Thursday 4 February 2021

வண்ணார் வரலாறு

ஒற்றைப் பத்தி - 

'அர்த்தமுள்ள ஹிந்து மதம்' என்று பீற்றுகிறார்கள் - அந்த மதத்தில் மனிதர்களைப் பிறப்பின் அடிப்படையில் பிளவுபடுத்தி எப்படியெல்லாம் சிறுமைப்படுத்தி இருக்கிறார்கள் என்பதை எண்ணும்பொழுது இன்னும் இத்தகைய ஒரு மதம் உயிர் வாழ்கிறதே என்ற சினம் சீறிடுகிறது.

சிந்தனை ததும்பும் ஆய்வாளர் - எழுத்தாளர் பொதுவுடைமையாளர் ஆ.சிவசுப்பிரமணியம் அவர்கள்  ''தமிழக வண்ணார் வரலாறும் வழக்காறுகளும்'' எனும் ஆய்வு நூல் ஒன்றை எழுதியுள்ளார். அதில் சில இங்கே:

''விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டத்திலுள்ள கொங்கணமூர் என்ற கிராமத்தில் வண்ணார் சமூகப் பெண்ணொருத்தி ஊர்ச்சோறு எடுக்க நிலக்கிழார் ஒருவரின் வீட்டிற்குச் சென்றார். நிலக்கிழாரின் மனைவி வெறும் சோற்றை மட்டும் கொட்டிவிட்டு உள்ளே சென்று விட்டாள். அவள் கொளம்புடன் திரும்பி வருவார் என்று குரல் எழுப்பினாள். அப்போது வீட்டுத் திண்ணையில் அமர்ந்தவாறு வெற்றிலைப் போட்டுக் கொண்டிருந்த நிலக்கிழார், 'என்ன கேட்டே?' என்று எதுவும் தெரியாததுபோல் கேட்டார். 'கொளம்பு கேட்டேன்' என்று இயல்பாக அப்பெண் கூறியதும், 'இங்கே வா' என்று அருகில் வரச் சொல்லி, வாயில் இருந்த செந்நிற வெற்றிலைச் சாறை சோற்றுப் பானையில் உமிழ்ந்துவிட்டு, 'இந்தா கொளம்பு ஊத்தியாச்சுப் போ' என்று கூறிவிட்டார்.

அச்சமும், அவமானமும் ஒரு சேர, தன் சட்டியில் அதுவரை வாங்கியிருந்த சோறும் வீணாகிப் போன நிலையில், அப்பெண் வீடு திரும்பினாள்.

பின்னர் வண்ணார் விடுதலை இயக்கத்தின் தோழர் த.ம.பிரகாஷ் துணையுடன் போராடி அந்நிலக் கிழாரை மன்னிப்புக் கேட்கச் செய்தனர்'' (இந்நூல் பக்கம் 11).

ஜாதி ஆணவமும், நிலச்சுவான்தார் என்ற திமிரும் எப்படி கைகோத்து நின்றன என்பதற்கு இந்நூல் எடுத்துக்காட்டே!

63 நாயன்மார்களுள் திருக்குறிப்புத் தொண்டர் என்பவர் வண்ணார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்கிறது பெரிய புராணம்.

வண்ணார்கள் நிலவுடைமைக் காரர்களாகவும் இருந்ததுடன் நிலக்கொடை வழங்கும் அளவுக்கு உபநிலம் உடையவராகவும், கோவில்களுக்கு நிலமும் வழங்கினர் என்றும் கூறும் கல்வெட்டுக் குறித்தும் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார்.

- மயிலாடன்


No comments:

Post a Comment