வரலாற்றுப் புரட்டர்கள் யார்? வானதி சீனிவாசனுக்குப் பதில்!
வெள்ளைக்காரனா காரணம்
திராவிடம் என்பது ஏதோ வெள்ளைக்காரர்களால் உருவாக்கப்பட்டது என்ற பொய்யைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். ஆதாரத்துடன் பல முறை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இந்தப் பொய்யை அம்பலப்படுத்தி யிருக்கிறார்.
மநுதர்மம் என்ன வெள்ளைக்காரன் எழுதியதா?
விராத்திய க்ஷத்திரியனுக்கு அவ்வித க்ஷத்திரிய ஸ்த்ரீயினிடத்தில் சல்லன் பிறக்கிறான். அவனுக்கு மல்லன், நிச்சுவி, நடன், கரணன், கஸன், திரவிடன் என அந்தந்த தேசத்தில் வெவ்வேறு பெயருண்டு. (அத்தியாயம் 10; ஸ்லோகம் 22)
பிராமணனிடத்தில் வணங்காமையாலும், உபநயந முதலிய கர்மலோபத்தினாலும் மேற்சொல்லும் க்ஷத் திரிய ஜாதிகள் இவ்வுலகத்தில் வரவர சூத்திரத் தன்மையைய டைந்தார்கள். (அத்தியாயம் 10; ஸ்லோகம் 43)
பௌண்டரம், ஔண்டரம், திரவிடம், காம்போசம், யவநம், சகம், பாரதம், சீகம், கிராதம்,தரதம், கசம் இந்தத் தேசங்களையாண்டவர்களனைவரும் மேற் சொன்னபடி சூத்திரர்களாய் விட்டார்கள். (அத் தியாயம் 10; ஸ்லோகம் 44)
திராவிடர்
திராவிடன் என்றால் யார் - திராவிடம் என்றால் என்ன என்று எழுதுகிறதே மநுதர்மம்.
‘அய்ம்பத்தாறு தேசங்களுள் ஒன்று’ என்றும், ’தமிழ்’ என்றும் திராவிடத்திற்குப் பொருள் சொல்கிறதே தமிழ்ப் பேரகராதி!
18 தேசங்களுள் ஒன்றாகத் திராவிடம் பற்றிச் சொல்கிறதே 9-ஆம் நூற்றாண்டின் திவாகர நிகண்டு!
8-ஆம் நூற்றாண்டின் குமரில பட்டர் சொல் கிறாரே!
12-ஆம் நூற்றாண்டு விக்கிரம சோழன் காலத்துக் கல்வெட்டில் வரும் ”திரிபுவன சக்கரவர்த்திகள் கோனேரி மேலக் கொண்டான் திராவிட தேசம்” என்ற வரிகளில் வரும் திராவிடம் என்பது என்ன?
தளவாய்புரம் செப்பேட்டில் பாண்டியனைத் திராவிடன் (திரமிட) என்று குறிப்பிடும் சமஸ்கிருதப் பகுதியும், அதற்கு பாண்டிய தமிழாபரணன் என்று குறிப்பிடும் தமிழ்ப் பகுதியும் சொல்கிறதே!
வால்மீகி இராமாயணம், மகாபாரதம், பாகவதம், மச்சபுராணம் என்று இவர்களின் இதிகாச, புராணங்கள் எல்லாம் திராவிடம் என்று குறிப்பிடுகின்றனவே! பவுத்த, சமண இலக்கியங்கள், சீன, பிராக்ருத, பாலி மொழிப் பதிவுகள் எல்லாம் திராவிட என்ற சொல் லைத் தமிழர்கள்- திராவிடர்கள் என்ற நோக்கில் பயன்படுத்தியுள்ளனவே!
வெள்ளைக்காரர்கள் வருகைக்கு முன் தென் னாட்டை, தமிழ்நாட்டைக் குறிக்க திராவிடம் என்ற சொல் திராவிட என்றோ, த்ரமிட என்றோ பயன் படுத்தப்பட்டுள்ளதே, இதற்கெல்லாம் என்ன பதில் சொல்வார் அம்மையார்? (வானதி சீனிவாசன்)
ஆர்.எஸ்.எஸ். அச்செடுத்துக் கொடுத்த அரதப் பழசான அவதூறுக் குப்பைகளின் ஜெராக்ஸ் நகலைக் கையில் வைத்துக் கொண்டு இப்படியே காலம் தள்ளாமல், அறிவார்ந்த செய்திகளை அருள்கூர்ந்து அவர் தெரிந்து கொள்ள வேண்டாமா?
அவ்வளவு ஏன்? “நானும் ஒரு பச்சைத் திராவிடன் தான்!” என்று கச்சை கட்டினாரே, அதே பா.ஜ.க.வில் இருக்கும் இன்னொரு சூத்திரத் தலைவரான பொன்.ராதாகிருஷ்ணன். ஒரு முறை அவரிடமும் கேட்டுப் பார்க்கலாமே!
பா.ஜ.க.வில் சூத்திரத் தலைமைகள் உருவாவணதற்கே தமிழ்நாட்டில் உள்ள திராவிட இன உணர்வு தானே காரணம். ராதா ராஜன்கள் இருந்த இடத்தில் வானதி சீனிவாசன்கள் வந்து சேரவே திராவிட இயக்கம் இல்லா விட்டால் சாத்தியப்பட்டிருக்குமா? ஹெச்.ராஜாக்களும், திருப்பதி நாராயணன்களும், கே.டி.ராகவன்களும் தமிழ் நாட்டின் பாஜக தலைவராக முடியாமல், பெயரளவுக்கேனும் சூத்திரத் தமிழர்களை, தமிழச்சிகளை முன்னிறுத்துகிறதே பா.ஜ.க!
திராவிட இன உணர்வின் பலன் மற்றவர்களை விட, புகைச்சல் பார்ப்பனர்களுக்குப் பக்கத்திலேயே இருக்கும் பா.ஜ.க.வைச் சேர்ந்த பார்ப்பனரல்லா தாருக்குத் தெரியாதா என்ன?
திராவிடம் என்ற சொல்லுக்கு இத்தனைப் பெரிய வரலாறு உண்டு. ஆனால் இந்து மதம் என்ற பெயர் யார் வைத்தது? 'வெள்ளைக்காரன் வந்து கொடுத்த பெயர் தான் இந்து' என்று காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திரர் தனது 'தெய்வத்தின் குரலில்' ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தது தெரியுமா அம்மையாருக்கு?
- ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்
No comments:
Post a Comment