Showing posts with label காட்டுமிராண்டி மொழி. Show all posts
Showing posts with label காட்டுமிராண்டி மொழி. Show all posts

Tuesday, 22 July 2025

பெரியார் எந்தச் சூழ்நிலையில், தமிழ் மொழியைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார்?

 சென்னை, மே 21  ‘‘என் பார்வையில், மொழி என்பது ஒரு போர்க் கருவியாக இருக்கவேண்டும்’’ என்றார் பெரியார். பண்பாட்டுப் படையெடுப்பு நடக்கின்ற நேரத்தில், மொழியை வைத்துத்தான் நாம் போராடவேண்டி இருக்கும். அந்த மொழிப் போராட்டமென்பதும் பண்பாட்டுப் பாதுகாப்புக்குரியதாக அமையவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.

‘‘ஹலோ பண்பலைக்குத்’’
தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி!

கடந்த 30.4.2025 அன்று ஹலோ பண்பலைக்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  பேட்டியளித்தார்.

அவரது பேட்டியின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

நெறியாளர்: பெரியார் எந்தச் சூழ்நிலையில், தமிழ் மொழியைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார்?

தமிழர் தலைவர்: ‘‘நீ உருப்படுவியா?’’ என்று மக னைப் பார்த்து அப்பா கேட்பார். ‘‘நீ உருப்படவே மாட்டாய்; அதனால், நீ வீட்டை விட்டுப் போ’’ என்று கோபமாகக்கூட அப்பா கத்துவார்.

அதனால் அப்பா, மகனை வீட்டை விட்டு வெளி யேற்றுகிறார்  என்று அர்த்தமல்ல.

அதுபோன்றுதான் தந்தை பெரியாரும்!

அறிவியல் காலத்திற்கேற்ப
மொழி வளர்ச்சியடைவேண்டும்!

எதிலும் வளர்ச்சிப் பற்றைத்தான் விரும்புவார் அவர். தமிழ் என்ற மொழியை வைத்துக்கொண்டு பழம்பெருமையைப் பேசிக் கொண்டிருக்கக் கூடாது. இது அறிவியல் காலம். அதற்கேற்றாற்போல் மொழி வளர்ச்சியடையவேண்டும்.

‘‘காட்டுமிராண்டிக் காலத்து மொழி’’ என்றுதான் பெரியார் சொன்னார்.

இப்படி அவர் சொன்னதை வைத்துதான், புரியாத வர்கள் ஏதோ பெரிதாக விளையாடுகிறார்கள்.

நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன், அதற்குப் பதில் சொல்லுங்கள்.

‘‘கல்  தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி’’ என்று தமிழ்மொழியைச் சொல்கிறார்கள். இதைச் சொல்லாதவர்கள் உண்டா?

தமிழ் மொழிக்குப் பெருமை என்று, இதைத்தான் சொல்கிறார்கள். இதற்கு என்ன அர்த்தம்?

‘‘கல் தோன்றி, மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி’’ என்றால், அது எந்தக் காலம்?

ஆதிகாலம்தானே!

பொதுமக்களுக்கு விளங்கும்படியாக பெரியார் சொன்னார்!

பச்சையாக, பொதுமக்களுக்கு விளங்கும்படியாக காட்டுமிராண்டிக் காலம் என்று சொல்கிறார் பெரியார்.

ஆகவே, காட்டுமிராண்டிக்காலத்துத் தமிழ் என்றால், பழைமையான தமிழ் என்று அர்த்தம். அது வரலாற்றுப் பெருமைக்கு வேண்டுமானால் பயன்படும்.

பழைய கட்டடம் என்பதுதான் பெரியார் சொன்ன உதாரணம். அப்படியென்றால், பழைய கட்டடத்தை நெருங்குவதற்குப் பயப்படுவார்கள் அல்லவா!

பழைய கட்டடத்தையெல்லாம் இப்போது புதுப்பிக்கிறார்கள். பழைய கட்டடத்திற்கு  (Heritage Building) எல்லாம் ஒரு பெயர் வைத்திருக்கிறோம். அதைப் பாதுகாக்கவேண்டும் என்றும் சொல்கிறோம். அதைப் பாதுகாப்பது மட்டும் போதாது. அதனை சீரமைப்பதும் மிகவும் முக்கியமாகும்.

அதுபோன்று, தமிழ் மொழி வளர்ச்சியடைவேண்டும் என்று தந்தை பெரியார் நினைத்தார்.

மொழி என்பது ஒரு போர்க் கருவியாக இருக்கவேண்டும்!

‘‘என் பார்வையில், மொழி என்பது ஒரு போர்க் கருவியாக இருக்கவேண்டும்’’ என்றார் பெரியார்.

பண்பாட்டுப் படையெடுப்பு நடக்கின்ற நேரத்தில், மொழியை வைத்துத்தான் நாம் போராடவேண்டி இருக்கும். அந்த மொழிப் போராட்டமென்பதும் பண்பாட்டுப் பாதுகாப்புக்குரியதாக அது அமைய வேண்டும்.

இப்போது ஏன் ரபேல் விமானங்களை வாங்குகி றார்கள்? இவர்கள் என்னதான் இராமனைக் கொண்டா டினாலும், இராமனுடைய ஆயுதம் வில். அதனையே பாகிஸ்தான்மீது ஏவலாம் என்று சொல்வார்களா? சொல்லவே மாட்டார்கள்.

கொச்சைப்படுத்துகிறோம் என்று அர்த்தமாகுமா?

பழங்கருவிகளான வேல், வில், அம்பு எல்லாவற்றை யும் எங்கள் ஆதிகாலத்து மனிதர்கள் பயன்படுத்திப் போர் செய்தார்கள் என்று வரலாற்றுப் பெருமையாகச் சொல்லலாம். அப்படி சொல்வதனால், அதைக் கொச்சைப்படுத்துகிறோம் என்று அர்த்தமாகுமா?

முதலில் கண்டுபிடித்தது வேல்தான். அதற்குப் பிறகுதான் வில் கண்டுபிடிக்கப்பட்டது. தூரத்தில் ஏதாவது மிருகம் வந்தால், அதை நோக்கி எறியப்பட்டது தான் வேல் என்ற ஆயுதம்.

இரா.பி.சேதுப்பிள்ளை

இரா.பி.சேதுப்பிள்ளை, ஓர் அருமையான புத்த கத்தை எழுதியிருக்கிறார் ‘‘வேலும் – வில்லும்’’ என்ற தலைப்பில்.

இரும்புக் கம்பியை எடுத்து பழுக்க நெருப்பில் காய்ச்சி வார்க்கப்பட்டதுதான் வேல். மிருகங்களை நோக்கி எறியப் பயன்பட்டது.

ஆனால், வில் என்பதைக் குறி வைத்துத் தூக்கி எறிய முடியாது. பகுத்தறிவின் காரணமாக, யோசித்தன் விளைவாக, வில்லை வைத்து எறிவதற்காக ஒரு நாண் கண்டுபிடித்தான். ‘அதுதான் புராண காலத்து ஆயுதம். இந்தக் காலத்திலேயும் அதையே பயன்படுத்தவேண்டும். நம் கடவுள்களும் அதையே பயன்படுத்தினார்கள். ஆகவே, அதனையே நாம் இன்றைக்கும் பயன்படுத்த வேண்டும்’ என்று சொன்னால், யாரும் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

இன்றைக்கு அறிவியலின் கண்டுபிடிப்பான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தேவைப்படுகிறது.

எதிரி என்ன ஆயுதம் எடுக்கிறான் என்பதைப் பார்த்து, நாம் என்ன ஆயுதம் எடுக்கவேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டி இருக்கிறது.

ஆகவே, மொழி என்பது ஒரு போர்க் கருவியாக இருக்கவேண்டும். மொழி என்பது அவ்வப்போது புதுப்பிக்கப்படவேண்டும். சாணைத் தீட்டப்பட வேண்டும் என்பதற்காகப் பெரியார், ‘‘தமிழ் மொழி இன்ன மும் காட்டுமிராண்டி மொழியாகவே இருக்கக்கூடாது; வளர்ச்சி அடையவேண்டும்’’ என்று சொன்னார்.

தமிழ் வரலாற்றில் மொழி அறிஞர்கள் நிறைய இருக்கிறார்கள்.  பெரியார் செய்த அளவிற்கு, வேறு யாரும் தொண்டு செய்யவில்லை. உதாரணம், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்.

ஆங்கிலம் 26 எழுத்துகள்தான்;
தமிழ் எழுத்துகள் 247

கணினியில், ஆங்கில எழுத்துகள் வந்தாகிவிட்டது. ஆனால், தமிழ் எழுத்துகள் வர முடியவில்லை. நாம் கஷ்டப்பட்டு, தட்டச்சில் தமிழ் எழுத்துகளைப் பயன்படுவதைக் கண்டுபிடித்தோம். ஆனாலும், தவறு வராமல் இருக்கவே முடியாது. காரணம் என்ன வென்றால், ஆங்கிலம் 26 எழுத்துகள்தான்.ஆனால், தமிழ் எழுத்துகள் 247.

தந்தை பெரியார் அவர்கள், மொழியறிஞர் அல்ல; பகுத்தறிவுவாதி. எனவே, பயன் கருதி எதையும் செய்யவேண்டும் என்று நினைப்பவர். மக்களுக்கு மொழி பயன்படவேண்டும். பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்தால், அவர்களுடைய மனதில் எளிதில் பதியவேண்டும் என்று நினைத்தார்.

இன்றைக்குக் கணினியில்  தட்டச்சு தமிழ் எழுத்துகள் மிகவும் எளிமையாக்கப்பட்டு விட்டன.

ஆங்கிலத்தில் பதில் அளிக்கவேண்டுமானாலும், தமிழ் மொழியில் பதிலளிக்கவேண்டுமானாலும், மிக வும் எளிமையாக கைத்தொலைப்பேசியில் பதிவிடு கிறார்கள்.

எழுத்துகளும் எளிமையாக்கப்பட்டு இருக்கின்றன!

‘நன்றி’ என்பதற்கு, மூன்று எழுத்துகள்தான். ஆனால், ஒரு ‘கும்பிடு’ குறியீட்டைப் போட்டு விடுகிறார்கள்.  நன்றி என்பதை இப்படி மிக எளிமையாக தட்டச்சு செய்துவிடுகிறார்கள். எழுத்துகளும் எளிமை யாக்கப்பட்டு இருக்கின்றன.

அவை யாருடைய எழுத்துகள்?

பெரியாருடைய எழுத்துகள்.

பெரியார் நூற்றாண்டில்,
பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம்!

பெரியாருடைய எழுத்துச் சீர்திருத்தத்தை நடை முறைக்குக் கொண்டுவந்த பெருமை தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆருக்கு உரியதாகும். பெரியாருடைய நூற்றாண்டில் அதனை செய்தார்.

சிங்கப்பூர் உள்பட உலகத்தில் உள்ள தமிழர் வாழும் அத்துணை நாடுகளிலும் அது நடைமுறைக்கு வந்திருக்கிறது.

தமிழ் மொழி எழுத்துச் சீர்திருத்திற்குத் தந்தை பெரியார் அளவிற்குச் செய்தவர்கள் வேறு யாராவது தமிழ்நாட்டில் இருக்கிறார்களா?

எத்தனையோ தமிழறிஞர்கள் இருக்கிறார்கள்; எத்தனையோ இலக்கியவாதிகள் இருக்கிறார்கள். அவர்கள் பதவுரை, பொழிப்புரை போன்றவற்றையெல்லாம் எழுதியிருக்கிறார்கள். ஆனால், மொழி வளர்ச்சிக்கு அவர்களுடைய பங்கு என்ன?

தவத்திரு குன்றக்குடி அடிகளார் போன்றவர்கள், பெரியாருக்குத் தலைசிறந்த மாணாக்கர்கள் போல, சீடர்களைப்போல தோழமை உணர்வோடு இருந்தனர்.

- கட்டுரையின் ஒரு பகுதி

-விடுதலை நாளேடு, 21.5.25

Friday, 7 February 2025

காட்டுமிராண்டி மொழி தமிழ்’ என பெரியார் சொன்னது ஏன்?’’ - கலி.பூங்குன்றன்!

Vikatan
`` `காட்டுமிராண்டி மொழி தமிழ்’ என பெரியார் சொன்னது ஏன்?’’ - கலி.பூங்குன்றன்!
விஷ்ணுராஜ் சௌ
தந்தை பெரியார், தமிழ் மொழியில் கொண்டுவந்த எழுத்துச் சீர்திருத்தத்தை தமிழக அரசு ஏற்று, அதற்கானஅரசாணையை வெளியிட்டு இன்றோடு 40 ஆண்டுகள் ஆகின்றன.
Published: 20th Oct, 2018 at 16:44 PM

வேறு நாடுகளுக்கும் மாநிலங்களுக்கும் பயணம் மேற்கொள்பவர்களுக்கு எப்போதும் வியப்பைத் தரக்கூடியவை, அவர்கள் செல்லும் பகுதிகளில் தென்படும் மொழிகளின் விதவிதமான எழுத்துகள்தான். பொதுவாக மொழிகளைப் பேசக் கேட்கும்போது, அவை முழுமையான அழகியலை உணர்த்துவதில்லை. மாறாக, சம்பந்தப்பட்ட மொழிகளில் பேசும் வார்த்தைகளின் சத்தங்களை மட்டுமே கடத்துகின்றன. எழுத்துகளின் வாயிலாகத்தான் ஒரு மொழியை முழுமையாக நாம் அறிய முடியும். அந்த வகையில், தந்தை பெரியார், தமிழ் மொழியில் கொண்டுவந்த எழுத்துச் சீர்திருத்தத்தை தமிழக அரசு ஏற்று, அதற்கான அரசாணையை வெளியிட்டு இன்றோடு 40 ஆண்டுகள் ஆகின்றன.

ஒரு மொழியானது மனித நாகரிகங்களின் வளர்ச்சியைப்போல, காலப்போக்குக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களைத் தன்னுள் நிகழ்த்தி செவ்வியல் தன்மையை அடைந்து, மொழியியலின் அடுத்தகட்டத்தை அடைகிறது. இந்த வளர்ச்சிக்காக அவை எடுத்துக்கொள்ளும் காலத்துக்குள் பல மொழிகள் அழிந்தும், வேற்றுமொழிகளின் கலப்பால் சில மொழிகள் சிதைந்தும் போய்விடுகின்றன. இன்று பயன்பாட்டில் உள்ள பல்வேறு மொழிகள் எழுத்துகள் இல்லாமல் வெறும் பேச்சுவழக்கு மொழியாகவே இருப்பதற்குக் காரணம், அவை முழுமையான வளர்ச்சியைப் பெறாமல் போனதே ஆகும். நாம் பயன்படுத்தும் எழுத்துகளானது, தொடக்கத்தில் கோடுகளாக ஆரம்பித்து, பல்வேறு வடிவங்களாக மாற்றம் அடைந்து, பல தலைமுறையினர் அதைச் செதுக்கிவைத்து, இன்று நம் கைகளில் வந்து கிடைத்துள்ளன.

`குடியரசு’ இதழில், தந்தை பெரியார் 20.01.1935 அன்று, 'தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்' என வலியுறுத்தி தலையங்கம் எழுதினார். அதன் பின்னர், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், தன்னுடைய ஆட்சிக் காலத்தில் அதாவது 19.10.1978 அன்று, பெரியார் நூற்றாண்டில் அவருடைய எழுத்துச் சீர்திருத்தத்துக்கான அரசாணையை வெளியிட்டு, நடைமுறைப்படுத்தினார். பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தமானது 15 எழுத்துகளை உள்ளடக்கி இருந்தது. இத்தகைய எழுத்துச் சீர்திருத்தங்களை (அவ், அய், ணா, றா, னா, ணை, னை, லை, ளை, ணொ, ணோ, னொ, னோ, றொ, றோ) திராவிட இயக்கம் சார்ந்த பத்திரிகைகள் 1935-லிருந்தே நடைமுறைப்படுத்தின. 1977-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க தன்னுடைய தேர்தல் அறிக்கையில் 'எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டுவருவோம்' என்று அறிவித்திருந்தது. ஆனால், அந்தத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெற்று எம்.ஜி.ஆர் முதல்வர் ஆன பின்பு இரண்டு (அய், அவ்) எழுத்துகளைத் தவிர்த்து மற்ற 13 எழுத்துகளின் சீர்திருத்தங்களையும் அங்கீகரித்து, அதற்கான அரசாணையை வெளியிட்டார். தமிழ் மொழியில் பெரியார் அறிமுகம் செய்து, எம்.ஜி.ஆரால் நடைமுறைப்படுத்தப்பட்ட எழுத்துச் சீர்திருத்தம், 39 ஆண்டுகளை நிறைவு செய்து நாற்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்தச் சூழலில், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி திராவிடர் கழகத் துணைத்தலைவர் கலி.பூங்குன்றனிடம் பேசினோம்.

``தமிழ் மொழியின் எழுத்துச் சீர்திருத்தங்களை முதலில் பெரியார் கொண்டு வரக் காரணம் என்ன?"

``மொழியை எளிமையாக்குவதுதான். இந்த மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான அடிப்படைக் காரணம். எழுத்துகள் ஒவ்வொன்றும் வேறு அளவுகளைக் கொண்டிருந்தன. இது அச்சு பதிப்பித்தல் முறையைக் கடினமாக்கியது. எனவே, அதில் மாற்றங்களைக் கொண்டுவருவதன் மூலம் அனைத்து எழுத்துகளும் ஒரே அளவுடையதாக மாறும். `ஆங்கிலம் வெறும் 26 எழுத்துகளை மட்டும் வைத்துக்கொண்டு உலக மொழியாக மாறும்போது, எழுத்துகளை எளிமைப்படுத்துவதன் மூலம் தமிழ்மொழி நிறைய மக்களைச்  சென்றடையும்' என்றார் பெரியார். எனவே, முதலில் நம் குழந்தைகள் தாய்மொழியைப் படிக்கவும், புரிந்துகொள்ளவும் அது எளிமையாக்கப்பட வேண்டும்; அப்போதுதான் தமிழ்மொழி அடுத்த தலைமுறையைச் சென்றடையும் என்பதுதான் அதன் நோக்கம்."

``தமிழ் மொழியில் இதுபோன்று எழுத்து மாற்றங்கள் தொடர்ந்து நிகழுமா?’’

``ஆம்... தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டுதான் உள்ளன. 500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த எழுத்து வடிவம் இப்போது இல்லை. எனவே, நம் மொழி இன்னும் எளிமையாக்கப்படலாம். இவை அடுத்தகட்டத்தை நோக்கி நகரும். அந்த மாற்றங்கள் உலகம் தழுவியதாக மாறும். ஏற்கெனவே, மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ் போன்ற தமிழர்கள் அதிகம் உள்ள நாடுகளில் இதுபோன்ற மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறையில் இருந்து வருகின்றன.’’

```காட்டுமிராண்டி மொழி தமிழ்' எனப் பெரியார் சொன்னது குறித்து, பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அவர் அப்படிச் சொன்னதற்கான காரணங்கள் என்ன?"

``பெரியார், இந்தக் கருத்தை இரண்டு காரணங்களுக்காகச் சொன்னார். ஒன்று தமிழ் மொழி தோன்றிய காலஅளவை வைத்து; இரண்டாவது தமிழில் உள்ள புராணங்கள் சார்ந்த நூல்களைக் கருத்தில்கொண்டு. அதே பெரியார்தான், எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டுவந்தார். தமிழ்ப் புத்தாண்டை மாற்றினார். திருக்குறள் மாநாடுகளை நடத்தினார். ஆக்கரீதியான சிந்தனையை மக்களுக்கு ஏற்படுத்தவே இந்த விவாதத்தைப் பெரியார் கையிலெடுத்தார். ரஷ்ய மொழி போன்ற பல்வேறு மொழிகளில் நவீன இலக்கியங்கள் உலக அரங்கில் பெரிய வரவேற்பைப் பெற்றாலும், அவை அனைத்தும் கடந்த 200 ஆண்டுகளுக்குள் எழுதப்பட்டவையே. செம்மொழி அந்தஸ்தைப் பெற்ற தமிழ்மொழி மட்டுமே 2,000 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவரில் தொடங்கி, 20-ம் நூற்றாண்டில் பாரதிதாசன்வரை என தனக்கான உயர்ந்த இடத்தைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. அதுதான் தமிழின் சிறப்பு."

காகிதங்களிலிருந்து, நவீன தகவல் தொழில்நுட்பக் காலத்துக்கு ஏற்ப, தமிழ் மொழி கணினியைச் சென்றடைந்த பின்னரும், நம் தாய்த்தமிழ்நாட்டுக் குழந்தைகளைச் சென்றடைவதில் ஏற்பட்டுள்ள இடைவெளிதான் அனைவருக்கும் கவலையைத் தருகிறது.