Showing posts with label திருமாவளவன். Show all posts
Showing posts with label திருமாவளவன். Show all posts

Tuesday, 27 October 2026

திராவிட தேசியம் பேசியதால் தான் தமிழன் தன்னை தமிழனாக உணர முடியாமல் போனதற்குக் காரணமா? தோழர் தொல். திருமாவளவனுக்கு...

 தோழர் தொல். திருமாவளவனுக்கு...

              

         - மின்சாரம்

[பெரியார் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் திராவிட தேசியம் பேசியதால் தான் தமிழன் தன்னை தமிழனாக உணர முடியாமல் போனதற்குக் காரணம் என்கிறார் தோழர் தொல். திருமாவளவன் - அதற்குப் பதில்தான் இந்தக் கட்டுரை]

கேரளாவிடம் மூணாறு, இடுக்கி, தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகளும் கர்நாடகாவிடம் கோலார், பெங்களூர் போன்ற பகுதிகளையும் ஆந்திராவிடம் சித்தூர் மாவட்டம். திருப்பதி நெல்லூர் பகுதிகளும் தமிழர்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகள், அவற்றை நாம் இழந்தோமே..


ஆக. தமிழன் தன் நிலத்தை மட்டுமல்ல. மொழியை, பண்பாட்டை இழந்து நிற்கிறான். வேற்று மொழிகளின் ஊடுருவலைத் தமிழில் அனுமதித்தான். பிற மேலாதிக்கப் பண்பாடுகளுக்கு ஆக்கிரமிப்புகளுக்கு தமிழன் தன் பண்பாட்டை பலி கொடுத்தான்.


இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம், தமிழன் நெஞ்சில் ஊறிக் கிடக்கிற நாடி நரம்புகளில் ஊடுருவிக் கிடக்கிற தாழ்வு மனப்பான்மை தான். இந்தத் தாழ்வு மனப்பான்மைக்கு காரணம், கடந்த கால தமிழகத் தலைவர்கள் மேற் கொண்ட திராவிட அரசியல்தான்.


மாநிலங்கள் மொழி வாரியாக பிரிக்கப்பட்ட போது கன்னடர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் அனைவரும் சென்னை மாகாணத்தோடு இணைந்து வாழ்ந்தவர்கள் என்ற காரணத்தாலும், அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க தென்னக மொழிகள் பேசக் கூடிய மக்கள் அனைவரையும் திராவிடர்கள் என்கிற பெயரில் அணி திரட்ட வேண்டிய கட்டாயம். ஆகவே தான் திராவிடன், திராவிட தேசியம், திராவிட மொழிகள் என்கிற கருத்தியலை முன்வைத்து அன்றைக்குப் பெரியார் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் களப்பணியாற்றினார்கள்.


அந்த நிலைப்பாடுதான் தமிழன் தன்னை தமிழனாக உணர முடியாமல் போனதற்கு காரணம், இதனால்தான் தமிழ்த் தேசியம், மற்றும் ஜாதி ஒழிப்பு என்கிற இரட்டைக் கொள்கைகளை நாங்கள்

முன்னெடுத்துச் செல்கிறோம்."


(குமுதம் 14.2.2007)


இது விடுதலைச் சிறுத்தைகளின் பொதுச்செயலாளர் தோழர் தொல், திருமாவளவன் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரையாகும் கட்டுரையின் தலைப்பு.


"திராவிடப் பெருந் தன்மையால் தேய்ந்த தமிழன்" என்பதாகும்.


இதன்மூலம் தோழர் திருமாவளவன் என்ன சொல்ல வருகிறார்?


திராவிடன் என்று சொல்லாமல் தமிழன் என்று சொல்லியிருந்தால் கருநாடகக்காரன் தண்ணீர் கொடுத்திருப்பான், கேரளக்காரன் பெரியாறு நீர்த் தேக்கப் பிரச்சினையை எழுப்பி இருக்க மாட்டான் என்று கூறுகிறாரா?


வெறும் பெயர் மாற்றத்தால் ஏற்படுகிற காரியமாக ஒரு பெரிய பிரச்சினையை சிமிழுக்குள் அடக்கப் பார்க்கிறாரா?


தமிழ்நாட்டுக்குள்ளேயே மாவட்டத் தலைநகரம் அரியலூரா? பெரம்பலூரா? என்ற பிரச்சினை பெரும் போராட்டமாக வெடிக்கிறதே - இதில் மொழி எங்கிருந்து வந்தது?


ஒரு மாநிலத்துக்குள்ளேயே இந்த வேறுபாடுகள், தம் மாவட்டம் உணர்வு என்று பிரச்சினை வெடிக்கும் போது, மொழியின் காரணமாகவோ தமிழன் என்று சொல்லாமல் திராவிடன் என்று கூறுவதாலேயே தான் காவிரியிலும், மூணாறிலும் தமிழன் வஞ்சிக் கப்படுகிறான் என்பது பொருந்தா வாதமாகும்.


தமிழர்கள் வஞ்சிக்கப்படும். இழப்புக்கு ஆளாக்கப்படும் பிரச்சினையைத் திசை திருப்பத்தான் இது பயன்படும்.


தமிழன் தன் பண்பாட்டை இழந்ததற்குச் மொழியை இழந்ததற்கு தெலுங்கோ அல்லது தெலுங்கனோ, கன்னடமோ அல்லது கன்னடியனோ காரணமல்ல; மாறாக ஆரியனும் அவனுடைய சமஸ்கிருதமும் தான் இதனை மறைப்பதற்கு தான் இந்த முழக்கங்கள் பயன்படப் போகின்றன. திருமாவளவன் அவர்களின் கட்டுரையிலோ, பேட்டியிலோ இதுபற்றிய வாடையே இல்லையே - ஏன்?


ஆரியத்தாலும், சமஸ்கிருதத்தாலும் தமிழ் மட்டும்தான் கெட்டு விட்டது என்று கருதி விடக்கூடாது; தெலுங்கு கன்னடமும், மலையாளமும் கெட்டொழிந்தன என்பதுதான் மொழியியல் சார்ந்த கணிப்பாகும்.


சமஸ்கிருதத்தின் வரி வடிவத்தையும், இலக்கணங்களையும் அளவிறந்து வரித்துக் கொண்டதால்தான் அவை தனித்தன்மையை இழந்தன என்பதை மறுக்க முடியுமா? அவற்றில் சமஸ்கிருத ஆதிக்கத்தை அகற்றிவிட்டு பார்த்தால் அந்த மொழிகளுக்குள் தமிழ் என்ற முத்து ஒளிந்திருப்பதை அறியலாமே!


பார்ப்பனரான பரிதிமாற் கலைஞர் முதல் திராவிடத் தந்தையான பெரியார் வரை இதனைக் கூறியுள்ளார்களே!


ஆந்திராவிலும் சரி தெலுங்கானாவிலும் சரி தாய்மொழி தெலுங்குதான்; பின் ஏன் தெலுங்கானாவை தனி மாநிலமாக்க வேண்டும் என்று போர்க் குரல் கொடுக்கிறார்கள்? கலாச்சார அளவிலும் மொழியளவிலும்

(7-ஆம் பக்கம் பார்க்க)

(1 ஆம் பக்கத் தொடர்ச்சி)

அவர்கள் ஒரே படகில் பயணம் செய்பவர்கள் தான்! 


யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் வரலாற்றுப் படி இனத்தால் நாம் திராவிடர் தானே? சிந்து சமவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகம் என்று மார் தட்டுகிறோமே அது குறித்த கருத்து என்ன? ஆரியப் பார்ப்பனர்கள் சங்பரிவார் கும்பல் சொல்லி வருகிறதே ஆரியராவது திராவிடராவது! எல்லாம் வெள்ளைக்காரனின் பிரித்தாளும் சூழ்ச்சி என்று அந்தக் கூட்டத்தின் கூக்குரலிவிருந்து ஒரு பகுதியைக் கடன் வாங்கிப் பேசுகிறார் தோழர் தொல். திருமாவளவன் என்று குற்றச்சாட்டுக்கு ஆளாவது நல்லதல்வவே!


இதுபற்றி தந்தை பெரியார் கூறுகிறார். 'தமிழர் என்பது மொழிப் பெயர், திராவிடர் என்பது இனப் பெயர். தமிழ் பேசும் மக்கள் யாவரும் தமிழர் என்ற தலைப்பில் கூற முடியும். ஆனால், தமிழ் பேகம் அத்தனைப் பேரும் திராவிடர் ஆகிவிட முடியாது. இனத்தால் திராவிடனான ஒருவன் எந்த சமயத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும், எத்த மொழி பேசுபவனாயிருந்தாலும் அவன் திராவிடன் என்ற தலைப்பில் தான் வருவான், ஆகையால் திராவிட மொழி தமிழ் என்ற காரணத்துக்காக தமிழ் பேசும் திராவிடன் அல்லாத ஒருவன்


மொழி காரணமாக மட்டுமே தன்னை திராவிடன் என்று கூறிக் கொள்ள முடியாது தமிழர் என்றால் பார்ப்பானும் தன்னைத் தமிழன் என்று கூறிக் கொண்டு நம்முடன் கலந்து கொண்டு, மேலும் நம்மைக் கெடுக்கப் பார்ப்பான். திராவிடன் என்றால் எந்தப் பார்ப்பானும் தன்னை திராவிடன் என்று கூறிக் கொண்டு நம்முடன் சேர முற்பட மாட்டான்"( நூல்: மொழியாராய்ச்சி) என்று தெளிவாக விஞ்ஞான அணுகுமுறையாக, வரலாற்றுக் கண்கொண்டும் கணித்துள்ளார் தந்தை பெரியார்.


பார்ப்பான் உள்ளே புகுந்தால் என்னாகும்' புத்தகத்துக்கு ஏற்பட்ட கதிதானே ஏற்படும் (விடுதலை' 6.4.1959) என்றும் தந்தை பெரியார் எச்சரித்துள்ளதைக் கவனிக்கத் தவறக்கூடாது. 


மற்றபடி திராவிடன் என்று சொன்னதால் இந்தியை எதிர்க்கவில்லையா? ஜாதி ஒழிப்புக் கொள்கையை முன்னெடுத்துச் செல்லவில்லையா தமிழ்ப் பண்பாட்டு உணர்வைத் தலை தூக்கச் செய்ய வில்லையா? தமிழன் வீட்டுப் பிள்ளைகளுக்கு பெயர்கள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என்று பாடுபடவில்லையா? நாராயணசாமி - நெடுஞ்செழியன் ஆனதும், இராமையன் - அன்பழகன் ஆனதும், சோமசுந்தரம் மதியழகன் ஆனதும், அரங்கசாமி அரங்கண்ணல் ஆனதும் திராவிட இயக்கத்தால்தானே!


தமிழன் வீட்டு நிகழ்ச்சிகளில் சமஸ்கிருதம் விரட்டப்பட்டு, பார்ப்பானும் புறக்கணிக்கப்பட்டு, தமிழ் தமிழனும் உரிய இடம் பிடித்தது திராவிட இயக்க உழைப்பால்தான் என்பதை மறுக்க முடியுமா?


நமஸ்காரம் போய் வணக்கம் வந்தது யாரால் உபந்நியாசம் போய் சொற்பொழிவு வந்ததும் யாரால்? வந்தனோபசாரம் போய் நன்றி என்று மலர்ந்ததற்கும் யார் காரணம்? 


கோயில் வழிபாட்டு மொழி தமிழாக இருக்க வேண்டும் என்று மாநாடு கூட்டி 'மெய்யன்பர் களையெல்லாம் அழைத்து முழங்கச் செய்தது யார் 1938-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்குப் பின் முகிழ் தெழுந்த தமிழுணர்வை யார்தான் மறுக்க முடியும்'


அந்தப் போராட்டத்தை தலைமை தாங்கி முன்னின்று நடத்திய தந்தை பெரியார் அவர்கள் தானே சமயம், சாயம் கடந்து தமிழர்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து நிறுத்தினார்?


தொடர்வண்டி நிலையங்களில் ஊர் பெயர்ப் பலகைகளில் தமிழ் முதல் இடம் பெற்றதே அதற்கான போராட்டத்தை நடத்தியது 'திராவிடர்' என்று பெயர் தாங்கிய கழகம் தானே?


மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற தடையை உடைத்தெறிந்தது தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்ற திராவிடர் ஆட்சிதானே? வகுப்புரிமையை இந்தியத் துணைக் கண்டத்திலேயே முதன் முதலாக அமலுக்குக் கொண்டு வந்ததும் திராவிடர் ஆட்சிதானே? தாழ்த்தப்பட்டோர் பொது வீதிகளில் படிக்கவும் பொதுக் கிணறுகள், குளங்களில் புழங்கவும் உத்தரவிட்டது யார்?


தாழ்த்தப்பட்டவர்களை பள்ளிகளில் சேர்க்காவிட்டால் உதவித் தொகை நிறுத்தப்படும் என்றதும் தாழ்த்தப்பட்டோரை பேருந்துகளில் அனுமதிக்காவிட்டால்,’ உரிமம் ரத்து செய்யப்படும்’ என்றும் ஆணை பிறப்பித்த ஆட்சி எது? திராவிடர் கட்சி தானே! முதன் முதலில் பெண்களுக்கு வாக்குரிமை கொடுத்ததும் எந்த ஆட்சி! தேவதாசி முறைக்கு கல்தா கொடுத்தவர்கள் யார்? 


பார்ப்பனர்களின் கொள்ளைக் கூடாரமாக இருந்த கோவில்களை லகான் போட்டு இழுத்து இந்து அறநிலையத்துறை என்ற ஒரு புதுத்துறை வருவதற்கு யார் காரணம்?


இந்தச் செயல்பாடுகளால் பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் தமிழனைத் தமிழனாக உணர முடியதவனாக ஆக்கி விட்டார்களா?


திராவிடன் என்று சொன்னதால் குட்டிச் சுவராகப் போன இழப்புகளின் பட்டியல்களா இவை? திராவிடன் என்று சொன்னதால் சென்னையை ஆந்திராவுக்கு விட்டுக் கொடுத்தா விட்டோம்?


திருச்சி திருவெறும்பூரில் பாரத மிகு மின் நிலையம் (BHEL) வந்த நேரத்தில் மலையாளிகள் அலை அலையாக உள்ளே புகுந்த நேரத்தில் பொதுக் கூட்டம் போட்டு 'மலையாளிகள் ஆதிக்கம் ஒழிக" என்ற பெருங் குரல் கொடுத்தது திராவிடர் கழகத்தின் தலைவர் தந்தை பெரியாரல்லவா? மலையாளிகளும் திராவிடர்கள் தான் என்று ஒதுங்கியா கொண்டோம்?


இதில் ஒரு வேடிக்கை விளையாட்டை இரசிக்க முடிகிறது 'குமுதம்' இதழில் எழுதிய கட்டுரைக்கு, அதே தோழர் திருமாவளவன் அவர்கள் 'ஜூனியர் விகடன்' இதழில் பதில் கொடுத்திருக்கிறார். 


ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் உண்மைதான்.


கேள்வி: "ஏற்கெனவே 'தமிழ் பாதுகாப்பு இயக்கம்' என்ற ஒரு அமைப்பை நடத்தி வருகிறீர்கள். இப்போது தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பிறமொழி மக்களுக்காகவும் கொடி பிடிக்க தொடங்கி விட்டீர்கள்.. அப்படியானால், தமிழைப் பாதுகாப்பது என்னவாயிற்று?" 


திருமாவளவன் பதில்: "தமிழ் பாதுகாப்பு இயக்கம் என்பது. மற்ற மொழி பேசும் மக்களுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட இயக்கமல்ல.  அன்னைத் தமிழை காப்போம். அனைத்து மொழிகளையும் காப்போம் எங்கள் இயக்கத்தில் முழக் மதிப்போம்' என்பதுதான் எங்கள் இயக்கத்தின் முழக்கமே ‘தமிழ் வாழ்க’ என்பதற்கு தெலுங்கு ஒழிக, கன்னடம் ஒழிக" என்று அர்த்தம் அல்ல. தமிழகத்தில் தமிழர்கள் தான் வாழ வேண்டும், ஆத்திரத்தில் தெலுங்கர்கள் தான் வாழ வேண்டும் என்பது இன்றையச் சூழலில் சாத்தியமில்லை. புலம்பெயர்ந்து வாழ்வது தான் மனித இயல்பு. இந்த வகையில் வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில் பல ஆண்டுகளாக வசித்து வரும் மற்ற மொழி பேசுவோரைப் பாதுகாப்பதும் ஒரு தமிழனின் கடமைதான். நானும் ஒரு தமிழன் என்பதால், தமிழகத்தில் உள்ள மொழிவாரியான சிறுபான்மையினருக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கப் பட்டது தான் புதிய பேரவை. இதனால் ஏற்கெனவே தொடங்கப்பட்ட தமிழ் பாதுகாப்பு இயக்கம் செயலற்றுப் போய் விட்டது என்று அர்த்தம் அல்ல. எந்த நோக்கத்துக்காக தமிழ் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கில் அதன் பயணம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது!"


(ஜூனியர் விகடன் 11.2.2007)


கன்னடர்களும் மலையாளிகளும் வஞ்சிக்க படுகிறார்கள் என்று ஒருபுறம் கூறிவிட்டு,  அந்தத் திராவிடர் உணர்வு பேசியதால் வஞ்சிக்கப்பட்டோம் என்றும் குற்றப் பத்திரிகை படித்துவிட்டு,  இன்னொரு பக்கத்தில் தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கர்களுக்காவும் கன்னடர்களுக்காகவும் குரல் கொடுக்கப் போகிறோம் என்கிறார்.


இதன் மூலம் குமுதம் கட்டுரையில் கூறியுள்ளாரே தோழர் திருமாவளவன் அந்தத் தமிழனாக உணர முடியாமையைச் சரி செய்யப் போகிறாரா? தென்னை மரத்தில் ஏன் ஏறினாய் என்றால். புல் பறிக்க தான் ஏறினேன் என்று சொல்லுவதும் இப்பொழுது ஏன் தென்னை மரத்தை விட்டு இறங்குகிறாய் என்று கேட்டால் புல் கிடைக்கவில்லை அதனால் இறங்குகிறேன் என்று சொல்வது போலும் அல்லவா இருக்கிறது தோழர் திருமாவளவன் அவர்களின் கூற்று. 


தோழர் தொல். திருமாவளவன் இளைஞர் சித்தாந்த்திலும் இன்னும் இளம் நிலையில்தான் இருக்கிறாரோ என்றே கணிக்க வேண்டியுள்ளது.


திராவிட இனத்தை பற்றி அண்ணல் அம்பேத்கரும் பேசியிருக்கிறார் என்பதையும் அவர் போன்றோருக்கு நினைவூட்டுகிறோம்.


- மின்சாரம்

- விடுதலை ஞாயிறு மலர்  17.2.2007