முதலைக் கண்ணீர் வடிப்பதேன்?
'முதலைக் கண்ணீர் வடிக்காதே!' என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். வஞ்சக செயல் செய்துவிட்டு அதற்கு வருந்துவது போல் நடித்தால் இப்படி சொல்லு வார்கள்.
தற்போதைய 'இந்தியா டுடே (மே இதழ்) தமிழ் பதிப்பில் கூட 'வெட்டுத் தீர்மானம்' குறித்து கருத்துத் தெரிவிக்கும் போது ‘முதலைக் கண்ணீர்’ என்று தலைப்பிட்டுள்ளது.
முதலை ஏதாவது உயிரினத்தைக் கொன்று தின்று விட்டால்; 'வருத்தப்பட்டு, கண்ணீர் வடிக்கும்’ என்று ஒரு நம்பிக்கை நிலவி வருகிறது.
இது உண்மையாக இருக்குமா? ஒருபோதும் இருக்காது! காரணம் முதலை மனிதனைப் போல் சிந்திக்கும் திறனில் மேலோங்கியது கிடையாது. அதற்கு உணவே உயிரி உயிரினங்கள் தான். முதலை நீரிலும், நிலத்திலும் வாழக்கூடியது; உயிரைக் கொல்லுவதில் வருத்தப்படுவதாக விருந்தால் நிலத்தில் உள்ள தாவரங்களை ஒடித்து உண்ண வேண்டியது தானே!
பின் எதற்குத்தான் முதலை கண்ணீர் வடிக்கிறது?
நிலத்திலுள்ள மனிதன் உட்கொள்ளும் உப்பின் அளவு ஓரளவு குறைவானது. அந்த உப்புக்களை சிறுநீரகம் வடிகட்டி வெளியேற்றி விடுகிறது. ஆனால், கடலில் வசிக்கும் உயிரினங்களின் சிறுநீரகமோ வளர்ச்சி குன்றியது: இதனால் அவைகளின் உடலில் இருந்து உப்பை வெளியேற்ற முடியாது. அதோடு மட்டுமல்லாமல், கடல்நீரில் உப்பின் அளவு அதிகம். உப்பு உடலில் அதிகமாக சேர்ந்தால் உயிருக்கே ஆபத்து. ஆகையால் உடலில் சேரும் உப்புக்களை வெளியேற்ற உடலில் தனியே ஒரு அமைப்பு கடல்வாழ் உயிரினங்களில் உள்ளது.
மீனுக்கு 'செதில்' பகுதி உப்பை வடித்து வெளியேற்றுகிறது. சில கடல் வாழ் பறவைகளுக்கு மூக்கினுள் இப்பகுதி அமைந்துள்ளது.
''ஆமை', 'முதலை' போன்ற கடல் வாழ் ஊர்வன வற்றின் கண்களின் ஓரத்தில் இச்சுரப்பி அமைந்துள்ளது.
முதலை தான் உண்ட உணவிலும், நீரிலும் உள்ள தேவைக்கு அதிகமான உப்பைக் கண்களின் ஓரத்தில் உள்ள உப்பு சுரப்பியின் மூலம் நீருடன் கலந்து துளித் துளியாக வெளியேற்றுகிறது.
இதை அறியாததால் தான் 'வருத்தப்பட்டு முதலை கண்ணீர் வடிப்பதாக' கூறுகிறார்கள்.
இதேபோல், பச்சை ஆமை யை பற்றியும் ஒரு கதை உண்டு.

பச்சை ஆமைகள் கடலிலேயே உயிர் வாழ்பவை. சில குறிப்பிட்ட காலத்தில் நிலத்திற்கு வந்து (கரையில்) மணலைத் தோண்டி முட்டையிட்டு மூடிவிட்டு மீண்டும் கடலுக்குள் சென்று விடுகின்றன.
அப்படி செல்லும்போது மணலின் மீது கண்ணீரை விட்டு விட்டுச் செல்கின்றன.
இவை உறைந்து உப்பு உப்பாக இருக்கும். இதைப் பார்க்கும் மக்கள் ஆமை முட்டையை விட்டு விட்டுச் செல்வதால் அழுவதாக நம்புகிறார்கள்.
உண்மை அதுவல்ல; ஆமைக்கும் கண்ணின் ஓரத்தில் உப்பு நீர் சுரப்பி இருக்கிறது. அதன்மூலம் எப்போதும் உப்பு நீரை வெளியேற்றிக் கொண்டேயிருக்கும். கடலில் இருக்கும் போது நமக்கு இது தெரிய வாய்ப்பில்லை; நிலத்தில் வரும்போது இதைப் பார்ப்பதால் கண்ணீர் வடிப்பதாக நினைக்கத் தோன்றுகிறது.
உண்மை ஆராயப்படும் போது தான் தெரிகிறது!
- செ.ர.பார்த்தசாரதி சென்னை-34
- விடுதலை ஞாயிறு மலர், பக்கம்-9, 25.6.1995


No comments:
Post a Comment