ஒற்றைப் பத்தி

ஜாதியோ, ஜாதி!

தமிழ் இலக்கியத்தில் பிற்காலத்தில் வருண வேறுபாடு கூறப்பட்டது. தமிழ் இலக்கணத்தில், எழுத்து, பாக்கள் ஆகியவற்றுக்கும்கூட வருண வேறுபாடு கூறப்பட்டது.

பார்ப்பனரை வெண்பாவாலும், சத்திரியரை (அரசரை) ஆசிரியப் பாவாலும், வைசியரை (வணிகரை) கலிப்பாவாலும், சூத்திரரை வஞ்சிப்பாவாலும் பாடவேண்டும்; பாக்களைக் கலந்து பாடும் கலம்பகத்திலும் வருண பேதம்! தேவருக்கு 100, பார்ப்பனருக்கு 95, சத்திரியருக்கு 90, அமைச்சருக்கு 70, வைசியருக்கு 50, மற்றவருக்கு 30 செய்யுளும் பாடவேண்டுமாம்.

பாடல் இலக்கணத்தில்கூட வருண வகுப்பாடு என்கிற அளவுக்கு ஆரியம் புகுந்து விளையாடிய கொடூரத்தை என்னவென்று சொல்ல!

பாம்புகளில், பிராமண, அரச, வைசிய ஜாதிகள் எவை என்று சிந்தாமணி கூறியுள்ளது. தமிழ்நாட்டில் பேச்சு வழக்கிலும், விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் வருண வேறுபாடு வழங்குவதைக் காணலாம். தலை வெளுத்து, உடல் சிவந்த கழுகைப் ‘‘பிராமணக் கழுகு'' என்று கூறினர்.

கருநிறமுடைய கழுகைப் ‘பறைக் கழுகு' என்று அழைத்தனர். வெண்மை கலந்த ஒரு வகை மைனாவை பார்ப்பார மைனா என்று அழைக்கின்றனர். தெலுங்கு மொழியில் ‘‘பார்ப்பாரச் சிலுவா'' (பார்ப்பனக் கிளுவை) என்று ஒரு வகைக் காட்டு வாத்து அழைக்கப்படுகின்றது. ஜாதி அடிப்படையில் வழங்கும் இவ்வழக்கு ஆங்கில மொழியிலும் வழங்கி வருகிறது. ‘பறை நாய்' என்ற பெயரை ஒருவகை நாயினத்துக்கு விலங்கு நூலார் வழங்குவதைக் காணலாம்.

‘‘பிரமா மாடு'' (பிராமண மாடு) என்ற பெயர் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குச் சென்று பரவிய இந்திய மாட்டினத்துக்குப் பெயராக வழங்குகின்றது.

வால்மீகி ஒரு செய்யுளில் ‘பிராமணி' என்ற பெயரில் அரணையைக் குறிப்பிடுகின்றார்.

இன்றைக்கும் பார்ப்பனர்கள் பூணூல் தரிப்பது, ஆவணி அவிட்டத்தில் புதுப்பிப்பது அவர்கள் துவிஜாதியினர் (இரு பிறப்பாளர்) என்று கூறி, பார்ப்பனரல்லாதாரை சூத்திரர் - வேசி மக்கள் என்று இழிவுப்படுத்துவதுதானே!

ஜாதியின் ஆணிவேர் அறுக்கப்பட்டால்தான் ஆரியம் ஒழியும்!

 - மயிலாடன்