Monday, 19 July 2021

பெரியார் மணியம்மை திருமணமும் - ஆடைகளற்ற கேள்விகளும்..



பெரியார்-மணியம்மை திருமணம் பற்றி பல்வேறு விளக்கம் அளிக்கப்பட்டாலும், அந்தத் திருமணம் பற்றிய விசமக் கேள்வி அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆடையின்றி சுற்றுகிறது. பெரியார் தன் மகள் வயதில் இருக்கும் பெண்ணை மணந்து கொண்ட ஒழுக்கமற்றவர் என்றும், அப்படியே அவரது சொத்துக்களை பாதுகாக்கத்தான் என்றால் மகளாக தத்தெடுத்திருக்கலாமே.. அதை விட்டு திருமணம் என்பது அவரின் வக்கிரத்தைக் காட்டுகிறது எனச் சில புனித மனிதர்கள் கேட்கிறார்கள். பெரியாரின் கொள்கைகளை விமர்சிக்க இயலாதோருக்கும், அந்தரங்கத் திரை அகற்றி அரசியல் ஆய்வு மையம் நடத்துகிறோர்க்கும் இந்தப் பதிவு சமர்ப்பணம்.

periyar and maniammaiபெரியாரைப் பொருத்தவரை சமூகத் தொண்டு செய்ய குடும்பம் தொல்லையாக இருக்கும் எனக் கருதியவர். அதை முதல் மனைவி நாகம்மாளின் மறைவின் போது அவர் வெளியிட்ட உருக்கமான 'இரங்கல்' அறிக்கையில் அறியலாம். அப்படி இருக்கையில் முதல் மனைவி இறந்து 16 ஆண்டுகள் கழித்து இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன வந்தது அந்த 70 வயது கிழவருக்கு?

அதற்கு அன்றைய களச்சூழலோடு இந்தக் கேள்வியைப் பொருத்திப் பார்ப்பது அவசியமானது.

தனது வயது முதிர்வின் காரணமாக தன் சொந்த சொத்துக்களையும், தன் சிந்தாந்தங்களைத் தொடர்ந்து எடுத்துச் செல்லவும், பாதுகாக்கவும் ஒருவரை நியமிக்க நினைத்தார் பெரியார். அர்ஜுனன் என்பவரைத் தத்தெடுக்க நினைத்தார். ஆனால் அவர் இறந்துவிட்டதார். 1948ல் ஈரோட்டில் நடந்த மாநாட்டில் தனக்குப் பிறகு அண்ணாதான் இயக்கத்தை வழிநடத்தப் போகிறார், ஆதலால் "பெட்டிச்சாவியை அண்ணாவிடம் தந்துவிடப் போவதாக அறிவித்தார்". ஆனால் அண்ணாவோ தேர்தல் அரசியலைக் கையில் எடுக்கத் தொடங்கியதால் அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டார் பெரியார்.

ஈ.வெ.கி சம்பத்தை தத்தெடுக்கலாம் எனத் துணிந்தவருக்கு மீண்டும் ஏமாற்றமே. சம்பத் அண்ணாவோடு தேர்தல் பயணத்தில் நுழைந்துவிட்டார். எனவே தன்னை ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக கவனித்து வந்த எழுத்தாளரும், பேச்சாளரும், திராவிடக் கொள்கையாளரும், தமிழ் இலக்கியத்தில் புலமை பெற்றவருமான மணியம்மையால் இந்த இயக்கத்தையும், தன் சொத்துகளையும் தொடர்ந்து எடுத்துச் செல்ல முடியும் என எண்ணினார். அவர் ஏன் இயக்கத்தில் வேறு யாரையுமே தேர்வு செய்யவில்லை என்பதற்குப் பெரியாரின் பதில்,

"என்னைச் சுற்றியிருக்கும் தோழர்களிடம் நான் எவ்வளவு சகிப்புத்தன்மையோடு பழகினாலும் அவைகளை என் பலவீனமாகவும் ஏமாந்ததனமாகவும் கருதிக் கொண்டு நான் பயப்படும் வண்ணமாய் பெரிதும் அவநம்பிக்கை கொள்ளும் வண்ணமுமாய் நடந்து வருவதை உணர்கிறேன்".

எனவே அவரின் நம்பிக்கையான ஒரே தேர்வு மணியம்மை மட்டும்தான்.

பெரியார் மணியம்மையை மணப்பது சட்டப்படி தன் வாரிசாக அறிவிக்கத்தான். அதன் மூலம் இயக்கத்தையும், சொத்துக்களையும் பாதுகாக்கத்தான். இந்துமதச் சட்டம் "கடவுள் மறுப்பாளர்"களும் இந்துக்கள்தான் என வரையறுத்ததால், காலம் முழுதும் எதிர்த்துப் போராடிய இந்து மதச் சட்டத்திற்கு உட்பட்டே அந்தத் திருமணம் நடக்க வேண்டியிருந்தது.

அப்படியானால் அவர் ஏன் மதம் மாறவில்லை என்பதுதான் உங்கள் அடுத்த கேள்வியாக இருக்கும். அம்பேத்கர் பவுத்த மதம் தழுவியபோது பெரியார் மாறவில்லை. காரணம் இந்து மதத்திற்குள்ளேயே இருந்தால்தான் இதன் இழிவுகளை சுட்டிக் காட்ட முடியும். மதம் மாறினால் இது சாத்தியப்படாது எனத் திடமாக நம்பினார்.

அப்போதைய இந்து மதச் சட்டத்தின் படி, "பெண்ணுக்கு தத்தெடுக்கவும், தத்து போகவும் உரிமையில்லை" என்பதால் பெரியாரால் மணியம்மையைத் தத்தெடுக்க இயலாமல் மணந்துகொள்ள நேரிட்டது.

70 வயதை அடைந்திருந்த பெரியார் உடலியல் தேவையால்தான் மணந்துகொண்டார் என்பது ஏற்புடைய வாதமில்லை. ஒருவேளை உடலியல் தேவைதான் பிரதானம் என்றால் அதை மணந்து கொள்ளாமலே அடைந்திருக்க முடியும். அவரது படுக்கையறையை யாரும் தாழுடைத்து பார்க்கப் போவதில்லை. எல்லாவற்றையும் விட முதன்மையானது அது மணியம்மையாரின் முழுச் சம்மதத்தோடு அரங்கேறிய திருமணம்.

இந்தத் திருமணத்தால்தான் திமுக உதயமானது எனச் சொல்கிறவர்கள் நுனிப்புல் பிரியர்கள். அண்ணா பிரிய இதுவும் ஒரு காரணம். இத்திருமணம் நடக்கவில்லை என்றாலும் திமுக தோன்றியிருக்கும் என்பதுதான் வரலாறு சொல்லும் செய்தி.

அண்ணா சில காலமாக பெரியாரோடு நட்பு முரண் கொண்டிருந்தார். பெரியார் எதையும் திடமாக எதிர்ப்பவர். அவரது இயக்க அரசியலை அது பாதிக்காது. அண்ணா தேர்தல் பாதையைத் தீர்மானித்தபோது பொதுப்புத்தியோடும், பொதுமக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்க வேண்டிய அவசியமும் உண்டாயிற்று. அதனால்தான் கடவுள் மறுப்பிலிருந்து "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" எனச் சொல்ல வேண்டிற்று.

அதுபோலத் தான் 70 வயது கிழவர் தன்னைவிட 40 வயது குறைந்த பெண்ணை மறுமணம் செய்துகொள்வது பொதுமக்கள் மத்தியில் அவப்பெயர் உண்டாக்கக் கூடும் என அண்ணா கருதினார். திமுக உதித்தது. பெரியார் இவைகளைப் பற்றி கவலைப்படவில்லை. பேராசிரியர் சுபவீ சொல்லுவார் "பெரியார் 24 காரட் தங்கம், அண்ணா 22 காரட் தங்கம்". சுத்தமான 24 காரட்டை வைத்து நகை செய்ய இயலாது. 22 காரட்டை வைத்துதான் நகை செய்ய இயலும் என்று. இருவருக்கும் ஒரே இலக்குதான் சமமான சமூகத்தை கட்டியமைப்பது. ஆனால் பாதைதான் வேறுவேறு.

பெரியார்-மணியம்மை திருமணத்தில் இருந்த சட்ட சிக்கல்கல்களை உணராத எங்கள் தலைமுறை பெரியாரைப் பழிக்கத் துணிகின்றனர். ஒரு தலைவரை விமர்சிக்க குறைந்தபட்ச நாகரிகத்தைக் கையாளுங்கள். இனியாவது உங்கள் கேள்விகளுக்கு ஆடைகட்டுங்கள். இல்லையேல் உங்கள் கூட்டத்திற்கு மக்கள் பாடை கட்டி விடுவார்கள்
. — with Ramasamy Gopalan.
Lakshmanan SK shared 👍
பகுத்தறிவாளர்கள் vs மதவாதிகள்
முகநூல் பதிவு

No comments:

Post a Comment