Monday 5 September 2016

“பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்’’கடந்து வந்த பாதை

கட்டிய பணத்தை வட்டியுடன் திரும்பப் பெற்றோம்!

அய்யாவின் அடிச்சுவட்டில்  160
அய்யா அவர்கள் யாரையும் எளிதில் நம்பிவிட மாட்டார்கள் என்பது உலகறிந்த உண்மை. பொதுக் காரியத்தில் குறிக்கோளில் அவர்களுக்குள்ள ஆழ்ந்த கவலையும், பொறுப்புணர்ச்சியுமே அதற்கு மூலகாரணம் ஆகும்.
அப்படி அவர்கள் சல்லடைபோட்டு சலித்துப் புடைத்துப் பார்த்ததில் முழு நியாயம் உள்ளது என்பதற்கு, அவர் கைப்பட எழுதி, பிறகு அவர்கள் அய்யாவுக்கு “துரோகி’களாகி-விட்ட பல பெயர்களை அடித்து மாற்றி எழுதியுள்ள குறிப்பே அதற்கு தக்க சான்றாகும். (இப்போது அதனை வெளியிடுவது நனி நாகரிகம் ஆகாது.)
அன்னை மணியம்மையார் அவர்களை, தந்தை பெரியார் அவர்கள் இயக்கத்திற்கு “ஒரு ஏற்பாடு ஆகத்தான் -_ திருமணம்’’  செய்தார்கள். அப்போதே அய்யா அவர்கள் தாம் எழுதிய “விளக்கம்’’ என்ற அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.
“திருமணம் என்பது சட்டப்படிக்கான ஒரு பெயரே தவிர, மற்றபடி அது இயக்கத்தின் பாதுகாப்புக் கருதி செய்யப்பட்ட ஒரு ஏற்பாடே ஆகும்’’ என்று தெளிவாக எழுதினார்கள்.
1952இல் உருவாக்கப்பட்டது
ஆனால், அரசியல் உணர்வுகளால் உந்தப்பட்ட நிலையில், 1949இல் அதையே ஒரு சாக்காகவும், வாய்ப்பாகவும் கருதி, இயக்கத்திலிருந்து அண்ணா போன்றவர்கள் வெளியேறி தனிக் கழகம் கண்டனர்!
அப்படி வெளியேறிவர்களேகூட, தனிப்பட்ட உரையாடலிலும், பிறகு ஒரு பெரிய மாநாட்டு நிகழ்ச்சியிலும் இந்த உண்மையை ஒப்புக் கொள்ளும் நிலையும் ஏற்பட்டது.
அதனால்தான் 1952இல் “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்’’ என்ற பெயரால் அய்யா அவர்கள், அதற்குரிய சமுதாயக் குறிக்கோள்கள், சட்டதிட்டங்கள், விதிமுறைகளோடு அதனைப் பதிவு செய்தார்கள்.
வெறும் சுயமரியாதை என்றால், அதன் பேரில்கூட பிறகு எதிர்காலத்தில் சிலர் குழப்பக்கூடும் என்பதால், தெளிவாகவும், திட்டவட்டமாகவும் இருப்பதற்காகவே “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்’’ என்ற பெயரில் பதிவு செய்தார்கள். அதை நடத்தியும் வந்தார்கள்.
நிறுவனத் தலைவர் அய்யா அவர்கள்தான் ஆயுள் தலைவர், அன்னை மணியம்மையார் தான் ஆயுள் செயலாளர். அதேபோல் நிறுவனத்தின் சொத்துக்களை நிர்வகிக்க மேலும் 3 நிர்வாக முழு ஆயுள் உறுப்பினர்-களையும் மற்றும் சில நிர்வாகக் குழு உறுப்பினர்களையும் போட்டு நடத்தினார்.
அண்ணா கட்சியைவிட்டு 1949இல் பிரியும்போது, 5 லட்ச ரூபாய் இருக்கிறதே என்று சிலர் கூறியபோது, அது அய்யாவிடமே இருக்கட்டும் என்று கூறிவிட்டுச் சென்றார்!
வருமானவரி என்ற ஆயுதம்!
அதை அய்யா பெருக்கிய நிலையில் 1963 வாக்கில் நிறுவனத்தின் சொத்துக்கள் ரூபாய் 15 லட்சம் பெருகியுள்ளது என்று வேலூர் போன்ற பற்பல ஊர்களில் பொதுக்-கூட்டங்களில் பேசும்போது கூறியுள்ளார். (ஆதாரம்: “எனது தொண்டு’’,  ‘கழகமும் துரோகமும்)
அய்யா அவர்களுடைய காலத்தில் திராவிடர் கழகத்திலிருந்து 1963இல் வெளியேறிய விடுதலை முன்னாள் ஆசிரியர் திரு. எஸ்.குருசாமி அவர்களும், மத்திய கமிட்டி முன்னாள் தலைவர் வழக்குரைஞர் திரு.தி.பொ.வேதாச்சலம் அவர்களும் (இவர்கள் பெரியார் டிரஸ்ட்டாகிய பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருந்து, அய்யா அவர்களின் நம்பிக்கையை இழந்த காரணத்-தால், அவர்கள் வெளியேறுவதற்கு சில காலம் முன்னரே, அப்பதவிகளை ராஜினாமா செய்யும்படி கேட்டு, விலக்கும் அவசியம் ஏற்படுத்தாத வண்ணம் தந்தை பெரியார் அவர்கள் எழுதி வாங்கி விட்டார்கள்.) அதேபோல் வேறு சிலரிடம் அரசியல் கட்சிக்குத் தாவிய நிலையிலும், எழுதி வாங்கி, தன்னுடைய முழு நம்பிக்கைக்குரியவர்களை மட்டும் போட்டு, சாதி, மதம், சொந்த பந்தம் பார்க்காமல், லட்சிய நோக்கோடு நடத்தி வந்தார்கள்.
வருமானவரி துறையினருக்கே மனு எழுதியும், நேரில் பேசியும், பெரியார் வருமானவரி ஏதும் செலுத்துவதில்லை; கணக்கில் காட்டாத பணம் ஏராளம் வைத்துள்ளார் என்பதுபோல எழுதியும், கூறியும் விட்டனர்.
அப்போது முதல், வருமான வரித்துறை (அது ஒரு பெரிதும் மேல்ஜாதி ஆதிக்கத்துறை என்பதால்) அதுதான் சரியான வாய்ப்பு என்று கருதி  எப்படியெல்லாம் “வருமானவரி’’ என்ற ஆயுதத்தினை ஏவிட முடியுமோ அப்படிச் செய்தார்கள்.
பெரியார் கணக்குகள் வைத்திருந்த முறை
ஒரு வரலாற்றினை உருவாக்கி, தானே ஒரு தனி வரலாறு ஆகும் தகுதி படைத்த மிகவும் புரட்சிகரமான சிந்தனைகளின் ஊற்றான தந்தை பெரியார் அவர்கள், நிதியைப் பொறுத்தவரை அவர், ஒரு தனி நிர்வாக அமைப்பு, தனி தணிக்கையாளர் (கிuபீவீtஷீக்ஷீ) என்று வைக்காது, வங்கிகளில் கணக்குகள், அடிக்கட்டைகளில் அவரே எழுதிய குறிப்பு, அவரது டைரியில் அவருக்கு விளங்கும் வகையில் குறிப்புகள் பதிவு _ இப்படித்தான் எழுதி வைத்திருந்தார்கள்.
திரு.கி.ஆ.பெ.விசுவநாதம் போன்றவர்கள் பிரிந்தபோதுகூட, தந்தை பெரியார் அவர்களைத் தாக்கி அறிக்கை விட்டபோது, அவரே எல்லாக் கணக்குகளையும் வைத்துக்கொள்ளுபவர் என்றே குறிப்பிட்டுள்ளார். அதற்குப் பதிலளித்த தந்தை பெரியார், “நான்தான் உருவாக்கினேன். நான் மற்ற யாருக்கும் கணக்குக் காட்டத் தேவையில்லை’’ என்கிற முறையில்கூட பல நேரங்களில் பதில் அளித்தார்கள்.
அவர்கள் அதோடு, வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஸ்டேட்மெண்ட் தாக்கல் செய்ததில், “என்னுடைய இயக்கச் சொத்துக்-கள் எனது சொந்த சொத்தினையும் சேர்த்துப் பெருக்கி நன்கொடைகளைப் பெற்று வளர்த்த சொத்துக்கள். நான் யாரையும் எளிதில் நம்பாதவன்; என் கூட இருக்கிறவர்களில்கூட பலருக்கு சபலபுத்தி இருக்கக்கூடும் என்றும் கருதுபவன். எனவே, நானேதான் நிதியைப் பொறுத்த-வரை, கையாளுபவன், கணக்கு வைப்பவனா-கவும் இருப்பேன். என்னிடம் ஒளிவு மறைவு ஏதும் கிடையாது என்பதால் எல்லாம் வங்கி கணக்குகளாக, மில்களில் போடப்-பட்ட தொகை, பெறப்பட்ட வட்டி _ இவைகளாகவே இருக்கின்றன’’ என்றே பதில் அளித்தார்.
இந்நிலையில் முறையான கணக்குகள் தேவை என்று வருமானவரித் துறையினர் கேட்டதற்கு இல்லை என்ற உண்மை பதிலையேதான் அவர்கள் பெற முடிந்தது _ அய்யா அவர்களிடமிருந்து.
இதை ஒரு வாய்ப்பாக ஆக்கிக் கொண்டு, தந்தை பெரியார் பெயருக்கு ஒரு வருமானவரி ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகை வரி; அவரது நிறுவனமான பெரியார் சுயமரியாதைப் பிரச்சர நிறுவனத்திற்கும் (இரட்டிப்பாக) அதே தொகை வரி, போடப்பட்டு வந்தது. கேட்டால், ஒன்று சட்டத்தில் நிற்காவிட்டாலும், மற்றொன்று மூலம் இலாகாவிற்கு வருமானம் _ பிடிப்பு _ இரண்டும் வரக்கூடும் என்ற வாதம் வருமானவரித் துறையினரால் எடுத்து வைக்கப்பட்டது!
தந்தை பெரியாரே எழுதியது...
தந்தை பெரியார் அவர்கள் 14.01-.1970இல் திருச்சியிலிருந்து “உண்மை’’ என்ற மாதம் ஒரு முறை ஏட்டினை துவக்கியபோது, அதன் முதல் இதழில் அவரே எழுதிய தலையங்கத்தில்கூட குறிப்பிட்டிருக்கிறார்.
“நான் பலமுறை சிறை சென்றிருக்கிறேன். வாழ்க்கையில் பல இன்னல்களை அடைந்திருக்-கிறேன். அரசாங்கத்தால் வெறுக்கப்பட்டிருக்கிறேன். இதற்காக ஏற்படுத்தப்பட்ட இயக்கத்திற்கு என் பெயராலும், இயக்கத்தின் பெயராலும், அரசாங்கத்தாலோ, அரசாங்கத்தில் உள்ள “மேல் ஜாதி’’ மக்களாலோ அல்லது இந்தக் கருத்துக்கு மாறுபட்டவர்கள் என்பவர்-களாலோ, எனது முயற்சியைத் தடுக்கவும், ஸ்தாபனத்தை ஒழிக்கவுமான, தன்மையாக ரூ. 15,00,000 பதினைந்து லட்ச ரூபாய்க்கு மேல் (கடந்த காலத்திற்கு என்று இன்கம்டாக்ஸ் வரி) போடப்பட்டிருக்கிறது என்பதுடன், நிகழ்காலத்திற்கும் ஒரு லட்சம் ரூபாய்க்கு போல் இன்கம்டாக்ஸ் போடப்பட்டது’’ என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
தந்தை பெரியார் மறைவுக்குப் பின்னர் அன்னை மணியம்மையார் தலைமை காலத்தில், இந்த வருமானவரி பாக்கி அளவு, 17 லட்சத்திலிருந்து (1976 நவம்பரில்) 57 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டது. (வருமானவரி, வட்டி, அபராத வட்டி எல்லாமே சேர்த்து இத்தொகை ஆகும்)
1978இல் (மார்ச்) அம்மா அவர்கள் மறைந்து, என்னை செயலாளராக்கிய பிறகு இந்த வருமானவரி பாக்கி சுமார் 80 லட்சமாக உயர்த்தப்பட்ட கொடுமைக்கு ஆளானோம்! (கூடுதல் ஆண்டுகள் அதனால் மேலும் தொகை பெருக்கம்)
தந்தை பெரியார் மறைவுக்குப் பின்னர் “எமர்ஜென்சி’’யை முழுமையாகப் பயன்படுத்தி, இலாகாவின் பார்ப்பன மேல் அதிகாரிகள் “சாமி ஆடி’’ பழிவாங்கும் தன்மையில் தம் இஷ்டம்போல் ஆட்டம் போட்டனர்.
சொத்துக்கள் மீது அட்டாச்செண்ட் (Attachment), டிரஸ்ட் சொத்துக்களிலிருந்து வரும் வாடகை வருமானத்தை முடக்கியும், வங்கி கணக்குகளில் உள்ள தொகைகள் பறிப்பு _ முடக்கம் இவ்வளவும் பெரியார் திடலிலேயே பகிரங்கமாக அட்டாச்மெண்ட் நோட்டீஸ் ஓட்டல் வேலை _ இவ்வளவும் நடந்தன.
டிரஸ்டை எதிர்த்து வழக்கு!
அதை எதிர்த்து மீண்ட நிலையில் அம்மா மறைந்து, நான் பொறுப்பேற்ற பிறகு கழகத்தினை விட்டு விலக்கப்பட்ட மூவர் சென்னை உயர்நீதிமன்றத்தில், டிரஸ்டினை எதிர்த்து வழக்குப் போட்டனர். (திருவாரூர் கே.தங்கராசு, டி.எம்.சண்முகம், சிதம்பரம் கு.கிருட்டினசாமி).
அரசே தலையிட்டு, வருமானங்களை எல்லாம் பெறுபவர் (Official Receiver) போட வேண்டும் என்றும், அரசே, இந்த அறக்கட்டளையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கோரினர்.
அன்று திராவிடர் கழகம் கலைஞர் கருணாநிதிக்கு (தி.மு.க.வுக்கு) ஆதரவாக இருக்கிறது என்ற நினைப்பில், அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள், அம்மாவால் விலக்கப்பட்டவர்களுக்கு முதலில் திரை மறைவிலும், பிறகு வெளிப்படையாகவும் ஆதரவு தந்து இம்மாதிரி செயல்களுக்கு வழக்குரைஞர் உதவி _ உபயம்கூட செய்தார்.
நான் பொறுப்பேற்று ஒரு வாரம்கூட ஆகாதநிலையில், உயர்நீதிமன்ற வழக்கு (O.S.No.1978), அதோடுகூட ஒரு சில மாதங்களில் வருமான வரித்துறை மேல்-முறையீட்டு (Income Tax Appellate Tribunal) மன்றம் முன்பு விசாரணைக்கு வந்தது.
நமக்குக் கிடைத்த இரண்டு முக்கிய வெற்றிகள்!
இதற்கு முதலில் வருமானவரித் துறை அதிகாரி, அதற்கடுத்து மேல் அதிகாரி, அதற்கடுத்த நிலையில் (Income Tax Assistant Commissioner) இப்படி பலரும் பழைய பாக்கியை உறுதி செய்து விட்ட நிலையில்தான், மூன்றாவது கட்டமாக இந்த அப்பீல், (Income Tax Appellate Tribunal)-ல் செய்யப்பட்டது.
அங்கு இரண்டு “மேல் ஜாதி’’ எனப்படும் நீதிபதிகள் விசாரித்தனர். ஆனால், மேல் ஜாதி உணர்வுக்கு ஆட்படாமல், அப்பெருமக்கள் நல்ல தீர்ப்பு 1978இல் வழங்கினர்.
1. ரூ.80 லட்சம் வருமானவரி போட்டது செல்லாது என்ற நமது வாதம் தீர்ப்பில் ஏற்கப்பட்டது.
2. பெரியாருடையது “அறக்கட்டளைதான்’’ என்று வருமான வரித்துறையினர் ஏற்றுக் கெள்ள வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது. இவை இரண்டும் மிக முக்கிய வெற்றிகளாகும்.
அதன் பிறகு கடந்த சுமார் 10 ஆண்டுகளுக்கும் (With retrospective effect) இதை அறக்கட்டளையாக (Public Charitable Trust) வருமானவரித்துறை அங்கீகரித்த ஆணைகளையும் பெற்றோம்.
கணக்குகள் முறையாக அளிக்கப்பட்டு வருகின்றன
அம்மா அவர்களின் தலைமைக் காலத்திலிருந்தே (1974 முதல்) கணக்குகள் முறையாக எழுதப்பட்டு, வருமான வரித்துறைக்கு ஆண்டுதோறும் சமர்ப்பிக்கப்-பட்டு வருகின்றன.
தனி தணிக்கையாளர்கள் (Auditors) தணிக்கை செய்து, இலாகாவுக்கு தாக்கல் செய்கிறார்கள்.
அறக்கட்டளையின் நிர்வாகக் கூட்டங்கள், முறையே சட்டப்படி எப்படி நடைபெற வேண்டுமோ அப்படி நடைபெற்று, அதற்குரிய ஆவணங்கள் (Records) செம்மையாக வைக்கப்-பட்டு நிர்வாகம் சரியானபடி நடைபெற்று வருகின்றது!
இயக்கத்தில் இருப்பவர்களில் சபலங்-களுக்கும், துரோக சிந்தனைக்கும், தன்முனைப்பு, சுயநலம் இவற்றிற்கு ஆளாகும் சிலர் துரோகிகளாக மாறும்போது, அவர்களது வழமை, இந்த அறக்கட்டளை மீது சேற்றை வாரி இறைக்கும் ‘திருப்பணியைச்’ செய்து-விட்டுப் போவதுதான்.
அவ்வப்போது ஒவ்வொரு காலகட்டத்திலும் வெளியேறியோ, அல்லது வெளியேற்றப்பட்டோ செல்லுபவர்கள், இதில் ஈடுபட்டு தரும் தொல்லைகளையும், பொது ஸ்தாபனமாக இது உள்ளபடியால் சந்திக்கவேண்டியே உள்ளது.
முதலில் உயர்நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்குக்கு ஆதாரமில்லை என்று தள்ளப்பட்டு, நாம் அங்கேயும் வெற்றி பெற்றோம் _ நியாய அடிப்படையில்.
பெரியார் - மணியம்மை கல்வி அறப்பணிக் கழகம் உருவாக்கப்பட்டது.
நமது பெரியார் அறக்கட்டளையின் இந்த சங்கடங்கள், வரித் தொல்லைகளையெல்லாம் பார்த்து மனம்புழுங்கி, வேதனைப்பட்ட அன்னை மணியம்மையார் அவர்கள் அவருக்கென இருந்த தனித்த சொத்துக்கள், அய்யா அவர்கள் அம்மா அவர்களின் தனி பராமரிப்புச் செலவுக்கென ஒதுக்கி வைத்த சொத்துக்களை (அய்யா அவர்களின் சொந்த பூர்வீக வருமானம் மூலம் கிடைத்த சொத்து) பொதுவுக்கு என ஆக்கி, பெரியார் மணியம்மை கல்வி அறப்பணிக் கழகத்தினை புதிதாக 1974லேயே தலைமை ஏற்று  அன்னை மணியம்மையார் உருவாக்கிவிட்டார்! (பழைய பெரியார் டிரஸ்டுக்கும், வருமானவரித் துறைக்கும் பிரச்சினை இருந்தமையால், தனியே புது டிரஸ்ட் ஏற்பாடு செய்வதே சரியானதாகும் என்று சட்ட அறிஞர்கள், வழக்குரைஞர்கள் ஆலோசனைகளுக்கு ஏற்பவே அம்மா இதனை தனியே ஒரு அறக்கட்டளையாக, துவக்கம் முதல் வருமானவரித்துறை ஒப்புதலுடனேயே துவக்கினார்கள்) அவர்களது முழு நம்பிக்கைக்கும், நாணயத்திற்கும் உரியவர்களை போட்டு நடத்தினார்கள்.
எரிச்சல்காரர்கள் வெளியேற்றப்பட்டனர்!
இந்த அறக்கட்டளையில் தன்னை அம்மா போடவில்லை என்ற எரிச்சல் காரணமாக, சந்தர்ப்பம் பார்த்து வந்த தன்முனைப்பாளரான திரு.நாகரசம்பட்டி சம்பந்தம், டிரஸ்ட் வளருவதையும் புதிய அமைப்புகள் தோற்றுவிக்கப்-பட்டு, அதற்குப் பல புதியவர்கள், பெரியவர்கள் நிர்வாகம் ஏற்பதையும்கூட பொறுக்காமல் அவசியம் ஏற்பட்டபோது இதற்கு எதிரான சில “கீழறுப்பு’’ வேலைகளை நடத்தினார்.
உடனே எச்சரிக்கையாகி அவரை வெளியேற்றினோம். அவருடன் அவருடைய அத்தையான திருமதி விசாலாட்சி அம்மாளும் வெளியேற்றப்பட்டார் _ அவரது குரலாக அந்த அம்மையார் ஒலித்ததால்.
தி.மு.க. அரசு கொண்டு வந்த ஒரு சட்டம்!
பெரியார் அறக்கட்டளை மற்றும் அன்னை மணியம்மையார் பெயரில் உள்ள அறக்கட்டளை ஆகியவற்றை சட்டதிட்டப்படி ஆயுள் தலைவர், ஆயுள் செயலர், ஆயுள் உறுப்பினர் என்ற தகுதிகள் நிர்வாகக் குழுவில் உண்டு. இரண்டு அறக்கட்டளைகளுக்கும் தனித்தனியே பொதுக் குழுக்களும் உண்டு.
அது பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சங்கமாகிய அறக்கட்டளை யானபடியால் அச்சட்டத்திற்கு 1975இல் கலைஞர் தலைமையில் இயங்கிய தி.மு.க. அரசு ஒரு சட்டத்திருத்தம் கொண்டுவந்து, சட்டவிதிகளை மாற்றம் செய்தது.
அதன்படி ஆயுள் உறுப்பினராக எந்த சங்கத்திலும் இருக்க முடியாது என்று அச்சட்டம் திருத்தம் செய்யப்பட்டது.
பொதுவாக அறக்கட்டளை சட்டத்தின்  (Trust Act) கீழ் ஒரு அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டால், அதில் ஆயுள் பூராவும், தலைவர், செயலாளர், உறுப்பினர் இருக்க வழிவகை உண்டு.
அதுவே இச்சட்டத்தின் சங்கப்பதிவு (Societies Act) கீழ் பதிவு செய்தால் ஏன் இந்த பேதம் என்று கேட்டும், 1975ஆம் ஆண்டு சட்டம் வந்தது. ஆனால், அது அமுலுக்கு வந்தது. பின்னோக்கிச் செல்ல முடியாத சட்டத்திருத்தம் என்பதால் 1979 முதல்தான் அமுலுக்கு வந்தது என்பதையும் எடுத்துக்காட்டி நாம் உயர்நீதிமன்றத்தில் அச்சட்டத்தை எதிர்த்து தமிழக அரசின் மீது வழக்குப் போட்டோம். அதனை விசாரித்த நீதிபதி திரு.நயினார் சுந்தரம் அவர்கள் அரசு சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்து நமது வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டார்.
அதன் பேரில் முதல் பெஞ்சிற்கு உயர் நீதிமன்றத்தில் நாம் அப்பில் செய்தோம். தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் ஆனந்த், நீதிபதி ஜஸ்டிஸ் ராஜீ ஆகியவர்கள் அமர்வு முன் 1990இல் அப்பீல் வழக்கு விசாரணைக்கு வந்தது!
தி.மு.க. அரசு அளித்த விதிவிலக்கு!
1990இல் தி.மு.க. ஆட்சி நடைபெற்றது. ஏற்கனவே இந்த டிரஸ்ட் அனுபவித்த சங்கடங்கள், தூண்டிவிடப்பட்டு நடைபெற்ற வழக்குகள் இவைகளையெல்லாம் உணர்ந்த நிலையில், “ரிட்’’ அப்பீல் தமிழக அரசின் சட்டத்திருத்தத்தை எதிர்த்து நடத்தாமல் இந்த இரு டிரஸ்ட்டுகளுக்கு _ அதனுடைய சிறப்பான நடத்தைகளை தெரிந்து, விலக்கப்பட்ட திருவாளர்கள் சம்பந்தம், விசாலாட்சி அம்மையார் கொடுத்த மனுக்களையும் ஆய்வு செய்து, அவை வெறும் “அக்கப்போர்’’ என்பதை உணர்ந்தே,  தமிழக அரசு (கலைஞர் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. அரசு) மற்ற கட்சிகள், இயக்கங்களுக்கு விதிவிலக்கு உள்ளதால் இதற்கும் தருவதுதான் நியாயமானது என்பதால், அந்த சட்டத்தின் 54ஆவது விதிப்படி, இந்த இரு டிரஸ்ட் அமைப்புக்களுக்கு (G.O. மூலம்) முழு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. (G.O. M/s No.751 dated 31.12.1990, Commercial Taxes and religious Endowments Department)
அதை நீதிமன்றத்தில் முதல் பெஞ்ச் முன்னால் கூறி, இந்த அரசு ஆணையின் (G.O.) காரணமாக “ரிட்’’ அப்பீல் வழக்கினை வாபஸ் பெற்றோம்.
அதற்குப் பிறகு 1997இல் இயக்கக் கட்டுப்பாட்டை மீறிய காரணத்தால் கழகத்தி-லிருந்து நீக்கிவைக்கப்பட்ட திரு.பாலகுரு என்பவரும் அவருடைய கோஷ்டியினரும் அவர்களுக்கு மறைமுகமாக தொடர்ந்து உதவிவந்த வழக்குரைஞர் திரு.துரைசாமியும் நமது டிரஸ்ட்டுகளின் மீது வழக்கினை மற்றொரு ரூபத்தில் “ரிட்’’ ஆக, சென்னை உயர்நீதிமன்றத்தில் போட்டனர். அதை விசாரித்து தீர்ப்புக் கூறிய, நீதிபதி பத்மநாபன், இவர்களது வாதங்கள் ஏற்கக் கூடியவை அல்ல என்பதைச் சுட்டிக்காட்டி, அந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்ததோடு, அவ்வழக்கை அவர்களே, அதற்கு முந்தைய நீதிபதி கனகராஜ் அளித்த அனுமதியையும் கூட ரத்து செய்து தீர்ப்புக் கூறினார்.
இது 1996 _ 97இல் நடைபெற்று தீர்ப்பு வெளிவந்துள்ளது.
தொல்லைகள் வந்தாலும் வளர்ச்சிப் பணிகள் தொடர்கின்றன!
இந்த வழக்குகள் தொல்லை ஒரு புறம் தொடர்ந்து கொண்டே இருந்தாலும், நமது இரு அறக்கட்டளைகளின் சார்பில் துவக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்ற அமைப்புகள் மிகவும் நல்ல வளர்ச்சி பெற்று, சிறப்பான முன்னேற்றத்தை அடைந்துள்ளன.
தந்தை பெரியார் அவர்கள் காலத்தில், திருச்சியில் பெரியார் ஆசிரியர்ப் பயிற்சிப் பள்ளி, நாகம்மை ஆசிரியைப் பயிற்சிப் பள்ளி, பெரியார் நடுநிலைப் பள்ளி, நாகம்மை குழந்தைகள் இல்லம் மட்டுமே இருந்தன.
இப்போது அவைகளையும் உள்ளடக்கி 44 நிறுவனங்கள் (5 மருத்துவமனைகள் உட்பட) நடைபெற்று வருகின்றன.
பெண்களுக்கான தொழில் படிப்பு, அமைப்புகள், பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி மய்ய அமைப்பு உட்பட எல்லாம் சிறப்பாக நடைபெறுகின்றன.
இவற்றிற்கு ஒரு சில அமைப்புகளுக்கு மட்டுமே அரசு உதவி உண்டு. மற்றவை முழுக்க முழுக்க அறக்கட்டளை நிதி, நன்கொடைகள் இவைகள் மூலமே நடைபெற்று வருகின்றன.
தொடர்ந்து இந்த அறக்கட்டளைகளின் கணக்குகள், வரவு _ செலவுகளை ஆய்ந்த நிலையில் மத்திய அரசின் வருமான வரித்துறை-யிடமிருந்து 80நி வரிவிலக்கினை பெற்றுள்-ளோம்.
நிறுவனங்கள் பெருகியது மட்டுமல்ல, வருமானம் தராத சொத்துக்களை சுமையாக வைத்துக்கொண்டிராமல், அவைகளை விற்று அதன்மூலம் வந்த வருவாயானது புதிய கட்டிடங்கள், புதிய இடங்கள், புதிய சொத்துக்கள் வாங்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து 26.12.1996 அன்று சென்னையில் நடந்த திராவிடர் கழக மாநில மாநாட்டில்  எனது உரையில் குறிப்பிட்ட ஒரு பகுதியை இப்போது நினைவூட்ட விரும்புகிறேன்.
“இங்கே நான் ஒரு சிறிய பத்திரிகை குறிப்பு வைத்திருக்கிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் அறக்கட்டளை சம்பந்தமானது அது. சகோதரர் நெடுமாறன் அவர்கள் இங்கே இருக்கின்றார். அருமை சகோதரர் ஜெகவீர-பாண்டியன் அவர்கள் இங்கே இருக்கின்றார். அவர்களுக்கெல்லாம் இந்த வரலாறு மிக நன்றாகத் தெரிந்ததே. பெருமைக்குரிய இந்திராகாந்தி அவர்களுடைய ஆட்சிக் காலத்திலே நிதி அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம் அவர்கள்,
தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை பற்றி அந்த அறக்கட்டளையின் நிர்வாக உறுப்பினர் என்கிற முறையிலே, ஒரு பேட்டி கொடுத்திருக்கின்றார். அதிலே அவர் ஒரு விளக்கம் சொல்லுகின்றார்.
தேனாம்பேட்டையில் உள்ள கட்டடங்களை வாடகைக்கு விடுவதிலும், நிலத்தை கண்காட்சிகள் நடத்த வாடகைக்கு விடுவதிலும் அறக்கட்டளைக்கு வருமானம் வருகிறது. இதன்மூலம் வருடத்துக்கு 5 லட்சம் ரூபாய் வருமானம் வருகிறது. இந்த வருமானம் அறக்கட்டளையின் நோக்கத்தை நிறைவேற்றப் போதுமானதாக இல்லை.
அறக்கட்டளை வருமானத்தைப் பெருக்க அரங்கம் கட்டமுடிவு செய்யப்பட்டு ரூ.2 கோடியே 78 லட்சத்தில் காமராஜர் பெயரில் அரங்கம் கட்டப்பட்டது. இதற்காக 3 வங்கிகளில் இருந்து 2 கோடியே ஒரு லட்சம் ரூபாய் கடனாகப் பெறப்பட்டது. அரங்கம் மூலம் அறக்கட்டளைக்கு வருமானம் வந்தாலும் வாங்கிய கடனுக்கு வட்டியும், அபராத வட்டியும் உயர்ந்து, வட்டி மட்டும் ரூ.86 லட்சத்து 35 ஆயிரம் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. அறக்கட்டளையை நிர்வகிக்க முடியவில்லை என்று சொல்லுகின்றார்.
இந்த அறக்கட்டளையில் உறுப்பினர்களாக இருக்கின்றவர்கள் யார் தெரியுமா? மத்திய அமைச்சரவையிலே நிதியமைச்சராக இருந்தவர், மத்திய அரசாங்கத்துடன் தொடர்புடையவர்கள், மத்திய அமைச்சரவையிலே செல்வாக்கு உள்ளவர்கள். இவ்வளவு சிறப்பானவர்கள் இந்த அறக்கட்டளையிலே இருந்தும் முடியவில்லை என்கின்றனர்.
ஆனால், இன்று நமது ஆண்டு வருவாய் 47 இலட்ச ரூபாய். (1996)
அய்யா காலத்திலே 15 லட்ச ரூபாய் சொத்துக்களை விட்டுவிட்டுப் போனார். அப்பொழுது இந்த அறக்கட்டளைக்கு ஆண்டு வருமானம் ஒரு இலட்சம் ரூபாய் பிறகு        அம்மா அவர்களுடைய காலத்திலே இந்த அறக்கட்டளைக்கு வருமானம் 2 லட்சம் ரூபாய்.
நண்பர்களே, எங்களுடைய இயக்கம் திறந்த புத்தகம்தான். இப்பொழுது பெரியார் அறக்கட்டளைக்கு ஆண்டு வருமானம் மட்டும் எவ்வளவு தெரியுமா? ஒரு ஆண்டுக்கு 47 லட்சம் ரூபாயாக வருமானம் உயர்ந்திருக்கின்றது.’’
திறந்த புத்தகமாகவே நமது அறக்கட்டளைகள் இயங்கி வருகின்றன. இதில் பொறுப்பு வகிப்போர் சுயநலமற்ற பொதுநல உணர்ச்சியோடு செயல்படுவோர்களாகவே உள்ளனர்.
கட்டிய பணத்தைத் திரும்பப் பெற்றோம்!
வருமான வரித்துறையினர் ஏற்கனவே நமது வாடகைகளை 1976 அட்டாச் செய்து, எடுத்துக் கொண்ட தொகைகள், மற்றும் வரி பாக்கிக்காக முடக்கி வரவு வைத்துக்கொண்ட தொகைகளைத் திருப்பித் தரவேண்டும் என்பதற்காக _ 1978 டிரிபியூனல் தீர்ப்பின் அடிப்படையில் _ தொடர்ந்து முயற்சிகளை நாம் மேற்கொண்டு, பெரும்பகுதி தொகைகளை வட்டியுடன் திரும்பவும் நமது பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் பெற்றது என்பதைப் பெருமகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்.
அத்தொகைகள் வட்டியுடன் பெறப்பட்டு, புதுடெல்லி பெரியார் மய்யம் கட்டுமான செலவுக்கு துவக்க நிதியாகவே  வைக்கப்பட்டன. இத்தொகை மாத்திரம் ரூபாய் 7,57,640 ஆகும்.
இன்னமும் எங்களுக்குத் தொல்லைகளும், அரசியல் கண்ணோட்டத் தொந்தரவுகளும் இல்லாமல் இல்லை!
-உண்மை இதழ்,16-31.8.16

Sunday 4 September 2016

தந்தை பெரியாரை வைத்தியநாத அய்யர் காப்பாற்றினாரா?

தந்தை பெரியாரை வைத்தியநாத அய்யர் காப்பாற்றினாரா? மதுரைக் கலவரம் பற்றி தந்தை பெரியார் விளக்கம்!

மதுரை கருப்புச் சட்டைப் படை மாகாண மாநாடு ஊர்வலம் 11.05.1946ஆம் தேதி மதுரை காங்கிரசுக்காரர்களைக் கதி கலங்கச் செய்துவிட்டது. 50,000 மக்கள் கொண்ட 6 மைல் ஊர்வலமும், சவுராஷ்டிர, பார்ப்பன ஆண்கள், பெண்மணிகள் உள்பட ஊர்வலத்தைக் கடவுள் உற்சவ ஊர்வலமாகக் கருதிக் கும்பிட்டு மரியாதை செய்த மூட-நம்பிக்கைக் காட்சியும், வைகை ஆற்றில் போடப்பட்டிருந்த பிரமாண்டமான கொட்டகையிலும் அதற்கு வெளியிலும் கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களையும் கண்டு மனம் வெடிக்கப் பொறாமை கொண்ட காங்கிரசாரில் 11ஆம் தேதி இரவே சில தலைவர்கள் கூடி, சுமார் 1000 ரூபாய் போல் தங்களுக்குள் செலவு தொகை ஏற்பாடு செய்து கொண்டு இரவு முழுதும் சுற்றி அலைந்து தொண்டர்களையும், கலகக்காரர்களையும் ஏற்பாடு செய்து கொண்டு 12ஆம் தேதி காலையில் அட்டூழியம் துவக்கி விட்டு-விட்டார்கள்.


இப்படிச் செய்வதற்கு தங்களுக்கு ஒரு சாக்கு கற்பித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இரண்டு விஷயங்களை கற்பனை செய்து கொண்டார்கள்.

1. கருப்புச் சட்டையினர் கோவிலில், சாமி, பெண்கள் ஆகியவர்களை அவமதித்ததாகவும்,
2. காங்கிரசு கொடியை கொளுத்தினதாகவும்,

கற்பித்த இரு விஷயங்களைக் காங்கிரசு தொண்டர்கள் ஊர் முழுவதும் குழாயில் கூவியும், பறையடித்தும் ஜனங்களை கிளப்பி விட்டார்கள். அப்படி இருந்தும் ஜனங்கள் ஒன்றும் ஆத்திரம் அடையாமல் அலட்சிய-மாகவே இருந்துவிட்டார்கள்.

பிறகு காங்கிரசுக்காரர்கள் சிலர் மதுரை நகரில் உள்ள கருப்புச் சட்டைப்படை காரியாலயத்தில் புகுந்து (அந்த சமயம் அங்கு ஒருவரும் இல்லை, எல்லோரும் மாநாட்டில் இருந்தார்கள்) அங்குள்ள சாமான்களை எடுத்துக் கொண்டு கட்டி இருந்த கொடியையும் சாய்த்துப் பிடுங்கிக் கொண்டு, கூட்டமாக வீதியில் கூப்பாடு போட்டுக் கொண்டு வழி நெடுக கட்டி இருந்த கொடிகளையும் பறித்துக் கொண்டு எதிரில் தென்பட்ட இரண்டொரு கருப்புச் சட்டை போட்டிருந்தவர்களையும் தாக்கிக் கொண்டு கூத்தடித்தவண்ணம் தோழர் ராதா வீட்டிற்குச் சென்றிருக்கிறார்கள். அங்கு அந்த வீடு தாளிட்டிருந்த படியால் பெரும் பெரும் கற்களை கதவின் மீது எறிந்திருக்-கிறார்கள்.

இந்தச் சமயத்தில் இரண்டொரு தொண்டர்கள் டவுனிலிருந்து கொட்டகைக்கு ஓடிவந்து இந்தப்படி காங்கிரசுக்காரரால் டவுனில் காலித்தனம் நடப்பதாகச் சொன்னார்கள். இதைக் கேட்டவுடன் நான் கொட்டகை-யில் இருந்தவர்களுக்குத் தக்கபடி அடக்கம், பொறுமை, கட்டுப்பாடு ஆகியவை-களைப் பற்றி மறுபடியும் (அதாவது முதல்நாள் எனது தலைமை உரையில் இவைகளையே சொன்னேன்.) வற்புறுத்திச் சொல்லி யாரையும் பந்தலுக்கு வெளியில் போகக் கூடாது என்றும் சொல்லி அடக்கிவிட்டு மாநாட்டை நடத்திக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் மறுபடியும் சில தொண்டர்கள் மேடைக்கு ஓடிவந்து, காங்கிரசு காலிகள் வழிநெடுக கருப்புச் சட்டைக்காரரை தாக்கிக் கொண்டு இங்கும் வரவும், கொட்டகையை கொளுத்தவும், திட்டம் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள், வரப்போகிறார்கள் என்று சொன்னார்கள். நான் அதைப் பற்றி கவலைப் படாதீர்கள்; வந்தால் பார்த்துக் கொள்ளலாம்; நீங்கள் வெளியில் போகாதீர்கள் என்று சொன்னேன்.

கொட்டகையில் இருந்த ஒரு தொண்டர் இரண்டு ஊர் வாலண்டியர்கள் ஒன்றாய் வந்து கேளுங்கள் என்று ஒலி பெருக்கியில் கூப்பிட்டார். அவர்கள் பந்தலுக்கு முன்புறம் சுமார் 100, 200 பேர்கள் ஒன்று சேர்ந்திருக்-கிறார்கள். அவர்களை அழைத்துக் கொண்டு அந்தத் தொண்டர் ஊருக்குள் இருக்கும் கருப்புச் சட்டைப் பிரதிநிதிகளை காப்பாற்றி அழைத்துவரச் சென்றார்கள். வழியில் ஒரு இடத்தில் இவர்களைக் கண்ட போலிசார் மேலே செல்ல ஒட்டாமல் தடுத்து அப்படியே ஒரு இடத்தில் சேர்த்தாற்போல் அடைத்து-வைத்துக் கொண்டார்கள். இது தெரிந்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டுக் காரியதரிசி தோழர் திராவிடமணி கொட்டகையில் இருந்த ஒரு சப் இன்பெக்டரை அழைத்துக்கொண்டு டவுனுக்குள் சென்றார். சப்இன்பெக்டர் சைக்கிளில் சென்றார், திராவிட மணி குதிரை வண்டியில் சென்றார். சைக்கிள் வேகமாகச் சென்றதால் மறைந்துவிட்டது.

திராவிடமணி சென்ற வண்டியைக் காங்கிரசுகாரர்கள் நிறுத்தி, திராவிட மணியை இறங்கச் செய்து கடினமாகத் தாக்கினார்கள். தாக்குதல் பொறுக்கமாட்டாமல் அவர் ஓடி ஒரு அடுத்த முசுலிம் வீட்டிற்குள் புகுந்துவிட்டார். ஆனால் அவர் எங்கு போனார் என்று மற்ற நம் தொண்டர்களுக்குத் தெரியாததால் திராவிட மணியை தூக்கிக் கொண்டுபோய் விட்டார்கள் என்று சத்தம் கொட்டகையில் போடப்பட்டது. ஜனங்கள் ஒரே கட்டுப்பாடாய் எழுந்தார்கள். நான் எழுந்து அவர்களை உட்காரச் சொல்லிக் கொண்டிருக்கும்போது போலிசு ஜில்லா சூப்பிரண்டு, சில இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், மேஜிஸ்ட்ரேட்டுகள் ஆகியவர்கள் கொட்டகைக்குள் நுழைந்து மேடைக்கு வரலாமா என்று கேட்டார்கள். நான் வரலாம் என்று சொன்னேன். நகரத்தில் காலித்தனம் (ஹூலிகானிசம்) தலைவிரித்து ஆடுகின்றது. இங்கு வராதபடி தக்க ஏற்பாடு செய்திருக்கிறேன். உங்கள் கூட்டத்தை எவ்வளவு சுருக்கி நடத்தலாமோ அவ்வளவு சுருக்கமாக நடத்தி முடியுங்கள் என்று சொன்னதோடு, உங்கள் ஆட்களுக்கு ஒன்றும் கவலை வேண்டியதில்லை. அவர்களை அடக்கமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஜில்லா சூப்பரண்ட் சொன்னார். கலகத்துக்குக் காரணம் என்ன என்று கேட்டேன். அதில் ஒருவர் இன்றைய ஆட்சி அப்படி இருக்கிறது நாம் என்ன செய்ய முடியும்? என்றார்.

அதோடு கூடவே மற்றொருவர் உங்கள் ஆளுகள் காப்பிக் கடை கண்ணாடிகளை உடைத்த-தாகவும், காங்கிரசு கொடியை அவிழ்த்து கொளுத்தியதாகவும், கோவிலில் சென்று கணேச விக்கிரகத்தைத் தொட்டு விட்டதாகவும் சொல்லுகிறார்கள் என்று சொன்னார். உடனே எனக்கு கோபம் வந்து இந்தப்படி நம்மவர்கள் நடந்ததாக அதிகாரிகள் சொல்லுகிறார்கள். இப்படி நம்மவர்கள் செய்வது என்றால் நமக்கு யோக்கியதையா என்று கேட்டேன். உடனே ஞி.ஷி.றி. அவர்கள், அவர்கள் செய்ததாக நான் சொல்லவில்லை, செய்ததாகக் காங்கிரசுக்காரர்கள் சொன்னார்கள், அதை உங்களிடம் சொன்னேன் என்று சொன்னதோடு, இதை இந்த ஜனங்களுக்குச் சொல்லுங்கள் என்றார் (அதாவது இந்தப் பழி கற்பனை என்பதை அவர் அப்போதே உணர்ந்திருக்கிறார் என்பதற்கு அறிகுறியாகும்).

எனவே முதல்நாள் ராத்திரி, காங்கிரசு தலைவர்கள் தோழர் வைத்தியநாதய்யர், தந்தி பத்திரிகை ஆசிரியர் இன்னும் இரண்டொருவர் சேர்ந்து வம்புச்சண்டைக்கு வர ஏற்படுத்திக் கொண்ட காரணங்கள் இவை என்றும், அங்கு கோவிலுக்கு உண்மையில் ஆண்கள் யாரும் செல்ல-வில்லை. வெளியூர் பெண்கள் சிலர் கோவிலுக்குப் போனார்கள் என்றும் சிலர் அப்போதே சொன்னார்கள்.

இதன் பின் சில தீர்மானங்கள் படிக்கப்பட்டு என்னால் முடிவுரை கூறப்பட்டுத் தலை-வருக்கும், போலிசுக்கும் நன்றிகூறிக் கூட்டம் முடித்து யாவரும் கொட்டகைவிட்டு வெளிவந்துவிட்டோம்.

வெளிவந்தவர்கள் ஊருக்குள் சாப்-பாட்டுக்குப் போனால் காங்கிரசார் அடிப்பார்கள் என்றும் சாப்பாடு இங்கேயே கொண்டு வரப்படும் என்றும் யாரும் வெளியில் போகக்கூடாது என்றும் மேஜிஸ்ட்ரேட், சப்இன்ஸ்பெக்டர் என்னிடம் வந்து சொன்னார்கள், அதன் மீது யாரும் வெளி செல்லவில்லை. கடைசிவரை அன்று முழுவதும் சாப்பாடு வரவில்லை. காரணம் கேட்டதில் காங்கிரசார் நாம் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்த ஓட்டலுக்குள் புகுந்து சாப்-பாட்டை நாசம் செய்துவிட்டதாகப் பிற்பகல் 4 மணிக்குச் சொன்னார்கள். இதற்குள் காலி கூட்டம் பந்தலுக்கு வந்து அங்கு ஒவ்வொரு கொட்டகையாக நெருப்புவைத்துவிட்டு பிரதிநிதிகள் தங்கியிருந்த ஒரு முனிசிபல் பள்ளிக்கூடக் கட்டிடத்திற்குள் புகுந்து அங்குள்ள சிலரை அடித்துவிரட்டிவிட்டு, அங்குள்ள சுமார் 300, 400 பிரதிநிதிகளின் கைப்பை, பெட்டி, செருப்பு, குடை, பாத்திரம் முதலியவைகளை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டார்கள். சிலர் நான் இருந்த கட்டிடத்-தையும் மற்றும் பிரதிநிதிகள் இருந்த கட்டிடத்தையும் சூழ்ந்து கொண்டு கற்களை எறிந்தார்கள், இந்த இடத்தில் போலிசார் துப்பாக்கியுடன் காவல்காத்து காங்கிரசுக்-காரர்களை விரட்டிக் கொண்டே இருந்தார்கள்.

எனவே, முதலில் கொட்டகையிலும், பிறகு பிரதிநிதிகள் சுமார் 2000 பேர்கள்  அடை-பட்டுக்கிடந்த கட்டடத்திலும் இந்த காரியம் மாலை 7 மணி வரை நடந்த வண்ணமாக இருந்தது.

மாலை சுமார் 5.30 மணிக்கு ஞி.மி.நி. (டி.அய்.ஜி.), ஞி.ஷி.றி. (டி.எஸ்.பி) சில இன்ஸ்பெக்டர்கள், மேஜிஸ்ட்ரேட்டுகள் நான் இருந்த ஜாகைக்கு வந்து தங்கள் அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டு, தங்களால் அடியோடு அடக்க முடியாததற்குக் காரணம் சொல்லி தங்களுக்கும் (ஞி.ஷி.றி.க்கும்) கண்ணிற்கு பக்கத்தில் கல்லடிபட்டு ஒழுகிய ரத்த ஒழுகலோடு,  காயத்தைக் காட்டிவிட்டு இன்று 7 மணிக்கு ஊரடங்குச் சட்டம் போடப்போகிற படியால் யாரும் ஊருக்குள் நடமாடமுடியாதென்றும் ஆதலால் நீங்கள் இன்றே போவதானால் அடுத்த டேஷன்களுக்கு வண்டி சப்ளை செய்கிறோம் என்றும் இல்லாவிட்டால் காலை போகலாம் என்றும் சொன்னார்கள்.
காலை முதல் பலருக்கு ஆகாரமில்லை ஆதலால் இப்பொழுதே அவர்களை அனுப்பிக்கொடுத்து விட்டால் நலம் என்றேன். சரி, வண்டியும் ஆளும் அனுப்புகிறேன் என்று சொல்லிப் போய்விட்டார். 7.30க்கு பஸ்கள் வந்தன. மக்கள் ஏறிச் சென்று கொண்டே இருந்தார்கள். மற்றும் பலர் டவுனுக்குள் இருந்து வந்து சேர்ந்தவர்களும் இருந்தார்கள்.

விசாரித்ததில், கருப்புச் சட்டை போட்ட தோழர்கள் சுமார் 40, 50 பேர்களுக்கு காங்கிரசுக்-காரரால் அடி என்றும், ஒரு கருப்புச் சேலை அணிந்திருந்த பெண்ணை அடியோடு சேலையை அவிழ்த்துக் கொண்டு நிர்வாண-மாகத் தெருவில் ஓடஓடத் துரத்திக் காங்கிரசுக்காரர்கள் அடித்தார்கள் என்றும், சில பெண்களின் முகத்தில் காரி உமிழ்ந்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

ஜாகையில் இருந்து எடுத்துக் கொண்டு ஓடிய சாமான்களும் பிரதிநிதிகளிடம் அடித்து மிரட்டிப் பிடுங்கிக் கொண்ட பணமும் காணாமல் போன சாமான்களின் பெருமானமும் எல்லாம் சேர்ந்து சுமார் 5000, 6000 ரூபாய் மதிப்பிடப்படுகிறது. இவை தவிர கொட்டகை, ஸ்டால்கடைகள் ஆகியன நாசப்படுத்திக் கொள்ளையடித்ததின் காரணமாய் ஏற்பட்ட நஷ்டம் சுமார் 15000 ரூபாய் என்று சொல்லப்படுகிறது.

தோழர் வைத்தியநாதய்யர் அவர்கள் கலவரத்தின் போது வந்தார் என்பது அவர் பணம் கொடுத்து ஏவிவிட்ட காலித்தனம் கிரமமாய், வெற்றியாய் நடந்ததா என்பதைப் பார்க்க வந்தார் என்றே நம் கூட்டத்தினர் கருதி அவரைக் கோபித்திருக்கிறார்கள். அதற்கு ஏற்றாற்போல் அவர் வந்தவுடன் காலிகள் அவரை மரியாதை செய்து வழியனுப்பி-யிருக்கிறார்கள். போலிசு சூப்பிரண்டை கல்லால் அடித்த காலிகள் தோழர் வைத்தியநாதய்யருக்கு அடிபணிந்து வாழ்த்து கூறினார்கள் என்றால் அதில் நம்மவர்கள் கொண்ட கருத்துக்கு ஆதரவு இல்லாமல் இருக்க முடியாது.

ஊர்வலத்தின் போதும், மாநாட்டில் எனது தலைமை உரையிலும் கருப்புச் சட்டைப் படையினரையும், திராவிடர் கழகத் தொண்டர்களையும் புத்தி கூறி அவர்களுக்கு அடக்கம், பொறுமை, ஒழுக்கம், கட்டுப்பாடு, கீழ்ப்படிதல் ஆகியவை கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பதைத் தொண்டர்கள் மனம் புண்படும்படியான அளவுக்கு நான் இடித்து இடித்துக் கூறியிருக்கிறேன். மக்களிடம் சிறப்பாக காங்கிரசு கம்யூனிஸ்ட் தோழர்களிடம் நட்புரிமை காட்டவேண்டும் என்றும் கூறியிருக்கிறேன். இரவு நடந்த நாடகத்தையும் அடக்கமாக நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்-கொண்டிருக்கிறேன். இவை சி.மி.ஞி சுருக்கெழுத்து ரிப்போர்ட்டை பார்த்தால் தெரியும். இப்படியெல்லாம் இருக்கக் கருப்புச் சட்டையினர் கோயிலுக்குள் செருப்புடன் சென்றது என்பதும் பெண்களை இழிவாகப் பேசியது என்பதும் காங்கிரசு கொடி கொளுத்தப்பட்டது என்பதும் எப்படி நடந்திருக்க முடியும் என்பதும் எனக்கு விளங்க-வில்லை.

தோழர் இராதா வீட்டிற்குப் போய் அங்கு குழப்பமும், நாச வேலையும் செய்யப்பட்டதற்கு தோழர் வைத்தியநாத அய்யர் அறிக்கையிலும் நிருபர் சேதிகளிலும் ஒரு காரணமும் சொல்ல-வில்லை.

தவிர கோவில் பெண்கள் சாமி சாக்கை, காங்கிரசார் குறிப்பாகப் பார்ப்பனர்கள் கட்டுப்பாடாக கற்பித்துப் பேசி வருகிறார்கள்

திருச்சி மாநாடு நடந்த மறுநாள் இதையே சொல்லிக் கலகம் துவக்கினார்கள். அதாவது மலைக்கோட்டைக் கோவிலுக்குள் சென்று சுவாமியை அசுத்தப்படுத்தினார்கள் என்று எல்லாப் பத்திரிகைகளும் பிரசுரித்தன. பிறகு அது சிறிது கூட உண்மையற்ற அபாண்டப் புளுகாக முடிந்தது. ஒரு கருப்புச் சேலை கட்டிய பெண்ணை நிர்வாணமாக்கினார்கள் இந்தக் காலிக் கூட்டத்தினர். இந்த அட்டூழியம் பார்ப்பனர் பணத்தால் பார்ப்பனர்கள் பத்திரிகையால் கட்டுப்பாடாகச் செய்யப்-படுகின்றன. இன்று நேற்றல்ல வெகு நாளாகவே செய்யப்படுவதாகும். தோழர் வைத்தியநாத அய்யர் இவ்வளவு மோசமாக நடந்து கொள்வார் என்று நான் கருதவேயில்லை. ஆனால், முதல்நாள் ஊர்வலமும் மாநாடும், நாடகமும், பார்ப்பனர்களை அவர்களது கடைசி ஆயுதத்தைப் பயன்படுத்தி செய்தேதான் தீரும்.

அதனாலேயே அவர்கள் இந்த விளையாட்டு விளையாடினார்கள் எனலாம். ஆனால் சுத்த திராவிடர்கள் இதற்கு வானர சேனைகளாக விபீஷணர்களாக இருந்தது நம் சமுதாயத்-திற்கே இழிவான காரியமாகும்.

பத்திரிகைகளின் விஷமப் பிரசாரத்தால் பார்ப்பனர்களுக்கு, இவ்வளவு அட்டூழியம் செய்ய முடிகிறது. இவற்றால் எல்லாம் நமது தன்மானக் கிளர்ச்சி அடங்கிவிடும் என்று நினைப்பது அறியாமையேயாகும்.

கருப்புச் சட்டை படையினர் இதை ஒரு படிப்பினையாகக் கொள்ள வேண்டும். அடுத்த கருப்புச் சட்டைப் படை மாகாண தனிக் கூட்டம் ஒன்று சமீபத்தில் கூட்டப்பட வேண்டும். அது சமீபத்தில் நாம் கூட்டப்படப்-போகும் திராவிடர் கழகத் தனி ஸ்பெஷல் மாகாண மாநாட்டுடன் கூட்டப்பட வேண்டும். அதில் நாம் இதில் விட்டுப்போன காரியங்களைத் தொடர்ந்து நடத்தி நம் எதிர்காலப் போக்கை நிர்ணயிக்க வேண்டும். அதற்குள் கருப்புச் சட்டை போடுகிறவர்கள் பெருகி அங்கத்தினர் எண்ணிக்கையும் நிதி வசூலும் பூர்த்தியாக வேண்டும். மதுரையில் நடந்த பார்ப்பன சூழ்ச்சி, தொல்லை, துன்பம் ஆகியவை நாம் வேகமாய் நமது லட்சியத்தை நாடிச் செல்வதற்கு சாட்டை அடியேயாகும். நம் பெண்களுக்கும், சில பிரதிநிதிகளுக்கும் மதுரையில் ஏற்பட்ட இழிவு, துன்பம் ஆகியவை நமக்கு உணர்ச்சியை உள்கொள்ளும் மருந்தின் மூலம் கொடுக்காமல் இஞ்சக்ஷன் (அதாவது ஊசிபோடுவதன்) மூலம் செலுத்தப்பட்ட மருந்து மூலம் கொடுக்கப்பட்டதாகக் கருத வேண்டும். பார்ப்பனர் இப்படிச் செய்தும் நமக்கு மான உணர்ச்சி வரவில்லையானால் பிறகு நமக்குப் பார்ப்பனர் சொல்லும் வேசிமகன், சூத்திரன், கீழ்ஜாதி, என்பனவாகிய பேர் மிக மிகப் பொருத்தமானதே யாகும். ஆகையால், மதுரை படிப்பினையைக் கொண்டு யார் யார் பரிட்சையில் தேறுகிறார்கள் என்று பார்க்க ஆவலோடு காத்திருக்கிறோம்.

குறிப்பு:- கவர்மெண்டில் இருந்து ரிபோர்ட் கேட்டவுடன் தோழர் வைத்தியநாதய்யர் தமது இயற்கையான கவுண்டர் ஸ்டேட்மெண்ட் போடும் தொழில் சாமர்த்தியத்தைப் பயன்-படுத்தி மதுரை அதிகாரிகளுக்கு இன்னவிதமாய் ரிபோர்ட் செய்வது என்று வழி சொல்லிக் கொடுக்கும் முறையில் ஒரு அபாண்ட அறிக்கை விட்டிருக்கிறார். துப்பாக்கி அடிபட்டுச் செத்தவர்கள் சவுராஷ்டிரப் பார்ப்பன ஆட்கள், இவர்கள் காங்கிரசுக்காரர்கள். குத்துப்பட்டவர் போலிசார் என்பதை மறந்து பத்திரிகை நிருபர்களும், நிகழ்ச்சி அன்று இவரது (தோழர் வைத்தியநாத அய்யரது) யோசனை கேட்டு அந்தப் படியே சேதி தயாரித்து அனுப்பி இருக்கிறார்கள்.

இனி இவைகளை அனுசரித்துத்தான் மதுரை அதிகாரிகள் ரிபோர்ட் செய்வார்கள் என்பதில் அய்ய-மில்லை. ஆனால் அந்த அதிகாரிகளில் சிலரே மதுரையில் காங்கிரசு ஆட்சியில் இவற்றை நீங்கள் எதிர்பார்க்க வேண்டியதுதான் என்று ஜாடை காட்டினார்கள். ஆனதால் மந்திரிகள் நீதியும் எப்படி இருக்கும் என்பது முடிவான-தேயாகும். எப்படி இருந்தாலும் நமக்கும் நம் தோழர்களுக்கும் அங்கு நடந்த உண்மைகள் தெரியும். கலவரம் எப்படி நடந்தது? யாரால் நடத்தப்படுகிறது? என்பதை கண்ணால் பார்த்ததேயாகும். எதிரிகள் தொல்லையையும், துன்பத்தையும், அனுபவிக்க சக்தி நமக்கும், நமது தொண்டர்களுக்கும் உண்டு. ஆகவே நாம் பயப்படவோ, கலங்கவோ, தேவையில்லை. இந்த மதுரை படிப்பினையில் நம் முயற்சியும், உள்ளமும் சற்று அதிகமாக உரம் பெற்றிருக்-கிறது. யாரும் கலங்க வேண்டியதில்லை.


குடிஅரசு - தலையங்கம் - 18.05.1946
***

வைத்தியநாத அய்யரின் சதிவேலைகள் பற்றி

தந்தை பெரியார் கூறிய குறிப்புகள்!


¨    மதுரையில் கருப்புச் சட்டைப் படையினர் பிராமண சமுகத்தைக் கேவலமாகத் தாக்கியதாக பிராமண சேவா சங்கம் கண்டித்திருப்பதாகவும், மேற்படி சங்க காரியதரிசி சட்டமந்திரியிடம் இதுபற்றி புகார் செய்திருப்பதாகவும் - அதில் இந்தியன் பினல் கோட்படி கருஞ்சட்டைப்-படை நடத்தை குற்றமாகுமென்றும், 25 வருட காலத்துக்குமேல் பிராமணர்கள் பொறுத்து வந்ததாகவும், இனிப் பொறுக்க முடியா-தென்றும், குறிப்பிட்டிருக்-கிறதாகவும், 15ஆம் தேதி தினமணி எழுதுகிறது. இதிலிருந்து மதுரைக் கலவரத்துக்கு பார்ப்பன தூண்டு-கோல் எவ்வளவு இருக்கும் என்பதையும், தோழர் வைத்தியநாதய்யர் பணம் கொடுத்து கலவரத்தை கிளப்பிவிட்டார் என்பதில் உண்மை இல்லாமலிருக்குமா என்பதையும் திராவிடர்கள் சிந்திப்பார்களாக.
குடிஅரசு - பெட்டிச்செய்தி - 18.05.1946


***
¨    அதில் மதுரை வக்கீல் தோழர் வைத்தியநாத அய்யர் என்பவர் இரண்டு விதத்தில் முக்கியமானவராகி அட்டூழியத்தை அவசிய-மாக்கி விட்டார் என்று தெரிகிறது. அவையாவன:- 1. மதுரையில் பொதுவாக இருந்து வரும் பார்ப்பனர்,- பார்ப்பனரல்லா-தார் என்கிற பேத உணர்ச்சி 2. தோழர் வைத்தியநாத அய்யர் ஆச்சாரியார் கட்சியைச் சேர்ந்தவர் என்ற காரணத்தால் அவருக்கு மதுரையில் மதிப்பு இல்லாமல் போனதோடு அவர் பேரில் மதுரை காங்கிரசின் பார்ப்பனரல்லாதாருக்கு வெறுப்பு அதிகமாய் இருந்ததும், அவருக்கு அங்கு மேடையே இல்லாமல் இருப்பதும், வீதியில் நடக்கக்கூட போதிய தாராளம் இல்லாமல் இருந்ததுமாகும். இந்த இரண்டு காரியத்துக்கும் பரிகாரம் தேட வேண்டிய முறையில் மதுரை அட்டூழியத்திற்கு அவர் பிறப்பிடக்காரராக ஆகவேண்டியவராகி-விட்டார். அதனாலேயே இந்த அட்டூழியத்-திற்கு வழி சொல்லிக் கொடுக்கவும், துவக்கப்படுவதற்கு செலவு கொடுக்கவும், இவர் பேரில் வெறுப்புள்ள காங்கிரசு தலைவர்களைக் கண்டு நேசம் பேசவும் முனைந்தார் என்றும் தெரியவருகிறது.

¨    தடிகளுடனும், கல்லுகளுடனும் காலிகள் வந்து பிரதிநிதிகள் தங்கியிருந்த கட்டடங்கள் மீது கல்லெறியவும் உள்ளே நுழையவும் ஆரம்பித்தார்கள். ரிசர்வ் போலிசார் துப்பாக்கிகளுடன் இருந்து அவர்கள் கட்டடங்களுக்குள் புகாமல் தடுத்து-வந்தார்கள். எனினும் அவர்கள் கலகமும், கல்வீச்சும் நடந்தவண்ணமாகவே இருந்தன. இதே சமயத்தில் தோழர் வைத்தியநாதய்யர் வந்து காலிகளுடன் குலாவி காலிகளின் புகழ் வார்த்தைகளை பெற்றுக் கொண்டு ஆசிர்வதித்துவிட்டுப் போனார் என்றும் தெரியவந்தது.

¨    இந்தக் காலித்தனத்தக்குக் காரணஸ்தர்-களில் தோழர் வைத்தியநாத அய்யர் அவர்களே முக்கியமானவரும் முதன்மை-யானவரும் என்று பல இடங்களிலிருந்து சேதிகள் வந்து-கொண்டு இருக்கின்றன. அதற்கேற்றாற்-போல் கலவரத்துக்கு மறுநாளே மதுரை பார்ப்பனர்கள் ஒன்று சேர்ந்து கருப்புச் சட்டைப் படைக்காரர்-களால் தங்களுக்கு பயமாயிருக்கிறதென்றும் மந்திரிகள் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் பத்திரிகைகளில் அறிக்கை விட்டிருக்-கிறார்கள். தோழர் வைத்தியநாத அய்யரும் எங்க அய்யா குதிருக்குள் இல்லை என்கிற பழமொழியை அனுசரித்துத்தான் இந்தக் கலவரத்தில் பிரவேசித்ததற்குச் சமாதானம் சொல்லும் முறையில் ஒரு அறிக்கை விட்டிருக்கிறார். அந்த அறிக்கை எந்த விதத்திலும் அதிகாரமுறையில் வைத்தியநாத அய்யருக்கு சம்பந்தப்-பட்டதல்ல. அவர் மதுரையில் காங்கிரசு பிரதிநிதி என்று ஒப்புக் கொள்ளப்பட்டவருமல்ல. அங்குள்ள காங்கிரசு பார்ப்பனர் அல்லாதாருடைய வெறுப்புக்கு ஆளானவர். அப்படிப்-பட்டவர் அபாண்டமான ஒரு அறிக்கையை வெளியிட முன்வந்ததானது அவருடைய சம்பந்தத்தை உறுதிப்-படுத்தத்தக்கது ஆகும்.
தந்தை பெரியார் சொற்பொழிவில் இருந்து.

‘குடிஅரசு’ - 25.05.1946
இப்படி கலவரத்தைத் தூண்டிய காரண-கர்த்தா வைத்தியநாத அய்யரை, காப்பாற்றிய கர்த்தாவாகக் காட்டுவது உலகமகா மோசடியல்லவா? நரியைப் பரியாக்கிக் காட்டிய ஆரிய கூட்ட-மல்லவா? அதுதான் கலவரகர்த்தாவை காருண்ய கர்த்தாவாக காட்ட முயலுகிறது! ஆரிய பார்ப்பன இனப் புத்தி என்றைக்கும் மாறாதோ?
-உண்மை இதழ்,1-15.8.16

GATE - 2017 தேர்வு பற்றிய சில முதன்மைக் குறிப்புகள்

இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (அய்அய்டி), இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் (அய்அய்எஸ்சி) உள்பட நாட்டில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்களில் பொறியியல் முதுநிலைப் பட்டப்படிப்புகளில் சேருவதற்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வு கேட்(Graduate Aptitude Test in Engineering - GATE). சில கல்வி நிறுவனங்கள் கேட் தேர்வின் அடிப்படையில் பிஎச்டி படிப்புக்கும் மாணவர்களைத் தேர்வு செய்கின்றன.

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் அய்அய்எஸ்சி, ஏழு அய்அய்டிக்கள் இணைந்து இத்தேர்வை நடத்துகின்றன. வரும் ஆண்டு கேட் தேர்வை நடத்தும் பொறுப்பை ரூர்க்கி அய்அய்டி ஏற்றுக் கொண்டுள்ளது. கேட் தேர்வை எழுதி தகுதிபெறும் மாணவர்கள் முதுநிலை பொறியியல் தொழில்நுட்பப் படிப்புகளைப் படிக்க மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகமும் பல்வேறு கல்வி நிறுவனங்களும் வழங்கும் உதவித்தொகையைப் பெற முடியும்.


இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பஷேன், ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கமிஷன், பவர் கிரிட் கார்ப்பரேஷன் உள்ளிட்ட பல்வேறு பொதுத்-துறை நிறுவனங்களும் இத்தேர்வின் அடிப்படை-யில் தகுதியுடையவர்களை வேலைக்குத் தேர்வு செய்கின்றன. சில கல்வி நிறுவனங்கள் கேட் தேர்வு அடிப்படையில் மாணவர்களைச் சேர்க்கின்றன. நேர்முகத் தேர்வு நடத்தி மாணவர்களைச் சேர்க்கும் நிலை இருந்தால், கேட் தேர்வுகளுக்கு 70 சதவீத மதிப்பெண்களும் நேர்காணலுக்கு அல்லது படிப்பு மதிப்பெண்-களுக்கு 30 சதவீத மதிப்பெண்களும் ஒதுக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்-பட்டுள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வழங்கும் கல்வி உதவித் தொகை குறித்த விவரங்களை மாணவர்கள் சேர விரும்பும் கல்வி நிறுவனங்களில் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

கேபினெட் செக்ரட்டேரியேட்டில் சீனியர் ஃபீல்ட் ஆபீசர் (எஸ்.எஃப்ஓ டெலி), சீனியர் ரிசர்ச் ஆபீசர் (எஸ்.ஆர்ஓ) _ கிரிப்டோ, எஸ்ஆர்ஓ (எஸ் அண்ட் டி) போன்ற குருப் ஏ பிரிவு பணிகளுக்கு கேட் தேர்வு மூலம் நேரடியாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.

பொறியியல் படிக்கும் மாணவர்கள் இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கும்போதே இந்தத் தேர்வுக்கான ஆயத்த வேலைகளை தொடங்கிட வேண்டும். தேர்வுப் பாடத்-திட்டத்தைப் பார்த்து, அதில் நன்கு பயிற்சி பெற வேண்டும். இந்தத் தேர்வுக்குப் பயிற்சி அளிக்க தனியார் பயிற்சி (கோச்சிங்) மய்யங்கள் உள்ளன. அதில் சேர்ந்து பயிற்சி பெறலாம். கடந்த ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்வித் தாள்களைக் கொண்டு மாதிரித் தேர்வு எழுதிப் பார்க்கலாம்.

பிளஸ்டூ முடித்துவிட்டு அய்.அய்.டி.யில் சேர்ந்து படிக்க நினைத்து அதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு கேட் தேர்வு மற்றொரு வாய்ப்பு. இத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் அய்.அய்.டி. மட்டுமல்ல அய்.அய்.எஸ்சி, என்.அய்.டி., அய்.அய்.அய்.டி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் சேரலாம். அத்துடன் கல்வி உதவித் தொகையும் கிடைக்கும். கேட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்-கழகத்தில்கூட தனி இடங்கள் உள்ளன. பொதுத்துறை நிறுவனங்களிலும் வேலை-வாய்ப்பைப் பெற இது ஒரு வாய்ப்பாக இருக்கும்.

கேட் நுழைவுத் தேர்வை யார் எழுதலாம்?

என்ஜினீயரிங், டெக்னாலஜி, ஆர்க்கி-டெக்ச்சர், பார்மஸி ஆகிய பாடப் பிரிவுகளில் இளநிலைப் பட்டம் பெற்றவர்களும் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இந்த நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். அறிவியல் கணிதம், புள்ளியியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் போன்ற பாடப்பிரிவுகளில் முதுநிலைப் பட்டம் பெற்ற மாணவர்களும், அந்தப் பாடப்பிரிவுகளில் முதுநிலை பட்டப் படிப்புகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இந்த நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.

பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பாடப்பிரிவுகளில் ஒருங்கிணைந்த அய்ந்து ஆண்டு அல்லது டியூயல் டிகிரி படிப்பை முடித்த மாணவர்களும் இந்த நுழைவுத் தேர்வை எழுதலாம். பி.எஸ்.சி (ரிசர்ச்), பி.எஸ். போன்ற நான்கு ஆண்டு படிப்புகளைப் படித்த மாணவர்களும் அந்தப் பாடப்பிரிவுகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இத்தேர்வை எழுதலாம்.

பொறியியல், தொழில்நுட்ப இளநிலைப் பட்டப்படிப்புக்கு நிகரான ஏ.எம்அய்.இ., ஏ.எம்.அய்.சி.இ. போன்ற படிப்புகளைப் படித்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். பி.எஸ்சி., படிப்புக்குப் பிறகு ஒருங்கிணைந்த பொறியியல் அல்லது தொழில்நுட்ப நான்கு ஆண்டு முதுநிலைப் படிப்புகளைப் படித்த மாணவர்-களும் விண்ணப்பிக்கலாம். கேட் தேர்வு எழுத விண்ணப்பிப்பதற்கான தகுதி விவரங்களை கேட் இணைய தளத்தில் பார்த்து தெரிந்து-கொள்ளலாம்.

வரும் ஆண்டு கேட் தேர்வில் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?

எக்ஸ்.இ. (என்ஜினீயரிங் சயின்ஸ்) பிரிவில் அட்மாஸ்பெரிக் அண்ட் ஓசியோனிக் சயின்சஸ் பாடப்பிரிவு புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தைப் பதிவேற்றம் செய்வதற்கு விரல் ரேகையைப் பதிவு செய்யவேண்டும். பட்டம் பெற்றவர்கள் பட்டப்படிப்பை முடித்தற்கான சான்றிதழ், இறுதி ஆண்டு செமஸ்டர் மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றை ஸ்கேன் செய்து விண்ணப்பத்துடன் அப்லோடு செய்ய வேண்டும். இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் மூன்றாம் ஆண்டு (அய்ந்தாவது, ஆறாவது செமஸ்டர்கள்) மதிப்பெண் சான்றிதழை ஸ்கேன் செய்து அப்லோடு செய்ய வேண்டும். இதேபோலதான், மற்ற படிப்புகளுக்கும்.

இந்தத் தேர்வு முறை எப்படி இருக்கும்?

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4, 5, 11, 12 ஆகிய தேதிகளில் காலையிலும் மாலையிலும் இத்தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. கேட் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் எழுதலாம். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், கன்னியாகுமரி, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்செங்கோடு, திருவண்ணா-மலை, தூத்துக்குடி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் மற்றும் புதுச்சேரி ஆகிய நகரங்களில் எழுதலாம்.

இத்தேர்வு எழுதுவதற்கான அனுமதிக் கடிதம் (அட்மிட் கார்டு) தபால் மூலம் மாணவர்களுக்கு அனுப்பப்பட மாட்டாது. இணைய தளத்திலிருந்து டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும். தேர்வுக்கு வரும் மாணவர்கள் பாஸ்போர்ட், பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு உள்ளிட்ட ஏதேனும் ஓர் அடையாள அட்டையுடன் தேர்வுக்கு வரவேண்டும்.

23 பாடப் பிரிவுகளில் ஆன்லைன் மூலம் இத்தேர்வு நடத்தப்படும். ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங், அக்ரிகல்ச்சுரல் என்ஜினீயரிங், ஆர்க்கிடெக்ச்சர் அண்ட் பிளானிங், பயோ டெக்னாலஜி, சிவில், கெமிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்பர்மேஷன் டெக்னாலஜி, கெமிஸ்ட்ரி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் என்ஜினீயரிங், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், ஈக்காலஜி அண்ட் எவல்யூஷன், ஜியாலஜி அண்ட் ஜியோ பிசிக்ஸ், இன்ஸ்ட்ரு-மெண்டேஷன் என்ஜினீயரிங், கணிதம், மெக்கானிக்கல், மைனிங், மெட்டலர்ஜிக்கல் என்ஜினீயரிங், பெட்ரோலியம் என்ஜினீயரிங், இயற்பியல், புரடக்ஷன் அண்ட் இன்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங், டெக்ஸ்டைல் என்ஜினீயரிங் அண்ட் ஃபைபர் சயின்ஸ், என்ஜினீயரிங் சயின்சஸ், லைப் சயின்சஸ் ஆகிய பாடப் பிரிவுகளில் இத்தேர்வு இருக்கும். ஒரு மாணவர், ஏதாவது ஒரு பாடப்பிரிவில் மட்டுமே இத்தேர்வை எழுத அனுமதிக்கப்-படுவார்கள். அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் இருக்கும். வெர்ச்சுவல் ஸ்கிரீன் கால்குலேட்டரை பயன்படுத்த மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

அனைத்துத் தாள்களிலும் ஜெனரல் ஆப்டிட்யூட் (லாங்க்வேஜ் அண்ட் அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ்) குறித்த சில கேள்விகள் இருக்கும்.

எக்ஸ்இ தாளில் என்ஜினீயரிங் மேத்த-மேட்டிக்ஸ் பாடக் கேள்வித்தாளைக் கட்டாயமாக எழுத வேண்டும். புளூயிட் மெக்கானிக்ஸ், மெட்டீரியல் சயின்ஸ், சாலிட் மெக்கானிக்ஸ், தெர்மோ டைனமிக்ஸ், பாலிமர் சயின்ஸ் அண்ட் என்ஜினியரிங், ஃபுட் டெக்னலாஜி ஆகிய பாடப் பிரிவுகளிலிருந்து இரண்டு பாடங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

எக்ஸ்எல் தேர்வுத் தாளில் வேதியியல் பாட கேள்வித்தாளைக் கட்டாயமாக எழுத வேண்டும். அத்துடன் ஜெனரல் ஆப்டிட்டியூட் கேள்விகளும் இருக்கும். பயோ கெமிஸ்ட்ரி, தாவரவியல், மைக்ரோபயாலஜி, விலங்கியல், புட் டெக்னாலஜி ஆகிய பாடப் பிரிவுகளிலிருந்து இரண்டைத் தேர்வு செய்து அந்தப் பாட கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டும்.

மூன்று மணி நேரம் நடைபெறும் கேட் தேர்வில் 65 கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வுக்கு மதிப்பெண்கள் 100. மல்டிப்பிள் சாய்ஸ் கேள்விகள், நியூமரிக்கல் ஆன்சர் கேள்விகள் என்ற இரு முறைகளில் கேள்விகள் கேட்கப்படும். மல்டிப்பிள் சாய்ஸ் கேள்வி-களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் எது சரியானது என்பதை டிக் செய்ய வேண்டும். நியூமரிக்கல் ஆன்சர் கேள்விகளுக்கான விடையாக வரும் எண்களை வெர்ச்சவல் கீ பேடு மூலம் பதிவு செய்ய வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

கேட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். உரிய சான்றிதழ்களையும், ஆவணங்களையும் இணைய தளத்தில் அப்லோடு செய்ய வேண்டும். புகைப்-படத்தையும் கையெழுத்தையும்கூட ஆன்லைன் மூலம் அப்லோடு செய்ய வேண்டும்.

பெண் விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் ரூ.750. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.750. மற்றவர்களுக்குக் கட்டணம் ரூ. 1,500. விண்ணப்பக் கட்டணத்தையும் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும் அல்லது இ_செலான் மூலம் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தையோ ஆவணங்களையோ தபால் மூலம் அனுப்பி-வைக்கக் கூடாது.

வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கக் கடைசி தேதி 4.10.2016.

விவரங்களுக்கு: www.gate.iitr.ernet.in
-உண்மை இதழ்,1-15.8.16

உங்களுக்குத் தெரியுமா?-சுயமரியாதை வீரர் ராமச்சந்திரன்

சுயமரியாதை வீரர் ராமச்சந்திரன் (சேர்வை) தாழ்த்தப்பட்டோர் நடத்திய கூட்டங்களுக்கு ஜாதி வெறியர்களின் எதிர்ப்புகளை உதறித் தள்ளிவிட்டு, கையில் துப்பாக்கியுடன் வந்து கலந்து கொண்டவர் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
-உண்மை இதழ்,1-15.8.16

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் ஒரு அறக்கட்டளை நிறுவனமாக பதிவு

தந்தை பெரியார் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா செப்டம்பர் 15, 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்ற பொழுது, அய்யா, அம்மா, மறைவிற்கு பிறகு நீண்டகாலமாக நடைபெற்று வந்த ‘வருமான வரி’ வழக்கு மேல்முறையீட்டுக் குழு உச்சநீதிமன்றத்தில் தந்தை பெரியார் சார்பாகவும், சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பாகவும், பிரபல வருமானவரிச் சட்ட வழக்குரைஞர் எம்.உத்தம்-ரெட்டி அவர்களும், ஆடிட்டர் சுரேந்தர் அவர்களும் வழக்காடினார்கள்.

அந்த வழக்கில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தை ஒரு அறக்கட்டளை நிறுவனமாக, வருமான வரித்துறை இப்போது ஏற்றுக்கொண்டிருக்கிறது என்பதனை அன்று செய்தியாளர்களிடையே தெரிவித்தேன். அதனை ‘விடுதலை’ (28.8.1979) முதல் பக்கத்தில் பதிவு செய்திருந்தோம். அன்று முதல் இன்றுவரை வருமானவரி பிரச்சினையை மிகவும் விரிவான முறையில் பதிவு செய்து கொள்ளு-வது மிகவும் தேவையான ஒன்றாகிவிட்டது.

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துக்கு ‘வருமான வரிவிலக்கு’ பெற்ற வரலாறும், கழகத்திலிருந்து வெளியேற்றப்-பட்டவர்கள் செய்த துரோகமும் இங்கு பதிவு செய்கிறேன்.

தந்தை பெரியார் அவர்கள் 1920இல் பெரிய வியாபாரத்தை விட்டுவிட்டு பொது வாழ்க்கைக்கு வந்த வசதியாளரான அவர் எந்த வியாபாரத்திலும் ஈடுபட்டவர் அல்ல. எனவே, கணக்கில் காட்டாமல் மறைத்துவைக்க வேண்டிய வருமானம் (Undisclosed Income Sources)  என்று எதுவும் அவர்களை பொறுத்தவரை இருந்ததில்லை.

மாநாடுகளில் மிச்சப்படும் பணம் நன்கொடை, அன்பளிப்பு, பணம், தனது பங்குத் தொகை, தனது தந்தையார் அறக்கட்டளை-யாகிய “வெங்கட்டநாயக்கர் டிரஸ்ட்’’ சொத்துக்களில் அவரது பங்குமூலம் கிடைத்த தொகை எல்லாம் அவர் இயக்க சொத்தாக ஆக்கியவர், தனி வாழ்க்கை வேறு, இயக்க வாழ்க்கை வேறு என்ற தந்தை பெரியார் அவர்களுக்கு இரு வகையான வாழ்க்கை இல்லாத நிலையில், தனியே கணக்கு  என்பதெல்லாம் அவரைப் பொறுத்து காட்டத் தேவையே எழவில்லை.

அவரது தொண்டர்கள் அவர்மீது வைத்த நம்பிக்கை அசைக்க முடியாத நம்பிக்கை “அய்யாவுக்கு நாம் கொடுத்தோம். அதை அவர் எப்படிப் பயன்படுத்தினாலும் கொடுத்த பிறகு அது பற்றி சிந்திப்பதோ, கேள்வி கேட்பதோ நமது உரிமை அல்ல’’ என்ற தெளிவான எண்ணத்தில் உள்ள தோழர்களே அவர்களது தொண்டர்கள்.
போராட்டங்கள், இடையறாத சுற்றுப் பயணங்கள் _ இவைகளில் ஈடுபட்ட பெரியார் ஒரு வியாபார நிறுவனத்தைப்போல, தனியே கணக்காளர் எவரையும் வைத்து முறையான கணக்கு, தணிக்கை எதையும் வைத்துக்-கொள்ளும் நிலைக்கு ஆட்படாதவராகவே இருந்தார்.

தந்தை பெரியார் அவர்கள், அவருடைய சொந்த சொத்துக்கள், அவருக்கு அவற்றின் மூலம் கிடைத்த வருவாய், அசையா சொத்துக்களை விற்று அதன் மூலம் கிடைத்த தொகை, மக்கள் அவரது தொண்டினைப் போற்றி அய்யா அவர்களை மகிழ்ச்சி அடையச் செய்ய வேண்டி அவருக்கு அன்பளிப்பாகவும், நன்கொடையாகவும் கொடுத்த சொத்துக்கள் இவைகளை ஒரு அறக்கட்டளையாக்கி, தன்னுடைய சுயமரியாதைக் கொள்கைப் பிரச்சாரப் பெரும்பணிக்குப் பயன்படுவதற்காக, ஒரு நிறுவனமாகவே சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் 1952இல் பதிவு செய்தார்கள்.

இந்த அமைப்பினை அவர்கள் 1935-லேயே தோற்றுவித்து விட்டார். எனினும், சட்டபூர்வமாக பதிவு செய்தது 1952இல்தான்.

அதற்குக் காரணம் என்னவென்றால், அதில் அவர்களோடு நிர்வாகக் குழு உறுப்பினர்-களாகப் போடுவதற்கு அய்யாவின் முழு நம்பிக்கைக்கு உரியவர்களை கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி பல ஆண்டுகாலம் அவர்கள் தேடிக் கொண்டே இருந்ததுதான்
அய்யாவின் அடிச்சுவட்டில்.... 159  - கி.வீரமணி
-உண்மை இதழ்,1-15.8.16

ஜாதியை எப்படி ஒரு வகுப்பு (Class) ஆக அப்படியே கொள்ளுவது தவறல்ல-ஜஸ்டிஸ் வைத்தியலிங்கம்

ஜஸ்டிஸ் வைத்தியலிங்கம் அவர்கள் ஜாதியை எப்படி ஒரு வகுப்பு (Class) ஆக அப்படியே கொள்ளுவது தவறல்ல என்று தெளிவாகக் கூறியிருக்கிறார்.
1972 (1) S.C.C. 660-A.I.R. 1972 SC 1375
Justice Viadyalingam:

At Page 1395 in para 82:

“But in our opinion, though directive principles contained in Article 46 cannot be enforced by courts, article 15 (4) will have to be given effect to in order to assist the weaker sections of the citizens, as the State has been charged with such a duty. No doubt, we are aware that any provision made under this clause must be within the well defined limits and should not be on the basis of the caste alone. But it should not also be missed that a caste is also a class of citizens and that a caste as such may be socially and educationally backward. If after collecting the necessary data, it is found that the caste as a whole is socially and educationally backward, in our opinion, the reservation made for such persons will have to be upheld not withstanding the fact that a few individuals in that group may be both socially and educationally above the general average. There is no gain-saying the fact that there are numerous castes in the country. which are socially and educationally backward and therefore a suitable provision will have to be made by the State as charged in Article 15(4) to safeguard their interests, ///and further observed at page 339 in para 95 as follows:

“To conclude, though prima facie, the list of backward classes which is under attack before us, may be considered to be on the basis of caste, a closer examination will clearly show that it is only a description of the group following the particular occupations or professions, exhaustively referred to by the Commission. Even on the assumption, that the list is based exclusively on caste, it is clear from the materials before the commission and the reasons given by it in its report that the entire caste is socially and educationally backward and therefore their inclusion in the list of Backward Classes is warranted by Article 15(4). The groups mentioned there in have been included in the list of backward classes as they satisfy the various tests which have been laid down by this court for ascertaining the social and educational backwardness of a class
நீதிபதி வைத்தியலிங்கம் அவர்களின் தீர்ப்பின் தமிழாக்கம்

“ஆனால், எங்கள் கருத்தில், 46ஆவது பிரிவில் காணப்படும் நேரடிக் கொள்கைகளை, நீதிமன்றங்களால் நடைமுறைப்படுத்த முடியாதெனினும், 15(4)-வது பிரிவை குடிமக்களில் பலமற்ற பிரிவினர்க்கு உதவுவதே அரசின் கடமையாக இருப்பதால், அமுல் செய்ய வேண்டியுள்ளது. இந்த சட்டப்பிரிவில் செய்யப்படும் ஏற்பாடுகள் ஜாதி அடிப்படையில் மாத்திரம் இல்லாமல் நன்கு வரையறுக்கப்பட வேண்டுமென்பதையும் நாங்கள் உணர்ந்துள்-ளோம் என்பதிலும் அய்யமில்லை. ஆனால், ஒரு ஜாதி என்பது குடிமக்களிலேயே ஒரு வகுப்பு என்பதையும், அந்த ஜாதியானது சமுதாய ரீதியிலும், கல்வி ரீதியிலும் பிற்படுத்தப்பட்டதாக இருக்கக் கூடும் என்பதையும் ஒதுக்க முடியாது. தேவையான புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்ட பின்னர், ஒரு ஜாதி என்பது முழுமையாகவே சமுதாய _ கல்வி அடிப்படையில் பிற்படுத்தப்-பட்டிருப்பதாக அறிந்த பின்பும், அந்தக் குறிப்பிட்ட பகுதியினரில் மிகச் சிலர் சமுதாய கல்வி அடிப்படையில் சராசரிக்கு மேலான நிலையில் இருந்தாலுங்கூட, அந்த வகுப்பினருக்காக செய்யப்படுகின்ற ஒதுக்கீடுகள் நிலைக்க வேண்டுமென்பதே எங்கள் கருத்தாகும். நமது நாட்டில் எண்ணற்ற ஜாதிகள் சமுதாயரீதியிலும் கல்வி அடிப்படையிலும் பிற்படுத்தப்பட்டிருக்கின்றன; அவர்கள் பாதுகாப்புக்காக ஏற்ற நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்படவேண்டும் -_ அதாவது 15(4) பிரிவின்படி _ என்பதை மீண்டும் சொல்லத் தேவையில்லை... மேலும் 339ஆம் பக்கம் 95ஆவது பாராவில் அடியிற்கண்டவாறும் சொல்லியுள்ளார்.

முடிவாக, மேலோட்டமாக எங்கள் முன்பு தாக்குதலுக்குள்ளாகி வைக்கப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் ஜாதி அடிப்படையில்அமைந்துள்ளதாகத் தெரிந்தாலும், சற்று நெருங்கிப் பா£க்கும்போது, அது ஒரு கமிஷனில் குறிப்பிடப்படுவதுபோல ஒரு குறிப்பிட்ட தொழில் அல்லது அலுவலின் வர்ணனைதான் என்பது புரியும். அப்படி இந்தப் பட்டியல் முழுமையாக ஜாதி அடிப்படையில்-தான் அமைந்துள்ளது என்றே எடுத்துக்-கொண்டாலும், கமிஷன் முன் வைக்கப்-பட்டுள்ள ஆதாரங்கள் அதன் சிபாரிசுகள் ஆகியவற்றை அதன் அறிக்கையிலிருந்து காணும்போது இந்த ஜாதி முழுமையாக சமுதாய ரீதியிலும் கல்வி, அடிப்படையிலும் பிற்படுத்தப்-பட்டுள்ளது; அதனால் 15(4)வது பிரிவின்படிப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்-படத்தக்கது என்பது தெளிவாகிறது. பிற்படுத்தப்-பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள இந்த குழுக்கள் இந்த நீதிமன்றத்தில் அவர்களின் சமுதாய கல்வித் துறைகளின் பிற்படுத்தப்பட்ட தன்மைகளை நிச்சயிக்கச் செய்யப்பட்ட பல தேர்வுகளிலும் தேறி வந்துள்ளன.’’

இவ்வளவு தெளிவாக இருப்பதைப் போட்டு எவ்வளவு குழப்ப வேண்டுமோ அவ்வளவு குழப்புவதா? என்று நீதிபதி அவர்கள், அவரது தீர்ப்பில் கூறியிருக்கிறார் என்பதை எடுத்துக்-காட்டி விளக்கினேன்.
அய்யாவின் அடிச்சுவட்டில்.... 159  - கி.வீரமணி(ஒரு பகுதி)
-உண்மை இதழ்,1-15.8.16

வாரிசுச் சான்றிதழ்


ஆர்.கிருஷ்ணமூர்த்தி M.A(Police Administration) B.L
உலகம் என்றால் உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களின் கலவை. இதில் உயிருள்ள அனைத்து ஜீவராசிகளும் அழியாமல் இருக்க வேண்டுமென்றால் அதன் வாரிசுகள் தொன்றுதொட்டு உயிர்வாழ வேண்டும். எல்லா ஜீவராசிகளில் உயர்வாக கருதப்படுவது ஆறறிவு படைத்த மனிதனைத்தான். இதையே நம்முடைய ஔவை பாட்டி அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது’’ என்று மிகப்பெரிய விஷயத்தை எளிதாக சொல்லிவிட்டு போயிருக்கிறார்.
இப்படிப்பட்ட மனிதன் தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்வதுதான் சிறப்பு. பிறருக்காக வாழ்வது மட்டுமல்லாமல், உலகம் அழியாமல் நிலைத்து இருக்க தன்னுடைய வாரிசுகளை உருவாக்க வேண்டுமென்பதே மனித நீதியாகும். தன்னுடைய வாரிசுகளுக்குத் தேவையான அனைத்தும், அனைத்து வாரிசுகளுக்கும் சரிசமமாக பிரித்துக் கொடுத்துவிட்டால் ஒரு பிரச்சினையு-மில்லை. பிரித்துக் கொடுக்கவில்லை-யென்றால் தான் பிரச்சினைகளே வருகின்றன.
இவ்வாறு தன்னுடைய வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு உழைத்து கொஞ்சகொஞ்சமாக சேர்த்து வைக்கும் சொத்துக்களை அவர்-களுடைய வாரிசுகளுக்கு பிரித்து சரிசமமாக கொடுத்தோ (அ) கொடுக்காமலோ இறந்து-விட்டால் அவருடைய இறப்புச் சான்றிதழ் பெற்றுக்கொண்ட பிறகு வாரிசுச் சான்றிதழ் பெற விண்ணப்பம் செய்ய வேண்டும்.
இந்த வாரிசுச் சான்றிதழ் எதற்கு என்றால் தாய் தந்தையர் மற்றும் மூதாதையர் தங்களுடைய வாழ்நாள் முழுவதும் கஷ்டப்-பட்டு சேர்த்து வைத்த அசையும் மற்றும் அசையா சொத்துக்களை தன்னுடைய வாரிசு-களுக்கு முறையாகக் கொண்டு செல்வதற்கு பயன்படும். வாரிசுச் சான்றிதழ் இல்லை-யென்றால் வாரிசுகளே அல்லாதவர்கள் தாய் தந்தையர் மற்றும் மூதாதையர் சொத்துக்களை அபகரித்துக் கொள்வதோடு முறையான வாரிசுகளுக்கு சென்று சேராது.
முறையான வாரிசுகள் அல்லாதவர்கள் போலியான வாரிசுச் சான்றிதழ்களைப் பெற்று சிலர் சொத்துக்களை அபகரித்துக் கொண்டார்கள் என்று நீதிமன்றங்களுக்கு வழக்குகள் வருகின்றன. இப்படிப்பட்ட பிரச்சினைகளை தவிர்க்க வேண்டுமென்றால் வாரிசுச் சான்றிதழ்களை முறையாக எப்படி பெறுவது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
முதலில் இறந்தவரின் இறப்புச் சான்றிதழுக்கு மனு செய்து இறப்புச் சான்றிதழ் வாங்கிய பின்பு இறந்தவரின் வாரிசுகளில் யாராவது ஒருவர் வாழும் இடத்திற்கு அருகாமையிலுள்ள வட்டாட்சியர் அலுவலகத்திலோ (அ) இறந்தவர் கடைசியாக வாழ்ந்த இடத்திற்கு அருகாமையிலுள்ள வட்டாட்சியர் அலுவலகத்திலோ வாரிசுச் சான்றிதழ் வழங்கும்படி மனு செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்யும் மனுவில் ரூ.2க்கான நீதிமன்ற வில்லையை ஒட்டி, பிறகு இறந்தவரின் பெயர் மற்றும் தந்தை பெயர் (அ) கணவர் பெயரை தெளிவாக எழுத வேண்டும். பிறகு இறந்த தேதி, இறந்தவருக்கு உண்டான மனைவி, தாய், தந்தையர், பிள்ளைகளின் பெயர்கள், வயது, பிள்ளைகள் திருமணம் ஆனவரா (அ) திருமணம் ஆகாதவரா, இறந்தவருக்கு உண்டான உறவு முறையையும் தெளிவாக எழுதி, அனைத்து விவரங்களையும் குறிப்பிட்டுள்ளோமா என்பதையும் சரிபார்த்துக்-கொள்ள வேண்டும்.
வாரிசுச் சான்றிதழ் மனுசெய்யும் போதே இறந்தவரின் பெயரில் இருக்கும் மின்சார இணைப்பு, சொத்துவரி, சொத்துக்கான பெயர் மாற்றம், பட்டா மாற்றம், தொலைப்பேசி இணைப்பு, வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை வாரிசுகளுக்கு மாற்ற, பங்குகளை மாற்ற, இன்னும் பல இறந்தவரின் வாரிசுகளுக்கு பெயர் மாற்றம் செய்ய வாரிசுச் சான்றிதழ் தேவைப்படுகிறது.
மேற்கூறிய அனைத்தின் நகல்களையும், இறப்புச் சான்றிதழ், குடும்ப அட்டை போன்றவற்றின் நகல்களையும் வாரிசுச் சான்றிதழ் மனுவுடன் சேர்த்து உரிய வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு பெறப்படும் வாரிசுச் சான்றிதழ் மனுவைப் பெற்றுக்கொண்டு ரசீது வழங்குவார்கள். அதோடு உங்கள் வாரிசுச் சான்றிதழ் மனுவின் அடிப்படையில் கிராம நிர்வாக அதிகாரிகள் மூலமாக அல்லது வருவாய் ஆய்வாளர் (ஸிமி) மூலமாக விசாரணை மேற்கொண்டு விசாரணையின் அடிப்படையில் அறிக்கை தயார் செய்து, அறிக்கையை வட்டாட்சியரிடம் வழங்குவார்கள். மேற்கூறிய விசாரணை அறிக்கையின் அடிப்படையில் வட்டாட்சியர் வாரிசுச் சான்றிதழ் வழங்கலாம் என உத்தரவு பிறப்பிப்பார்கள். இந்த உத்தரவின் அடிப்படையில் வாரிசுச் சான்றிதழ் முறையான வாரிசுகளுக்கு வழங்குவார்கள். இறந்தவருக்கு வாரிசுகளே இல்லாத போது உறவினர்கள் கூட வாரிசுச் சான்றிதழுக்கு விண்ணப்பம் செய்யலாம். இதைப்பற்றி Hindu Succession Act இல் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முறையான வாரிசுகளுக்கு வாரிசுச் சான்றிதழ் வழங்கமுடியாது என்று சொல்ல வாய்ப்பில்லை. அவ்வாறு சொல்லும்பட்சத்தில் நீதிமன்றம் மூலம் தீர்வு பெற்றுக்கொள்ளலாம்
-உண்மை,16-31.7.16.