Thursday, 24 October 2024

சங்ககாலம் பொற்காலமா? – ஒரு பகுத்தறிவுப் பார்வை -1

 


ஜனவரி 16-31 - 2014

– பேராசிரியர் ந.வெற்றியழகன்

எதனைச் சங்ககாலம் என்பது:

சங்ககாலத் தமிழர் வாழ்வியல்  _ பற்றி ஆய்வு செய்வதற்கு முன்னர் சங்கம் என்பது எந்தச் சங்கத்தைக் குறிக்கும்? என்று தெளிவுபடுத்துவது தேவை.

ஏற்கெனவே இருந்ததாகக் கூறப்பட்டு அவை கடற்கோளால் கொள்ளப்பட்டுப் போயின என்பது நமக்குத் தேவையில்லை.

அந்தச் சொல்லாடலில் நாம் சொல்லப்போவதும் இல்லை. நாம், சங்ககாலம் என ஆய்வுக்கு எடுத்துக் கொள்வது கடைச்சங்கம் என்று சொல்லப்படும் அமைப்பு இருந்த காலத்தையேயாகும். இதன் காலம் பற்றிப் பல கருத்து வேறுபாடுகள் உண்டு; எனினும், ஆய்வு நோக்கம் கருதி கி.மு.500 _ கி.பி.100 என்கிற காலகட்டத்தை ஏற்று, அதனையே கடைச்சங்க காலம் என்றும், சுருக்கமாக, சங்க காலம் என்றும் கொண்டு அந்தச் சங்ககாலத் தமிழர் வாழ்வியல்பற்றி பகுத்தறிவுப் பார்வையைப் படரவிட்டிருக்கிறோம்.

இலக்கிய வரலாற்றாசிரியர்கள் இயம்புவது

சமுதாய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு _ என்னும் 400 பக்க அளவிலான ஒரு நூலில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. சங்ககாலத்தைப் பொற்காலம் என இலக்கிய வரலாற்றாசிரியர்கள் இயம்புகின்றனர். தமிழ் மொழியும் தமிழர் வாழ்வும் அக்காலத்தில் மேலோங்கி இருந்தமையைச் சங்க நூல்கள் காட்டுகின்றன.

ஆக, தமிழ்மொழியும் தமிழர் வாழ்வும் மேலோங்கி இருந்ததால் அந்தக் காலம் அதாவது சங்ககாலம் பொற்காலமாம்!

பொன்னான வாழ்வு மண்ணாகிப் போச்சே!

பொற்காலமாகத் திகழ்ந்த சங்ககாலம் போல இந்தக் காலம் இல்லையே? அந்தக் காலம் மறைந்து போயிற்றே? அந்தப் பொன்னான வாழ்வு மண்ணாகிப் போனதே! என, தமிழார்வம், தமிழ்ப்பற்றுணர்ச்சி காரணமாகப் பலரும் பாராட்டு மழையில் நனைகின்றனர். இது உண்மைதானா? ஆய்வு செய்ய இருக்கிறோம்! பகுத்தறிவுப் பார்வையைப் படரவிட இருக்கிறோம்.

இன்றைய ஏற்றம்

இயற்பியல், வேதியியல், பயிரியல், உயிரியல், வானியல், அணுவியல், பொறியியல், மருத்துவ இயல் முதலான அறிவியல் துறைகளின் பேருண்மைகள், பெருவிளைவுகள் இன்று மாந்த சமுதாயத்திற்குப் பெரிதும் பயன்பட்டு வருகிறது.

இலக்கிய எழுச்சி

தொன்மையும் வளமான தன்மையும், முன்மையும் கொண்ட நம் அன்னைத் தமிழ் பற்றியும், அதில் உண்டான இலக்கியங்கள் குறித்தும் நாம் பெருமிதம் கொள்வது இயற்கையே! அவ்வப்பொழுது, நிலவிய சமுதாய அமைப்பினை எதிரொளி(லி)க்கும் இலக்கியப் படைப்புகளும் தோன்றின என்பது உண்மை. அதுசரி, அதனால், சங்ககாலத் தமிழர் வாழ்வியல் பொற்காலமா?

ஆரியம் தழைத்திருந்த அந்தக் காலம்

பொதுவாகவே, இந்திய நிலப்பரப்பினர் அல்லது தமிழர்களின் பொற்காலம் என்று புகழ(ல)ப் படுவதற்குக் காரணம், அந்தக் காலம் ஆரியம் அல்லது பார்ப்பனியம் செழித்து, கொழித்து தழைத்து இருந்தமையே என புதிய வரலாற்றாசிரியர்கள் புகல்வர். சங்க காலம் அதனால்தான் பொற்காலமா? 7 பகுதிகளாகப் பகுத்துக் கொண்டு நம் பகுத்தறிவுப் பார்வையைச் செலுத்துவோம்!

பகுதி (1): தழைத்தோங்கிய தனியுடைமைக் கோட்பாடு

வள்ளல்களும் வறியவர்களும்  பத்துப்பாட்டு, எட்டுத்தொகைப் பாடல்கள் பெரும்பாலும் மன்னர்களையும், குறுநில மன்னர்களையும் நிலக்கிழார்களையும் போற்றிப் புகழ்ந்து பரிசு பெற வறுமையில் வாடிய பாவலர்கள் பாடிய பாடல்கள், தம் வாழ்க்கையை நடத்துவதற்கு வேறு வழியின்றியே அவ்வண்ணம் பாட வேண்டிய நிலை இருந்தது.

கொடை மிகுந்ததாகவும் வள்ளல்கள் நிறைந்தவர்களாகவும் காணப்படும் சமுதாயம் வறுமை மிகுந்ததாகத்தானே இருக்கும்? மக்கள் வறுமை, பாவலர் வறுமை, கலைஞர்கள் துயரம் இவை நீக்க மன்னன் கொடைத் திறம் இவற்றைச் சங்க நூல்கள் விளக்கும்.

பசித்த வயிறு; பழங்கந்தல் உடை

வயிற்றில் பசியுடன், புறத்தில் பழங்கந்தல் உடையுடன் கூட்டங்கூட்டமாகச் சுற்றித் திரிந்த மக்கட் பிரிவினர் இருந்தனர். யாழ் கையிலே! பசி வயிற்றிலே! பொருத்தப்பட்ட பழங்கந்தை இடையிலே!! -என்ற பொருளில் கையது கடன் நிறை யாழே! மெய்யது
புரவலர் இன்மையின் பசியே! அரையது
வேற்றிழை நுழைந்த வேர்நனை சிதாஅர்
ஓம்பி உடுத்த உயவற் பாண!
இதன் பொருள்: பாணனே! (பாடிப் பரிசு பெற்று வாழும் பாடகன்) யாழ் கையிலே! பசி வயிற்றிலே!! பொருத்தப்பட்ட பழங்கந்தை இடுப்பிலே உடைய பாணனே! உன் பசி எங்கே தீரும் தெரியுமா?

மன்னன் கிள்ளிவளவனிடம் செல்வாயாக! இதுதான் பாடிப் பிழைக்க வேண்டிய பாணனுக்குக் கூறும்வழி. இது ஆலத்தூர் கிழார் பாடிய பாடலின் கருத்து.

இதிலிருந்து தெரிவது என்ன?

இதிலிருந்து இரு கருத்துகள் தெளிவு. ஒன்று, பசித்த வயிற்றுடனும் பழங்கந்தையுடனும் கூட்டங் கூட்டமாகச் சுற்றித் திரிந்த மக்கள் பிரிவினர் இருந்தனர். மற்றொன்று, பொன்னையும் பொருளையும் தேரையும் நாட்டிலுள்ள அனைத்துப் பொருள்களையும் தம் பொருளாக்கிக் கொண்டு வாழ்ந்த மன்னவன் இருந்தான்.

இருப்பவன் – இல்லாதவன்

மன்னனைப் புகழ்ந்துபாடி, அவனிடம் பரிசு பெற்று வாழும் பாணனைக் காண்கிறோம். மக்கள் பற்றிய சமுதாய நிலை இது. உடையவன் _ இல்லாதவன் வாழ்ந்த நிலை இது! இருப்பவன் இல்லாதவருக்கு ஈந்து தன் ஈகைப் பண்பினைக் காட்டிக் கொள்கிறான். இது போற்ற வேண்டிய பண்புதான்! ஆனால், இருப்பவன் _ இல்லாதவன் என்ற நிலையில் அந்த ஈகை பிறந்தது என்ற சமுதாய நிலையை நாம் பொற்காலம் என்று கூறி நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்கிறோமே? கற்றவர், கவிஞர், கலைஞர்கள் மன்னனைக் கண்டு கொடை பெற்றால் பிறர் நிலை _ கல்லாதார் நிலை, வாழ்வு எப்படி இருந்திருக்கும்? கொடை மிகுந்து காணப்படும் சமுதாயத்தில் வறுமை மிகுந்துதானே இருக்கும்?

பறைசாற்றும் பாடல்கள்

செல்வர்களும், வணிகர்களும் பல்லடுக்கு மாளிகைகளில் வாழ, வறியோரும் உழவர்களும் தனிச் சேரிகளில் இருந்தனர் எனப் பாடல்கள் பல பேசுகின்றன. இல்லை, பறைசாற்றுகின்றன.

இருக்கும் இடம் எதுவோ?

சுற்றம் சூழ, சின்னஞ்சிறுவர்கள் எறும்புக் கூட்ட வரிசைபோல நீண்டு, சாரைசாரையாகச் சென்று கொண்டிருக்கின்றனர். எறும்புகளின் வாய் நின்ற முட்டைகள்போல சிறுவர்களின் கைகளில் சோற்று உருண்டைகள் காயும் கும்பியை நிரப்ப. ஒரு கவளச் சோற்றுக்காகப் பறக்கும் வேதனைக் காட்சி. பாணன் ஒருவன், அவர்களைப் பார்த்து வழி கேட்கிறான். வழி எதற்கு? தன் கொடிய நோய் நீங்க! என்ன நோய்? பசி, பசி, மருத்துவன் யார்? சிறுகுடிக்கிழான் பண்ணன் என்பவன், சங்ககாலத்தில் நிலவியிருந்த வறுமை நிலையை குளமுற்றத்துத்துஞ்சிய சோழன் கிள்ளிவளவன் இந்தக் காட்சியை உயிரோவியமாகத் தீட்டியுள்ளான். யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய! என்பது அந்தப் புகழ்மிகு கிள்ளிவளவனின் பாடல் முதலடி. பொருளியல் வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள் இல்லாதவர்கள் உள்ளவர்களிடம் அடிமை வேலைகள்; அதற்குரிய ஊதியம் பெறும் தொழிலாளிகளும் இருந்தனர்.

எப்படி இருந்தது?

சங்ககாலச் சமுதாயம் இன்றுள்ள வர்க்க சமுதாயத்தின் முன்னோடிதான் உடைமையாளர், அவன் கீழ் உழைத்தவன் என்ற வர்க்கப் பிரிவுகள், உடைமையாளனுக்கே ஆட்சி என்பதன் ஆணிவேர் சங்ககாலம்தான். இன்று உடையவன் _ இல்லாதவன், செல்வன் _ வறியவன் என்று இருப்பது போலவே சங்க காலத்திலும் மக்கள் பல வேறு வர்க்கங்களாகப் பிரிந்திருந்தார்கள். இல்லாரும் இலர்; உடையாரும் இலர் என்ற நிலை சங்ககாலத்தில் இல்லை.

வர்க்கபேத வல்லாண்மை

சங்க இலக்கியங்கள் தரும் காட்சி வர்க்க பேதமற்ற வறுமையற்ற எல்லாரும் எல்லாமும் பெற்றிருந்த பொற்காலம் என்று நினைப்பது சரி அன்று. பத்துப்பாட்டில் வரும் நெடும்பாடல்கள் சோழ, பாண்டியர்களின் பேரரசுகள் பற்றியதாகும். கடற்கரை ஓரங்களிலும் ஆற்றங்கரை ஓரங்களிலும் நகரங்கள் தோன்றி மக்கள் வர்க்கப் பிரிவுகளாக வாழ்ந்த நிலையும் ஆண்டான் _ அடிமை வாழ்வும் வாழ்வின்றிச் சீரழிந்தோர் நிலையும் கண்ணாடி போல் விளக்கப்பெற்று ஒரு வர்க்க சமுதாயம் நிலவுடைமை, வல்லாண்மை அமைந்த அமைப்பு இருந்ததைக் காணமுடிகிறது.

பகுதி (2) : புகழ்வேண்டி மேற்கொண்ட போர்ப்பண்பு

சண்டைச் சமுதாயம்:  சங்ககாலச் சமுதாயம் சண்டையிடும் சமுதாயம்; போர்ச் சமுதாயம். இளைஞர்கள் போர்க்கலன்கள் ஏந்தி போர்க்களம் சென்று போர் புரிவதே அவர்கள் கடமை.

இன்னின்னார் கடமை இதுதான்!

சங்கப்பாடல் ஒன்று கூறுவதைப் பார்ப்போம். பொன்முடியார் என்கிற பெண்பால் புலவர் தாய், தந்தை, அரசன், தொழிலாளி, மகன் முதலியோர்க்குரிய கடமைபற்றிப் பாடுகிறார். ஈன்று மகனை வளர்ப்பது ஒரு தாயின் கடமை; அவனை வீரன் ஆக்குவது தந்தையின் கடமை; வேல் வடித்துக் கொடுப்பது கொல்லன் கடமை; போர்ப்பயிற்சி தருவது மன்னவன் கடமை; வாள் எடுத்துப் போர்க்களம் புகுந்து, போரிடுதல் மகன் ஆகிய இளைஞனின் கடமை! என்பது, ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே என்று தொடங்கும் அந்தப் பாடலின் கருத்து. இதிலிருந்து, ஒரு மகன், (இளைஞன்) போரிடுவதே அவனுக்கு இன்றியமையா கடமை என்று தெரிகிறது. அத்தோடு, பிள்ளையைப் பெற்று வளர்ப்பதுதான் ஒரு பெண்ணின் கடமை; வேறொன்றும் இல்லை எனத் தெரிய வருகிறதல்லவா?

ஓர் இளைஞன் கல்வியாளனாகவோ அறிஞனாகவோ, ஆகவேண்டாம்! (சான்றோன் என்ற சொல்லுக்கு இந்த இடத்தில் போர்வீரன் _ என்றே மூத்த தமிழாய்வறிஞர் மயிலை. சீனி.வேங்கடசாமி கூறுகிறார்.)

செத்து மடிந்த சின்னஞ் சிறுவன்

ஒக்கூர் மாசாத்தியார் என்னும் பெண்புலவர், முன்பு அவள் அண்ணன், கணவன் போரிடச் சென்று மடிந்த பின்னும், தன் சின்னஞ்சிறு மகனை, கையிலே வேல் தந்து களம் அனுப்பிய செய்தியைப் பாடுகிறார்.

வீரமா? கோரமா?

பால்மணம் மாறாத பாலகன்கூட, போர்க்களம் புகுந்து போர்புரிவதைத் தவிர்க்க முடியாத நிலை சங்க காலத்தில் நிலவியதைக் காட்டுகிறது. இன்னும் சான்றுகள் நிறையக் காட்டலாம். விரிவஞ்சி விடுக்கின்றோம். போர்ச் சமுதாயத்தில் இளம் வீரர்கள் அல்லது சிறார்கள் கொத்துக் கொத்தாக மடிய நேர்ந்த உண்மையை மறுக்க முடியுமா?

கொள்ளையோ கொள்ளை!

இவை மட்டுமா? ஓர் அரசன் மற்றோர் அரசனை அழித்து அவன் நாட்டுச் செல்வத்தைக் கொள்ளை அடிப்பது அன்றைய சமுதாய நிலை. பாண்டியன் நன்மாறன் பிற நாடுகளைத் தாக்கி அழித்து அவர்களின் செல்வத்தை அள்ளிக் கொண்டு வந்தான்.

வண்ணக்கன் பேரி சாத்தனார் பாடிய புறப்பாடல் வழி இவ்வுண்மையை அறிகிறோம்.

இப்படிப்பட்ட அரசனைப் புகழ்ந்து பாடிய கவிஞர், புலவர்கட்குப் பரிசில் கிடைக்கும். போர்க்கள வெற்றி, பகையழித்த செயல் கொள்ளை கொண்ட பொருள்கள், பகை மன்னர் அழிதல் _ இவை வீரம் ஆகுமா?

பகுதி (3): ஆழமாய்ப் பதிந்த ஆரியப் பண்பாடு பாவாணரின் படப்பிடிப்பு

பழங்குடிப் பேதைமை; மதப் பித்தம், கொடை மடம் எனும் முக்குற்றமும் ஒருங்கு கொண்ட மூவேந்தரும் பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் பிராமணரை முற்றிலும் பின்பற்றியதால் கடைக்கழக(சங்க)க் காலத்தில் மதவியல், குமுகாய (சமுதாய) இயல், மொழியியல் என்னும் முத்துறையிலும் ஆரியம் வேரூன்றிவிட்டது _ என்கிறார் மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் அவர்கள். (நூல்: தமிழர் வரலாறு _ பக்கம் 248)

வேரூன்றிய வேதக்கருத்துகள்

அரண்மனைகளிலும், கோவில்களிலும், செல்வர் மாளிகைகளிலும், வழிபாடுகளும், சடங்குகளும் பிராமணர்களால் சமஸ்கிருதத்திலேயே நடத்தப்பட்டன. _ (பாவாணர்: நூல்: திருக்குறள் தமிழ் மரபுரை_ பக்கம் 19)
சனாதனப் பிடிப்புகளும், வேள்விகளும் தமிழர் வாழ்வைச் சங்ககாலத்தில் தாக்குதலுக்கு உள்ளாக்கியதோடு வேதக் கருத்துகளும் புராணப் பெருக்கமும் நிலைபெற்றுவிட்டன. முதலில், வேள்விகளின் செல்வாக்கு பற்றிப் பார்ப்போம்.
வேத வேள்விகள்:

சங்க காலத்தில் நடந்த வேள்விபற்றி, சிந்தனைச் செம்மல் கு.ச.ஆனந்தம் பின்வருமாறு நேரடி வருணனை செய்வதை முதலில் பார்ப்போம். விதானத்தடியில் பருந்துருவம் கொண்ட பல்வகை வேள்விச் சாலைகள்; விலங்கினங்களின் உயிரைச் செருக்கும் பலிபீடங்கள்; யூபம் என்ற (யாக) நெடுந்தூண்களில் கட்டப்பட்ட விலங்கினங்கள்; முத்தீச் செல்வர்கள் வளர்த்த அழற்குண்டங்கள்; முப்புரி நூலணிந்து, மான் தோலுடை பூண்டு அருமறை மந்திரங்களை அடுக்கடுக்காய் உச்சரித்து, அனல் கக்கும் குழியில் குடம் குடமாய் நெய்யை ஊற்றி, பல விலங்குகளின் உயிர்க் குலைகளை அறுத்தெடுத்து அதன் பச்சை இரத்தத்தைத் தீயில் பொழிந்து, வெட்டுண்ட உடலத்தை வாட்டி எடுத்து, வேற்றுலக வாழ்க்கைக்கும் இவ்வுலக இன்பத்திற்கும் வழிகாட்டும் விளக்கங்கள் _ (நூல்: வடிவிழந்த வள்ளுவம். பக்: 7-_8)

அள்ளி அள்ளி

பத்துப் பெருவேள்வி செய்து, இறுதி வேள்வி செய்கையில், தன் மனைவியுடன் விண்ணுலகடைந்ததாகச் சொல்லப்பட்ட பாலைக் கவுதமனார் பார்ப்பனருக்குத் துணையாயிருந்து வேள்வி நடாத்தி, பெருங் கொடைகளை அவர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்த வேந்தர் பெருமக்களும் சங்கத் தமிழகத்தில் வாழ்ந்தவர்கள்தாம்!


No comments:

Post a Comment