Monday 30 May 2016

முதலாவது சுயமரியாதை மகாநாடு ஊர்வலம்

24.2.1929 - குடிஅரசிலிருந்து...
ஊர்வலம்
தென்னிந்தியாவானது இதுவரை கண்டிராத காட்சியைச் செங்கற்பட்டில் கண்டது. ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்குச் சென்னையிலிருந்து செங்கல்பட்டுக்கு ஊர்வலம் புறப்படு வதாக ஏற்பாடு செய்திருந்தாலும் குறிப்பிட்ட தலைவர்கள் எல்லாம் வந்து சேர 8.30 மணியாகிவிட்டது. சுமார் 100 மோட்டார் கார்களும் 20, 30 பஸ்களும் சரியாய் ஒன்பது மணிக்கு தியாகராய மண்டபத்தில் இருந்து ஜே! சப்தம் முழங்க ஊர்வலம் துவக்கப்பட்டது.
ஸ்மால்காஸ் கோர்ட் ஜட்ஜாயிருந்த கேப்டன் டி.சுந்தரராவ் அவர்களின் வண்டிமுதலில் வழிகாட்ட அடுத்தவண்டியில் மாநாட்டைக் திறக்கும் கனம் மந்திரி டாக்டர்.சுப்பராயன் அவர்களும் கனம் சேதுரத்தினமையர் அவர்களும் இண்டாவது வண்டியில் கனம் மந்திரி முத்தையா முதலியார் அவர்கள் கனம் பழையகோட்டை பட்டக்காரர் அவர்களும் மூன்றாவது வண்டியில் வரவேற்பு அக்கிராசனர் திரு ராவ்பகதூ£ர் எம். கிருஷ்ணசாமி அவர்களும் பிறகு வரிசையாக கோவை, திருச்சி, திருநெல்வேலி, வடஆற்காடு, தஞ்சை,
சேலம் முதலிய ஜில்லா போர்ட் தலைவர்களும் மதுரை, சேலம் முதலிய முனிசிபல் தலைவர்களும் மதுரை உத்தமபாளையம் சோமசுந்தர முதலியார் அவர்களும் தாலுகா போர்ட் தலைவர்களும் இவைகளின் அங்கத்தினர்களும் சட்டசபைப் பிரதிநிதிகளும் மற்றும் சென்னைப் பிரமுகர்களும் வெளி ஜில்லா பிரமுகர்களும் வரிசை வரிசையாக புறப்பட் டார்கள்.
வண்டிகள் சென்னை எல்லையை விட்டு தாண்டி யதும் மந்திரிகளுக்கும் ஈ.வெ.ராமசாமிக்கும் தலைவர் பாண்டி யருக்கும் மற்றும் பல பெரியோர்களுக்கும் வழி நெடுக வண்டிகளை நிறுத்தி நிறுத்தி ஊர் ஊருக்கு வளைவுகளும் பந்தல்களும் மேளதாளங்களும் ஏற்படுத்தி இருந்த இடங்களில் வரவேற்புப் பத்திரங்கள் வாசித்து கொடுத்தலும் மாலைகளும் சிற்றுண்டிகள்,
வழங்கலும் போட்டோ படங்கள் எடுப்பதுமான காட்சிகளே நடந்த வண்ணமாக இருந்தன. வழியில் மாநாட்டுத் தலைவர் திரு சவுந்திரபாண்டியரும் திருவாளர்கள் மகா நாட்டுக் கொடி உயர்த்தும் பி, டி, ராஜனும் பனகல்அரசர் படம் திறக்கும் கனம் கிருஷ்ண நாயரும் வந்து சேர்ந்து கொண் டார்கள் வண்டிகள் மணிக்கு 30 முதல் 40 மைல் வேகத்துக்குக் குறையாமல் பறந்தும் வழி நெடுக வரவேற்புகள் பெற்று செங்கல்பட்டு வந்து சேர 11-30 மணி ஆகிவிட்டது,
சாலையில் வழி நெடுக உள்ள ஆயிரக்கணக்கான தென்னனமரங்கள் சுண்ணாம்பு பூசி தலைப்பில் செம்மண் பூசி   இருந்த காட்சி வழி நெடுக காவல் சேவகர்கள் நிற்பது போலவே இருந்தது.
செங்கல்பட்டு வைபவம்
செங்கல்பட்டு முனிசிபல் எல்லைக்கு வந்ததும் பாண்டு நாதசுரம் நகார் அதிர்வேட்டுகள் ஜே சப்தங்கள் முதலியவை இடிகளை போல் ஒலிக்க ஆரம்பத்தில் சுமார் 10000 ஜனங் கள்போல் இருந்து கொடிகள் ஆட்டுவதாலும் வேஷ்டிகள் வீசுவதாலும் வரவேற்று பெரிய வண்டியில் தலைவர்களை ஒன்றாக உட்கார வைத்து மாலைகள் போட்டு உதிர் புஷ்பங் களை வண்டிகளிலிருந்து ஒவ்வொரு வரும் அள்ளி அள்ளி வீசி தலைவர்கள் புஷ்பக்குவியலுக்குள் மறைந்து திக்கு முக்காடும்படி இறைத்தார்கள்.
வீதிகள் எல்லாம் மஞ்சள் வெல்வெட்டு விரிப்பு விரித்தது போலவே புஷ்பங்கள் வாரி இறைத்தகாட்சி காணப்பட்டது. சுமார் இரண்டு பர்லாங்கு தூரம் ஊர்வலம் வந்ததும் ஊர்வலம் நகருவதற்கு முடியாமல் ஜனங் கள் சுமார் 20, 30 ஆயிரம் பேர்கள் போல வழி நெடுக வந்து கூடி விட்டார்கள். சுமார் ஒரு மைல் செல்ல ஒன்றரை மணி நேரமாய் விட்டதென்றே சொல்லலாம். ஊர்வல ஆரம்பத்திலிருந்தும் மாநாட்டு பந்தல்வரை ஒன்றரை மைலுக்கும் ஒரே தொடர்ச்சியாக கம்பவங்கள் நட்டு அவற்றிற்கு கொடித் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.
பந்தலலங்காரம்
மகாநாட்டு மைதானத்தின் முன் புறம் ரோட்டு ஓரத்தில் வாயிலில் போட்டிருந்த முதல் பிரவேச பந்தல் சலவைக்கல் கட்டடம் எனவே மதிக்கத்தக்க மாதிரி சுமார் 20 அடி உயரத்திற்கு மேலாகவே போட்டு ஆயிரம் கொடிகள் போல கட்டி. 100க்கணக்கான கலசங்கள் வைத்து பார்வைக்கு ஒரு பெரிய நவாப்பு அரண்மனை வாயிலாகவே காணப்பட்டது.
ஒவ்வொரு வரும் கையில் தொட்டுப் பார்த்த பிறகே அது துணிகளின் மீது வர்ணங்களால் தீட்டப்பட்டது என்.று அறிய முடிந்தது மைதானத்திற்குள்ளும் சுமார், 3,4 பர்லாங் சுற்றளவுக்கு வளைத்து வரிசையாக அலங்கரித்த கடைகளை எற்படுத்தி விட்டு விட்டு பொருள் கண்காட்சிகளும், தொழில்கண்காட்சி களும் ஒரு புறமும் ஆங்கிலமுறை ஓட்டல்கள் சிற்றுண்டிசாலைகள், விவசாயகண்காட்சிகள்,
யந்திர கண் காட்சிகள் ஒரு புறமும், மாநாடு சம்பந்தமான நிர்வாக கூட்டங்கள் வாசகசாலைகள் முதலியவை மத்தியிலும் இடை இடையே பெரிய பெரிய உருவச்சிலைகளும் பதுமைகளும் நிறுத்தப்பட்டும் சிறு சிறு நந்தவனங்களாக பிரித்து அலங்கரித்த புஷ்பச் செடிகளும் சுமார் 2000 தோரண விளக்குகள் வரை மைதானத்தை சுற்றிலும் மரங்களின் மீதும் கொடிகளின் மீதும் மரத்துக்கு மரம் கொடிக்கு கொடி தோரணங்களாக கட்டப் பட்டிருந்ததோடு, மகாநாட்டுப் பந்தலின் முன்புறம் பெரிய அரண்மனை மண்டபம் போல்கட்டப்பட்டு பெரிய பெரிய சிகரங்களும் குளோப்புகளும் கலசங்களும் வைத்து அவை களின் மேல் கொடிகள்.
பறக்க விட்டு காந்த விளக்குகளால் சுயமரியாதையே பிறப்புரிமை என்று எழுதப்பட்டு காந்த விளக்குக் கென்றே ஒரு தனி இஞ்சின் வேலை செய்ய சுமார் அதில் ஒரு ஆயிரம் விளக்குகள் மகாநாட்டுப் பந்தல் அலங்காரத்தில் முப்புறமும் மற்ற பக்கத்திலும் பல வர்ணங்களில் எரிய, அவ்வளவு பெரிய பந்தல் முழுதும் உட்புறத்திலும் மேம்புறத்திலும் நான்கு பக்கங் களிலும் ஓலைகள் தெரியாமல் துணிகள் கட்டி காகிதத் தோர ணங்களும், கொடிகளும்,
பொம்மைகளும் காகிதப்பூக்களும் கொண்டு அலங்கரித்து பெட்ரமேக்ஸ் காஸ் விளக்குகள் இருமருங்கிலும் தோரணங்கள் போலவ வரிசையாகத் தொங்கவிட்டு 4, 5 இடங்களில் லவுட்ஸ்பீக்கர் என்னும் ஒலிக் கருவி கட்டப்பட்டு மேடையில்  சுமார் 500 பேர்கள் மாத்திரம் கொள்ளும்படி நாற்காலிகளும் மேடையின் இருமருங்கிலும் பெண்களும் ஒரு புறம் வரவேற்பு அங்கத்தினர்களும் முன்புறம் பிரதிநிதிகளும் உட்காரத்தகுந்த மாதிரி அமைத்து இருந்ததானது பொதுஜன அன்பையும் பக்தியையும்பெற்ற ஒரு பெரிய சக்கரசவர்த்தி முடி சூட்டு வைபவக்காட்சி போலவே இருந்தது.
விஜயம் செய்தார்கள்
ஊர்வலம் பந்தலுக்குள் வருவதற்கு முன் பிரதிநிதிகள் பந்தலுக்குள்ளும் மேடைக்குள்ளும் நிறைந்துவிட்டார்கள். மகாநாட்டுக்கு ராமநாதபுரம் ராஜா வெங்கிட்டகிரி பழைய கோட்டை பட்டக்காரர் முதலிய ஜமீன்காரர்களும் சென்னை மாகாணத்து மூன்று மந்திரிகளும், மத்திய மாகாண மந்திரி திரு ராகவேந்திராவ் நாயுடுவும், நிர்வாகசபை இந்திய அங் கத்தினர்கள் திருவாளர்கள் கனம் கிருஷ்ண நாயர்,
கனம் மகமது உஸ்மான் ஆகியவர்களும், அரசாங்க காரியதரிசி திரு வெங்கிட்டநாராயணாவும்  ஸ்மால்காஸ் கோர்ட் சீப் ஜட்ஜி தணிகாசலமும், சென்னை கார்ப்பரேஷன் தலைவர் தியாக ராயர் குமார் பி. டி. குமாரசாமியும் மற்றும் திருவாளர்கள் எ.டி.பன்னீர்செல்வம், குமாரசாமி செட்டியார், டபுள்யு.பி.ஏ. சவுந்திரபாண்டிய நாடார், சி.எஸ். இரத்தினசபாபதி, டி.எம். நாராயணசாமி பிள்ளைகாரர் கே. கிருஷ்ணசாமி நாயுடு,
என். எல்லப்பச்செட்டியார் எம்.கே.கிருஷ்ணசாமி நெல்லூர் ராமச் சந்திர ரெட்டியார் முதலிய  10 ஜில்லா போர்ட் பிரசிடெண்டுகளும் திருவாளர்கள் எ. ராமசாமி, பத்மநாப முதலியார், ஆர்.எஸ்.நாயுடு, சோலை நாடார், அப்துல் ரசாக் சாயபு, தம்மண்ண செட்டியார், வேதாசலம், எம்.கோவிந்தராஜூலு முதலிய சுமார் முப்பது முனிசிபல் சேர்மென்களும் திருவாளர் ஷண்முகம் பிள்ளை,  ராஜம்நாயுடு, ரங்கசாமி ரெட்டியார்,
உமாமகேஸ்வரன், அய்.குமாரசாமி, முதலிய 20,30 தாலுகா போர்டு தலைவர்களும் சுமார் 1000 பேர்களுக்கு மேல்பட்ட ஜில்லா, தாலுகா போர்டு, முனிசிபல் மெம்பர்களும், சற்றேக்குறைய எல்லா சட்டசபை அங்கத்தினர்களும் திரு க.நமசிவாய முதலியார் முதலிய நூற்றுக்கணக்கான பண்டிதர்களும், திருவாளர்கள் உத்தம பாளையம் சோமசுந்தர முதலியார் போன்ற 500 மிராசுதார்களும், முத்து நாடார், ஆரியா, கண்ணப்பர்,
முருகப்பா தாவுத்க்ஷா போன்ற நூற்றுக்கணக்கான பத்திராதிபர்களும் சிறீமதி நாயகம் போன்ற 600, 700 பெண்மணிகளும் அனேக பிரமுகர்களும் செட்டிநாட்டிலிருந்து வை.யுசு.ஷண்முகம், சொ.முருகப்பா, அருணாசலம் முதலிய நாட்டுக்கோட்டை கனவான்களும், திருவாளர்கள் பண்டிட் அகந்தகம், சாமி சகஜானந்தர்,
கோவை வீரய்யா, மதுரை பிள்ளை சிவராஜ் முதலிய கொடுமைப் படுத்தப்பட்ட வகுப்பு 400, 500 பிரதிநிதிகளும், திருநெல்வேலி, மதுரை, திருச்சி தஞ்சை, தென்னாற்காடு, வடஆற்காடு, செங்கல் பட்டு, சேலம்,
கோவை முதலிய தமிழ் ஜில்லாக்களிலிருந்து ஜில்லாவுக்கு 400, 500 பிரதிநிதிகளுக்கு குறையாமல் சில ஜில்லாக்களில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பிரதிநிதிகளும் பல ஜில்லாக்களிலிருத்தும் ஸ்த்ரீகள் பிரதிநிதிகளாக சுமார் 600, 700 சீமாட்டிகளும் தொழிலாளிகளில் பல பாகங்களிலிருத்தும் சாமியுல் நடேச முதலியார் காளியப்பன் போன்ற சுமார் ஆயிரம் தொழிலாளிகளும் புதுச்சேரியிலிருந்து திரு ராஜகோபால் தலைமையில் 40, 50 பிரதிநிதிகளும், திருவாங்கூரிலிருந்து 40, 50 பிரதிநிதிகளும்,
வெளிமாகாணப் பிரதிநிதிகள்
மைசூரிலிருத்து மைசூர் சட்டசபை மெம்பர் திரு நீலகிரி சஞ்சீவப்பா தலைமையில் 20, 30 பிரதிநிதிகளும் மற்றும் லாகூர், பம்பாய், கல்கத்தா மத்திய மாகாணம் முதலிய இடங்களிலிருந்து பல பிரதிநிதிகளும் மலேயா நாட்டிலிருந்து சரோஜினி ஓட்டல் சொந்தக்கார் திரு எஸ். ராஜூ அவர்கள் தலைமையில் 10, 20 பிரதிநிதிகளும் மற்றும் ஆந்திராவிலிருந்து திரு. சி.வி.ரெங்கம்,
செட்டியார் கதருடனும் பல பிரதிநிதிகளுடனும் மற்றும் ஒத்து ழையாமையில் ஈடுபட்டு ஒரு வருஷம், இரண்டு வருஷம், மூன்று நான்கு, அய்ந்து தடவை சிறை சென்றவர்களும் ஒத்து ழையாமையை ஒழிக்க ஏற்பட்ட சுயராஜ்யக்கட்சியை சேர்ந் தவர்களும் காங்கிரஸ் மிதவாதம்-அமிதவாதம்-பெசண்ட் கோஷ்டி-ஜஸ்டிஸ் கட்சி ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த வர்களும் முழு சுதந்திரம் வேண்டுபவர்களும், பார்ப்பனர்களும், மகமதியர்களும், கிறிஸ்தவர்களும், ஒடுக்கப்பட்டவர்களும், சைவசமாஜக்காரர்களும்,
வைணவ சமயக்கார்களும் பவுத்த சமயத்தார்களும் ஆரியசமாஜிகளும் பிரம்மஞான சங்கக்காரர் களும் ,வெள்ளைக்காரமாதுகளும் பத்திராதிபர்களும் மேல் கண்ட துறைகளில் ஈடுபட்டு. பிரச்சாரம் செய்யும் தொண் டர்களும், பண்டிதர்களும், புராணபிரச்சாரகர்களும், சன்யாசி களும், சாமியார்களும், கோவில் டிரஸ்டிகளும் இந்து ரிலிஜி யஸ்போர்ட் தலைவர்கள் கமிஷனர்கள், தேவஸ்தான கமிட்டித் தலைவர்கள் அங்கத்தினர்கள் டிரஸ்ட்டிகள் குருமார்கள், அர்ச்சகர்கள் - சர்க்கார் நிர்வாக அதிகாரிகள்,
சர்க்கார் காரிய தரிசிகள் உத்தியோகத்திருக்கும் ஜில்லா ஜட்ஜி, சப்-ஜட்ஜிகள் ஸ்மால்கோர்ட் ஜட்ஜிகள் கலெக்டர்கள் டிப்டி கலெக்டர்கள் மற்றும் மாதம் 1000, 2000 ரூபாய் பெறும் உத்தியோகஸ்தர்கள் சில்லறை உத்தியோகஸ்தர்கள் ராஜாக்கள், ஜமீன்தாரர்களும், குடியானவர்களும் கூலிக்காரர்களும் பெண்களில் மாங்கல்ய ஸ்திரீகள் என்பவர்களும் தாசிகள் என்பவர்களும் மற்றும் எல்லாப் பிரிவுக்காரர்களும் பிரதிநிதிகளாய் வந்திருந்தது இதில் முக்கியமாய்க் குறிப்பிடத்தக்கதாகும்.
-விடுதலை,20,2,16

Sunday 29 May 2016

கி.மு. 500இல் தொடங்கி கி.பி. 500 வரை பரவி வந்த ஜாதிமுறை


வேதங்களும், ஸ்மிருதிகளுமே இந்தப் பிளவுகளுக்குக் காரணம்

தேசிய மரபணு ஆய்வு
மய்யத்தின் தலைவர் பேட்டி


கோல்கத்தா பிப் 8-_ சமூகத்தில் மக்களை வர்ணாசிரம முறையில் கூறு போட்டவை வேதங்க ளும், ஸ்மிருதிகளுமேதான் என்று மரபணு ஆய்வு மய்யத்தின் தலைவர் முஜும்தார் செய்தியாளர் களிடம் கூறினார்.
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் வாழ்பவர் களின் மரபணுவைப் பரிசோதனை செய்த  உயிரியல் ஆய்வு மய்யம்  இந்திய தீபகற்பத்தில் ஒற்றுமையுடன் வாழ்ந்த மக்கள் 70 தலைமுறைகளுக்கு முன்பு அதாவது சுமார் 5 ஆம் நூற்றாண்டிற்கு பிறகு கடுமையாக்கப்பட்ட வர்ணாசிரம அமைப்பி னால் ஏற்பட்ட ஜாதிரீதியிலான சமூகப்பிளவால் திருமண பந்தங்கள் சுருங் கின. என்று மரபணு ஆய்வுகள் மூலம் கண்டறி யப்பட்டுள்ளது.
376 பேர் தேர்வு
கோல்கத்தாவைச் சேர்ந்த தேசிய மரபணு பகுப்பாய்வு மய்யம் இந் தியா முழுவதிலும் 20 பகுதிகளில் வேறுபட்ட இனத்தைச் சேர்ந்த 376 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களின் மரபணுக் களை பரிசோதனை செய்தது, இச்சோதனையின் முடிவு கோல்கத்தாவில் மரபணு ஆய்வு நிறுவனம் வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
“இந்தியாவில் தற்போ தைய மக்கள் இனத்தில் 5 வேறுபட்ட பிரிவுகள் காணப்படுகின்றன. ஒன்று தென் இந்தியாவில் வசிக்கும் (திராவிட) இனம்  மத்திய ஆசியப் பகுதியிலிருந்து வந்த இனம் (ஆரியர்கள்), ஆஸ்ட்ரோ-ஆசிய இனம் (வங்காளிகள் மற்றும் பீகாரிகள்), மங்கோலியப் பகுதியில் இருந்து வந்த இனம்(வடகிழக்கு பகுதி வாழ் மக்கள்) அந்தமான்-நிகோபர் பகுதி மக்கள் என அய்ந்து பெரிய பிரிவுகள் தற்போது காணப்படுகின்றன. 
சுமார் 1500 ஆண்டு களுக்குப் முன்பு தென் இந்திய இனம் மற்றும் ஆஸ்டிரோ-ஆசிய இனங் களிடையே திருமண உறவுகள் இருந்தன, இவர்களுடைய குழந்தை களின் மரபணுக்கள் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாக காணப் பட்டன,  ஆனால் 1500 ஆண்டுகளுக்குப் பிறகு வர்ணாசிரம முறைகள் கடுமையாக மக்களிடையே புகுத்தப்பட்டன.
பிளவுபட்டனர் மக்கள்
இதன் விளைவாக சமூகம் பலஜாதிகளாக பிளவுபட்டது, ஜாதியை விட்டு வெளியே நடக் கும் திருமண உறவை வர்ணா சிரம கொள்கைகள் தடை செய்தன. இத னால் திருமணங்கள் ஜாதி களுக்குள்ளே நடை பெற்றன. இதன்விளைவு இந்திய தீபகற்பத்தில் நூற்றாண்டுகளாக ஒற்று மையுடன் வாழ்ந்து வந்த மக்களிடையே பிளவு தொடங்கியது என்று அந்த ஆய்வுகள் கூறு கின்றன.

பத்திரிகை யாளர்களிடம் பேசிய ஆய்வுக் குழுவின் தலைவர் பார்த்தா மூஜும்தார் கூறிதாவது: இந்தியா முழுவதிலும் 20 பகுதிகளை தேர்வு செய்து அங்கு வாழ்ந்த 376 -பேரின் மரபணுக்கள் பரிசோதனைக்கு எடுத் துக் கொண்டோம். இம் முடிவுடன் மத்திய ஆசியா, கிழக்காசியா, சீனம் மற்றும் இந்தியப் பெருங்கடல் நாடுகளிடையே வாழும் மக்களின் மரபணு முடிவுடன் ஒப்பிட்டுப் பார்த்தோம். இதன் மூலம் இந்தியாவிற்குள் பல்வேறு காலகட்டத்தில் மனிதர்களின் வருகை பற்றி தெளிவான ஒரு வடிவம் கிடைத்தது. அதே நேரத்தில் இந்தியச் சமூகவாழ்வியல் முறையை வரலாற்றுப் பதிவுகள் மூலம் எங்கள் முடிவையும் ஒப்பிட்டுப் பார்த்தோம் இதனடிப்படையில் 5 மற்றும் 6 ஆம் நூற்றாண்டில் திடீ ரென இந்தியாவில் ஒற்றுமையுடன் வாழ்ந்த மக்களுக்கிடையான திரு மண உறவு நின்றுவிட்டன.
ஜாதிகளுக்குள் திருமண உறவு கட்டாயம்
வரலாற்றுச் சான்றாவ ணங்களின் படி இந்த கால கட்டத்தில் தான் வர்ணாசிரம முறை கடுமையாக பின்பற்றப் பட்டன. இதன் மூலம் பல்வேறு ஜாதிப் பிரிவுகள் தோன்றின. ஜாதிகளுக்குள்ளான திருமணஉறவு கட்டாய மாக்கப்பட்டன. இதற்குக் காரணமாக வேத நூல்கள் மற்றும் ஸ்மிருதிகள் சான்றாக காட்டப்பட்டன.
வர்ணாசிரம முறைகள் கிறிஸ்து பிறப்பிற்கு முன்பே இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் தோன்றிவிட்டன. ஆனால் அந்த வர்ணாசிரம முறைகள் மிகவும் சிறிய குழுக்களிடையே இருந்து வந்தன. முக்கியமாக வட இந்தியாவில் இருந்து இந்தியா முழுவதும் பரவிய அந்தக்குழுக்கள் மூலம் வர்ணாசிரம ஜாதி முறை மெல்ல மெல்ல இந்தியாமுழுவதும் பரவி யது, அதாவது கிமு 1500-களிலிருந்து தொடங்கி கிபி 1500 வரை இந்தியாவில் வாழ்ந்த மக்களிடையே இந்த ஜாதிப்ப்பிரிவு முறைகள் பரவ தொடங்கி. அதன் பின் கடுமையாக இறுகின.
வரலாற்றுப் பதிவுகள் மற்றும் மரபணு ஆய்வுகளின் மூலம் தெளிவாகத் தெரிகிறது; மேலும் பல நூற்றாண்டுகளாக தாய்வழிச்சமூகமாக இருந்த போது சமூக இணைப்பு ஏற்பட்டு எந்த ஒரு சமூகப் பிளவும் இன்றி திருமணம் மற்றும் குழந்தைபெறுதல் போன்றவை இந்தியா முழுவதும் பொதுவாக இருந்தது, அதன் பிறகு தந்தைவழிச் சமூகம் மற்றும் குலம் வம்சம் போன்ற விதிகள் தோன்றி கடுமையாக்கப்பட்டது, என்று கூறினார்
(‘டைம்ஸ் ஆப் இந்தியா’ 6.2.2016)
இந்தியா முழுவதும் பரவி இருந்த (திராவிட இனம்) சிந்துச் சமவெளி நாகரிகத்திற்கு முன்பாகவே சிறந்துவிளங்கிய நாகரிகம் கொண்ட மக்கள் இருந்ததாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சான்றாக தூத்துக்குடியில் உள்ள ஆதிச்சநல்லூர், ஆந்திராவில் உள்ள கடப்பா, மகராஷ்டிராவில் உள்ள நாக்பூர், குஜராத்தில் உள்ள தோளவீரா, மற்றும் பிகாரில் உள்ள கயா போன்ற இடங்களில் நடந்த அகழ்வாய்வில் இந்தியா முழுவதும் ஒன்றுபட்ட கலாச்சார மக்கள் வாழ்ந்த தடயங்கள் கிடைத்துள்ளன. மத்திய ஆசியாவில் இருந்து வந்த இனக் குழுக்களின் ஆதிக் கம் மெல்ல மெல்ல இந்தியா முழுவதும் பரவி மக்களை தென் இந்தியாவில் மட்டும் வாழும் இனமாக சுருக்கியது.
பவுத்தர்கள், சமணர்கள் படுகொலை
முக்கியமாக தென் இந்தியாவில் சமணமும், பவுத்தமும் மக்களை ஒன்றிணைத்துக் கொண்டு இருக்கும் போது வட இந்தியாவில் வேதமதம், சனாதனம் மற்றும் தென் இந்தியாவில் சைவம் வைணவம் போன்ற மதங்கள் உருவாகின. இந்த மதங்கள் வர்ணாசிரமக் கொள்கைகளை தங் களுக்கு எடுத்துக்கொண்டு அதன் படி இம்மதத்தை ஏற்ற மக்களும் வாழ வற்புறுத்தப்பட்டது. இதை எதிர்த்தமக்களும் அவர்களின் தலை வர்களும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர்.

முக்கியமாக திருநெல்வேலி, மதுரை, திருச்சி, விஜயநகரம், சதாரா போன்ற இடங்களில் வாழ்ந்த சமண பவுத்த துறவிகள் கழுவேற்றுவதன் மூலமும், தீயிலிட்டு கொழுத்தியதன் மூலமும், எண்ணெய்செக்குகள் மற்றும் கரும்பு பிழியும் உபகரணங்களின் மூலம் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். இம்மதங் களைப் பின்பற்றுபவர்களை பய முறுத்துவதற்காகவே இவ்வாறு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். மதுரையில் மட் டும் எண்ணாயிரம் சமணர்கள். கழுகு மலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமணத்துறவிகள் கழுவி லேற்றப்பட்டனர். சதாரா (மகா ராஷ்டிரா)வில் சுமார் 12 ஆயிரம் பவுத்த துறவிகள் தீயிலிட்டுக் கொளுத் தப்பட்டனர். இதை சிலைகளாகவும் ஓவியங்களாகவும் செதுக்கியும் தீட்டியும் வைத்துள்ளனர்.
-விடுதலை,9.2.16

Sunday 22 May 2016

தலித் மக்களுக்கு கல்விக் கட்டணத்திலிருந்து விலக்களிக்கும் அரசாணை எண் - 92




சுயநிதி கல்லூரிகளில் தலித் மக்களுக்கு கல்விக் கட்டணத்திலிருந்து விலக்களிக்கும் அரசாணை எண் - 92







Friday 13 May 2016

பெரியார் திடலில் உள்ள அரங்கம் ஒரு பொது அரங்கம்!

நற்கருத்துகளைப் பரப்புவதாக நாட்டியக் கலை அமைய வேண்டும்

தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை

சென்னை, டிச. 31
- சரஸ்வதி பரத நாட்டிய வித்யாலயா சார்பில், உலக சாதனையாக, தொடர்ந்து, 15 மணி நேரம் பரத நாட்டியத் திருவிழா சென்னை வேப்பேரி பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நேற்று (30.12.2015) நடைபெற்றது.
காலை 5 மணிக்குத் தொடங்கி மாலை 7 மணிவரை தொடர் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்று உலக சாதனை படைத்துள்ளது. நிகழ்ச்சியின் இறுதி யில் நடைபெற்ற பாராட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கலந்துகொண்டு நாட்டியம் ஆடிய குழந்தைகள் மற்றும் குழுவினர் மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் அனைவரையும் பாராட்டிப் பேசினார்.
தமிழர் தலைவர் பாராட்டு
தமிழர் தலைவர் ஆசிரியர் பாராட்டுரையில் குறிப்பிட்டதாவது:
உலகம் இதுவரை காணாத சாதனை என்கிற பெருமைக்குரிய 14 மணிநேரத்துக்கு தொடர்ந்து ஆடி சாதனை செய்தது இந்த பெரியார் திடலிலே ஒரு பெரிய வரலாற்று நிகழ்ச்சியாகும்.
இது ஓர் எதிர்பாராத வாய்ப்பு எனக்கு. எதிர்பார்க் கவே இல்லை. வாழ்க்கையில் எதிர்பாராது கிடைக்கின்ற இன்பத்துக்கு இணையே இல்லை. உங்கள் முகங்களை எல்லாம் பார்க்கின்ற போது, நீங்கள் ஆடிய ஆட்டத் தையெல்லாம் சுவைக்கின்றபோது, மறக்க முடியாத அனுபவம் ஏற்பட்டிருக்கின்றது.
நல்ல பூக்கள் பூத்துக் குலுங்குகின்ற பூந்தோட்டத் திலே, நடுவிலே சென்றால், எவ்வளவு பெரிய மகிழ்ச்சி ஏற்படுமோ அதுபோல, சிரித்த மலர்களாக, நீங்கள் ஆடியது, குழந்தைகளாக ஆடவில்லை, மலர்களாக ஆடி, நீங்கள் எங்களை தென்றலைப்போல மகிழ் வித்திருக்கிறீர்கள்.
உங்களைத் தயாரித்திருக்கிற தோட்டக்காரர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. மிகப்பெரிய அளவுக்கு இந்த நிகழ்ச்சியிலே வித்தியாசமாக இருக்கிறது. என்னடா இது? கருப்புச் சட்டைக்காரர்கூட இங்குவந்து உட்கார்ந்திருக்கிறாரே? இவரும் சேர்ந்திருக்கிறாரே என்று கூட நினைக்கலாம்.
தமிழ் இணைக்கிறது
நம்மை எது பிரிக்கிறது என்பது முக்கியமல்ல. எது  இணைக்கிறது என்பதுதான் முக்கியமானது. அந்த அடிப்படையிலே கலை நம் எல்லோரையும் இணைக் கிறது. தமிழ் இணைக்கிறது. ஆதிகாலத்து மனிதன் முதன்முதலிலே அவன் இருந்த நேரத்திலேகூட பாட்டுப்பாடினான்.
பிறகு ஆட்டம் ஆடினான். எனவே, அந்த ஆட்டமும், பாட்டும்தான் வாழ்க்கையிலே நாம் இளைப்பாறுவதற்கு புத்துணர்வு ஊட்டுவதற்கு மிகப்பெரிய மாமருந்து. அதை இந்த செல்வங்கள் தந்திருக்கிறார்கள். காலை 5 மணிக்குத் தொடங்கி மாலை 7 மணி வரை நடத்தியிருக்கிறார்கள் என்றால்,
இதில் உலக வரலாற்றில் நீங்கள் இடம் பிடித்திருக் கிறீர்கள் என்று சொன்னால், இந்தப் பெருமையை, இந்தத் துணிவை மேலும்மேலும் பெருக்கிக்கொள்ள வேண்டும். இதை தயாரித்தவர்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. எனவே, இப்படிப்பட்ட இந்த முயற்சி சிறப்பாக இருக்க வேண்டும்.
இது ஒரு பொது அரங்கம்!
இங்கே சொன்னார்கள், இந்த அரங்கத்தை சிறப்பாக கொடுத்தீர்கள் என்று. இந்த அரங்கத்தில் உள்ளே வந் தீர்கள் என்றால், சரசுவதி இருக்கிறது, மற்றது எல்லாம் இருக்கிறதே இவர்கள் எல்லாம் மாறிவிட்டார்களா என்று சிலபேர் நினைக்கலாம். நாங்களும் மாறவில்லை, அவர்களும் மாறவில்லை.
அவரவர்கள் கொள்கை அவர்களிடம் இருக்கிறது. ஆனாலும், தந்தை பெரியார் அவர்கள் இந்த அரங்கத்தை உருவாக்கியபோது ஒன்றைச் சொன்னார்கள்.
எவ்வளவு மாறுபட்ட கருத்து உள்ளவர்கள், வேறுபட்ட கொள்கை உள்ளவர்களுக்குகூட இது பொது அரங்கம். பொது இடத்திலே எல்லோரும் இருக்க வேண்டும்.  என்னைத் தாக்கிப் பேசுகிறவர் களாக இருந்தால்கூட அவர்களுக்கும் நீங்கள் கொடுக்கவேண்டும் என்று எங்கள் தொண்டர்களுக்குக் கட்டளை இட்டார்கள்.
இன்றைக்கு இந்த அரங்கம், ஒரு பொது அரங்கம், இது அழகாக இருக்கிறதோ இல் லையோ, நீங்கள் இதை அழகு படுத்தியிருக்கிறீர்கள். அதற்காக நன்றி. நன்கு பயிற்சி அளித்துள்ளீர்கள். இந்த பிள்ளைகள் இன்னும் சிறப்பாக உருவாக வேண்டும். நாங்கள் களைப்பில்லாமல் போராடுபவர்கள். நீங்கள் களைப்பில்லாமல் ஆடுகிறவர்கள். அந்த வகையிலே மகிழ்ச்சிக்குரியவர்கள்.
எதிர்காலத்தில் நீங்கள் ஒவ்வொருவரும் சிறந்த நாட்டியப் பேரொளிகளாக சிறந்து விளங்க வேண்டும். நாட்டிய செல்வங்கள் பெருக வேண்டும். அதன்மூலம் நல்ல கருத்துகள் மக்களுக்கு செல்ல வேண்டும். வாழ்க்கையிலே எல்லா கோணத்திலும் இருக்கின்ற செய்திகளையெல்லாம் எடுத்துச்சொல்லி,
‘செம்மொழி’ நடனத்தை பார்க்கிறபோது, எம்மொழி எவ்வளவு பெரிய சிறப்பான மொழி என்பதை குறுகிய காலத்திலே எடுத்துக்காட்டியிருக்கிறீர்கள். உங்களைத் தயாரித் திருக்கிற அத்துணை ஆசிரியர்களுக்கும் எங்கள் அன்பான பாராட்டுகள். மகிழ்ச்சி கலந்த பாராட்டுகள்.  வாழ்த்துகள். வாழ்க, வளர்க. நன்றி, வணக்கம். வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு!
- இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் பாராட்டிப் பேசினார்.
இந்த நிகழ்ச்சியிலே உயர்நீதிமன்ற நீதிபதி வள்ளி நாயகம்,  தொழிலதிபர்  வி.ஜி.சந்தோஷம், சட்டக்கதிர் ஆசிரியர் வி.ஆர்.எஸ். சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த பரத நாட்டிய நிகழ்ச்சி, 'அமெஸிங் வேல்டு ரெக்கார்டு' நிறுவனத்தில் உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டது. கடந்த, ஆண்டான 2014இல், சரஸ்வதி பரத நாட்டிய வித்யாலயாவைச் சேர்ந்த மாணவியர், தொடர்ந்து, 12 மணி நேரம் நடனம் ஆடி, 'ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' சாதனையில் இடம் பிடித்தனர். அந்த சாதனையை, இப்போது அவர்களே முறியடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-விடுதலை,31.12.15