Showing posts with label திருமணம். Show all posts
Showing posts with label திருமணம். Show all posts

Thursday, 4 July 2024

வில்லிவாக்கம் அ.குணசீலன்- கு. தங்கமணி இணையரின் மகள் கு.அறிவுமணி இணையேற்பு

 


2024 அய்யாவின் அடிச்சுவட்டில் ஜுலை1-15-2024

வில்லிவாக்கம் அ.குணசீலன்- கு. தங்கமணி இணையரின் மகள் கு.அறிவுமணி மற்றும் சூளைமேடு பாலன்- சரோஜா இணையரின் மகன் பார்த்திபன் ஆகியோரின் இணையேற்பு நிகழ்வு 22.5.2005 அன்று ஞாயிறு காலை 7 மணிக்கு சென்னை அரும்பாக்கம் ஏ.எஸ்.ஆர். திருமண மண்டபத்தில் நடந்தது. 25.5.2005 புதன்கிழமை காலை 9.45 மணிக்கு, எமது இணையர் மோகனா அம்மாள் அவர்களுடன் மணமக்களின் இல்லத்திற்குச் சென்று மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தோம்.

Wednesday, 3 July 2024

கொடுங்கையூர் ரா.தனலட்சுமி _ கோ.தங்கமணி அவர்களின் வாழ்க்கை ஒப்பந்த விழா!

 

இயக்க வரலாறான தன் வரலாறு(236) : நெஞ்சில் நிலைக்கும் தஞ்சை சமூகநீதி மாநாடு

அய்யாவின் அடிச்சுவட்டில்…

கி. வீரமணி


கழகத்தோழர் கொடுங்கையூர் ரா.தனலட்சுமி –

கோ.தங்கமணி வாழ்க்கை இணையேற்பு ஒளிப்படம்

29.4.1990 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற கொடுங்கையூர் ரா.தனலட்சுமி _ கோ.தங்கமணி அவர்களின் வாழ்க்கை ஒப்பந்த விழாவுக்குக் தலைமையேற்று நடத்தி வைத்தேன். விழாவில் கவிஞர் கலி.பூங்குன்றன் வாழ்த்துரை வழங்கினார்.

 பெரியார் திடலில் ரா.தனலட்சுமி – கோ.தங்கமணி வாழ்க்கை ஒப்பந்த விழா ஆசிரியர் தலைமையில் நடைபெறும் காட்சி


Friday, 14 October 2022

பூ.சுந்தரம்_பா.ஆனந்தி ஆகியோரின் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா

 

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (276)

செப்டம்பர் 1-15,2021

முத்தமிழ் மன்றத்தின் மூன்று நாள் விழா

கி.வீரமணி

கட்டுரையின் ஒரு பகுதி....




செங்கல்பட்டு சின்னம்மன் கோயில் தெரு பாலகிருஷ்ணா திருமண மண்டபத்தில் மணமக்கள் பூ.சுந்தரம்_பா.ஆனந்தி ஆகியோரின் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழாவினை தலைமையேற்று 9.2.1997 அன்று நடத்திவைத்தேன். மணமக்கள் இருவரும் முழுமையான சுயமரியாதைத் திருமண முறையில் மாலை மாற்றிக் கொண்டனர். அவர்களை வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த உறுதி மொழியைக் கூறச் செய்து, வந்திருந்தவரின் கைத்தட்டலுக்குமிடையே நடத்தி வைத்து சிறப்புரையாற்றினேன். விழாவில் அனைத்துக் கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டனர். கழகப் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Sunday, 29 May 2022

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் திருமண உதவித்தொகை ரொக்கமாக கிடைக்கும்


சென்னை, மே 29  தமிழ்நாடு அரசின் அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: திருமண நிதியுதவி திட்டத்தின் மூலம் தற்போது பாதி தொகை ரொக்கமாகவும், மீதமுள்ள தொகை தேசிய சேமிப்புப் பத்திரமாகவும் வழங்கப்படுகிறது. 

இந்த முறையை மாற்றி முழுத் தொகையையும் ரொக்க மாக வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம் வழங்கப்படும் திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ் பட்டயப் படிப்பு மற்றும் பட்டப்படிப்பு படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு 50 ஆயிரம் மற்றும் ஏனைய மாற்றுத்திறனாளிகளுக்கு ₹25 ஆயிரம் என வழங்கப் பட்டு வந்த திருமண உதவித் தொகை தற்போது பயனாளி களுக்கு முழு தொகையையும் ரொக்கமாக வழங்க அரசு ஆணையிடுகிறது.

Monday, 19 July 2021

பெரியார் மணியம்மை திருமணமும் - ஆடைகளற்ற கேள்விகளும்..



பெரியார்-மணியம்மை திருமணம் பற்றி பல்வேறு விளக்கம் அளிக்கப்பட்டாலும், அந்தத் திருமணம் பற்றிய விசமக் கேள்வி அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆடையின்றி சுற்றுகிறது. பெரியார் தன் மகள் வயதில் இருக்கும் பெண்ணை மணந்து கொண்ட ஒழுக்கமற்றவர் என்றும், அப்படியே அவரது சொத்துக்களை பாதுகாக்கத்தான் என்றால் மகளாக தத்தெடுத்திருக்கலாமே.. அதை விட்டு திருமணம் என்பது அவரின் வக்கிரத்தைக் காட்டுகிறது எனச் சில புனித மனிதர்கள் கேட்கிறார்கள். பெரியாரின் கொள்கைகளை விமர்சிக்க இயலாதோருக்கும், அந்தரங்கத் திரை அகற்றி அரசியல் ஆய்வு மையம் நடத்துகிறோர்க்கும் இந்தப் பதிவு சமர்ப்பணம்.

periyar and maniammaiபெரியாரைப் பொருத்தவரை சமூகத் தொண்டு செய்ய குடும்பம் தொல்லையாக இருக்கும் எனக் கருதியவர். அதை முதல் மனைவி நாகம்மாளின் மறைவின் போது அவர் வெளியிட்ட உருக்கமான 'இரங்கல்' அறிக்கையில் அறியலாம். அப்படி இருக்கையில் முதல் மனைவி இறந்து 16 ஆண்டுகள் கழித்து இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன வந்தது அந்த 70 வயது கிழவருக்கு?

அதற்கு அன்றைய களச்சூழலோடு இந்தக் கேள்வியைப் பொருத்திப் பார்ப்பது அவசியமானது.

தனது வயது முதிர்வின் காரணமாக தன் சொந்த சொத்துக்களையும், தன் சிந்தாந்தங்களைத் தொடர்ந்து எடுத்துச் செல்லவும், பாதுகாக்கவும் ஒருவரை நியமிக்க நினைத்தார் பெரியார். அர்ஜுனன் என்பவரைத் தத்தெடுக்க நினைத்தார். ஆனால் அவர் இறந்துவிட்டதார். 1948ல் ஈரோட்டில் நடந்த மாநாட்டில் தனக்குப் பிறகு அண்ணாதான் இயக்கத்தை வழிநடத்தப் போகிறார், ஆதலால் "பெட்டிச்சாவியை அண்ணாவிடம் தந்துவிடப் போவதாக அறிவித்தார்". ஆனால் அண்ணாவோ தேர்தல் அரசியலைக் கையில் எடுக்கத் தொடங்கியதால் அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டார் பெரியார்.

ஈ.வெ.கி சம்பத்தை தத்தெடுக்கலாம் எனத் துணிந்தவருக்கு மீண்டும் ஏமாற்றமே. சம்பத் அண்ணாவோடு தேர்தல் பயணத்தில் நுழைந்துவிட்டார். எனவே தன்னை ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக கவனித்து வந்த எழுத்தாளரும், பேச்சாளரும், திராவிடக் கொள்கையாளரும், தமிழ் இலக்கியத்தில் புலமை பெற்றவருமான மணியம்மையால் இந்த இயக்கத்தையும், தன் சொத்துகளையும் தொடர்ந்து எடுத்துச் செல்ல முடியும் என எண்ணினார். அவர் ஏன் இயக்கத்தில் வேறு யாரையுமே தேர்வு செய்யவில்லை என்பதற்குப் பெரியாரின் பதில்,

"என்னைச் சுற்றியிருக்கும் தோழர்களிடம் நான் எவ்வளவு சகிப்புத்தன்மையோடு பழகினாலும் அவைகளை என் பலவீனமாகவும் ஏமாந்ததனமாகவும் கருதிக் கொண்டு நான் பயப்படும் வண்ணமாய் பெரிதும் அவநம்பிக்கை கொள்ளும் வண்ணமுமாய் நடந்து வருவதை உணர்கிறேன்".

எனவே அவரின் நம்பிக்கையான ஒரே தேர்வு மணியம்மை மட்டும்தான்.

பெரியார் மணியம்மையை மணப்பது சட்டப்படி தன் வாரிசாக அறிவிக்கத்தான். அதன் மூலம் இயக்கத்தையும், சொத்துக்களையும் பாதுகாக்கத்தான். இந்துமதச் சட்டம் "கடவுள் மறுப்பாளர்"களும் இந்துக்கள்தான் என வரையறுத்ததால், காலம் முழுதும் எதிர்த்துப் போராடிய இந்து மதச் சட்டத்திற்கு உட்பட்டே அந்தத் திருமணம் நடக்க வேண்டியிருந்தது.

அப்படியானால் அவர் ஏன் மதம் மாறவில்லை என்பதுதான் உங்கள் அடுத்த கேள்வியாக இருக்கும். அம்பேத்கர் பவுத்த மதம் தழுவியபோது பெரியார் மாறவில்லை. காரணம் இந்து மதத்திற்குள்ளேயே இருந்தால்தான் இதன் இழிவுகளை சுட்டிக் காட்ட முடியும். மதம் மாறினால் இது சாத்தியப்படாது எனத் திடமாக நம்பினார்.

அப்போதைய இந்து மதச் சட்டத்தின் படி, "பெண்ணுக்கு தத்தெடுக்கவும், தத்து போகவும் உரிமையில்லை" என்பதால் பெரியாரால் மணியம்மையைத் தத்தெடுக்க இயலாமல் மணந்துகொள்ள நேரிட்டது.

70 வயதை அடைந்திருந்த பெரியார் உடலியல் தேவையால்தான் மணந்துகொண்டார் என்பது ஏற்புடைய வாதமில்லை. ஒருவேளை உடலியல் தேவைதான் பிரதானம் என்றால் அதை மணந்து கொள்ளாமலே அடைந்திருக்க முடியும். அவரது படுக்கையறையை யாரும் தாழுடைத்து பார்க்கப் போவதில்லை. எல்லாவற்றையும் விட முதன்மையானது அது மணியம்மையாரின் முழுச் சம்மதத்தோடு அரங்கேறிய திருமணம்.

இந்தத் திருமணத்தால்தான் திமுக உதயமானது எனச் சொல்கிறவர்கள் நுனிப்புல் பிரியர்கள். அண்ணா பிரிய இதுவும் ஒரு காரணம். இத்திருமணம் நடக்கவில்லை என்றாலும் திமுக தோன்றியிருக்கும் என்பதுதான் வரலாறு சொல்லும் செய்தி.

அண்ணா சில காலமாக பெரியாரோடு நட்பு முரண் கொண்டிருந்தார். பெரியார் எதையும் திடமாக எதிர்ப்பவர். அவரது இயக்க அரசியலை அது பாதிக்காது. அண்ணா தேர்தல் பாதையைத் தீர்மானித்தபோது பொதுப்புத்தியோடும், பொதுமக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்க வேண்டிய அவசியமும் உண்டாயிற்று. அதனால்தான் கடவுள் மறுப்பிலிருந்து "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" எனச் சொல்ல வேண்டிற்று.

அதுபோலத் தான் 70 வயது கிழவர் தன்னைவிட 40 வயது குறைந்த பெண்ணை மறுமணம் செய்துகொள்வது பொதுமக்கள் மத்தியில் அவப்பெயர் உண்டாக்கக் கூடும் என அண்ணா கருதினார். திமுக உதித்தது. பெரியார் இவைகளைப் பற்றி கவலைப்படவில்லை. பேராசிரியர் சுபவீ சொல்லுவார் "பெரியார் 24 காரட் தங்கம், அண்ணா 22 காரட் தங்கம்". சுத்தமான 24 காரட்டை வைத்து நகை செய்ய இயலாது. 22 காரட்டை வைத்துதான் நகை செய்ய இயலும் என்று. இருவருக்கும் ஒரே இலக்குதான் சமமான சமூகத்தை கட்டியமைப்பது. ஆனால் பாதைதான் வேறுவேறு.

பெரியார்-மணியம்மை திருமணத்தில் இருந்த சட்ட சிக்கல்கல்களை உணராத எங்கள் தலைமுறை பெரியாரைப் பழிக்கத் துணிகின்றனர். ஒரு தலைவரை விமர்சிக்க குறைந்தபட்ச நாகரிகத்தைக் கையாளுங்கள். இனியாவது உங்கள் கேள்விகளுக்கு ஆடைகட்டுங்கள். இல்லையேல் உங்கள் கூட்டத்திற்கு மக்கள் பாடை கட்டி விடுவார்கள்
. — with Ramasamy Gopalan.
Lakshmanan SK shared 👍
பகுத்தறிவாளர்கள் vs மதவாதிகள்
முகநூல் பதிவு

Monday, 26 April 2021

ஆசிரியர் மகள் வீ.கவிதா - நா.மாறன் திருமணம்

எங்கள் இல்லத் திருமணத்தில் என் மகள்வீ.கவிதா - நா.மாறனுக்கு வாழ்த்து கூறும்இரு வீட்டார் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள்

எங்கள் இல்லத்து திருமணமான எங்கள் மகள் வீ.கவிதாவுக்கும், சிங்கப்பூர் தொழிலதிபரும், சிங்கப்பூர் திராவிடர் கழகப் பிரமுகருமான நாகரத்தினம் அவர்களின் மகன் நா.மாறனுக்கும் வல்லத்தில் 12.11.1995 அன்று பெரியார் மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் எளிமையாக குடும்ப நண்பர்கள், இயக்க முக்கியப் பொறுப்பாளர்கள், கேள்வியுற்று கலந்துகொண்ட சான்றோர் பெருமக்கள் ஆகியோரது முன்னிலையில், கழகப் பொருளாளர் மானமிகு கா.மா.குப்புசாமி அவர்களது தலைமையில், இந்தியன் வங்கியின் தலைவரும் செயல் இயக்குநருமான எம்.கோபாலகிருட்டினன் அவர்கள் முன்னிலையில் எளிமையாக நடைபெற்றது.

எனது இல்லத்து திருமணத்துக்காக தனி அழைப்பிதழ் அச்சிட்டு அனைவரையும் அழைக்கவில்லையே என பல நண்பர்களும் இயக்கத்தவர்களும் வருத்தமுற்றனர். எங்களுக்கு மற்றவர்களை அலட்சியப்படுத்துவதோ, புறக்கணிப்பதோ நோக்கமல்ல. பெரியார் தொண்டர்களாக வாழும் நாம், அய்யாவின் கொள்கை வயப்பட்டு அதில் சிறிதும் வழுவாது வாழுகிறோம் என்பதை நிலைநாட்டுவதில் சிக்கனம், ஆடம்பரத் தவிர்ப்பு மிகவும் முக்கியம் அல்லவா? ஆகவே அந்த சுயமரியாதைத் திருமணத்தை பெரிய விளம்பரமின்றி நடத்தினோம்.

திருமணத்தைச் சிறப்பாக நடத்த உதவிய மானமிகு ராசகிரி கோ.தங்கராசு, சாமி.நாகராசன், பேராசிரியர்கள் நல்.ராமச்சந்திரன், ராஜசேகரன், புகழேந்தி, சரஸ்வதி, வீகேயென் கண்ணப்பன், கல்வி வள்ளல் பே.தேவசகாயம், வல்லம் திரு.ராமசாமி (உடையார்), மயிலை நா.கிருட்டினன் ஆகியோருக்கு மணவிழாவின்போது எங்களது  நன்றியை தெரிவித்துக் கொண்டோம்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், ஏப்ரல் 1-15.21

Friday, 19 February 2021

செ.ர.பார்த்தசாரதி - கோ. குமாரி வாழ்க்கை ஒப்பந்த விழா







5.6.1994 சைதாபேட்டை சொர்ணாம்பிகை திருமணம் கூடத்தில் நுங்கம்பாக்கம் சி.ரங்கநாதன் _ செகதாம்பாள் ஆகியோரின் மகனும், தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி துணைச் செயலாளருமான செ.ர.பார்த்தசாரதிக்கும், சைதாபேட்டை த.கோவிந்தராசு முத்துலட்சுமி ஆயோரின் மகள் கோ.குமாரிக்கும் என் தலைமையில் வாழ்க்கை ஒப்பந்த விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி
- உண்மை இதழ், 16-31.9.20

Tuesday, 29 December 2020

பெரியார் மணியம்மையார் திருமணம்

Isai Inban
மகள் வயதுடைய பெண்ணை பெரியார் 70 வயதில் திருமணம் செய்து கொண்டது ஏன்? மகளாய்த் தத்தெடுக்காமல் ஏன் திருமணம்?

முதலில் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம் அன்றைய இந்துத் திருமணச் சட்டப்படி ஒருவரைத் தத்தெடுக்க, தத்து எடுப்பவரும், எடுக்கப்படுபவரும் ஒரே சாதியாய் இருக்க வேண்டும். இல்லையெனில் சட்டப்படித் தத்தெடுக்க முடியாது. இது அம்பேத்கரின் இந்து சட்டத் திருத்தங்கள் 1956-ல் அமலுக்கு வந்த பின்னே இந்த விதி நீக்கப்பட்டது.

பெரியாரை விமர்சிக்க ஏதும் காரணம் கிடைக்காத போது சிலர் அவரின் தனிப்பட்ட வாழ்வை/மணியம்மையார் திருமணம் குறித்தே விமர்சிப்பர். பெரியார்-மணியம்மை திருமணம் 9.7.1949 அன்று பதிவு செய்யப்பட்டது. அப்போது பெரியாருக்கு வயது 70; மணியம்மையின் வயது 30. இத்திருமணம் மணியம்மையாரின் சொந்த விருப்பத்தின் பேரில் சுயமாய்ச் சிந்தித்து, விரும்பி எடுக்கப்பட்ட முடிவே. இதில் யாருடையக் கட்டாயமும் இருக்க வில்லை.

பெரியாரிடம் வருவதற்கு முன்பே மணியம்மையார் தன் வீட்டில் தனக்குத் திருமணமே வேண்டாம் என்று முடிவுடன்தான் இருந்திருக்கிறார். பெரியாரிடம் வந்து சேர்ந்தப் பின்பும் அவருக்கு மணம் முடிக்க முயற்சிகள் செய்யப்பட்ட போது இயக்கப் பணியே வேண்டும், திருமணம் வேண்டாம் என்ற முடிவையே முன் வைத்தார்.

பழைய இந்துச் சட்டத்தின் படி பெண் மகள்களுக்குச் சட்டப்படிச் சொத்துரிமை இல்லை. 1956-க்கு முன் பழைய இந்து சட்டத்தின் படி பெண்ணுக்குத் தகப்பன் வீட்டில் தங்கும் உரிமை + சீதனம் மட்டுமே !. எனவே மணியம்மையை மகளாய்த் தத்தெடுத்தாலும் பெரியாரின் எண்ணம் நிறைவேற வாய்ப்பில்லை. பெரியார் 28.6.1949 அன்று திராவிடர் கழகத்தின் சொத்துக்கள் பற்றி ஒரு அறிக்கை எழுதுகிறார். 
"எனக்கும், எனது பொருளுக்கும் சட்டப்படியான வாரிசாக ஒருவரை ஏற்படுத்தி கொள்ள வேண்டியது அவசியமும், அவசரமுமாகையால் நான் 5,6 வருஷ காலமாகப் பழகி நம்பிக்கைக் கொண்டதும், என் நலத்திலும், இயக்க நலத்திலும் பற்றும், கவலையும் கொண்டு நடந்தது வந்திருக்கிறதுமான மணியம்மையை எப்பிடியாவது வாரிசுரிமையாக ஆக்கிக் கொண்டு அந்த உரிமையையும், தனிப்பட்டத் தன்மையையும் சேர்த்து மற்றும் 4,5 பேர்களையும் சேர்த்து இயக்க நடப்புக்கும், பொருள் பாதுக்காப்புக் குமாகச் சேர்த்து ஒரு ட்ரஸ்ட்டு பத்திரம் எழுத ஏற்பாடு செய்திருக்கிறேன். அப்பத்திரமும் எழுதப்பட்டு வருகிறது." (28.6.1949 - விடுதலை) ஆக, மணியம்மையை சட்டப்படி வாரிசாக்க மட்டுமே பெரியார் முடிவு செய்கிறார். இந்தத் திருமணம் ஒரு சட்டப் பாதுக்காப்பு 
மட்டுமே என்பதைத் தெளிவாகக் காட்டுகிறார். 
"மணியம்மை வாரிசு என்பது, டிரஸ்ட்டு சம்பந்த உரிமை என்பதும், மணியம்மைக்கு சுதந்திர பாத்தியமுடையதல்ல. பரம்பரை பாத்தியமுடையதுமல்ல ! ஆதனால் இந்தத் திருமணம், பொருத்தத்தை அல்லது மணியம்மையை ஏமாற்றும் திருமணமும் அல்ல. ஏன் ? பொருந்தாதத் திருமணமும் அல்ல, மணியம்மை உள்பட யாருக்கும் எந்தவிதமான நிர்பந்தமோ, அவருக்கு இஷ்டமில்லாத துன்பங்களைச் சகித்துக் கொண்டிருக்க வேண்டிய அதாவது வாழ்நாள் அடிமைத்தன்மைக்கு ஆளானதோ ஆனத் திருமணம் அல்ல." (7.7. 1949 - விடுதலை) இதிலிருந்து பெரியார் மணியம்மைக்கு இயக்கத்தைத் தாரை வார்க்கவில்லை என்பது நன்கு தெரிகிறது. அன்றைய/இன்றைய விமர்சனங்கள் மணியம்மையைத் தலைவராக ஏற்கவேண்டி வரும் என்றும் பெரியார் மணியம்மையைத் தவிர வேறு யாரையும் நம்பவில்லை என்று புகார் கூறினார். பெரியார் எந்த இடத்திலும் மணியம்மையாரை இயக்கத் தலைமைக்குக் கொண்டு வருவதாகச் சொல்லவில்லை.அத்தோடு அவர் மணியம்மை + 4/5 பேர் கொண்டு குழுவை டிரஸ்ட்டாக அமைப்பது பற்றியே சொல்கிறார். வேறு யாரையும் நம்பாதவர் எப்பிடி இதைச் செய்ய முடியும்? அத்தோடு பெரியார்-மணியம்மை திருமணம் என்ற தலைப்பில் 16.7.1949 அன்று குடி அரசில் எழுதிய அறிக்கையில் பெரியார் கூறுகிறார், " பெரியார் தலைமைப் பதவியை மனியம்மைக்குச் சூட்டுவதற்கு மணியம்மையை மனைவியாகவோ, வாரிசாகவோ பெற வேண்டிய அவசியம் என்ன?" - (16.7.1949 - குடி அரசு)
அன்று பெரியாருடன் இருந்தவர்களில் ஒருவரான 
தி.பொ.வேதாசலம் பெரியாரின் திருமணம் பற்றிக் கூறுவது இந்தக் கேள்விக்கு ஒரு நல்ல பதிலைத் தரும்.

"ஒரு மனிதன் எதற்காக மணம் செய்கிறான்?
1. தனக்கு வாழ்க்கைத் துணைவியைத் தேடிக் கொள்ளவும், மற்ற உதவிகள் புரியவும்.
2. பிள்ளைப் பேறு கருதி
3. தன் காம இச்சைக்கு உதவியாக

மேற்சொன்ன காரணங்கள் பெரியார் செய்து கொள்ளும் திருமணத்திற்கு  கொஞ்சமும் பொருந்தாது. மணியம்மை கடந்த 6 வருடங்களாக உணவு சமைத்தும், மற்ற பணிகள் ஆற்றியும் வருகிறார். பிள்ளைப் பேறு கருதியிருக்க முடியாது. காம இச்சைக்கு மணப் பதிவு முக்கியமல்ல. " (9.7.1949 - விடுதலை)

நாகம்மையார் மறைந்தது 1933-ல். அப்போது பெரியார்க்கு வயது 55. அப்போதே பெரியாரை இன்னொரு திருமணம் செய்து கொள்ளச் சொல்லி அவரின் தாயார் உட்படப் பலரும் வலியிறுத்தினர். பெரியார் அதை மறுத்துவிட்டார். தன் வாழ்நாள் முழுவதும் சமூக நீதி காணத் தொண்டு செய்ய அது தடையாய் இருக்குமென எண்ணினார். பெரியார் அதைக் கேட்டு திருமணம் செய்திருந்தாலோ, மணியம்மை அப்போதே இருந்து பெரியாரை திருமணம் செய்து இருந்தால் இத்தனை விமர்சனம் வந்திருக்காது. வேதாசலம் கூறுவது போல இது வெறும் உடல் இச்சையைத் தணிக்கச் செய்தத் திருமணமும் அல்ல. அந்நாளைய பெரிய மனிதர்கள் மத்தியில் பலதாரமணம் பெரிய விசயமே இல்லை. அத்தோடு மணியம்மையாரே பெரியாருடன் தனிப் பயணங்கள் பல சென்றிருக்கிறார். அது பற்றிய அறிக்கைகள் விடுதலையில் காணக் கிடைக்கிறது. 
எப்படிப் பார்த்தாலும் இது உடல் இச்சையைத் தீர்க்கும் திருமணம் இல்லை என்பதும், மணியம்மையார்க்கு இயக்கத்தைக் கொடுக்க இல்லை என்பதும், பெரியாரின் சொத்துக்களை, இன்னபிற விசயங்களை சட்டப்படிப் பாதுகாக்க ஒரு வாரிசு ஏற்படுத்த மட்டுமே என்பது உறுதியாகிறது.
இதைத் தொடர்ந்து அறிஞர் அண்ணா தலைமையில் பலர்கழகத்தை விட்டு வெளியேறி தி.மு.க கண்டது வரலாறு. பின்னர் ஒருநாள் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் மணியம்மையார் முன்னிலையில் ஒரு கூட்டத்தில் பேசும் போது, " நாங்கள் கட்சி அரசியலுக்கு வர விரும்பினோம். அதை பெரியார்-மணியம்மை திருமணத்தை ஒரு சாக்காகக் காட்டி வெளியேறினோம்" என்று உண்மையைப் போட்டு உடைத்தார். 1967 தேர்தல் வெற்றிக்குப் பிறகு பெரியாரைச் சந்தித்த அண்ணா மணியம்மையாரை விமர்சித்தற்கு மன்னிப்புக் கேட்டு அவரின் அருந்தொண்டை பாராட்டினார். பெரியாரின் நீண்ட ஆயுளுக்கு 
மணியம்மையாரின் தொண்டே காரணம் என்றார்.

மணியம்மையார் குறித்து புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் குயில் இதழில் எழுதிய தலையங்கமே மணியம்மையாரின் தொண்டுக்குச் சாட்சி. 
"பெரியார் செத்துக் கொண்டிருந்தார். தமிழர் அழுது கொண்டிருந்தார்கள். ஆனால், பெரியாரின் உடம்பை விட்டுப் பிரிந்து போக மூட்டை முடிச்சுகளுடன் காத்திருந்த உயிரைப் போகாதே என்று பிடித்து இழுத்து வைத்துக் கொண்டிருந்தவை இரண்டு. ஒன்று அவரின் பெருந்தொண்டு; மக்கள் மீது அவர் வைத்திருந்த அருள் மற்றொன்று.
ஆயினும்,
காற்றிறங்கிய பொதிமாடு போல் பெருத்துத் தொங்கும் அவர் விதையின் ஒருபால் ஒட்டிய ஆண்குறியினின்று முன்னறிவிப்பு இன்றிப் பெருகும் சிறுநீரை உடனிருந்து கலன் ஏந்திக்காக்கும் ஓர் அருந்தொண்டு, அவர் பெருந்தொண்டால் முடியாது; அவர் மக்கள் மேல் வைத்துள்ள அருளால் முடியாது. பெரியார் வாழட்டும் என்று தன் துடிக்கும் இளமையைப் பெரியார்க்கு ஒப்படைத்த ஒரு பொடிப் பெண்ணை. அன்னை என்று புகழாமல் நாம் வேறு என்ன என்று புகழவல்லோம்?

பெரியார் மேடை மேல் வீற்றிருப்பார். ஓர் இலக்கம் தமிழர் அவரின் தொண்டுக்காக மல்லிகை முதலிய மலர்களாலும் வெட்டிவேர் முதலிய மணப் பொருளாலும் அழகு பெறக்கூடிய மாலை ஒவ்வொன்றாகச் சூட்டிப் பெரியார் எதிரில் இரண்டு வண்டியளவாகக் குவிப்பார்கள்.

அதே நேரத்தில் எல்லாம் உடைய அன்னை மணியம்மையார் ஏதுங்கெட்ட வேலைக்காரிபோல் மேடைக்கு ஏறத்தாழ அரைக்கல் தொலைவில் தனியே உட்கார்ந்து சுவடி விற்றுக் கொண்டிருப்பார்கள்.

ஒரே ஒரு மாலையை எந்துணைவியார்க்குப் போடுங்கள் என்று அந்தப் பாவியாவது சொன்னதில்லை. எம் அன்னையாவது முன்னே குவிந்துள்ள மாலைகளை மூட்டை கட்டுவதன்றி _ அம் மாலைகளில் எல்லாம் மணக்கும் பெரியார் தொண்டை முகர்ந்து முகர்ந்து மகிழ்வதன்றி ஓர் இதழைக் கிள்ளித் தலையில் வைத்தார் என்பதுமில்லை." - (‘குயில்’ இதழ், 10.04.1960)

12) அனைவரையும் சுய மரியாதைத் திருமணம் செய்யச் சொன்ன பெரியார், மணியம்மையாரை பதிவுத் திருமணம் செய்தது ஏன்?

மேலே சொன்னது போல பெரியார் - மணியம்மை திருமணமே ஒரு சட்டப் பாதுக்காப்பிற்குத்தான். 1967-ல் தி.மு.க தேர்தலில் வெற்றி பெற்றப் பின்னரே அண்ணா சுய மரியாதைத் திருமணங்களைச் சட்டபூர்வமாக்கினார். அதற்கு முன் வரை இந்துத் திருமணச் சட்டத்தின் படி சுய மரியாதைத் திருமணங்கள் செல்லாது. பெரியார் சட்டப்படி ஒரு வாரிசு அறிவிக்க வேண்டியதிருந்த காரணத்தால், ஞானம் அம்மையார் சாட்சிக் கையெழுத்துப் போட, பதிவாளர் முன்னிலையில் பார்ப்பனச் சடங்கு இன்றி மணியம்மையாரை பதிவுத் திருமணம் செய்து கொண்டார்.
____________________________________________

 "உன் மனைவி வேறு ஒரு ஆண்மகனை விரும்பினால் அதைத் தடுக்காதே" என்று பெரியார் கூறினாரா?

🙂 இல்லை ! பெரியாரின் எழுத்தைச் சரியாக படிக்காமல் இடையே இருந்து ஒரு வரியை மட்டும் எடுத்துப் போட்டுப் பரப்பபடும் அவதூறு இது. 1971 சனவரி,பெரியார் சேலத்தில் மாநாடு நடத்துறார். மாநாட்டுத் தலைப்பு.

'மூட நம்பிக்கை ஒழிப்பு ','கற்பு'. அதில் பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டன. இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவில் இருக்கும் ‘‘மத உணர்ச்சியைப் புண்படுத்தும் சட்டத்தை எடுத்து விடவேண்டும்" என்பது முக்கியத் தீர்மானம். அது போலவே அரசுக்கு வேண்டுகோளாக பல தீர்மானங்கள் போடப்பட்டன. ஒரே ஒரு தீர்மானம் மட்டும் பொதுவான கருத்தாகச் சொல்லப்பட்டது. அந்தப் பொதுவான தீர்மானம் -> "ஒருவன் மனைவி என்பதனால் (அவனை விரும்பவில்லையானால்) மற்றவனை விரும்புவது என்பதைக் குற்றமாக்கக் கூடாது". பலதார மணமும், இளம் வயதுத் திருமணமும் நிரம்ப இருந்த காலத்தில் பெண்ணின் விருப்பமில்லாத் திருமணத்தில் வாழ வேண்டியக் கட்டாயம் இல்லை என்பதற்காக இயற்றப்பட்டத் தீர்மானம் அது. உடனே பெரியார் "மற்றவன் மனைவியை கடத்திக் கொண்டு போவது தவறில்லை’ என்று தீர்மானம் போட்டதாகத் திரித்து 'தி இந்து', 'தினமணி' போன்றவை எழுதின. அதற்கு பெரியார் மறுப்புத் தெரிவித்து விளக்கம் கொடுத்தார் பெரியார். அனால் அப்பத்திரிக்கைகள் பெரியார் அளித்த மறுப்பை வெளியிடவில்லை. பின் திராவிடர் கழகம் சார்பில் வழக்குப் போடப்பட்டது. இறுதியில் தி இந்து நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டது.

நன்றி: telegra.ph/Periyar-FAQ---II-10-30
- இசை இன்பன் முகநூல் பதிவு

Friday, 11 October 2019

பகுத்தறிவு திருமணம்

22.07.1944  - குடிஅரசிலிருந்து....
தோழர்களே! இப்போது நடைபெறும் திருமணத்தில் நாம் ஒன்றும் பெரிய மாறுதலைக் காணவில்லை. தலைகீழாக ஒன்றும் நடைபெறப் போவதில்லை. ஒரு சிறிய மாறுதல் மட்டும் உண்டு. மாறுதல்கள் இயற்கையாகவே பல இனங்களாலே, பல இடங்களிலே இன்று கையாளப் பட்டுத் தான் வருகிறது.
இங்கே நாம் என்ன மாறுதலைக் காண் கிறோம்? சடங்கில்லை. வேறு இனத்தவன் எவனும் மணத்தை நடத் துவதில்லை. சுயமரியாதைக்கும், பகுத்தறிவிற்கும், இயற் கைக்கும் பொருந்திய மணம் வேண்டு கிறோம். அப்படிப்பட்ட இந்தத் திரு மணத்தை  நாஸ்திகத் திருமணம் என்று பலர் சொல்லக்கூடும். மற்றும் நமது தாய்மார்கள் கலிகாலம் அய்யர் இல்லை யென்றாலும், அம்மியாவது இருக்கக் கூடாதா? நெருப்பாவது (ஓமம்) இருக்கக் கூடாதா? விளக்காவது இருக்கக் கூடாதா? என்றெல்லாம் சொல்லு வார்கள். நமக்குப் பார்ப்பனர் மீதோ, அம்மி மீதோ, நெருப்பின் மீதோ, குத்து விளக்கின் மீதோ, தனிப்பட்ட வெறுப்பு ஒன்றுமில்லை. நெருப்பு அடுப்பில் இருக்க வேண்டியதுதான். அம்மி அரைக்கப்  பயன்படட்டும். இரவில் விளக்கு இருக்கட்டும். ஒவ்வொன்றும் பயன்பட வேண்டிய இடத்தில் இருக்கட்டும். பகுத் தறிவிற்கும், நம் தன்மானத்திற்கும் முரண் பட்ட எதையும் நீக்க வேண்டும் என்றுதான் சொல்லுகிறோம்.
ஒவ்வொன்றிற்கும் ஏன் என்ற கேள்வி யைப் போட்டு ஆராய்ச்சி நடத் தும் காலம் இது. மனிதருக்கு எவ்வளவு தூரம் பயன் படுகின்றது என்பதைப் பொறுத்துத்தான் ஒரு பொருளுக்கு மதிப்பு வருகின்றது. இதற்காகத்தான் நாம் உழைக்கிறோம். இந்தத் திருமணத்தின் முதல் வெற்றி, பார்ப்பனன் இல்லாதது. ஆதலால் இதை சுயமரியாதைத் திருமணம் என அழைக்கிறோம். தான்தான் உயர்ந்த ஜாதி என்ற ஆணவங் கொண்டு, நம்மைத் தொடாதே, கூட உட்கார்ந்து சாப்பிடாதே என்று சொல்லும் ஒருவனை மணையில் உட்காரவைத்து காரியம் நடத்தினால் தமிழனுக்கு மான முண்டு என்று சொல்ல முடியுமா?
இரண்டாவது வெற்றி என்ன வென்றால், இது பகுத்தறிவுத் திருமணம். பகுத்தறிவு என்று சொல்லுவதும் மாறி மாறி வருவதாகும். இன்று நாம் எவைகளை அறிவுக்குப் பொருத்தமானவை என எண்ணுகிறோமோ, அவை நாளைக்கு மூடப்பழக்கவழக்கங்கள் என தள்ளப் படும். நாம்கூட பல பொருள்களை ஏன் மகான்கள் என்று புகழப்படுபவர்கள் சொன்னவற்றையே, பழைய கருத்துக் களெனத் தள்ளிவிடவில்லையா? அது போலத்தான், நமது பின்னோர்கள் என்னைக் குறித்துக்கூட ஓர் காலத்தில் இராமசாமி என்ற மூடக்கொள்கைக்காரன் இருந்தான் என்று சொல்லுவார்கள். அது இயற்கை; மாற்றத்தின் அறிகுறி; காலத்தின் சின்னம். எனவே பழைய காலத் தைச் சேர்ந்தவை என்பதற்காக நாம் குறை கூற வில்லை. அவர்கள் காலத்துக்கு அவர்கள் செய்தது சரி என்பதானாலும், அப்போது அவ்வளவுதான் முடிந்தது என்பதானாலும், இன்று மாறித்தான் ஆகவேண்டும், சக்கிமுக்கிக் கல்லினால் முதலில் நெருப்பை உண்டாக்கியவன் அந்தக் காலத்து எடிசன் அப்புறம் படிப் படியாக முன்னேற்றமாகி இப்போது மின்சாரத்தில் நெருப்பைக் காண்கிறோம். எனவே மாற்றம் இயற் கையானது அதைத் தடுக்க யாராலும் முடியாது. எத்தகைய வைதிகமும் மாற்றத் திற்குள்ளாகித்தான் தீரவேண்டும். இப் போது நாம் எவ்வளவு மாறியிருக்கிறோம்? அய்ம்பது வருடங்களுக்கு முன்பிருந்த தைவிட கடவுளைப் பற்றி எண்ணம் தெய் வீக சக்தி படைத்தவர்கள், பெரிய மனி தர்கள் என்பவர் களைப் பற்றிய எண்ணம், வீடுவாசல், உடை, உணவு, தெருக்கள், வண்டி, குடுமி வைத்தல் ஆகிய எவ்வளவோ எண்ணங் களில் பொருள்களில் பெரிய மாற்றத்தைக் காண் கிறோம். பெண்களின் புடவை, இரவிக்கை, நகைகள், புருஷன், பெண் ஜாதி முறை ஆகியவற்றில் ஏற்பட்ட மாறுதல்களைப் பாருங்கள்.
அடுத்தபடியாக, இங்கு பொருட் செலவு அதிகமில்லை, நேரமும் பாழா வதில்லை. முன்பெல்லாம் பல நாட்கள் திருமணம் நடைபெற்றது. இப்போது பார்ப்பனர்கள் கூட ‘one day only’’ அதாவது ஒரு நாள் திருமணம் என்பதாக அழைப்பிலேயே குறிப்பிடுகிறார்கள்.
மற்றும், இந்தத் திருமணத்தில் ஆணுக் கும், பெண்ணுக்கும் சம உரிமை இருக் கின்றது. ஆரியரின் எட்டுவகைத் திருமண முறைகளில் ஒன்றில்கூட பெண் ஓர் உயிருள்ள பொருளாகக் கூட மதிக்கப்படுவ தில்லை.
ஒத்த அன்பும், காதலும் ஏற்பட வேண்டுமென விரும்பினால், அந்த முறையில் நாம் மக்களை வளர்ப்பதில்லை. பக்குவம் வந்தவுடன் பெண்ணை அடைக் கிறோம், பெண்களுக்குத் தக்க கல்வி அனுபவம் தருவதில்லை. இப்படிப்பட்ட இப்பெண்களைத் தங்களுக்கு வேண்டி யவைகளைத் தெரிந்தெடுத்துக் கொள்ளும் படி சொன்னால் டிராமா (நாடக) கார னைத்தான் தெரிந்தெடுப் பார்கள். அவர் களுக்குக் குழந்தை வளர்ப்பு முறையைக் கற்றுக் கொடுப்பதில்லை. மேல் நாடுகளில் சிறு குழந்தைகளுக்குக் கூட ‘Fresh air’ அதாவது நல்ல காற்று முதலியவற்றின் அருமை தெரிகின்றது.
ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் தேர்ந்தெடுக்கும் உரிமை இந்த நாட்டில் அறவே இல்லை. யாரோ தெருவில் போகும் பார்ப்பானைக் கூப்பிட்டு பொருத்தம் பார்க்கச் சொன்னால், அவனுக்கு மணமக் களைப் பற்றி என்ன தெரியும். அண்ணன் தங்கை ஆகிய இருவர் சாதகங்களை கொடுத்தால், ஒருவருக்கொருவர் கணவன் மனைவி ஆவதற்குப் பொருத்தம் சொல்லு வான். மனிதனுக்கும் நாய்க் குட்டிக்கும்கூட ஜாதகத்தில் பொருத்தம் காணலாம். ஜாதகம் இல்லையென்றால், பெயரைச் சொல்லச் சொல்லிப் பொருத்தம் பார்ப் பான். அதற்கு மேல் பல்லி, கருடன் ஆகியவைகளிள் ஒப்புதல் வேண்டும். வாழ்க்கையையே பிணைக்கக் கூடிய திரு மணத்தில், இவ்வளவு பேதமை அநேக நல்ல பொருத்தங்கள் என்பவை பெண் ணின் முதுகுக்கும் கணவனின் கைத் தடிக்கும் ஓயாத பொருத்தமாக முடிகின் றது. வரும் காலத்தில் வாலிபர்களுக்கும் பெண் களுக்கும் உரிமை தரவேண்டும். இல்லை யென்றால் உரிமையுடன் இருக் கப் போகும் அவர்கள் நம் தடைகளை விலக்கி முன்னே றுவார்கள். எனவே முதலிலேயே உரிமை யளித்து விடுவது நல்லது. தங்களனை வருக்கும் வணக்கம்.
(12.07.1944 அன்று பேரளத்தில்  என். மகாதேவன் அவர்கள் புதல்விகளுக்கு நடைபெற்ற திருமணத்தில் தந்தை பெரியார் சொற்பொழிவு)
- விடுதலை நாளேடு, 11.10.19

Tuesday, 26 May 2015

வேத முறைப்படியான திருமணத்தில் தாலி இல்லை!



வேத முறைப்படியான திருமணத்தில் தாலி இல்லை!
தமிழ் நாட்டில் நடைபெறும் வேத முறைப்படியான திருமணத்தில் சொல்லப்படும் மந்திரங்கள் அனைத்தும் யஜுர்வேதிகளின் ஆபஸ்தம்ப கிருஹ்யஸூத்திரத்தில் உள்ள விவாஹ மந்திரங்களே ஆகும்.
இதில் விவாஹம் என்பது 1.வாக்தானம், 2.கந்யாதாநம், 3.வரப்ரேஷனம், 4.பாணிக்ரஹணம், 5.ஸப்தபதி என்று அய்ந்து முக்கியமான பகுதிகளை கொண்டது என உள்ளது.
இதில் ‘’மாங்கல்ய தாரணம்’’ என்கிற பகுதியோ மந்திரமோ கிடையவே கிடையாது. தற்போது சொல்லப்படும் ‘’மாங்கல்யம் தந்துநாநேந’’ என்ற சுலோகம் இடையி
ல் புகுத்தப்பட்டதேயாகும்.
இதை ‘’விவாஹ மந்திரார்த்த போதினி’’ என்கிற நூலில் ‘கீழாத்தூர் ஶ்ரீநிவாஸாச்சாரியார்’ அவர்களும், ‘’திருமணச் சடங்குகளும் சம்பிரதாயங்களும்’’ என்கிற நூலில் ‘வேங்கடவன்’ அவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடலங்குடி வெளியீடான ‘’விவாக மந்திரங்கள் எதற்காக?’’ என்கிற நூலில்‘’மாங்கல்ய தாரணம்’’ என்கிற பகுதி குறிப்பிடப்படவேயில்லை. அதே போல் பெரிய சங்கராச்சாரி ‘’விவாஹம்’’ என்கிற நூலில் தாலியை பற்றி குறிப்பிடவே இல்லை.
ஆகையால் மேற்கண்ட ஆதாரங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ள ‘’வேதங்களில் தாலி கட்டுதல் இல்லை’’ என்கிற பகுதியை உறுதிப்படுத்துகிறது.
வேதங்களில் இல்லாத தாலியினை பிடித்துக்கொண்டு இந்து மத போலிகள் தொங்கிக் கொண்டிருப்பது வரட்டுப் பிடிவாதமேயாகும்!
-மூலிகை மன்னன் செ.ர.பார்த்தசாரதி
-முகநூலில்,18.4.15
விடுதலை ஞாயிறு மலர்,25.4.15