Showing posts with label சூத்திரன். Show all posts
Showing posts with label சூத்திரன். Show all posts

Saturday, 9 August 2025

சூத்திரன் குடிக்கத் தடை செய்யப்பட்ட மாட்டுப் பால்! -செ.ர.பார்த்தசாரதி





கட்டுரை, ஞாயிறு மலர்

வைணவ மதத்தை பரப்பிய பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான நாதமுனி ஆழ்வார் அவர்களின், ‘விஷிஷ்டாத்வைதம்’ என்ற கொள்கைக்கு வேத முறைப்படி விளக்க உரை கூறிய ‘இராமானுஜர்’, ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ என்று தமிழில் எழுதப்பட்ட வேத நூலை அடிப்படையாகக் கொண்டு வைணவ மதத்தை பொ.பி.10ஆம் நூற்றாண்டில் பரப்பினார்.

அவர் வழியில் பிறகு வந்த திருவரங்கத்தை சேர்ந்த ‘மணவாள மாமுனி’ என்பவர் (பொ.பி.14ஆம் நூற்றாண்டு) தற்போது பின்பற்றப்படும் ‘தென்கலை’ பிரிவை தோற்று வித்தார். அதே ‘இராமானுஜர் வழியில் வந்த, காஞ்சிபுரத்தை சேர்ந்த ‘வேதாந்த தேசிகர்’ என்பவர் (பொ.பி.13-14ஆம் நூற்றாண்டு) சமஸ்கிருத ‘நால் வேத’த்தை தான் அடிப்படையாக கொள்ள வேண்டும்’ என்று வைணவ மதத்தில் ஒரு பிரிவை ஏற்படுத்தினார். இதனால் அவர் ஏற்படுத்திய பிரிவுக்கு ‘வடகலை’ என்றும் கூறப்படுகிறது.

தமிழ் நூலான ‘நாலாயிரத் திவ்ய பிரபந்தத்’தைப் பரிந்துரைத்த இராமானுஜர் எழுதிய நூல்கள் அனைத்தும், சமஸ்கிருத நூல்களே! ஆனால், சமஸ்கிருத வேதத்தை பரிந்துரைத்த ‘வேதாந்த தேசிகர்’ பல தமிழ் நூல்களை இயற்றியிருக்கிறார்.

அதில் ஒன்று ‘தேசிகப் பிரபந்தம்’ என்ற வைணவ மத விளக்க நூலாகும்.

அந்த ‘தேசிக பிரபந்த’த்தில் ஒரு பகுதியாக ‘ஆகார நியமம்’ என்கின்ற பகுதி உள்ளது. அதில் எந்தெந்த உணவை உண்ணலாம், எப்போது உண்ணலாம், யார் யார் உண்ணலாம் என பட்டியல் போடப்பட்டுள்ளது.

அதில் உள்ள ஒரு பாடல் வருமாறு:

“சாதி குணம் ஆசிரமந் தேசங் காலம்

தர்மங்கள் நிமித்தங்கள் முதலாவோதும்

பேத முதலாக வொரு திரவியந் தான்

பிரிந்து நவந்தீங்கினையும் பெற்று நிற்கும்

பாதமிசைப் பிறந்தோர்க்குக் கபிலையின் பால்

பருகிடலாகா தென்று மறையோர் சொன்னார்.’’

– ஸ்ரீ தேசிகப் பிரபந்தம், ஆகார நியமம் – பாடல் 20

மனிதர்கள் எல்லோருக்கும், ஒரே வகையில் வேதத்தில் நீதி வகுக்கப்படவில்லை; ஜாதி குணத்திற்கு ஏற்றார் போல் நீதி வகுக்கப்பட்டுள்ளது; ‘ஒரு ஜாதிக்கு உகந்த உணவு வேறொரு சாதிக்கு ஆகாத உணவாகும். பார்ப்பனர்கள் மட்டுமே குடிக்க வேண்டிய ‘காராம்’ (கபிலை) பசுவின் பாலைக் கடவுளின் கால் பகுதியிலிருந்து பிறந்த சூத்திரர்கள் குடிக்கக்கூடாது; குடித்தால் நரகத்தை அடைவார்’ என்று ‘மறையோர்’ சொன்னதாக அதாவது ‘ஸ்மிருதிகள்’ சொன்னதாக இப்பாடல் வழியாக ‘வேதாந்த தேசிகர்’ கூறுகிறார்.

பார்ப்பனர்கள் மனிதர்களில் மட்டும் ஜாதி பிரிக்கவில்லை தனக்கு நெருக்கமான பல உயிரினங்களிலும் ஜாதிகளைப் பிரித்து வைத்துள்ளனர்.

கருப்பாக இருக்கும் உயிரினங்களைப் ‘பறை’ என்ற அடைமொழியாலும் மற்ற நிறங்களில் இருப்பவைகளைப் ‘பிராமண’ என்ற அடைமொழியாலும் அழைக்கின்றனர்.

வடமாநிலங்களில் ‘பிராமணப் பசு’ என்றும் ‘சூத்திரப் பசு’ என்றும் பிரித்து வைத்துள்ளனர்.

பொதுவாக பசுக்கள் கருப்பு, சிவப்பு, வெள்ளை போன்ற மூன்று வகையான நிறங்களைக் கொண்டவை.

‘காராம் பசு’ என்பது உடல் முழுவதும் கருமை நிறத்தை உடையதாகும். இவற்றிற்கு காரணம் சில மரபணு (ஜீன்) வகைகளாகும்.

‘காராம் பசு’வின் பால் சிறிது அடர்த்தியாக இருக்கும். அதற்கு ஏற்றால் போல் கூடுதல் சுவை இருக்கும்.

கருப்பாக இருப்பதனாலேயே எருமையை புறக்கணிக்கும் பார்ப்பனர்கள், ‘காராம் பசு’ கருப்பாக இருந்தாலும் அதன் பயன் கருதி மற்றவர்களைக் குடிக்கக் கூடாது என்று சொல்லிவிட்டுத் தாங்களே குடிப்பதற்காக, “வேதம் கூறுகிறது” என்று ஜாதி அடிப்படையில் சதித் திட்டம் வகுத்து வைத்தனர் என்பது இதனால் புலனாகின்றது.

- செ.ர.பார்த்தசாரதி

- விடுதலை ஞாயிறு மலர்,        09.08.2025


Monday, 2 September 2024

‘சூத்திரன்’ என்றால் ஆத்திரம் கொண்டு அடி!

 

கைவல்யம் பிறந்த நாள் இன்று (22.8.1877)

‘சூத்திரன்’ என்றால் ஆத்திரம் கொண்டு அடி!

கைவல்யம் (1877-1953) பகுத்தறிவு எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் இருந்தார். இந்துமதத்தில் நிலவும் மூட நம் பிக்கைகளையும் இந்துமதத் தொன்மக் கதைகளின் பொய் களையும் ஆராய்ந்து நூற்றுக்கணக் கில் கட்டுரைகளை எழுதினார்.
கைவல்யசாமி கேரளத்தில் கள்ளிக்கோட்டையில் பிறந்தார். இவரது இயற்பெயர் பொன்னுச்சாமி ஆகும். திருச்சிராப்பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை படித்தார். பின்னர் கரூரில் மவுனசாமி மடத்தில் சேர்ந்து சமய இலக்கியங்களைக் கற்றார். “கைவல்ய நவநீதம்” என்னும் சைவ சமய நூலை நன்றாகக் கற்றுத் தேர்ச்சிப் பெற்றார். எனவே “கைவல்யசாமி” என்று மக்கள் இவரை அழைக்கலாயினர்.

கைவல்யசாமி 1903 ஆம் ஆண்டில் தந்தை பெரியாரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. திருச்செங்கோடு அருகில் இளம்பிள்ளை என்னும் ஓர் ஊரில் ஒரு நிலக்கிழார் இல்லத்தில் தந்தை பெரியாரும் கைவல்யசாமியும் அருகருகே அமர்ந்து விருந்து உண்டனர். அப்போது பெரியார் குடிநீர் தீர்ந்துவிட, குவளையில் குடிக்கத் தண்ணீர் கேட்டார். அங்கிருந்த உணவுப் பரிமாறிய பார்ப்பனர் அக்குவளையைக் கையிலெடுத்து குடிநீரை ஊற்றினார். அதைப் பார்த்த தலைமைச் சமையல்காரர், “சூத்திரன் தொட்ட பாத்திரத்தை ஏன் தொட்டாய்?” என்று கூறிக் கண்டித்தார்.

அப்போது உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த கைவல்யசாமி ஆத்திரம் அடைந்து சோற்றுக் கையுடன் சமையல்காரப் பார்ப்பனர் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். “சூத்திரன்’’ என்றால் ஆத்திரம் கொண்டு அடி ! என்னும் சொலவடை சொற்றொடர் இவ்வாறு தோன்றியதே ஆகும்.
குடிஅரசு (இதழ்), திராவிடநாடு (இதழ்) போன்ற இதழ்களில் ஏராளமான கட்டுரைகளை எழுதினார். அவை பெரும்பாலும் இந்து சமயப் புராணப் புரட்டுகளையும், இதிகாசங்கள், இந்துமத விழாக்கள் ஆகியவற்றின் பொருந்தாத மூடநம்பிக்கைகளையும் அம்பலப்படுத்துவதாக இருந்தன. 1929 ஆண்டு முதல் பல மாநாடுகளிலும் கூட்டங்களிலும் பேசினார்.
கைவல்யசாமி கோபிச் செட்டிப்பாளையத்துக்கு அருகில் பங்களாபுதூரில் 1953 ஆம் ஆண்டில் காலமானார்.


Thursday, 23 November 2023

சூத்திரன் வணங்க வேண்டிய தெய்வம் எது?


சிற்றிலக்கியங்களில் நீதி நூல்கள் வரிசையிலே 230 ஆண்டுகளுக்கு முன் குருபாததாசர் என்பவரால் இயற்றப்பட்ட 'குமரேச சதகம்' என்ற நீதி நூலில், பெண் அடிமைத்தனமும் சூத்திரர்களுக்கான அடிமைத்தன்மையும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
பெண்களுக்கு தெய்வம் கணவன் என்றும் சூத்திரர்களுக்கு (தாழ்ந்தவர்) தெய்வம் பார்ப்பனர் (மறையோர்) என்றும் 8வது பாடலில் குறிப்பிடப்படுகிறது.
அதேபோல் 10வது பாடலில் மிலேச்சருக்கு (இழிந்தவர்)ஒழுக்கம் இல்லை; புலயருக்கு (கீழ் மக்கள்) இரக்கமில்லை. என்றும் கூறுகிறது. இப்படிப்பட்ட படைப்புகளுக்கு காரணம் ஆரிய பார்ப்பன கலாச்சார உள்நுழைவே ஆகும். அதாவது சனாதன கோட்பாடே ஆகும்.
இப்படிப்பட்ட கலாச்சாரத்தை அழித்து ஒழிக்க புறப்பட்டதே திராவிட இயக்கமாகும்.

Thursday, 9 March 2023

‘சூத்திரன் ஏவலாளி மட்டுமே!' சிபிஎஸ்இ 6 ஆம் வகுப்பு பாடத்திட்டம் சொல்கிறது இதுதான் ஒன்றிய அரசின் புதியகல்விக் கொள்கையின் லட்சணம்


சிபிஎஸ்இ 6 ஆம் வகுப்பு வரலாறு - சமூக அறிவியல் பாடத்தில் வர்ணாஸ்ரமம் குறித்த பாடம் சூத்திரர்கள் ஏவலாளிகள் மட்டுமே, அவர்களுக்கு கல்விகற்க (வேதங்கள்) அனுமதியில்லை என்றும். வர்ணாஸ்ர மத்திற்குள் வராதவர்கள் ஊருக்கு வெளியே வசித்து மலம் அள்ளவும், செத்த மாடுகளை எடுப்பதுமே அவர்கள் பணி என்று கூறப்பட்டு, மேலும் இவர்கள் தூய்மையில்லாதவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்

தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆண்டிமுத்து இராசா  எம்.பி., அவர்கள் மனுதர்மத்தினை தோலுரித்துக் காட்டியதும், ஒட்டுமொத்த பார்ப்பனர்களும், அவர்களுக்கு ஒத்து ஊதும் சர்சூத்திரர்களும் பொங்கிக் கொண்டு எழுகின்றனர். இந்த விவகாரத்தை எப்படி திசைதிருப்பலாம் என்று பலவழிகளைத் தேடிக்கொண்டு இருக்கின்றனர். 

பா.ஜ.க.வின் தமிழ்நாடு பார்ப்பனப் பிரமுகர்கள், ‘‘மனுவில் எழுதப்பட்டுள்ளது. எல்லாம் ஏதோ ஒரு காலத்தில் உள்ள நடைமுறைகள் இப்பொழுது எல்லாம் அவை இல்லை. திராவிட அமைப்புகள் தான் ஹிந்துக்களின் மீதான வெறுப்பிலும், ஆபிரகாமிய மதங்களிடம் வாங்கிய பணத்திற்கும் ஹிந்து மதத்தை இழிவுபடுத்த அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்துகின்றனர். 

இப்போது எல்லாம்  சரி சமமாகப் பார்க்கத் துவங்கி விட்டோம். ‘‘ஹிந்து மதம் என்பது சாத்வீகம், சாந்தம், அன்பு, சகிப்புத்தன்மை, வாழ்வியல் பயிற்சி'' என்று எல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கின்றனர்.  ஆனால், இவர்கள் இப்படி முட்டுக்கொடுத்துக் கொண்டு இருக்கும் போதே ஒன்றிய அரசு பாடத் திட்டத்தில் வரும் ஒரு பாடம்.   அதில் வர்ணாஸ்ரமம் குறித்து தெளிவாக படத்தோடு குறிப்பிட்டுள்ளனர்.  

முதலாம் இடத்தில் பார்ப்பனர்கள், படத்திலேயே நன்றாக தெரிகிறது - அனைத்து வசதிகளோடு குதுகலமாக இருப்பதுபோல் குறிப்பிட்டுள்ளனர். அதற்கு அடுத்து சத்திரியர்கள், பிறகு வைசியர்கள் - இன்று உள்ள மார்வாடி களை மனதில் வைத்துப் படம் போட்டுள்ளனர். 

ஆனால், சூத்திரர்களுக்கு கோவணம் மட்டுமே, வறண்ட தேகத்தோடு படம் வரைந்துள்ளனர். நல்ல வேளை கோவணம் கொஞ்சம் நீளமாகக் கொடுத்துள்ளனர்.    இதில் பெண்கள் படம் இல்லை, பெண்கள் பார்ப்பன குலத்தில் பிறந்திருந்தாலும் சூத்திரனுக்கும் கீழேதான்.   ஆனால், பஞ்சமனுக்கும் மேலே! சூத்திரனுக்காவது வேதங் களை கற்கத்தான் அனுமதியில்லையாம்.  பஞ்சமர்களை மனிதனாய்க் கருதவே இடமில்லையாம்.  காரணம், அவர்கள் அழுக்காக இருப்பார்களாம்! மாணவர்களுக்கு வரலாற்றை உள்ளபடி சொல்வதில் ஏதும் ஆட்சேபனை இல்லை. இன்று சத்திரியர், சூத்திரர், பஞ்சமர் என்று எவருமில்லை என்று அரசு குறிப்பே சொல்கிறது.

 பொருத்துக என்று கேட்டிருக்கிறார்கள்,   இத்தகைய அடுக்குகள் சரியா - உன் கருத்தை எழுது என்கிறார்கள்.  

இதற்கு ஒரு பார்ப்பன மாணவன் என்ன பதில் எழுது வான்?  அவனுடைய வீட்டில் என்ன சொல்லிக் கொடுப் பார்கள் ? குறைந்தபட்ச அறத்துடன் இது மிகத் தவறானது, கொடூரமானது, மனிதத்தன்மையற்றது என்று அந்தப் பாடத்தில்  எழுதியிருக்க வேண்டுமல்லவா? 

தமிழ்நாடு பாஜகவினரும், ஹிந்துத்துவ வன்முறைக் கூட்டங்களும் ஒன்றிய சிபிஎஸ்இ பாடத்தில் இதனைக் கொண்டுவந்தவர்களுக்கு எதிராகப் போராடவேண்டும். ஆனால், இவர்கள் தந்தி அனுப்பியவரை விட்டுவிட்டு தந்தியைப் படித்துக்காட்டியவரை எதிர்த்து வன்முறையில் இறங்குகின்றனர். 

மனுநீதி அடிப்படையிலான வர்ணாஸ்ரம கருத்துகளை கல்விக் கூடத்திலேயே பரப்புகிறது... படிக்கும் குழந்தை களின் பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கிறது.. சக குழந்தை களிடம், ‘‘நீ பிரம்மனின் காலில் இருந்து பிறந்தவன்'' என்று சொன்னால் அக்குழந்தையின் மனது என்னாகும் என யோசியுங்கள். இதனால் தான் ஒன்றிய அரசின் புதிய கல்வி கொள்கையை வேண்டாம் என்று நாம் கூறுகிறோம்.

Saturday, 19 December 2020

இடுகாட்டில் ‘சூத்திரர்கள் இடம்’

Thursday, 28 February 2019

சூத்திரர் பட்டம் - சில முக்கிய தகவல்கள்

சூத்திரனென்ற பெயரைச் சுமப்பதற்கு தமிழர்கள் ஏற்றவர்களென்று அவர்கள் மேல் ஆரியர் அச்சுமையை ஏற்றியிருக் கிறார்கள். அதனைச் சுமந்துகொண்டிருப்ப வர்கள், இறக்கிவிட வேண்டுமேயன்றி, ஏற்றியவர்கள் இறக்கிவிட மாட்டார்கள் என்றே தோன்றுகிறது. அதி சமீபகாலத்தில், ஆனரெபிள் திவான்பகதூர் ரகுநாதராவ் அவர்கள் (இவர் காங்கிரஸ் துவக்க காலத் தலைவர்களில் ஒருவர்) ஆனரெபிள் பொப்பிலி மஹாராஜா அவர்களை சூத்திரர் என்று எழுதி, 1910ஆம் வருடம், ஏப்ரல் 23ஆம் தேதி பிரசுரமான ‘ஹிந்து' பத்தி ரிகை வாயிலாக வெளியிடப்பட்டதை அநேகர் அறிந்திருப்பீர்கள். (ராவ் பகதூர் வெ.ப.சுப்பிரமணி முதலியார் அவர்கள் ‘இராமாயண உள்ளுரைப் பொருளும் தென் னிந்திய சாதி வரலாறும் - 1935 வெளியீடு)

1. அரசு ஆவணங்களில் 'சூத்திரர்' பட்டம் நீக்கக் கோரி இயற்றப் பட்ட முதல் தீர்மானம்

பார்ப்பனரல்லாத இளைஞர் சங்கத்தின் முதல் மாநில மாநாடு சென்னை எஸ்.அய். ஏ.ஏ. மைதானத்தில் 1927-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22, 23 தேதிகளில் நடைபெற்றது. 20ஆம் நூற்றாண்டின் கிழக்கத்திய லூதர் என்றழைக்கப்பட்ட, இரண்டாயிரம் ஆண்டுகளாக மதம் என்ற போர்வையில் ஆர்ய இனத்தால் தங்களது அடிப்படை உரிமைகளும் களவாடப்பட்ட நமது சகோதரர்களுக்காக போராடியவரும், தனது வாழ்நாளையே பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்கு தியாகம் செய்தவருமான டாக்டர் நாயர் அவர்கள் பெயரிலான அரங்கில் மாநாடு நடை பெற்றது. மைசூர் ஜனாப் முகமது அப்பாஸ் கான் அவர்கள் இம்மாநாட்டுக்குத் தலைவராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார். இதனை பனகல் மகாராஜா அவர்கள் முன்மொழிய செல்வி ரஞ்சிதம் வழி மொழிந்தார். திரு வோகேலி ஆர்யா அவர்கள் அனைவரையும் வர வேற்றார். எந்த ஜாதியும் நமது ஜாதியை விட உயர்ந்ததும் இல்லை, தாழ்ந்ததும் இல்லை என்ற நம்பிக்கையில் பொது வாழ்வினைத் தொடங்க வேண்டுமென நமது மதிப்பிற்குரிய தேசப் பற்றாளர் திரு ஈ.வெ. ராமசாமி அவர்களின் ஆலோச னைக்கு உண்மையானவர்களாக நாமிருந்து, நாம் அனைவரும் இங்கு ஒன்றாக உயர்ந் தவர், தாழ்ந்தவர். பணக்காரர், ஏழை, ஆண், பெண், இந்து, முகமதியர், கிருஸ்துவர் என்ற வேறுபாட்டின்றி, நமது தனிப்பட்ட சுதந்திரத்தையும், குண நலங்களையும் இழந்து விடாமல் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர் போல் நாம் இங்கு வாழ்வோம் என்று அவர் கூறினார். இம்மாநாட்டில் மேலும் திருவாளர்கள் சர்.ஏ.ராமசாமி முதலியார், ஈ.வெ.ராமசாமி, எஸ்.ஆர்யா, சி.செங்கல்வராய முதலியார், ஓ.சி.சீனிவாசன், பி.ஜீவரத்தின முதலியார் மற்றும் பல தலைவர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.

பின்னர் மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திரு ஜே.எஸ். கண் ணப்பர் கீழ்க்கண்ட தீர்மானத்தை வழி மொழிந்தார்.

"சென்னை அரசு தனது ஆவணங்களில் 'சூத்ரா' என்ற சொல்லைப் பயன்படுத்துவது பெரும்பான்மையாக உள்ள பார்ப்பன ரல்லாத சமூகத்தினரின் சுயமரியாதை உணர்வை மிகவும் புண்படுத்துவதாக உள்ளது என இம்மாநாடு கருதுகிறது. அதனால், கடந்த கால ஆவணங்களி லிருந்து இந்த சொல்லை நீக்குவ துடன் அலுவலக ஆவணங்களில் இனி இச்சொல் லைப் பயன்படுத்தக் கூடாதென அனைத்து இலாக்காக்களுக்கும் உடனடியாக ஒரு ஆணை பிறப்பிக்கவேண்டுமென அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

ஒட்டுமொத்த சமூகத்தின் சுயமரியாதை யினைப் பற்றியது இத்தீர்மானம் என அவர் கூறினார். பார்ப்பனரல்லாத மக்கள் ‘சூத்திரர்' என்றழைக்கப்பட்டனர்; அவர்களும் இது ஏதோ தங்களுக்கு அளிக்கப்பட்ட மரியாதை என்பதாகவே கருதி இதுவரை அதில் நிறைவு பெற்றவராகவே இருந்துவந்தனர். ‘ரிக் வேதம், மனுதர்ம சாஸ்திரப்படி ஒரு சூத்திரன் என்பது 'தாசிமகன்' என்றும், பார்ப்பனருக்கு சேவை செய்யவே பிறந்த வன் என்றும் பொருள் தருவதாகும். இந்தப் பட்டமும் அதன் விளக்கமும் இவர்களுக்கு உண்டாக்கும் இழிவைப் போல் இழிவைத் தருவது வேறெதுவுமிருக்க இயலாது. சில காலத்துக்கு முன் சென்னையின் வடக்குப் பகுதி ‘கருப்புநகரம்' என்றழைக்கப்பட்டதை விட இது மிகவும் மோசமானது. மக்களின் போராட்டத்தின் காரணமாக இப்பெயர் ‘ஜார்ஜ் டவுன்' என மாற்றப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கவேண்டும். 'பஞ்சமர்' என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களும் இதற்கு எதிராக மறுப்பு தெரிவித்ததால், தற்போது அவர்கள் ஆதிதிராவிடர் என்றழைக்கப்படுகின்றனர். ஒரு குறிப்பிட்ட அரசுப் பணியில் உள்ள பணியாளர்களின் வகுப்புவாரியான எண் ணிக்கையினை அளிக்க சட்டமன்ற மேலவை கேட்டுக்கொண்டதற்காக சென்னை மாகாண சுயாட்சி அரசு பதில் அளிக்கும் போது, அரசின் பார்ப்பனச் செயலாளர் ஒருவர் சமீபத்தில் ‘சூத்ரா’ என்ற சொல்லை பார்ப்பனரல்லாதாரைக் குறிக்கப் பயன்படுத் தியுள்ளார். மதநம்பிக்கை கொண்டு இருந்த அரசாங்கத்தின் கடந்த ஆறு ஆண்டு கால ஆட்சியின்போது, எந்த அரசு அறிக்கையிலும் இப்பட்டம் பயன்டுத்தப்பட வில்லை. ஆனால் தற்போதுள்ள உள்துறை அமைச்சரோ ஒரு பார்ப்பனரல்லாதவர். டாக்டர் . சுப்பராயன் அவர்களிடம் நாம் கோருவதெல்லாம், அரசு ஆவணங்களி லிருந்து இச்சொல் நீக்கப்படவேண்டும் என்பதுதான். இத்தீர்மானத்தை வழி மொழிந்த திரு டி.ஆர்.ரத்தினம் அவர்கள் சூத்ரா என்ற இச்சொல் சமூகத்தை மிகவும் இழிவு படுத்துவதாக உள்ளதால், அரசு ஆவணங்களில் ஆட்சேபணைக்குரிய இத்தகைய சொல் பயன்படுத்துவதை எதிர்த்துப் போராட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது எனக் கூறினார். இத்தீர் மானம் ஓட்டுக்கு விடப்பட்டு பலத்த கைதட்டல்களுக் கிடையே நிறைவேற்றப்  பட்டது.

2. சந்நியாசம் பெற்றுக் கொள்ளும் உரிமை கூட சூத்திரர்களுக்கு இல்லை என்பது பற்றிய உச்ச நீதி மன்றத் தீர்ப்பு

"சந்நியாசம் கொள்வது ஆரியர்க்கு உரியதல்ல; ஆரியர்கள் முதலாவதாக இந்தியாவில் நுழைந்தபொழுது, சந்நியா சத்தை வெறுப்பவர்களாகவே இருந்தனர். அவர்களது வாழ்க்கைச் சூழல் அதைப்பற்றிச் சிந்திக்கக் கூட அவர்களை அனுமதிக்கவில்லை. உண்மையில் வேதகால முனிவர்களிற் பலர் அவர்களது பெரிய மகிழ்வான, நிறைந்த வாழ்வினை குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டிருந் தனர். அவர்களில் யாக்ஞவல்கியரைப் போன்ற சிலர் இரண்டு மனைவிகளை உடையவர்களாக இருந்தனர். காலப் போக்கில் ஆரியர் அல்லாதாரிடமிருந்து - குறிப்பாக ஹரப்பாவில் வாழ்ந்த திராவிடர்களிடமிருந்து 'சந்நியாசம்' என்ற கோட்பாட்டை அவர்கள் கடன் பெற்றுக் கொண்டார்கள். பின்னர் மூன்று உயர் சாதியினர் மட்டுமே லவுகீக வாழ்வைத் துறந்து சந்நியாசம் மேற்கொள்ளலாம் ; மற்றவர்கள் மேற்கொள்ளக் கூடாது என்று ஆக்கிக் கொண்டார்கள். அதுவும் வாழ்வின் கடைசிக் கட்டத்தில்தான். இந் தக் கடுமையான விதிமுறைக்கு மாறாக, சூத்திரர்கள் மட்டுமல்லாமல் அடிமை களும் சண்டாளர்களும் (தீண்டத்தகாதவர் களும்) கூட விரும்பினால் சந்நியாசிகளா கலாம் என்று புத்தர் அனுமதித்தார். இவ்வாறு ‘கீதை பற்றிய உண்மை' என்ற நூலில் பகுத்தறிவு அறிஞர் வி.ஆர். நார்லா கூறியுள்ளார்.

பிற்காலத்தில் ஆரியர்கள் இதனை எடுத்துக் கொண்டார்கள்; என்றாலும் மூன்று சாதியாருக்கு மட்டுமே உள்ள உரிமை சந்நியாசம் கொள்ளுவது என்று திரித்து வைத்துக் கொண்டனர். அதாவது கீழ் சாதியினருக்கு அவ்வுரிமை இல்லை. இன்றளவும் ‘இந்துலா' என்ற இந்துச் சட்டத்தில் இது நடைமுறையில் உள்ள ஓர் சட்டமாகும். உச்சநீதிமன்றத்தின் கீழ்க்கண்ட தீர்ப்பில் இது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ஏ.அய்.ஆர். 1980 உச்சநீதிமன்றம்

ஏ.அய்.ஆர். 1972 லிருந்து ஆல் 273

எஸ். முர்தசா பாசல் அலி

மற்றும் ஏ.பி. சென் ஜேஜே

சிவில் மேல்முறையீடு எண்; 1979-ன் 1802-நாள்: 21.12.1979

கிருஷ்ணசிங்: மேல்முறையீட்டாளர் வி. மதுரா அஹிர் மற்றும் இதரர்.

(அ) இந்திய அரசியலமைப்பு சட்டம், பகுதி 3, விதி 13 - வாதிப்பிரதிவாதிகளுக்கு இந்து தனிப்பட்ட சட்டம் பொருந்துவது பற்றி - சூத்திரர்கள் சன்னியாசிகளாக ஆவதற்குத் தகுதியற்றவர்களா என்பது பற்றி:

ஜதி அல்லது சன்யாசி ஆவதற்கு சூத்திரர்கள் தகுதியற்றவர்கள் என்று கருதப்பட்ட ஸ்மிருதி எழுதியவர்களால் நிர்ணயிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வந்த கடுமையான விதி, அரசியலமைப்பு சட்டம் பகுதி 3இன் கீழ் உறுதியளிக்கப் பட்டுள்ள அடிப்படை உரிமைகளின் காரணமாக செல்லத் தக்கதல்ல என்ற கருத்து சரியான தல்ல. வாதப்பிரதிவாதிகளின் தனிப்பட்ட சட்டங்களை அரசியலமைப்பு சட்டத்தின் 3-ஆம் பகுதி தொடவே இல்லை (பக்கம் 17)

வாதிப்பிரதிவாதிகளின் தனிப்பட்ட சட்டங்களைக் கையாளும்போது, இந்து சட்டங்கள் பற்றி அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப் பூர்வமான ஆதாரங்களின், அதாவது பல்வேறு உயர்நீதிமன்றங்களில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளவாறு ஸ்மிருதி கள் மற்றும் அவற்றின் விளக்கவுரைகளின் அடிப்படையில் மட்டுமே ஒரு நீதிபதி சட்டத்தை, அது எந்த ஒரு பழக்கத்தினாலோ அல்லது வழக்கத்தினாலோ அல்லது மற்றொரு சட்டத்தால் ரத்து செய்யப்பட்ட தாகவோ அல்லது மாற்றப்பட்டதாகவோ இல்லாதபோது, நடைமுறைப்படுத்த வேண்டுமேயன்றி, நவீன காலத்திய தனது சொந்தக் கருத்தினை அறிமுகப்படுத்த இயலாது. (பக்கம்: 17)

கீழ்சாதிக்காரர்களுக்குத் துறவு பூணவும் உரிமை இல்லை. அப்படி நிகழ்ந்துவிட்டால், அது அவர்களுக்கு உயர்சாதியினருடன் சிறிதளவேனும் சமத் துவத்தை அளித்து விடும். மேலும், மேல்சாதிக்காரர்களின் ஆதிக்க சக்திகளின் அடித்தளம் ஆட்டங் கண்டுவிடும் என்பதால் மிகவும் சாமார்த் தியமாக வர்ணாசிரமத்திற்கு - குலத்தொழி லுக்கு எவ்வித இடையூறும், தடங்கலும் - ஏற்படாமல் இருக்குமாறு பார்த்துக் கொண் டனர். கிருஷ்ணனின் கீதை உபதேசம் மூன்றாவது அத்தியாயம் 4, 7, 8 சுலோகங் களை கூர்ந்த மதியினர் படித்தால் இதனை எளிதில் புரிந்து கொள்ளமுடியும் என்று தமது நூலின் 169ஆம் பக்கத்தில் குறிப்பிடுகிறார்.

- விடுதலை ஞாயிறு மலர், 9.2.19