Wednesday, 9 October 2024

சோறு போடாத சூரிய நமஸ்காரம் (சின்னஞ்சிறு கதை)

சின்னஞ்சிறு கதை

சோறு போடாத சூரிய நமஸ்காரம்

- செ. ர . பார்த்தசாரதி

சூரிய நமஸ்காரம் செய்துகொண்டிருந்தார். இந்த தள்ளாத வயதிலும் சுவாமிநாதய்யர்.

"தாத்தா! தாத்தா!" என்று கூவிக் கொண்டு பேரன் அறிவொளி வந்தான்.

'சற்று பொறு'-என்று கையாலேயே சைகை காட்டிவிட்டு, விஞ்ஞானம் தந்த கண்ணாடியை மாட்டிக் கொண்டு சுலோகங்களை பார்த்துப் படித்து பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்.

அய்ந்து நிமிடம் காத்திருந்த அறி வொளிக்கு ஆத்திரம் வரவில்லை; சிரிப்புதான் வந்தது. இப்படி சில ஜென்மங்களும் இருக்கின்றனவே என்று.

சுயம்பிரகாசம் என்று அவனுக்கு தாத்தா இட்ட பெயரை; பகுத்தறிவு இயக்கத்தில் சேர்ந்து அறிவொளி என்று பெயரை மாற்றிக் கொண்டான்.

சூரிய நமஸ்காரம் முடிந்தது

"என்ன அவசரம்? ஏன் இப்படிக் கத்தினே? சூரிய நமஸ்காரம் செய்யும்போது என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு?" கோபித்தார்.

''பெரிய சூரிய நமஸ்காரம் ! பொழுது விடிஞ்சா இதே பூசைகள் தான் செய்ய நேரம் சரியா இருக்கு; இப்படியே போனா நாடு உருபட்டாபோலதான் வேலை எப்ப செய்யறது? எப்படி பணம் சம்பாதிக்கிறது?"

"உனக்கு பணம்தான் பெரிசு. எனக்குக் கடவுள்தான் பெரிசு. ஆசாரமான குடும்பத்தில பிறந்திட்டுக் கடவுளே இல்லேங்கிற உனக்கு இதெல்லாம் புரியாது..."

"உங்க கடவுளை தூக்கி குப்பையிலே போடு, மாநகராட்சி குப்பைத் தொட்டியிலே பார்த்து போடு; அதுதான் இப்ப நல்லா நாறுது. பணம் வேண்டா; கடவுளிடம்தான் போக வேண்டுமானால்; அஞ்சா நெஞ்சன் அழகிரி சொன்னதுபோல நாலணா எலி பாஷாணத்தை தின்னுட்டு போகவேண்டியது தானே!"

"டேய், டேய் போதும்டா ! நிறுத்துடா உன் யோசனையை ! வந்ததை சொல்லு"

"இதோ பார் தாத்தா, புது மாதிரி கணிப்பி (கால்குலேட்டர்] இதை வாங்கித் தாங்க நாத்தா!'

"முதல்ல டேப்ரிக்கார்டர் வேணும்னே. வாங்கிக் கொடுத்தேன் அதற்கு மாதா மாதம் நாலு டேப்பு வாங்கி தரச்சொன்னாய். இப்ப கணிப்பி கேட்கிறாய். அப்புறம் பாட்டரி வேணும்பே!"

"அதெல்லாம் வாங்க வேண்டாம். தாத்தா !"

"வேற எப்படி இது வேலை செய்யும்?"

"பாட்டரி இல்லாமல் சூரிய வெளிச்சமோ, வேற விளக்கு வெளிச்சமோ பட்டாப் போதும், அந்த ஒளியை கிரகித்து சக்தியாக மாற்றி வேலை செய்யும்" மேலும் இதே போல் கார், மோட்டார்கூட ஓடுது. இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியப் போகிறது? இதெல்லாம் புது கண்டுபிடிப்பு தாத்தா!"

"அட போடா எல்லாம் பழைய கண்டு பிடிப்புத்தாண்டா. உயிரே இல்லாத அஃறிணைப் பொருள்களெல்லாம் சூரிய சக்தியைக் கொண்டு இயங்க முடியுங்கிற!"

"ஆமா!" என்றான் அழுத்தம் திருத்தமாக.

"அப்ப ஏன். உயிர் உள்ள - ஆறறிவு படைத்த மனிதனும் சூரிய நமஸ்காரம் பண்ணிச் சக்தியைப் பெறமுடியாது!"

அறிவொளி யோசித்தான்.

"பழைய மெஞ்ஞானம் தாண்டா இப்ப, விஞ்ஞானம்கிற பேராலே வளருது !"

"அப்பநீங்க ஒண்ணுபண்ணுங்க தாத்தா கணிப்பி, கார், மோட்டார் போன்றதற்கு எரிபொருள் சூரிய சக்தி பயன்படுவதுபோல்; நீங்களும் சாப்பிடாமல் சூரிய நமஸ்காரம் செய்யுங்க மெய்ஞானம் எப்படினு தெரிஞ்சுக்கிறேன்"

தாத்தா விழித்தார்!

- உண்மை இதழில் வெளிவந்த எனது சின்னஞ் சிறுகதை


No comments:

Post a Comment