Wednesday, 16 October 2024

சங்ககாலம் பொற்காலமா? - 2

 

பிப்ரவரி 01-15

பெண்ணடிமை – மூடநம்பிக்கை – வர்ணபேதம்-ஆரியத் தாக்கம்

– பேராசிரியர் ந.வெற்றியழகன்

 

சிறப்பிழந்த சேரமன்னர்கள்

சேரமன்னர்கள் பார்ப்பனியத்தில் ஊறித் திளைத்தனர். பார்ப்பனர்களுக்குத் தானங்களை வாரி இறைத்தனர். சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை தனக்குப் பிள்ளை இல்லை என்பதற்காக மகப்பேறு வேள்வி (புத்ரகாமேஷ்டி யாகம்) நடத்தி பிள்ளை பெற்றானாம். (பதிற்றுப்பத்து_74)

சொக்கிப்போன சோழ மன்னர்கள்!

சோழர்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன? கரிகால் சோழன் வேள்வித்தூண் (யூபம்) எழுப்பி வேள்வி முடித்தான். இராசசூயம் யாகம் நடத்தி இராசசூயம் வேட்ட சோழன் பெருநற்கிள்ளி என இவன் அழைக்கப்பட்டான்.

பறைசாற்றப் பெற்ற பார்ப்பனத் திமிர்

ஒரு பார்ப்பனப் புலவன், சோழ இளவரசன் ஒருவனோடு சூதாடும் அளவுக்கு மிக நெருக்கமாக இருந்தான். சூதாடும்போது சினம் கொண்டு சூதாடு கருவியினை இளவரசன் வீசியதால் வெகுண்ட பார்ப்பனப் புலவன் இளவரசனைப் பார்த்து, நின் முன்னோர் எல்லாம் பார்ப்பனர் நோவன செய்யார் (புறம்: 43: 14) என எச்சரித்துள்ளான். புலவன் என்பதைவிட, பார்ப்பனன் என்னும் வர்ணதர்மச் சிறப்பையே அவன் பெரிதாகக் கருதியுள்ளான். இது, ஆரிய_பார்ப்பன மேலாண்மையை எடுத்துக் காட்டுகிறதல்லவா? பார்ப்பன மேலாண்மை பறைசாற்றப்பட்ட சங்ககாலம் தமிழர்களின் பொற்காலம் ஆகுமா?

பணிந்துபோன பாண்டியர்கள்

பாண்டியர்கள் மட்டும் இளைத்தவர்களா என்ன? பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டிய மன்னன், வேள்வி செய்வதில் மிகப் புகழ்பெற்ற புரோகிதப் பார்ப்பனர்களைக் கொண்டு வேள்விகள் பல செய்து பார்ப்பனப் பணியாளராக, இருந்துள்ளார். இதனால்தான் இவனுக்கு இந்த அடைமொழியைச் சங்கப் புலவர்கள் வழங்கியுள்ளனர்.

பல்யாக சாலை அமைத்து வேள்வி நடத்தப்பெற்ற காலம் தமிழர்களின் பொற்காலமா? யாருக்குப் பொற்காலம்? தமிழர்களுக்கா? இல்லை! பார்ப்பனர்களுக்கா? எண்ணிப்பார்த்தல் வேண்டும்!

தொழப்பட்டு வந்த தொன்ம (புராண)க் கடவுள்கள்

இந்து புராண இதிகாசங்களில் வரும் கடவுள்களைச் சங்ககாலத் தமிழர் தொழுது வந்தனர். அவர்களுள், சிவன் ஒருவன். ஆரியப் புராணங்களில் சொல்லப்பட்ட முக்கண்ணன். (அகம்: 181, கலி.2; 104; புறம்-_6.) முப்புரம் எரித்தவன்_(கலி_23, 26, 156; பரிபாடல்_522) உமையொருபாகன் _ (கலி_38; புறம்_17; பதிற்றுப்பத்து_1) நீலகண்டன்(நீலமணிமிடற்றொருவன் _ கலி_142; பரிபாலை, 8,9; புறம்: 55, 56, 57) இவை சிவனைப் பற்றியவை.

முருகன்: கந்தபுராணக் கருத்தில் ஆறுகார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன் அறுவர் பயந்த ஆறு அமர் செல்வன் _ (முருகு: 25)
திருமால்: பாம்பணையான் (கலி_105, 123; பரி_13) திருமகள் கணவன் _ (பரிபா_3; கலி.104; பரிபா_18;2, பெரும்பாண்: 29)

திருமாலின் 10 அவதாரங்களில் மச்சம், கல்கி இரண்டும் நீங்கலாக 8 அவதாரக் கதைகள் கூறப்பட்டுள்ளன. கூர்மாவதாரம்_பரிபாடல்_3; வராக அவதாரம்_பரி_2,3,4,13; நரசிம்மாவதாரம்_பரி_4. பலராமாவதாரம்_நற்றி_32 புறம்_56, கலி_26, 105; வாமனாவதாரம்_கலி_124; பரி_3, முல்லைப்பாட்டு_1; பெரும்பாண்:29) பரசுராமாவதாரம்_அகம்_220; இராமாவதாரம்_புறம்_328; கிருஷ்ணாவதாரம்_அகம்_39; கலி_103; பரி_3, 134; புறம்_174; 201; மதுரைக்காஞ்சி_558; மேற்கண்ட ஆரியக் கடவுளை வணங்கிய காலம் பொற்காலமா?
பகுதி (4) நுண்ணிய நோக்கில் பெண்ணியக் கருத்துகள்

யாருக்கு யார் உயிர்?

ஆடவர்களுக்கு வினைபுரிதல் உயிர்; ஆனால், ஒளிபொருந்திய நெற்றியையுடைய இல்லத்திலேயே இருக்கும் பெண்டிருக்கு _ ஆடவர்தாம் உயிர்! என்ற பொருளில் அமைந்த சங்கப் பாடல் இது:

வினையே ஆடவர்க்கு உயிரே; வாள்நுதல் மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே! (குறுந்தொகை: 135) இந்தப் பாடல் வழி நாம் அறிவது யாது? ஆடவன் வெளியே சென்று அலுவல் பார்த்தல் வேண்டும். பெண் வீட்டைவிட்டு வெளிச் செல்லாது இல்லத்திலேயே இருத்தல் வேண்டும். அவளுக்கு உயிர் ஆடவன்; அதாவது கணவன்!. இதுதான் சங்ககாலப் பெண்ணின் நிலை! இன்னொரு கருத்து: தன் கணவன் சான்றோர் இகழும்படியாக ஒழுக்கக் கேடனாக இருப்பினும், தகைசான்ற ஒரு பெண் தன் கணவனைப் போற்றிப் புகழ்வதுதான் சால்புடையதாகும் என்னும் பொருள்பட, தகவுடை மங்கையர் சான்றாண்மை, சான்றோர் இகழினும் கேள்வனை ஏத்தி! _ (பரிபாடல்: 88_89) என்னும் சங்கப் பாடலின் உட்பொருள் எவருக்கும் விளங்காமல் போகாது! சங்ககால மங்கையின் பெருமை இதுதானா? இவ்வன்மை இருந்த காலம் பொன்னான காலமா? பெண்ணடிமைத்தனத்தின் நிலையினை இதிலிருந்து நாம் அறிகிறோம் அல்லவா?

ஒன்று உடன்கட்டை, இன்றேல் தலைமொட்டை:

மனைவி இறந்தால் கணவன் மறுமணம் செய்து கொள்ளலாம். ஆனால், மனைவிக்கு இந்த உரிமை கிடையாது! இதைவிட ஒரு கொடுமை: கணவன் இறந்தால் மனைவி அவனோடு சிதையில் படுத்து உயிர்விட வேண்டும். பூதப்பாண்டியன் மனைவி கோப்பெரும் பெண்டு இறந்த கணவன் சிதையில் தீப்பாய்ந்த கொடுமையினைப் புறநானூறு _(216) புகல்கிறது! புகழ்கிறது.

உடன்கட்டை ஏறி உயிர் துறக்காவிட்டால் கணவனை இழந்த மனைவி கொடிய கைம்பெண் (விதவை) ஆகவேண்டும். அதாவது, கைம்மை நோன்பு ஏற்க வேண்டுமாம்!

என்ன கொடுமை! எத்தனைக் கொடுமை!!

கைம்பெண்ணான பெண்ணின் தலையை முழுதும் மழித்து மொட்டைத் தலையாக்குவர். கொய்ம்மொழித் தலையொடு கைம்மையுற _(புறம்: 261:17) கைவளையல்கள் உடைத்து நொறுக்கப்பட்டது. கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி (புறம்_250;4) (தொடி_வளையல்).
இச்செயல்களால் அந்தப் பெண்ணின் அழகு குலைக்கப்பட்டது; கலைக்கப்பட்டது. கைம்பெண்டிர் பாயில் படுத்து உறங்கக் கூடாது; பருக்கைக் கற்களில் படுத்துறங்க வேண்டும்; பரல்பெய் பள்ளி பாயின்றி வதியும். வெள்ளரி விதை போன்ற சத்தற்ற நீர்ச்சோறு; எள் துவையல்; புளி சேர்த்துச் சமைத்த வேளைக் கீரை; இவைதான் அவர்கட்குரிய உணவு, உறைவிடம் (புறநானூறு: 246) இந்தச் சங்ககாலம்தான் தங்க காலமாம்!

பகுதி (5) படம் பிடித்துக் காட்டப்படும் பரத்தமை ஒழுக்கம்
இப்படியா பெண்மையை இழிவுப்படுத்துவது?

பரத்தமை ஒழுக்கம் ஒரு தொழிலாகவும், பரத்தையிடம் தங்க, தலைவியை விட்டுப் பிரிதல் ஒரு துறையாகவும், அதுவே தலைவனின் ஒரு பண்பாகவும் இருந்து வந்துள்ளது.

யாரோ? இவர் யாரோ?

பரத்தையர் என்பவர் பொதுமகளிர் எனப்பட்டனர்; வள்ளுவர் இவர்களை வரைவின் மகளிர் எனக் கூறுகிறார். பரத்தையருள், ஒரு தலைவன் மட்டுமே சென்று சிற்றின்பம் நிலையிலுள்ளவர் இல்பரத்தையர் எனப்பட்டனர். (மதுரைக்காஞ்சி: 340, 359, 379, 382) இந்தக் காலத்தில் இவர்கள் சின்னவீடு என்றும் வைப்பாட்டி (Keeper) எனவும் அழைக்கப்படுவர். சேரிப்பரத்தையர் தம்மிடம் இன்பம் துய்க்கவரும் ஆடவரிடமிருந்து செல்வம் பெற்று வாழ்ந்தனர். இவர்கள் கொண்டி மகளிர் எனவும் அழைக்கப்பட்டனர். ஆற்றுநிலப் பகுதிகளில் எல்லாம் பரத்தையர் வாழ்ந்தனர். ஆற்றங்கரை நகரங்களில் அவர்தம் எண்ணிக்கை மிகுதி.

மருதத் திணையின் மதிப்புமிகு உரிப்பொருள்:

மருதத் திணையின் உரிப்பொருளாக உள்ளது. ஊடல் _ ஊடல் நிமித்தம் (வாயில்) தலைவன், தலைவியை நீங்கி பரத்தையிடம் சென்று அவளை நுகர்ந்து வீடு திரும்பும் போக்கினையே காரணமாகக் கொண்டு ஊடுதல் (பிணங்குதல்) தலைவியின் வழக்கமாகவே இருந்து வந்துள்ளது. இதுபற்றி, கூச்சமோ நாணமோ எவரும் பட்டதாகத் தெரியவில்லை. இச்செய்திகளையே சங்க அகப்பொருள் இலக்கியங்கள் சிறப்பாகவும் பெருமையாகவும் கூறுகின்றன; மாண்புடன் பாடுகின்றன. பெண்ணிழிவும், பெண்ணடிமைத்தனமும் கொடிகட்டிப் பறந்தன.

உள்ளம் கவரும் ஊடற்காட்சிகள்:

பின்வரும் கூற்றுகள் எல்லாம் தலைவியுடையன. கொடியின் இயல்புடைய பரத்தையருடைய புழுகு (புனுகுப்பூனையின் மணப்பொருள்) முதலியவற்றிலே அளைந்த மயிர் முடியினின்றும் உதிர்ந்த பூந்தாதுப்பொடி நின் தோள்பட்டையில் கிடக்க, எம்மைத் தீண்டுதற்கு நீ யார்? திரும்பிப் போய்விடு  (கலித்தொகை: 88)

வலிந்து புகுந்து நெருங்கி கூடுதற்கு வரும் தலைவனிடம், எம் இல்லம் வாராதே! போய்விடு! பரத்தையிடம் இருந்துவந்த நீ என்னைத் தொடாதே!

என்னை மன்னிப்பாயா! மன்னித்து என்னை ஏற்றுக்கொள்! _ என்றான் தலைவன். சினம் தணிந்த அந்தத் தலைவி தலைவனுடன் கூடினாள் (கலி: 90)

ஏய்! என்னை ஏமாற்றாதே!

தலைவன் பொய்கூற, தலைவி கூறுகிறார்: பரத்தை தன் கைவிரல் நகத்தால் காமவெறியில் கீறிய கீறல் வடுவாக உள்ளது! எனக்கா தெரியாது? ஏமாற்றாதே போய்விடு (கலி: 91).
வழிதப்பி வந்துவிட்டாயா? ஏடா, மணம் கமழும் கருங்கூந்தல் பரத்தை இல்லம் செல்கிறாய் நீ! இப்பொழுது வழிதவறி வந்துள்ளாயா? இங்கே வாராதே! அவளிடமே போ! போ!!

மறக்க முடியுமா?

மாட்டிக் கொண்டேன் வசமாக உன்னிடம்! மறக்க முடியுமா மாதரசி உன்னை! அருள்புரிவாய் கருணைக்கடலே! அமிழ்தல்லவோ உன் உடலே!! (கலி:91)

சொல்லடா, வாய் திறந்து!

தலைவனிடம் தலைவி: எப்படி நீ இங்கு வந்தாய்?

தலைவன்: குதிரை ஏறி உன்னிடம் வந்தேன்?

தலைவி: எந்தக் குதிரை அந்தக் குதிரை? பரத்தைக் குதிரையா? அந்தக் குதிரைதான் உன் மார்பில் கீறியதோ? பிறாண்டியதோ? சொல்லடா வாய் திறந்து! (கலி: 96)

இவ்வாறான வேண்டத்தகாத பண்பாட்டுத் தவறான பரத்தமை ஒழுக்கம் பரவிக் கிடந்த சங்ககாலம்தான் பொற்காலமா?
பகுதி (6) பெயர் போன பெருங்குடி மக்கள் கூட்டம்!

பல வகைகள்

ஏழையரும் செல்வர்களும், அரசர்களும், புலவர்களும் குடிப்பழக்கம் மிகுந்தவராகக் காணப்பட்டனர். குடிக்கின்ற கள் பலவகைகளாக இருந்தன. தென்னங்கள், பனங்கள் (பெரும்பாணாற்றுப்படை:245) அரிசிக்கள் அல்லது நறும்பிழி, (பெரும்பாண்:275) தேக்கள் தேறல்_(மலைபடுகடாம்:171) மட்டு (பட்டினப்பாலை 894), மகிழ்_(பொருநராற்றுப்படை:84), மகிழ்ப்பழம் (பொருநர்_111), தினைக்கள்_(அகநானூறு:284), மாங்கள்(அகம்:27)

இவையன்றி, யவன நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேனாட்டுக் கள்ளும் வழக்கத்தில் இருந்தது. பொன்கலத்தில் ஊற்றி _இளம்பெண்கள் ஊற்றித்தர களிப்புடன் அரசர்கள் உண்பர். (புறநானூறு:24; மதுரைக்காஞ்சி_778)

அவ்வையார் அருந்தியகள்

அவ்வையார் போன்ற பெண்பாற் புலவர்களும் புரவலர்களும் குடிப்பழக்கம் உடையவராக விளங்கினர். சிறிது கள் கிடைத்தால் எமக்குக் கொடுப்பான் அரசன்: நிறையக் கிடைத்தால் நாங்கள் பாடி மகிழ அரசன் மகிழ்ந்து கள் உண்பான் என்ற கருத்தில், சிறிய கள் பெறினே எமக்கு ஈயும் மன்னே, பெரிய கள் பெறினே யாம்பாடத் தாம் உவந்து ஈயும் மன்னே! _ (புறநானூறு)

இது அதியமானை அவ்வையார் புகழ்ந்து பாடியது. கள் அருந்துவதில் ஆடவர் _ பெண்டிர் எனப் பாகுபாடற்ற நிலை இருந்திருக்கிறது. இந்த நிலையுள்ள காலம் பொற்காலம் என்பது பொருந்துமா?

பகுதி (7) பகுத்தறிவுக்கு மாறாகப் பரவிக் கிடந்த மூடநம்பிக்கைகள்

குருட்டு நம்பிக்கைகளின் கூடாரம்:

ஒரு சமுதாயம் பகுத்தறிவு மனப்பாங்கோடு, சிந்தித்துச் செயல்பட்டு வாழ்வதுதான் அதற்குச் சிறப்புத் தருவதாகும். சங்ககாலச் சமுதாயம் அப்படிப்பட்டதா? அகம், புறம் அதாவது, காதல்-_மோதல் (போர்) இவற்றினையே அடிப்படையாக, கருப்பொருளாகக் கொண்டது ஆகும். இத்தகு வாழ்வில், பகுத்தறிவுக்கு ஒவ்வாத, ஏன்? புறம்பாக பழமைக் கண்மூடிப் பழக்கவழக்கங்கள், குருட்டு நம்பிக்கைகள் கோலோச்சி நின்றன. பெரியாரியல் பார்வையில், சுருங்கக் கூறின், மூடநம்பிக்கைச் சேற்றில் முங்கிக் கிடந்தது. இது உண்மையா? வீண் பழியா? பார்ப்போமே?

கண்ணால் அல்லது பொறிகளால் காணாமலும் அறிவால் ஆய்ந்து பாராமலும், காரணகாரியத் தொடர்பு பற்றிக் கவலைப்படாமல் எதனையும் மடத்தனமாக நம்புவதும், ஏற்றுக்கொள்வதும் மூடநம்பிக்கைகளாகும். சங்ககாலத் தமிழர்கள் பகுத்தறிவுக்கு விடைகொடுத்துவிட்டு மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடந்தனர்.

பேய்கள்-பிசாசுகள்:

பேய்கள் இருப்பதாக சங்ககாலத் தமிழர் நம்பினர். போர்க்களம், சுடுகாடு, பொது மன்றங்கள், மரங்கள் முதலான இடங்களில் வாழ்வதாகவும் _ (பதிற்றுப்பத்து 24, 69) நள்ளிரவில் நடுத்தெருவில் அவை திரிவதாகவும் (புறம்:354; 386) பிணத்தின் புண்ணைத் தோண்டித் தின்னும் என்றும் (புறம்:370); பேய், பூதம் முதலான பெயரால் அவை அமையும் என்றும் அவர்கள் நம்பினர்.
கண்ணுபடப் போகுதய்யா!

கண்ணேறு எனப்படும் நம்பிக்கையுடையவர்களாக அவர்கள் வாழ்ந்தனர். ஒருவர் பார்வை மற்றவர்க்குத் துன்பம் செய்யும் என்றும் நம்பினர்.

மூட்டைமூட்டையாக பிற மூடநம்பிக்கைகள்:

1.    திங்களைப் பாம்பு விழுங்குவதே கிரகணம்;
2.    நாளும் கோளும் நன்மை தீமை செய்யும்;
3.    பாம்புகள் மாணிக்கங்களை உமிழும்.
4.    சகுனம் பார்த்துத்தான் எச்செயலையும் செய்தல் வேண்டும்.
5.    கனவில் காணும் காட்சிகளும் கெட்ட நிமித்தங்கள் ஆகும்.
6.    பல்லி சொல்லுக்குப் பலன் உண்டு; (நற்றிணை: 189, 323, அகம் 151.)
7.    காக்கை கரைந்தால் விருந்தினர் வருவர்;
8.    இடக்கண் துடித்தால் நன்மை; வலக்கண் துடித்தால் தீமை வரும்.
9.    இம்மை _ மறுமையில் நம்பிக்கை;
10.    குறி கேட்டல்.
11.    தெய்வம் எவர் மீதிலேனும் வெளிப்பட்டுத் தோன்றித்தான் கூற வேண்டியதைக் கூறும்.

இவைபோன்ற, இவற்றிற்கும் மேலான பல மூடநம்பிக்கைகளைச் சங்ககால மக்கள் கொண்டிருந்தனர் என சங்க இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன.

இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளில் மூழ்கிக்கிடந்த சங்ககாலம் பொற்காலம் என்று கூறுதல் எப்படிப் பொருந்தும்?

இத்தனையும் இருக்கலாம்!

சங்கத்தமிழர், வீரவாழ்வில் சிறந்து விளங்கியிருக்கலாம்; வெற்றிகள் பல கண்டிருக்கலாம்; வள்ளல்கள் வாரி வாரி வழங்கியிருக்கலாம்; பாவலர்கள் அழகிய, சீரிய பாக்களைப் பாடியிருக்கலாம்; பல நல்ல கருத்துகளை எடுத்துரைத்திருக்கலாம்; களவியல் _கற்பியல் என்னும் அகத்திணை வாழ்வை நடத்தியிருக்கலாம்; எழிற்கலைகளில்(Fine Arts) ஏற்றம் பெற்றிருக்கலாம். முத்தமிழ்த் துறைகளில் கரை கண்டிருக்கலாம்; வணிகத்தால் வளம் பல பெற்றிருக்கலாம்! இவற்றால் இவையிருந்த காலத்தை நாம் பொற்காலம் என்று சொல்லலாமா?

இல்லை என்பது ஏன்?

இத்தனை இருந்தும், பொருளியல் வாழ்வில் வர்க்கபேதம்; சமுதாய வாழ்வில் வர்ணபேதம்; ஆரியத்தின் தாக்கம், பெண்ணடிமைத்தனம்; பரத்தமை ஒழுக்கம், அமைதி தவழாத போர்ப்பண்பு, கரைகாணாத கள் குடி; முற்றிப்போன மூடநம்பிக்கைகள் இவை எல்லாம் வேரூன்றிக்கிடந்த சங்ககாலம் பொற்காலம் ஆகுமா? அறிஞர்கள் எண்ணிப் பார்ப்பார்களாக!

No comments:

Post a Comment