Tuesday, 8 June 2021

திராவிடர் இயக்கம் தோன்றிய வரலாறு

*வரலாறு அறிவோம்.*

ஒரு காலத்தில் உணவு விடுதிகளைப் பெரும்பாலும் பிராமணர்களே நடத்திவந்தனர்.

*பிராமணர் அல்லாதார் உள்ளே சென்று உட்கார்ந்து சாப்பிட முடியாது.*

எடுப்புச் சாப்பாடுதான்
வாங்கிச் சென்று
வெளியே சாப்பிட வேண்டும்.

சென்னையில் அன்றைய மவுன்ட் ரோடிலும், ஜார்ஜ் டவுனிலும் இருந்த உணவு விடுதிகளில், *‘பஞ்சமர்களும், நாய்களும், குஷ்டரோகிகளும் உள்ளே நுழையக் கூடாது’* என்று விளம்பரப் பலகைகளை வைத்திருந்தனர்.

*இரயில்வே உணவு விடுதிகளில் பிராமணாள், இதராள்* என்று விளம்பரப் பலகை
வைக்கப்பட்டு இருந்தது.
இது மட்டுமல்ல.

இருப்புப் பாதைகள் போடப்பட்டு,
இரயில் பயணம்
தொடங்கிய காலத்தில்,

*நான்கு வகைப் பெட்டிகள் இருந்தன. அவற்றை நான்கு வருணத்தாரும்* தனித்தனியாகப் பயன்படுத்தும்படியாக

உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என

இந்து மத வேதியக் கூட்டம்

இரயில்வே நிர்வாகத்தைக்
கேட்கும் அளவுக்குப்
பேதங்கள் மோசமாக இருந்தன.

*இயக்கத்தின் தொடக்கம்*

இப்படிப்பட்ட சூழலில்தான் 1912-ல் டாக்டர் சி.நடேசனாரின் முயற்சியால் தோற்றுவிக்கப்பட்டது ‘மெட்ராஸ் யுனைடெட் லீக்’. அதுவே 1913 முதல் பிராமணர் அல்லாதாரைக் குறிக்க *‘திராவிடர் சங்கம்’* என்று புதுப் பெயர் பெற்றது

பிராமணர் அல்லாதார் இயக்கமான திராவிட இயக்கம் தோன்றியதற்கு முக்கியக் காரணம், 

காங்கிரஸில் ஆதிக்கம் செலுத்திய பிராமண வழக்கறிஞர்கள்தான். அவர்கள் ஆதிக்கம் எங்கும் நிறைந்திருந்தது என்பதைத் தனது ‘விடுதலைப் போரில் தமிழகம்’ என்னும் நூலில் பதிவுசெய்திருக்கிறார் திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடுகளை நடத்திவந்த சிலம்புச் செல்வர் ம.பொ.சி.

பிராமணர் அல்லாதோர் நிலை:

அந்தக் காலகட்டத்தில் உத்தியோகத் துறையில் எங்கும் பிராமணர் ஆதிக்கம்; பிராமணர் அல்லாதாருக்கு முட்டுக்கட்டை என்ற நிலை இருந்தது. எடுத்துக்காட்டாக 1912-ல் சென்னை மாகாணத்தின் நிலை என்ன? 
*துணை ஆட்சியர்களில் 55%,* 

*சார்பு நீதிபதி 82.5%,*

* மாவட்ட முன்சீப்களில் 72.6% பிராமணர்கள்.*

இந்தப் பதவிகளில் இந்து பிராமணர் அல்லாதார் முறையே 21.5%, 16.7%, 19.5%. 

கடப்பை மாவட்டத்தில் வருவாய்த் துறையில் உயர் பதவி வகித்த டி.கிருஷ்ணாராவ் (ஹுஸுர் செரஸ்தார் - மாவட்ட ஆட்சியர் பதவிக்கு நிகரானது) என்பவரின் *உறவினர்கள் 116 பேர்* அந்தத் துறையில் இருந்தனர். 

சென்னை சட்ட மன்றத்தில் 1914-ல் சட்ட மன்ற உறுப்பினர் குன்சிராமன் நாயர் எழுப்பிய வினாவுக்குக் கொடுக்கப்பட்ட பதில் என்ன? 

சென்னைப் பல்கலைக்கழகத்தில் *பதிவுசெய்யப்பட்ட 650 பட்டதாரிகளில் பிராமணர்கள் 452 பேர்,* 
*பிராமணர் அல்லாத இந்துக்கள் 12 பேர்,* பிற இனத்தவர் 74 பேர்!

கல்வி, வேலைவாய்ப்பு நிலைதான் இப்படி என்றால் சமுதாய நிலை என்ன?.

1916-ல் டி.எம்.நாயர், தியாகராயர் உள்ளிட்டோர் முன்னின்று தொடங்கிய தென்னிந்திய நலவுரிமைச் சங்கம், நீதிக் கட்சியாக அழைக்கப்பெற்றது. நீதிக் கட்சி திராவிடர் கழகம் ஆனது.

திராவிடர் கழகத்திலிருந்து திமுகவும் அதிலிருந்து அதிமுகவும் உருவாயின. ஒட்டுமொத்தமாக இவற்றை ‘திராவிடர் இயக்கம்’ என்று ஒரு பொதுச் சொல்லால் குறிப்பதாகக் கொண்டால், *இழிவுகள் பலவற்றிலிருந்து இந்தத் திராவிடர் இயக்கமே நம் மக்களை மீட்டெடுத்தது.*

திராவிடர் என்ற பெயர் மாற்றமே திராவிட இயக்கத்தின் சாதனை என்று சொல்லலாம். ஏனென்றால், 

1901-ல் எடுக்கப்பட்ட சென்னை மாகாணத்து மக்கள்தொகைக் கணக்கில் *‘பிராமணர்கள் 3.4%,*
 *சூத்திரர்கள் 94.3%’*
 என்று பிராமணர் அல்லாதாரை அரசாங்கமே சூத்திரர்கள் என்று குறிப்பிடும் இழிநிலைதான் அன்று இருந்தது. 

இந்த நிலையில்தான் பெரியார், ‘சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி!’ என்ற பெருமுழக்கத்தை வீதிகளில் எல்லாம் ஒலிக்கச் செய்தார். 

பின்னதாக, நீதிக் கட்சி ஆதரவு பெற்ற டாக்டர் சுப்பராயன் அமைச்சரவை ‘சூத்திரன்’ என்ற இழி பட்டத்தைப் பதிவேடுகளிலிருந்து ஒழித்தது.

ஆட்சியில் பங்கேற்று நேரடி மாற்றங்களைக் கொண்டுவந்தது மட்டும் அல்லாமல், எல்லாத் தளங்களிலும் மாற்றுகளை உருவாக்க முற்பட்டது திராவிட இயக்கம்.

டாக்டர் சி.நடேசன், பிராமணர் அல்லாத மாணவர்கள் தங்கிப் படிக்க சென்னையில் 1916-ல் உருவாக்கிய திராவிட சங்க விடுதியை (Dravidian Association Hostel) ஓர் உதாரணமாகச் சொல்லலாம். 

மாணவர் விடுதிகளில்கூடப் பாகுபாடுகள் நிறைந்திருந்த காலத்தில் மாற்றாகத் தொடங்கப்பட்ட மாணவர் விடுதி இது. பிற்காலத்தில் இந்திய நிதியமைச்சராக ஆகவிருந்த ஆர்.கே.சண்முகம், பாரிஸ்டர் ரங்கராமானுஜம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர்களாக விளங்கிய டி.எம்.நாராயணசாமிப் பிள்ளை, எஸ்.ஜி.மணவாள ராமானுஜம் மற்றும் சடகோப முதலியார், பிற்காலத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக வந்த சுப்பிரமணிய நாடார் போன்றவர்களெல்லாம் இந்த விடுதியில் தங்கிப் படித்தவர்கள்தான்!

*திராவிட இயக்கம் கொண்டுவந்த மாற்றங்கள்*

திராவிட இயக்கம் கொண்டுவந்த மாற்றங்களை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

1. சுதந்திரத்துக்கு முன்பு சென்னை மாகாணத்தில் 1920-1937 காலகட்டத்தில் ஆட்சியிலிருந்து நீதிக் கட்சி ஆட்சி கொண்டுவந்த மாற்றங்கள்.

2. ஆட்சியிலிருந்து இறங்கிய நீதிக் கட்சியின் தலைவராக 1938-ல் பெரியார் பொறுப்பேற்று, பிறகு 1944-ல் திராவிடர் கழகமாக அதை உருமாற்றிய பின்னர், தேர்தல் அரசியலிலிருந்து விலகி, பொதுத் தளத்திலிருந்து மேற்கொண்டுவரும் மாற்றங்கள்.

3. 1967 முதலாகத் தமிழகத்தில் ஆட்சியில் இருந்துவரும் திமுக, அதிமுக இரு திராவிடக் கட்சிகள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கொண்டுவந்த மாற்றங்கள்.

*இவற்றில் தேர்தல் அரசியலில் பங்கேற்காமல், பொதுத் தளத்தில் நின்று அரசியல் கட்சிகளுக்கான சமூக நீதி அழுத்தங்களையும் கொடுத்துவரும் திராவிடர் கழகம் வெளியிலிருந்து உருவாக்கிவரும் மாற்றங்கள் என்றால், இரு திராவிடக் கட்சிகளின் ஐம்பதாண்டு ஆட்சிக் காலம் மட்டுமின்றி காமராஜரின் ஆட்சிக் காலகட்டத்தையும்கூடச் சேர்த்துக்கொள்ள வேண்டியிருக்கும். பிராமணியத்துக்குத் துணை போகும் காங்கிரஸை ஒழிப்பதே என் கடமை என்று கூறி காங்கிரஸிலிருந்து வெளியேறி வந்த பெரியார், காமராஜரின் ஆட்சிக்காக அதே காங்கிரஸைத் தன் தோளில் தூக்கிச் சுமந்தார் என்பதும் பெரியார் முன்மொழிந்த பல திட்டங்களையும் யோசனைகளையும் நிறைவேற்றியவர் காமராஜர் என்பதும் வரலாறு.*

*ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்தைத் தந்தை பெரியார் தலைமை தாங்கி தடுத்து நிறுத்தியது* முக்கியமான ஒன்று. எதற்காக இதைக் குறிப்பிடுகிறேன் என்றால், சமூக நீதி, தமிழ், தமிழர் நலன் என்பதே எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு திராவிடர் கழகத்தின் உயிர்மூச்சாக இருந்திருக்கிறது.

அதேபோல, பொதுத் தளத்தில் அது உருவாக்கிய கருத்துருவாக்கம், கட்சிக்கு அப்பாற்பட்டு ஆட்சியாளர்களைச் செயல்பட வைத்திருக்கிறது. ஆகையால், திராவிடர் கழகம் பொதுத் தளத்தில் செய்த காரியங்களை இந்தச் சின்ன கட்டுரைக்குள் கொண்டுவருவது சாத்தியமற்றது என்பதால், முன்னதாக நீதிக் கட்சி வடிவிலும் பின்னதாக திராவிடக் கட்சிகளுக்குப் பின்னின்றும் செய்த மிக முக்கியமான மாற்றங்களை மட்டும் இங்கே தருகிறேன்.

*நீதிக் கட்சி கொண்டுவந்த முக்கியமான 10 அரசாணைகள், சட்டங்கள்*

*■ நாட்டிலேயே முன்னோடியாகப் பெண்களுக்கு வாக்குரிமை* (10.05.1921).

.■ பஞ்சமர் என்ற சொல் நீக்கி ஆதிதிராவிடர் என்றழைக்கும் அரசாணை (25.3.1922).

■ *கல்லூரிகளில் எல்லாத் தரப்பு மாணவர்களையும் சேர்க்க குழுக்கள்* அமைக்கும் அரசாணை (20.5.1922). கல்வி மறுக்கப்பட்ட பிராமணரல்லாத குழந்தைகளைத் தொடக்கப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கை (21.6.1923). புதிய பல்கலைக்கழகம் காண சட்டம் இயற்றப்பட்டது. பின்னாளில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருவாக இது காரணமாயிற்று.

*தாழ்த்தப்பட்ட மாணவர்களைக் கல்வி நிலையங்களில் மிகுதியாகச் சேர்ப்பதற்கான நடவடிக்கை* (24.9.1924).

*.குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த பெண்களைக் கோயிலுக்குப் பொட்டுக் கட்டிவிட்டு, தேவரடியார் என்று முத்திரை குத்தும் முறைக்கு முடிவுகட்டும் சட்டம்* (1.1.1925).

.கோயில்களில் கொள்ளையை முடிவுக்குக் கொண்டுவர இந்து சமய அறநிலையச் சட்டம் (27.01.1925).

*.சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரியில் பிராமணரல்லாத மாணவர்களைச் சேர்ப்பதற்கான உத்தரவு* (15.9.1928).

.எஸ்.முத்தையா முதலியாரின் முயற்சியால் முதல் இடஒதுக்கீட்டுச் சட்டம் (13.9.1928). வகுப்புவாரி ஒதுக்கீட்டுக்கான அரசாணை (27.2.1929).

*சமூகமாற்றத்துக்கு அடித்தளமிட்ட கல்வி, சமூக நலத் திட்டங்கள்*

கல்லூரி முதல்வர்கள் எல்லாம் பிராமணர்களாகவே
இருந்த நிலையில்,
பிராமணர் அல்லாத மாணவர் சேர்க்கைக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டிருந்த காலகட்டம் அது;

பனகல் அரசர் என்ன செய்தார்?

ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவர் சேர்க்கைக்குக் குழுக்கள் அமைக்க உத்தரவிட்டார்.

*மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு சம்ஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் எனும் நடைமுறையை நீக்கினார்.*

ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்த மருத்துவத் துறையை

இந்தியமயமாக்கிய பெருமையும் நீதிக் கட்சி முதலமைச்சர்
பனகல் அரசரையே சேரும்.

சென்னை மாநிலக் கல்லூரி சமஸ்கிருதப் பேராசிரியர் குப்புசாமி சாஸ்திரிக்கு மாதச் சம்பளம் ரூ.300,

தமிழ்ப் பேராசிரியர் கா.நமசிவாயனாருக்கு மாதச் சம்பளம் ரூ.81 என்றிருந்தது.

இந்த பேதம் நீக்கப்பட்டது.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் படிப்பதற்குத்தான் வழி இருந்ததே தவிர, தமிழ் படிக்கக் கதவு அடைக்கப்பட்டது.

நீதிக் கட்சிப் பிரமுகர்கள் ஆர்.வெங்கடரத்தினம் நாயுடு, டி.என்.சிவஞானம் பிள்ளை, எஸ்.முத்தையா முதலியார், டாக்டர் ஏ.இலட்சுமணசாமி முதலியார் போன்ற தலைவர்கள் போராடிப் போராடிதான் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழி கற்பிக்கப்படுவதற்கு வழிவகுத்தனர்.

பிட்டி. தியாகராயர் சென்னை மாநகர மேயராக இருந்தபோதுதான்,

1921-ல் பள்ளிகளில்

இலவச நண்பகல் உணவு அளித்தார்.

இதற்காக

சென்னை மாநகராட்சிப் பணம் செலவழிப்பதை

நகராட்சி சட்டத்தைத் திருத்தி மாகாண அரசே ஏற்றுக்கொண்டது.

இதன் காரணமாகப் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.

இன்னும் ஒரு குறிப்பிடத் தகுந்த தகவல் உண்டு.

இலவச இரவுப் பள்ளிகள் நடத்த முன்வந்தால், மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற நிலைப்பாடுதான் அது.

பகல் பொழுதில் பணியாற்றச் செல்வோர் இரவில் படிக்கும் ஒரு வாய்ப்புக்குத் கதவைத் திறந்துவிட்டவர் நீதிக் கட்சித் தலைவர் பிட்டி. தியாகராயர்தான்.

*தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு அரசினர் கல்லூரி சம்ஸ்கிருதக் கல்வி நிலையமாக இருந்ததை மாற்றி, தமிழும் சொல்லிக்கொடுக்கப்பட ஆவன செய்தார்* நீதிக் கட்சித் தலைவர் ஏ.டி.பன்னீர்செல்வம். பிராமண மாணவர்கள் மட்டும் பயன் கண்ட ராஜா மடம், ஒரத்தநாடு விடுதிகள் மற்றவருக்கும் திறந்துவிடப்பட்டன. தாழ்த்தப்பட்ட மாணவர்கள் 10-ம் வகுப்புத் தேர்வுக்குப் பணம் கட்டத் தேவையில்லை என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதேபோல, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்லூரிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளிலும் அரைச் சம்பளம் கட்டினால் போதும் என்று அறிவிக்கப்பட்டது. அரசுப் பள்ளிகளில் வகுப்புரிமையை நிலைநாட்ட ஆண்டுதோறும் அறிக்கைகள் வெளியிடப்பட உத்தரவிடப்பட்டது.

*பேருந்துகளில் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்காவிட்டால் பேருந்துகளின் உரிமம் ரத்துசெய்யப்படும் என்று ஆணையிட்டு,* தாழ்த்தப்பட்ட மாணவர்கள் ஊரிலிருந்து பள்ளிகளை நோக்கிச் செல்ல வழிவகுத்தவர் நீதிக் கட்சித் தலைவர்களில் ஒருவரான ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன். 

*தாழ்த்தப்பட்டவர்களைச் சேர்க்காத பள்ளிகளுக்கு மானியம் நிறுத்தப்படும் என்று ஆணையிட்டவர்* முன்னோடிகளில் ஒருவரான சிவகங்கை எஸ்.இராமச்சந்திரன்.

தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் கருதித் தனி அலுவலர்கள் நியமனம். தனி அலுவலர் என்பது ‘லேபர் கமிஷனர்’ என்று மாற்றம். இம்மக்களுக்கு 7 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள் வழங்கப்பட்டன. தாழ்த்தப்பட்ட வகுப்பாரில் என்னென்ன சாதிகள் உள்ளன என்பதைத் தொகுக்கும் பணி தொடங்கப்பட்டது. குறவர்கள் சீர்திருத்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக 2,776 கூட்டுறவுச் சங்கங்கள் உருவாக்கப்பட்டன. வலையர், குறவர் ஆகியோரைக் குற்றப் பரம்பரையிலிருந்து மீட்க அவர்களின் குழந்தைகளுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டது. துப்புரவு வகுப்பினர், தோடர்கள், கோடர்கள், படகர்கள் ஆகியோருக்காகக் கூட்டுறவுச் சங்கங்கள் தொடங்கப்பட்டன. மீனவர் நலன் காப்பதற்காக ‘லேபர் கமிஷன்’ நியமிக்கப்பட்டது. 

*இதேபோல கள்ளர் சமுதாய முன்னேற்றத்துக்காகவும் ‘லேபர் கமிஷன்’ நியமிக்கப்பட்டது.*

*திராவிடக் கட்சிகள் முன்னெடுத்த பெரும் மாற்றத்துக்கான நகர்வுகள்*

திமுகவின் முதல் முதல்வரான அண்ணா மிக விரைவில் காலமாகிவிட்டதால், இரண்டாண்டுக்கும் குறைவாகவே ஆட்சியில் இருந்தார். எனினும், திராவிடக் கட்சிகள் செல்ல வேண்டிய திசையைச் சுட்டும் வகையில், நான்கு முக்கியமான முடிவுகளை அவர் முன்னெடுத்தார்.

1. சடங்குகள், தாலி மறுத்து நடைபெறும் சுயமரியாதைத் திருமணங்களுக்கும் சட்ட அங்கீகாரம் அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம். 
2. சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம்.

3. தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை; தமிழ், ஆங்கிலம் மட்டுமே பயிற்றுமொழி என்ற இருமொழிக் கொள்கை முடிவு.

*4. அரசு அலுவலகங்களில் எந்த மதம் தொடர்பான கடவுள் படங்களும் உருவங்களும் இருக்கக் கூடாது என்ற ஆணை.*

Conditions of Non Brahmins
- கட்செவி வழியாக பெற்றது

No comments:

Post a Comment