Showing posts with label ஆசிரியர். Show all posts
Showing posts with label ஆசிரியர். Show all posts

Tuesday, 2 July 2024

ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு நடத்தப்பட்ட வெற்றிகர இதய அறுவை சிகிச்சை

 

இயக்க வரலாறான தன் வரலாறு(239) : அமெரிக்காவில் டாக்டர் டட்லி ஜான்சன் எனக்கு இதய அறுவை சிகிச்சை 4 மணி நேரம் வெற்றிகரமாக செய்தார்!

டிசம்பர் 01-15 2019

அய்யாவின் அடிச்சுவட்டில்…

கி.வீரமணி

எனது இதய அறுவை சிகிச்சை

16.4.1991 அன்று அமெரிக்கா சென்று என் உடல்நிலையைப் பரிசோதித்துக் கொள்ளவும், கழகப் பணிகளை மேற்கொள்ளவும் சென்றேன். அங்கு 18.4.1991 அன்று விஸ்கான்சின் மாநிலம் (Wisconsin State) மில்வாக்கி (Milwaukee) நகரில் உள்ள பிரபல செயின்ட்மேரீஸ் மருத்துவமனையில் பரிசோதனைக்குப் பின் பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் டட்லி ஜான்சன் அவர்கள் எனக்கு மாற்று இதய அறுவை சிகிச்சை செய்வார்கள் என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்பின் திட்டமிட்டபடி எனக்கு இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம் எல்லாம் நன்றாக இருக்கிறது. இரண்டு நாள்கள் தீவிர கண்காணிப்புப் பிரிவில் இருந்தேன். இச்செய்திகள் டாக்டர் சோம.இளங்கோவன் அவர்கள் மூலம் திராவிடர் கழக தலைமை நிலையத்திற்கும் அதன்வழி தமிழக மக்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.

எனக்கு நினைவு திரும்பி உடல்சரியான நிலையில், 16.5.1991 அன்று சிகாகோவிலிருந்து மருந்து சிகிச்சை குறித்தும், நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து அனைத்தும் விரிவாக ‘விடுதலை’யில் எழுதியிருந்தேன். அதில் சிகாகோவில் உள்ள பிரபல மருத்துவமனையான  St. Luke’s Roser  Presbyterian Medical Centre மருத்துவமனையில் உள்ள பிரபல டாக்டர் ஷப்லானி என்னை முதலில் பரிசோதித்தார்.  (Angiogram சோதனை)

அந்தப் பரிசோதனைக்குப் பின்னர் அறுவைச் சிகிச்சையே, மேற்கொள்ள வேண்டிய சிறந்த முறை என்று அவரும், அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று செய்துவரும் அருமை சகோதரர் சிகாகோ இளங்கோவன் அவர்களும் முடிவுக்கு வந்தனர். எனது துணைவியாரும், பிள்ளைகளும் அந்த முடிவை ஏற்றனர்.

என்னைப் பொறுத்தவரையில், துவக்கத்தில் இப்படி ஓர் அறுவைச் சிகிச்சைக்கு அவசியம் ஏற்படாது என்று நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால், மருத்துவர்களும், நண்பர்களும் அறுவைச் சிகிச்சை செய்து கொள்வதே நல்லது என்று கூறியதை ஏற்று அதன்படி இது நடந்தது.

துவக்கத்தில் ‘இந்த நேரத்திலா நாம் தமிழ்நாட்டை விட்டு வெளிநாடு செல்வது? நமது பணி தேவைப்படும் நேரமாயிற்றே’ என்கிற எண்ணமே என்னுள் மேலோங்கி நின்றது. நமது இனமானப் பணியும், தமிழினத்துக்கு நாம் கடமையாற்றுவதும் மிகவும் இன்றியமையாதது அல்லவா என்று நினைத்து கொஞ்சம் யோசித்தேன். மனத் தயக்கம் ஏற்பட்டது என்றாலும், நமது கழகத் தோழர்களின் கடமை உணர்வையும், தொண்டாற்றும் திறனையும் நன்கு அறிந்தவன் என்பதால் இயக்கப் பணிகள் தொய்வின்றி நடக்கும் என்கிற நம்பிக்கையில் அமெரிக்கா சென்றேன்.

டாக்டர்

சோம.இளங்கோவன்

டாக்டர் சோம.இளங்கோவன் அவர்கள் ஒவ்வொரு நாளும் அறுவைச் சிகிச்சை பற்றிய தகவலை தோழர்கள் அறியும்படி அனுப்பிக்கொண்டே இருந்தார். டாக்டர் இளங்கோவன் அவர்கள் மட்டுமா? அவரது மூத்த அண்ணன் வேலாயுதம், அவரது தம்பி டாக்டர் தமிழவேள் மற்றும் அவரது சகலை ஆரூயிர் சகோதரர் டாக்டர் சந்திரன் மற்றும் இவர்கள் குடும்பத்தினர், அட்லாண்டாவில் உள்ள சகோதரர் டாக்டர் நல்லதம்பி (தலைவர் நஞ்சய்யா அவர்களது அன்புச்செல்வன்), அவரது தம்பி டாக்டர் இன்ப வாழ்வு குடும்பத்தினர்) வாஷிங்டன் திரு.ராஜ் குடும்பத்தினர், டல்லாஸ் நகரில் உள்ள டாக்டர் இலக்குவன் தமிழ் குடும்பத்தினர், வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் நமது அறிவு ஆசான் அய்யா அவர்களுக்கு மருத்துவ உதவி செய்த காலத்திலிருந்து இன்று வரை உதவிடும் அன்புக்குரியவர்கள், மேலும் பாசத்திற்குரிய பலரும் எனக்கு அந்த நேரத்தில் அன்பும் ஆதரவும் தந்தனர்.

அறுவை சிகிச்சைக்குப் பின்

டாக்டர் டட்லி ஜான்சன் உடன் ஆசிரியர்

குறிப்பாக, ‘மாம்’ என்று நாங்கள் அன்போடு கடந்த பல ஆண்டுகளாக அழைத்து வரும் திருமதி வர்ஜினியா கிர்ச்னர் என்கிற 75 வயது மூதாட்டியார் அம்மையார் என்பாலும், குடும்பத்தினர்பாலும் அன்பைப் பொழிவார். அவரது அன்பு மகனாக என்னைக் கருதி பாசம் காட்டுபவர்; அவர் செய்தி அறிந்தவுடன் சுமார் 700 மைல் காரை ஓட்டிக்கொண்டு, அறுவை சிகிச்சைக்கு முன்பாக குடும்பத்தினரோடு வந்து இரண்டு நாள் தங்கி என்னை ஊக்கப்படுத்தி, குடும்பத்தினர்க்கு குறிப்பாக மோகனா, அசோக்_ சுபிதா, அருள்-_பாலு ஆகியோருக்கு நல்ல  ஆறுதல், ஊக்கத்தை_தெம்பை அளிக்க முன்வந்தனர்.

நீண்டகாலமாக குடும்ப உறுப்பினரான பாசத்திற்கும், அன்பிற்கும் உரிய சகோதரர், பண்பும் மாறாத டாக்டர் ஏ.சி.ஜான்சன் குடும்பத்தினர் அவரது சகோதரி, சகோதரர் அத்துணைப் பேரும் செயின்ட்லூயிஸில் உள்ள பேராசிரியர் பெரியார் பெருந்தொண்டர் டாக்டர் திருநாவுக்கரசு குடும்பத்தினர், அதுபோல மேரிலாண்ட் மாநிலத்தைச் சார்ந்த டாக்டர் சித்தானந்தம் தம்பதிகள், நியூஜெர்சியிலுள்ள சகோதரி அமுதா, நியூயார்க் நண்பர் மோகன், வாஷிங்டன் கோபாலசாமி, பிச்சுமணி, செல்லையா, தில்லைராஜா, விக்னராஜா, சிகாகோவில் உள்ள விசுவநாதன், கண்ணகி விசுவநாதன் அவர்கள் பெற்றோர் திரு. திருமதி பாலசுப்பிரமணியம், மோகன் குமார், பாபு குடும்பத்தினர், பாஸ்கரன் குடும்பத்தினர், கெனோஷாவில் உள்ள துக்காராம், சாந்தாராம், பாஸ்கரன், அய்ங்கிரன், பாலசண்முகம், நந்தா, மாதவ் சுரேஷ், மில்வாக்கியில் உள்ள வைரவன், விஜய்பால், ரவி குடும்பத்தினர் அவரது தாயார் உள்பட அனைவரது அன்பு விசாரிப்புகள் மிக்க ஆறுதல் அளித்தது.

டாக்டர் நல்லதம்பி தொலைதூரமான அட்லாண்டிக்கில் இருந்து வந்து  மருத்துவமனையில் மூன்று நாள்களுக்கு மேல் என்னுடன் தங்கி அவ்வப்போது, எனக்கும், என் குடும்பத்தினருக்கும் தெம்பையும், உற்சாகத்தையும் அளித்து வந்தார்.

-எல்லா ஏற்பாடுகளையும் முன்னின்று செய்து வந்த சிகாகோ டாக்டர் இளங்கோவன் அவர்களை, ‘மில்வாக்கி’ என்னும் நகரில் உள்ள செயின்ட்மேரீஸ் மருத்துவமனையில் (இது 200 ஆண்டுகளாக இயங்கும் மருத்துவமனை) பிரபல டாக்டர் டட்லி ஜான்சன் அவரது குழு டாக்டர்கள் சையத், காமத் ஆகியோர் குழுவில் மயக்க மருந்து தரும் டாக்டர் இளங்கோவன்தான்! (Anesthesist) (இவர் பெயரும் இளங்கோவன்தான். இவரின் தந்தையார் நாமக்கல்லில் உள்ளார். மாமனார் மதிப்பிற்குரிய திரு.இராமசாமி அவர்கள் சென்னை அக்கவுண்ட்டன்ட் ஜெனரல் ஆபீசர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திலும், பணியாற்றி ஓய்வு பெற்று இப்போது தமிழக மூதறிஞர் குழுவிலும் உறுப்பினராக உள்ளார்.) ஆகியோரும் பொறுப்பை ஏற்றனர்.

அறுவைச் சிகிச்சைக்கான தேதியையும் வாய்ப்பையும் விரைந்து பெற்று பல வகையிலும் சிறப்பாக உதவியவர் மயக்க மருத்துவ இயல் டாக்டர் இளங்கோவன் அவர்கள் ஆவார்கள்! இல்லையானால் பல மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும் நிலையே!

பிரபல அறுவை சிகிச்சை டாக்டர் டட்லி ஜான்சன், புன்னகையுடன் கொண்ட பணியில் முழு ஈடுபாடு காட்டி ஒரு நாளில் சில நேரங்களில் 22 மணி நேரம் கூட இரண்டு, மூன்று அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும் சிறப்பு வாய்ந்த டாக்டர் ஆவார். எனக்கு 4 மணி நேரம் எடுத்துக் கொண்டதாக என்னிடம் சொன்னார்கள்.

விஸ்கான்சின் மாநிலத்தைச் சேர்ந்த கெனோஷா என்னும் ஊரில் (மகள் அருள் இல்லத்திலிருந்து -_ மில்வாக்கி நகருக்கு) தங்கி முறையான பயிற்சிகளை மேற்கொண்டு எனது உடல்நலம் சீரடைந்து வந்தது.

இதற்கிடையே சென்னையிலும், சிங்கப்பூரிலிருந்தும், லண்டனிலிருந்தும், பாரிசிலிருந்தும் இந்த நல விசாரிப்புகள் உறுதிப்பாடுகள் மெய்சிலிர்க்கச் செய்தன. இதனால் எனக்கு வலி குறைந்து வலிமை கூடிற்று. அதனை, “தீராக் கடன்காரனாக்கி விட்டனர்’’  என்று அறிக்கையில் உள்ளம் நெகிழ எழுதியிருந்தேன்.

Sunday, 16 June 2024

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் அளித்த மதிப்புறு முனைவர் பட்டம்!


அய்யாவின் அடிச்சுவட்டில்…- 

2023 அய்யாவின் அடிச்சுவட்டில் ஏப்ரல் 1-15,2023

இயக்க வரலாறான தன் வரலாறு (313)
கி.வீரமணி

(கட்டுரையின் ஒரு பகுதி)

காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் மதிப்புறு டாக்டர் பட்டம் (D.Litt) எமக்கு வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது எனக்கு மதிப்புறு முனைவர் பட்டம் அளிக்க பல்கலைக்கழக ஆட்சிக் குழு முடிவு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டபின், பல நாள்கள் கழித்து, ‘தினமலர்’ வெளியீட்டாளர் ஆர். இலட்சுமிபதி அவர்கள் பெயரும் இணைக்கப்பட்டது. இது குறித்த ஒரு செய்தியை நான் பின்னாட்களில் அறிந்தேன். பல்கலைக் கழக ஆட்சிக் குழு முடிவு செய்து வேந்தரின் ஒப்புதலும் பெறப்பட்டு, விழாவிற்கான அழைப்புகள் எல்லாம் தயாராகி விட்டபின், அந்தப் பெருமை எனக்கு தனியே ஏற்பட்டு விடக்கூடாது என்று நினைத்த சிலர், ஆளுநர் மாளிகைக்கு அன்றைய ஆளுநரான ராம்மோகன் ராவ் அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து திடீரென்று தினமலர் வெளியீட்டாளருக்கும் சேர்த்து தர வேண்டும் என்று வற்புறுத்தவே, ஆளுநர் மாளிகையிலிருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்பின் விதிகளை மீறி அவரது பெயரும் இணைக்கப்பட்டது. பார்ப்பனர்களுக்கு சட்டம், வளைந்து கொடுத்தது.

அழகப்பா பல்கலைக்கழகத்தின் (காரைக்குடி) பதினைந்தாம் பட்டமளிப்பு விழா 4.4.2003 வெள்ளிக்கிழமை முற்பகல் 10:15 மணிக்குத் தொடங்கியது.

பட்டமளிப்பு விழா மரபுப்படி முதலாவதாக தமிழ்நாடு ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ராம்மோகனராவ், துணைவேந்தர் டாக்டர் அ. இராமசாமி, மதிப்புறு முனைவர் பட்டம் அளிக்கப்பெறும் நாமும், ‘தினமலர்’ வெளியீட்டாளர் ஆர். லட்சுமிபதி, செனட் உறுப்பினர்களுடன் பட்டமளிப்பு நடைபெறும் முருகப்பா அரங்கிற்குச் சென்றோம்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கப்பட்டது. தமிழ்நாடு ஆளுநர் விழாவிற்குத் தலைமை தாங்கினார்.
பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் அ. இராமசாமி அவர்கள் வரவேற்புரையாற்றி
னார். பல்கலைக் கழகத்தின் சாதனைகள் சிறப்புத் திட்டங்கள், உலகளாவிய அளவில் அதன் தொடர்புகள், செயல்பாடுகள் குறித்து துணைவேந்தர் விரிவாக அவ்வுரையில் குறிப்பிட்டார்.

எமக்கு மதிப்புறு டாக்டர் பட்டம் அளிக்கப்படுவதற்குமுன் எமது சிறப்பு இயல்புகளை, சாதனைகளை, கல்வித் தகுதிகளை, அரை நூற்றாண்டைக் கடந்த தொண்டுப் பணிகளை பட்டியலிட்டுக் காட்டினார் துணைவேந்தர். (சிவீtணீtவீஷீஸீ) மகளிர் கல்வி, மகளிர் முன்னேற்றம், சமூகநீதி, சமூக சீர்திருத்தம் முதலிய துறைகளில் எமது பணிகளைப் பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாக அதில் குறிப்பிட்டார். (பெட்டிச்செய்தி காண்க)சரியாக 10:40 மணிக்கு மதிப்புறு டாக்டர் (டி.லிட்) பட்டத்தினை எமக்கு தமிழ்நாடு ஆளுநர் பல்கலைக் கழகவேந்தர் மேதகு ராம்மோகனராவ் அவர்கள் நீண்ட கரவொலிக்கிடையே வழங்கினார்கள்.

40 ஆண்டுகளாகப் பத்திரிகைத்துறையில் சிறந்த சேவைகளை புரிந்ததற்காக ‘தினமலர்’ வெளியிட்டாளர் ஆர். லட்சுமிபதி அவர்களுக்கு மதிப்புறு டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாகத் துணைவேந்தர் அறிவிக்க, அதனைத் தொடர்ந்து மேதகு ஆளுநர் அவர்கள் பட்டத்தினை வழங்கினார்.

டாக்டர் அழகப்பா செட்டியார் அவர்களின் மகளும் பல்கலைக் கழக ஆயுள்கால ஆட்சிமன்றக்குழு உறுப்பினருமாகிய உமையாள் ராமநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பட்டமளிப்பு விழாப் பேருரையை நிகழ்த்தினார்.
மக்கள் தொகையில் சரி பாதி பெண்கள். அவர்கள் முன்னேற்றம் என்பது சமுதாய முன்னேற்றமாகும். ஆனாலும், நடைமுறையில் உயர்கல்வி, பெரிய பதவிப் பொறுப்புகளில் ஆண்களைவிடப் பெண்கள் சதவிகிதம் மிகவும் குறைந்தே காணப்படுகிறது.

ஆனாலும் அழகப்பா பல்கலைக்கழகம் பெண் கல்விக்கு உரிய இடத்தைத் தருகிறது; இப்பல்கலைக்கழகத்தில் மாணவர்களைவிட மாணவிகளின் சேர்க்கை மிக அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு பட்டம் பெற்றவர்ள் 407 பேர்களில் 236 பேர் பெண்கள்; தங்கப்பதக்கம் பெற்ற 21 பேரில் 15 பேர் பெண்கள் என்று மிகவும் பெருமிதமாகச் சுட்டிக்காட்டினார் உமையாள் ராமநாதன் அவர்கள்.

விழாவில் ஆளுநர் அவர்கள் 54 பேர்களுக்கு டாக்டர் பட்டமும், நூறு பேர்களுக்கு எம்.ஃபில். பட்டமும் 356 மாணவ-மாணவியர்களுக்கு முதுகலை மற்றும் பி.எட்., பட்டமும் வழங்கிப் பாராட்டினார். மொத்தம் 510 பேர் நேரில் பட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.
தமிழகம் தழுவிய அளவில் கழகத் தோழர்களும், பொறுப்பாளர்களும் காரைக்குடிக்கு திரண்டு வந்து மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.

அழகப்பா பல்கலைக் கழகம்
அளித்த சிறப்புக் குறிப்புகள்…

2003 ஏப்ரல் 4ஆம் தேதி காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பதினைந்தாவது பட்டமளிப்பு விழாவில்
கி. வீரமணி அவர்களுக்கு இலக்கியத்துக்கான மதிப்புறு முனைவர் (டாக்டர்) பட்டத்தை வழங்கியபோது பல்கலைக்கழகத் துணை வேந்தர் முனைவர் அ. ராமசாமி அவர்கள் ஆற்றிய குறிப்புரை.
பல்கலைக் கழக வேந்தர் அவர்களே!
சமூகத்தின் நலிந்த பிரிவு மக்களின் நலனுக்காகவும், பெண்கள் உரிமைக்காகவும் போராடத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட கழகத் தொண்டரும், சமூகநீதிப் போராளியுமான திரு.கி. வீரமணி அவர்களைத் தங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் நான் பெரு மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த கடலூரில் 1933 டிசம்பர் 2ஆம் தேதி அன்று பிறந்த திரு.கி. வீரமணி கல்வி அறிவில் சிறந்து விளங்கினார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பொருளியலில் முதுகலைப் பட்டப் படிப்பில் பயிலும் போது மதிப்பு மிகுந்த தங்கப் பதக்கம் அவருக்கு அளிக்கப்பட்டது. சென்னைப் பல்கலைக் கழகத்தில் சட்டக்கல்வி பயின்று 1960இல் பட்டம் பெற்ற அவர் அந்த ஆண்டிலேயே தன்னை ஒரு வழக்குரைஞராகப் பதிவு செய்துகொண்டார்.
திரு.கி. வீரமணி அவர்கள் ஓர் ஆழ்ந்த சிந்தனையாளரும், மாபெரும் எழுத்தாளருமாவார். தமிழிலும் ஆங்கிலத்திலும் அவர் எழுதியுள்ள அய்ம்பதுக்கும் ‘மேற்பட்ட நூல்களே அதற்குத் தகுந்த சான்றாகும். அவரது நூல்களில் சிறப்பானவை:
சமூகநீதிக்காகத் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட போராட்ட வரலாறு,

மனித நேயமும் நாகரிகமும், பெரியார் களஞ்சியம் (ஆறு தொகுதிகள்) விடுதலைப் போரும் திராவிட இயக்கமும் – உண்மை வரலாறு.
அத்துடன் அவர் ‘விடுதலை’ என்னும் தமிழ் நாளேடு, ‘உண்மை’ என்னும் தமிழ் மாதமிருமுறை இதழ், ‘மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ என்னும் ஆங்கில மாத இதழ் ஆகியவற்றின் ஆசிரியருமாவார்.

தமிழிலும் ஆங்கிலத்திலும் நன்கு பேசவல்ல ஆற்றல்மிகு பேச்சாளரான அவர், தனது மாணவப் பருவம் முதற்கொண்டே பல விருதுகளையும் பரிசுகளையும் பதக்கங்களையும் பெற்று வந்துள்ளார்.

அவர் பல சர்வதேச, தேசிய அளவிலான கருத்தரங்குகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1985இல் டென்மார்க் நாட்டு தலைநகர் கோபன்ஹேகன் நகரில் நடைபெற்ற பன்னாட்டு அமைதி மாநாடு, 1995இல் அமெரிக்காவில் நடைபெற்ற தமிழ்நாடு நிறுவனத்தின் ஆண்டு மாநாடு, 1998இல் மும்பையில் மனிதநேய அறநெறி ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட சர்வதேசக் கருத்தரங்கம் ஆகியவை அவற்றில் குறிப்பிடத்தகுந்தவையாகும். தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகம், புதுச்சேரிப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் அவர் பல நினைவுச் சொற் பொழிவுகளை ஆற்றியுள்ளார்.

உலகெங்கும் பரவலாகப் பயணம் செய்துள்ள அவர் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ரஷ்யா, ஜப்பான், மியான்மர் மற்றும் பல இதர அய்ரோப்பிய நாடுகளுக்கும் பலமுறை சென்று பல கருத்தரங்குகளிலும் மாநாடுகளிலும் சிறப்புச் சொற்பொழிவுகளாற்றியுள்ளார்.

தந்தை பெரியார் அவர்களாலும், அவர்களின் பகுத்தறிவுச் சிந்தனைகளாலும் தனது இளம் வயது முதலே கவரப்பட்ட திரு. வீரமணி அவர்கள் சுயமரியாதை, பகுத்தறிவு, பெண்களுக்கான சமஉரிமை, ஆகிய பெரியார் அவர்களின் கொள்கைகளைப் பரப்ப தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருபவர் ஆவார். சமூகநீதிக்காகவும், மனித உரிமைகள், பெண்கள் சமஉரிமை போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளுக்காகவும் போராடும் ஒரு சமூகத் தொண்டராக இவர் தனது அய்ம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்வில் திகழ்கிறார்.
பெரியார் அவர்களின் கொள்கைகளைப் பரப்ப இவர் பல நிறுவனங்களை உருவாக்கியுள்ளார். அவற்றில் முக்கியமானவை:
* பெரியார் தத்துவக் கொள்கை பரப்பும் பன்னாட்டு மய்யம்
* மகளிர் மேம்பாடு மறுமலர்ச்சிக்கான பெரியார் அமைப்பு (‘பவர்’)
பெண்களும் சமூகத்தில் நலிவடைந்த பிரிவு மக்களும் கல்வியறிவு பெற வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த அவர், தனது ஆசானான பெரியார் அவர்களின் பெயரில் பல கல்வி நிறுவனங்களையும், அறக்கட்டளையையும் உருவாக்கியுள்ளார்.
இக்கல்வி நிறுவனங்கள்:
* பெரியார் மணியம்மை மகளிர், பொறியியற் கல்லூரி, வல்லம், தஞ்சாவூர் (பெண்களுக்கென முதன்முதலாகத் தொடங்கப்பட்ட முற்றிலும் பெண்களுக்கான பொறியியற் கல்லூரி இதுவே!
* பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., பயிற்சி மய்யம், சென்னை.
* பெரியார் கணினி உயர்கல்விக் கல்லூரி, திருச்சி.
* பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி,
பாராட்டத்தக்க சமூகத் தொண்டாற்றிய திரு.கி.வீரமணி அவர்கள் பல விருதுகளையும் பெற்றுள்ளார். அவற்றில் ஒரு சிலவற்றை இங்கு குறிப்பிடலாம்.
* சமூக நீதி இயக்கத்திற்காக சிறப்பான முறையில் தொண்டாற்றியதற்காக தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட சமூக நீதிக்கான “பெரியார் விருது.’’
சுற்றுச் சூழல், சுகாதாரம், வறுமை ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம் போன்ற துறைகளில் அவர் ஆற்றிய தொண்டினைப் பாராட்டிப் பெருமைப்படுத்தும் முறையில் சமூக வளர்ச்சித் திட்டத்தின் கீழ், கனடா அரசால் வழங்கப்பட்ட ‘சிடா’ சிறப்பு நிலைப் “பன்னாட்டு விருது.’’
புதுடில்லி தேசிய முன்னேற்ற முன்னணியால் வழங்கப்பட்ட “பாரத் ஜோதி’’ விருது.
சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவு மக்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்புக் கோரும் சமூக நீதிக்காகவும், குறிப்பாகப் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், பெண்களின் உரிமைகளுக்காகவும் இடைவிடாது போராடி வருபவரான திரு.கி. வீரமணி அவர்களுக்கு இலக்கியத்துக்கான கவுரவ டாக்டர் (முனைவர்) பட்டம் வழங்க அழகப்பா பல்கலைக் கழக ஆலோசனைக் குழு (சிண்டிகேட்) பரிந்துரைத்துள்ளதை ஏற்றுக்கொண்டு வழங்குமாறு தங்களைப் பணிவுடன் வேண்டுகிறேன்.

நினைவுகள் நீளும்…

 

Saturday, 18 November 2023

ஒப்பற்ற கொள்கை மாவீரர் தோழர் என்.சங்கரய்யா மறைவு கழகத் தலைவர் இறுதி மரியாதை


1
தோழர் சங்கரய்யாவின் உடலுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். உடன் சி.பி.எம். மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் ஜி. இராமகிருஷ்ணன் மற்றும் திராவிடர் கழகத் தோழர்கள். (16.11.2023)

சென்னை, நவ.16 ஒப்பற்ற கொள்கை மாவீரர் தோழர் என்.சங்கரய்யா உடலுக்குத் தமிழர் தலைவர் மலர்மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.

முதுபெரும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும், தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசு அளித்த முதல் ‘தகைசால் தமிழர்’ என்ற சிறப்பு விருதினைப் பெற்றவரும், எளிமையும், தியாகமும், கொள்கை உறுதியும்   பல தனிச் சிறப்பு அம்சங்களெனக் கொண்டவருமான 102 வயது வாழ்ந்த தோழர் என்.சங்கரய்யா அவர்கள் நேற்று (15.11.2023) மறைவுற்றார்.

அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக சென்னை தியாகராயர் நகர் வைத்தியராமன் சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது.

இன்று (16.11.2023) காலை 9.30 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் 

கி.வீரமணி அவர்கள், மறைவுற்ற தோழர் என்.சங்கரய்யா உடலுக்கு மலர்மாலை வைத்து, மரியாதை செலுத்தி வீர வணக்கம் செலுத்தினார்.

இந்நிகழ்வின்போது திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொரு ளாளர் வீ.குமரேசன், தலைமைக் கழக அமைப்பாளர் தே.செ.கோபால், மாநில ப.க. தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், மாநில கழக இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேசு, பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்த சாரதி, துணைச் செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன், அமைப்பாளர் மு.ந.மதிய ழகன், பி.டி.சி.இராசேந்திரன், வடசென்னை மாவட்ட காப்பாளர் கி.இராமலிங்கம், மாவட் டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், அமைப்பாளர் சி.பாசுகர், மாவட்ட இளைஞரணி தலைவர் நா.பார்த்திபன், சைதை தென்றல், க.கலைமணி, பெரம்பூர் கழகத் தலைவர் பா.கோபால கிருஷ்ணன், பெரியார் யுவராஜ், நரேஷ் மற்றும் தோழர்கள் வந்திருந்து இறுதி மரியாதை செலுத்தினர். 

"போராட்ட வீரர் தியாகச் செம்மல் செஞ்சட்டை சங்கரய்யாவுக்கு வீர வணக்கம்" என்று கழகத் தோழர்கள் முழக்கத்துடன் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தோழர் சங்கரய்யா உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, சி.பி.எம். கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மற்றும் மாநிலக் கட்சிப் பொறுப் பாளர்களுடன் தற்போதைய சமூக அரசியல், பொருளாதார பிரச்சினைகள் குறித்தும் அவர்களின் உரையாடலில் முக்கிய இடம் பெற்றன. தந்தை பெரியாரின் சமூகப் புரட்சி சிந்தனைகள், மக்கள் மத்தியில் அவர் பிரச்சாரத்தால், போராட்டங்களால் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் சி.பி.எம். தேசிய பொதுச் செயலாளர் பெருமையுடன் குறிப்பிட்டார். 

23

மறைந்த தோழர் சங்கரய்யாவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய பல்வேறு கட்சிகளின் முன்னணியினர் கலந்துரையாடினர். மேனாள் எம்.பி. டி.கே. ரங்கராஜன், சி.பி.எம். மகளிரணி பொறுப்பாளர் உ. வாசுகி, சிபிஎம் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் செயலாளர் சம்பத், 'செம்மலர்' ஆசிரியர் எஸ்.ஏ. பெருமாள், சி.பி.எம்.  தேசிய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, சி. மகேந்திரன் (சி.பி.அய்.), திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் ஆகியோர் உள்ளனர்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தோழர் என்.சங்கரய்யா உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தியவுடன், அங்கிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, மேனாள் செயலாளர் பிரகாஷ் கரத், தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன், மேனாள் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன், மேனாள் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தொழிற்சங்கத் தலைவர் சவுந்தரராஜன், செம்மலர் ஆசிரியர்  எஸ்.ஏ.பெருமாள், தீண்டாமை ஒழிப்பு முன்னணி செயலாளர் சம்பத், 'தீக்கதிர்' ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம், பத்திரிக்கை யாளர் மயிலை பாலு ஆகியோரிடம் கழகத் தலைவர் ஆறுதல் தெரிவித்தார்.

முன்னதாக மறைவு  செய்தி அறிந்ததும் நேற்று (15.11.2023) தோழர் என். சங்கரய்யா அவர்களின் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, தி.மு.க. துணை பொதுச் செய லாளர் ஆ. இராசா,  மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், தமிழ் நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, மாநில செயலாளர் இரா. முத்தரசன், இந்திய யூனியன் முசுலிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மற்றும் பல்வேறு கட்சி, இயக்கங்கள் சார்பில் தோழர் என்.சங்கரய்யா உடலுக்கு மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

Friday, 14 April 2023

இடஒதுக்கீடு பெற ஜாதிப் பிரிவைக் கூறுக!

 

தலையங்கம் : இடஒதுக்கீடு பெற ஜாதிப் பிரிவைக் கூறுக!

மார்ச் 16-31,2022

 

தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் ஜாதி விவரக் கணக்கெடுப்பு நடத்துவது குறித்து நேற்று (13.3.2022) வெளியான செய்திக்கு, பள்ளிக் கல்வித் துறை ஆணையர் திரு.நந்தகுமார் அவர்கள் நேற்றிரவு அளித்த ஒரு சுற்றறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

இட ஒதுக்கீடு பெற ஜாதி தேவை!

‘‘பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் பட்டியல் வகுப்பினரா, பிற்படுத்தப் பட்டவரா, சிறுபான்மை யினரா, முன்னேறிய வகுப்பினரா என்று மட்டுமே கேட்கப்பட்டிருந்தது.

ஜாதியைக் கேட்கவில்லை; ஜாதி சார்ந்த பிரிவுதான் கேட்கப்பட்டது. ஒரு மாணவர் எந்தப் பிரிவைச் சார்ந்தவர் என்பதுதான் தமிழ்நாடு அரசுக்குத் தேவை.

மாணவர்கள் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் இருந்தால்தான், நலத்திட்டங்களைப் பயன்படுத்த முடியும்.

இது நீண்ட காலமாகப் பின்பற்றப்படும் நடை முறை; புதிய செயலியில் இதை எளிதில் பதிவேற்ற முடியும்.

மாணவர் பள்ளியில் சேர்ந்தால், இந்தச் செயலியில் அவரது ஜாதி எங்குமே சேமிக்கப்படுவதில்லை; அவர் ஜாதி சார்ந்த பிரிவுதான் பதிவாகும். அவர்கள் இட ஒதுக்கீடு பெற இந்த அடிப்படைத் தகவல் தேவை’’

என்று தெளிவுபடுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால், பள்ளிச் சான்றிதழில் ஜாதிப் பிரிவு குறிப்பது எஸ்.எஸ்.எல்.சி., சான்றிதழில் முன்பெல்லாம் ஜாதிப் பதிவாகும். அதுதான் கடைசிவரை இட ஒதுக்கீடு, உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்) பணித் தேர்வுகளின் இறுதிவரை எடுத்துக் கொள்ளப்படும் ஆவணம் ஆகும். பள்ளிச் சான்றிதழ்தான் சரியான ஆவணம்.

‘பள்ளிகளில் ஜாதியைக் கேட்கலாமா?’

சில மாணவர்கள், பெற்றோர்கள் ஜாதிகள் இல்லை _- கூடாது என்று கூறுவோரே, ‘‘பள்ளிகளில் ஜாதியைக் கேட்கலாமா?’’ என்று ஒரு வழமையான கேள்வியை ஜாதி ஒழிப்பாளர்களாகவும், சமூகநீதிப் போராளிகளாகவும் உள்ளவர்களை நோக்கி அடிக்கடி கேட்பதுண்டு.

அப்படிக் கேட்போர் இரு வகையினர்;

ஒரு சாரார், ஜாதி ஒழிப்பு ஆர்வத்தினர் _ உண்மையாக;

மற்றொரு சாரார், இட ஒதுக்கீடு எதிர்ப்பாளர்கள். அவர்கள் ஜாதியை மற்ற எல்லாவற்றிலும் கடைப்பிடித்துக் கொண்டே இப்படி ஏதோ பெரிய ஜாதி ஒழிப்பு வீரர்கள்போல வேடங்கட்டிக் கொண்டு கேட்பதுண்டு.

அதற்குப் பதில் தந்தை பெரியார் அவர்களேகூட கூறியுள்ளார்கள்.

விஷக் கிருமிகளை ஒழிக்க மருந்தில் விஷம் சேர்க்கப்படவில்லையா?

‘‘கொடிய நோய் ஒழிப்புக்கான மருந்தில் (ஆண்டி பயாடிக்) எப்படி கிருமிகளைக் கொல்ல ‘விஷம்’ என்பதை அளவோடு கலந்துகொடுக்க அனுமதிக்கப்படுகிறதோ, அதுபோல’’ என்பதே அப்பதில்.

அம்மை நோயை ஒழிப்பதற்கு அம்மைக் கிருமியையே நம் உடலில் செலுத்தி, அதனை எதிர்த்து அழிக்க அக்கிருமியே போர் வீரர்களாகும் உத்தி போன்ற ஆய்வு ஆகும் என்பதே சரியான விளக்கமான பதில்.

பள்ளிக் கல்வித் துறையின் இந்தக் கணக்கெடுப்புப் பதிவுக்கான முயற்சிகளில் ஜாதிப் பிரிவும் – உட்பிரிவும் இணைந்தால்தான் இட ஒதுக்கீட்டிற்குச் சரியான வாய்ப்பு ஏற்படும்; அதற்காக கூச்சப்படவோ, தயக்கம் காட்டவோ அரசு பள்ளிக் கல்வித் துறை அஞ்சத் தேவையில்லை என்பதே நம்மைப் போன்ற சமூகநீதியாளர்களின் உறுதியான கருத்து.

காரணம், இட ஒதுக்கீடு தருவதில் இப்போது பல பிரிவுகளும், உட்பிரிவுகளும் உள்ளன. உதாரணமாக முன்பு எஸ்.சி., எஸ்.டி.,  ஒன்றாக இருந்தது; பிறகு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தனியாகப் பிரிக்கப்பட்டது. அதுபோலவே, கலைஞர் ஆட்சிக் காலத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள் (பி.சி.,), மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் (எம்.பி.சி.,) இட ஒதுக்கீடு, அத்துடன் அருந்ததியர் இட ஒதுக்கீடு, அண்மையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ள வன்னியர், மற்ற சில ஜாதிகளுக்கான இட ஒதுக்கீடு மற்றும் சிறுபான்மை இஸ்லாமியர் பிரிவு இட ஒதுக்கீடு என்று பல்வேறு பிரிவுகளின்கீழ் இட ஒதுக்கீடு தரவேண்டியுள்ளதால், ஜாதியும், உட்பிரிவும் கேட்டு பெற்றோர்களின் உறுதிமொழியுடன் சான்றிதழ் இணைப்பது அல்லது பதிவிடுதல் மிகவும் சரியான முறையாகும்!

கேட்கப்படுவது ஜாதி அல்ல – ஜாதிப் பிரிவு

சில ஆண்டுகளுக்குப் பிறகு இதையே Base Line ஆக்கி, தனிப்பட்ட ஜாதியைக் கேட்காமல், அவர் சார்ந்த பிரிவு எஸ்.சி., எஸ்.டி., பி.சி., எம்.பி.சி., போன்று மட்டும் பிரிக்கும் நிலையை ஓர் இலக்காக வைத்து, அதை நோக்கி நகருவது கலப்பு மண இணையர்களுக்கு I.C. (Inter Caste Quota) கோட்டா ஒதுக்கீடு தந்து, உயர்த்துவது என்ற திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முன்பு- இது இன்று அவசியத் தேவை.

ஜாதி இருக்கிறது என்பது யதார்த்தம்  _ நடைமுறை உண்மை. ஜாதித் திருமண ஏற்பாடு விளம்பரங்களே தக்க சான்று; ‘‘ஆவணி அவிட்டம்’’ _- பூணூல் மாற்றுவது என்பது இருக்கிறதே!

‘அவர்கள்’ ஜாதியை விட்டுவிட்டார்களா?

தயக்கமில்லாமல் ஜாதி – தனிப்பிரிவு  தேவையே!

எனவே, ஜாதி ஒழிப்பு இலக்கு என்றாலும், அது முழுமை அடைய, அனைவருக்கும் அனைத்தும் வழங்கிட, ஆதாரச் சான்றுகளாக பள்ளிக் கல்விச் சான்று சரியான ஆவணம்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பில்கூட, ஊதிப் பெருக்கப்பட்ட ஜாதிகள் எண்ணிக்கை வரும் அபாயம் உண்டு. ஆனால், இந்த முறையில், அதற்கு வழியே யில்லை. மொத்த எண்ணிக்கையைக்கூட துல்லியமாகக் கண்டறிய இது சிறந்த முறையாகவே கருதப்படும்.

எனவே, தயக்கமில்லாமல் ஜாதி _- தனிப்பிரிவு (அதாவது எஸ்.சி., எஸ்.டி., பி.சி., எம்.பி.சி., எஃப்.சி.,) இப்படி தர ஏற்பாடு செய்யுங்கள்! பதிவு செய்யுங்கள்!!

– கி.வீரமணி,

ஆசிரியர்

Sunday, 4 December 2022

இந்து" என்ற சொல் வெள்ளைக்காரன் கொடுத்தது - ஆசிரியர் கி.வீரமணி

Wednesday, 30 March 2022

எழுத்தாளர் சுப்ர. பாலன் பெரியார் திடலில் தமிழர் தலைவரை சந்தித்தார்

 

எழுத்தாளர் சுப்ர. பாலன்  பெரியார் திடலில் தமிழர் தலைவரை சந்தித்தார். அவருக்கு தமிழர் தலைவர் இயக்க வெளியீடுகளை வழங்கினார். உடன்: பத்திரிக்கையாளர் பிரியன். (28.3.2022)

Thursday, 17 February 2022

திராவிடர் கழகத் தலைவர் பற்றி 'தினமணி கதிர்' 'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்!