Saturday, 31 May 2025

காலக்கணக்கின் அளவை மாற்ற வேண்டுமா?– செ.ர.பார்த்தசாரதி



காலக்கணக்கின் அளவை மாற்ற வேண்டுமா?– செ.ர.பார்த்தசாரதி

விடுதலை ஞாயிறு மலர்

காலக்கணக்கை, அதாவது உலகம் தோன்றியது, ஞாயிறு (சூரிய) மண்டலம் தோன்றியது, போன்றவற்றின் கணக்கை, புவியின் சுற்றுக்கணக்கை அடிப்படையாக வைத்து கணிக்கிறார்கள். ‘புவியே தோன்றியிராத காலத்தில் நடந்தவற்றை எப்படி பூமியின் சுற்றுக்கணக்கைக் கொண்டு கணிக்க முடியும்?’’. ஆகையால் கணிப்பதில் மாற்றம் வேண்டும்’ என்று சிலர் கூறிவருகிறார்கள்.

எதை கணிப்பதாக இருந்தாலும் ஒரு எல்லை, ஒரு தொடக்கம், ஒரு முடிவு அல்லது ஒரு பொருள் தேவை. எடையை கணிக்க ‘நீர்’ அடிப்படையாக வைக்கப்பட்டுள்ளது.

நீரின் ‘லிட்டர்’ அளவும், ‘கிலோ’ அளவும் ஒன்று தான். 1 ஒரு லிட்டர் அளவுள்ள நீர், ஒரு கிலோ எடை இருக்கும். இதை அடிப்படையாக வைத்து;  மற்ற பொருள்களின் எடையை, அதாவது அடர்த்தியை வைத்து கணிக்கிறார்கள்.

வெப்ப நிலையை கணிக்க, செல்சியஸ் அளவு பயன்படுத்தப்படுகிறது. பனிக்கட்டியின் உருக தொடங்கும் நிலையை அடிப்படையாக வைத்து, அதிலிருந்து வெப்பநிலையை கணிக்கிறார்கள். அதாவது பனிக்கட்டி உருகத்தொடங்கும் வெப்பநிலை சுழியம் டிகிரி செல்சியஸ் (0°c) ஆகும். நீள, அகலங்களை அளக்க சாண், அடி, முழம் என மனித உறுப்புகளை மய்யமாக வைத்து அளக்கப்பட்டது. கணக்கு போட எண்களை அமைக்க மனிதனின் கைகளில் உள்ள பத்து விரல்களை மய்யமாக வைத்து கணிக்கப்பட்டது. இதற்கு ‘10 அடி மானம்’ என்று பெயர். கணினி ஆன் / ஆப் (இயங்கு நிலை / இயங்கா நிலை) என்ற முறையில் இயங்குவதால், இரண்டடி மானத்தில் இயங்குகிறது.

ஆண்டு கணக்கு பொதுவாக தற்போது கிறிஸ்து பிறப்பை (கிறிஸ்து வாழ்ந்தாரா? இல்லையா? என்பது வேறு செய்தி) மய்யமாக வைத்து கி.மு./ கி.பி. என்ற முறையில் கணக்கிடப்படுகிறது.

தமிழர்களின் ஆண்டு ‘சுறவம்’ (தை) மாதத்தில் முதல் நாள் தொடங்குகிறது. அதாவது சூரியன் தென் திசை பக்கமாக இருந்து வடதிசை பக்கமாக செல்லும் நிலையை மய்யமாக வைத்து ஆண்டு தொடங்குகிறது.

அப்போது ஆடு போன்ற ஒத்த வடிவம் உடைய விண்மீன் கூட்டம், வானில் தெரிய தொடங்குவதால் யாரு – ஆடு – ஆண்டு என்ற பெயரும் வந்தது. இந்த குறிகளை மய்யமாக வைத்து, தமிழ் ஆண்டு கணிக்கப்பட்டது.

இயந்திரங்களில், மோட்டார் இயங்கு திறனை, குதிரையின் இழு திறனை மய்யமாக வைத்து, ஒரு குதிரை திறன்; இரு குதிரை திறன்  (Horsepower) என்று கணிக்கப்பட்டது. இதே போல் பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். தற்போது இந்த அளவுகள் சிலவற்றில் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. வெப்பநிலையை கணிக்க செல்சியஸுக்கு (°c)  பதிலாக, பாரன் ஈட் (°F) முறை பயன்படுத்தப்படுகிறது. அடிக்கு பதிலாக மீட்டர். லிட்டருக்கு பதிலாக கிலோ. ஏ.எம்./ பி. எம். முறைக்கு பதிலாக கிரீன் விச் நேரம் ( GMT ). மயில் என்பதற்கு பதிலாக கிலோமீட்டர். குதிரை திறனுக்கு(HP) பதிலாக கிலோ வாட்சு (KW) என்று பலவற்றை குறிப்பிடலாம். கி.மு./ கி.பி. என்பதற்கு பதிலாக பொ.மு./ பொ.பி. என மாற்றப்பட்டுவிட்டது.

ஆனால் இந்த மாறுதல் அனைத்துமே நமது பயன்பாட்டு முறைக்கு எளிதாகவும், ஏற்றால் போல் இருப்பதற்காகவும், மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

செல்சியசில் வெப்பநிலையை கணக்கிட்டாலும், பாரன் ஈட்டில் வெப்பநிலையை கணக்கிட்டாலும், வெப்பநிலையில் எந்த மாற்றமும் இருக்காது; ஒரே விடை தான் வரும். அளக்கும் முறையில் தான் வேறுபாடு, கிறிஸ்தவர்கள் கணித்துள்ள கி.மு. / கி.பி. ஆண்டு கணக்குப்படி (கிரிகோரியன் ஆண்டு) தந்தை பெரியார் பிறந்தது கி.பி. 1879 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் ஆகும். தமிழ் ஆண்டான திருவள்ளுவர் ஆண்டு கணக்குப்படி, தந்தை பெரியார் பிறந்தது தி.பி 1910, புரட்டாசி மாதம். இறந்தது கி.பி. 1973 டிசம்பர், தி.பி. 2004 மார்கழி என்று வரும்.

கிரிகோரியன் ஆண்டு படி கணக்கிட்டாலும் திருவள்ளுவர் ஆண்டு படி கணக்கிட்டாலும் தந்தை பெரியார் வாழ்ந்த ஆண்டுகள் 95 என்று தான் வரும். புத்தர், திருவள்ளுவருக்கு முன்னால் பிறந்திருந்தாலும்; திருவள்ளுவர் ஆண்டின்படி, புத்தர் எத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்தார் என்பதை கண்டுபிடித்து விடலாம்.

அதே போல் தான், புவியின் சுழற்சியை கொண்டு, ஞாயிற்று (சூரிய) குடும்பத்தின் வயதை  கணக்கிடும் முறையும் ஆகும். அதாவது ‘ஒளி ஆண்டு’ என்கின்ற அளவை வைத்து கணக்கிடுகின்றனர். புவி  ஞாயிற்றை ({சூரியன்) சுற்றி வரும் காலம், ஓர் ஆண்டு ஆகும். இந்த ஓர் ஆண்டில், ஒளி எவ்வளவு தொலைவு பயணிக்கிறதோ, அது ஓர் ‘ஒளி ஆண்டு தொலைவு’ ஆகும். இந்த பயணத் தொலைவு ஏறக்குறைய 9.46 டிரில்லியன் கிலோமீட்டர் (5.88 டிரில்லியன் மைல்) ஆகும்.

புவியின் சுழற்சி வேகம் மாறுபட்டால் ஒழிய, கணக்கில் பிசகு வராது. அப்பொழுதும் கணக்கில் மாற்றம் செய்து கணக்கை சரிப்படுத்தி விடலாம்.

காலத்தையும் அளவையும் நமக்காகத்தான் பயன்படுத்துகிறோம்! வேற்றுக் கோளில் உள்ளவர்களுக்குமா பயன்படுத்துகிறோம்! அப்படியே பார்த்தாலும் ஈடுகட்டிவிடலாம்,

நிலவின் ஈர்ப்பு விசை, புவியின் ஈர்ப்பு விசையை விட 6 மடங்கு குறைவு. ஒரு மனிதனின் எடை புவியில் 60 கிலோகிராம் என்றால், நிலவில் அவரின் எடை 60/6 = 10 கிலோகிராம் இருக்கும்.

இந்த வகையில் அனைத்தையும் கணித்து விடலாம். இருக்கும் அளவுகளே போதுமானவை தான்.


Saturday, 24 May 2025

பத்திர பதிவு அலுவலகம் செல்ல தேவை இல்லை திருமணங்களை இணையதளத்தில் பதிவு செய்யலாம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

 Published January 2, 2025, விடுதலை நாளேடு

சென்னை, ஜன.2 தமிழ்நாட்டில், பத்திரப்பதிவு அலுவலகங்களில் திருமணங்களை பதிவு செய்யும் நடைமுறை உள்ளது. அதற்காக தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டம் 2009-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் நடைபெறும் திருமணங்களை பதிவு செய்து கொள்ளலாம். இந்த சட்டம் கொண்டுவரப்பட்ட போது, திருமணம் நடைபெறும் பகுதியில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமே திருமணத்தை பதிவு செய்ய முடியும்.

பதிவு திருமணம்

பின்னர் 2020-ஆம் ஆண்டு இந்த சட்டத்தில் தமிழ்நாடு அரசு திருத்தம் ஒன்று கொண்டு வந்தது. அதன்படி மணமகன் அல்லது மணமகள் வசிக்கும் பகுதியில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் கூட திருமணங்களை பதிவு செய்யலாம்.
இந்த திருத்தம் வந்தபிறகு கூட தமிழ்நாட்டில் சொற்ப அளவிலான திருமணங்கள் மட்டுமே பதிவு செய்யப்படுகிறது. வீடுகள், திருமண மண்டபங்கள் மற்றும் கோவில்களில் நடக்கும் திருமணங்களை பத்திரப்பதிவு அலுவலகங்களில் அதற்கான ஆவணங்களை கொடுத்து பதிவு செய்யலாம். ஆனால் கடவுச்சீட்டு பெறும் இணையர் மற்றும் காதல் திருமணங்கள் செய்பவர்கள் மட்டுமே பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்து வருகின்றனர். மற்றவர்கள் பதிவு செய்வதில்லை.

இது குறித்து தமிழ்நாடு அரசு ஆய்வு செய்ததில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் சான்றிதழ் பெறுவதில் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்திப்பது தெரியவந்தது. குறிப்பாக அரசு திருமண பதிவுக்கு கட்டணமாக ரூ.100-ம் மற்றும் கம்ப்யூட்டர் கட் டணமாக ரூ.100-ம் என மொத்தமே ரூ.200 தான் செலுத்த வேண்டும்.

ஆனால் பொதுமக்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் வரை லஞ்சமாக வசூலிப்பதாக தெரியவந்துள்ளது.

இணையதளத்தில் பதிவு

எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு அரசு பொதுமக்களே நேரடியாக இணையத்தில் திருமண பதிவுகளை பதிவு செய்யும் நடைமுறையை கொண்டு வர உள்ளது. அதன்படி இணையர் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு நேரடியாக வரத்தேவையில்லை. அவர்கள் பத்திர எழுத்தர்கள் மூலமாக அல்லாமல் தாங்களே நேரடியாக வீட்டில் இருந்து பதிவு செய்யலாம். கட்டணத்தையும் அதில் செலுத்தி விடலாம்.

திருமணத்திற்கான ஆவணங்கள் சரியாக இருக்கும்பட்சத்தில் உடனடி சான்றிதழ் வழங்கப்படும். இந்த திட்டம் முதலில் தமிழ்நாடு திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்பவர்களுக்கு பொருந்தும்.பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்யப்படும் சிறப்பு திருமணங்கள் போன்றவற்றில் ஏற்ெகனவே உள்ள நடைமுறைகள் இருக்கும்.
இந்த இணையவழி திருமணப் பதிவு மூலம் மூலம் மோசடி திரும ணங்கள் முற்றிலும் தடுக்கப்படும். உச்சநீதிமன்ற விதிமுறைப்படியும் முறையாக திருமணங்கள் பதிவு செய்யப்படும்.

தற்போது பத்திரப் பதிவுத் துறையில் ஸ்டார்-2 மென்பொருள் மூலம் பதிவு நடக்கிறது. எனவே அதன் மேம்படுத்தப்பட்ட ஸ்டார்-3 நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. இந்த மென்பொருளில் தான் திருமணப் பதிவுகளை பொது மக்களே மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இவை செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Saturday, 10 May 2025

வால்மீகி இராமாயணத்தில் சொல்லப்படாத இராமேஸ்வரம் - செ.ர.பார்த்தசாரதி

புத்த இராமாயணம், ஜைன இராமாயணம், தாய்லாந்து இராமாயணம் (ராம்கியான்) முதல் பல இராமாயணங்கள் நாட்டில் வழங்கப்பட்டு வந்தாலும் வடமொழியில் எழுதப்பட்ட ‘வால்மீகி இராமாயணம்’ தான் முதல் இராமாயணமாக கருதப்பட்டு வருகிறது.

நம் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேஸ்வரம் என்ற நிலப்பரப்பு, சுற்றிலும் கடல் சூழ்ந்து உள்ளது. இந்தப் பகுதியில் ‘இராமநாதசுவாமி கோயில்’ என்று ஒன்று பிரபலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கோயில் 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கட்டடக்கலையை வைத்து கூறப்படுகிறது.

இலங்கையில் இருந்த இராவணனை இராமன் கொன்றுவிட்டு, ‘புஷ்பக விமானம்’ மூலம் அயோத்தி திரும்பும் வழியில், இராமேஸ்வரத்தில் இறங்கி, இராவணனை கொன்ற ‘பிரம்மஹத்தி தோஷம்’ நீங்குவதற்காக, இராமன் சிவலிங்கத்தை வைத்து பூஜை செய்ததாகவும்; அதுவே பிறகு இராமநாதசுவாமி கோயில் ஆகி விட்டதாகவும் கூறப்படுகிறது.


‘பிரம்மஹத்தி தோஷம்’ என்றால் என்ன?

பிராமணர்கள் எனப்படும் பார்ப்பனர்கள் பிரம்மாவின் தலை பகுதியில் இருந்து தோன்றியவர்களாம்!

மற்றவர்கள் பிரம்மாவின் மற்ற பகுதிகளில் இருந்து தோன்றியவர்களாம்!

பார்ப்பனர்கள் மட்டுமே அனைத்து உரிமைகளும், தகுதியும் பெற்றவர்களாகவும்

மற்றவர்கள் விலங்குகளை போன்றவர்களாகவும் வேதங்கள் சித்தரிக்கின்றன.

ஆகையால் சூத்திரர்களைக் கொன்றால் எந்த பாவமும் கிடையாது. அதாவது ஒரு உயிரை கொன்றதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால் பார்ப்பானை கொன்றால் உயிரைக் கொன்றதாக ஆகிவிடும். அதனால் கொன்றவருக்கு ‘பிரம்மஹத்தி தோஷம்’ என்ற பாவம் சூழ்ந்து விடும்.

இந்த பிரம்மஹத்தி தோஷம் பிடித்தவர்களை ‘பிரம்ம ராட்சஷ பிசாசு’ என்ற பிசாசு பின் தொடர்ந்து தொல்லைகளை கொடுத்து வரும். இந்த தோஷம் நீங்க வேண்டுமானால் அதற்கான நிவர்த்தி பூஜை செய்ய வேண்டும்.

இந்தப்படி தான் (புராணப்படி) பிராமணனான இராவணனை இராமன் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை நீக்குவதற்காக இராமேஸ்வரத்தில் சிவலிங்கத்தை உண்டாக்கி அதற்கு பூஜை செய்ததாக சொல்லப்படுகிறது.

பல மதங்கள் தோன்றி பிறகு 6 மதங்களாக நிலைத்தன. (சைவம், வைணவம், சாக்தம், கவுமாரம், சவுரம், காணாபத்தியம்)

இந்த ஆறு மதங்களும் தங்கள் தங்கள் மதங்களுக்கு ஒருவரை முழுமுதற் கடவுளாக பரிந்துரைக்கின்றன. அதாவது பரப்பிரம்மம்(மகாதேவ்).

இதில் சைவமும் வைணவமும் தங்கள் மதம் தான் உயர்ந்தது என

இன்று வரை போட்டி போட்டுக் கொண்டுள்ளன.

சைவ புராணங்களில் வைணவத்தை இகழ்ந்தும்; வைணவ புராணங்களில் சைவத்தை இகழ்ந்தும் எழுதப்பட்டுள்ளன.

‘சிவன் தான் முழு முதற்கடவுள். இராமனே சிவனை வழங்கினான்’. என பரப்புவதற்காக தான் இந்த இராமேஸ்வர இராமநாதசுவாமி கோயில் கதை ஆகும்.

வால்மீகி இராமாயணத்தில் எந்த இடத்திலும் ‘இராமேஸ்வரத்தை பற்றியோ! ‘இராமன் சிவலிங்கத்தை வணங்கினான்’ என்பதை பற்றியோ குறிப்பு கிடையாது.

இராமன் ‘மகேந்திர கிரி’ (மகேந்திர பர்வதம்) மலையின் மேலிருந்து, மலையின் அடிவாரத்தை கடலின் அலைகள் தொட்டுக் கொண்டிருப்பதை பார்த்ததாகவும். பிறகு அடிவாரத்திற்கு வந்து, பாலத்தைக் கட்டி இலங்கை சென்றதாகவும் வால்மீகி இராமாயணம் கூறுகிறது.

இராமேஸ்வரத்தில் எந்த மலையும் கிடையாது. இராமேஸ்வரத்தில் மட்டுமல்ல இராமநாதபுரம் மாவட்டத்திலேயே எந்த மலைகளும் கிடையாது. இந்த ‘மகேந்திர கிரி’ என்ற மலை, ஒடிசாவில் உள்ளது.

ஒடிசாவை பற்றி கூறிய கதையை தமிழ்நாட்டில் நடந்ததாக கூறுவதே ஒரு பெரிய புரட்டாகும்.

இராவணனை கொன்றுவிட்டு இலங்கையிலிருந்து ‘புஷ்பக விமானம்’ மூலம் ‘அயோத்தி’ திரும்பிய போது, நடந்த நிகழ்வுகளின் இடங்களை சீதைக்கு காட்டிக் கொண்டே வருவதாக வால்மீகி இராமாயணத்தில் கூறப்படுகிறது. இடையில் இராமேஸ்வரத்தில் இறங்குவதாக வால்மீகி இராமாயணத்தில் கூறப்படவே இல்லை.

காளிதாசர் இயற்றிய ‘இரகு வம்சம்’ என்ற காவியத்திலும் ‘இலங்கையில் இருந்து அயோத்தி நோக்கி இராமரை சுமந்து கொண்டு புறப்பட்ட புஷ்பக விமானம், இடையில் எங்கும் இறங்காமல் அயோத்தியில் தான் இறங்கியது.’ என்று கூறப்பட்டுள்ளது.

(ரகுவம்ச மஹா காவ்யம்,13ஆவது சர்க்கம்)

வால்மீகி இராமாயணத்தில் கூறப்படாத ஒரு நிகழ்வை, ‘மகாவிஷ்ணுவிற்கே ஈஸ்வரன் தான் கடவுள்’ என்று சொல்வதற்காக சைவர்கள், பிற்காலத்தில் சில புராணங்களை இயற்றி அதில் இராமாயணத்தை புகுத்தி சில திருத்தங்களை செய்து விட்டார்கள்.

சிவமகா புராணம், பத்ம புராணம், பிரம்மாண்ட புராணம், கந்தபுராணம் என்கின்ற சிவனை புகழும் புராணங்களில் இந்த புகுத்தல் வேலை நடைபெற்றுள்ளது.

பத்ம புராணத்தில் ‘பூர்வ கல்ப இராமாயணம்’ என்ற பெயரிலும், பிரம்மாண்ட புராணத்தில் ‘அத்தியாத்ம இராமாயணம்’ என்ற பெயரிலும் இராமாயணங்கள் உள்ளன.

இந்தப் ‘பூர்வ கல்ப இராமாயணத்’தில்

இலங்கையில் இருந்து அயோத்தி திரும்பும் வழியில், இராமேஸ்வரத்தில் இராமன் இறங்கி, இராவணனை கொன்ற பிரம்மஹத்தி தோஷத்தை நீக்குவதற்காக, சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டதாக கூறப்படுகிறது.

(பத்ம புராணம், பூர்வ கல்ப இராமாயணம், பக்கம்-424, தாமரை நூலகம் வெளியீடு)

ஆனால் அதே ‘பத்ம புராணத்தில்’

‘மனிதர்கள் மோட்சம் அடைவதற்கான வழிகள்’ என்று விரதங்களையும் யாகங்களையும் பற்றி கூறும் போது, ‘பிராமணனை கொல்ல நேர்ந்ததைப் பற்றி சிறீ ராமபிரான் வருத்தம் அடைதல்’ என்ற தலைப்பில் (பக்கம்-364) ‘இராமன் பிராமணனான இராவணனை கொன்றதால் ஏற்பட்ட பாவத்தை போக்க என்ன வழி’ என்று அகத்தியரை கேட்டதாகவும்; அகத்தியர், ‘அஸ்வமேத யாகம் நடத்தினால் பாவம் போகும்’ என்று கூறியதாகவும்; அதன்படி அஸ்வமேத யாகத்தை இராமன் நடத்தியதாகவும்’ உள்ளது.

ஒரு இடத்தில் இராவணனை கொன்ற பாவம் தீர, இராமேஸ்வரம் கடற்கரையில் சிவலிங்கத்தை நிறுவி சிவ வழிபாடு செய்ததாகவும், அதே புராணத்தில் இன்னொரு இடத்தில் ‘அஸ்வமேத யாகம்’ நடத்தி, இராவணனை கொன்ற பாவத்தை போக்கிக் கொண்டதாகவும், முன்னுக்குப் பின் முரணாக சொல்லப்படுகிறது.

‘அத்தியாத்ம இராமாயணத்’தில் இராமேஸ்வரத்தின் கடற்கரையில் சிவலிங்கத்தை வழிபட்டுவிட்டு தான், இலங்கைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

(அத்தியாத்ம இராமாயணம், நான்காவது சர்கம், பக்கம்-467, தாமரை நூலகம் வெளியீடு)

அதேபோல் இலங்கையிலிருந்து புஷ்பக விமானத்தில் புறப்பட்டு அயோத்தி செல்லும் வழியில் சீதைக்கு, தான் நிறுவிய சிவலிங்கத்தை காட்டிச் சென்றதாக, கூறப்பட்டுள்ளது.

சிவமஹா புராணத்தில், ‘சிறீ ராமர் பெற்ற வரமும் இராமேஸ்வரம் மகிமையும்’ என்ற தலைப்பிலான பகுதியில், தெற்கு கடற்கரை(இராமேஸ்வரம்)யில் சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டு, சிவனிடமிருந்து, வலிமையானவனான இராவணனை கொல்ல வரம் பெற்றுக் கொண்டு இலங்கைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

(சிறீ சிவமஹா புராணம், முதற் பாகம், பக்கம் -248, பிரேமா பிரசுரம் வெளியீடு)

கந்தபுராணத்தில் பார்வதி நாதரை பூஜித்து பாசுபதாஸ்திரத்தை வரமாக பெற்றுக்கொண்டு இலங்கை சென்றதாக கூறப்பட்டுள்ளது.

(சிறீ கந்தபுராணம், இரண்டாம் பாகம், உபதேச காண்டம் பக்கம்- 454, பிரேமா பிரசுரம்)

இராமன் (மகாவிஷ்ணு) கடவுள் அல்ல, சிவன் தான் கடவுள் என்று நிறுவுவதற்காக சைவர்களால் உண்டாக்கப்பட்டது தான். இராமேஸ்வர இராமநாதசாமி கோயில் கதையும், அதற்கு ஆதாரமாக புனையப்பட்டதே பத்ம புராணமும், பிரம்ம புராணமும், சிவமகா புராணமும் ஆகும்.

இது ஒரு புறம் இருக்க பராசக்தியை முழு முதல் கடவுளாக (மகாதேவ்) கூறும் ‘சாக்த மதத்’தின் புராணமான ‘தேவி பாகவதம்’ என்ற புராணத்தில் ‘மகாவிஷ்ணுவே (இராமர்) பராசக்தியை வழங்கினார்’ என்று சொல்வதற்காக இராமர் கிருஷ்கிந்தையில் துக்கப்பட்டு கொண்டிருந்தபோது, நாரதர் பராசக்தியை வணங்கி ‘நவராத்திரி விரதம்’ இருக்க கூறுகிறார். அதன்படி நவராத்திரி விரதம் மேற்கொண்டு, பராசக்தி இடம் இருந்து, போருக்கு உடந்தையாக இருக்க ‘சக்தியம்சத்’தை வரமாக பெற்றதாக’ கூறப்படுகிறது.


Published May 10, 2025, விடுதலை ஞாயிறு மலர்

- எனது கட்டுரை