Monday 9 January 2023

நீட்"க்குக் காரணம் தி.மு.க.வா - பா.ஜ.க.வா?

 நீட்"க்குக் காரணம் தி.மு.க.வா - பா.ஜ.க.வா?

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

- கவிஞர் கலி.பூங்குன்றன்

துணைத் தலைவர், திராவிடர் கழகம்

நீட் தேர்வு செயல்பாட்டுக்கு வந்தது பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில்தான். காங்கிரஸ் தலைமையிலான அய்க் கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் செயல் பாட்டுக்கு வந்தது என்பது வீண் பொய்யே.

நீட் தேர்வைப்பற்றிப் பேசும் பொழுதெல்லாம் அது காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது - காங் கிரஸ் தலைமையில் அமைந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) ஆட்சியில் தி.மு.க.வும் அங்கம் வகித்தது. எனவே, நீட் கொண்டு வந்தது பிஜேபி ஆட்சியல்ல, காங்கிரஸ் தலைமையில் அமைந்த தி.மு.க. இடம்பெற்ற அந்த ஆட்சிதான் நீட் தேர்வைக் கொண்டுவந்தது என்று கீறல் விழுந்த கிராமஃபோன் பெட்டிப் பாடல் போல பாடிக் கொண்டு இருக்கிறார்கள்,

ஆனால் உண்மை நிலை என்ன? 21.12.2010இல் இந்த நுழைவுத் தேர்வைக் கொண்டு வந்தபோது திரா விட முன்னேற்றக் கழக அரசு கடுமையாக எதிர்த்து, அப்போது ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த குலாம்நபி ஆசாத்துக்குக் கடிதம் எழுதி, சென்னை உயர்நீதிமன்றத்திலும் உடனடியாக வழக் குத் தொடர்ந்து நீட் தேர்வுக்குத் தடை பெற்று, தமிழ் நாட்டில் நீட் தேர்வை நுழைய விடாமல் தடுத்தவர் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர்.

அன்றைக்கு, தி.மு.க. அரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுத்த வழக்குதான் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, நீட் தேர்வு செல்லாது என்று 18.7.2013 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மாநிலத்தில் தி.மு.க. ஆட்சி இருந்த வரையிலும், ஒன்றியத்தில் தி.மு.க. பங்கேற்றிருந்த அய்க்கிய முற் போக்குக் கூட்டணி அரசு ஆட்சியிலிருந்த வரையி லும், மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு தமிழ் நாட்டிற்குள் நுழைய விடவில்லை. ஆனால், ஒன்றியத் தில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க.வும், மாநிலத்தில் ஆட்சி யிலிருந்த அ.தி.மு.க.வும் கூட்டணி அமைத்துக் கொண்டு இட ஒதுக்கீட்டுக் கொள்கையை வேரறுக் கவும், மாநில உரிமைகளில் சமாதானம் செய்து கொள் ளவும், கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களின் மருத்துவர் ஆகும் கனவை தகர்க்கவும் இந்த நீட் நுழைவுத் தேர்வை வலுக்கட்டாயமாக மாணவர்கள் மீது நுழைத்தன.

18.7.2013 இல் வழங்கப்பட்டhristian Medical College Vellore & Ors Vs. Union of India & Ors. ((2014) 2 SCC 305)  வழக்கின் தீர்ப்பை எதிர்த்து இந்திய மருத்துவக் கவுன்சில் உள்ளிட்ட சிலர் மறு ஆய்வு (Review Petitions) மனு தாக்கல் செய் கின்றனர். அந்த வழக்கில் 2013 முதல் வழக்கின் தரப்பினர்களுக்கு அறிவிப்பு (Court Notice) அனுப்ப சார்பு செய்யப்படாமல் நிலுவையில் இருந்து வந்த நிலையில், நீதிபதிகள் திரு. அல்டாமஸ் கபீர் மற்றும் திரு. விக்ரமஜீத் சென் ஆகிய இருவரும் ஓய்வு பெற்றுவிட்டனர்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட இந்திய மருத்துவக் கவுன்சில் திறமையாகக் காய்களை நகர்த்தி யது. மறு ஆய்வு மனுவை இதனை ஒத்த வேறு ஒரு Civil Appeal No.4060/2009 என்ற வழக்குடன் சேர்த்து விசாரிக்க வேண்டி 21.1.2016 அன்று 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு விசாரணை மாற்றப்படுகிறது. அந்த அமர்வுக்குத் தலைவர் மேற்படி Christian Medical College Vellore & Ors Vs. Union of India & Ors. ((2014) 2 SCC 305) வழக்கில் மாறுபட்ட தீர்ப்பளித்த அதே நீதிபதி திரு. அனில்தவே அவர்களேதான் - மற்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஆர்.கே. அகர்வால், ஆதர்ஸ் குமார் கோயல், ஆர்.பானுமதி ஆகியோர் கொண்ட இந்த அமர்வுதான் நீட்டுக்குப் பச்சை கொடி காட்டியது.

ஒன்றியத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்தபோது, நீட் செல்லாது, மருத்துவக் கவுன்சிலுக்குத் தேர்வு நடத்தும் அதிகாரம் கிடையாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது. அதன் பிறகு பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில்தான் வேக வேகமாக நீட்டைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மருத்துவக் கவுன்சிலின் ஒத்துழைப்போடு நடந்தன என்பதுதான் உண்மை.

'நீட்'டுக்குக் தி.மு.க. அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சிதான் காரணம் என்பது பச்சைப் பொய்யே யாகும்.

இதில் வேடிக்கை என்னவென்றால் நரேந்திர தாமோதரதாஸ் மோடி குஜராத் முதல் அமைச்சராக இருந்த போது நீட்டை எதிர்த்தவர் என்பதுதான்!