Sunday 31 December 2023

பறைச்சிகள் எல்லாம் இரவிக்கை கட்டியதால் தான் துணி விலை கூடியது", எனப் பெரியார் சொன்னதாகச் சமூக வலைத் தளங்களில் சிலர் பரப்பும் தவறான கருத்து

"பறைச்சிகள் எல்லாம் இரவிக்கை கட்டியதால் தான் துணி விலை கூடியது", எனப் பெரியார் சொன்னதாகச் சமூக வலைத் தளங்களில் சிலர் தவறான கருத்தைப் பரப்பி வருகின்றனர். அதற்கான விளக்கம்: 

வேலூர் நாராயணன் அவர்கள் சென்னை மாநகர மேயராக இருந்த சமயம். வேலூர் நாராயணன் அவர்கள் மகனுக்கும், அமைச்சர் சத்யவாணி முத்து அம்மையார் அவர்கள் மகளுக்கும் இடையே திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இருந்தது. அதனை விரும்பாமல் ஜாதிப் பெயரை சொல்லி மேயர் திட்டியதாக ஒரு பிரச்சினை வெடித்தது. 

அந்தச் சூழலில் வேலூர் நாராயணன் அவர்கள் தம் பிறந்த நாள் விழாவில், தந்தை பெரியார் அவர்களை உரையாற்றிட அழைத்திருந்தார். இந்தக் கூட்டத்தின் பின்னணியை அறிந்த தந்தை பெரியார் அவர்கள், பொதுக் கூட்டத்திலேயே விவரங்களைப் போட்டு உடைத்து விட்டார். 

வேலூர் நாராயணன் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர். அப்படியெல்லாம் சொல்லியிருக்க மாட்டார். ஒருக்கால் அப்படி சொல்லியிருந்தால் அவர் தி.மு.க.வில் இருப்பதற்கே லாயக்கற்றவர் என்று கடுமையாகப் பேசினார் தந்தை பெரியார்.

அக்கூட்டத்தில் பேசிய தந்தை பெரியார் அவர்கள், ஜாதியைப் பற்றிப் பேசுகிறவர் அத்தனைப் பேரும் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகனே என்று கூறினார். என்னைப் பொறுத்தவரை நான் பறையனாக இருப்பதைக் கேவலமாகக் கருதவில்லை. சூத்திரனாக இருப்பதையே கேவலமாகக் கருதுகிறேன். எனக்குப் பிள்ளை இல்லை. ஒரு சமயம் பிள்ளை இருந்தால், அதுவும் பெண்ணாக இருந்தால், மாண்புமிகு சத்தியவாணி முத்து அம்மையார் மகனுக்குக் கொடுத்திருப்பேன் அல்லது சிவராஜ் மகனுக்குக் கொடுத்திருப்பேன். 

காதல் மணம் வேண்டுமென்கிற நீ இப்படி சொல்லலாமா என்று கேட்பீர்கள். காதல் ஏற்படும் முன்பே சொல்லி விடுவேன். இதேபோல் தாழ்ந்த ஜாதிப் பையன்களாகப் பார்த்து காதல் செய் என்று சொல்லி விடுவேன்", என்று சென்னை அயன்புரத்தில் நடைபெற்ற அந்தப் பொதுக் கூட்டத்தில்  (11.12.1968) பேசினார். 

மேலும் அவர் பேசுகையில், நான் பறையன் எனக் கேவலமாகச் சொன்னதாக தாழ்த்தப்பட்ட மக்களிடம் சொல்லியிருக்கிறார்கள். நான் பல தடவை இந்தச் சொல்லை சொன்னாலும், அதை ஒழிப்பதற்காக சொன்னது தான். 

எலெக்சன் நேரத்தில் இப்படியெல்லாம் செய்வது சாதாரணம். எலெக்சன் போது, "ராமசாமி நாயக்கர் பறைச்சியெல்லாம் ரவிக்கை போட்டுக் கொண்டார்கள் என்று தாழ்த்தப்பட்ட பெண்களைக் கேவலமாக சொன்னார் என்று விளம்பர நோட்டீஸ்களெல்லாம் போட்டு, தாழ்த்தப்பட்ட மக்கள் அவர் ஆதரிக்கிற கட்சிக்கு ஓட்டுப் போடாதீர்கள்", என்று வால் போஸ்டர்கள் ஒட்டி இருக்கிறார்கள். 

நான் சொன்னது உண்மைதான். நான் தாழ்த்தப்பட்ட பெண்கள் இதற்கு முன் ரவிக்கை போடக் கூடாது; போட்டால் அடிப்பார்கள். மேலே துணியே போகக்கூடாது. அப்படி இருந்த சமுதாயம் காலம் மாறுபாட்டால் எப்படி ஆகி இருக்கிறது; இன்றைக்கு ரவிக்கை இல்லாமல் பார்க்க முடியவில்லையென்று சொன்னேன். 

இதைக் கொண்டு அந்த இன மக்களை எனக்கு விரோதமாகத் தூண்டவும், நான் ஆதரிக்கின்ற கட்சிக்கு ஓட்டுப் போடாமல் செய்வதற்காகக் கிளப்பி விடப்பட்டதேயாகும்".

தரவு:

கவிஞர் கலி.பூங்குன்றன்,
துணைத் தலைவர்,
திராவிடர் கழகம்.
- இசை இன்பன் முகநூல் பதிவு

Wednesday 27 December 2023

ரயில்வேக்களில் ஜாதி பேத அடையாளங்கள் நீக்கப்பட்டதை பாராட்டி ரயில்வே சங்கத்திற்கு பெரியார் கடிதம்

சட்டமன்ற உறுப்பினர் நா.எழிலன் முகநூல் பதிவு 

தந்தை பெரியார் எனது தாத்தாவிற்கு எழுதிய கடிதங்களில் சில...

(V.Ramachandran - One of the founder of S.R.M.U Southern Railway Mens Union & Railway Chief Commercial Controller,Trichy)

Date 22.3.41

My dear Ramachandran,

உங்களுடைய கடிதங்களும், தந்தியும் கிடைத்தன. அவற்றிற்கு ஆக எனது மனமார்ந்த நன்றியறிதலை செலுத்துகிறேன். 

ரயில்வேக்களில் ஜாதி பேத அடையாளங்கள் நீக்கப்பட்டன என்பது மிகவும் பாரட்டப்பட்டதும் குறிப்பிடத் தகுந்ததுமான ஒரு வெற்றியேயாகும்.

இதற்கு காரணம் தமிழர்களின் ஒருமித்த உணர்ச்சியே ஆகும். இதுபோலவே மற்றும் நியாயமான விஷயங்களிலும் உரிமைகளிலும் உணர்ச்சிகளுக்கு போராடினோமேயானால் வெற்றி பெறலாம் என்பதில் அய்யமில்லை.

தங்கள் அன்புடைய,
ஈ.வெ.ராமசாமி ❤❤

(குறிப்பு: ரயில் நிலையங்களில் தண்ணீர் குடிப்பதற்கு இரண்டு பானை முறை இருந்துள்ளது.  ஆதிக்க சாதி பானைகளை கீழே போட்டு உடைத்தது தான்
SRMU வின் முதல் போராட்டமாக இருந்துள்ளது. அதை பாராட்டி பெரியார் அவர்கள் எழுதிய கடிதம் இது).

Saturday 2 December 2023

சூத்திரர்கள் வணங்க வேண்டிய கடவுள் எது?


சிற்றிலக்கியங்களில் நீதி நூல்கள் வரிசையில் 230 ஆண்டுகளுக்கு முன் 'குருபாததாசர்' என்பவரால் இயற்றப்பட்ட 'குமரேச சதகம்' என்ற நீதி நூலில், பெண் அடிமைத்தனமும், சூத்திரர்களுக்கான அடிமைத் தன்மையும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

"காதல் உறு கற்பு உடைய மங்கையர் தமக்கு எலாம் கணவனே மிக்க தெய்வம் மாதையையினால் சூத்திர் களுக்கு மறையோர் தெய்வம்"

- குமரேச சதகம், பாடல்: 8

பெண்களுக்கு தெய்வம் கணவன் என்றும், சூத்திரர் களுக்கு (தாழ்ந்தவர்) தெய்வம் பார்ப்பனர் (மறையோர்) என்றும் 8ஆவது பாடலில் குறிப்பிடப்படுகிறது.

அதேபோல் 10ஆவது பாடலில் பண்புகளைப் பற்றி கூறும் போது

"மிலேச்சருக்கு நிறையது இல்லை

வரு புலையற்கு இரக்கம் இல்லை"

- குமரேச சதகம், பாடல்:10

மிலேச்சருக்கு (இழிந்தவர்) ஒழுக்கம் இல்லை; புலையருக்கு (கீழ் மக்கள்) இரக்கமில்லை என்றும் கூறுகிறது.

பெண்கள் கணவனைத் தான் வணங்க வேண்டும். சூத்திரர்கள் பார்ப்பானைத் தான் வணங்க வேண்டும். நேரடியாக கடவுளை வணங்கக் கூடாது என்றும், பிறப்பின் அடிப்படையிலேயே பண்புகளைக் கூறும். இப்படிப்பட்ட இலக்கிய படைப் புகளுக்கு காரணம் ஆரிய பார்ப்பன கலாச்சார உள்நுழைவே ஆகும். அதாவது ஸநாதன கோட்பாடுகளே ஆகும். ஆரிய ஸநா தன கோட்பாடுகள் தமிழ் இலக்கியங்களில் நிறைந்து உள்ளதால் தான் தந்தை பெரியார் அவர்கள் 'தமிழ் காட்டு மிராண்டி மொழி' என்று சொன்னார். இலக்கியத்தின் செழுமை தான் மொழிக்கு சிறப்பு; இலக்கியம் காட்டுமிராண்டித்தனமாக இராமல் மக்க ளைப் பண்படுத்தும் தன்மையில் அமைய வேண்டும்! அமைக்கப்பட வேண்டும்! 

-செ.ர.பார்த்தசாரதி,  

நுங்கம்பாக்கம் , சென்னை -34