Saturday 17 February 2018

அம்பேத்கர் என்பது பார்ப்பன ஆசிரியரின் பெயரா?

அம்பேத்கர் என்பது பார்ப்பனரின் பெயர். அதனை பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் நன்றியுணர்ச்சியின் அடையாளமாக வைத்துக் கொண்டுவிட்டார். அதனால் பார்ப்பனர்கள் நல்லவர்கள் என்ற பிரச்சாரத்தினை ஆர்எஸ்எஸ் கும்பல் செய்து கொண்டிருக்கிறது.

அண்ணல் அம்பேத்கரை இப்பொழுது ஆர்எஸ்எஸ் கும்பல் கபளீகரம் செய்யத் துடித்துக் கொண்டிருக்கிறது.

அதற்காக எத்தகைய பொய்யையும் அவிழ்த்து விட அவர்கள் தயாராக இருக்கிறார்கள். அண்ணல் அம்பேத்கர் வாழ்ககை வரலாற்றை தனஞ்செய் கீர் என்பவர் எழுதியிருக்கிறார். அவர் ஒரு பார்ப்பனர். அத்துடன் இந்துமகாசபா ஆதரவாளர். அவர் வீர சவர்க்கருடைய வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார். வீர சவர்க்கருக்கு ஆதரவாகவும் அந்த நூலில் பல இடங்களில் எழுதியுள்ளார். அம்பேத்கரை விமர்சனம் செய்தும் அந்த நூலில் சில இடங்கள் வரும்.
அம்பேத்கருடைய வரலாற்றில் சில விசமத்தனங்களையும் அவர் அதில் புகுத்தியுள்ளார்.
அதில் ஒன்றுதான் அம்பேத்கருடை பெயர் அவருடைய ஆசிரியர் பெயர். அதனை அம்பேத்கர் தன்னுடைய பெயராக ஏற்றுக் கொண்டார் என்று எழுதியுள்ளார்.

அதனை இப்பொழுது ஆர்எஸ்எஸ் காரர்கள் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுள்ளனர். அம்பேத்கரது
இளமைக்காலத்தில் பார்ப்பனர்கள் பல்வேறு இடையூறுகளைச் செய்து வந்துள்ளனர். இவர் ஒரு தீண்டத்தகாவர் என்பதால் இவரைத் தொட்டு அடித்தால் தீட்டாகிவிடும் என்பதால் அம்பேத்கரை அடிக்க மாட்டார்களாம். பல ஆசிரியர்கள் அம்பேத்கருக்கு பாடம் நடத்துவதையே விரும்ப மாட்டார்களாம். அம்பேத்கரும் அவரது அண்ணனும் பள்ளி செல்லுகின்றபொழுது கூடவே ஒரு கோணிப்பையையும் எடுத்துச் சென்று அதில்தான் அமர வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டனர்.
ஒரு பார்ப்பன ஆசிரியர் நீயெல்லாம் எதற்குப் படிக்க வருகிறாய்? என்று கேட்டாராம். அதற்கு அம்பேத்கர் உங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு போங்கள் என்று பதில் சொன்னாராம்.
அதுபோல் அம்பேத்கர் மெட்ரிகுலேசன் வகுப்பில் படித்தபோது மொழிப்பாடமாக சமஸ்கிருதத்தை எடுத்துப் படிக்க நினைத்தாராம். பார்ப்பன ஆசிரியர்கள் சூத்திரனான உனக்கு சமஸ்கிருதத்தை சொல்லித் தரமாட்டோம் என்று கூறி விட்டார்களாம். அதனால் தனக்கு விருப்பமில்லாத பார்சி மொழியை எடுத்துப் படித்தார் அம்பேத்கர்.

பார்ப்பனர்கள் இவ்வளவு இடையூறு செய்துள்ளார்கள் என்பதனை மக்களுக்குத் தெரியப்படுத்தினால் தாழ்த்தப்பட்ட மக்களின் ஆதரவு கிட்டாது என்பதால் இப்பொழுது அவரது பெயர்ப் பிரச்சினையை கெட்டியாகப் பிடித்துள்ளார்கள். அதாவது அம்பேத்கர் என்ற பார்ப்பன ஆசிரியர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களிடம் மிகவும் பிரியமாக இருந்ததால் அதன் நன்றி உணர்ச்சியாக அம்பேத்கர் அவர்களே தனக்கு அந்த ஆசிரியரின் பெயரை வைத்துக் கொண்டுள்ளார் என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

உண்மையில் தனஞ்செய்கீர் அவர்களது நூலிலுள்ள தகவலே அதன் புரட்டை வெளிப்படுத்துகிறது. அதாவது பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் இயற்பெயர் பீமாராவ் ராம்ஜி அம்பாவடேகர் என்பதாகும். அம்பாவடே என்பது அவரது ஊரின் பெயர். கர் என்பது அவரது தாயாரின் குடும்பப் பெயர். அந்த இரண்டையும் சேர்த்து அம்பாவடேகர் என்று பெயரை பள்ளியில் சேர்க்கும்போது பதிவு செய்துள்ளார்கள்.
பணியில் ஒழுங்கில்லாத சோம்பேறியான பார்ப்பன ஆசிரியர் அந்தப் பெயரை பள்ளி பதிவேட்டில் அம்பேத்கர் என்று எழுதிவிட்டார்.
இப்படித்தான் அண்ணல் அம்பேத்கருக்கு அந்தப் பெயர் வந்தது.

இதனை அப்படியே தலைகீழாகப் புரட்டி அம்பேத்கரே நன்றியுணர்ச்சியின் காரணமாக அம்பேத்கர் என்ற தனது ஆசிரியரின் பெயரை வைத்துக் கொண்டார் என்று எழுதி பார்ப்பன ஆசிரியர்கள் அம்பேத்கரின் கல்விக்கு செய்துவந்த இடையூறுகளை மறைக்கப் பார்க்கிறார்கள்.
அதை உண்மை என்றே வைத்துக் கொள்வோம். அமபேத்கருக்கு உதவி செய்ததாகச் சொல்லும் அந்த ஆசிரியரின் வாரிசுகள் இன்றைக்கு இருப்பார்கள் அல்லவா? அல்லது அம்பேத்கர் என்பது பார்ப்பன இனத்தவர் வைத்துக் கொள்ளுகின்ற பெயராக இருந்தால் மற்றவர் யாராவது அந்தப் பெயரில் இருப்பார்கள் அல்லவா?

தமிழகத்தில்தான் தந்தை பெரியார் இயக்கத்தின் சாதனையாக எவரும் தன்னுடைய பெயருக்குப் பின்னால் ஜாதியைப் போடுவதில்லை. ஆனால் மற்ற மாநிலங்களில் எல்லாம் ஒவ்வொருவரும் தங்களுடைய பெயருக்குப் பின்னால் வால் மாதிரி தங்கள் ஜாதியை ஒட்ட வைத்திருப்பார்கள். அந்த வாலை வைத்து அவர்கள் என்ன ஜாதி என்பதனைக் கண்டு பிடித்து விடலாம்.
ஆனால் மகாராஷ்டிராவில் ஒரு பார்ப்பனர் கூட அம்பேத்கர் என்ற பெயரில் இல்லையே ஏன்?

மகாராஷ்டிராவில் உள்ள பார்ப்பனர்களின் பெயர்கள் சில:
1) பட்னவிஸ் (தேவேந்திர பட்னவிஸ்)
2) கட்கரி (நிதின் கட்கரி)
3) மகாஜன் (பிரமோத் மகாஜன்)
4) தேசாய் (மொரார்ஜி தேசாய்)
5) ஹெட்கேவர் ( ஆர்எஸ்எஸ் தலைவர்)
6) கோல்வால்கர் (குருஜி கோல்வால்கர்)
7) சவர்க்கர் (வீரசவர்க்கர்)
8) கோட்ஷே (நாதுராம் கோட்ஷே)
9) திலக் (பாலகங்காதர திலகர்)
10) ரானடே
11) டென்டுல்கர்
12) மங்கேஸ்கர்
13) ஜோஷி
14) குல்கர்னி
15) பபட்
16) நட்கர்னி
17) ஷர்போத்தார்
18) ஆப்தே
19) ஷர்தேசாய்
20) பட்கே
21) தேஷ்பான்டே
22) தேவ்ரஸ்
23) தாக்கரே
இவையெல்லாம் உதாரணம். இதுபோல் நூற்றுக் கணக்கான பெயர்களில் பார்ப்பனர்கள் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் அந்த நூற்றுக் கணக்கான பெயர்களில் ஒருவர் கூட அம்பேத்கர் என்ற பெயரில் இல்லை என்பது கவனிக்கத் தக்கது. அம்பேத்கர் என்பது பார்ப்பனரின் பெயர். அதனை பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் நன்றியுணர்ச்சியின் அடையாளமாக வைத்துக் கொண்டுவிட்டார். அதனால் பார்ப்பனர்கள் நல்லவர்கள் என்ற பிரச்சாரத்தினை ஆர்எஸ்எஸ் கும்பல் செய்து வருமேயானால் இந்தக் கேள்விக்கு விடையளித்து விட்டு அதற்குப் பிறகு அந்தப் பிரச்சாரத்தினைச் செய்யட்டும்.
       இவண் : பெல் ஆறுமுகம்.

No comments:

Post a Comment