Showing posts with label அம்பேத்கர். Show all posts
Showing posts with label அம்பேத்கர். Show all posts

Sunday, 10 November 2024

மஹத் போராட்டம்: உரிமையை அள்ளிப் பருகுங்கள்!


விடுதலைஞாயிறு மலர் நாளேடு

இந்திய வரலாற்றில் தோன்றிய மகத்தான சிந்தனையாளர், அறிவுஜீவி பாபாசாகேப் அம்பேத்கர். அவரது வாழ்வே ஒரு போராட்டம்தான். வாழ்வின் ஒவ்வொரு நகர்விலும் அவர் எதிர்கொண்ட தீண்டாமையை, சதிகளை, கசப்புகளை, காழ்ப்புகளை எத்தகைய நிதானத்துடன் அவர் கையாண்டார் என்பது இன்றும் நம்மை வியக்கவைக்கிறது. சுதந்திரப் போராட்ட காலத்தில், இந்தியத் தலைவர்கள் அனைவருக்கும் பிரிட்டிஷாரை எதிர்த்து போராடுவது ஒன்றுதான் லட்சியமாக இருந்தது. அம்பேத்கருக்கோ தேச விடுதலையோடு, தம் மக்களுக்கு ஹிந்து ஜாதியப் படிநிலையிலிருந்தும் விடுதலை பெற்றுத் தர வேண்டும் என்கிற இரட்டை லட்சியங்கள் இருந்தன!

இந்தியத் துணைக்கண்டத்தில் ஜாதி அமைப்பு, அதன் தோற்றம், இருப்பு என மானிடவியல் கோணத்தில் அவர் தொடர்ந்து ஆராய்ச்சி செய்தார். மஹர் மக்கள் பவுத்த சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் பவுத்த பழக்கங்களை விட மறுத்ததால் கிராமங்களைவிட்டு வெளியே தீண்டத்தகாதவர்கள்  (Out Caste) போல் வாழ வற்புறுத்தப்பட்டார்கள் என்றும், இதனாலேயே அவர்கள் தீண்டத்தகாதவர்களாக ஆனார்கள் என்றும் கருதினார். `யார் சூத்திரர்கள்?’ (Who were the Shudras?) என்ற புத்தகத்தில் இது குறித்து அவர் விரிவாக எழுதினார். ஊர்-சேரி என்கிற இந்த இரண்டாயிரம் ஆண்டு இடைவெளியைத் தகர்க்கவே வாழ்நாளெல்லாம் போராடினார்.

இந்தியாவில் நான்கு வர்ணங்களின் அடிப்படையிலான சாஸ்திரங்கள், சம்பிரதாயங்களில் வகுக்கப்பட்ட விதி முறைகளின்படி, தீண்டத்தகாதோர் எனும் தாழ்த்தப்பட்டவர்கள் ஜாதியக் கட்டமைப்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கிராமங்களின் குளங்கள், கிணறுகள், கோயில்கள் தொடங்கி பொதுக் கட்டமைப்புகள் எதையும் பயன்படுத்த அனுமதியில்லை. இவற்றைக் கண்டித்து, ஹிந்து ஜாதிய அமைப்புக்கு எதிராகச் சுதந்திரப் போராட்ட காலத்தில் அம்பேத்கர் மேற்கொண்ட இந்தப் போராட்டம் இந்திய வரலாற்றின் மகத்தான போராட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
பம்பாய மாகாணம், ராய்காட் மாவடடததின் ‘மஹத்’ எனும் நகரில் அமைந்துள்ள சவுதார் பொதுக்குளத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் நீர் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டார்கள். அரசால் நிறுவப் பட்டுள்ள அடிப்படைக் கட்டமைப்புகள் அனைத்தையும் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்த வழிவகை செய்யும் சட்டம். 1924இல் பம்பாய் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. உடனே அந்தத் தீர்மானத்தை மஹத் நகரசபையும் நிறை வேற்றி அந்த உரிமையைத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கியது. இருப்பினும், ஜாதிய அழுத்தங்களின் காரணமாக, இதை அவர்கள் அந்த ஊரில் நடைமுறைப்படுத்தவில்லை.
1924இல் இந்தச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு, ஆங்காங்கே சில முயற்சிகள் நடக்கவே செய்தன. கோரேகானில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஒன்று திரண்டு கிராமத்திலுள்ள குளத்தினுள் குதித்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஆதிக்க ஜாதியினர் அவர்கள் அனைவரையும் தாக்கினார்கள்.

1927, மார்ச் மாதத்தின் 19-20 தேதிகளில், அம்பேத்கர் மஹத் நகரில் ‘தீண்டத்தகாதோர்’ மாநாட்டுக்கு ஏற்பாடுகள் செய்தார். முதல்நாள் அமபேதகர் மாநாட்டு அரங்கில் நுழைந்தபோது, 3,000 பேர் அரங்கத்தில் அமர்ந்திருந்தனர். சவுதார் குளத்தை தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தும் உரிமை குறித்து இந்த மாநாட்டில் அம்பேத்கர் ஆற்றிய தலைமை உரை மிகவும் முக்கியமானது. கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி வருவதற்கு முன்னர், தீண்டத்தகாதவர் என்பதை வெளிப்படுத்தும் அடையாளமாக கழுத்தில் மண் கலயத்தைக் கட்டிக் கொண்டும், மணிக்கட்டில் கறுப்புக் கயிறுகளைக் கட்டிக் கொண்டும் மஹர்கள் திரிந்த அவலத்தை அவர் விவரித்தார். பிரிட்டிஷாரின் வருகைக்குப் பின்னர் எப்படி அவர்களின் வாழ்வில் முன்னேற்றங்கள் நிகழ்ந்தன என்பதையும் சுட்டிக்காட்டினார். ராணுவம் உள்ளிட்ட பணிகளில் மஹர்கள் இணைந்ததால் ஏற்பட்ட மாற்றங்களையும் அவர் பட்டியலிட்டார். ‘கோயில்களில் நுழையவும், பொது நீர்நிலையில் தண்ணீர் எடுக்கவும், செத்த விலங்குகளை அப்புறப் படுத்துவதில்லை என்றும் நாம் முடிவு செய்து விட்டால், மறுநாளே நமக்கு உணவு தருவதை நிறுத்திவிடுவார்கள்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

மாநாட்டின் முடிவில், மஹத் நகரத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஓர் ஊர்வலத்துக்கும் திட்டமிடப்பட்டது. ‘இந்தக் குளம் தனியார் நிலத்தில் அமைந்துள்ளது. இங்கே மறியல் போராட்டம் நடத்தி, அத்துமீறி நுழைவது சட்ட விரோதமானது’ என்று நீதிமன்றத்தில் ஜாதி ஹிந்துக்கள் வழக்கு தொடர்ந்தார்கள். ஊர்வலம் நிச்சயமாக நடைபெறும் என்பதை அறிந்த ஜாதிய இந்துக்கள், பல வதந்திகளை அந்த ஊரிலும், அருகிலுள்ள ஊர்களிலும் பரப்பினார்கள். ‘அம்பேத்கர் குளத்தில் இறங்கிவிட்டு நேரடியாக அங்கே இருக்கும் கோயிலுக்குள் நுழையப் போகிறார். கோயில் தீட்டுப்பட்டுவிடும்’ எனக் காவல் துறையினரிடம் புகார் செய்தார்கள்.

அம்பேத்கர் தலைமையில் இந்தப் பேரணி சவுதார் குளம் நோக்கிச் சென்றது. மஹத் நகரே பதற்றத்தில் உறைந்தது. அம்பேத்கர் இந்தப் போராட்டத்தை அறவழியில் நடத்துவது என்பதில் கறாராக இருந்தார். மூவாயிரம் மஹர்களின் கைகளிலும் அவர்களின் அடையாளச் சின்னமான மூங்கில் லத்திகள் இருந்தன. ஆனால், அனைவரும் அம்பேத்கரின் வார்த்தைக்குக் கட்டப்பட்டு ராணுவத்தின் மிடுக்குடன் முன்னேறிச் சென்றனர். அவர்கள் சவுதார் குளத்தை அடைந்தார்கள். அம்பேத்கர் குளத்திலிருந்து நீரை அள்ளிப் பருகிய செயல், இந்திய வரலாற்றின் புரட்சிகரமான கணங்களில் ஒன்று. அவரைத் தொடர்ந்து மூவாயிரம் பேர் குளத்தில் இறங்கி நீரை அள்ளிப் பருகினார்கள். “நாங்கள் இங்கே இந்த நீரைப் பருக மட்டுமே வரவில்லை. இந்திய நாட்டில் சமத்துவத்தை நிலைநாட்டவே வந்திருக்கிறோம். பிரெஞ்சுப் புரட்சிக்கு சற்றும் குறைவில்லாதது இங்கே நாம் மேற்கொண்ட போராட்டம்” என்று கூறிய அம்பேத்கர், சவுதார் குளத்தின் படிகளில் நின்று தீண்டாமையின் மூல காரணமாகத் திகழும் மனுஸ்மிருதியின் பிரதியைத் தீயிட்டு எரித்தார்.

குளத்தில் நீர் பருகிவிட்டு மாநாட்டு அரங்கு நோக்கி வந்தவர்கள் மீது ஜாதி ஹிந்துக்கள் கல்வீசித் தாக்கினார்கள். அவர்களின் மாட்டு வண்டிகளை உடைத் தெறிந்தார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று அனைவரையும் மூர்க்கமாகத் தாக்கினார்கள். அனைவரும் கோயிலுக்குள் நுழையப்போகிறார்கள் என்கிற வதந்திதான் இந்தத் தாக்குதலுக்கு வழிவகுத்தது. ஸநாதனவாதிகளுக்கு வரலாறு நெடுகிலும் வதந்திதான் மூலதனம். சொந்த ஊர்களுக்குத் திரும்பியவர்களைச் சமூகப் புறக்கணிப்புக்கு ஆளாக்கினார்கள். அவர்களுக்கு இனி வேலை இல்லை என்றார்கள். அவர்கள் வேளாண்மை செய்துவந்த நிலத்தைவிட்டு விரட்டி யடித்தார்கள்.

சவுதார் குளம் தீட்டுப்பட்டு விட்டதாக ஜாதிய ஹிந்துக்கள் கூச்சலிட்டார்கள். ‘எல்லாம் போச்சே…’ என வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டார்கள். உடனடியாகப் பரிகார பூஜைகளுக்கு ஏற்பாடு செய்தார்கள். குளத்தைத் தூய்மைப்படுத்தும் சடங்குகளைச் செய்தார்கள். குளத்திலிருந்து 108 மண்பானைகளில் தண்ணீர் எடுத்து வந்து, அதில் பாலும் தயிரும் பசு மூத்திரமும் சாணமும் கலந்து, மந்திரங்கள் சொல்லி மீண்டும் குளத்தில் ஊற்றி அதைச் சுத்தப்படுத்துகிறோம் என்று வித்தைகள் பல காட்டினார்கள். ஆனாலும், மஹத் போராட்டத்தின் செய்தி. இந்தியா முழுவது முள்ள தாழ்த்தப்பட்ட மக்களிடம் பெரும் எழுச்சியைக் கொண்டுவந்தது.

“நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்படுகிறோம். குடிதண்ணீர் பெறக்கூட எங்களுக்கு உரிமை இல்லை யென்றால், சுயமரியாதையுள்ள எந்தத் தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்… இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி என்ன தெரியுமா… இன்னல்களையும் அநீதி களையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதுதான் யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களின் உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளால், இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது” என்று கொதித்துப் பேசினார் அம்பேத்கர்.

1937ஆம் ஆண்டு, பம்பாய் உயர் நீதிமன்றம் மஹத்தின் சவுதார் குளத்தைத் தீண்டத்தகாதோர் பயன்படுத்த உரிமை வழங்கி ஆணையிட்டது. இருப்பினும் காந்தியாரின் மறியல் போராட்டத்தைக் கொண்டாடிய யாரும் அம்பேத்கரின் மஹத் மறியல் போராட்டம் குறித்து மறந்தும் வாய் திறப்பதில்லை. இதுதான் ஹிந்து மதத்தின் ஜாதிய மனநிலை வழிவகுக்கும் ‘அமைதியின் சதி’ (Conspiracy of Silence) என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. வரலாற்றை வாசிக்கும் போதும், அதை மீள்வாசிக்கும்போதும் நமக்குக் காலம் கற்றுக்கொடுத்த அறிவு ஆயுதங் களைக்கொண்டு அதைப் பகுப்பாய வேண்டும். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் தந்தை பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் வழங்கியுள்ள கருத்தாயுதங்களைக் கொண்டுதான் சமத்துவச் சமூகம் நோக்கி பயணிப்பது சாத்தியம்!

(திரு.அ.முத்துக்கிருஷ்ணன் அவர்கள் எழுதியுள்ள “போராட்டங்களின் கதை” என்ற நூலிலிருந்து… )

Wednesday, 27 July 2022

அம்பேத்கர் பார்ப்பனப் பெயரா?

Saturday, 2 July 2022

அண்ணல் டாக்டர் அம்பேத்கர் ஆரம்பித்த பத்திரிகையின் முதல் தலையங்கம்

Sunday, 30 January 2022

அண்ணல் டாக்டர் அம்பேத்கர் ஆரம்பித்த பத்திரிகையின் முதல் தலையங்கம்

அண்ணல் பாபாசாகிப் அம்பேத்கர் 1920ஆம் ஆண்டு ஷாகுஜி மகாராஜ் உதவியுடன், ஆதரவுடன் வாரம் இருமுறை நாளிதழை அவரின் முதல் முயற்சியாக ஆரம்பித்தார். அந்த இதழின் பெயர் ‘மூக்நாயக்‘ (பேசாத மக்களின் தலைவன்) முக்கிய இந்த இதழ்களில் ‘சுயராஜ்யம்‘, ‘தீண்டப்படாதவர்களுக்குக் கல்வி‘, ‘தீண் டாமையின் தீமைகள்’ ஆகியவை பற்றி தேவைப்படும் அளவுக்கு கூறாததால் அவற்றைப் பற்றி தன் கருத்துகளை எடுத்துக்கூறும் நோக்கத்துடன் இந்த இதழை ஆரம்பித்தார். இந்த இதழ் மூன்றாண்டுகள் வரை வெளிவந்தது. முதல் இதழ் 31.1.1920இல் வெளிவந்தது. அந்த இத ழில் வந்த தலையங்கத்தைக் காண்போம்.

ஏற்றத்தாழ்வு கொண்ட இந்தியா

நம் நாட்டின் அமைப்பு முறையில் ஒட்டுமொத்த மனித இனத்தையும், மனித இனம் இல்லாதவற்றின் தோற்றத்தையும் ஒருவர் கணக்கிலெடுத்துக் கொண்டால் அய்யத்திற்கு இடமில்லாமல், இந்தியா பல்வகையான ஏற்றத்தாழ்வுத் தன்மை, குணத் தனித்தன்மை கொண்டது என்பது வெளிப்படும். இந்த ஏற்றத்தாழ்வு முறையில் உலகாயுத அளவுகோல் வாழ்வியலில் அமைந்துள்ள சமநிலையற்றதை நிரூபிக் கும் நிலை வெட்கப்படத் தக்கது.

ஆபத்தான மத வேற்றுமைகள்

இந்தியர்கள், பல்வேறு வகையில் வேறு பட்டிருந்தாலும், உடல் அமைப்பாலோ, அறிவுக்கூர்மையினாலோ அமைந்த வேற்றுமைகளை விட மதம் சார்ந்த வேற் றுமைகள் மிகுந்த ஆபத்தை உள்ளடக்கி யவை. மதத்தை அடிப்படையாகக்கொண்ட வேற்றுமைகள், அதன் எல்லை கடந்த நடத்தையால் ரத்தம் சிந்தும் நிலை ஏற்படக் காரணமாகிவிடுகிறது. இந்துக்கள், பார்சிக் கள், யூதர்கள், முஸ்லிம்கள், கிறித்துவர்கள் மற்றும் ஏனைய பிரிவினர்கள் இடையே பல தோற்றங்கள் காணப்படுகின்றன. ஆனால், நெருங்கிக் கூர்ந்து ஆய்ந்தால் இந்துக்களிடையே உள்ள படிநிலை வேற்று மையின் இடைவெளியை முழுமையாகக் காணலாம். குறையுடைய இது நம்புவதற்குக் கடினமானதாகவும் உள்ளது.

ஒரு அய்ரோப்பியனை, நீ யார் என்று கேட்டால், அவன் இங்கிலீஷ் அல்லது ஜெர்மன் அல்லது பிரெஞ்சு அல்லது இத்தாலி என்று அவன் நாட்டினத்தைக் குறிப்பிட்டு அளிக்கும் விடை, தேவையைச் சரிசெய்யப் போதுமானதாகி விடுகிறது. இருந்தபோதிலும், ஓர் இந்துவைப்பற்றி இதுபோல் கூறிவிட முடியாது. ‘நான் இந்து’ என்று கூறுவது எவரையும் திருப்திப்படுத் தாது. ஓர் இந்து, தன்னுடைய குறிப்பிட்ட அடையாளத்தை கூற, அவர் தன்னுடைய ஜாதியைக் கூறுவது அவசியமாகிறது.

படிக்கட்டில்லாத கோபுரம்

ஜாதிகளால் உருவாக்கப்பட்ட, இந்து இனம் என்று கூறக்கூடியவை படிநிலை ஏற்பாட்டில் அமைந்தவை, இந்து சமூகம் ஒரு கோபுரம் போன்றது. அதனுடைய ஒவ்வொரு தளமும், ஒவ்வொரு ஜாதிக்கு ஒதுக் கப்பட்டுள்ளது. இதில் கவனிக்கத்தக்க கருத்து என்னவென்றால், இந்தக் கோபுரத் திற்குப் படிக்கட்டு கிடையாது. அதனால் ஒரு தளத்திலிருந்து, மேல் தளத்திற்கோ, கீழ்த் தளத்திற்கோ செல்ல முடியாது. எந்தத் தளத்தில் ஒருவர் பிறக்கிறாரோ, அவர் இறக்கும் தளமும் அதுவேதான். கீழ்தளத் திலுள்ள ஒருவர் எவ்வளவு திறமை உடையவராக இருந்தாலும் அவர் மேல் தளத்திற்கு ஏறிச் செல்லும் எந்த வாய்ப்பும் இல்லை. அதைப்போலவே, சிறிதுகூட தகுதி இல்லாத ஒருவரை, அவருக்கென ஒதுக்கப்பட்ட மேல் தளத்திலிருந்து கீழே இறக்குவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.

தூய்மை அற்றவர் என்ற முத்திரை

ஜாதிகள் இடையே, ஒன்றுக்கொன்று தொடர்பு என்பது, எந்தவித விவாதத்திற்கும் அடிப்படைக்கும் இடமில்லாத வகையில் அமைந்துள்ளது. ஓர் உயர் ஜாதி மனிதன் எந்தத் தகுதியும் இல்லாத நிலையிலும், அவனுடைய உயர்நிலை மதிப்பு உயர் வாகவே இருக்கும். ஆனால், தகுதிமிக்க கீழ்ஜாதி மனிதன், தன் தாழ்ந்த நிலையி லிருந்து தாண்டிச் செல்ல அனுமதிக்கப் படுவதில்லை. கீழ்ஜாதி, மேல் ஜாதிக்காரர் களுக்கு இடையே ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதற்கும், அவர்களுக்கிடையே கலப்பு மணம் நிகழ்வதற்கும் கடுமையான தடை விதித்திருக்கும் காரணத்தால், அந் தந்த ஜாதிக் குழுக்கள், ஒரு குழுவுக்கும் மற்றொரு குழுவுக்கும் இடையே முன்ன தாகவே தனித்து வைத்த முறையில் தொடர்ந்து எப்பொழுதும் தனித்திருப்பது விதிமுறை என ஆக்கப்பட்டது.

ஜாதிகள் இடையே தொடர்பு ஏற் படக்கூடிய வட்டாரத்தில். நெருக்கத்தினால் ஏற்படும் பிணைப்புக்கூட ஏற்றுக்கொள்ள முடியாத நிலையிலிருந்தாலும், ஜாதி சட்டத்தினை அத்துமீறி, ஜாதிகள் இடையே தொடர்பு ஏற்படக்கூடிய வாய்ப்பைக் கூர்ந்து கண்காணித்து வந்தனர். சில ஜாதி களின் அமைப்பு முறையில் ஓரளவுக்கு கலப்பு ஏற்பட அனுமதிக்கப்பட்டாலும், ‘தூய்மையற்றது’ என்று முத்திரை குத்தப் பட்ட சில ஜாதிகள் இடையே அத்தகைய கலப்பு முறை முற்றிலுமாக மறுக்கப்பட்டது. இந்தத் தூய்மையற்ற ஜாதியினர். தீண்டத் தகாதவர் எனப்பட்டனர். அத்தகையோர் உயர்ஜாதி இந்துக்களுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் ஆபத்தானவர்களாகக் காணப்பட்டனர்.

பார்ப்பனர்கள் கடவுள்கள்

ஜாதி படிநிலை அமைப்பில் உச்சி நிலையில் பார்ப்பனர்கள் இருந்தனர். அவர்கள் இந்த நிலவுலகின் கடவுள்களாக கருதினர். ஏனைய ஆண்கள், பெண்கள் அவர்களுக்கு சேவை செய்யப் பிறந்த வர்கள். அல்லது அத்தகைய நம்பிக்கையில் அவர்கள் உள்ளவர்கள். எனவே அவர்கள் தங்களின் கீழ்நிலையில் உள்ளவர்கள் தங்களுக்கு ஏவல் செய்வதைக் கேட்கும் தகுதியை முழுமையாகப் பெற்றவர்கள் என்று கருதினர். பார்ப்பனர்கள், தாங்கள் இந்து புனித மத நூல்களின் ஆசிரியர்கள் என்ற வகையில், அந்த நூல்களின் மூலம் படிப்பிக்கப்படும் சகிப்புத்தன்மை, பிறர் உணர்வை மதிக்கும் மனம் போன்ற அறிவுரைகளைப் பற்றி கவலைப்படாமல், தங்களுக்கு சிறப்பைச் சேர்ப்பதில் ஏவல் செய்வோர் இனத்தின் கடமை என்பதில் உறுதியாக இருந்தனர்.

அடிமைத்தளையும் தன்முனைப்பும்

மறுபக்கம், பார்ப்பனரல்லாதவர்கள், போதுமான சொத்தும், கல்வியும் இல்லா ததால் பிற்படுத்தப்பட்டவர்களாக உள்ள னர். ஆனால், அவர்களுடைய அடிப்ப டைத் தேவைகள் முழுமையாகக் கவரப்பட் டதால், வறுமை நிலை, பிற்படுத்தப்பட்ட நிலை ஏற்பட்டது என்று கூறவேண்டிய கட்டாயமில்லை. ஏனென்றால், விவசாயத் தின் மூலமாகவோ, தொழிற்சாலையில் வேலை செய்வதின் மூலமாகவோ, வியா பாரம் மற்றும் வேறு வேலை வாய்ப்புகள் மூலமாகவோ வாழ்க்கைத் தேவைகளைப் பெற அவர்களுக்கு வாய்ப்பில்லாமல் போகவில்லை. வறுமையில் உழல்பவர் களாக, வலிமையற்றவர்களாக, சுயமரியா தையை இழந்தவர்களாக, சமூக இனப் பிரிவினையால் பெரிதும் பாதிக்கப்பட்ட வர்கள், தாழ்த்தப்பட்ட மக்களே. எனவே அத்தகைய வருந்தத்தக்க அவல நிலையில் உள்ளவர்களைத் திட்டமிட்டு வெளிச்சத் திற்குக் கொண்டு வர வேண்டும். அவர்கள் தங்களின் அடிமைத்தளையிலிருந்து மீண்டு வருவது என்பது அவர்களுடைய தன் முனைப்பு மூலமாகத்தான் அமைய வேண்டும். அந்தத் தடத்தில் செயல்பாடுகள் துவங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஒன்று.

வெற்றிடத்தை நிரப்ப ‘மூக்நாயக்‘

ஒரு நிறுவன அமைப்பு முறையில் பொதுமக்களுடன் தொடர்பு ஏற்படுத்தும் துறை ஏதும் இல்லாதது வருந்தத்தக்கது. ஏதேனும் ஓர் ஊடக வாயிலாக, ஒளிவு மறைவின்றி, அச்சமின்றி, தாழ்த்தப்பட்ட வர்களைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சி னைகளை ஊடக வாயிலாகக் கூற, தளம் ஏதும் இல்லாதது குறைபாடே. சில செய்தித் தாள்களும், வார-மாத இதழ்களும், தாழ்த் தப்பட்ட மக்கள் என்று கூறப்படுபவர்களின், பிரச்சினைகள் பற்றியும், அவற்றிற்காக தேவைப்படும் தீர்வுகளின் அவசியம் பற்றியும் எழுதி வருவது உண்மையே. ஆனால் இவை எதுவுமே தீண்டப் படாதவர்களின் உரிமை பற்றி உண்மையில் தனிக்கவனம் செலுத்துவதில்லை. அந்த நோக்கத்துடன், ஏற்பட்டிருக்கும் வெற்றி டத்தை நிரப்ப இந்த ‘மூக்நாயக்‘ என்ற பத்திரிகை திட்டமிடப்பட்டு மக்களிடையே கொண்டுவரப்பட்டுள்ளது.

(நன்றி: ‘தி இந்து’, 2.2.2020)

https://www.viduthalai.page/2021/01/blog-post_958.html

Sunday, 10 May 2020

நவபாரதச் சிற்பிகள் என்ற வரிசையில் 'பி.ஆர். அம்பேத்கர்



நடுவண் அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் "பப்ளிகேசன் டிவிசன்" சார்பில் நவபாரதச் சிற்பிகள் என்ற வரிசையில் 'பி.ஆர். அம்பேத்கர்' என்ற தலைப்பில் வாழ்க்கை வரலாற்று நூலை வெளியிட்டுள்ளது.
டபிள்யு.என். குபேர் என்பவர் மூலம் எழுதப்பட்டு தமிழில் ச.வீரமணி என்பவர் மொழிமாற்றம் செய்துள்ளார்.
இன்நூலை நான் இன்று படித்து முடித்தேன்.
அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு என்ற பெயரில் எழுதப்பட்டிருந்தாலும் அம்பேத்கரின் அரசியல் அலுவல் பயணமும் சமூக நீதி போராட்டமும் என்ற தலைப்பில் எழுதியது போல் உள்ளது.
265 பக்கங்கள், விலை ரூ165/-

Wednesday, 5 February 2020

அம்பேத்கர் என்பது Dr.அம்பேத்கரின் ஆசிரியர் பெயர் அல்ல

🙏🙏🙏🙏🙏🙏🙏
வரலாற்று உண்மை
✍✍✍✍✍✍✍
SCALM :அம்பேத்கர் என்பது Dr.#அம்பேத்கரின் ஆசிரியர் பெயர் அல்ல
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
 அது அவரின் #இயற்பெயரே
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
அம்பேத்கர் இயற்பெயர் ; பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்.
அம்பேத்கர் தந்தை பெயர்; ராம்ஜி மாலோஜி அம்பேத்கர்.

அம்பேத்கர் தபோலியில் உள்ள A.J. உயர்நிலைப்பள்ளியில் முதலில் பயின்றார்.அது இராணுவ வீரர்களின் குழந்தைகள் மட்டும் படிக்கும் பள்ளி.அம்பேத்கரின் தந்தை ஓய்வு பெற்ற சுபேதார் என்பதால் அம்பேத்கருக்கு அப்பள்ளியில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அங்கு அம்பேத்கர் மராத்தி மொழியை மோடி எழுத்து வடிவில் பயின்றுள்ளார்.தானே கையொப்பமிடவும் கற்றுள்ளார். பின்னாலில் மராத்தி மொழி தேவநகரி எழுத்து வடிவத்தில் மாறியுள்ளது.

பணியின் காரணமாக அம்பேத்கரின் குடும்பம் சதாராவிற்கு குடிபெயர்கிறது, அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் அம்பேத்கர் திரும்பவும் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்படுகிறார். அங்கு தான் அம்பேத்கர் தீண்டாமைக் கொடுமைக்கு ஆட்பட்டுள்ளார். அங்குள்ள ஆசிரியர் பெயர் தான் அம்பேத்கர் என்று பொய் கூறப்படுகிறது. அம்பேத்கர் அந்த பள்ளியில் சேர்ந்த அன்றே பள்ளி பதிவேட்டில் பீவா ராம்ஜி அம்பேத்கர் என்று பதிவிடப்பட்டுள்ளது. மேலும் பள்ளியில் சேர்ந்த அன்றே அம்பேத்கர் பீவா ராம்ஜி ஆம்பேட்கர் என்று மராத்தி மொழியில் மோடி ஸ்கிருப்டில் கையெழுத்திட்டுள்ளார். அந்த பதிவேடு இன்றும் அம்பேத்கர் படித்த பள்ளிக்கு அருகாமையில் உள்ள பள்ளியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த கையெழுத்தில் உள்ள அம்பேத்கர் கையெழுத்தை தமிழக அரசுச் செயலாளராக பணியாற்றிய மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற IAS அதிகாரி விஷ்வநாத் ஷெகாவ்கர் என்பவர் உறுதி செய்துள்ளார். 

எனவே அம்பேத்கர் என்பது ஆசிரியரின் பெயரல்ல. அது அவரின் இயற்பெயர் என்பது உறுதியாகிறது.

1916 ஆம் ஆண்டு அமெரிக்கா செல்வதற்கு அம்பேத்கர்   பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது தனது இயற்பெயர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என்றும் தனது தந்தை பெயர் ராம்ஜி மாலோஜி அம்பேத்கர் என்றும் தன் கைப்பட எழுதியுள்ளார். அதற்கான ஆதாரமும் உள்ளது.

மேலும் அம்பேத்கரின் தந்தை ஆங்கிலேயருக்கு அனுப்பிய கடிதங்களில் ராம்ஜி மாலோஜி அம்பேத்கர் என்று கையெழுத்திட்டுள்ளார். அந்தக் கடிதங்களை தன் தந்தையின் பீரோவீலிருந்த பழைய காகிதக் கட்டுகளிலிருந்து கண்டெடுத்ததாக பிற்காலத்தில் அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.

ஆகவே அம்பேத்கர் எனும் பெயர் அவரின் தந்தை பெயரிலிருந்தே புரட்சியாளர் அம்பேத்கருக்கு வந்துள்ளதே தவிர அது எந்த ஆசிரியர் பெரும் அல்ல.

இந்தியாவின் அறிவாளிகள் பார்ப்பனர்களாகவோ அல்லது பார்ப்பனர்களால் பயன்பெற்றவர்களாக இருப்பர் என்ற மோசடிகளின் அடிப்படையில் அம்பேத்கர் என்பது அவரின் ஆசிரியர் பெயர் என்று பொய் கட்டமைக்கப்பட்டுள்ளது. 

 அம்பேத்கர் என்பது அவர் இயற்பெயரே என்பதை ஆதாரத்துடன் பதிவிட்டுள்ளேன். இந்த பதிவும் மேலும் பல குறிப்புகளும் *அம்பேத்கர் என்ற பெயர் ஒரு பார்ப்பனருடையதா? - கழுவப்படும் பெயரழுக்கு எனும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. புத்தகத்தின் ஆசிரியர் பெயர் யாக்கன்.

🙏🙏🙏🙏🙏🙏🙏

Saturday, 17 February 2018

அம்பேத்கர் என்பது பார்ப்பன ஆசிரியரின் பெயரா?

அம்பேத்கர் என்பது பார்ப்பனரின் பெயர். அதனை பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் நன்றியுணர்ச்சியின் அடையாளமாக வைத்துக் கொண்டுவிட்டார். அதனால் பார்ப்பனர்கள் நல்லவர்கள் என்ற பிரச்சாரத்தினை ஆர்எஸ்எஸ் கும்பல் செய்து கொண்டிருக்கிறது.

அண்ணல் அம்பேத்கரை இப்பொழுது ஆர்எஸ்எஸ் கும்பல் கபளீகரம் செய்யத் துடித்துக் கொண்டிருக்கிறது.

அதற்காக எத்தகைய பொய்யையும் அவிழ்த்து விட அவர்கள் தயாராக இருக்கிறார்கள். அண்ணல் அம்பேத்கர் வாழ்ககை வரலாற்றை தனஞ்செய் கீர் என்பவர் எழுதியிருக்கிறார். அவர் ஒரு பார்ப்பனர். அத்துடன் இந்துமகாசபா ஆதரவாளர். அவர் வீர சவர்க்கருடைய வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார். வீர சவர்க்கருக்கு ஆதரவாகவும் அந்த நூலில் பல இடங்களில் எழுதியுள்ளார். அம்பேத்கரை விமர்சனம் செய்தும் அந்த நூலில் சில இடங்கள் வரும்.
அம்பேத்கருடைய வரலாற்றில் சில விசமத்தனங்களையும் அவர் அதில் புகுத்தியுள்ளார்.
அதில் ஒன்றுதான் அம்பேத்கருடை பெயர் அவருடைய ஆசிரியர் பெயர். அதனை அம்பேத்கர் தன்னுடைய பெயராக ஏற்றுக் கொண்டார் என்று எழுதியுள்ளார்.

அதனை இப்பொழுது ஆர்எஸ்எஸ் காரர்கள் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுள்ளனர். அம்பேத்கரது
இளமைக்காலத்தில் பார்ப்பனர்கள் பல்வேறு இடையூறுகளைச் செய்து வந்துள்ளனர். இவர் ஒரு தீண்டத்தகாவர் என்பதால் இவரைத் தொட்டு அடித்தால் தீட்டாகிவிடும் என்பதால் அம்பேத்கரை அடிக்க மாட்டார்களாம். பல ஆசிரியர்கள் அம்பேத்கருக்கு பாடம் நடத்துவதையே விரும்ப மாட்டார்களாம். அம்பேத்கரும் அவரது அண்ணனும் பள்ளி செல்லுகின்றபொழுது கூடவே ஒரு கோணிப்பையையும் எடுத்துச் சென்று அதில்தான் அமர வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டனர்.
ஒரு பார்ப்பன ஆசிரியர் நீயெல்லாம் எதற்குப் படிக்க வருகிறாய்? என்று கேட்டாராம். அதற்கு அம்பேத்கர் உங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு போங்கள் என்று பதில் சொன்னாராம்.
அதுபோல் அம்பேத்கர் மெட்ரிகுலேசன் வகுப்பில் படித்தபோது மொழிப்பாடமாக சமஸ்கிருதத்தை எடுத்துப் படிக்க நினைத்தாராம். பார்ப்பன ஆசிரியர்கள் சூத்திரனான உனக்கு சமஸ்கிருதத்தை சொல்லித் தரமாட்டோம் என்று கூறி விட்டார்களாம். அதனால் தனக்கு விருப்பமில்லாத பார்சி மொழியை எடுத்துப் படித்தார் அம்பேத்கர்.

பார்ப்பனர்கள் இவ்வளவு இடையூறு செய்துள்ளார்கள் என்பதனை மக்களுக்குத் தெரியப்படுத்தினால் தாழ்த்தப்பட்ட மக்களின் ஆதரவு கிட்டாது என்பதால் இப்பொழுது அவரது பெயர்ப் பிரச்சினையை கெட்டியாகப் பிடித்துள்ளார்கள். அதாவது அம்பேத்கர் என்ற பார்ப்பன ஆசிரியர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களிடம் மிகவும் பிரியமாக இருந்ததால் அதன் நன்றி உணர்ச்சியாக அம்பேத்கர் அவர்களே தனக்கு அந்த ஆசிரியரின் பெயரை வைத்துக் கொண்டுள்ளார் என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

உண்மையில் தனஞ்செய்கீர் அவர்களது நூலிலுள்ள தகவலே அதன் புரட்டை வெளிப்படுத்துகிறது. அதாவது பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் இயற்பெயர் பீமாராவ் ராம்ஜி அம்பாவடேகர் என்பதாகும். அம்பாவடே என்பது அவரது ஊரின் பெயர். கர் என்பது அவரது தாயாரின் குடும்பப் பெயர். அந்த இரண்டையும் சேர்த்து அம்பாவடேகர் என்று பெயரை பள்ளியில் சேர்க்கும்போது பதிவு செய்துள்ளார்கள்.
பணியில் ஒழுங்கில்லாத சோம்பேறியான பார்ப்பன ஆசிரியர் அந்தப் பெயரை பள்ளி பதிவேட்டில் அம்பேத்கர் என்று எழுதிவிட்டார்.
இப்படித்தான் அண்ணல் அம்பேத்கருக்கு அந்தப் பெயர் வந்தது.

இதனை அப்படியே தலைகீழாகப் புரட்டி அம்பேத்கரே நன்றியுணர்ச்சியின் காரணமாக அம்பேத்கர் என்ற தனது ஆசிரியரின் பெயரை வைத்துக் கொண்டார் என்று எழுதி பார்ப்பன ஆசிரியர்கள் அம்பேத்கரின் கல்விக்கு செய்துவந்த இடையூறுகளை மறைக்கப் பார்க்கிறார்கள்.
அதை உண்மை என்றே வைத்துக் கொள்வோம். அமபேத்கருக்கு உதவி செய்ததாகச் சொல்லும் அந்த ஆசிரியரின் வாரிசுகள் இன்றைக்கு இருப்பார்கள் அல்லவா? அல்லது அம்பேத்கர் என்பது பார்ப்பன இனத்தவர் வைத்துக் கொள்ளுகின்ற பெயராக இருந்தால் மற்றவர் யாராவது அந்தப் பெயரில் இருப்பார்கள் அல்லவா?

தமிழகத்தில்தான் தந்தை பெரியார் இயக்கத்தின் சாதனையாக எவரும் தன்னுடைய பெயருக்குப் பின்னால் ஜாதியைப் போடுவதில்லை. ஆனால் மற்ற மாநிலங்களில் எல்லாம் ஒவ்வொருவரும் தங்களுடைய பெயருக்குப் பின்னால் வால் மாதிரி தங்கள் ஜாதியை ஒட்ட வைத்திருப்பார்கள். அந்த வாலை வைத்து அவர்கள் என்ன ஜாதி என்பதனைக் கண்டு பிடித்து விடலாம்.
ஆனால் மகாராஷ்டிராவில் ஒரு பார்ப்பனர் கூட அம்பேத்கர் என்ற பெயரில் இல்லையே ஏன்?

மகாராஷ்டிராவில் உள்ள பார்ப்பனர்களின் பெயர்கள் சில:
1) பட்னவிஸ் (தேவேந்திர பட்னவிஸ்)
2) கட்கரி (நிதின் கட்கரி)
3) மகாஜன் (பிரமோத் மகாஜன்)
4) தேசாய் (மொரார்ஜி தேசாய்)
5) ஹெட்கேவர் ( ஆர்எஸ்எஸ் தலைவர்)
6) கோல்வால்கர் (குருஜி கோல்வால்கர்)
7) சவர்க்கர் (வீரசவர்க்கர்)
8) கோட்ஷே (நாதுராம் கோட்ஷே)
9) திலக் (பாலகங்காதர திலகர்)
10) ரானடே
11) டென்டுல்கர்
12) மங்கேஸ்கர்
13) ஜோஷி
14) குல்கர்னி
15) பபட்
16) நட்கர்னி
17) ஷர்போத்தார்
18) ஆப்தே
19) ஷர்தேசாய்
20) பட்கே
21) தேஷ்பான்டே
22) தேவ்ரஸ்
23) தாக்கரே
இவையெல்லாம் உதாரணம். இதுபோல் நூற்றுக் கணக்கான பெயர்களில் பார்ப்பனர்கள் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் அந்த நூற்றுக் கணக்கான பெயர்களில் ஒருவர் கூட அம்பேத்கர் என்ற பெயரில் இல்லை என்பது கவனிக்கத் தக்கது. அம்பேத்கர் என்பது பார்ப்பனரின் பெயர். அதனை பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் நன்றியுணர்ச்சியின் அடையாளமாக வைத்துக் கொண்டுவிட்டார். அதனால் பார்ப்பனர்கள் நல்லவர்கள் என்ற பிரச்சாரத்தினை ஆர்எஸ்எஸ் கும்பல் செய்து வருமேயானால் இந்தக் கேள்விக்கு விடையளித்து விட்டு அதற்குப் பிறகு அந்தப் பிரச்சாரத்தினைச் செய்யட்டும்.
       இவண் : பெல் ஆறுமுகம்.