(அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய ‘வகுப்புரிமை வரலாறு’ என்ற நூலில் இருந்து தொகுக்கப்பட்ட பகுதிகள்)
சம்பூகன் கொலை சனாதன காலம்!
இன்றைய காலம் சமூக நீதி காலம்!
- அறிஞர் அண்ணாபார்ப்பனர் படிக்கலாம், பாடலாம், ஆடலாம், ஆண் பெண் வேற்றுமையின்றி கூடலாம், குலவலாம், பாடுபடாமல் பிறர் உழைப்பிலே வாழலாம். வளமாக வாழ்க்கை நடத்தலாம். சூத்திரருக்கு இந்த உரிமை கிடையாது. இதுபற்றி எண்ணவும் கூடாது - எண்ணுவது மாபாதகம் இம்மையிலும் கடுந்தண்டனை - மறுமையிலும் நரக வேதனை உண்டு.
சாம்பூகன் ஒரு சூத்திரன். பார்ப்பனருக்கு மாடு போல் உழைப்பதை மறந்தான். காட்டில் சென்று தவம் செய்து, 'பிறவிப் பெருங்கடல்' நீந்தும் பெரும் பணியில் ஈடுபட்டான். சாம்பூகன் பிறவாப் பெரியோனை நினைத்துக் கடும்புலி வாழும் காட்டில் கண்மூடி உட்கார்ந்தான். அயோத்தி நகர அக்ரகாரத்தில் பார்ப்பனக் குழந்தை ஒன்று முடிவாகக் கண்ணை மூடி விட்டது. குழந்தையைப் பெற்றோன், தசரதராமனின் அனுமதியின் அந்தப்புரம் சென்று, அடுக்குமா இராமா? உன்னுடைய ஆட்சியிலே இத்தகைய உற்பாதம் ஏற்படலாமா? தர்மம் தொலைந்ததே! அதர்மம் கோலோச்சுகிறதே! சனாதனம் சாய்ந்ததே! சண்டாளத்துவம் உச்சம் பெறுகிறதே! சம்பூகன் தவம் செய்கிறான்! அவன் சூத்திரன்! அவன் கடமை தவம் செய்தல் அல்ல! ஆண்டவனை அடைய அவன் முயற்சிப்பது அடாது! சுதர்மதத்தைச் சுக்கு நூறாக்குகிறான்! சனாதனத்தைச் சீரழிக்கின்றான் பிராமணோத்துமர்களுக்குப் பணிவிடை செய்வதன்றோ சம்பூகன் கடமை! சூத்திரனான சம்பூகன் குல தர்மத்தை கைவிட்டதால், ஜாதி ஆசாரத்தைத் துறந்ததால், அடிமை நிலைமை உதறித் தள்ளியதால், தர்மம் கெட்டது-தர்மம் குலையவே, என் குழந்தை இறந்தது! சூத்திரனின் துடுக்கடக்குங்கள்! தவக்கோலம் கொண்ட தருதலையின் தலையை வெட்டி வீழ்த்துங்கள்! குல தர்மத்தை மீறுவோருக்கு அது ஒரு படிப்பினையாக இருக்கட்டும்! முன்பின் யோசிக்காதே! தவசியைக் கொல்லாமா என்று தயக்கம் காட்டாதே தர்ம சொரூபி! நீ! அரசன் நீ! அரசனின் கடமை அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவது! தர்மம் இது என சனாதனம் கூறுகிறது! போ! போ! தர்மத்தைக் காப்பாற்ற, தவம் செய்யும் சூத்திர சம்பூகனின் தலையை தயை தாட்சண்யம் பார்க்காமல் வெட்டி வீழ்த்து! தர்மாத்மா என்ற புகழுக்குரியவனாக, அப்பொழுதுதான், இராமா பிராமணர், உன்னை ஏற்றுக் கொள்வார்!" என்று கதறினான்.
சம்பூகன் தலை, ராஜா ராமனால் துண்டிக்கப்பட்டது. பார்ப்பனக் குழந்தை உயிர் பெற்று எழுந்தது!
இதுதான் பிராம்மணியம் - சனாதனம் - வருணாஸ்ரமம் - முதல் போடாத ஆரிய சுரண்டல் இயந்திரம்.
இந்தச் சுரண்டல் அமைப்பு முறையில், தொழில் தூற்றப்பட்டது; உழவு பழிக்கப்பட்டது; மானம் நிந்திக்கப்பட்டது; வீரம் வாழ்க்கையை விட்டு விரட்டப்பட்டு விட்டது.
பக்கம்-26
கம்யூனல் ஜி.ஓ.வின் அடிப்படை இலட்சியம் இன்னும் முழு அளவில் நிறைவேறிடவில்லை. அதன் விடுதலை, பண்பாடு இன்னும் பட்டுப்போகவில்லை. பசுந்தளிர் போன்ற நிலையில்தான் இருக்கிறது. இன்றும் சிறிது காலத்திற்கு கம்யூனல் ஜி.ஓ.விற்கு அவசியமும், தேவையும் இருக்கிறது. மக்களாட்சி முறைக்குத் தேவைப்படுவது அய்யரும் அய்யங்காரும், முதலியாரும் நாய்க்கரும் அல்ல, மக்கள் மக்கள், அந்த மக்களை உண்டாக்குவதுதான் கம்யூனல் ஜி.ஓ. - சமூக நீதிமுறை.
அந்தக் காலம் பிராம்மணியக் கோட்பாடு நடைமுறையில் இருந்த காலம். அயோத்தி இராமன் அரசாண்டகாலம், வசிஷ்டர் அறிவுரைப்படி அரசன் நீதி வழங்கிய காலம்.
சமூகத்தை விட்டுப் பிரித்துத் தனி மனிதனை மதிப்பிட்டுப் பார்க்காத நிலை அன்று. தனி மனிதனுக்குத் தனி உரிமை, என்ற ஏற்பாடு இல்லை. சூத்திர சமூகம் தவம் செய்யக்கூடாது. சம்பூகன் சூத்திரன் தவம் செய்தது குற்றம். தண்டனை தரப்படுகிறது. மனுமுறைப்படி சக்கரவர்த்தி இராமனால் .
இன்று மக்களாட்சிக் கோட்பாடுப் பற்றிப் பேசப்படுகிற காலம். மனு கோட்பாட்டைப் பகிரங்கமாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டுமெனப் பேசமுடியாத காலம். சமூகம் சமூகமாகப் பேதப்படுத்திப் பார்ப்பது கண்டிக்கப்படும் காலம்.
எனவே, சனாதனப் பேச்சு மறைந்து ஜனநாயகப் பேச்சு கிளம்புகிறது. சமூக உயர்வு தாழ்வு பேசும் நிலையை மாற்றிக் கொண்டு தனிமனித உரிமை என்ற கூக்குரல் கிளப்பப்படுகிறது. தனிமனித உரிமைக்குச் சட்டபடி பாதுகாப்பும் செய்து கொண்டாகிவிட்டது.
சமூகத்தின் பெயர்கூறி, மனுவின் சட்டத்தைக் காட்டி, சம்பூகன் தலை துண்டிக்கப்பட்டது அன்று!
தனிமனிதனின் உரிமை பேச, இந்திய அரசியல் சட்டத்தைத் துணைக்கழைத்து, சமூகத்தின் பின்னணியில் இருக்கும், சம்பூகர்களின் -தலையை அல்ல - எதிர்கால வாழ்வு துண்டிக்கப்படுகிறது இன்று!
ஜனநாயக கோலத்தில் சனாதனம்! மக்களாட்சி முகமூடியில் பிராம்மணீயம்!
பக்கம்- 38
தொகுப்பு - செ.ர.பாரத்தசாரதி