Saturday 9 March 2024

ஒவ்வொரு தோழருமே நம் இயக்கத்தின் வரலாறுதான்! வெற்றிச்செல்வி அவர்களுடன் ஒரு நேர்காணல்! – வி.சி.வில்வம்

 நாகூர் சின்னத்தம்பி – ருக்மணி இணையர்களை இயக்கத்தினர் பலரும் அறிவார்கள்! நான்கு ஆண், அய்ந்து பெண் பிள்ளைகளைக் கொண்ட பெரிய குடும்பம் அது! அந்தக் குடும்பத்தில் இருந்து இயக்கத்திற்கு வந்தவர் தான் சி.வெற்றிச்செல்வி அவர்கள்!

ஆம்! திராவிடர் கழகத் துணைத் தலைவரும், விடுதலை நாளிதழின் பொறுப்பாசிரியருமான கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் வாழ்விணையர்!
“ஒவ்வொரு தோழருமே நம் இயக்கத்தின் வரலாறு தான் – குறிப்பாக மகளிரின் சாதனைகள் பதிவு செய்யப்பட வேண்டும்”, என்கிற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்க, இயக்க மகளிரைச் சந்தித்து வருகிறோம்!

“இரண்டு பெண் குழந்தைகள், பெரிய அளவிலான பொருளாதாரம் இல்லை. எனினும் கால்நடை மருத்துவத்துறையில் ஆய்வாளராகப் பணியாற்றிய கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் ஒரே நாளில் தம் பணியை “ராஜினாமா” செய்துவிட்டு, இயக்கத்தின் முழு நேரத் தொண்டராக வந்துவிட்டார்.

அப்படியான சூழ்நிலையில், அதையெல்லாம் கடந்து இன்றைக்கு இயக்கத்திற்கும், தம் குடும்பத்திற்கும் ஒரு சேர துணை நின்று, இந்தளவிற்குப் பெருமை சேர்த்தவர் தான் சி.வெற்றிச்செல்வி அவர்கள்!

இந்தக் குடும்பத்தின் ஒரு தனிச் சிறப்பு – வாழ்விணையரை கவிஞர் அவர்கள் “வாங்க, போங்க, நீங்க” என்று விளிப்பதாகும்.
ஒரு நிகழ்ச்சிக்காக தருமபுரி வந்த அவர்களை, ‘விடுதலை’ ஞாயிறு மலருக்காகச் சந்தித்தோம்.
அம்மா வணக்கம்! தங்கள் குடும்பம் குறித்துக் கூறுங்கள்?

எங்கள் சொந்த ஊர் நாகூர். சின்னத்தம்பி – ருக்மணி எனது பெற்றோர். உடன் பிறந்தவர்கள் ஒன்பது பேர். நான் 1947 இல் பிறந்தேன். வயது 77 ஆகிறது. எனது தந்தையார் நீதிக்கட்சி காலந்தொட்டு பெரியார் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர். அதனால் இயல்பிலேயே நானும் அந்தக் கொள்கையில் வளர்ந்தேன். சுற்று வட்டாரத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு அப்பா அழைத்துச் செல்வார். வீட்டில் கடவுளர் படங்கள், பூஜைகள் எதுவும் இருக்காது. அப்பாவின் சொந்த ஊர் மஞ்சக்கொல்லை. கலைஞர் அவர்கள் ஊருக்கு வரும் போதெல்லாம் அப்பா சென்று சந்திப்பார்.

எங்கள் அம்மாவின் அப்பா வேலாயுதம் அவர்கள் அந்தக் காலத்திலேயே ‘குடிஅரசு’ இதழின் சந்தாதாரர்!
தங்கள் கல்வி குறித்துக் கூறுங்கள்?

பள்ளிப் படிப்பு முடித்து, 1963 – 1965 இல் திருச்சி நாகம்மையார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் கல்வி முடித்தேன். சிக்கல், நாகூர் போன்ற இடங்களில் தனியார் பள்ளியில் வேலை பார்த்தேன். பிறகு தந்தை பெரியார் பரிந்துரையின் பேரில், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் கிட்டப்பா அவர்களால் மணல்மேடு பஞ்சாயத்து தொடக்கப் பள்ளியில் அரசு வேலையில் சேர்ந்தேன். பின்னர் மூவளூர், சோழசக்கரநல்லூர் போன்ற ஊர்களிலும் பணி செய்தேன். இறுதியாக சென்னை மதுரவாயல் பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் இறுதி வரை பணியாற்றினேன்.

தங்கள் திருமணம் எப்போது நடைபெற்றது?

1968 ஜூலை 14இல் எங்களுக்குத் திருமணம் நடைபெற்றது. அப்போது எனக்கு வயது 20. கவிஞர் அவர்கள் கீழ்வேளூரில் உள்ள கால்நடைத் துறையில் பணி செய்து வந்தார். இதற்கிடையே பெரியாரிடமும், நீடாமங்கலம் அ.ஆறுமுகம் (அனா, ஆவன்னா என்று அழைப்பார்கள்) அவர்களிடமும் திருமணம் குறித்து அப்பா சொல்லி வைத்துள்ளார்கள். பெரியாரின் அறிவுறுத்தலுக்கு இணங்க கவிஞர் அவர்களுடன் திருமணம் முடிவானது. அப்பாவைச் சந்திக்கவும், இயக்க வேலைகளை முன்னிட்டும் எங்கள் வீட்டிற்குக் கவிஞர் அவர்கள் அவ்வப்போது வந்து செல்வார்கள். மயிலாடுதுறையில் பெரியார் தான் இணையேற்பு நிகழ்வை நடத்தி வைத்தார்கள்! ஆசிரியர் அவர்களும் மற்றும் கழகப் பொறுப்பாளர்களும் திரளாக வந்திருந்தனர்!
முத்துப்பேட்டை த.தர்மலிங்கம், பட்டுக்கோட்டை இளவரி, நாகை என்.பி.காளியப்பன், பாவா நவநீத கிருஷ்ணன், சுரக்குடி வாசு, நாகை கணேசன், காரைக்கால் சி.மு.சிவம், திருவாரூர் வி.எஸ்.பி.யாகூப், திருத்துறைப்பூண்டி சாந்தன், பாடகர் நர்த்தனமங்கலம்
வீ.கே.இராமு முதலியோர் வீட்டிற்கு அடிக்கடி வருவார்கள். அப்பாவுடன் இயக்க வேலைகள் செய்வார்கள். எங்கள் மூத்த மகளுக்கு அய்யாதான் அன்புமதி என்று பெயர் சூட்டினார்கள்.

பெரியாரை முதன் முதலில் எப்போது சந்தித்தீர்கள்?

சிறு வயதிலேயே பார்த்துள்ளேன். அப்பா கொள்கையாளர் என்பதாலும், சிறு வயது முதலே கூட்டங்கள், மாநாடுகளுக்குச் சென்றதாலும் பெரியாரை அடிக்கடி பார்த்துள்ளேன். தவிர நாகப்பட்டினம் வந்தால் அம்மா மணியம்மையார் அவர்கள் நம் வீட்டிற்கு வருவார்கள். வீட்டில் சமைத்து, பெரியாருக்கு எடுத்துச் செல்வார்கள். பெரியார் கூட்டங்களில் அம்மா நூல்கள் விற்பனை செய்வதை, சிறு வயதிலேயே பார்த்துள்ளேன்.

டிசம்பர் 17, 1973ஆம் ஆண்டில் கும்பகோணத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அய்யாவை சந்தித்தேன். ஆனால், அதுதான் கடைசியாகப் பார்ப்பது என்று கனவிலும் நினைக்கவில்லை.
மணியம்மையார் உடல்நலம் குன்றிய சமயம் மயிலாடுதுறையில் இருந்து, சென்னை சென்றேன். அவர்கள் இறந்த அன்று அங்கு தான் இருந்தேன். கவிஞர் அவர்கள் மருத்துவமனையில் இருந்து வந்து செய்தி சொன்னார்கள். அப்போது, “அய்யோ… அம்மா இறந்துவிட்டார்களே” எனக் கூறி, கவிஞர் மயங்கி விழுந்து விட்டார். அம்மாவை அடக்கம் செய்யும் வரை அவர்கள் அருகிலேயே நான் நின்றேன். என் வாழ்வில் மறக்க முடியாத நினைவுகள் அவை.
மயிலாடுதுறையில் இருந்து, சென்னை வந்தது எப்போது?

கவிஞர் அவர்கள் கால்நடை விரிவாக்க அலுவலராகப் பணிபுரியும் போதே, பெரியார் திடலுக்கு 1967ஆம் ஆண்டு வந்து செல்வார்கள். குறிப்பாகப் பெரியார் பிறந்த நாள் மலர் தயாரிப்புப் பணிக்காக ஆசிரியர் விருப்பப்படி ஒவ்வோர் ஆண்டும் வருவார். பெரியார் மறைந்ததும், உதவிக்காக, தம் வேலையைச் சென்னைக்கு மாற்றல் பெற்று வந்தார் கவிஞர் ஆசிரியர் ஆணைப்படி!

இங்கு 11 ஆண்டுகள் வேலை செய்தார். மணியம்மையார் மறைந்த பிறகு, கட்சிப் பணிகளையும், அலுவலகப் பணிகளையும் செய்து வந்தார். சதா அவருக்கு இயக்கப் பணிதான் முக்கியம்! 1985இல் அரசு வேலை வேண்டாம் என எழுதிக் கொடுத்து விட்டு, இயக்கப் பணிக்கு நிரந்தரமாக வந்துவிட்டார்கள். அவர் திடலுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டன!

உங்களின் சென்னை வாழ்க்கை எப்படிப் போனது?

கவிஞர் திடல் வந்த பிறகு, 1978இல் நானும் வேலையை மாற்றிக் கொண்டு, சென்னை வந்துவிட்டேன். பெரியார் திடலே இருப்பிடமாகிப் போனது. ஆசிரியர் பணி, இயக்கத் தோழர்கள் என நிறைவாக சென்றது. பணியில் இருக்கும் போதே மாநிலம் முழுவதுமான நிகழ்ச்சிகளில் பங்கேற்பேன். பணி ஓய்விற்குப் பிறகு, போராட்டங்களில் பங்கேற்று சிறைக்கும் சென்றுள்ளேன்.
ஆசிரியர் பணியில் இருந்தபோது ஆசிரியர் சங்கப் போராட்டத்தில் பங்கு ஏற்று 22 நாள்கள் சென்னை மத்திய சிறையில் இருந்தேன். சிறைக்கு வந்து ஆசிரியர் எங்களைப் பார்த்து விசாரித்தார்.

பெரியார் திடலே வீடு என்கிற நிலையில், பலரும் வீட்டிற்கு வருவார்கள்; பழகும் வாய்ப்பும் அதிகம் கிடைத்தது. விடுமுறை நாட்களில், பொழுது போகாத நேரங்களில் வீட்டு ஜன்னல் வழியே பார்ப்பேன். தோழர்கள் யாராவது சென்றால் அவர்களை அழைத்துப் பேசுவேன்; வீட்டிற்கு அழைத்துச் சென்று உபசரிப்பேன். எங்கள் அம்மா ருக்மணி அவர்கள் அந்தக் காலத்திலேயே கொள்கை அதிகம் பேசுவார். துணிச்சல் மிகுந்தவர்.

அந்த வகையில் நட்பு பாராட்டுவது உதவிகள் செய்வது, துணிச்சலாக நடந்து கொள்வது எனக்கு இயல்பாக அமைந்துவிட்டது. “யாருடைய துணையும் இல்லாமல் அண்டார்டிகா வரை போவதாக இருந்தாலும் நீங்கள் போய் வருவீர்கள்”, எனக் கவிஞர் அடிக்கடி கூறுவார்.

இயக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனுபவங்கள் குறித்துக் கூறுங்கள்?

நிறைய இருக்கிறது! குறிப்பாக மும்பையில் பெரியார் நூற்றாண்டு விழா நடைபெற்றது. ஆசிரியர் அவர்கள், மோகனா அக்கா, சூர்யா அக்கா, சுந்தரி (வெள்ளையன்), மீரா அக்கா (ஜெகதீசன்) உள்ளிட்டோர் வேனில் சென்றோம்! அதேபோல உத்தரப்பிரதேசத்தில் பெரியார் மேளா நிகழ்ச்சி, புதுடில்லி பெரியார் மய்ய நிகழ்ச்சி ஆகியவற்றிலும் கலந்து கொண்டுள்ளேன்.
அதேபோல பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்காக ஜெர்மன் சென்றிருந்தோம். அமெரிக்க மாநாட்டிற்கும் போய் வந்துள்ளேன். அந்த சமயம் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட அய்ரோப்பிய நாடுகளுக்கும் சென்று வந்தேன். பெரியார் திடலில் ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெறும். அந்த நாட்கள் எல்லாமே விழாக் கோலம் தான்!
இராமரை செருப்பால் அடித்ததாகத் தவறாகக் கூறப்படும் சேலம் மாநாட்டிலும் கலந்து கொண்டேன். மயிலாடுதுறையிலிருந்து அப்போது தனிப்பேருந்து பிடித்துச் சென்றோம்!
இரண்டு முறை தந்தை பெரியார் மயிலாடுதுறையில் எங்கள் வீட்டுக்கு வந்துள்ளார். அம்மா பல முறை வந்துள்ளார்கள்.
இயக்க நிகழ்ச்சிகளில் தீச்சட்டி ஏந்துவது, தீ மிதிப்பது, பள்ளி ஆசிரியர்களுடன் பெரியார் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வது, “பெண் ஏன் அடிமையானாள்” நூலைப் பரிசளிப்பது, குற்றாலம் பயிற்சி முகாம்களில் தொடர்ந்து பங்கேற்பது என முடிந்தவரை இயங்கிக் கொண்டே வருகிறேன். பெரியார் ஈவெ.ரா நெடுஞ்சாலையில் உள்ள அன்னை மணியம்மையார் சிலை திறப்பு விழா குழுவில் ஆசிரியர் அவர்கள் என்னைப் பொருளாளராக நியமித்தார்கள். அதை மறக்க முடியாது!

ஆசிரியர் அவர்களுடன் உங்களுக்கு இருந்த நட்பு எப்படியானது?

அதை விவரிக்க வார்த்தைகள் இல்லை. இரத்த பாசத்தை விட, கொள்கைப் பாசம் முக்கியம் என ஆசிரியர் அடிக்கடி கூறுவார்கள். அதை அனுபவத்தில் நான் உணர்ந்திருக்கிறேன்! இயக்கம் கடந்து குடும்ப ரீதியாக ஆசிரியர் அவர்களும், மோகனா அக்கா அவர்களும் அவர்களின் குருதிக் குடும்பத்தினரும் மிகுந்த பாசமும், அக்கறையும் கொண்டவர்கள்.
பெரியார் காலத்திற்குப் பிறகு இயக்கம் பல மடங்கு சிறப்பாய் வளர்ந்துள்ளது! ஆசிரியர் அளவிற்குக் கொள்கைப் பயணம் செல்பவரை நாம் காண முடியாது. ஒரே வார்த்தையில் கூற வேண்டும் என்றால், விலை மதிக்க முடியாத தலைவர் அவர்! எங்கள் இரண்டு பிள்ளைகளுக்கும் ஆசிரியர் தான் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து வைத்தார்கள்!
எங்கள் குடும்பங்களில் 30க்கும் மேற்பட்ட சுயமரியாதைத் திருமணங்களைத் தலைமையேற்று நடத்தியவர் ஆசிரியர் என்பது எங்களுக்குப் பெருமை!
கவிஞர் அவர்களோடு சேர்த்து எனக்கும் பெரியார் திடல் வாழ்க்கை 46 ஆண்டுகளைக் கடந்துவிட்டன. இது ஒரு பெரிய வாய்ப்பு! சுயமரியாதை நிறைந்த ஒரு வாழ்க்கை! என்றும் கொள்கை வழி பயணிப்போம் என வெற்றிச்செல்வி அவர்கள் கூறினார்கள்.