
பாரதியாரை நான் சந்தித்தால் என்ன கேட்பேன் என்று ‘குமுதம்’ ஏடு என்னைக் கேட்டது. “பாரதியார் நான் பிறப்பதற்கு முன்பே காலமான ஒரு கவிஞர், என்றாலும் இது ஒரு இனிய கற்பனைதான். இன்றைக்குப் பாரதியாரைப் பற்றி நமக்கு ஏற்பட்டிருக்கிற அய்யங்கள், அல்லது அவரது பாடல்களில் பல இடங்களில் முரணும், குழப்பமும் இருக்கிறது என்று என்னைப் போன்ற பலர் கருதுகின்ற நிலை. இவைகளையெல்லாம் தெளிவுபடுத்துவதற்கு பாரதியைப் பார்த்து பல்வேறு கேள்விகளைக் கேட்கத்தான் முயற்சிப்பேன்.
நான் தந்தை பெரியாரின் தொண்டன். எந்தக் கருத்தையும் அப்படியே ஏற்றுக் கொள்வது என்பதோ, அல்லது எல்லோரும் நீச்சலடிக்கிறார்கள் என்பதற்காக அந்த நீரோட்டத்தின் போக்கிலேயே செல்ல வேண்டும் என்கிற அவசியமோ இல்லாதவன் நான். ஈரோட்டுக்குப் போனவர்கள் நன்றாக எதிர்நீச்சல் போடக் கற்றுக் கொள்பவர்கள் தான். எனவே, பாரதியாருக்கு நூற்றாண்டு விழா என்ற காரணத்தினால், அவரை ஒரு ‘தேசிய கவி’ என்று புகழ்பாடுகிற நேரத்தில், ஒரு மகாகவிக்கு அத்தகைய குழப்பங்கள் ஏன் இருக்க வேண்டும் என்பது புரியவில்லையே என்ற மற்றவர்களை கேட்டுக் கொண்டிருப்பதைவிட, அவரையே சந்திக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படுமானால் நிச்சயமாக்க் கேட்கலாம் அல்லவா- என்னுடைய கருத்துப்படி, ஒருவரை தேசியக் கவி என்று அழைக்கும்போது, அவருக்குத் தெளிவான, தொடர்பான, குழப்பமில்லாத, முரண்பாடு இல்லாத கருத்துகள், கேள்விகள் இருக்க வேண்டும். சுதந்திரத்துக்காகப் பாடினார் என்பது மட்டுமே பாரதியாருக்கு உள் மாபெரும் தகுதியாக ஆகிவிட முடியாது.
பாரதி தேசியக் கவியா?
தேசிய கவி என்றால், தேசம் முழுவதையும் ஒட்டிய பார்வை, மக்கள் அனைவரையும் சமத்துவமாகக் கருதக்கூடிய பார்வை என்பது வரவேண்டும். ஆனால், பாரதியாரின் பாடல்களில் அத்தகைய பார்வைகள் இல்லை என்பதைச் சற்று விளக்குகிறேன்.
‘எங்கள் ஆரிய பூமி, எங்கள் ஆரிய நாடு’ என்று பல இடங்களில் உரைக்கின்றார். ஆரிய நாட்டினர் ஆண்மையோடு இயற்றும், சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கோங்குக! வீரியம் ஒழிந்து வெம்மையும் ஒழிந்து நம் ஆரியர் புலையருக்கு அடிமைகள் ஆயினர்; பிச்சை வாழ்வதற்கு பிறருடைய ஆட்சியில் அச்சமுற்றிருப் போன் ஆரியன் அல்லன்’ என்று பாரதியார் சொல்லுகிறார். இந்தியா முழுவதும் ‘பிராமண தேசம்’ ஆகிவிட வேண்டும் என்று அவர் இன்னொரு இடத்தில் சொல்லி யிருக்கிறார். ‘ஆதிசிவன் பெற்று விட்டான் என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே நிறைமேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்’ என்று பாரதியார் பாடியிருக்கிறார். எனவே, மொழி என்று வரும்பொழுது ஆரிய மைந்தன் இலக்கணம் அமைத்தான் என்று கூறி, தேசம் என்று வரும்பொழுது ஆரிய வேதம் ஆரிய நாடு என்று கூறி, தன்னை ஓர் ஆரியன், வேதியன் என்றும் வேதியன் உயர்ந்தவன், ஆரியன் உயர்ந்தவன், இது ஆரியர்களுக்குரிய நாடு என்றும் அவர் திரும்பத் திரும்ப சொல்லியிருப்பது அவருக்கு தேசியப் பார்வை இருக்கிறதா? ஆரியப் பார்வை உள்ளதா? என்று பாரதியை துணிச்சலோடு, நேர்மையோடு கேட்பேன்.
பாரதி ஜாதி ஒழிப்பாளரா?
‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ என்று நீங்கள் பாடினீர்கள் என்று பெருமிதத்தோடு எல்லோரும் மேடையிலே சொல்ல இன்றைக்குக் கேட்கிறோம். ஆனால், உங்களோடு நெருங்கிப் பழகிய நண்பர் என்று கருதக்கூடிய ஒருவர் _ திரு.பத்மநாபன் அவர்கள் அண்மையிலே சில மாதங்களுக்கு முன்னால் ‘இந்து’ பத்திரிகையிலே ஒரு விமரிசனக் குறிப்பு எழுதியிருக்கிறார்.
“அதில் அவர் கூறியிருப்பதாவது: “ஜாதிகள் இல்லையடி பாப்பா’’ என்று பாரதியார் எழுதவில்லை. ஜாதி பேதம் இல்லையடி பாப்பா என்றுதான் எழுதினார். பிறகு பாடபேதமாக, ‘ஜாதிகள் இல்லையடி’ என்று வந்துவிட்டது’’ என்று குறிப்பிட்டிருக்கிறார் பத்மநாபன். இந்தக் கருத்தை வைத்துப் பார்க்கும்போது உங்களுக்குச் ஜாதி ஒழிப்பிலே உள்ள நம்பிக்கை என்ன என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.
ஸநாதன வகை தர்மத்திலேயே இருக்கும் பலவித கட்சிகளும், வகுப்புகளும். சிலைகளும், சூரிய ஜோதியிலே காணப்படும். ஏழு வர்ணங்களைப் போலவே அவசியத் தன்மை கொண்ட அலங்காரங்களே அல்லாமல் குறுகிய நோக்கமுடைய சிலர் நினைப்பது போல நமக்கு அழிவுக்குக் கருவிகள் ஆகமாட்டா” என்று ஜாதியைப் பார்க்கக் கூடிய வெள்ளத்தை நீங்கள் அங்கே காட்டுகிறீர்கள். இன்னும் ஒரு செய்தி. ஜாதியைப் பற்றி உங்களுக்குத் தெளிவான திட்டவட்டமான கருத்துகள் இருக்குமேயானால் நீங்கள் இந்தப் பகுதியை உங்கள் கட்டுரையில் பயன்படுத்தியிருக்க மாட்டீர்கள். நீங்கள் பதில் சொல்லாவிட்டாலும் உங்களுக்காகப் பரிந்து கொண்டு சிலர் பதில் சொல்ல வருவார்கள். வருவார்கள். அது ஒரு ஒரு நல்ல வாய்ப்பு தான். அதனால்தான் இவைகளை தெளிவாகக் கூற முன் வந்திருக்கிறேன்.
“கீழ் ஜாதியாரை நல்ல சமஸ்காரங்களால் பிராமணர்கள் ஆக்கிவிட முடியும் என்பதற்கு நம்முடைய வேத சாஸ்திரங் களில் தக்க ஆதாரங்கள் இருக்கின்றன. அந்தப்படி இந்தியா முழுவதையும் “பிராம்மண தேச’’மாகச் செய்துவிட்டால் நல்லதென்பது என்னுடைய அபிப்பிராயம். எந்த ஜாதியாக இருந்தாலும் சரி, அவன் பட்சணத்தை நிறுத்தும்படி செய்து அவனுக்கு ஒரு பூணுல் போட்டு காயத்ரி மந்திரம் கற்பித்துவிட வேண்டும். பிறகு அவன் பிராம்மணனாகவே கருதப்பட வேண்டும்’ என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். ஜாதி ஒழிப்பாளர்கள் எல்லோரும் மனிதர்களாக வேண்டும் என்று விரும்புவார்களே தவிர, எல்லோரும் பிராம்மணர்களாக வேண்டும் என்று விரும்ப மாட்டார்கள். விரும்பக் கூடாது. பூணூல் போடப்பட்டு விடுவதாலேயே எல்லோரும் உயர்ஜாதிக்காரர்களாக ஆகிவிட முடியும் என்று சொன்னால் நீண்ட காலத்துக்கு முன்னாலேயே ராமானுஜர் வெற்றி பெற்றிருப்பாரே? ராமானுஜர் தோல்வி அடைந்த இடத்திலேதான் நீங்களும் நிற்கிறீர்கள். ஏன்? நீங்களேகூட புதுவையில் கனகலிங்கம் என்ற ஒரு தாழ்த்தப்பட்ட ஜாதி நண்பருக்குப் பூணூல் போட்டு வைத்தீர்களே? கனகலிங்கம் பிராம்மண வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டாரா? அது நீங்கள் அடைந்த தோல்வியே தவிர வெற்றியல்லவே!
அய்யர் வேதம் ஓதினால் மழை பெய்யும் என்று கருதுகிறீர்களே? இதற்கு விஞ்ஞானபூர்வமாக ஆதாரம் ஏதேனும் உண்டா? நன்றாக எண்ணிப் பார்க்க வேண்டும். எனவே, உயர்ந்த ஜாதிக்காரர்களுக்கு இருக்கிற அந்த உயர்ந்த ஜாதிக் கருத்து என்பது பல நேரங்களிலே உங்களை ஈர்த்திருக்கிறது என்பதைத் தவிர வேறில்லை என்பதுதானே இதற்குப் பொருள்?
‘ஜாதிப் பிரிவுகளில் இருக்கும் குற்றங்களை யெல்லாம் பூதக் கண்ணாடி வைத்துக் காட்டுகிறார்கள். நம்முடைய கிறிஸ்துவப் பாதிரிமார்களாலே நேர்ந்த அவமானம்தான் இது. இந்து மதம் அப்படி அல்ல. எல்லோரும் இதை வேதமாகக் கொள்ள வேண்டும். எல்லோரும் இந்துக்களாகிவிட வேண்டும். எல்லோரும் இந்த இடத்திலே இந்துக்கள் என்று சிறப்பாக நினைக்க வேண்டும்’’ என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். “எல்லா தர்மங்களைக் காட்டிலும் வேதத்தை நிலைநிறுத்தும் தர்மம்தான் சிறந்தது என்று நான் நினைக்கிறேன். இந்துக்களைத் திரட்டி ஒற்றைக் கருவியாகச் செய்துவிட வேண்டும். இதற்குரிய உபாயங்களைச் சரியான காலத்தில் தெரிவிக்கிறேன்’’ என்று கூறியுள்ளீர்.
ரஷ்யப் புரட்சி பராசக்தி கருணையில் வந்ததா?
உங்களுடைய சீடராகப் பெருமையோடு தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் ஒரு காலத்தில் ‘சுப்பிரமணியர் துதியமுது’ பாடியவர் தான். ஆனால், சுப்பிரமணியர் துதியமுது பாடிய ஆத்திக கனகசுப்புரத்தினம், தந்தை பெரியார் அவர்களுடைய பகுத்தறிவுக் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட பிறகு, ‘இல்லையென்போன் யாரடா தில்லை சென்று பாரடா’ என்று கேட்டவர்களுக்கு, ‘இல்லையென்போன் நானடா, அத்தில்லை கண்டுதானடா’ என்று உறுதியாகச் சொன்னார்.
எனவே, புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுடைய நிலையை எடுத்துக்கொண்டால், பிற்காலத்தில் அவர் மாற்றமடைந் திருக்கிறார் என்பதைச் சொல்ல முடியும். அவர் போக்கில் பரிணாம வளர்ச்சியைக் காண முடியும். முரண்பாட்டைக் காண முடியாது. அதுபோல உங்களுடைய காலகட்டத்தில் ஏற்கெனவே உங்களுக்கு இருந்த கருத்து, பிற்காலத்தில் மாற்றப்பட்ட கருத்து. பரிணாம வளர்ச்சிப் போக்கில் உள்ளனவா? தெளிவான வரையறையோடு இருக்கின்றனவா என்று நாங்கள் தேடிப் பார்க்கிறோம்.
ரஷ்யப் புரட்சி ஏற்பட்டதற்கு நீங்கள் பாராட்டுத் தெரிவித்தீர்கள் என்பதற்காகத்தான் நம்முடைய அருமைப் பொதுவுடைமை நண்பர்கள் எல்லாம், “பொதுவுடைமை இந்த உலகத்திலே கொள்கையாகக் கொள்வோம். புனிதமோடு அதை நாங்கள் காப்போம்’’ என்று சொன்ன புரட்சிக்கவிஞர் பாரதிதாசனைவிட உங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உங்களை ஓகோ என்று புகழ்கிறார்கள். ஆனால், ரஷ்யப் புரட்சியைப் பற்றி நீங்கள் கூறியது என்ன?
“மாகாளி, பராசக்தி, உருஷ்ய நாட்டில் கடைக்கண் வைத்தாள், அங்கே ஆகாவென்று எழுந்தது பார்யுகப் புரட்சி’’ என்பதுதானே! இது ரஷ்யப் புரட்சிக்குப் பெருமை சேர்ப்பதா? அப்புரட்சியின் உண்மையைக் காட்டுவதா? கொலையாளிகளை அழிக்க கொலையைத்தானே கையாள நேருகிறது? அநியாயம் செய்வோரை அநியாயத்தால்தானே அடக்க நேரிடுகிறது என்று சிறீமான் லெனின் சொல்லுகிறார். இது முற்றிலும் தவறான கொள்கை என்று சொல்லியிருக்கிறீர்கள். ‘லெனினே பரம மூடர்’ என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். பொதுவுடைமைக் கொள்கையை ஒரு பக்கத்தில் நீங்கள் பாராட்டிவிட்டு, மற்றபடி தானம் கொடுப்பதன் மூலமாக ஏழ்மைத் தனத்தை ஒழித்துவிட முடியும் என்று நீங்கள் சொல்வதை எப்படிப் புரிந்துகொள்வது?
எந்த உண்மையான பொதுவுடைமை வாதியும் உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்ளமாட்டான். தர்மகர்த்தா முறையாக வேண்டுமானால் இது கருதப்படலாம். அதே கட்டுரையில் நீங்கள் மேலும் சொல்லியிருக்கிறீர்கள்: ‘லெனின் வழி சரியான வழி இல்லை. காரணம், என்ன என்று சொன்னால், நாம் இந்தியாவில் இருக்கிறோமாதலால் இந்தியாவின் சாத்திய, அசாத்தியங்களைக் கருதியே நாம் யோசனை செய்ய வேண்டும். முதலாவது இந்தியாவில் உள்ள நிலச்சுவான்களும் முதலாளிகளும் அய்ரோப்பிய முதலாளிகள் நிலச்சுவான்களைப் போல் ஏழைகளின் விஷயத்தில் அத்தனை அவமதிப்பும் குரோதமும் பூண்டோர் அல்லர். இவர்களுடைய உடமைகளைப் பிடுங்க வேண்டும் என்றால், நியாயம் ஆகாது. அதற்கு நம் தேசத்தில் உள்ள ஏழைகள் அதிகம் விரும்பவும் மாட்டார்கள்’’ என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்.
இதைச் செய்யாமல் எப்படி இங்கே பொதுவுடைமை வரும்? இதை எந்த உண்மையான பொதுவுடைமைவாதியால் ஏற்றுக்கொள்ள முடியும்? இந்தியாவிலே இருக்கிற நிலச்சுவான் அங்கேயிருக்கிற நிலச்சுவான்களைவிட நல்லவர்கள் என்று சொன்னால். நிலச்சுவான் முறை இருக்க வேண்டும் என்று நீங்கள் வாதாடுகிறீர்கள் என்றுதானே பொருள்?
ஒரு பக்கத்திலே ஜாதிமுறை நல்லது என்று வாதாடுகிறீர்கள். அதைச் சுட்டிக்காட்டினேன். இன்னொரு பக்கத்திலே “எல்லோரும் இந்துக்களாக’’ வேண்டும் என்று சொல்லுகிறீர்கள். அதையும் சுட்டிக் காட்டினேன். இன்னொரு பக்கத்திலே இந்த தேசம் ஆரிய நாடு என்று சொல்லுகிறீர்கள். அதையும் உங்களுக்கு எடுத்துக் காட்டினேன். இன்னொரு நேரத்தில் எல்லோருக்கும் ‘பிராமணர்’களைப் போல் பூணூல் போடப்பட்டு, காயத்திரி மந்திரம் சொல்லித் தரப்பட்டு இந்த தேசம் ‘பிராம்மண’ தேசமாக ஆகவேண்டும் என்று சொல்லுகிறீர்கள். இவைகளெல்லாம் முற்போக்கு என்பதற்கு நிச்சயமாக வழிகாட்டுகின்ற முறையாக இருக்க முடியாது.
ஒரு தேசியக்கவிஞன் பார்வையில் இத்துணை குழப்பங்கள் இருக்கக் கூடாது. இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. இருந்தால் அத்தகையவர் ஒரு தேசியக்கவியாக இருக்க முடியாது! இதற்கு உங்களுடைய நியாயமான பதில் என்ன? ஒரு வேளை நீங்கள் இந்தப் பழைமையான கருத்துகளில் ஊறித் திளைத்த காரணத்தினால் உங்களுக்கு ஏற்பட்ட சுற்றுச் சார்பு காரணமாக இந்த நிலை இருக்கிறது. உங்களுடைய உயர்ஜாதித்தனம் என்பது உங்களை அறியாமல் உங்களுடைய ரத்தத்திலே கலந்துவிட்ட காரணத்தினாலோ என்னவோ, உங்களுடைய புரட்சிக்குக்கூட ஒரு புதிய பார்வையையும், புதிய கோணத்தையும் கொடுத்திருக்கிறதே தவிர, உங்களுடைய தேசியப் பார்வையை வெகுவாகக் குறைத்திருக்கிறது. எனவே, உங்களை நேரிடையாகவே குற்றம் சாட்டுகிறேன்.
என்ன பதிலை நீங்கள் சொல்லப் போகிறீர்களோ, உங்கள் சீடர்கள் மூலமாகச் சொல்லுங்கள். எதிர்பார்க்கிறேன். மீண்டும் சில கேள்விகளைக் கேட்கத் தயாராக இருக்கிறேன்’’ என்று ‘குமுதம்’ வாயிலாகக் பாரதியைக் கேட்டேன்.
(குறிப்பு: பாரதியார் நூற்றாண்டு விழாவையொட்டி 1981ஆம் ஆண்டில், ‘குமுதம்’ ஏடு ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் கேட்டு பெற்று வெளியிட்ட கட்டுரை இது)
தகவல்: செ.ர.பார்த்தசாரதி
No comments:
Post a Comment