இராஜகோபாலாச்சாரி யார்?
– கி.தளபதிராஜ்
“ஆச்சாரியார்’’
“மூதறிஞர்’’
“சக்கரவர்த்தி’’ என்று பார்ப்பனப் பரிவாரங்களால் பட்டப்பெயர் சூட்டப்பட்ட இராஜகோபாலாச்சாரியார் 10.12.1878இல் சேலத்தில் பிறந்து. தனது 94ஆம் வயதில் 25.12.1972இல் சென்னையில் மறைந்தார். தந்தை பெரியார் அவர்களின் அன்பிற்குரிய நண்பராய் இருந்தபோதிலும் வாழ்நாள் முழுதும் தனது இனத்திற்கு நல்ல விசுவாசியாக, சேவகராக வாழ்ந்தார் என்பதையும் தாண்டி பார்ப்பன தர்மத்தைப் பாதுகாப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். அதனால்தான் பெரியாரை தன் அன்பார்ந்த எதிரி என்றார். அவரின் உண்மை உருவத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும். சில தகவல்கள் அவரை மட்டுமன்றி ஆரியத்தையும் தோலுரித்துக் காட்டும்.
மனுதர்மவாதி:
சுயமரியாதை இயக்கத்தின் ஆரம்ப காலக் கட்டங்களிலேயே அதன் செயல்பாடுகளைக் கண்டு கொதித்தவர் இராஜாஜி. இந்துமத, வேத, புராண, சாஸ்திரக் குப்பைகளை சுயமரியாதை இயக்கம் கேள்விக் குறியாக்கி, பார்ப்பனர்களின் வர்ண பேத சூழ்ச்சிகளை வெளிக்கொணர்ந்து, அவற்றை தீயிட்டுப் பொசுக்கிய நேரத்தில் மனுதர்மத்திற்கு ஆதரவாக வக்காலத்து போட்டவர் இராஜாஜி. “மனுதர்மம் அருமையான நீதியைக் கொண்டது. மனுசாஸ்திரத்தை எதிர்ப்பது தற்கொலைக்குச் சமம்’’ என்று சொல்லி சுயராஜ்யப் பத்திரிக்கையிலே தொடர் கட்டுரைகளைத் தீட்டியதோடு, திருவில்லிப்புத்தூரில் நடைபெற்ற காங்கிரஸ் தாலுக்கா மாநாட்டில் “சுயமரியாதை இயக்கம் தெய்வங்களையும், அவதாரங்களையும், புண்ணிய ஸ்தலங்களையும், பெரியோர் சாஸ்திரங்களையும் நிந்திப்பதாக குற்றப்பத்திரிக்கை வாசித்து இவர்களின் ஜாதி துவேஷத்தை ஒழிக்க வேண்டும்’’ என தன் தலைமை உரையில் குறிப்பிட்டவர்.
தீண்டாமையை ஒழிக்க வேண்டி காங்கிரசால் ஒதுக்கப்பட்ட நிதியை தனது பெயரில் வைத்துக்கொண்டு அதனால் ஒரு காரியமும் செய்யாமல், மற்றவர்களையும் செய்யவிடாமல் தடுத்ததாக ‘குடியரசு’ பத்திரிக்கை குற்றம் சாட்டியது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி “பிறவியில் ஜாதி வித்தியாசம் பார்க்கக் கூடாது’’ என இயற்றிய தீர்மானத்தை எதிர்த்து இராஜினாமா கடிதம் கொடுத்ததோடு தனது நண்பர்களையும் இராஜினாமா கடிதம் கொடுக்க வற்புறுத்தியவர் இராஜாஜி. பால்ய விவாக தடைச்சட்டத்தை பார்ப்பனர்கள் எதிர்த்துபோது, பிராமணர் -_ பிராமணர் அல்லாதார் சண்டை இல்லாதுபோனால் தென்னாட்டு பிராமணர்கள் அந்தச் சட்டத்தை எதிர்த்திருக்க மாட்டார்கள் என்று சூழ்ச்சியாகப் பேசியவர்.
சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற சலவைத் தொழிலாளர் மாநாட்டில் (26.6.1952) கலந்துகொண்டு, “அவரவர் குலத்தொழிலை அவரவர் செய்ய வேண்டும். சலவைத் தொழிலாளர்களாகிய நீங்கள், துணியைக் கிழிக்காமல் சலவை செய்வது எப்படி என்பதைத்தான் கற்றுக்கொள்ள வேண்டும். எல்லோரும் படிக்க ஆரம்பித்தால் இந்தத் தொழிலை வேறு யார்தான் செய்வார்கள்?’’ என்று சமூகநீதிக்கு எதிராய் தன் பிறவித் திமிரை வெளிப்படுத்தியவர்.
கொலையாளி:
மோட்டார் கார்கள் பயன்படுத்தப்படாத காலம். நாமக்கல்லிற்கு ஒரு வழக்கு தொடர்பாக சென்று குதிரைவண்டியில் சேலம் திரும்பிக் கொண்டிருந்தார் இராஜாஜி. நள்ளிரவு நேரம். வரும் வழியில் சுங்கச் சாவடியில் அவரது வண்டி நிறுத்தப்பட, சுங்கப் பணத்தை வசூல்செய்வதற்காக வண்டியின் பின்புறமாக வந்து இராஜாஜியை எழுப்ப முயன்ற காவல்காரரை வழிப்பறிக் கொள்ளையன் என நினைத்து இராஜாஜி தன் கைத்துப்பாக்கியால் சுட, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அந்தக் காவல்காரர் இறந்துவிட்டார். தற்காப்பிற்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கூறி அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்திக்கு ஆதரவு:
1937இல் சென்னை மாகாண பிரதமராக பதவி வகித்தபோது இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி செய்த எந்த மாகாணத்திலும் கொண்டு வரப்படாத இந்தி மொழி கட்டாயப் பாடத் திட்டத்தை கொண்டு வந்தவர். 1938இல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்தபோது, பொப்பிலி அரசர் விலகுவதன் மூலம் நீதிக்கட்சியையே செயலிழக்கச் செய்துவிடலாம் எனக் கருதி, பதவி விலக வில்லையெனில் ஜமீன்தாரி ஒழிப்பு மசோதாவைப் பயன்படுத்தி உங்கள் ஜமீன் சொத்துக்களை அரசுடமையாக்கி விடுவேன் என்று அவரை மிரட்ட, பொப்பிலி ராஜா பதவி விலகியதும், நீதிக்கட்சித் தலைவர்களால் பெல்லாரி சிறையில் அடைபட்டிருந்த பெரியார் நீதிக்கட்சித் தலைவராக்கப்பட்டதால் ஆச்சாரியார் ஆப்பசைத்தக் குரங்கானார்.
இந்தி எதிர்ப்புப் போரில் கைதாகி சிறையில் மாண்ட தாளமுத்து குறித்து சட்டமன்றத்தில் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியபோது, “தற்குறி தாளமுத்து தேவையில்லாமல் சிறைபட்டு மாண்டார்’’ என தன் அதிகார மமதையை வெளிப்படுத்திய சக்கரவர்த்தி!
மொழிவாரி மாநில எதிர்ப்பு:
மொழிவாரி மாநிலக் கோரிக்கை வலுவடைந்த நேரத்தில் அதை வீழ்த்தும் விதமாக பசல்அலி கமிஷன் பரிந்துரைப்படி இந்தியாவை தெற்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு, மத்தியப் பகுதியாகக் கொண்டு தட்சிணப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், மேற்குப் பிரதேசம், கிழக்குப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் என அய்ந்து பிரதேசங்களாகப் பிரிக்கப் போவதாக பிரதமர் நேரு அறிவித்தார். நேருவின் இந்தப் பிரகடனத்தை இராஜாஜி ஆதரித்ததோடு அதற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார்.
சென்னையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில், “மொழிவாரி மாநில அரசு கேட்பவர்கள் காட்டுமிராண்டிகள்’’ எனக் கூச்சலிட்டார். அய்தராபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மகாசபையிலும் இதே கருத்தை வெளியிட்டார்.
1952இல் ஆந்திரம் தனி மாநிலமாக பிரிந்துவிட்ட நிலையில், சென்னை ராஜதான்ய அரசவையை தமிழில் நடத்த வேண்டும் என ஒரு மசோதா மேல்சபையில் கொண்டு வரப்பட்டபோது காங்கிரஸ் ஆதரவுடன் அந்த மசோதாவை எதிர்த்து தோற்கடித்தவர் இராஜாஜி.
சக்கரவர்த்தி திருமகன்:
திராவிடர் இயக்கம் இராமாயணத்துக்கு எதிராக தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டபோது ‘கல்கி’ வார இதழில் ‘சக்ரவர்த்தித் திருமகன்’ என்று இராமாயணக் கதை எழுதியவர் இராஜாஜி. மூகாஜி என்ற பெயரில் முரசொலியில் இராஜாஜிக்குப் பதிலடி கொடுத்தார் கலைஞர். டெல்லியில் ராமலீலா என்ற பெயரில் இராவணன் உருவப் பொம்மைகளை எரிப்பது தொடர்ந்தால் தென்னாட்டிலும் இராமனை எரித்து இராவண லீலாக்கள் நடத்தும் காலம் வந்தே தீரும் என அதில் எச்சரித்தார். இது நடந்ததோ 1954இல். சரியாக இருபது வருடங்களுக்குப் பின்னர் டெல்லியில் ‘இராமலீலா’ நிகழ்வில் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் கலந்துகொள்ள; ‘இராவண லீலா’வை, அன்னை மணியம்மையார் தன் தலைமையில் சென்னை பெரியார் திடலில் தோழர்களின் உணர்ச்சிப் பிழம்பாய் நடத்தினார். இராமன், இலட்சுமணன், சீதை உள்ளிட்ட உருவ பொம்மைகளை தீக்கிரையாக்கி தோழர்கள் கைதாகினர்.
குலக்கல்வித் திட்டம்:
1954இல் தமிழக முதல்வராகப் பதவிவகித்த இராஜாஜி ஒரு கல்வித் திட்டத்தை கொண்டு வந்தார். கிராமப்புற மாணவர்களின் பள்ளிப் படிப்பை மூன்று மணி நேரமாக குறைத்து மீதி நேரத்தில் அவரவர் பாரம்பரியத் தொழிலை செய்யலாம் என்றார். ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வைத் தடுக்கும் இந்தத் திட்டத்தின் சூழ்ச்சியைப் புரிந்துகொண்ட பெரியார், 24.1.1954 அன்று ஈரோட்டில், “ஆச்சாரியார் கல்வித் திட்ட எதிர்ப்பு’’ மாநாட்டைக் கூட்டினார். ஆச்சாரியா£ர் தொடர்ந்து அத்திட்டத்தைக் கைவிட மறுக்கவே சென்னையில் 31.1.1954இல் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தை கூட்டி அதில் ஆச்சாரியாருக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.
ஆச்சாரியார் இந்தத் திட்டத்தை மாற்றவில்லையானால் நிச்சயமாக இது அவருடைய இனத்தின் அழிவுக்கே ஒரு காரணமாக இருக்கப் போகிறது. “தோழர்களே! பெட்ரோலும் தீப்பந்தமும் தயாராக இருக்கட்டும். நாள் குறிக்கிறேன்’’ என அக்கிரஹார கூட்டத்திற்கு எச்சரிக்கை விடுத்தார். நாகையிலிருந்து குலக்கல்வித் திட்ட எதிர்ப்புப் படை சென்னையை நோக்கி புறப்பட்டது. பலத்த எதிர்ப்புக்குப் பின்னர் ராஜாஜி பதவியை விட்டே ஓடினார். அந்தத் திட்டம் கைவிடப்பட்டதாக பின்னர் அறிவிக்கப்பட்டது.
ராஜாஜி – காமராஜர் – நேரு:
நாகர்கோவில் மக்களவை இடைத்தேர்தலில் காமராஜர் வெற்றிபெற்றபோது அவர் இந்தியாவின் துணைப் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என பத்திரிக்கைகள் எழுதின. அதைக் கண்டு பொறுக்க இயலாத இராஜாஜி, “டில்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் அலுவலகத்தில் ஒரு குமாஸ்தா வேலைக்குத்தான் காமராஜ் லாயக்கே தவிர வேறு எந்த பொறுப்புக்கும் லாயக்கற்றவர்’’ என தன் காழ்ப்புணர்ச்சியைக் கொட்டினார்.
“இன்று இராஜாஜிக்கு ஏற்பட்டுள்ள அரசியல் ஏமாற்றம்தான் அவரை காங்கிரஸ் எதிரியாக்கியிருக்கிறது. இராஜாஜிக்கு வேதனை தருவது இதுதான். அதாவது நாகரீகமற்ற, படிப்பில்லாத, பட்டிக்காட்டுப் பேர்வழி (மிறீறீவீtமீக்ஷீணீtமீ றிஷீஷீக்ஷீ) என தாம் கருதிக் கொண்டிருக்கும் ஒருவர், தாம் முன்பு இருந்த இடத்தில் அமர்ந்து-கொண்டு நன்றாக நிர்வாகம் நடத்திக்கொண்டு வருகிறாரே? என்ற மனவேதனைதான் ராஜாஜியை வாட்டுகிறது’’ என காங்கிரஸ் பார்லிமென்ட் கூட்டத்திலேயே பிரதமர் நேரு இராஜாஜியை விமர்சித்து எதிர்த்தார்.
(‘தினமணி’ சித்தூர் பதிப்பு: 25.3.1960)
பொதுச் சொத்தை தனதாக்க முயற்சி:
முதலமைச்சர், ஆளுநர், கவர்னர் ஜெனரல், மத்திய உள்துறை அமைச்சர் என சகல பதவிச் சுகத்தையும் சொட்டச்சொட்ட அனுபவித்த இராஜாஜி தான் நெடுங்காலம் வாழப்போவ-தாகவும், அக்காலம் முழுவதும் தனக்கு வரவேண்டிய பணி ஓய்வுக்காலத் தொகையை கணக்கிட்டால், தான் வசிக்கும் கிண்டி ராஜ்பவனத்தின் மதிப்பை விடக் கூடுதலாக வரும் என்றும், எனவே அரசு கிண்டி ராஜ்பவன் நிலம் முழுவதும் தனக்குக் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தார். ஆனால் இந்தக் கோரிக்கையை அரசு நிராகரித்து-விட்டது.
(இந்தச் செய்தி ஆச்சாரியாரின் பென்ஷன் குறித்த தகவல் புத்தகத்தில் உள்ளது.)
ஆரியத்தின் அசல் வடிவம் இராஜகோபாலாச்சாரியார்!
No comments:
Post a Comment