Saturday, 7 November 2026

ஜூனியர் விகடனுக்கு திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அளித்த பேட்டி(26.11.2003)

பிற இதழிலிருந்து.....



ஜூனியர் விகடனுக்கு திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அளித்த பேட்டி


குழப்பம் ஏதும் இல்லை திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி


நவப்பர் 6 திருச்சியில் நடந்த திராவிடர் கழக மத்திய கமிட்டியில் தான் இதுவரை வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவியை துரை. சக்கரவர்த்தி என்பவரிடம் ஒப்படைத்துவிட்டு செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் மட்டும் இருந்து வந்தார்.


எட்டு நாட்கள் கழித்து 17ஆம் தேதி சென்னையில் நடந்த தலைமைச் செயற்குழுகூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் ஆக்கப்பட்டிருகிறார் வீரமணி.


திராவிடர் கழக தலைவர்களாக இருந்த தத்தை பெரியார், மணியம்மையார் இருவரது மறைவுக்கு பிறகு கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பொதுச் செயலாளர் பதவியிலேயே இருந்தார் வீரமணி, தலைமைப் பதவிக்கு தானோ அல்லது மற்றவர் களையோ அமர்த்தி அழகு பார்க்காத சூழ்நிலையில், வீரமணியின் இந்த திடீர் முடிவு பற்றி அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்திருப்பது உண்மை.


இதற்கான விளக்கம் கேட்டு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை சந்தித்தோம்.


இருபத்தைந்து ஆண்டுகளாக வகித்துவந்த பொதுச் செயலாளர் பதவியை விட்டு விலக வேண்டும் என்று எதற்காக முடிவெடுத்தீர்கள் நிர்பந்தம் எதுவும் உண்டா?


எந்த நிர்பந்தங்களுக்காகவும் முடிவுகள் எடுப்பவன் இல்லை நான். என் மனதுக்கு சரி என்று பட்டதை தான் திருச்சி மத்திய கமிட்டியில் செய்தேன். புதிய பொதுச் செயலாளர் அறிவிப்பு செய்யப்பட்டது வேண்டுமானால், இப்போதாக இருக்கலாம். ஆனால் இப்படியொரு எண்ணம் எனக்கு ஓராண்டாகவே இருந்து வந்தது.


அமைப்புக்கு மணியம்மையார் தலைவரான பிறகு அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட போது என்னையே நிரந்தர பொதுச்செயலாளர்' என்று அம்மா அறிவித்தார். அவர் மறைவுக்குப் பிறகு நான் சந்தித்த சோதனைகள் வேறு யாரும் சந்தித்திருக்க முடியாது. பெரியார் திடல் பற்றி இந்த டிரஸ்ட் பற்றி வழக்குகள். அவை பிரச்சனை இல்லாமல் முடித்து விட்டன.


ஒரு காலத்தில் என்னை விட்டு விலகியிருந்தவர்கள் என்னை ஏற்றுக் கொள்ள மறுத்தவர்கள். என்னை எதிர்த்தவர்கள் எல்லாம் என்னை ஏற்றுக் கொண்டு இயக்கத்துக்கு மீண்டும் வரக்கூடிய மகிழ்ச்சியான சூழ்நிலையில் தான், பாதை செப்பனிட்டு இயக்கத்தை கற்கோட்டையாக்கிவிட்ட நிலையில்தான் பொதுச்செயலாளர் பதவிக்கு இளைஞர் ஒருவரை பரிந்துரை செய்தேனே தவிர, மற்றபடி வேறு உள்நோக்கமும் இல்லை"


அதுசரி அதற்கும் மேலான தலைமைப் பதவியில் நீங்கள் இப்போது நியமிக்கப்பட்டிருப்பது சிலரை விமரிசனம் செய்ய வைக்கின்றதே"


இளைஞர்களுக்கு பயிற்சி தர பொதுச் செயலாளர் பதவியைத் தந்ததை ஏற்கிறோம். ஆனால், நீங்கள் தலைமைப் பதவியில் இருக்க வேண்டும் என்று எல்லோரும் சொன்னார்கள்.


என்ன நோக்கத்துக்காக இந்த ஏற்பாட்டைச் செய்கிறேனோ, அதுவே கெட்டுப் போகும் என்று நான் சொன் னேன். அப்படியும் யாரும் ஏற்கவில்லை. இரண்டு மூன்று நாட்களானால் இது சரியாகிப் போய்விடும் என்று எதிர்பார்த்தேன் ஆனாலும் தொண்டர்கள் தொலைபேசியிலும் கடிதத்திலும் மீண்டும் மீண்டும் வற்புறுத்தி என்னை நிர்பந்திக்க தொடங்கி விட்டார்கள். 


அமைப்புக்கு புதிய எழுச்சி ஏற்படுத்த செய்த ஏற்பாடு, மன இறுக்கத்தை ஏற்படுத்துவது நல்லதல்ல என்றுதான் தலைவராக இருக்க சம்மதித்தேன். 


“நமக்கு தலைவர் என்றால் பெரியார்தான”' என்று எல்லாக் கூட்டத்திலும் பேசிவிட்டு பதவியை நீங்களே வகிப்பது நெருடலான விஷயமில்லையா?


அதில் எந்த மாற்றமும் இப்போதும் இல்லை பொதுச்செயலாளரோ,

தலைவரோ எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் என்னைப் பொறுத்தவரையில் நான் பெரியாரின் கொள்கை பேசும் ஒரு ஒலி பெருக்கி, பெரியாரின் கொள்கைகளை எழுதும் ஒரு பேனா, அவ்வளவுதான்.


இத்தனை ஆண்டுகள் இல்லாமல் திடீரென்று ஏன் இந்த மாற்றம் என்கிறார்கள். ஒரு இயக்கத்தின் கொள்கை தான் மாறக்கூடாது. முறைகள், திட்டங்கள் மாறலாம் தவறே இல்லை. விரிவுபடுத்துவது, பெரிதுபடுத்துவது தவறே இல்லை. சுருக்குவது. மறைப்பதுதான் தவறு. பெரியார் காலத்தில் இப்போது இருப்பது போன்ற பொறுப்புகள் பலதும் இல்லை அதற்காக அவை இப்போதும் வேண்டாம் என்றா நினைக்க முடியும்?


 "தலைவர், பொதுச் செயலாளர் என முக்கியப் பொறுப்புகளுக்கு பத்து நாட்களுக்குள் தனித்தனியே நடந்த நியமனங்கள். இயக்கமே குழப்பத்தில் இருக்கின்றதோ' என்று நினைக்க வைக்காதா?


"இந்த கருஞ்சட்டை இயக்கத்தின் யதார்த்தத்தை புரியாதவர்கள் தான். புதிய அறிவிப்புகளை பார்த்து குழம்புவார்களே தவிர, இயக்கத்தில் குழப்பம் இல்லை. என் மீது இருக்கும் அளவு கடந்த பாசம் தான் இந்த புதிய அறிவிப்புக்கு காரணம்


மத்தியில் பிஜேபி அல்லாத காங்கிரஸ் அல்லாத கட்சியின் கூட்டணி ஆட்சியை

அமைக்கப் பாடுபடப் போவதாக ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். அவருக்கு முழு அளவில் உதவுவதற்காகத்தான் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீங்கள் விடுவித்துக் கொண்டதாக ஒரு பேச்சு இருக்கிறதே?


நாங்கள் எந்தக் கூட்டணியிலும் சேராதவர்கள் அதுவும் அரசியல்வாதிகள் அல்ல.

அதே நேரத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு இயங்குபவர்களும் அல்ல. மக்களின் வாக்குகளைப் பெற்று ஒரு அரசு அமையும்போது. தன் சாதக பாதக அம்சங்கள்

எங்கள் இயக்கத்தையும். கொள்கைகளையும் பாதிப்பதால், அரசியலை உன்னிப்பாக கவனிக்கிறோம். அவ்வளவுதான்.


எப்படியிருப்பினும் மத்தியில் பிஜேபி காங்கிரஸ் அல்லாத ஒரு அரசை அமைப்பது என்ற முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.


”ஆனால் பிஜேபியை மிஞ்சும் அளவுக்கு இந்துத்வா கொள்கைகளை தமிழக அரசு பின்பற்றுவதாக குற்றச்சாட்டு உண்டே?” 


"நட்பைப் பற்றிக் கவலைப் படாமல் இதை நான் விமரிசனம் செய்துதான் வருகிறேன். புதிய தலைமைச் செயலகத்துக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பூமிபூஜை நடந்ததை கண்டித்தேன். இது திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைக்கு விரோதமானது தான்.


இந்துத்வா வோட்டு வங்கியை கணக்குப் பார்த்து இப்படிச் செய்தால் அதிமுக ஏமாந்துதான் போகும். தமிழ்நாட்டில் இந்துத்வா வோட்டு வங்கி என்பதே கிடையாது


  • (நன்றி: ஜூனியர் விகடன், 26.11.2003)


-விடுதலை நாளேடு, 29.11.2003

No comments:

Post a Comment