Saturday 24 August 2019

அரசை விமர்சிப்பது தேசத்துரோகம் ஆகாது!

உச்சநீதிமன்றம் மீண்டும் திட்டவட்டம்

அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பது தேசவிரோத மற்றும்அவதூறு குற்றம் ஆகாது என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

இதுதொடர்பாக 1962-ஆம் ஆண்டே, 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு தெளிவான வழிகாட்டுதல்களை அளித்திருக்கும் போது, அதில் மீண்டும் குழப்பம் தேவையில்லை என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

காமன் காஸ் என்ற என்.ஜி.ஓ.அமைப்பு அண்மையில்  உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. அதில்,அறிவுஜீவிகள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் என்று அனைவர் மீதும் தேச விரோதச் சட்டம் (என்எஸ்ஏ) பாய்வதாகவும், அண்மையில் காஷ்மீர் விவகாரத்தை விவாதித்த காரணத்திற்காக சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னெஸ்டி அமைப்பு மீதும் கூட தேச விரோதவழக்கு தொடரப்பட்டு இருப்பதாகவும் புகார் கூறப்பட்டிருந்தது.

2014-ம் ஆண்டில் மட்டும் 47 தேச விரோத வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 58 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்; ஆனால் ஒரே ஒரு வழக்கில் மட்டும்தான் அரசு தனது குற்றச்சாட்டை நிரூபித்துள்ளது என்பதையும் அந்த மனுவில் சுட்டிக்காட்டியிருந்த காமன்காஸ் அமைப்பு, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124-ஏதவறான முறையில்- மக்களை அச்சுறுத்துவதற்காக பயன்படுத்தப்படுவதாகவும், எனவே, உச்சநீதிமன்றம் இதுதொடர்பான தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தது.இந்த மனு, நீதிபதிகள் #தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு, செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. காமன் காஸ் சார்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜராகி வாதாடினார். தேச விரோத வழக்கு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது; ஆனால் அரசை எதிர்த்து விமர்சிப்பவர்கள் மீதெல்லாம் அது பயன்படுத்தப்படுகிறது என்று பூஷன் குற்றம் சாட்டினார்.

உதாரணமாக கூடங்குளம் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதும், கார்ட்டூனிஸ்ட் அஜீம் திரிவேதி மீதும்தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டியிருப்பதை சுட்டிக்காட்டினார்.அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “தேசவிரோதச் சட்டத்தை புதிதாக விளக்க வேண்டிய அவசியமில்லை” என்றும் “1962-ல் கேதார்நாத் சிங் - பீகார் அரசுக்கு இடையிலான வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு ‘124-ஏ’யின் கீழ்வழக்கு பதிவு செய்ய தெளிவானவழிகாட்டுதல்களை அளித்துள்ளது” என்பதையும் நினைவுபடுத்தினர்.

ஆனால், கேதார் நாத் சிங் தீர்ப்பின் அடிப்படையில் சட்டம்திருத்தப்படவில்லை என்று கூறிய பிரசாந்த் பூஷன், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை, வழக்கு தொடரும் இடத்தில் உள்ள காவல்துறையினர் இப்போது வரை புரிந்து கொள்ளவில்லை; அவர்கள் இந்தியத் தண்டனைச் சட்ட பிரிவை மட்டுமே அறிந்து வைத்திருக்கிறார்கள் என்றார்.அதற்கு பதிலளித்த நீதிபதிகள், “காவல்துறையினர் புரிந்துகொள்ள வேண்டிய தேவையில்லை; மாஜிஸ்திரேட்தான் தேச விரோதச் சட்டம் என்ன கூறுகிறது, உச்சநீதிமன்றம் இதுபற்றி என்ன வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துத் தந்துள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்” என்றனர்.

மேலும், “அரசை விமர்சிக்கும் பொருட்டு யாராவது ஒருவர் கருத்து தெரிவித்தாலோ அல்லது அறிக்கை அளித்தாலோ அதை அவதூறு மற்றும் தேச விரோதவகைப்பாட்டிற்குள் கொண்டுவந்து வழக்கு தொடர முடியாது”என்று மீண்டும் தெளிவுபடுத்தினர்.

அத்துடன் காமன் காஸ் என்ற அமைப்பு தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், தேச விரோதச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு இருக்கும் குறிப்பான சம்பவங்கள் இருந்தால் அதன் பேரில் தனியாக ஒரு வழக்கு தொடருமாறும் அறிவுறுத்தினர்

நன்றி:
பெரியார் சட்ட மய்யம்.

Friday 23 August 2019

சென்னை நகரை ம.பொ.சி. மட்டுமே மீட்டுக் கொடுத்தாரா?


                            -  வாலாசா வல்லவன்

பெரும்பாலான தமிழ்த் தேசியவாதிகளில் ம.பொ.சி. மட்டும்தான் சென்னை நகரை மீட்டுக் கொடுத்தார் என்று நம்புகின்றனர். இது உண்மையல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும்.

இந்தியாவில் மொழிவழி மாநிலம்  பிரிப்பதற்காக இந்திய அரசினரால் முதன் முதலில் அமைக்கப்பட்டது  நீதிபதி தார் தலைமையிலான குழு ஆகும். குடிஅரசு தலைவரால் 1948இல் இக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் மொத்தம் நான்கு பேர் இருந்தனர் நீதிபதி எ.கே. தார் தலைவராகவும் டாக்டர் பன்னாலால், திரு ஜகத்நாரியன் லால், பி.சி. பானர்ஜி ஆகியோர் உறுப்பினர்களாகவும் இருந்தனர். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் எழுதும் குழுவினருக்கு அறிவுரை வழங்குவதற்காக இந்த குழு உருவாக்கப்பட்டது. 10.12.1948இல் இந்திய அரசிடம் இக்குழு அறிக்கையைக் கொடுத்தது. இப்போது உள்ள நிலையில் புதிய மாநிலம் எதையும் உருவாக்கத் தேவையில்லை என்று இக்குழு கருதியது.

அந்த அறிக்கையில் மொழிவாரி மாநிலம் பிரிக்கப்படும்போது ஒரு குறிப்பிட்ட பகுதியில் 70%க்கு மேல் ஒரே மொழியைப் பேசும் மக்கள் இருந்தால் தான் அதை ஒரு மொழிப்  பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றும் 70%க்குக்  கீழ் ஒரு மொழியைப் பேசும் மக்கள் உள்ள பகுதியை இரு மொழியாளர் பகுதி (அ)  பல மொழியாளர் பகுதி என்றே கருதவேண்டும் என்ற கருத்தை  அறிவித்தது
.
திருவாங்வர், கொச்சி இரண்டு நாடுகளும்  மன்னராட்சியில் இருந்து விடுபட்டு இந்திய அரசில் இணைந்துள்ள இரண்டு மாநிலத்தையும் ஒரே மாநிலமாக இணைக்கப் பரிந்துரைத்தது.

புதிய மாநிலப்  பிரிவினை வேண்டாம் என்று அக்குழு கருத்தறிவித்ததால்  ஆந்திரர்கள் கோபமுற்றனர். ஏனென்றால் அவர்கள் 1913 முதலே தனி மாநிலம் வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருந்தனர். அதற்காக 1937க்குப் பிறகு தீவிரமாகப் போராடி வந்தனர்.

1913இல் ஆந்திர மகாசபை உருவானது. அன்றைய சென்னை மாகாண அரசின் வேலைவாய்ப்பில் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களும், மராத்தியப்  பார்ப்பனர்களும் அதிக அளவில் இடம் பெற்றிருந்தனர். ஆந்திரப் பார்ப்பனர்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே வேலை வாய்ப்புகள் கிடைத்தன.

சென்னைப் பல்கலைக் கழகத்திலும் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களே அதிகமாக இடம் பெற்றனர். ஆந்திர மாணவர்களுக்குப் போதுமான இடம் கிடைக்கவில்லை. இதன் காரணமாகவே தெலுங்குக் காரர்களுக்குத் தனிமாநிலம் வேண்டும் என்ற கோரிக்கை உருவானது.

(Political History of Andhra Pradesh 1901-2009) (Innaiah-பக்கம்13 )நாளடைவில் அந்தக் கோரிக்கை வலுப்பெற்றுவந்தது.

1917இல் கல்கத்தாவில் அன்னிபெசன்ட் தலைமையில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரசு மாநாட்டில் ஆந்திரர்களுக்குத்  தனிமாநிலம் வேண்டும் என்ற கோரிக்கை விண்ணப்பத்தை அளித்தனர். அன்னிபெசன்ட்டும் காந்தியும் அக்கோரிக்கையை ஏற்க மறுத்தனர். திலகர் அக்கோரிக்கையை ஆதரித்தார்.

காந்தி  மொழி வாரியாக காங்கிர கமிட்டிகளை அமைப்பதற்கு முன்பே ஆந்திரர்கள் 20.1.1918இல் நீதிபதி சுப்பராவ் தலைமையில் ஆந்திரப் பிரதேச காங்கிர கமிட்டியை அமைத்துக் கொண்டனர். அதனால் வேறு வழிஇன்றிக் காந்தி  மொழி வாரியாகக் காங்கிர கமிட்டிகளை 1920இல் அமைத்தார்.

எல்லா மாநிலக் காங்கிரசு கமிட்டிகளுக்கும் தலைநகரை அந்த அந்த மாநிலத்திலே அமைத்த காங்கிரசு கட்சி ஆந்திரக் காங்கிரசு கமிட்டிக்கு மட்டும் தலைநகரை ஆந்திராவில் அமைக்காமல் சென்னையிலே இருக்கும்படி அமைத்துவிட்டனர். இது முதல் தவறு.

இது குறித்து ம.பொ.சி. அவர்களும் தமது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

சென்னை நகரில் ஆந்திரா ஜில்லா காங்கிரசு கமிட்டி அமைப்பதற்குத் தமிழ்நாடு காங்கிசு அங்கீகாரம் கொடுத்தது.  சென்னை கார்ப்பரேஷன், சட்டசபைத் தேர்தல்களில் அபேட்சகர்களைப் பொறுக்கி எடுக்கும் வேலையில் ஆந்திரக் காங்கிரசைக் கூட்டாகச் சேர்த்துக் கொண்டது. சென்னை நகருக்குரிய அசெம்ளி (சட்டசபை) தொகுதிகளில் சரிபாதியை ஆந்திரருக்கு அளித்ததோடு அத்தொகுதிகளுக்கு அபேட்சகர்களைப் பொறுக்கி எடுக்கும் உரிமையையும் ஆந்திர மாகாண காங்கிரசுக்கே வழங்கியது தமிழ்நாடு காங்கிர (செங்கோல் 5.12.54)

தமிழகத்தின் வடக்கெல்லை தெற்கெல்லைப் பகுதிகளைத் தமிழ்நாடு காங்கிரசு முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவில்லை, சித்தூர் பகுதி ஆந்திரக் காங்கிரசிடமும் தென் திருவிதாங்கூர் பகுதி திருவாங்கூர் - கொச்சி காங்கிரசிடமும் அளித்திருந்ததும் அப்பகுதிகள் நமக்குக் கிடைக்காமல் போனதற்கு ஒரு காரணம் என கோல்டன் சுப்பிரமணியம் தன்னுடைய வடக்கெல்லைப் போராட்டமும் தணிகை மீட்சியும் என்ற நூலில் பக். 29இல் பதிவு செய்துள்ளார்.  (குறிப்பு: அவர் வடக்கெல்லையை மட்டும் குறிப்பிட்டிருந்தார்)

1948இல் ஜெய்ப்பூரில் கூடிய காங்கிர கமிட்டி மொழிவாரி மாநிலங்களை அமைக்க ஆய்வு செய்யுமாறு காங்கிரசில் இருந்த மூவர் குழுவை அமைத்தது. அந்தக் குழுவிற்கு (ஜெ.வி.பி.) குழு என்று பெயர். ஜவஹர்கலால் நேரு, வல்லபாய் பட்டேல், பட்டாபி சீத்தாராமையா ஆகிய மூவர் அடங்கிய அந்தக் குழு ஆய்வு செய்து அகில இந்திய காங்கிர கட்சியின் தலைமையிடம்  அறிக்கையை 1.4.1949இல் அளித்தது.

அந்தக் குழுவிற்கும் மொழி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிப்பதற்கு விருப்பம் இல்லையெனினும் ஆந்திர மக்களின் போராட்டங்களைக் காரணமாகக் காட்டி ஆந்திராவை மட்டும் பிரித்துத் தனிமாநிலமாகக் கொடுக்கச் சிபாரிசு செய்தது.

சென்னையை ஆந்திரர்கள் கேட்கக்கூடாது என்ற நிபந்தனையும் விதித்தது. (ஜெ.வி.பி. குழு அறிக்கை பக்.14) அக்குழுவில் இடம் பெற்றிருந்த பட்டாபி சீத்தாராமய்யா எவ்வளவோ முயன்றும் நேருவும், பட்டேலும் சென்னையை ஆந்திராவுக்குக் கொடுக்க மறுத்துவிட்டனர்.

1949இல் கூடிய காங்கிர காரியக் கமிட்டி சென்னை மாகாண அரசாங்கத்தையும், ஆந்திர மாகாண காங்கிர கமிட்டியையும், தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியையும் அழைத்து ஆந்திர மாநிலம் பிரிவினை தொடர்பான அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து முடிவெடுக்க இந்திய அரசுக்குப் பரிந்துரை செய்துக் கேட்டுக்கொண்டது.

இந்திய அரசு இந்த மூவர் குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொண்டு ஆந்திரத்தைத் தனி மாநிலமாகப்  பிரித்துக் கொள்ள சென்னை மாகாண அரசாங்கத்தையே ஒரு குழுவை அமைத்து முடிவு செய்யக் கேட்டுக் கொண்டது.

இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கடித எண். 651/49/15 நாள் 25.11.1949.

இதன் அடிப்படையில் ஆந்திர மாநிலப் பிரிவினை தொடர்பாக ஒரு அதிகாரப்பூர்வ குழுவைச் சென்னை மாகாண அரசு அமைத்தது.

அக்குழு அப்போதைய முதலமைச்சர் குமாரசாமி ராசா தலைமையில் அமைக்கப்பட்டது. அக்குழுவில் டி. பிரகாசம், டி. கோபால்ரெட்டி, என். சஞ்சீவரெட்டி, காலா வெங்கட்ராவ் ஆகிய நால்வர் ஆந்திர காங்கிரசின் பிரதிநிதிகளாகவும், குமாரசாமிராசா, எம். பக்தவச்சலம், டி. டி. கிருஷ்ணமாச்சாரி ஆகிய மூவர் தமிழகக் காங்கிரசின் பிரதிநிதிகளாகவும், மாதவமேனன் கேரளக் காங்கிரசின் பிரதிநிதியாகவும் உறுப்பினர்களாக இருந்தனர். 17 முறை அக்குழு கூடி விவாதித்தது.

சென்னை மாகாண அரசு சென்னைக்கு ஈடாக ஆந்திராவில் புதிய தலைநகரை ஏற்படுத்திக் கொள்ள ரூபாய் ஒரு கோடி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அப்போது இருந்த சட்டமன்ற  உறுப்பினர்களில் 95 பேர் ஆந்திராவுக்குப் பிரிந்து செல்ல வேண்டும் என்றும் மீதம் 174 உறுப்பினர்கள் சென்னை மாகாணத்திலேயே இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

புதிய  ஆந்திரத்தின் தலைநகர் ஆந்திர எல்லைக்குள் அமைய வேண்டும் என்றே முடிவு செய்யப்பட்டது. (பிரிவினைக் கமிட்டி அறிக்கை பக். 4)

ஆந்திராவின் உயர்நீதி மன்றம் ஆந்திர எல்லைக்குள் அமைய வேண்டும். சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் 16 பேரில் 7 நீதிபதிகள் புதிய ஆந்திர உயர்நீதி மன்றத்திற்குச் செல்ல வேண்டும். (அறிக்கை பக். 4)

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் அனைவரும் புதிய ஆந்திர மாநில அரசுக்கு செல்ல வேண்டும். I.C.S அதிகாரிகளைப்  பொறுத்து அவர்கள் இந்திய அரசால் நியமிக்கப்படுவதால்  மொத்தம் உள்ள 43 பேரில் ஆந்திராவுக்கு 16 பேர் பேச்சுவார்த்தை மூலம் அவரவர்களின் விருப்பத்தை அறிந்து மத்திய அரசுக்குத் தெரிவித்துச்  சுமூகமான முறையில் மாற்றிக் கொள்ள வேண்டும். (அறிக்கை பக். 28)

I.AaS அதிகாரிகள் மொத்தம் 28 பேர் சென்னை மாகாண அரசில் பணியில் இருந்தனர். அதில் 38% மக்கள் தொகை அடிப்படையில் 11 பேர் ஆந்திராவுக்குச் செல்ல வேண்டும் என முடிவு செய்யப்பட்டது (அறிக்கை பக். 30)

சென்னை மாகாண அரசு எல்லாத் துறைகளைப் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டு ஆந்திர மாநிலப் பிரிவினை அறிக்கையை 25.12.1949இல் இந்திய அரசுக்கு அனுப்பியது.

இந்தியா குடி அரசு நாளாக மலரவிருக்கும் 26.1.1950இல் ஆந்திர புதிய மாநிலம் உருவாக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குழுவின் முடிவைச்  சென்னை மாகாண அரசின் கெசட் மூலம் பதிவு செய்து இந்திய அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.

அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த டி. பிரகாசம் இதில் சில கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்தார். மின்சாரச் செலவினங்களுக்குத் தமிழ்நாடு பகுதிக்கு அதிக அளவில் ஏற்கெனவே செலவு செய்யப்பட்டிருப்பதால் புதிய ஆந்திர அரசுக்கு 20 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்றார். (அறிக்கை பக். 2)

சென்னை நகரிலுள்ள அரசு கட்டிடங்களை மதிப்பீடு செய்து அதற்கு ஏற்றாற் போல் ரூ. 1 கோடி என்பதை உயர்த்திக் கொடுக்கவேண்டும் என்றார்.

டி. பிரகாசம் தன்னுடைய எதிர்ப்புகளைத் தனியாக அதில் பதிவு செய்துள்ளார்.

                                    (நாளைத் தொடரும்)

23.8.19,  கட்செவி பதிவு

Thursday 8 August 2019

சட்டப்பிரிவு 370 காஷ்மீரில் உள்ளதைப் போன்றே,

சட்டப்பிரிவு 370 காஷ்மீரில் உள்ளதைப் போன்றே,

Article 371A (Nagaland)
Article 371B (Assam)
Article 371C (Manipur)
Article 371F (Sikkim)
Article 371G (Mizoram)
Himachal Pradesh too follows similar rules.

இத்தனை சட்டப்பிரிவுகள் நாகாலாந்து அசாம் மணிப்பூர் மிசோரம் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் இருக்கின்றன.. வெளிமாநிலத்தவர் சொத்துக்களை வாங்க முடியாது.. இதைவிட நாகாலாந்து மணிப்பூர் அருணாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு பிற மாநில ஆட்கள்  செல்வதற்கு அனுமதி வாங்க வேண்டும், விசா போன்று ஆனால் காஷ்மீரில் அதுபோன்ற நிலை இல்லை..

காஷ்மீரில் முஸ்லிம்கள் அதிகமாக இருப்பதால், அங்குள்ள சட்டப் பிரிவுக்கு மட்டும் சங்கிகளின் கண்களை உறுத்துகிறது..

அதே நேரத்தில், பிரிட்டிஷ் இந்தியாவின் அங்கமில்லாமல், மன்னர் ஹரிசிங் ஆட்சியின் கீழ் தனி நாடாக விளங்கிய ஜம்மு & காஷ்மீர் பகுதியை, இந்தியாவுடன் 1947 க்கு பின் இணைக்க முன்வந்தபோது, அம்மக்களுக்கு அப்போது இந்திய அரசால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளான, சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 & 35A அரசியல் சாசன உரிமைகளை நீக்க முயல்வது தவறான ஒன்று.. அப்படி செய்தால், காஷ்மீர் இணைப்பு உடன்படிக்கை செல்லாமல் போகவும் வாய்ப்புண்டு. உச்சநீதிமன்றமும் ஏற்கனவே இந்த சட்ட பிரிவை நீக்கமுடியாது என தீர்ப்பு அளித்துள்ளது (The Supreme Court on Apr 4, 2018, said Article 370 of the Constitution, conferring special status on Jammu and Kashmir and limiting the Central government's power to make laws for the state, had acquired permanent status through years of existence, making its abrogation impossible.)

இப்படி நடந்தால், காஷ்மீர் விவகாரம் மீண்டும் ஐநா சபைவரை செல்ல வாய்ப்புண்டு.. 1947 இல் காஷ்மீர் விவகாரம் ஐநா சபைக்கு முதன்முதலாக சென்றபோது, இந்தியா & பாகிஸ்தான் நாடுகள் காஷ்மீர் பகுதியிலிருந்து வெளியேறி, ஐநா மேற்பார்வையில் அம்மக்களிடம், 1. இந்தியாவுடன் இணைவதா 2. பாகிஸ்தானுடன் இணைவதா 3. யாருடனும் இணையாமல் தனி நாடாக இருப்பதா, என்ற மூன்று வாய்ப்புகளை பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவுசெய்ய வேண்டும் என ஐநா சபை உத்தரவிட்டது.. ஆனால், அதை இந்தியாவும் பாகிஸ்தானும் ஏற்று நடைமுறைப் படுத்தவில்லை..

சட்டப்பிரிவு 35A, அம்மாநில குடிமக்கள் அல்லாதவர்கள், ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் நிலம் போன்றவற்றை வாங்குவதை தடைசெய்கிறது. இந்த பிரிவை நீக்குவது, பெருமுதலாளிகளாக உள்ள மார்வாடி & குஜராத்திகள் பெருமளவில் அங்கே நிலம் போன்ற சொத்துக்களை வாங்கி குவிக்கவே வழிசெய்யும். அம்மாநில வளங்களை அதானி அம்பானி ஜிண்டால் வேதாந்தா போன்ற பெருமுதலாளிகள் சூறையாட வழிசெய்யும். எப்படி தமிழ் நாடு போன்ற மற்ற மாநிலங்களின் சிறு நகரம் முதல் பெரு நகரம் வரை எல்லா ஊர்களிலும் மார்வாடி & வட மாநில மக்கள் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளனரோ, வீடுகள், கடை வணிக வளாகங்கள், விவசாய & தொழிற்சாலை இடங்கள் என வாங்கி குவிக்கின்றனரோ, அப்படியான நிலை ஜம்மு & காஷ்மீரிலும் உருவாகலாம்.. (தமிழ் நாடு போனற பிற மாநில மக்களும் மற்ற மாநிலங்ககளில் வீடுகள் வாங்குகிறார்கள், ஆனால் அவை பெரும்பாலும் அம்மாநில தலைநகரங்களில் மட்டுமே, அதுவும் மிஞ்சிப்போனால் வேலைநிமித்தம் குடியிருக்க 2BHK பிளாட்டுகள்.. மார்வாடி சேட்டுகளை போல குக்கிராமம் வரை சொத்துக்களை வாங்கி குவிப்பதில்லை)

https://m.timesofindia.com/india/article-370-has-acquired-permanent-status-supreme-court/amp_articleshow/63603527.cms

Tuesday 6 August 2019

நாய்களில் ஜாதி பிரித்துப் பார்க்கும்போது - மனிதர்களிலும் உயர்ந்த ஜாதி - தாழ்ந்த ஜாதி என்று ஏன் பார்க்கக்கூடாது?வல்லம் சாஸ்திரா பல்கலைக் கழக பார்ப்பனப் பேராசிரியர் விஷம் கக்கும் ஜாதிவெறிப் பேச்சு


வல்லம், ஆக.3 நாய்களில் ஜாதி வித்தியாசம் பார்த்து வாங்குகிறோம்; ஆனால், மனிதர்களில் மட்டும் ஜாதி வித்தியாசம் பார்க்கக்கூடாது - அனைவரும் சமம் என்று சொல்லுவது எப்படி சரி என்று வல்லம் - திருமலைசமுத்திரத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் எம்.ஏ.வெங்கடகிருஷ்ணன் என்பவர் விஷம் கக்கும் வகையில் கொச்சியில் நடைபெற்ற பார்ப்பனர்கள் மாநாட்டில் பேசியுள்ளார். இந்தப் பேச்சு சமுக வலை தளங்களில் வேகமாகப் பரவிவருகிறது. இதுகுறித்து கழக வழக்குரைஞர் ஆர்.ராஜேந்திரன் நடவடிக்கை எடுக்கக்கோரி கரூர் மாவட்டக் காவல்துறை கண் காணிப்பாளருக்குப் புகார் மனு கொடுத்துள்ளார்.

பார்ப்பனப் பேராசிரியரின் விஷம் கக்கும் பேச்சு

பிறப்பின் அடிப்படையில் என்று எதையுமே சொல்லக்கூடாது; மனிதர்கள் எல்லோரும் சமம் என்று ஒரு வார்த்தையை சொல்லிவிட்டுப் போகி றார்கள்.

மனிதனில் எல்லோரும் சமம்; அதில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று சொன்னால், அதை ஒப்புக் கொள்ள முடியாது என்கிறார்; அப்படி சொல்வதை சாஸ்திரம்  அங்கீகரிக்கவில்லை.

ஒவ்வொரு குலத்திற்கும் ஒவ்வொரு Birth characteristics உண்டு என்பதை சாஸ்திரம், வேதம் சொல்கிறது.


இதை நான் வெளிப்படையாக சொன்னால், எல்லோரும் ஒத்துக்கொள்ளமாட்டேங்கறா.

நான் ஒரு உதாரணம் சொல்கிறேன் கேளுங்கோ.

எனக்குத் தெரியாது இது -

நான் கேள்விப்பட்ட விஷயத்தை வைத்து ஒரு விஷயம் சொல்றேன்.

நாம் உபயோகப்படுத்துகின்ற எல்லா பொருள் களிலும் ஒரு Birth characteristics என்பதை நாம் எதிர் பார்க்கிறோம். அதற்கென்று ஒரு தனித்தன்மை உண்டு என்பதை நாம் ஒப்புக்கொள்கிறோம்.

ஆனால், நாம் மனிதர்களில் மட்டும்தான் எல் லோரும் சமம், எல்லோரும் சமம் என்று வாயால் வெளியில் சொல்லிவிட்டுப் போகிறோம்.

நான் கேட்கிறேன், எல்லோரும் சமம், அவனுக்குப் பிறப்பொழுக்கம் என்பதே வேண்டியதில்லை. பிறப்பினால் எல் லோரும் சமம் என்று சொல்றவாகிட்ட நான் என்ன கேட் கிறேன் என்றால்,

நாய்களில் ஜாதி தரம் பார்ப்பதில்லையா?

வீட்டில் நாய் வளர்க்கிறோம், That is Pet Dog வளர்க் கிறோம். அது எப்படி இருக்கவேண்டும் என்று சொன்னால், எங்கள் வீட்டில் வளர்ப்பது இல்லை. இருந்தாலும் சொல்கிறேன், ஒரு பொமரேனியன் வகை நாயை வளர்க்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இதுபோன்ற வகை நாயை ஏன் வளர்க்கவேண்டும்? அதுதான்  Pet Dog ஆக இருக்க முடியும். ஏன் நாயிலேயே இன்னொரு ஜாதி இருக்கிறது; அல்சேஷன்  ஒரு ஜாதி இருக்கிறது; அதை ஏன் வீட்டில் வளர்க்கக்கூடாது என்று கேட்டால், அது It is not a Pet Dog என்று சொல்கிறோம்.

So, Within the characteristics of Dogs, certain Dogs are called as Pet animals; certain Dogs are called Wild animals. Within the characteristics  அந்த நாய்களுக்குள்ளே இருக்கிறது என்று சொன்னால், நாம் மனிதனில் அப்படி வித்தியாசம் இல்லை என்று ஏன் சொல்லவேண்டும் என்று நான் கேட்கிறேன்.

இதுபோன்று நீங்கள் பார்த்துக்கொண்டே போக லாம்.

மனிதர்களிலேயும் கூட, எவன் உயர்ந்தவன்? எவன் தாழ்ந்தவன் என்பதற்கு Characteristics by Birth ஏற்பட்டுப் போகிறது; அதை நாம் மறுக்க முடியாது.

இன்னொன்று கேள்விப்பட்டேன்; அது உண்டா என்று நீங்கள்தான் சொல்லவேண்டும்.பிராமணன் என்றால் யார் தெரியுமா?

திரிப்பூர சுத்த சுத்தி என்று வைத்திருக்கிறாள்.

பிராமணனாக இருந்தால், மூன்று பரம்பரையாவது முக்கியமாக, அந்த பிராமணன் பாரம்பரியத்திலே, அதாவது Father - Mother, Father - Mother, Father - Mother என்று மூன்று தலைமுறையாவது இருந் திருக்கணும். அப்பொழுதுதான் அவனுக்கு அந்த பிராமணன் Character உண்டு என்று சொல்றான் என்று சொல்லிட்டு, சாஸ்திரத்திலே சொல்லியிருக்குது.

இது ஆச்சரியம் இல்லை.

நான் கேள்விப்பட்டது என்னன்னா,

Dogs வாங்குறவா இருக்காள்லோ இல்லியோ, அவா அந்த Dog க்கு ஒரு Pedigree என்று ஒன்று கேட்கிறார்கள்.

Pedigree  என்றால் என்ன? What is Pedigree? You tell me. அது என்ன அது? கலப்பில் இல்லாமல் ஒரிஜினலா இருக்கிறதா என்பதுதானே Pedigree. அதைத்தான் பிராமினுக்கு நாங்கள் சொல்றோம். தப்பு என்ன அதில்?

‘குதிரைகளிலும் திரிப்பூர சுத்தி பார்க்கப்படுவதில்லையா?'

ஒண்ணுமில்லே, குதிரைகள் அதாவது Horse Race நடத்துறாளோ இல்லியோ, நான் கேள்விப்பட்டேன், எனக்கு சொன்னார் ஒருத்தர்.

Horse Race  லே குதிரைமேலே பணம் கட்டுகிறான் ஒருத்தன். பணம் கட்டுறவன் என்ன பண்றான் என்றால், அந்த Horse னுடைய Breed   என்ன? என்று செக் பண்ணி, அந்த Breed  எங்கே இருந்து வந்தது என்று பார்த்து, அதற்கு திரிப்பூர சுத்த சுத்தி பாக்கிறான். திரிப்பூர சுத்த சுத்தி என்றால் என்ன அர்த்தம்?

whether it is a Original Horse of three generations from the same breed  என்று பார்க்கிறான். அப்போ, In all other things you consider the breed as very very important even if you take for example எங்கள் தமிழ்நாட்டில்,  Rice அரிசிதான் ரொம்ப முக்கியமானது என்றால், அந்த அரிசிக்குக் குறிப்பிட்ட Breed   அது நெல்லூர் அரிசியா? அது சம்பாவா? என்று அந்த Breed முக்கியமாகப் பார்க்கிறோம். ஒரு பழம் வாங்குவது என்றாலும், அதற்கு Breed   முக்கியமாகப் பார்க்கிறோம்.

முக்கியமா இன்னொன்று சொல்றேன். யாரும் இந்தக் காலத்துல தப்பா சொல்லக்கூடாது.

தமிழ்நாட்டுல, மற்ற இடங்களில் எல்லாம்கூட முக்கியமா ஒரு போராட்டம் நடக்கிறது.

அது என்ன போராட்டம் என்றால்,

Cross Breed விதைகள் எல்லாம் கொண்டுவரக் கூடாது. அப்படி கொண்டு வந்தால், நம்மூர் விவசாயமே அழிஞ்சு போய்விடும் அப்டின்னு  சொல்லிட்டு, எங்க ஊர்ல மரபணு மாற்றப்பட்ட விதை என்று சொல்றா.

மரபணு மாற்றப்பட்ட விதை என்று சொன்னால்,Cross Breed சிஸ்டத்தில் வந்த Seeds எதையுமே உபயோகப்படுத்தக் கூடாது என்று சொல்றா.

நான் அதையேதான் Community Human னுக்கும் சொல்றேன்.  Cross Breed சிஸ்டத்திலே வந்தால் என்னாகும் என்று கேட்டேன்.

நீங்கள் உபயோகப்படுத்துகிற பழத்திலே Cross Breed   இருக்கக்கூடாது; அரிசி, தானியங்களில் Cross Breed இருக்கக்கூடாது; நீங்கள் வைத்துக் கொண்டிருக்கின்ற மிருகங்களில் Cross Breed இருக்கக்கூடாது. எதிலுமே Cross Breed இருக்கக்கூடாது. ஆனால், உங்கள்ல மட்டும் Cross Breed  இருக்கவேண்டும் என்று நீங்கள் எப்படி எதிர்பார்க்கிறீங்க?

அது தப்பில்லியோ!

இவ்வாறு  எம்.ஏ.வெங்கடகிருஷ்ணன் என்பவர் பேசியுள்ளார்.

இந்த பார்ப்பனர் மாநாட்டில் தான்  உயர்நீதிமன்ற  இரு நீதிபதிகள்  பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்ப்பனப் பேராசிரியர்மீது புகார்

திருச்சி வழக்குரைஞர் ஆர்.ராஜேந்திரன் என்பவர், பார்ப்பனப் பேராசிரியரின் சட்ட விரோத பேச்சு குறித்து உரிய முறையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கரூர் காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளார்.

- விடுதலை நாளேடு, 3.8.19

https://youtu.be/7JDADApj9BU

Saturday 3 August 2019

தலாக் தலாக் தலாக்... மிகச்சிறந்த விளக்கம்

தலாக் தலாக் தலாக்...

மிகச்சிறந்த விளக்கம் தினமணியில்...!

எதிலும் அழகிய இஸ்லாம்..

இஸ்லாம் தவிர மற்ற மதங்களுக்கென தனிச் சட்டம் ஆரம்ப காலங்களில் இருந்ததாக அறியப்படவில்லை. சட்டங்கள் உருவாக்கப்பட்டு காலத்திற்குத் தக்கவாறு மாற்றி அமைக்கப்படுகின்றன. ஒரு மதத்தவர் அச்சட்டத்தை பின்பற்ற வேண்டியது கட்டாயம் என சொல்லபடவில்லை. ஆனால் இஸ்லாமிய ஷரீஅத் (சட்டம்) 1430 வருடங்களுக்கு முன்பு அருளப்பட்டு இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது. முஸ்லிம்கள் ஷரீஅத்தை பின்பற்றிதான் ஆக வேண்டும் என்பது கட்டாயம்.
1400 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்துரிமை, கணவனை விவாகரத்து செய்கின்ற உரிமை, மணமகனைத் தேர்வு செய்கின்ற உரிமை, சாட்சி சொல்கின்ற உரிமை உள்ளிட்ட பல உரிமைகளை வழங்கிய ஒரே மதம் இஸ்லாம் மட்டுமே.
இஸ்லாத்தில் திருமணம் என்பது ஒப்பந்தமாக கருதப்படுகிறது. வேறு வழியில்லாமல் ஆகிவிட்ட நிலையில்தான் கணவனும், மனைவியும் பிரியும் பாதையை தேர்ந்தெடுக்க வேண்டுமென்பது இஸ்லாமிய வழிமுறையாகும்.
விவாகரத்து முறை: கணவன், மனைவி பிரிவு குறித்து திருக்குர்ஆனில் இறைவன் ""நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்துவிட்ட நிலையில் எப்படி அதை பிடுங்கி கொள்ள முடியும்?'' (4:21) என்று இறைவனே கேட்க கூடிய அளவிற்கு அதன் முக்கியத்துவத்தை திருக்குர்ஆன் உணர்த்துகிறது.
"மனைவி விஷயத்தில் பிணக்கு (பிரச்னை) ஏற்படும் என்று அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கையில் அவர்களிடம் விளக்குங்கள்! அவர்களைக் கண்டியுங்கள், அவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டு விட்டால் அவருக்கு எதிராக வேறு வழி தேடாதீர்கள்' என்று திருக்குர்ஆன் கணவனுக்கு அறிவுறுத்துகிறது.
பிளவு ஏற்படும் எனத் தெரிந்தால், மேற்கூறிய நடவடிக்கைகளால் பிரச்னை கைமீறி, பிளவு வருமென்று அஞ்சினால் கணவன் குடும்பத்திலிருந்து ஒருவரையும், மனைவி குடும்பத்திலிருந்து ஒருவரையும் நடுவர்களாக கொண்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள் என்று கணவன், மனைவி இருவரின் குடும்பத்தார்களுக்கும், மத்தியஸ்தர்களுக்கும் திருக்குர்ஆன் கட்டளை இடுகிறது.
விவாகரத்து மிக சிறந்த முறை (அஹ்சன்): மேற்கண்ட முயற்சிகளுக்கு பிறகும் வாழ முடியாத நிலை ஏற்பட்டால், இரண்டு சாட்சிகள் முன்னிலையில் கணவன் மனைவியிடம் "உன்னை தலாக் (விவாகரத்து) செய்கிறேன்' என்று கூற வேண்டும். இதனை ஒரு முறை கூறினாலே போதும். இந்த தலாக் சொல்லும்பொழுது கண்டிப்பாக மனைவி மாதவிடாய் இல்லாத காலத்தில் (சுத்தமான காலத்தில்) இருத்தல் வேண்டும்.
தலாக் சொன்னதிலிருந்து மூன்று மாதவிடாய் காலம் (சுமார் மூன்றரை மாதம்) மனைவி கணவன் வீட்டிலேயே கணவனின் செலவிலேயே இத்தா (காத்திருப்பு காலம்) இருக்க வேண்டும். இக்காலத்தில் இருவரும் தாம்பத்திய உறவு கொண்டால், கணவன் விரும்பினால் இந்த மூன்றரை மாதத்திற்குள் மனைவியை மீட்டு கொள்ளலாம்.
இந்த இத்தா காலத்தில் மனைவி மறுமணம் செய்யக் கூடாது. இந்தக் காத்திருப்பு காலத்தில் (இத்தா) கணவன் மனைவியை மீட்காமலும் அல்லது தாம்பத்திய உறவு கொள்ளாமலும் இருந்தால் தலாக் (விவாகரத்து) நிறைவேறிவிட்டதாகக் கருதப்படுகிறது.
இதன் பின் கணவன் மீண்டும் அப்பெண்ணை மனைவியாக கொள்ள விரும்பினால், மஹர் கொடுத்து மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அதற்கு மனைவியின் சம்மதமும் வேண்டும். ஒருவேளை அந்த பெண் வேறொருவரை திருமணம் செய்து கொள்ள விரும்பினால் அது அவளுடைய விருப்பம்.
ஒருகால் இந்த இத்தா காலத்தில் விவாகரத்தை முறித்து மனைவியைக் கணவன் சேர்த்துக் கொண்டபின், மீண்டும் அவர்களுக்குள் பிணக்கு ஏற்பட்டு பிளவு ஏற்படுமேயானால் இரண்டாவது முறையாக அவன் மேற்கண்டவாறு தலாக் செய்து இத்தா (காத்திருப்பு காலம்) இருக்க வைக்கலாம். மேற்கண்ட சட்டத்திட்டங்கள் தான் இரண்டாவது தலாக்கிற்கும்.
ஒருகால் கணவன் இரண்டாவது இத்தா காலத்திலும் விவாகரத்தை முறித்து மனைவியை சேர்த்துக் கொண்ட பின்னர் அவர்களுக்குள் மீண்டும் பிளவு ஏற்படுமேயானால் மூன்றாவது முறையாக அவன் தலாக் செய்து இத்தா (காத்திருப்பு காலம்) இருக்க வைக்கலாம்.
மேற்கண்ட சட்டதிட்டங்கள் தான் மூன்றாவது தலாக்கிற்கும் (விவாகரத்து). ஆனால் மூன்றாவது முறை தலாக் சொன்ன பிறகு அப்பெண்ணை கணவனால் இத்தா காலத்தில் மீட்டுக் கொள்ள இயலாது. அவ்வுரிமையை அவன் இழக்கிறான். அவள் வேறொருவருக்கு திருமணம் ஆகி விவாகரத்து பெற்றிருந்தால் தவிர, மீண்டும் அவளை திருமணம் செய்து கொள்ளவும் முடியாது.
மேலும், "மனைவியாக வாழ்ந்த காலத்தில் நீங்கள் அவளுக்கு கொடுத்தவற்றில் எதையும் திரும்ப பெறக் கூடாது' என்று திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது. இதுதான் திருக்குர்ஆன் கூறும் விவாகரத்து முறையாகும்.
தலாக்குல் முபாரா (பரஸ்பர ஒப்புதல்)ட: கணவன், மனைவி இருவரும் தமக்குள் சேர்ந்து வாழ்வது ஒத்து வராது என கருதி இருவரும் சேர்ந்து பிரிந்து செல்வதாக முடிவு எடுத்தால் அழகிய முறையில் பிரிந்து செல்லலாம்.
தலாக்குல் குலா (பெண் விவாகரத்து கேட்டு பெறுதல்): மனைவி தலாக் கேட்டு பெறும் உரிமையை இஸ்லாம் வழங்கி இருக்கிறது. அதன்படி ஒரு பெண் தன் கணவனுடன் வாழ பிடிக்கவில்லை என்றாலோ அல்லது கணவன் முறைப்படி நடந்து கொள்ளவில்லை என்பதாலோ அவள் பிரிந்து செல்வதென முடிவு எடுத்தால் குலா முறையில் விவாகரத்து கோரலாம். ஜமாஅத் எனும் நிர்வாகத்தை அல்லது காஜியை அணுகி குலா மூலம் தன் கணவரிடம் தலாக் பெற்றுத் தர கோரலாம். அவர்கள் கணவனிடம் பேசி விவாகரத்து பெற்றுக் கொடுக்கலாம்.
கணவன் விவாகரத்து தர மறுத்தால் அந்த நிர்வாகமே திருமண பந்தத்தை முறித்து விவாகரத்தை உறுதி செய்வதாக அறிவிக்கலாம். இதற்கும் இத்தா என்கிற காத்திருப்பு காலம் உண்டு. மனைவி கணவனிடம் பெற்ற மஹரை திருப்பி கொடுக்கக் கடமைப்பட்டவளாகிறாள்.
ஆணுக்கு மட்டும் தலாக் கொடுக்கும் அதிகாரமும், பெண்ணுக்கு தலாக் கேட்கும் உரிமையும் எப்படி சமமாகும்? இது அநீதி அல்லவா? பெண்களுக்கு மட்டும் குறைந்த உரிமையை கொடுத்து ஆண் அடிமைத்தனத்தை உறுதி செய்வதுபோல அல்லவா இருக்கிறது என்று சிலர் கேட்கக்கூடும்.
உலகம் இன்றுவரை ஆண் ஆதிக்கத்திலேயே இருந்து வருகிறது. ஆண் படைப்பால் பலசாலியாக உள்ளான். அவனது ஆதிக்கத்திடமிருந்து ஒரு பெண் (மனைவி) அவனை விவாகரத்து கூறி தள்ளுவது மிக மிக கடினமாகும். தன்னை, தன் மனைவி வெறுக்கிறாளே என்ற கோபத்தில் அவனுக்கு எதையும் செய்ய தோன்றும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் மனைவிக்கு மிக பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதையெல்லாம் கருத்தில் கொண்டே இஸ்லாம் பெண்ணுக்கு மிக பெரிய சமுதாய பங்களிப்புகளோடு கூடிய பாதுகாப்புடன் தலாக் கோரி பெறும் உரிமையை வழங்கி இருக்கிறது.
ஜமாஅத் மூலம் விவாகரத்து செயல்படுத்தப்படுவதால் ஜமாஅத்தின் பலமும் மனைவியோடு சேர்ந்து கொள்கிறது.
கணவன் விவாகரத்து செய்ய விரும்பினால் நடுவர்களை அழைத்து பிறகு தலாக் கூறி மூன்று மாதம் காத்திருக்க வேண்டும். ஆனால் பெண்ணுக்கு கேட்ட மாத்திரத்தில் விவாகரத்து கிடைக்கும். இதனால் ஆணைவிட பெண்ணிற்கு கூடுதலான உரிமை உண்டு என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
ஃபஸ்ஹ் (திருமண ஒப்பந்தத்தை முறித்தல் அல்லது ரத்து செய்தல்: கணவன் காணாமல் போனாலோ அல்லது சித்த பிரமை ஏற்பட்டாலோ அல்லது ஒழுங்கின, குற்றச் செயல்களில் ஈடுபட்டாலோ, அதுபோல் மனைவி ஒழுக்கம் தவறினாலோ அது குறித்து ஜமாஅத் என்கிற நிர்வாகத்திடம் தெரிவித்து திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்வது அல்லது பிரித்து கொள்வது ஃபஸ்ஹ் முறையாகும்.
உதாரணமாக, கணவன் காணாமல் போய் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக எங்கு இருக்கிறார் என்று அறிய முடியவில்லையென்றால், மனைவி இது குறித்து ஜமாஅத்திடம் தெரிவித்து திருமண பந்தத்தை ரத்து செய்ய கோரலாம். ஜமாஅத் நிர்வாகிகள் திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்து விடலாம்.
அதுபோல் ஒரு பெண் நடத்தை தவறினால் அதை கணவன் அறியும் பட்சத்தில் அவன் நான்கு சாட்சிகளைக் கொண்டு நிரூபிக்க வேண்டும். சாட்சிகள் இல்லையென்றால் இருவரும் அல்லாஹ்வின் பெயரால் நான்கு முறை சத்தியம் செய்து "இதனால் ஏற்படும் கேடு என்னையே சேரும்' என்று கூற வேண்டும். அதன் பிறகு நிர்வாகம் இருவரின் திருமண ஒப்பந்தத்தையும் ரத்து செய்து பிரித்து விடலாம்.
தலாக்குள் பித்அத் (நூதன தலாக்): தலாக் தலாக் தலாக் அல்லது முத்தலாக். இந்த முறை முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்திலோ அல்லது அவர்கள் பிறகு வந்த முதல் கலீபா காலத்திலோ இல்லை. பிற்காலத்தில் வந்த விவாகரத்து முறை. ஆதலால் இது நூதன தலாக் என்று பெயர் பெற்றுள்ளது.
இந்த முறையின் படி மூன்று முறை தலாக் கூறிவிட்டாலே விவாகரத்து நிறைவேற்றியதாக கூறுவர். இப்படி ஒரே நேரத்தில் மூன்று முறை கூறினாலும், அது ஒரே தலாக் ஆகத்தான் கருதப்படும் என சொல்லும் அறிஞர்களும் உள்ளனர். எல்லா திருமண முறிவிற்கும் இம்முறையைப் பின்பற்றுவது இல்லை.
தனது மனைவி சோரம் போவதைக் கண்ணால் கண்டுவிட்ட எந்த கணவனும் மனைவியைத் திரும்ப சேர்த்துக்கொள்ள சம்மதிக்க மாட்டான். இதுபோன்ற அசாதாரண சூழ்நிலையில் மட்டும் இதுபோன்ற தலாக் பயன்படுத்தப்படுகிறது.
சிலர் தீர்க்க கூடிய வாய்ப்புள்ள பிரச்னைகளுக்கும் இந்த முத்தலாக் முறையை தவறாகப் பயன்படுத்துவது சரியல்ல. அது பாவமும் ஆகும். இதை பெரும்பாலான இஸ்லாமிய அறிஞர்கள் கண்டிக்கிறார்கள். ஒரு சட்டத்தை ஒருவர் தவறாக பயன்படுத்தினால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர சட்டத்தையே நீக்குவது அல்லது குறை கூறுவது எப்படி முறையாகும்?
ஷரீஅத்தை, உலகில் எவராலும் குற்றம் காண முடியாது என்பது உலக முஸ்லிம்களின் கருத்து மாத்திரமல்ல; உளமார்ந்த நம்பிக்கையும்கூட.
முத்தலாக்கை முன்னிறுத்தி இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம் என சூளுரைப்பது வேடிக்கையாக இருக்கின்றது.
பொது குளத்தில் எல்லோரும் குளிக்க அனுமதி இல்லாதபோது, சாதிக்கொரு மயானம் இருக்கின்றபோது, சாதி பெயரை சொல்லி மனிதர்களைக் கொல்லும் நிலை இருக்கும்பொழுது சட்டத்தில் மட்டும் சமத்துவம் எங்கிருந்து வருகிறது என்பது தெரியவில்லை!

கட்டுரையாளர்:
வழக்குரைஞர்.
எம்.ஜி.கே. நிஜாமுதீன்

நன்றி தினமணி