பெரியார்தான் துவக்கினார் என்பது தவறு.
1937 _ தேர்தலில் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் வென்றது. ராஜாஜி, எல்லோரும் ஹிந்தியைக் கட்டாயமாகப் படிக்க வேண்டும் என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார். இதை சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகள், கி.ஆ.பெ.விஸ்வநாதன் போன்ற சைவத் தமிழ்ப் பெரியவர்கள் எதிர்த்தனர். இதில் பாரதியின் சீடரான பாரதிதாசனும் உண்டு. கி.ஆ.பெ.விஸ்வநாதன், முதல் ஹிந்தி எதிர்ப்பு மாநாட்டை திருச்சியில் நடத்தினார். இப்போது மொழிப் போர் தியாகிகள் என்று கூறப்படுகிற தாளமுத்துவும், நடராஜனும் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்டனர். பின்னர் அதில் பெரியாரும் அண்ணாதுரையும் சேர்ந்தனர்.
1965இல் மாணவர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது, ஈ.வெ.ரா. பெரியார் 3.3.1965 ‘விடுதலை’ இதழின் தலையங்கத்தில்...
இந்தி விஷயத்தில் நீதானே எதிர்ப்பு உண்டாக்கினாய். இப்போது இந்திக்கு அடிமையாகி விட்டாயே என்று பலவாறாக எனக்கு வசவுக் கடிதம் (மிரட்டல் கடிதம்) எழுதி வருகிறார்கள். நேரிலும் கேட்டார்கள். எனது நண்பர்கள் பலரும் இதே கருத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் கெட்டு விடுமே என்கிற எண்ணத்தில் நான் இந்தியை எதிர்க்கவில்லை. தமிழ் கெடுவதற்கு, தமிழில் எதுவும் இல்லை. புலவர்களே தமிழைக் கெடுத்து விட்டார்கள் என்று எழுதியுள்ளார் என்கிறது துக்ளக் ஏடு.
மேலே கண்ட இரண்டு செய்திகளும் பித்தலாட்டத்தின் உச்சம். அப்படியானால் உண்மை என்ன?
மாநாடு நடத்தி இந்தியை முதலில் எதிர்த்தது யார்?
1937 ஆகஸ்ட் 27ஆம் நாள் திருச்சி மாவட்டம் துறையூரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க மாநாட்டில் தலைமை உரையாற்றிய அண்ணா, தமிழர்கள் தங்கள் மொழியையும் பண்பாட்டையும் பாதுகாக்க, இந்தியை எதிர்த்துப் போராட முன்வருமாறு கேட்டுக் கொண்டார்.
ஆனால், திருச்சியில் நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாடு 1937 திசம்பர் 26ஆம் நாள்.
இதில் சுயமரியாதை இயக்கம் நடத்திய மாநாடுதான் முதலில் நடந்தது. அதன்பின் 4 மாதங்கள் கழித்து திருச்சி மாநாடு நடைபெறுகிறது. அது மட்டுமல்ல; திருச்சி மாநாட்டில் பெரியார் கலந்துகொண்டு, இந்தியைத் தமிழ்நாட்டில் நுழையவிட மாட்டோம் என்று முழங்கினார்.
அது மட்டுமல்ல; இந்த இரண்டு மாநாடுகளுக்கும் இடையில் 1937 செப்டம்பர் 5ஆம் நாள் சென்னையில் நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்தி எதிர்ப்புக்கான காரணங்களை விளக்கி அண்ணாதான் பேசினார்.
1938 ஆகஸ்ட் முதல் நாள், சீருடை அணிந்த 100 தொண்டர்களைக் கொண்ட இந்தி எதிர்ப்புத் தமிழர் படை, தளபதி கே.வி.அழகிரிசாமி, மூவலூர் மூதாட்டி இராமாமிர்த்தத்தம்மாள், அய்.குமாரசாமி பிள்ளை ஆகியோர் தலைமையில், திருச்சி_உறையூரிலிருந்து புறப்பட்டு சென்னை நோக்கி அணிவகுத்துச் செல்லத் தொடங்கியது. ஏறத்தாழ 400 கி.மீ தொலைவை 234 ஊர்களின் வழியே 42 நாள்களில் நடந்தே கடந்து வந்த இந்தத் தமிழர் படை, வழியில் 82 இடங்களில் கூட்டங்கள் நடத்தித் தமிழ் மொழியையும் பண்பாட்டையும் காக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கிய வண்ணம் செப்டம்பர் 11ஆம் நாள் சென்னை வந்தடைந்தது. தமிழர் படைக்குத் திருவல்லிக்கேணி கடற்கரையில் ஆரவாரமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு மறைமலையடிகள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பெரியார் இந்தியை எதிர்த்து முழங்கினார்.
செப்டம்பர் 16ஆம் நாள் சென்னை ஜார்ஜ் நகரில் (George Town) இருந்த இந்து தியாலாஜிகல் உயர்நிலைப் பள்ளி முன்பு நடைபெற்ற மறியலில் தமிழர் படைத் தொண்டர்கள் நாற்பது பேர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்கள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டனர்.
சென்னை மாநிலத்தில் உள்ள பல நகரங்களிலும் பல்வேறு நாள்களில் இந்தி எதிர்ப்பு ஊர்வலங்கள் நடைபெற்றன. அக்காலத்தில் தஞ்சை மாவட்டம் திருவாரூரில் 14 வயதுச் சிறுவனாகப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த மு.கருணாநிதி, கையில் தமிழ்க் கொடியை ஏந்தி, இந்தி எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பிய வண்ணம், தன்னுடைய பள்ளித் தோழர்களுடன் சேர்ந்து இந்தி எதிர்ப்பு ஊர்வலம் நடத்தினார். அதனால், மறுநாள் அவர் வகுப்புக்கு வந்த இந்தி ஆசிரியரிடம் அடிவாங்க நேரிட்டது. 1938 சூன் 10ஆம் நாள் சென்னை _ கதீட்ரல் சாலையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் கூட்டத்தில், அரசின் ஆணைகளை மீறுமாறு மக்களைத் தூண்டிப் பேசினார் என்று குற்றம் சாட்டப்பட்டு, அண்ணா செப்டம்பர் 21ஆம் நாள் கைது செய்யப்பட்டார். அய்ந்து நாள்கள் நீதிமன்ற விசாரணைக்குப் பின், அவருக்கு நான்கு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
(தொடரும்)
- உண்மை இதழ், ஜனவரி, 16 -31 .2021
சென்ற இதழின் தொடர்ச்சி
அது மட்டுமல்ல, நவம்பர் 13ஆம் நாள் சென்னையில் மறைமலையடிகள் மகள் நீலாம்பிகை தலைமையில் தமிழகப் பெண்கள் மாநாடு நடைபெற்றது. மீனாம்பாள் சிவராசன் தமிழ்க் கொடியை ஏற்றினார். நாராயணி அம்மையார் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இம்மாநாடு ஈ.வெ.ராமசாமியின் தொண்டினைப் பாராட்டி அவருக்குப் ‘பெரியார்’ என்று பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. இந்தித் திணிப்பைக் கண்டித்தும், தமிழ் மொழி காக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை புகுந்த தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் பாராட்டுகள் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மறுநாள் டாக்டர் தருமாம்பாள், மூவலூர் இராமாமிர்த்தத்தம்மாள், மலர்முகத்தம்மையார், பட்டம்மாள், மூன்று வயதேயான மகள் மங்கையர்க்கரசி மற்றும் ஒரு வயதேயான மகன் நச்சினார்க்கினியனுடன் சீதம்மாள் ஆகியோர் இந்து தியாலாஜிகல் உயர்நிலைப் பள்ளி முன்பு நடைபெற்ற மறியலில் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு ஆறு வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டனர். அவர்களைத் தொடர்ந்து ஏராளமான மகளிர் மறியலில் கலந்துகொண்டு சிறை புகுந்தனர். என்.வி.நடராசனின் துணைவியார் புவனேசுவரி இரண்டு வயதேயான மகன் சோமசுந்தரத்துடன் மறியலில் கலந்துகொண்டார். அவர் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். அந்த இரண்டு வயதுக் குழந்தை சோமசுந்தரம் (என்.வி.என்.சோமு) பிற்காலத்தில் தி.மு.க.வின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகவும், மய்ய அமைச்சராகவும் ஆனார் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கதாகும். மொத்தம் 73 பெண்களும் 32 குழந்தைகளும் கைது செய்யப்பட்டனர்.
தமிழகப் பெண்கள் மாநாட்டில் ஆற்றிய சொற்பொழிவுக்காகப் பெரியார் மீது இ.பி.கோ.117ஆவது பிரிவின் கீழும், குற்றவியல் திருத்தச் சட்டம் பிரிவு 7(1)இன் கீழும் குற்றம் சுமத்தப்பட்டது. 1938 திசம்பர் 5ஆம் நாள் வழக்கை விசாரித்த நீதிபதி, மறுநாள் பெரியாருக்கு ஒன்றரை ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அளித்துத் தீர்ப்பு வழங்கினார். பெரியாருக்கு அளிக்கப்பட்ட இந்தத் தண்டனையைக் கேள்வியுற்ற ஆளுநர் மிகவும் வருத்தப்பட்டதுடன், அவருக்கு அளிக்கப்பட்ட கடுங்காவல் தண்டனையை சாதாரண தண்டனையாக மாற்றியும், அவருக்குச் சிறையில் முதல் வகுப்பு வழங்கியும் ஆணை பிறப்பித்தார்.
இந்தி எதிர்ப்புப் போராட்டச் செய்திகளை வெளியிட்ட இதழ்கள் மீதும் காங்கிரசு அரசு கடும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. ‘விடுதலை’ இதழ் வெளியீட்டாளர் ஈ.வெ.கிருட்டினசாமி, ஆசிரியர் முத்துச்சாமி ஆகியோர் அக்டோபர் 7ஆம் நாள் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டனர். மேலும் ‘விடுதலை’, ‘குடிஅரசு’, ‘பகுத்தறிவு’ ஆகிய இதழ்கள் கூடுதல் வைப்புக் கட்டணம் உரூ.1000/_ செலுத்த வேண்டுமென்று 1938 ஜனவரி 4ஆம் நாள் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இப்படியாக, பெரியாரும் திராவிட இயக்கத் தொண்டர்களும் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டங்களும் தியாகங்களும் ஏராளம் ஏராளம். உண்மை இப்படியிருக்க, இந்தப் பார்ப்பன ஏடு(துக்ளக்) பெரியாரும் அண்ணாவும் இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் ஓடி ஒட்டிக் கொண்டார்கள் என்கிறது. இதைவிட பித்தலாட்டம் வேறு உண்டா?
அடுத்து, 3.3.1965 ‘விடுதலை’ தலையங்கத்தில் பெரியார் எழுதியதில் ஒரு பகுதியைத் துண்டாக எடுத்துப் போட்டு, இந்தி எதிர்ப்பில் பெரியாருக்கு அக்கறையில்லை என்பது போல காட்டியுள்ளது. ஆனால், தலையங்கத்தில் பெரியார் உண்மையில் எழுதியது என்ன?
“இன்றைக்கும் நான் இந்தியை எதிர்க்கிறேன். ஆனால், தமிழ் கெட்டுவிடுமே என்கின்ற எண்ணத்தில் நான் இந்தியை எதிர்க்கவில்லை. தமிழ் கெடுவதற்கு தமிழில் எதுவும் மீதி இல்லை. புலவர்களே தமிழைக் கெடுத்துவிட்டார்கள். மற்றபடி தமிழ் கெடுவதற்கு சில புராணங்கள் அதுவும் பார்ப்பனர் நலனுக்கு பார்ப்பனர் சமய - தர்ம - கலாசார _ ஆத்மார்த்த ஆஸ்திகத்திற்கு ஆகவே உண்டாக்கப்பட்ட தத்துவங்களை வடமொழியில் இருந்து தமிழாக்கம் செய்த பாரதம், இராமாயணம், கந்தபுராணம், பெரிய புராணம், திருவிளையாடல் புராணம், சிலப்பதிகாரம் முதலிய குப்பை கூளங்கள் தான் இனி கெட்டால் கெடலாமே ஒழிய, பகுத்தறிவு விஞ்ஞானம் புதிய நாகரிக வளர்ச்சி வகைகளுக்கேற்றவை தமிழில் எதுவும் இல்லை, கெடப்போகிறதில்லை.
பழைய அரசர்கள் தமிழைக் காத்தார்கள் என்றால், என்ன அருத்தம்? புலவர்கள் புலமை வளர்த்தார்கள் என்பதுதான் பொருள். சமயாச்சாரிகள் தமிழைக் காத்தார்கள் என்றால் என்ன பொருள்? மத மூடநம்பிக்கை குப்பை கூளங்களையும் மாசு பட்டுக் கிடந்த முட்டாள்தனமான கடவுள்களையும் புளிபோட்டு விளக்கி பிரகாசமாக்கினார்கள் என்பது தவிர, வேறு என்ன கருத்து காண முடியும்?
ஆனதினால் நான் தமிழ் கெட்டுவிடுமே என்று இந்தியை எதிர்க்கவில்லை. மற்றெதற்கென்றால் ஆங்கிலமே அரசியல் மொழியாக, சரித்திர மொழியாக, விஞ்ஞான மொழியாக, தொழில் மொழியாக, இயந்திர சாதன மொழியாக, பெரியோர்கள், அறிஞர்கள், விஞ்ஞானகர்த்தாக்கள் வாழ்க்கைச் சரித்திர மொழியாக, சட்டமொழியாக, சம்பிரதாய மொழியாக ஆகவேண்டும் என்பதற்காகவே இந்தியை எதிர்க்கிறேன்.
ஆச்சாரியார் நோக்கம் - தமிழர் கல்வியை ஒழிப்பதே!
பதவி கிடைத்தபோதெல்லாம் ஆச்சாரியார் இந்தியைப் புகுத்துவதையே முக்கிய கொள்கையாகவும், தமிழர் படிப்பை ஒழிப்பதையே இன்றியமையாத கொள்கையாகவும் கொண்டு ஆட்சி செலுத்தவில்லையா?
1938இல் இந்தியை கட்டாயமாகப் புகுத்தினார். கவர்னர் ஜெனரலாக இருக்கும்போது இந்தியை ஆட்சி மொழியாக்கினார்; மற்றும் மத்திய அரசாங்க மந்திரியாக இருக்கும்போது இந்தி படித்தவனுக்குத்தான் உத்யோகம் என்று உத்தரவு போட்டார். உத்யோகம் போனபின்பு தமிழ்நாட்டில் இங்கிலீஷ் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்கிற சாக்கில் தமிழ்மக்கள் நட்பைக் கொண்டார்.
இந்தி திணிக்க இடந்தர மாட்டோம்!
இந்தி நம் மீது திணிக்கப்படுமானால் அதை ஒழிக்க இந்த நாட்டில் மருந்து நம் கையில்தான் இருக்கிறது; அதை இப்போது வீணாக்கிக் கொள்ளக்கூடாது. இந்தியைப் புகுத்தினவர்கள் அரசியலுக்காகப் புகுத்தவில்லை; கலாச்சார மாற்றத்திற்காகவே இன உணர்ச்சியை மறக்கடிப்பதற்காகவே புகுத்தினார்கள்; காந்தியின் கருத்தும், ஆச்சாரியாரின் கருத்தும், வெறியர்களின் கருத்தும் இதுவேயாகும்.
ஆதலால், இந்தி விஷயத்தில் நான் - திராவிடர் கழகம் அசமந்தமாக இருப்பதாக யாராவது கருதினால் அது தவறான கருத்தாகும்.
காமராஜர் ஆட்சியே கஷ்டங்களைப் பரிகரிக்கவல்லது
நான் சுமார் இரண்டாண்டுக்கு முன்னாலேயே பொதுமக்களுக்கு என் கருத்தைத் தெரிவித்திருக்கிறேன். அதாவது,
காமராஜர் ஆட்சி அவசியமா? இந்தி ஒழிய வேண்டியது அவசியமா? என்று என்னை யாராவது கேட்டால் காமராஜர் ஆட்சிதான் அவசியம் என்று பலமாகச் சொல்வேன். காமராஜர் ஆட்சி நிலைத்தால் இந்தியை மாத்திரமல்ல; மற்றும் அனேக காரியங்களை ஒழித்துக் கட்டலாம்.’’
- இதுவே பெரியார் கூறியது.
இந்தத் தலையங்கத்தில் கடைசி பாராவில், கடைசி வரியை நீக்கிவிட்டு காமராசர் ஆட்சிதான் அவசியம்! என்பதை மட்டும் எழுதியுள்ளது துக்ளக் ஏடு. இதைவிட மோசடி வேறு உண்டா?
கடைசி வரிதானே முக்கியம்!
“காமராசர் ஆட்சிதான் எனக்கு அவசியம் என்று பலமாகச் சொல்வேன். காமராசர் ஆட்சி நிலைத்தால் இந்தியை மாத்திரமல்ல, மற்ற அனேக காரியங்களை ஒழித்து விடலாம்’’ என்று பெரியார் எழுதினார். அப்படியென்றால் அதன் பொருள் என்ன? காமராசர் ஆட்சி மூலம் இந்தியை ஒழிப்பேன் என்பது தானே? கடைசி வரியை நீக்கிவிட்டு இந்தி ஒழிப்பில் பெரியாருக்கு அக்கறையில்லையென்பது பித்தலாட்டமல்லவா?
(தொடரும்)
- உண்மை இதழ், , 1-15.2.2021
Sunday, 7 April 2019
மையில் கற்களில் இந்தி
2004ல் முதல் முறையாக தமிழ்நாட்டு மையில் கற்களில் தமிழும் ஆங்கிலமும் நீக்கப்பட்டு இந்தியில் மட்டுமே எழுதப்பட்டது.இதை கண்டித்து 27.10.04ல் படத்துடன் விடுதலை நாளேட்டில் எழுதினேன்.
27.11.04ல் தஞ்சையில நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழுவில் இந்த இந்தித் திணிப்பை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ் நாடு சட்டசபையிலும் நடுவண் அரசின் அவையிலும் விடுதலை நாளேட்டை காண்பித்து வாதிடப்படடது. அன்றைய அமைச்சர் டி.ஆர்.பாலு ஆவண செய்வதாக உறுதியளித்தார்.
21.12.04ல் இந்தி திணிப்பை நீக்க அன்றைய தமிழ்நாடு முதவ்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் நடுவண் அரசுக்கு கடிதம் அனுப்பினார். 24.12.04ல் அன்றைய அமைச்சர் டி.ஆர்.பாலு அவர்கள் தமிழ் இடம்பெற நடவடிக்கை எடுத்தார்.
மீண்டும் பழையபடி பாஜக ஆட்சியில் இந்தி மட்டுமே என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- 4.4.17 முகநூலில் நான்

