Friday, 10 July 2026

நான் பாரதியாரைச் சந்தித்தால்... 'குமுதம்' ஏடு கேட்டதற்கு இணங்க கி.வீரமணி கட்டுரை


 நான் பாரதியாரைச் சந்தித்தால்...

கி.வீரமணி கட்டுரை

(பாரதியார் நூற்றாண்டு விழாவையொட்டி 1981ஆம் ஆண்டில்,'குமுதம்' ஏடு கேட்டதற்கு இணங்க) 

பாரதியாரை நான் சந்தித்தால் என்ன கேட்பேன் என்று 'குமுதம்' ஏடு என்னைக் கேட்கிறது. பாரதியார் நான் பிறப்பதற்கு முன்பே காலமான ஒரு கவிஞர், என்றலும் இது ஒரு இனிய கற்பனைதான். இன்றைக்கு பாரதியாரைப் பற்றி ஏற்பட்டிருக்கிற அய்யங்கள், அல்லது அவரது பாடல்களில் பல இடங்களில் குழப்பமாக இருக்கிறது என்று என்னைப் போன்ற பலர் கருதுகின்ற நிலை. இவைகளையெல்லாம் தெளிவுபடுத்துவதற்கு பாரதியாரைப் பார்த்து பல்வேறு கேள்விகளைக் கேட்கத்தான் முயற்சிப்பேன். நான் தந்தை பெரியாரின் தொண்டன். எந்தக் கருத்தையும் அப்படியே ஏற்றுக் கொள்வது என்பதோ, அல்லது எல்லோரும் நீச்சலடிக்கிறார்கள் என்பதற்காக அந்த நீரோட்டத்தின் போக்கிலேயே செல்ல வேண்டும் என்கிற அவசியமோ இல்லாதவன் நான். ஈரோட்டுக்குப் போனவர்கள் நன்றாக எதிர்நீச்சல் போடக் கற்றுக் கொள்பவர்கள் தான். எனவே பாரதியாருக்கு நூற்றாண்டு விழா என்ற காரணத்தினால், அவரை ஒரு தேசீயக் கவி என்று புகழ் பாடுகிற நேரத்தில், ஒரு மகாகவிக்கு அத்தகைய குழப்பங்கள் ஏன் இருக்க வேண்டும் என்பது புரியவில்லையே என்று மற்றவர்களை கேட்டுக் கொண்டிருப்பதை விட, அவரையே சந்திக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படுமானால் நிச்சயமாக கேட்கலாம் அல்லவா? என்னுடைய கருத்துப்படி, ஒருவரை தேசீயக் கவி என்று அழைக்கும் போது, அவருக்குத் தெளிவான, தொடர்பான. குழப்பமில்லாத, முரண்பாடு இல்லாத கருத்துகள், கேள்விகள் இருக்க வேண்டும். சுதந்திரத்துக்காகப் பாடினார் என்பது மட்டுமே பாரதியாருக்கு உள்ள மாபெரும் தகுதியாக ஆகிவிட முடியாது. தேசீயக் கவிஞர் என்று சொல்லும்போது தேசீயப் பார்வை, தேசம் முழுவதையும் ஒட்டிய பார்வை, மக்கள் அனைவரையும் சமத்துவமாக கருதக்கூடிய பார்வை என்பது வரவேண்டும். ஆனால் பாரதியாரின் பாடல்களில் அத்தகைய பார்வைகள் இல்லை என்பதை சற்று விளக்குகிறேன்.


எங்கள் ஆரிய பூமி. எங்கள் ஆரிய நாடு என்று பல இடங்களில் உரைக்கின்றார். 'ஆரிய நாட்டினர். ஆண்மையோடு இருந்தும் சீரிய முயற்சிகள் திரண்டு மிட்கோட்டுகர் வீரியம் ஒழிந்து வெம்மையும் ஒழிந்து நம் ஆரியர் புலையருக்கு அடிமைகள் ஆயினர்; பிச்சை வாழ்வதற்கு பிறருடைய ஆட்சியில் அச்சமுற்றிருப்போன் ஆரியன் அல்லன்' என்று பாரதியார் சொல்லுகிறார். இந்தியா முழுவதும் பிராமண தேசம் ஆகிவிட வேண்டும் என்று அவர் இன்னொரு இடத்தில் சொல்லியிருக்கிறார். 'ஆதிசிவன் பெற்றுவிட்டான் என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே நிறைமேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்' என்று பாரதியார் பாடியிருக்கிறார். எனவே மொழி என்று வரும் பொழுது ஆரிய மைந்தன் இலக்கணம் அமைத்தான் என்று கூறி, தேசம் என்று வரும்பொழுது ஆரிய வேதம் ஆரிய நாடு என்று கூறி தன்னை ஒரு ஆரியன். வேதியன் என்றும் வேதியன் உயர்ந்தவன், ஆரியன் உயர்ந்தவன், இது ஆரியர்களுக்குரிய நாடு என்றும் அவர் திரும்பத் திரும்ப சொல்லியிருப்பது அவருக்கு தேசீயப் பார்வை இருக்கிறதா, ஆரியப் பார்வை உள்ளதா என்று பாரதியை துணிச்சலோடு, நேர்மையோடு கேட்பேன். நேர்மைத் திறமில்லாதவர்கள் தான், என்னவோ அவரைப் புகழ்கிறார்கள்; இது புகழ் பாட வேண்டிய நாமாவளிக் கட்டம், எனவே புரிந்தவர்கள், புரியாதவர்கள், விழாவுக்கு என்றே பாரதியாரை ஒரு நாள் புரட்டியவர்களெல்லாம் மாமேதைகளைப் போல, ஓடுகின்ற நீரிலே தாங்களும் ஓடவேண்டும் என்று நினைப்பதை போல நான் ஓட விரும்பவில்லை. பாரதியைப் பார்த்துத் துணிச்சலோடு, தந்தை பெரியார் தொண்டனாகிய நான் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன்.


சாதிகள் இல்லையடி பாப்பா என்று நீங்கள் பாடினீர்கள் என்று பெருமிதத்தோடு எல்லோரும்  மேடையிலே சொல்ல இன்றைக்குக் கேட்கிறோம். ஆனால் உங்களோடு நெருங்கிப் பழகிய நண்பர் என்று கருதக் கூடிய ஒருவர்-திரு பத்மநாபன் அவர்கள் அண்மையிலே சில மாதங்களுக்கு முன்னால் 'இந்து' பத்திரிகையிலே ஒரு விமரிசனக் குறிப்பு எழுதியிருக்கிறார்.


அதில் அவர் கூறியிருப்பதாவது "சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதியார் எழுதவில்லை. சாதி பேதம் இல்லையடி பாப்பா என்றுதான் எழுதினார். பிறகு பாடபேதமாக. 'சாதிகள் இல்லையடி' என்று வந்துவிட்டது'' என்று குறிப்பிட்டிருக்கிறார் பத்மநாபன். இந்தக் கருத்தை வைத்துப் பார்க்கும்போது உங்களுக்குச் சாதி ஒழிப்பிலே உள்ள நம்பிக்கை என்ன என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.


சனாதன வகை தர்மத்திலேயே இருக்கும் பலவித கட்சிகளும், வகுப்புகளும். சிலைகளும், சூரிய ஜோதியிலே காணப்படும். ஏழு வர்ணங்களைப் போலவே அவசியத் தன்மை கொண்ட அலங்காரங்களே அல்லாமல் குறுகிய நோக்கமுடைய சிலர் நினைப்பது போல நமக்கு அழிவுக்குக் கருவிகள் ஆகமாட்டா" என்று சாதியைப் பார்க்கக் கூடிய வெள்ளத்தை நீங்கள் அங்கே காட்டுகிறீர்கள். இன்னும் ஒரு செய்தி. சாதியைப் பற்றி உங்களுக்குத் தெளிவான திட்டவட்டமான கருத்துக்கள் இருக்குமேயானால் நீங்கள் இந்தப் பகுதியை உங்கள் கட்டுரையில் பயன்படுத்தியிருக்க மாட்டீர்கள்.


நீங்கள் பதில் சொல்லா விட்டாலும் உங்களுக்காகப் பரிந்து கொண்டு சிலர் பதில் சொல்ல வருவார்கள். வருவார்கள். அது ஒரு ஒரு நல்ல  வாய்ப்பு தான். அதனால்தான் இவைகளை தெளிவாகக் கூற முன் வந்திருக்கிறேன்.


" "கீழ் ஜாதியாரை நல்ல  சமஸ்காரங்களால் பிராமணர்கள்  ஆக்கிவிட முடியும் என்பதற்கு நம்முடைய . வேத சாஸ்திரங்களில் தக்க ஆதாரங்கள் இருக்கின்றன. அந்தப்படி இந்தியா முழுவதையும் பிராம்மண தேசமாகச் செய்துவிட்டால் நல்லதென்பது. என்னுடைய அபிப்பிராயம். எந்த ஜாதியாக இருந்தாலும் சரி, அவன் மாமிச பட்சணத்தை நிறுத்தும்படி செய்து அவனுக்கு ஒரு பூணூல் போட்டு காயத்ரி மந்திரம் கற்பித்துவிட வேண்டும். பிறகு அவன் பிராம்மணனாகவே கருதப்படல் வேண்டும்’ என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். எல்லோரும் மனிதர்களாக வேண்டும் விரும்புகிறார்களே தவிர எல்லோரும் பிராம்மணனாக வேண்டும் என்று விரும்ப மாட்டார்கள். விரும்பக்கூடாது.பூணூல் போடப்பட்டு விடுவதாலேயே எல்லோரும் உயர் ஜாதிக்காரர்களாக ஆகிவிட முடியும் என்று சொன்னால் நீண்ட காலத்துக்கு முன்னாலேயே ராமானுஜர் வெற்றி பெற்றிருப்பாரே? ராமானுஜர் தோல்வி அடைந்த இடத்திலேதான் நீங்களும் நிற்கிறீர்கள். ஏன்? நீங்களே கூட புதுவையில் கனகலிங்கம் என்ற ஒரு தாழ்த்தப்பட்ட சாதி நண்பருக்குப் பூணுால் போட்டு வைத்தீர்களே? கனகலிங்கம் அய்யர் ஆக்கப்பட்டாரா? கனகலிங்கம் பிராம்மண வகுப்பில்சேர்த்துக் கொள்ளப் பட்டாரா?  

அது நீங்கள் அடைந்த தோல்வியே தவிர வெற்றியல்லவே. எனவே இப்படிப்பட்ட ஒரு குழப்பமான சுருத்தைத் தாங்கள் சொல்ல வேண்டும்? அது மாத்திரமல்ல. 'முன்னாளில் அய்யர் எல்லாம் வேதம் சொல்வார். அதில் மூன்று மழை பெய்யுமடா மாதம்-இத்தாளில் பொய்மையில் பார்ப்பார் இவர் ஏதும் செய்து காசு பெறப் பார்ப்பார்' என்று நீங்கள் பாடலை புனைந்திருக்கிறீர்கள்.அய்யர் வேதம் ஓதினால் மழை பெய்யும் என்று கருதுகிறீர்களே? இதற்கு விஞ்ஞான பூர்வமாக ஆதாரம் ஏதேனும் உண்டா? நன்றாக எண்ணிப் பார்க்க வேண்டும். உயர்ந்த ஜாதிக்காரர்களுக்கு இருக்கிற அந்த உயர்ந்த ஜாதிக் கருத்து என்பது பல நேரங்களிலே உங்களை ஈர்த்திருக்கிறது என்பதைத் தவிர வேறில்லை.


"ஜாதிப் பிரிவுகளில் இருக்கும் குற்றங்களையெல்லாம் பூதக் கண்ணாடி வைத்துக் காட்டுகிறார்கள். நம்முடைய கிறிஸ்தவப் பாதிரிமார்களாலே நேர்ந்த அவமானம்தான் இது. இந்து மதம் அப்படி அல்ல. எல்லோரும் இதை வேதமாகக் கொள்ள வேண்டும். எல்லோரும் இந்துக்களாகிவிட வேண்டும். எல்லோரும் இந்த இடத்திலே இந்துக்கள் என்று சிறப்பாக நினைக்க வேண்டும்" என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். தர்மங்களைக் காட்டிலும் வேதத்தை நிலைநிறுத்தும் தர்மம்தான் சிறந்தது என்று நான் நினைக்கிறேன். இந்துக்களைத் திரட்டி ஒற்றைக் கருவியாகச் செய்துவிட வேண்டும். இதற்குரிய உபாயங்களைச் சரியான காலத்தில் தெரிவிக்கிறேன்" என்று சொல்லுகிறீர்கள். முப்பது கோடியும் வாழ்வோம், வீழ்ந்திடில் முப்பது கோடி முழுவதும் வீழ்வோம்' என்று நீங்கள் ஓர் இடத்தில் கூறியிருக்கிறீர்கள்.முப்பது கோடியும் வாழ வேண்டும் என்று சொன்னால் எல்லோரையும் இந்துக்களாக்கிய பின்தான் முப்பது கோடியும் வாழ வேண்டும் என்று சொல்லுகிறீர்களா? அல்லது நீங்கள் பிறிதொரு இடத்தில் இந்துக்கள் இருபது கோடி என்று குறிப்பிட்டுள்ளீர்களே. அதன்படி பார்த்தால் முப்பது கோடி, இருபது கோடியாகக் குறைகிறது. உங்களுக்கு தேசீயப் பார்வை இருக்குமானால். உங்களுக்கு ஜாதி ஒழிப்புப் பார்வை இருக்குமேயானால், நீங்கள் இப்படிப்பட்ட ஒரு நிலைக்குச் சென்றிருப்பீர்களா என்பது எங்களுக்குச் சந்தேகம், சில நேரங்களில் ஒரு கவிஞனுடைய கண்ணோட்டத்திலே மாறுபட்ட நிலைகள் இருக்கலாம். உதாரணமாக உங்களுடைய சீடராகப் பெருமையோடு தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்ட புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் ஒரு காலத்தில் சுப்பிரமணியர் துதியமுது பாடியவர்தான். ஆனால் சுப்பிரமணியர் துதியமுது பாடிய கனகசுப்புரத்தினம், தந்தை பெரியார் அவர்களுடைய பகுத்தறிவுக் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட பிறகு, அவரை 'இல்லையென்போன் யாரடா; தில்லை சென்று பாரடா!' என்று கேட்டவர்களுக்கு 'இல்லையென்போன் நானடா, அத்தில்லை சென்று தானடா' என்று உறுதியாகச் சொன்னார்.


எனவே புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுடைய நிலையை எடுத்துக் கொண்டால், பிற்காலத்தில் அவர் மாற்றமடைந்திருக்கிறார் என்பதைச் சொல்ல முடியும். அவர் போக்கில் வளர்ச்சியைக் காண முடியும்.    முரண்பாட்டைக் காண முடியாது. அதுபோல உங்களுடைய கால கட்டத்தில் பிற்காலத்தில் மாற்றப்பட்ட கருத்து. ஏற்கெனவே உங்களுக்கு இருந்த கருத்து. வளர்ச்சிப் போக்கில் உள்ள கருத்து என்று தெளிவான வரையறைகள், குறுக்குக் கோடுகள் இருக்கின்றனவா என்று அப்படிப்பட்ட குழப்பமில்லாத நிலை நாங்கள் தேடிப் பார்க்கிறோம். உங்கள் படைப்புக்களிலே காண முடியவில்லை . குழப்பங்களும் முரண்பாடுகளும் தான் மிஞ்சி நிற்கின்றன. இந்தக் குழப்பங்கள் எப்படியிருக்கின்றன. என்பதற்கு இன்னொரு உதாரணத்தைக் கூட நான் சுட்டிக்காட்டி உங்களிடம் கேட்கிறேன். உங்களைப் பாராட்டுகின்ற பலர், உங்களுடைய நூற்றாண்டு விழாவிலே பங்குகொள்கின்ற பலர், உங்களுடைய படத்துக்கு மாலை அணிவிக்கின்ற பலர் உங்களுடைய நால்களை அச்சிட்டு வியாபாரம் செய்யவேண்டும் என்று நினைக்கின்ற பலர் தெளிவாக இதைக் கேட்க மாட்டார்கள். பலர் போகாத அந்த இடத்திற்குத் துணையாக நான் போகிறேன். மற்றவர்கள் எனைத் தாக்குவார்களே. தூற்றுவார்களே என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. தாக்க வேண்டும். தூற்ற வேண்டும். அதன் மூலம் சில உண்மைகள் வெளிப்படையாக, அப்பட்டமாகத் தெரிய வேண்டும் என்ற உணர்வோடு இதை நான் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.


ரஷ்யப் புரட்சி ஏற்பட்டதற்குப் பாராட்டு நீங்கள் தெரிவித்தீர்கள் என்பதற்காகத்தான் நம்முடைய அருமைப் பொதுவுடைமை நண்பர்கள் எல்லாம். 'பொதுவுடைமை இந்த உலகத்திலே கொள்கையாகக் கொள்வோம், புனிதமோடு அதை நாங்கள் காப்போம்' என்று சொன்ன புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் விட உங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உங்களை ஓகோ என்று புகழ்கிறார்கள். எப்படியிருந்தாலும், நீங்கள் அந்த ரஷ்யப் புரட்சியை அவ்வளவு பாராட்டியிருக்கிறீர்கள்.


'மாகாளி, பராசக்தி, உருஷ்ய நாட்டில் கடைக்கண் வைத்தாள். அங்கே ஆகாவென்று எழுந்தது பார் யுகப் புரட்சி"

என்று பாடியிருக்கின்ற நீங்கள், மற்றொரு கருத்தையும் சொல்லுகிறீர்கள். நீங்கள் சொல்லியிருப்பதைப் படிக்கிறேன் கேளுங்கள்!


(1917'ம் ஆண்டு நவம்பர் 28'ம் தேதி செல்வம் என்ற தலைப்பிலே வெளியான உங்கள் கட்டுரையில் ஒரு பகுதிதான் இது.)


ரஷ்யாவைப் போல் புரட்சி இந்த நாட்டின் மண்ணில் ஏன் வெடிக்கவில்லை என்பதைப் பற்றி நீங்கள் ஒரு காரணத்தோடு ஆராய்கிறீர்கள். அன்றைக்கு மட்டும் அல்ல. இன்றைக்கும் அந்தக் கேள்வி கேட்கப்பட வேண்டிய கேள்விதான், மக்கள் மன்றத்திலே கேட்கப்பட்டு வருகின்ற கேள்வியும் ஆகும். நீங்கள் எழுதி இருக்கிறீர்கள்:


"முதலாவது காரணம் இந்து ஜன சமூக அமைப்பில், ஐரோப்பாவில் இருப்பதுபோல் அத்தனை அதிகமான தாரதம்மியம் இல்லை முதலாளி, தொழிலாளி,.செல்வன். ஏழை இவர்களுக்கிடையே ஐரோப்பாவில் உள்ள பிரிவும் விரோதமும் நம் தேசத்தில் இல்லை ஏழைகளை அங்குள்ள செல்வர் அவமதிப்பது போலவே, நமது நாட்டுச் செல்வர் அவமதிப்பது கிடையாது. ஏழைகளுக்குத் தானம் கொடுப்பது என்ற வழக்கம் நம் தேசத்தில் இருக்கும் அளவுக்கு அந்தக் கண்டத்தில் கிடையாது. கொலையாலும். கொள்ளையாலும். அன்பையும், சமத்துவத்தையும் ஸ்தாபிக்கப் போகிறோம் சொல்வோர், தம்மைத் தாம் உணராத பரம மூடர்கள் என்றே நான் கருதுகிறேன். இதற்கு நாம் என்ன செய்வோம்? கொலையாளிகளை அழிக்க, கொலையைத்தானே கையாள நேருகிறது? அநியாயம் செய்வோரை அநியாயத்தால் தானே அடக்க நேரிடுகிறது என்று ஸ்ரீமான் லெனின் சொல்லுகிறார். இது முற்றிலும் தவறான கொள்கை" என்று சொல்லியிருக்கிறீர்கள்.


(மீதி அடுத்த இதழ்)


நான் பாரதியாரைச் சந்தித்தால்...


கி. வீரமணி


(சென்ற இதழ் தொடர்ச்சி)


லெனினே பரம் மூடர் என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள், புரட்சி வெடித்து ஜார் மன்னன் வீழ்ந்தான் என்று சொன்னால், அந்தப் புரட்சிக்குத் லெனின் தந்தையாக இருந்த காரணத்தினால் தான் ஜார் கட்சி கட கடவென்று சரிந்தது. மாகாளியின் தத்துவம் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். ஆனால் மாவீரனான லெனின் இதைச் சொல்லும்போது தன்னைத்தானே உணராத பரம மூடர்கள் செய்கை என்கிறீர்கள், முன் வரியிலே இதைச் சொல்லி, லெனின் இதைச் செய்வது முற்றிலும் தவறான கொள்கை என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். இதற்கு 'ஈக்வேஷன்' என்ன? லெனின் பரம மூடன் என்பதே! பொதுவுடைமைக் கொள்கையை ஒரு பக்கத்தில் நீங்கள் பாராட்டிவிட்டு, மற்றபடி தானம் கொடுப்பதன் மூலமாக ஏழ்மைத்தனத்தை ஒழித்துவிட முடியும் என்று நீங்கள் சொல்வதை எப்படிப் புரிந்து கொள்வது?


எந்த உண்மையான பொதுவுடைமைவாதியும் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ள மாட்டான். தர்மகர்த்தா முறையாக வேண்டுமானால் கருதப்படலாம். ஆனால் வேத உணர்ச்சியிலே கூட, இங்கிருக்கிற பிறவி பேதம், ஜார் முதலாளித்துவ பேதத்தை விட ஆழமானது. எனவே ஐரோப்பாவில்தான் இங்குள்ளதைவிட அதிக பேதம் என்று நீங்கள்

சொல்லியிருப்பது மிக மிக அதிசயமான வினோதமான நிலையிலே இருக்கிறது.


அதே கட்டுரையில் நீங்கள் மேலும் சொல்லியிருக்கிறீர்கள் "லெனின் வழி சரியான வழி இல்லை, காரணம் என்ன என்று சொன்னால், நாம் இந்தியாவில் இருக்கிறோமாதலால் இந்தியாவின் சாத்திய அசாத்தியங்களைக் கருதியே நாம் யோசனை செய்ய வேண்டும். முதலாவது இந்தியாவில் உள்ள நிலச்சுவான்களும் முதலாளிகளும், ஐரோப்பிய முதலாளிகள் நிலச்சுவான்களைப் போல் ஏழைகளின் விஷயத்தில் அத்தனை அவமதிப்பும். குரோதமும் பூண்டோர் அல்லர். இவர்களுடைய உடமைகளைப் பிடுங்க வேண்டும் என்றால், நியாயம் ஆகாது. அதற்கு நம் தேசத்தில் உள்ள ஏழைகள் அதிகம் விரும்பவும் மாட்டார்கள்"என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்.


இதைச் செய்யாமல் எப்படி இங்கே பொதுவுடைமை வரும்? இதை எந்த உண்மையான பொதுவுடைமைவாதியால் ஏற்றுக்

கொள்ள முடியும்? 


இந்தியாவிலே இருக்கிற நிலச்சுவான்கள் அங்கேயிருக்கிற நிலச்சுவான்களைவிட நல்லவர்கள் என்று சொன்னால், நிலச்சுவான் முறை இருக்க. வேண்டும் என்று நீங்கள் வாதாடுகிறீர்கள்: என்றுதானே பொருள்?


ஒரு பக்கத்திலே ஜாதி முறை நல்லது என்று வாதாடுகிறீர்கள். அதைச் சுட்டிக்காட்டினேன். இன்னொரு பக்கத்திலே எல்லோரும் இந்துக்களாக வேண்டும் என்று சொல்லுகிறீர்கள் அதையும் சுட்டிக்காட்டினேன். இன்னொரு பக்கத்திலே இந்த தேசம் ஆரிய நாடு என்று சொல்லுகிறீர்கள், அதையும் உங்களுக்கு எடுத்துக் காட்டினேன். இன்னொரு நேரத்தில் எல்லோருக்கும். பிராம்மணர்களைப் போல் பூணூல் போடப்பட்டு, சந்தியாவந்தனம் சொல்லித்தரப்பட்டு பிராம்மண தேசமாக ஆகவேண்டும் என்று சொல்லுகிறீர்கள்.. இவைகளெல்லாம் முற்போக்கு என்பதற்கு நிச்சயமாக வழிகாட்டுகின்ற முறையாக இருக்க முடியாது.


ஒரு தேசீயக் கவிஞன் பார்வையில் இத்துணை குழப்பங்கள். இருக்கக் கூடாது. இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. இருந்தால் அத்தகையவர்கள் ஒரு தேசீயக் கவியாக இருக்க முடியாது. மற்றவர்கள் புகழ்ந்து கொண்டிருக்கிறர்கள் என்பதற்காக அந்த இடத்திற்கு போய் எல்லோரும்பாராட்ட வேண்டும் என்பது அல்ல. இவைகளெல்லாம் மற்றவர்களுக்குத் தெரியாத பகுதி என்பதைப் போல் பலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள் ஏன்? இதற்கு உங்களுடைய நியாயமான பதில் என்ன? ஒருவேளை நீங்கள் இந்தப் பழமையான கருத்துகளில் ஊறித் திளைத்த காரணத்தினால், உங்களுக்கு ஏற்பட்ட சுற்றுச் சார்வு காரணமாக இந்த நிலை இருக்கிறது. அங்கொன்றும், இங்கொன்றுமாக. பல நேரங்களில் சில கருத்துக்கள் உங்களிடம் வெடித்திருக்கின்றன என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்.


‘ஆயிரம்.தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகள்’ என்று நீங்கள் சொல்லியிருப்பது என்பது எங்களுக்குத் தெரியாதது அல்ல. மூட பக்தி என்ற பெயராலே நம்முடைய நாட்டில் எவ்வளவு நேரம். காலம் வீணாகிறது என்பதைப் பற்றியும் நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள், அதை நாங்கள் மறுக்கவில்லை. ஒப்புக்கொள்கிறோம். "மூட பக்தியிலே சில தொல்லையான அம்சம் யாதெனில், எல்லாச் செய்கைகளுக்கும் நாள், நட்சத்திரம், லக்கினம் முதலியவை பார்த்தல், க்ஷவரம் பண்ணிக்கொள்ள வேண்டுமென்றால், அதற்குக்கூட நம்மவர் மாசப் பொருத்தம், பக்ஷப் பொருத்தம். திதிப் பொருத்தம், நாள் பொருத்தம் இத்தனையும் பார்த்தாக வேண்டியிருக்கிறது. க்ஷவரத்திற்குக் கூட இப்படியென்றால் இனி கல்யாணங்கள், வியாபாரங்கள். சடங்குகள், யாத்திரைகள், விவசாய ஆரம்பங்கள் முதலிய முக்கிய காரியங்கள் பல்லாயிரத்தின் விஷயத்திலே நம்மவர் மேற்படி பொருத்தங்கள் பார்க்கும் செயலில் கால விரயத்திற்கும், பொருள் விரயத்திற்கும். வரம்பே கிடையாது. சகுனம் பார்க்கும் வழக்கமும்.

காரியங்களுக்கும் பொருந்தாது. தடையாக முட்டு கொண்டிருக்கிறது. இதில் நேரும் அழிவுகளும், அவற்றால் பொருள் அழிவுகளும் எவ்வளவு உண்டாகின்றன என்பதை நம்மவர் கவனிப்பதே கிடையாது. சகுணம் பார்ப்பதால் காரிய நஷ்டம் மாத்திரம் உண்டாகிறது.நாட்பொருத்தம் லக்னப் பொருத்தம் முதலியன பார்க்குமிடத்தே காரிய நஷ்டமின்றி. மேற்படி லக்கினப் பொருத்தம் பார்த்துச் சொல்லும் சோதிடருக்கு வேறு பணம் செலவாகிறது."


இப்படியெல்லாம் சிலவற்றை நீங்கள் கண்டித்திருக்கிறீர்கள், அதை வரவேற்கிறேம். ஆனால் உங்களுக்கு நூற்றண்டு விழாவில் கொண்டாடுகிறவர்கள் கூட நாள் பார்த்து சகுனம் பார்த்து, நேரம் பார்த்து அதிலேகூட உங்களைக் கைவிட்டுத்தான் காரியங்களைச் செய்கிறார்கள் என்பதை நினைக்கும்போது நீங்கள் எங்கோ சில இடங்களில் முற்போக்கு முத்திரைகளைப் பதிப்பித்திருக்கிறீர்களே. அவைகூட நடைமுறைப் படுத்தப் பட்டிருக்கிறதா என்பது முக்கியம் அல்ல. சாதி இல்லை என்று நீங்கள் கூறிய நேரத்தில் பறையருக்கும், இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை என்று பாடினீர்கள். அந்த விடுதலை இசைத்தட்டிலே மட்டும்தான் ஒலிக்கிறது. நாட்டிலே காண முடிகிறதா என்று கேள்வி கேட்கும்போது, இந்த நிலைக்கு ஆசைப்பட்டீர்கள் என்று ஒப்புக்கொள்கிறோம். ஆனால் அதிலேகூட உங்களுக்கு முரண்பாடும் குழப்பமுமாக இருந்திருக்கிறது.


உங்களுடைய உயர்ஜாதித் தனம் என்பது உங்களை அறியாமல் உங்களுடைய ரத்தத்திலே கலந்துவிட்ட. காரணத்தினாலோ என்னவோ உங்களுடைய புரட்சிக்குக்கூட ஒரு புதிய பார்வையையும்: புதிய கோணத்தையும் கொடுத்திருக்கிறதே தவிர. உங்களுடைய தேசீயப் பார்வையை வெகுவாகக் குறைத்திருக்கிறது. எனவே உங்களை நேரிடையாகவே குற்றம் சாட்டுகிறேன்.


என்ன பதிலை நீங்கள் சொல்லப் போகிறீர்களோ, உங்கள் சீடர்கள் மூலமாக சொல்லுங்கள். எதிர்பார்க் கிறேன். மீண்டும் சில கேள்விகளைக் கேட்கத் தயாராக இருக்கிறேன்.


பேட்டி என்.பி.

குமுதம் வார ஏடு, 1981


No comments:

Post a Comment