Thursday, 9 March 2023

‘சூத்திரன் ஏவலாளி மட்டுமே!' சிபிஎஸ்இ 6 ஆம் வகுப்பு பாடத்திட்டம் சொல்கிறது இதுதான் ஒன்றிய அரசின் புதியகல்விக் கொள்கையின் லட்சணம்


சிபிஎஸ்இ 6 ஆம் வகுப்பு வரலாறு - சமூக அறிவியல் பாடத்தில் வர்ணாஸ்ரமம் குறித்த பாடம் சூத்திரர்கள் ஏவலாளிகள் மட்டுமே, அவர்களுக்கு கல்விகற்க (வேதங்கள்) அனுமதியில்லை என்றும். வர்ணாஸ்ர மத்திற்குள் வராதவர்கள் ஊருக்கு வெளியே வசித்து மலம் அள்ளவும், செத்த மாடுகளை எடுப்பதுமே அவர்கள் பணி என்று கூறப்பட்டு, மேலும் இவர்கள் தூய்மையில்லாதவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்

தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆண்டிமுத்து இராசா  எம்.பி., அவர்கள் மனுதர்மத்தினை தோலுரித்துக் காட்டியதும், ஒட்டுமொத்த பார்ப்பனர்களும், அவர்களுக்கு ஒத்து ஊதும் சர்சூத்திரர்களும் பொங்கிக் கொண்டு எழுகின்றனர். இந்த விவகாரத்தை எப்படி திசைதிருப்பலாம் என்று பலவழிகளைத் தேடிக்கொண்டு இருக்கின்றனர். 

பா.ஜ.க.வின் தமிழ்நாடு பார்ப்பனப் பிரமுகர்கள், ‘‘மனுவில் எழுதப்பட்டுள்ளது. எல்லாம் ஏதோ ஒரு காலத்தில் உள்ள நடைமுறைகள் இப்பொழுது எல்லாம் அவை இல்லை. திராவிட அமைப்புகள் தான் ஹிந்துக்களின் மீதான வெறுப்பிலும், ஆபிரகாமிய மதங்களிடம் வாங்கிய பணத்திற்கும் ஹிந்து மதத்தை இழிவுபடுத்த அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்துகின்றனர். 

இப்போது எல்லாம்  சரி சமமாகப் பார்க்கத் துவங்கி விட்டோம். ‘‘ஹிந்து மதம் என்பது சாத்வீகம், சாந்தம், அன்பு, சகிப்புத்தன்மை, வாழ்வியல் பயிற்சி'' என்று எல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கின்றனர்.  ஆனால், இவர்கள் இப்படி முட்டுக்கொடுத்துக் கொண்டு இருக்கும் போதே ஒன்றிய அரசு பாடத் திட்டத்தில் வரும் ஒரு பாடம்.   அதில் வர்ணாஸ்ரமம் குறித்து தெளிவாக படத்தோடு குறிப்பிட்டுள்ளனர்.  

முதலாம் இடத்தில் பார்ப்பனர்கள், படத்திலேயே நன்றாக தெரிகிறது - அனைத்து வசதிகளோடு குதுகலமாக இருப்பதுபோல் குறிப்பிட்டுள்ளனர். அதற்கு அடுத்து சத்திரியர்கள், பிறகு வைசியர்கள் - இன்று உள்ள மார்வாடி களை மனதில் வைத்துப் படம் போட்டுள்ளனர். 

ஆனால், சூத்திரர்களுக்கு கோவணம் மட்டுமே, வறண்ட தேகத்தோடு படம் வரைந்துள்ளனர். நல்ல வேளை கோவணம் கொஞ்சம் நீளமாகக் கொடுத்துள்ளனர்.    இதில் பெண்கள் படம் இல்லை, பெண்கள் பார்ப்பன குலத்தில் பிறந்திருந்தாலும் சூத்திரனுக்கும் கீழேதான்.   ஆனால், பஞ்சமனுக்கும் மேலே! சூத்திரனுக்காவது வேதங் களை கற்கத்தான் அனுமதியில்லையாம்.  பஞ்சமர்களை மனிதனாய்க் கருதவே இடமில்லையாம்.  காரணம், அவர்கள் அழுக்காக இருப்பார்களாம்! மாணவர்களுக்கு வரலாற்றை உள்ளபடி சொல்வதில் ஏதும் ஆட்சேபனை இல்லை. இன்று சத்திரியர், சூத்திரர், பஞ்சமர் என்று எவருமில்லை என்று அரசு குறிப்பே சொல்கிறது.

 பொருத்துக என்று கேட்டிருக்கிறார்கள்,   இத்தகைய அடுக்குகள் சரியா - உன் கருத்தை எழுது என்கிறார்கள்.  

இதற்கு ஒரு பார்ப்பன மாணவன் என்ன பதில் எழுது வான்?  அவனுடைய வீட்டில் என்ன சொல்லிக் கொடுப் பார்கள் ? குறைந்தபட்ச அறத்துடன் இது மிகத் தவறானது, கொடூரமானது, மனிதத்தன்மையற்றது என்று அந்தப் பாடத்தில்  எழுதியிருக்க வேண்டுமல்லவா? 

தமிழ்நாடு பாஜகவினரும், ஹிந்துத்துவ வன்முறைக் கூட்டங்களும் ஒன்றிய சிபிஎஸ்இ பாடத்தில் இதனைக் கொண்டுவந்தவர்களுக்கு எதிராகப் போராடவேண்டும். ஆனால், இவர்கள் தந்தி அனுப்பியவரை விட்டுவிட்டு தந்தியைப் படித்துக்காட்டியவரை எதிர்த்து வன்முறையில் இறங்குகின்றனர். 

மனுநீதி அடிப்படையிலான வர்ணாஸ்ரம கருத்துகளை கல்விக் கூடத்திலேயே பரப்புகிறது... படிக்கும் குழந்தை களின் பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கிறது.. சக குழந்தை களிடம், ‘‘நீ பிரம்மனின் காலில் இருந்து பிறந்தவன்'' என்று சொன்னால் அக்குழந்தையின் மனது என்னாகும் என யோசியுங்கள். இதனால் தான் ஒன்றிய அரசின் புதிய கல்வி கொள்கையை வேண்டாம் என்று நாம் கூறுகிறோம்.

No comments:

Post a Comment