Saturday, 3 August 2019

தலாக் தலாக் தலாக்... மிகச்சிறந்த விளக்கம்

தலாக் தலாக் தலாக்...

மிகச்சிறந்த விளக்கம் தினமணியில்...!

எதிலும் அழகிய இஸ்லாம்..

இஸ்லாம் தவிர மற்ற மதங்களுக்கென தனிச் சட்டம் ஆரம்ப காலங்களில் இருந்ததாக அறியப்படவில்லை. சட்டங்கள் உருவாக்கப்பட்டு காலத்திற்குத் தக்கவாறு மாற்றி அமைக்கப்படுகின்றன. ஒரு மதத்தவர் அச்சட்டத்தை பின்பற்ற வேண்டியது கட்டாயம் என சொல்லபடவில்லை. ஆனால் இஸ்லாமிய ஷரீஅத் (சட்டம்) 1430 வருடங்களுக்கு முன்பு அருளப்பட்டு இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது. முஸ்லிம்கள் ஷரீஅத்தை பின்பற்றிதான் ஆக வேண்டும் என்பது கட்டாயம்.
1400 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்துரிமை, கணவனை விவாகரத்து செய்கின்ற உரிமை, மணமகனைத் தேர்வு செய்கின்ற உரிமை, சாட்சி சொல்கின்ற உரிமை உள்ளிட்ட பல உரிமைகளை வழங்கிய ஒரே மதம் இஸ்லாம் மட்டுமே.
இஸ்லாத்தில் திருமணம் என்பது ஒப்பந்தமாக கருதப்படுகிறது. வேறு வழியில்லாமல் ஆகிவிட்ட நிலையில்தான் கணவனும், மனைவியும் பிரியும் பாதையை தேர்ந்தெடுக்க வேண்டுமென்பது இஸ்லாமிய வழிமுறையாகும்.
விவாகரத்து முறை: கணவன், மனைவி பிரிவு குறித்து திருக்குர்ஆனில் இறைவன் ""நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்துவிட்ட நிலையில் எப்படி அதை பிடுங்கி கொள்ள முடியும்?'' (4:21) என்று இறைவனே கேட்க கூடிய அளவிற்கு அதன் முக்கியத்துவத்தை திருக்குர்ஆன் உணர்த்துகிறது.
"மனைவி விஷயத்தில் பிணக்கு (பிரச்னை) ஏற்படும் என்று அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கையில் அவர்களிடம் விளக்குங்கள்! அவர்களைக் கண்டியுங்கள், அவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டு விட்டால் அவருக்கு எதிராக வேறு வழி தேடாதீர்கள்' என்று திருக்குர்ஆன் கணவனுக்கு அறிவுறுத்துகிறது.
பிளவு ஏற்படும் எனத் தெரிந்தால், மேற்கூறிய நடவடிக்கைகளால் பிரச்னை கைமீறி, பிளவு வருமென்று அஞ்சினால் கணவன் குடும்பத்திலிருந்து ஒருவரையும், மனைவி குடும்பத்திலிருந்து ஒருவரையும் நடுவர்களாக கொண்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள் என்று கணவன், மனைவி இருவரின் குடும்பத்தார்களுக்கும், மத்தியஸ்தர்களுக்கும் திருக்குர்ஆன் கட்டளை இடுகிறது.
விவாகரத்து மிக சிறந்த முறை (அஹ்சன்): மேற்கண்ட முயற்சிகளுக்கு பிறகும் வாழ முடியாத நிலை ஏற்பட்டால், இரண்டு சாட்சிகள் முன்னிலையில் கணவன் மனைவியிடம் "உன்னை தலாக் (விவாகரத்து) செய்கிறேன்' என்று கூற வேண்டும். இதனை ஒரு முறை கூறினாலே போதும். இந்த தலாக் சொல்லும்பொழுது கண்டிப்பாக மனைவி மாதவிடாய் இல்லாத காலத்தில் (சுத்தமான காலத்தில்) இருத்தல் வேண்டும்.
தலாக் சொன்னதிலிருந்து மூன்று மாதவிடாய் காலம் (சுமார் மூன்றரை மாதம்) மனைவி கணவன் வீட்டிலேயே கணவனின் செலவிலேயே இத்தா (காத்திருப்பு காலம்) இருக்க வேண்டும். இக்காலத்தில் இருவரும் தாம்பத்திய உறவு கொண்டால், கணவன் விரும்பினால் இந்த மூன்றரை மாதத்திற்குள் மனைவியை மீட்டு கொள்ளலாம்.
இந்த இத்தா காலத்தில் மனைவி மறுமணம் செய்யக் கூடாது. இந்தக் காத்திருப்பு காலத்தில் (இத்தா) கணவன் மனைவியை மீட்காமலும் அல்லது தாம்பத்திய உறவு கொள்ளாமலும் இருந்தால் தலாக் (விவாகரத்து) நிறைவேறிவிட்டதாகக் கருதப்படுகிறது.
இதன் பின் கணவன் மீண்டும் அப்பெண்ணை மனைவியாக கொள்ள விரும்பினால், மஹர் கொடுத்து மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அதற்கு மனைவியின் சம்மதமும் வேண்டும். ஒருவேளை அந்த பெண் வேறொருவரை திருமணம் செய்து கொள்ள விரும்பினால் அது அவளுடைய விருப்பம்.
ஒருகால் இந்த இத்தா காலத்தில் விவாகரத்தை முறித்து மனைவியைக் கணவன் சேர்த்துக் கொண்டபின், மீண்டும் அவர்களுக்குள் பிணக்கு ஏற்பட்டு பிளவு ஏற்படுமேயானால் இரண்டாவது முறையாக அவன் மேற்கண்டவாறு தலாக் செய்து இத்தா (காத்திருப்பு காலம்) இருக்க வைக்கலாம். மேற்கண்ட சட்டத்திட்டங்கள் தான் இரண்டாவது தலாக்கிற்கும்.
ஒருகால் கணவன் இரண்டாவது இத்தா காலத்திலும் விவாகரத்தை முறித்து மனைவியை சேர்த்துக் கொண்ட பின்னர் அவர்களுக்குள் மீண்டும் பிளவு ஏற்படுமேயானால் மூன்றாவது முறையாக அவன் தலாக் செய்து இத்தா (காத்திருப்பு காலம்) இருக்க வைக்கலாம்.
மேற்கண்ட சட்டதிட்டங்கள் தான் மூன்றாவது தலாக்கிற்கும் (விவாகரத்து). ஆனால் மூன்றாவது முறை தலாக் சொன்ன பிறகு அப்பெண்ணை கணவனால் இத்தா காலத்தில் மீட்டுக் கொள்ள இயலாது. அவ்வுரிமையை அவன் இழக்கிறான். அவள் வேறொருவருக்கு திருமணம் ஆகி விவாகரத்து பெற்றிருந்தால் தவிர, மீண்டும் அவளை திருமணம் செய்து கொள்ளவும் முடியாது.
மேலும், "மனைவியாக வாழ்ந்த காலத்தில் நீங்கள் அவளுக்கு கொடுத்தவற்றில் எதையும் திரும்ப பெறக் கூடாது' என்று திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது. இதுதான் திருக்குர்ஆன் கூறும் விவாகரத்து முறையாகும்.
தலாக்குல் முபாரா (பரஸ்பர ஒப்புதல்)ட: கணவன், மனைவி இருவரும் தமக்குள் சேர்ந்து வாழ்வது ஒத்து வராது என கருதி இருவரும் சேர்ந்து பிரிந்து செல்வதாக முடிவு எடுத்தால் அழகிய முறையில் பிரிந்து செல்லலாம்.
தலாக்குல் குலா (பெண் விவாகரத்து கேட்டு பெறுதல்): மனைவி தலாக் கேட்டு பெறும் உரிமையை இஸ்லாம் வழங்கி இருக்கிறது. அதன்படி ஒரு பெண் தன் கணவனுடன் வாழ பிடிக்கவில்லை என்றாலோ அல்லது கணவன் முறைப்படி நடந்து கொள்ளவில்லை என்பதாலோ அவள் பிரிந்து செல்வதென முடிவு எடுத்தால் குலா முறையில் விவாகரத்து கோரலாம். ஜமாஅத் எனும் நிர்வாகத்தை அல்லது காஜியை அணுகி குலா மூலம் தன் கணவரிடம் தலாக் பெற்றுத் தர கோரலாம். அவர்கள் கணவனிடம் பேசி விவாகரத்து பெற்றுக் கொடுக்கலாம்.
கணவன் விவாகரத்து தர மறுத்தால் அந்த நிர்வாகமே திருமண பந்தத்தை முறித்து விவாகரத்தை உறுதி செய்வதாக அறிவிக்கலாம். இதற்கும் இத்தா என்கிற காத்திருப்பு காலம் உண்டு. மனைவி கணவனிடம் பெற்ற மஹரை திருப்பி கொடுக்கக் கடமைப்பட்டவளாகிறாள்.
ஆணுக்கு மட்டும் தலாக் கொடுக்கும் அதிகாரமும், பெண்ணுக்கு தலாக் கேட்கும் உரிமையும் எப்படி சமமாகும்? இது அநீதி அல்லவா? பெண்களுக்கு மட்டும் குறைந்த உரிமையை கொடுத்து ஆண் அடிமைத்தனத்தை உறுதி செய்வதுபோல அல்லவா இருக்கிறது என்று சிலர் கேட்கக்கூடும்.
உலகம் இன்றுவரை ஆண் ஆதிக்கத்திலேயே இருந்து வருகிறது. ஆண் படைப்பால் பலசாலியாக உள்ளான். அவனது ஆதிக்கத்திடமிருந்து ஒரு பெண் (மனைவி) அவனை விவாகரத்து கூறி தள்ளுவது மிக மிக கடினமாகும். தன்னை, தன் மனைவி வெறுக்கிறாளே என்ற கோபத்தில் அவனுக்கு எதையும் செய்ய தோன்றும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் மனைவிக்கு மிக பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதையெல்லாம் கருத்தில் கொண்டே இஸ்லாம் பெண்ணுக்கு மிக பெரிய சமுதாய பங்களிப்புகளோடு கூடிய பாதுகாப்புடன் தலாக் கோரி பெறும் உரிமையை வழங்கி இருக்கிறது.
ஜமாஅத் மூலம் விவாகரத்து செயல்படுத்தப்படுவதால் ஜமாஅத்தின் பலமும் மனைவியோடு சேர்ந்து கொள்கிறது.
கணவன் விவாகரத்து செய்ய விரும்பினால் நடுவர்களை அழைத்து பிறகு தலாக் கூறி மூன்று மாதம் காத்திருக்க வேண்டும். ஆனால் பெண்ணுக்கு கேட்ட மாத்திரத்தில் விவாகரத்து கிடைக்கும். இதனால் ஆணைவிட பெண்ணிற்கு கூடுதலான உரிமை உண்டு என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
ஃபஸ்ஹ் (திருமண ஒப்பந்தத்தை முறித்தல் அல்லது ரத்து செய்தல்: கணவன் காணாமல் போனாலோ அல்லது சித்த பிரமை ஏற்பட்டாலோ அல்லது ஒழுங்கின, குற்றச் செயல்களில் ஈடுபட்டாலோ, அதுபோல் மனைவி ஒழுக்கம் தவறினாலோ அது குறித்து ஜமாஅத் என்கிற நிர்வாகத்திடம் தெரிவித்து திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்வது அல்லது பிரித்து கொள்வது ஃபஸ்ஹ் முறையாகும்.
உதாரணமாக, கணவன் காணாமல் போய் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக எங்கு இருக்கிறார் என்று அறிய முடியவில்லையென்றால், மனைவி இது குறித்து ஜமாஅத்திடம் தெரிவித்து திருமண பந்தத்தை ரத்து செய்ய கோரலாம். ஜமாஅத் நிர்வாகிகள் திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்து விடலாம்.
அதுபோல் ஒரு பெண் நடத்தை தவறினால் அதை கணவன் அறியும் பட்சத்தில் அவன் நான்கு சாட்சிகளைக் கொண்டு நிரூபிக்க வேண்டும். சாட்சிகள் இல்லையென்றால் இருவரும் அல்லாஹ்வின் பெயரால் நான்கு முறை சத்தியம் செய்து "இதனால் ஏற்படும் கேடு என்னையே சேரும்' என்று கூற வேண்டும். அதன் பிறகு நிர்வாகம் இருவரின் திருமண ஒப்பந்தத்தையும் ரத்து செய்து பிரித்து விடலாம்.
தலாக்குள் பித்அத் (நூதன தலாக்): தலாக் தலாக் தலாக் அல்லது முத்தலாக். இந்த முறை முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்திலோ அல்லது அவர்கள் பிறகு வந்த முதல் கலீபா காலத்திலோ இல்லை. பிற்காலத்தில் வந்த விவாகரத்து முறை. ஆதலால் இது நூதன தலாக் என்று பெயர் பெற்றுள்ளது.
இந்த முறையின் படி மூன்று முறை தலாக் கூறிவிட்டாலே விவாகரத்து நிறைவேற்றியதாக கூறுவர். இப்படி ஒரே நேரத்தில் மூன்று முறை கூறினாலும், அது ஒரே தலாக் ஆகத்தான் கருதப்படும் என சொல்லும் அறிஞர்களும் உள்ளனர். எல்லா திருமண முறிவிற்கும் இம்முறையைப் பின்பற்றுவது இல்லை.
தனது மனைவி சோரம் போவதைக் கண்ணால் கண்டுவிட்ட எந்த கணவனும் மனைவியைத் திரும்ப சேர்த்துக்கொள்ள சம்மதிக்க மாட்டான். இதுபோன்ற அசாதாரண சூழ்நிலையில் மட்டும் இதுபோன்ற தலாக் பயன்படுத்தப்படுகிறது.
சிலர் தீர்க்க கூடிய வாய்ப்புள்ள பிரச்னைகளுக்கும் இந்த முத்தலாக் முறையை தவறாகப் பயன்படுத்துவது சரியல்ல. அது பாவமும் ஆகும். இதை பெரும்பாலான இஸ்லாமிய அறிஞர்கள் கண்டிக்கிறார்கள். ஒரு சட்டத்தை ஒருவர் தவறாக பயன்படுத்தினால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர சட்டத்தையே நீக்குவது அல்லது குறை கூறுவது எப்படி முறையாகும்?
ஷரீஅத்தை, உலகில் எவராலும் குற்றம் காண முடியாது என்பது உலக முஸ்லிம்களின் கருத்து மாத்திரமல்ல; உளமார்ந்த நம்பிக்கையும்கூட.
முத்தலாக்கை முன்னிறுத்தி இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம் என சூளுரைப்பது வேடிக்கையாக இருக்கின்றது.
பொது குளத்தில் எல்லோரும் குளிக்க அனுமதி இல்லாதபோது, சாதிக்கொரு மயானம் இருக்கின்றபோது, சாதி பெயரை சொல்லி மனிதர்களைக் கொல்லும் நிலை இருக்கும்பொழுது சட்டத்தில் மட்டும் சமத்துவம் எங்கிருந்து வருகிறது என்பது தெரியவில்லை!

கட்டுரையாளர்:
வழக்குரைஞர்.
எம்.ஜி.கே. நிஜாமுதீன்

நன்றி தினமணி

No comments:

Post a Comment