நிகழ்வுகள்:
ஆசிரியரிடமிருந்து “பெரியார் விருது” பெறும் பாடகர் த.வேல்முருகன், நடிகர் சின்னி ஜெயந்த், இசையமைப்பாளர் மு.ஜிப்ரான் ஆகியோர்
தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் பெரியார் திடலில், தை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டு விழா, பொங்கல் விழா, திராவிடர் திருநாள் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டது.
பெரியார் திடலில் 21 அடி உயரத்தில் அமையப்பெற்றுள்ள தந்தை பெரியார் முழு உருவச்சிலை முன்பாக பறை இசை முழங்கிட இருபால் இளைஞர்கள் உற்சாகத்தில் ஆட்டம் போட்டனர். அலங்காநல்லூர் வேலு ஆசான் வழங்கும் சமர் கலைக் குழுவினரின் நாட்டுப் புறக் கலை நிகழ்ச்சிகளை பொம்மலாட்டக் கலைஞர் மு.கலைவாணன் தொடங்கி வைத்தார்.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் திருவள்ளுவர் 2050’’ சிறப்புக் காட்சியை கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி திறந்து வைத்தார். காட்சிக்கூட முகப்பில் அமைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் முழு உருவச்சிலையை பார்வையாளர்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்ததோடு சிலை அருகில் நின்று படங்களையும் எடுத்துக் கொண்டனர்.
ஓவியர் பகலவன் கை வண்ணத்தில் உருவாக்கப்பட்ட ஓவியக் காட்சி பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது.
அன்றைய சிறப்பு நிகழ்வாக ‘பெரியார் விருது’ வழங்கும் விழா நடைபெற்றது. வரியியல் வல்லுநர் ச.ராசரத்தினம் தலைமை உரையாற்றினார். அவருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து இயக்க வெளியீடுகளை வழங்கினார்.
ஆசிரியரிடமிருந்து “பெரியார் விருது” பெறும் வி.ஜி.சந்தோசம், பேராசிரியர் சு.கருணானந்தம், மற்றும் பெரியார் பெருந்தொண்டர் பெங்களூரு வீ.மு.வேலு அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்தார்
கழகப் பொருளாளர் வீ.குமரேசன் வரவேற்புரை ஆற்றினார். கழகத் துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி அறிமுகவுரை ஆற்றினார்.
திரைப்பட நகைச்சுவை நடிகர் சின்னி ஜெயந்த், இசையமைப்பாளர் மு.ஜிப்ரான், மக்களிசைப் பாடகர் டாக்டர் த.வேல்முருகன் ஆகியோருக்குப் பயனாடை அணிவித்து, இயக்க நூல்களை வழங்கி, பெரியார் முழு உருவச்சிலையுடன் பெரியார் விருதினை பார்வையாளர்களின் பலத்த கரவொலிகளுக்கிடையே திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வழங்கி, பாராட்டிச் சிறப்புரை ஆற்றினார். நம்முடைய இளைஞர்களை ஊக்குவிக்கவும், நமது திறமையானவர்களை மேலும் உயர்த்தவும் ‘பெரியார் விருது’ அளிக்கப்படுகிறது என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
பாடலாசிரியர் இளையகம்பன் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கிப் பாராட்டினார்.
‘பெரியார் விருது’ பெற்றவர்கள் ஏற்புரையாற்றினர். நிகழ்ச்சிகளை ‘பெரியார் களம்’ இறைவி தொகுத்து வழங்கினார். பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், புலவர் பா.வீரமணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
திராவிடர் திருநாள் இரண்டாம் நாள் நிகழ்வில் ‘பெரியார் அம்பேத்கர் நட்புறவு - ஒரு வரலாறு’, ‘தமிழில் பெயரிடுவோம்’, ‘குடியுரிமைத் திருத்தச்சட்டம் கூடாது ஏன்?’ ஆகிய 3 நூல்களும் ஆசிரியர் தலைமையில் வெளியிடப்பட்டன.
பெரியார் நூலக வாசகர் வட்டம், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் சார்பில் அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது. வீரவிளையாட்டுக் குழுவினரைப் பாராட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து சிறப்புச் செய்தார்.
‘கிடா ஆடு’ காட்சி அமைத்த குழுவினரை கழகப் பொதுச்செயலாளர் பாராட்டி சிறப்புச் செய்தார்.
இரண்டாம் நாள் நிகழ்வு
திராவிடர் திருநாள் இரண்டாம் நாள் நிகழ்வில் நூல் வெளியீடு மற்றும் பெரியார் விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
தலைமையேற்று கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரையாற்றினார். கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் வரவேற்புரை ஆற்றினார்.
நூல்கள் வெளியீட்டு விழா
‘பெரியார் அம்பேத்கர் நட்புறவு ஒரு வரலாறு’, ‘தமிழில் பெயரிடுவோம்’, ‘குடியுரிமைத் திருத்தச்சட்டம் கூடாது ஏன்?’ ஆகிய 3 நூல்களும் வெளியிடப்பட்டன.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நூல்களை வெளியிட, பேராசிரியர் கருணானந்தம் பெற்றுக் கொண்டார்.
அடுத்து பேராசிரியர் அ.கருணானந்தம் அவர்களுக்கும், வி.ஜி.சந்தோஷம் அவர்களுக்கும் பெரியார் விருதை வழங்கி தமிழர் தலைவர் சிறப்பித்தார்.
இறுதியில் ஆசிரியர் சிறப்புரையாற்றினார்.“கெடுப்பதூஉம் எடுப்பதூஉம்“ என்னும் தலைப்பில் பேராசிரியர் அரசு செல்லையா (அமெரிக்கா) கருத்துரையாற்றினார்.
நூற்றாண்டுவிழா கண்டுள்ள பெரியார் பெருந்தொண்டர் பெங்களூரு வீ.மு.வேலு அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து இயக்க வெளியீடுகளை வழங்கி சிறப்புச் செய்தார்.
- உண்மை இதழ், 1-16.2.20
No comments:
Post a Comment