Tuesday 30 April 2019

மே தினமா? விஸ்வகர்மா ஜெயந்தியா? எது தொழிலாளர் தினம்?

பெல் ம. ஆறுமுகம்
உலகிலுள்ள தொழிலாளர்கள் அனைவரும் உலகத் தொழிலாளர் நாளாக மே முதல் நாளை ஏற்றுக் கொண்டு கொண்டாடி வருகின்றனர். ஆனால், ஆர்.எஸ்.எஸின் சங்கமான பாரதீய மஸ்தூர் சங்கம் மட்டும் மே தினம் தொழிலாளர் தினம் அல்ல. விஸ்வகர்மா ஜெயந்திதான் தொழிலாளர் தினம் என்கிறது. இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

மே தினத்தை ஏற்றுக் கொண்டிருப்பவர்கள் வைக்கும் முழக்கம் உலகத் தொழிலாளர்களே! ஒன்று படுங்கள் என்பதாகும். தொழிலாளர்கள் ஒன்று பட்டால் தான் அவர்களுக்கான உரிமைகளைப் பெற முடியும். ஆதிக்க சக்திகளின் எதேச்சாதிகாரத்தை முறியடித்து பாட்டாளி சமுதாயத்தை அமைக்க முடியும் என்பது இதன் பொருள். ஆனால் பிஎம்எஸ் என்ன சொல்கிறது தெரியுமா?

தொழிலாளர்களே, உலகை ஒன்று படுத்துங்கள் என்று சொல்கிறது. (ஆதாரம் : பிஎம்எஸ் சங்க மடல் அக்டோபர் 2001)

இதனுடைய நோக்கம் என்ன? தொழிலாளர்கள் ஒன்று பட்டுவிடக் கூடாது. அப்படி ஒன்றுபட்டு விட்டால் முதலாளிகளுக்கும், ஆதிக்கசக்திகளுக்கும் அது மிகப் பெரிய தொல்லையாகிவிடும். அதனால் தொழிலாளர்களை ஒன்று சேர விடாமல் தனித்தனியாகப் பிரித்து வைத்திருந்தால்தான் தங்கள் சுரண்டலை தாராளமாகச் செய்ய முடியும் என்பதுதான் அதன் நோக்கம்.

பிஎம்எஸ் சும், சங் பரிவாரும் அமைக்க விரும்பும் சமுதாயம் இந்து சமுதாயம் ஆகும். அந்த இந்து சமுதாயம் எப்படி இருக்கிறது? பல்வேறு ஜாதிகளாகப் பிரிந்து கிடக்கிறது. ஒவ்வொரு தொழிலைச் செய்பவனும் ஒவ்வொரு ஜாதி;.

அந்தத் தொழிலாளர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. உதாரணத்திற்கு செருப்புத் தைக்கும் தொழிலாளி உயர் ஜாதிக்காரருக்குத்தான் செருப்புத் தைத்துத் தர வேண்டுமே தவிர தனது காலிலே அணிந்து கொண்டு வீதிகளிலே நடமாடக் கூடாது. வெயிலில் வெந்து சாக வேண்டும். கல்லிலும் முள்ளிலும் காட்டிலும் மேட்டிலும் அவன் நடக்க அவதிப்பட வேண்டும்.

அதுபோல ஒரு விவசாயி நன்றாக மாட்டை வளர்த்து பாலையும், நெய்யையும், தயிரையும் உயர் ஜாதிப் பார்ப்பனருக்குக் கொடுத்து விட்டு தான் அய்ந்துக்கும் பத்துக்கும் மற்றவர் கையை எதிர்பார்த்துக் கிடக்க வேண்டும்.

ஒரு தொழிலாளியும் இன்னொரு தொழிலாளியும் ஒன்று சேர்ந்து விடக் கூடாது. கொள்வினை கொடுப் பினை வைத்துக் கொள்ளக் கூடாது. ஒருவர் வீட்டில் ஒருவர் சாப்பிடக் கூடாது என்று தொழிலாளர் சமு தாயத்தைப் பிரித்து வைத்தது இந்து மதம்.

உதாரணமாக தீண்டத்தகாதவர்களே ஒருவர் வீட்டில் ஒருவர் உண்ண மாட்டார். பெண் கொடுக்க மாட்டார். பெண் எடுக்க மாட்டார். ஒரு சலவைத் தொழிலாளியும் நாவிதரும் ஒன்று சேரக்கூடாது. ஒரு தச்சரும் குயவரும் ஒன்று சேரக்கூடாது. இப்படி எல்லா ஜாதியினரையும் பிரித்து வைத்து அவர்கள் உழைப்பையெல்லாம் சுரண்டி உயர்ஜாதியினர் உல்லாச வாழ்க்கை வாழ வேண்டும். இவர்கள் ஒன்று சேர்ந்து விட்டால் அந்த உல்லாச வாழ் வுக்கு கேடு வந்துவிடும் என்பதால்தான் தொழிலாளர்கள் ஒன்று சேரக் கூடாது என்று பிஎம்எஸ் சொல்கிறது.

நாங்கள் ஏன் கீழ் ஜாதியாக இருக்க வேண்டும்? என்று கேட்டால் நீங்கள் முன் ஜென்மத்தில் செய்த பாவம், உங்கள் தலையெழுத்து, விதி என்றெல்லாம் காரணம் காட்டுவர். நீங்கள் மட்டும் எந்த உழைப்புமின்றி எங்கள் உழைப்பிலே உல்லாச வாழ்வு வாழ்கிறீர்களே! என்றால் அது எங்கள் முன்னோர் செய்த புண்ணியம் என்பார்கள்.

தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து விட்டால் சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள். 'பாவம்', 'புண்ணியம்', 'தலைவிதி' என்ற இந்த ஏமாற்று வேலை எடுபடாது. தங்கள் உல்லாச வாழ்வு ஒரு நொடியில் பறிபோய்விடும் என்பதால்தான் தொழிலாளர்கள் ஒன்றுபடக் கூடாது என்கிற தத்துவத்தை ஆர்எஸ்எஸ் கொண்டிருக்கிறது.

அது உயர் ஜாதியினருக்கான அமைப்பு. தொழி லாளர் மத்தியில் அந்த சிந்தனையை அடிமை மனப்பான் மையை வளர்க்கத் தான் பிஎம்எஸ்ஸை ஆர்எஸ்எஸ் துவக்கியது. அதனால்தான் ஆர்எஸ் எஸ்ஸால் இயக்கப்படும் பிஎம்எஸ் "உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்" என்ற முழக்கத்தை முன் வைக்கும் மே தினத்தைத் தொழிலாளர் தினமாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

மே தினம் தொழிலாளர் தினம் அல்ல என்பவர்கள் விஸ்வகர்மா ஜெயந்திதான் தொழிலாளர் தினம் என்கிறார்கள். அந்த விஸ்வகர்மா தினம் எது என்றால் செப்டம்பர் 17 என்கிறார்கள். இந்து மதத்தில் எந்த ஒரு கடவுளர் பிறப்பும் குறிப்பிட்ட நாளில் வராது. திதி நட்சத்திரம் ஆகியவற்றை வைத்துத்தான் அந்தப் பண்டிகை வரும். கிருஷ்ண ஜெயந்தி, ராமநவமி, கந்தர் சஷ்டி என்பதும், தீபாவளி ஆவணி அவிட்டம் போன்ற பண்டிகைகளும் அப்படித்தான். ஆனால் இந்த விஸ்வகர்மா மட்டும் செப்டம்பர் 17 அன்று பிறந்தான் என்பது அவர்களது சூது மனதைக் காட்டுகிறது.

அந்த செப்டம்பர் 17தான் பொட்டுப் பூச்சிகளாய்ப் புன்மைத் தேரைகளாய், வாயிருந்தும் ஊமையாய், கண்ணிருந்தும் குருடராய்க், காதிருந்தும் செவிடராய்க் கிடந்த மக்களுக்கு மானமும் அறிவும் ஊட்டி சுயமரியாதை உணர்வூட்டி மனிதராய் மாற்றிய மகத்தான மனிதர் தந்தை பெரியார் பிறந்த நாளாகும். அந்த நாளுக்குரிய சிறப்பைக் குலைக்கவே இந்த செப்டம்பர் 17 அய்த் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று நாம் சொன்னால் அதனை அறிவுப்பூர்வமாக மறுக்க வக்கற்று நாம் ஏதோ இந்த அய்ந்தொழிலாளர் எனப்படும் விஸ்வ கர்மாத் தொழிலாளர்களுக்கு எதிரானவர் என்பதுபோல அவர்களை நமக்கு எதிராகத் தூண்டி விடுகிறார்கள்.

விஸ்வகர்மாவைக் கொண்டாடுவது அந்த கை வினைத் தொழிலாளர்களைச் சிறப்பிக்க அல்ல. மாறாக அவர்களையும் சூத்திரர் என்று சொல்லி அவர்கள் அணியும் பூணூலுக்கும் பார்ப்பனர் அணியும் பூணூலுக் கும் வேறுபாடு உள்ளது. பார்ப்பனர் அணியும் பூணூல் தான் உயர்ந்தது, பார்ப்பனர்தான் உயர்ந்தவர் என்ற தத்துவத்தை நிலைநாட்டத்தான் என்பதால்தான் இந்த விஸ்வகர்மா ஜெயந்தி என்கிற நயவஞ்சகத்தை எதிர்க் கிறோம்.அதற்கு உதாரணம் என்னவென்றால் இத்தமிழ் மண்ணில் முதல்வராக இருந்த ராஜகோபாலாச்சாரிதான் பதவிக்கு வந்த உடன் இந்த அய்ந்தொழிலாளர்களான விஸ்வகர்மாத் தொழிலாளர்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் ஆச்சாரி என்று போடக்கூடாது, ஆசாரி என்றுதான் போடவேண்டும் என்று உத்தரவிட்டவர். அது ஏனென்றால் ராஜாஜியும் ஆச்சாரி என்று போடுகின்றார். இந்த விஸ்வகர்மாத் தொழிலாளியும் ஆச்சாரி என்று போடுகின்றார் என்றால் இரண்டுக்கும் வேறுபாடு இல்லாமல் போய் விடும் என்பதால் இவர்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் ஆச்சாரி என்று போடக் கூடாது என்றார்.

அத்துடன் பாரதீயர்களுக்கு லட்சியம் மோட்சம் அடைவதுதான். ஆனால் பிற நாட்டினருக்கோ அதிக சொத்து சேர்ப்பதுதான். நமக்கு புண்ணிய பாபங்களுக்கு வேறுபாடு தெரியும். பிற நாட்டவருக்கு பாவ தத்துவம் மட்டுமே தெரியும். புண்ணிய தத்துவத்தை நாம் அறிந்திருக்கிறோம். நமது கலாச்சாரத்தை நாம் மதித்துப் புகழ வேண்டும்  என்று ஒரே சிந்தனை என்ற தலைப்பில் ஜெயதேவ்ஜி என்பவர் ஆற்றிய உரையை பிஎம்எஸ் சங்க மடல்  அக்டோபர் 2001 கூறுகிறது.

அந்த பாவ புண்ணிய தத்துவம்தான் நமது மக்களை ஏழைகளாகவும் தொழிலாளிகளாகவும் கீழ்ஜாதியாகவும் அடிமைகளாகவும் ஆக்கி வைத்திருக்கிறது.

பாடுபடாத சோம்பேறி பணக்காரனாகவும் உயர் ஜாதியாகவும் முதலாளியாகவும் இருக்கப் பாடுபடும் நீ ஏன் ஏழையாக இருக்கிறாய் என்று கேட்டால் மக்களிட மிருந்து வரும் பதில்  எல்லாம் அவன் செய்த புண்ணியம் - நாங்கள் செய்த பாவம் என்கின்ற  பதில் வரும்.  இந்த பாவ - புண்ணிய தத்துவம் என்பது உழைக்கும் மக்களையே தங்களது இழிநிலைக்குக் காரணம் தாங்கள் தான் - தங்களை சுரண்டிப் பிழைக்கிற  உயர்ஜாதியினரோ, பணக்காரர்களோ, முதலாளிகளோ அல்ல என்கின்ற ஒரு சிந்தனையை உருவாக்கி சுரண்டல்வாதிகளுக்கு ஒரு பாதுகாப்பை உருவாக்கி வைத்திருக்கிறது.

அந்த பாவம் - புண்ணியம் என்கிற சிந்தனையைப் பாதுகாத்து காலா காலத்துக்கும் தொழிலாளர்களை ஏழைகளாகவும் கீழ்ஜாதியாகவும் வைத்திருந்து சுரண்டல்வாதிகளைப் பாதுகாப்பதுதான் பிஎம்எஸ் சின் கொள்கை அதுபோல ஏழைகள் கீழ்ஜாதியினர் உயர்ஜாதியினர்களுக்கு குறிப்பாக பார்ப்பனர்களுக்கு சேவை செய்வதன் மூலமாகத்தான் அடுத்த பிறவியில் நீங்கள் மோட்சத்தை அடைய முடியும் என்கிறது அவர்கள் கூறுகின்ற அந்த மதம். அதுதான் இந்து மதம். அந்த இந்துமதம்தான் தொழிலாளர்களுக்கும், அதாவது சூத்திரர்களுக்கும் பெண்களுக்கும் சொர்க்கத்தில் இடம் கிடையாது. அவர்கள் சொர்க்கம் அடைய வேண்டும் என்றால் இந்தப்பிறவியில் 'பிராமணர்களுக்கு' தொண் டூழியம் செய்வதன் மூலம் அடுத்த பிறவியில் 'பிராமணராக'ப் பிறப்பார்கள். அதன்பிறகே அவர்கள் மோட்சத்தைஅதாவது சொர்க்கத்தை அடைவார்கள் என்கிறது.

அதனால்தான் தந்தை பெரியார் அவர்கள் இந்த ஆத்மா மோட்சம் நரகம் பிதிர்லோகம் மறுபிறப்பு ஆகிய வற்றைக் கற்பித்தவன் அயோக்கியன். நம்பு கிறவன் மடையன். அவற்றால் பலன் அனுபவிக்கிறவன் மகா மகா அயோக்கியன் என்கிறார்.

அண்ணல் அம்பேத்கர் இந்த ஆத்மாபற்றியும் சொர்க்கம் நரகம் பற்றியும்  என்ன கூறுகிறார் என்றால்  "இறந்தபிறகு ஆத்மாவுக்கு என்ன ஆகும்? என்ன ஆகாது? என்று வியாக்கியானம் செய்யும் மதம் பணக் காரர்களுக்கு வேண்டுமானால் பயன்படலாம். அவர் களும் சாவகாசமாக உட்கார்ந்து அந்த மதத்தைப் பற்றி நினைத்து நினைத்து தங்கள் பொழுதுகளைப் போக்கிக் கொள்ளலாம். வாழும்போது அனைத்து விதமான உல்லாசங்களிலும் ஊறித் திளைத்தவர்களுக்கு செத்த பிறகும் அதே உல்லாசத்தோடு வாழ மேலே ஒரு லோகம் காத்துக் கிடக்கிறது என்று ஆசை காட்டும் மதம்தானே  ஒரு மதமாகத் தெரியும்? ஆனால் அந்த மதத்தில் இருப்பதனாலேயே மண்ணோடு மண்ணாக ஆக்கப்பட்டவர்களும், உணவு உடை மறுக்கப்பட்ட வர்களும், மனிதர்களாகக்கூட நடத்தப்படாதவர்களும், உலகியல் நோக்கில் மதத்தை அணுகாமல் கண்களை மூடி வானம் பாரத்து வணங்குவார்கள் என்று எதிர் பார்;க்க முடியுமா? இந்தப் பணக்கார சோம்பேறிகளின் வேதாந்தங்களினால் ஏழைகளுக்கு என்ன கிடைக்கப் போகிறது என்று கேட்பதன் மூலம் இந்த மோட்சம் நரகம் பாவம் புண் ணியம் என்ற தத்துவத்தை சோம் பேறிகளின் வேதாந்தம் என்கிறார்.

அப்படிப்பட்ட சோம்பேறிகளுக்கு ஆதரவாக இருப்பதற்காக உழைக்கும் மக்களைத் தயார் படுத்துவதே பிஎம்எஸ் ஆர்எஸ்எஸ்சின் கொள்கை பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை பார்ப்பனருக்கு அடிமை யாக்கி பார்ப்பனர்களே நாட்டை ஆள வேண்டும். அவர்களுக்குக் கீழே தொழிலாளர்கள் உழைத்துப் போட்டு அடிமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பிஎம்எஸ்சும் ஆர்எஸ்எஸ்சும் செயல்படுகிறது.

தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் அதில் இருப்பது அவமானம் மட்டுமல்ல; அடிமைத்தனம்.  எனவே, உண்மையான தொழிலாளர் தினம் மே தினமே. அதனை சிறப்பாகக் கொண் டாடுவதன் மூலம் தொழிலாளர்களின் உரிமையை வென்றெடுப்போம். உழைக்கும் மக்களுக்கான அரசை நிறுவுவோம்.

- விடுதலை நாளேடு, 30.4.19

No comments:

Post a Comment