வகுப்புக்கு ஏற்ற நீதி
--அறிஞர் அண்ணா
அரசாங்க அலுவல்களில் ஆட்களை அமர்த்தும் போதும், கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்கும்போதும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறையைக் கையாளுவதென்று சென்னை அரசாங்கம் உறுதி பூண்டு வருகிறது. அரசாங்கம் கையாண்டிருக்கும் இந்த உறுதியைக் கண்டிக்க, வகுப்பு வாத நச்சுநீரை. ஓய்வு ஒழிவில்லாமல் மறைமுகமாகப் பொழிந்து கொண்டிருக்கும் சில பத்திரிகைகளும், பிறரும் சீறிப்பாய்ந்த வண்ணம் இருக்கின்றனர். வகுப்பு நலன்கள் எவ்வகையிலும் குறைந்துவிடாமல் பாதுகாத்துத் தம்முடைய இனத்திற்குச் சேவை செய்வதிலே அல்லும், பகலும் அயராது முனைந்து நின்று பாடுபட்டு வரும் பத்திரிகைகளிலே, தலை சிறந்து விளங்கும் 'இந்து'வும், 'சுதேசமித்திரனும் இப்பொழுது சினம் மேலிட்டுத் தலை துள்ளிக் குதிக்கின்றன.
நம் நாட்டின் அமைப்பில் சாதிப் பிரிவுகள் தோன்றி, உயர்ந்த சாதிக்காரர்களெனப் பெயர் பெற்ற ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் வாழ்க்கை வசதிகளனைத்தும் பெறும் படியான நிலைமையும், இடைத்தர சாதிக்காரர்கள் பிற்போக்கு வகுப்பினர்கள் எனக் கருதப்பட்டு வாழ்க்கை வசதிகளிலே பல மறுக்கப்படும் படியான நிலைமையும், தீண்டப்படாத சாதியினர் சிலர், தாழ்த்தப்பட்டவர்களாக ஆக்கப்பட்டு, வாழ்க்கை வசதிகள் அனைத்தும் மறுக்கப்படும்படியான நிலைமையும் பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நின்று நிலவிவரும்படியான முறை ஏற்பட்டு விட்டது.
சாதியின் காரணமாக ஒரு கூட்டம் உல்லாச வாழ்வு வாழவும், சாதியின் காரணமாகவே மற்றொரு கூட்டம் அடிமைவேலை செய்து உழலவும் ஆன நிலைமையை அறிந்த நீதிக்கட்சி, சாதியின் காரணமாக வீழ்த்தப்பட்டவர்களை உயர்நிலைக்குக் கொண்டு வரவேண்டுமாயின், அந்தச் சாதியின் காரணத்தைக் காட்டித்தான் உயர் நிலைக்கு ஏற்ற முடியும் என்று பேருண்மையைத் தெரிந்து கொண்டு, தான் ஆட்சிப்பீடம் அமரும்போது, வகுப்புகளுக்கு நீதி வழங்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறையை அமுலுக்குக் கொண்டு வந்தது.
எல்லா வகுப்பினரையும், ஏற்றத் தாழ்வின்றி, ஒரே நிலைக்குக் கொண்டு வர, வீழ்ந்துகிடக்கும் சமுதாயத்திற்கு அவையவை வீழ்ந்து கிடக்கும் அளவுக்கு ஏற்ப நீதி வழங்க வேண்டும் - சலுகை காட்ட வேண்டும் - கை கொடுக்க வேண்டும் - இடமளிக்க வேண்டும் என்று கருதியே வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் துறைகளிலெல்லாம், வகுப்புவாரி முறையைக் கொண்டுவரத் திட்டம் தீட்டியது நீதிக்கட்சி. தன் ஆற்றலுக்கு ஏற்ற அளவுக்கு அந்தத் திட்டத்தை நடைமுறையில் கொண்டு வரவும் பாடுபட்டது.
வகுப்புவாரி முறையைக் கல்லூரிகளிலும் அரசாங்க அலுவல்களிலும், நீதிக்கட்சி புகுத்திய பிறகுதான், பிற்போக்கு வகுப்பினர் ஓரளவுக்குக் கல்வி பெறவும், சமுதாயத்தில் ஓரளவுக்குச் சமநிலை பெற்று மதிப்படையவும் வழி ஏற்பட்டது. இந்த முறையை அமுலுக்குக் கொண்டு வந்தபோது, அதன் உட்கிடக்கையை அறியமாட்டாத காங்கிரஸ்காரர்கள் நீதிக்கட்சியை வகுப்புவாதக் கட்சி என்று தூற்றினர்; கேலி செய்தனர்; வசைமாரி பொழிந்தனர். உயர்சாதி வகுப்பினர் காங்கிரஸ்காரர்களின் இந்தப் போக்குக்கண்டு அகங்குளிர்ந்தனர்; புளகாங்கிதம் கொண்டு மகிழ்ச்சிக் கடலில் நீந்தினர்.
பார்ப்பனரல்லாத காங்கிரஸ்காரர்கள், இன்று, ஆட்சிப் பீடம் ஏறிய பிறகு வகுப்புவாரி முறையின் உண்மையையும், அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் உணருகிறார்கள். சூழ்நிலை அந்த நிலைமைக்கு அவர்களைக் கொண்டு வந்து வைத்துள்ளது. வகுப்புவாரி முறை இருந்து தீர வேண்டியதன் அவசியத்தை மந்திரிகள் கோபால் ரெட்டியும், பக்தவச்சலமும் அண்மையில் வற்புறுத்தியதை நன்கு அறியலாம். நீதிக்கடசியின் இந்தக் கொள்கையை காரசாரமாக, மட்டரக சொற்களால் கூட, திட்டி தூற்றி வந்த 'தினசரி' யார் இன்றுள்ள நிலையைத் தெரிந்து வகுப்புவாரி முறைக்கு வாதாடி நிற்கிறார்கள். காங்கிரஸ்காரர்களின் உள்ளம் இந்த அளவுக்கு பண்பட்டது கண்டு நாம் மகிழ்கிறோம்.
வகுப்புவாரி முறையை அரசாங்கம் கையாள வேண்டியதன் இன்றியமையாமையையும், சில காலம் வரையில் அரசாங்க ஏடுகளில் சாதிப் பெயர் குறிக்க வேண்டியதன் அவசியத்தையும் குறித்துச் சென்னை அரசாங்கத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் குறிப்பிடுவதைக் காணுங்கள்.
“வகுப்பு வேற்றுமைகளை ஒழிப்பது என்பது, சமுதாயம் மேற்கொள்ள வேண்டியதொரு சீர்திருத்தமாகும். சமுதாயத்தில் வளரும் எண்ணங்களின் முற்போக்குக்கு ஏற்றபடி, அரசாங்கம் இவ்விஷயங்களில் எடுத்துக் கொள்ளும் நடவடிக்கை படிப்படியாகக் கொள்ளக்கூடியதாகத் தானிருக்கும். அரசாங்கம் மட்டும் தன் ரிகார்டுகளில் சாதிப் பெயரைக் குறிக்காமல் விட்டுவிடுமேயானால், அதே சமயத்தில் வெளியுலகில் சாதிப் பெயரைக் குறிப்பிடும் பழக்கம் இருந்துவருமேயானால், அது ஒழுங்கற்ற முறைகளிலும், ஆட்சி முறைச் சங்கடங்களிலும் கொண்டு போய்விடும்" என்று கூறியுள்ளார்.
சமுதாயத்தில் மக்கள் சமநிலை அடைய வேண்டுமானால், வகுப்புகளுக்குச் சமசந்தர்ப்பங்கள் வழங்கப்பட வேண்டும். சம சந்தர்ப்பங்கள் ஏற்பட வகுப்புகளுக்கு ஏற்ற நீதி கொடுக்க ஒவ்வொரு சாதியின் நிலைமையை அரசாங்கம் உய்த்துணர வேண்டியிருக்கிறது. ஆகவேதான் வகுப்புகளைப் பிரித்துக் காணவேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இருக்கிறது என்று அரசாங்க அதிகாரி கூறும் காரணத்தை நாம் போற்றுகிறோம்.
எந்தச் சாதிப் பெயர்களின் காரணமாகச் சமுதாயத்தில் பலர் வீழ்ச்சியுற்றார்களோ அதே சாதிப் பெயரின் காரணமாக அவர்களுக்கு மீட்சி தரவேண்டிய பொறப்பு அரசாங்கத்தைச் சார்ந்ததாகும். இந்நாட்டில், சமுதாயத்திலுள்ள மேடு பள்ளங்கள் சமதரை ஆகும் வரை வகுப்புவாரி முறை அரசாங்கத்தால் கையாளப்பட்டே தீரவேண்டும்.
சமுதாயத்திலுள்ள ஏற்றத்தாழ்வு மனப்பான்மைகளைப் போக்கி, சமுதாயத்தைச் சீர்திருத்தும் பெரும்பணியை திராவிடர் கழகம் செய்துவருகிறது. அரசாங்கத்திற்கு உதவியாக இருக்கும் பொருட்டு, திராவிடர் கழகம் சமுதாயம் முழுவதையும் சீர்திருத்தி வெற்றிக் கொடியை நாட்டும்போது, அரசாங்கம் வகுப்புவாரி முறையைக் கையாள வேண்டிய அவசியம் ஏற்படாது. வகுப்புக்களுக்கு ஏற்ற நீதி கிடைத்து, சமுதாயம் உயர் நிலையடையத் திராவிடர் கழகத்தின் தொண்டும், அரசாங்கத்தின் அணைப்பும் நாட்டிற்குத் தேவைப்படுகின்றன. எனவேதான், நாட்டிலுள்ள சாதிப் பாகுபாடுகள் அனைத்தும் ஒழிந்து, மக்கள் அனைவரும் சமுதாயத் துறையில் (பொருளாதாரத் துறையில் அல்ல) 'ஒன்றே குலம்' என்ற நிலை ஏற்படும் வரையில், இந்த வகுப்புவாரி முறை - அதாவது வகுப்புக்கு ஏற்ற நீதி வழங்கப்படவேண்டுமென்ற ஏற்பாடு இருந்தே தீரவேண்டுமென்று வற்புறுத்துகிறோம்.
- "திராவிட நாடு " 12-6-49
குறிப்பு; அறிஞர் அண்ணா எழுதிய ‘வகுப்புரிமை வரலாறு’ என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment