Showing posts with label பிள்ளையார். Show all posts
Showing posts with label பிள்ளையார். Show all posts

Saturday, 25 November 2023

கல்கி'யும் கணபதியும்!

''கல்கி' வார இதழுக்கு

 'கல்கி'யும் கணபதியும்!

தங்கள் பத்திரிகையில் வரும் 'கணபதி விஜயம்' மற்றும் பல மத பிரச்சாரங்களையும் நிறுத்துங்கள். இனியும் மக்களை முட்டாளாக்க முடியாது.

22-8-82 மாலை சென்னை தொலைக் காட்சியில்‘வினாயகர் விஜயம்' என்ற படம் ஒளிபரப்பப்பட்டது. அதில் வினாயகர் 'மூசிகா சூரனை'   கொல்வதற்காக படைக்கப்பட்ட தாகவும்! 'யானைத் தலையனை கஜமுகா சூரன்) கொல்ல வினாயகர் படைக்கப் பட்டதாகவும்,

தொலைகாட்சியில் கஜமுகா சூரனின் தலையை வெட்டி விநாயகருக்கு பொருத்திய தாகவும், உங்கள் கதையில் 'இறக்கும் தருவாயிலுள்ள யானையின்' தலையை பொருத்தியதாகவும் உள்ளது. உங்கள் கதையில் பிள்ளை யாருக்கு யானை தலை வந்தபிறகும் கஜமுகா சூரன் உயிருடன் இருப்பதாக எழுதியுள்ளீர்கள்.

உங்கள் கதையில் பிள்ளையாருக்கு பார்வதியே தொப்பை வயிரும், கொடூர உருவமும் வர'வரம்' தந்ததாகவும், தொலைக் காட்சியில் பார்வதியே பிள்ளையாரிடம், பிரம்ம சரிய விரதத்தை முடித்து விட்டு வந்தவுடன் "இதென்ன கொடூர உருவம்' என்று கேட்பது போலவும், அதற்கு பிள்ளையார் பதில் சொல்வதுபோலவும் காட்டினர். தொலை காட்சியையும், கல்கியையும் கண்ணுற்றவர்கள் உங்கள் முரண்பாடான கேலிக்கூத்துக்களை எள்ளிநகையாடுகின்றனர்.

"திருவிளையாடல்' படத்தில் 'ஞானபழத் திற்காக' முருகனும் பிள்ளையாரும் சண்டை போட்டு கொண்டு உலகத்தை முருகன் மூன்று முறை சுற்றுவதாகவும், பிள்ளையார் நாரதரையும் அம்மை அப்பனையும் கேட்டுகொண்டு பிறகு அம்மை அப்பனை சுற்றி வந்து பழத்தை பெற்று கொண்டதாகவும், இதனால் முருகன் கோபமுற்று கோவணாண்டியாக மாறியதாகவும்,

தொலைக் காட்சி ஒலிபரப்பான 'வினாயகர் விஜயம்' படத்தில், பதவிக்காக சண்டை போட்டுக் கொண்டு, முருகன் உலகத்தை சுற்றியதாகவும், விநாயகன் அம்மையப்பனை சுற்றி வந்ததை பார்த்து முருகன் கோபம் முறாமல் 'எப்படி?' என்று (நாரதர், அம்மையப்பன் போன்ற அனைவரும்) கேட்க, விநாயகர் அவர்களுக்கு விளக்கியவுடன் முருகன் தலை வணங்குகிறான்.

'பிள்ளையார் பிறக்கும் போதே தலை இல்லாமல் பிறந்ததாகவும்' கஜமுகா சூரனைகொன்று தோலை உரித்து ஆடையாக சிவன் உடுத்திக் கொண்டதாகவும், தலையை பிள்ளையாருக்கு பொருத்தியதாகவும் 'பால மித்ரா' பத்திரிகையிலும் வந்தது.

'தேவாரத்தில்' பிள்ளையார் சிவனும் பார்வதியும் யானைகளாக உருமாறி புணர்ந்ததால் யானை தலையுடன் பிறந்ததாக உள்ளது.

கல்வியின் 'கோகுலம்' பத்திரிகையில் முன்பொரு முறை பிள்ளையாருக்கு தந்தம் ஒடிந்தது பற்றி, 'மகாபாரதத்தை பிள்ளையார் தந்தத்தை ஒடித்து எழுதியதாகவும், 'அம்புலி மாமா' பத்திரிகையில் 'மூசிகா சூரனை' கொள்ள தந்தத்தை ஒடித்து அனுப்பியதாகவும் எழுதப்பட்டிருந்தன. (மூசிகா சூரனை கொள்வதற்காக என்பதை, 'விநாயகர் விஜயம்' படத்திலும் காட்டப்பட்டது)

'அம்புலி மாமா' அக்டோபர் 1981 இதழில் பிள்ளையாருக்கு திருமணம் ஆகி விட்டதாகவும் சித்தி, புத்தி என்ற இரண்டு மனைவிகள் என்றும் உள்ளது. ஆனால் நீங்களோ பிள்ளையாருக்கு திருமணம் ஆகவில்லை, தாயைப் போல மனைவி கேட்டதால் குளக்கரையிலும், சந்து முனைகளிலும் உட்கார்ந்து கொண்டதாக கூறுகிறீர்கள்.

பிள்ளையார் பிரம்மச்சாரி என்று கூறுவோரே இப்போது வட நாட்டில் இருந்து தமிழ்நாட்டிலேயே அநேக கோயில்களில் பிள்ளையார் இரண்டு மனைவியுடன் இடம்பெற்றுள்ளது.

இம்மாதிரியான முரண்பாடுகள் நிறைந்த மத மூடநம்பிக்கைகளை இனிமேலாவது தங்கள் பத்திரிகையில் எழுதி மக்களை மடையர்களாக ஆக்காதீர்கள்.

குறிப்பு :- இக்கதைகளுக்கு ஆதாரங்கள் புராணங்களிலேயே உள்ளது, இருந்தாலும் சமீபத்திய ஆதாரங்களே சிறந்தவை என்பதால் படக்கதைகளிலும் பத்திரிகைகளிலும் இருந்து ஆதாரங்கள் காண்பித்துள்ளேன்.

                     - செ.ர. பார்த்தசாரதி

               29-பி, மேல்பாடி முத்து தெரு,

                நுங்கம்பாக்கம், சென்னை 34

                  -உண்மை மாதம் இருமுறை இதழ்

Thursday, 18 February 2021

பிள்ளையார் உடைப்பு


நமக்குப் பிள்ளையார் கடவுளல்ல – பெரியார்

பிள்ளையார் சதுர்த்தி பண்டிகையின்போது நாடு முழுவதும் எத்தனை எத்தனை ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான, மண்ணு பிள்ளையாரை மக்கள் குயவனிடம் வாங்கி பிள்ளையார் சதுர்த்தி முடிந்தவுடன் கடலில், ஆற்றில், ஓடையில், ஏரியில், குளத்தில், கிணற்றில், புனலில், வயலில் எறிந்துவிடுகிறார்கள்.

அது உடன் கரைந்து நீரோடு நீராக, மண்ணோடு மண்ணாக ஆகி விடுவ தில்லையா? இது தெரிந்தே மக்கள் நீரில் போடுவதில்லையா? அதுபோன்ற செய்கைதான் உடைத்துத் தூளாக்கி மண்ணோடு மண் ஆக்குவதுமாகும்.

நாம் காசு போட்டு வாங்குகிறோமே ஒழிய, வேறு எந்த மனிதனுக்கும் உரிமை இருக்கிற வஸ்துவிடமும் நாம் செல்லவில்லை; தொடவில்லை.

நாமாக வாங்கி உடைப்பதும், நமக்குப் பிள்ளையார் கடவுளல்ல!

வேத சாஸ்திர ஆதாரம் என்பதன் படியும் அது – கணபதி கடவுளல்ல!

கடவுளுக்கு எந்த உருவமும் இல்லை!

கணபதி கடவுள் என்பதால் மனிதன் காட்டுமிராண்டி ஆக்கப்படுகிறான்; அதற்கு கோவில், பூசை, நைவேத்தியம், உற்சவம் முதலியவைகளால் நம் அறி வும், செல்வமும், நேரமும் முற்போக்கும் பாழாகிறது. உண்மையான கடவுள் என்பதும் நாஸ்திகமாகிறது.

கணபதிக்கு கற்பிக்கப்பட்டிருக்கிற பிறப்பும், குணங்களும் மிகுதியும் கீழ்த்தரமானவை; அறிவுள்ள – மானமுள்ள கடவுள் தன்மை அறிந்த மக்களுக்கு ஏற்றதல்ல; பொறுத்துக் கொள்ளக் கூடியதல்ல!

காட்டுமிராண்டி காலத்தில் 1000, 2000 ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டினரால் ஏற்பட்ட இந்த தேவர் – தெய்வங்கள் உணர்ச்சியேதான் இந்த 1953 -ஆம் (விஞ்ஞான) ஆண்டிலும் நமக்கு இருக்க வேண்டுமா?

ஆற்றங்கரையில் மூக்கைப் பிடித்து ஜெபித்துக் கொண்டு ஏழையாய் பிச்சை எடுத்து வாழ்ந்து கொண்டிருக்க வேண் டிய, பிராமணர் (பார்ப்பான்) இன்று சக்கரவர்த்தியாக, அதாவது 565 தேசங் களுக்கு தேசாதிபதியாக, பிரதமராக இருந்து உரிமை அடையும்படி தனது நிலையை மாற்றிக் கொண்டிருக்கும் போது, கல்லை – செம்பை- மண்ணை – அழுக்கு உருண்டையை வணங்கிக் கொண்டிருக்கச் செய்யப்பட்ட காட்டு மிராண்டி களான நாம் மனிதத் தன்மை பெற்று உண்மை, சத்தியம் (சத்து) கண்டுபிடித்து மண் பொம்மையை அழிக்கப்படாதா என்று கேட்கிறேன். இதில் அக்கிரமம், அநீதி, அசத்தியம், அறிவில்லாமை, அடாது செய்தல் என்ன இருக்கிறது?

யார்தான் ஆகட்டும், ஆத்திரப்படக் காரணம் என்ன இருக்கிறது?

மற்றும் இன்று ஆரியப் பார்ப்பனர்களில் சங்கராச்சாரி பார்ப்பனர் முதல் மடிசஞ்சி பார்ப்பனர் ஈறாக, அரசியல் பார்ப்பனர் முதல் சீர்திருத்த பார்ப்பனர் ஈறாக, ஜட்ஜு பார்ப்பனர் முதல் அட்டண்டர் பார்ப்பனர் ஈறாக, லஞ்சம் ஃபோர்ஜரி பாங்கி மோசடி பார்ப்பனர் முதல் குச்சு நுழைவு மாமா, குடி, சூதாட்ட பார்ப்பனர் வரை கட்டுப்பாடாக தமிழர்களை மனுகால சூத்திரராகச் செய்து வரும் பார்ப்பன ஆதிக்கப் பிரச்சாரத்திற்கு அரசியல், கல்வி இயல், மத இயல்களில் செய்துவரும் நிரந்தர பந்தோபஸ்தான சுயநல ஏற்பாட்டிற்கு தமிழர்களே, சூத்திரர்கள், பஞ்சமர் என்பவர்களே, என்ன செய்யப் போகிறீர்கள்?

இதைவிட வேறு வழி இருந்தால் சொல்லுங்கள் – சூத்திர மந்திரிகளே, சூத்திர பார்லிமென்ட், சட்டசபை மெம்பர்களே, வைஸ் சேன்ஸ்லர் முதல் கல்விமான்களே, உலகப் பிரசித்தி கோடீஸ் வரர்களே, புலவர்களே, பிரபுக்களே, மாஜி ஜமீன்தார்களே, மாஜி மகாராஜாக்களே, ஸ்ரீலஸ்ரீ! ஸ்ரீலஸ்ரீ!! ஸ்ரீலஸ்ரீ!!! பண்டார சந்நிதிகளே சொல்லுங்கள் கேட்க, தலை வணங்க சித்தமாக இருக்கிறேன்.’

( 7.5.1953 விடுதலை இதழில் தந்தை பெரியார் அவர்கள் விடுத்த அறிக்கை )


நீதிபதி தீர்ப்பு!

  மக்கள், வள்ளுவர் குறளை ஏற்று நடக்கும் தகுதிப் பெற்ற பிறகு, அடுத்தபடி என்ன என்று சிந்தித்தேன். புத்தர் கொள்கை பிரசார மாநாடு கூட்டினேன். நாம் எந்த லட்சியத்துக்காக நம் இயக்கத்தினை ஆரம்பித்தோமோ அந்தத் துறையில் நல்ல பலன் ஏற்பட்டு வருகிறது. நம் இயக்கம் நல்ல முறையில் வளர்கிறது, பல கடவுள்கள், உருவ வழிபாடு வேண்டாம் என்று பல ஆண்டுகளாகப் பிரச்சாரம் செய்து வந்தோம்.

மக்கள் ஒத்துக் கொள்ளவில்லை! ஏனோதானோ என இருந்தார்கள். மீண்டும் இதையே சொல்லிக் கொண்டிருந்தால் பலன் என்ன? விக்ரகங்களை உடைக்க வேண்டும் என்று தீர்மானித்து அதன்படியே முதலாவதாக விநாயக உருவத்தை உடைத்தோம். ஓர் நாள் குறிப்பிட்டு பல்லாயிரக்கணக்கிலே உடைத்துக் காட்டினோம். அது குறித்துகூட சிலர் என் மீது வழக்குத் தொடர்ந்தார்கள். 4 - நாட்களுக்கு முன்னேதான் நீதிபதி ராமன் நாயர் அவர்கள் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டார். தீர்ப்பில் அவர் குறிப்பிட்டது மிகவும் கவனிக்கத்தக்கது.

பிள்ளையார் உருவம் அவர்கள் செய்து அவர்கள் உடைக்கிறார்கள் - நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்? என்று அவர்களைக் கேட்டார். அவர்களுக்கு (ஆஸ்திகர்களுக்கு) இதைப் பார்க்க வயிற்றெரிச்சலாக இருப்பதைக் குறிப்பிட்டார்கள். அதற்கு நீதிபதி “இவர்கள் திடீரென்று உடைக்கவில்லையே! பிள்ளையார் உருவ உடைப்பைப்பற்றி 3- - மாத காலமாக பிரச்சாரம் செய்து வந்தார்கள். அவர்கள் உடைக்கும் இடத்திற்கு முட்டாள்தனமாக நீங்கள் ஏன் போனீர்கள்? போய் ஏன் வயிற்றெரிச்சல் படுகிறீர்கள்?’’ என்று கேட்டார்.

உடைப்பதில் தவறென்ன என்றுதான் நான் கேட்கிறேன்! கடவுள் வேண்டாம் என்று அதை உடைக்கவில்லை. பார்ப்பனன் கற்பனையைத் தான் உடைத்தெறிந்தோம். பிள்ளையாரை உடைத்தால் கடவுளை உடைத்ததாக ஆகாது.

நூல்: பெரியார் களஞ்சியம்

தொகுதி - 2 (பக்கம் 265-268)

- உண்மை இதழ்,  ஆகஸ்ட்- 16- செப்டம்பர் 15.20

Thursday, 1 September 2016

யானைத் தலையுடன் பிறந்த வினாயகனாம்!


வினாயகன், கணபதி, கணநாதன், கணேசன், விக்னேஷ்வரன், கணன், பிள்ளையார் என்று பல பெயரால் வணங்கப்படும் வினாயகனின் பிறப்புக் கதைகள் ஒரே வகையாக இல்லாமல் ஒவ்வொரு புராணத்திலும் வெவ்வேறு வகையாக உள்ளது.

காணபத்யம் என்கின்ற வினாயகனை முழு முதல் கடவுளாக (பரப்பிரம்மம்) வழிபடும் பிரிவினரின் வினாயகர் புராணம் என்கிற உப புராணத்தில் மட்டுமே வினாயகனை உயர்வாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது வினாயகன்தான் முதலில் தோன்றிய கடவுள் என்றும்; சக்தி, சிவன், விஷ்ணு, பிரம்மா போன்றோரையும் படைத்து அண்ட சராசரங்களையும் படைத்ததாக கூறுகிறது.  ஆனால், வினாயகன் பிறக்கும் போதே தலையில்லாமல் முண்டமாக பிறந்ததாகவும், பார்வதியும், பரம சிவனும் யானைகள் வடிவாக மாறி புணர்ந்ததின் விளைவாக யானைத் தலையுடன் பிறந்ததாகவும், பார்வதி குளிக்கும்போது உடலில் உள்ள அழுக்கைத் திரட்டி வடிவமும் உயிரும் கொடுத்து காவலுக்கு வைத்தபோது, சிவனால் தலை அறுக்கப்பட்டு பிறகு யானைத்தலை பொருத்தப் பட்டதாகவும் இன்னும் பற்பல வகையாக வினாயகன் பிறப்பை பற்றி புராணங்கள் கூறுகின்றன.

சிவமஹா புராணத்தில் (முதல் பாகம்,ஞான சம்ஹிதை 31. கணபாலன் அவதரித்த கதை) வினாயகனின் பிறப்பு பற்றி இப்படி கூறுகிறது;
ஏவம் விசார்யஸாதேவி ஜலம் ஜக்ராஹபாணிநா
தேஹஸ்தம் ருதமாதாய த்யாத்வாரூபம் ப்ரபோஸ் ஸாபம்
நிர்மாய ப்ரணவாகாரம் சதுர்பாஹூந்த்ரி லோசனம்
ஸுக்லாம் பரதரம் விஷ்ணும் கஜவக்ரதம் ஸுவாக்ருதிம்
சிவனின் கணங்களே பார்வதிக்கும் பாதுகாவலாக இருப்பதால் அவர்களின் மீது நம்பிக்கையின்மை தோழியின் மூலமாக பார்வதிக்கு ஏற்பட்டது. இதனால் பார்வதி குளிக்கும் போது தண்ணீர்விட்டு உடலில் உள்ள அழுக்கை திரட்டி யானைத் தலையுடன் பொம்மை செய்து அதற்கு உயிரும் கொடுத்து காவலுக்கு வைத்தாள். யானைத் தலையுடன் காவலுக்கு வைக்கப்பட்டவனே வினாயகனாம். ஏன் மனிதத்  தலைபோல் வைத்தால் என்ன உடல் அழுக்கா குறைந்துவிடும்?

“பவிஷ்ய புராணம்“ என்கிற பாரசீக (பார்சி) மத ஆதரவு புராணத்தில் வினாய கனின் பிறப்பு வேறுவகையாக உள்ளது. பிரம்மனால் படைக்கப்பட்ட மனிதர்கள் எல்லோரும் இடையூறு இல்லாமல் நிம் மதியாக வாழ்ந்து வந்ததால், கடவுளை நினைப்பதைவிட்டுவிட்டார்களாம். ஆகையினால் அவர்களுக்குப்பாடம் புகட்டவேண்டி, பிரம்மா விக்னத்தை உண்டாக்குவதற்கு என்றே விக்னேஷ் வரன் என்கிற வினாயகனை படைத்தாராம். அதாவது தொல்லை கொடுப் பதற்கென்றே பிரம்மனால் படைக்கப்பட்டவன் தான் வினாயகனாம்.

ஒவ்வொரு புராணத்திலும் வினாயகன் பிறப்பைப் பற்றி வெவ்வேறு வகையாக கூறுவதால் புராணங்கள் அனைத்தும் அவரவர் இச்சைக்கேற்ப எழுதப்பட்டது என்பது தெளிவாகின்றது.
கொசுரு செய்தி ஒன்று, வைணவ(பெருமாள்) கோயில்களின் வாயிலில் தும்பிக்கை ஆழ்வார் (கடவுளல்ல) என்கிற பெயரில் சிறுமைபடுத்தப்பட்டு வினாயகன் சிலை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எப்படி பிறந்தான் என்று அறுதியிட்டு கூறமுடியாத வினாயகனுக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் ஒருகேடா!.

- செ.ர.பார்த்தசாரதி
-விடுதலை,01.09.2016

-விடுதலை,01.09.2016,பக்கம்-2