• Viduthalai
சென்னை சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த டாக்டர் சுப்பராயன் 31.1.1933 அன்று கோயில் நுழைவு உரிமைக்கான சட்டவரைவு ஒன்றை கொண்டு வந்தார். சுப்பராயன் எதிர்க் கட்சியைச் சார்ந்தவர் என்ற காரணத்தினால், நீதிக்கட்சியினர் இதை ஆதரிக்காமல் விட்டுவிடக் கூடாது. இம் மசோதாவை கட்டாயம் ஆதரிக்க வேண்டும் என்று மசோதா வரும் முன்பே பெரியார் எழுதினார் (குடி அரசு - 10.11.32).
இம்மசோதா மீது நடைபெற்ற விவாதத்தில் ரெட்ட மலை சீனிவாசன் உட்படப் பலரும் பேசினர். நீதிக் கட்சியில் சிலர் ஆதரித்தனர், சிலர் நடுநிலை வகித்தனர். மசோதாவுக்கு ஆதரவாக 56 வாக்குகளும் நடுநிலையாக 19 வாக்குகளும் பதிவாயின. எதிர்ப்பு என்பதே இல்லை. சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவுக்கு வைசிராய் ஒப்புதல் கொடுக்காத காரணத்தால் சட்டமாக் கப்படவில்லை.
சுப்பராயன் மசோதாவிற்கு மாற்றாக டெல்லி சட்ட சபையில் (பார்லிமெண்ட்) 24.3.1933 அன்று ரங்க அய்யர் கோயில் நுழைவு மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவில் பல குறைபாடுகள் இருந்தன. இதனால் இதை அம்பேத்கர் ஆதரிக்க மறுத்தார். காந்தி இதை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய ஜி.டி. பிர்லா, ராஜாஜி, தேவதாஸ் காந்தி ஆகியோர் கொண்ட குழுவை அமைத் தார். ஆனால், 1935இல் தேர்தல் வருவதைக் கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சியினர் இம்மசோதாவை விவா தத்திற்கு எடுத்துக் கொள்ளாமலேயே விட்டுவிட்டனர்.
சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி 1937 தேர்தலில் தோல்வி கண்டது. இதையடுத்து 1937இல் ராஜாஜி முதல் அமைச்சரானார். 15.8.1938 அன்று எம்.சி. ராஜா கோயில் நுழைவு மசோதா ஒன்றை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து, டாக்டர் சுப்பராயன் மசோதாவிற்கு, கவர்னர் ஜெனரல் ஒப்புதல் தரவில்லை. ரங்க அய்யர் மசோதா புதைக்கப்பட்டது.
எனவே, கோவில் நுழைவு உரிமைக்காக நான் இப்போது இந்த மசோதாவை தாக்கல் செய்கிறேன் என்றார். முதல்வர் ராஜாஜி, வேண்டாம் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றார். முடியாது விவாதத்திற்கு எடுத் துக் கொண்டே ஆக வேண்டும் என்பதில் எம்.சி. ராஜா பிடிவாதமாக இருந்தார். உடனே ராஜாஜி இந்த மசோ தாவை எதிர்த்துப் பேசிவிட்டு வாக்கெடுப்புக்கு விட்டார். இதற்கு 24 பேர் ஆதரவு தெரிவித்தனர்; 130 பேர் எதிர்ப்புத் தெரிவித்தனர். எம்.சி.ராஜா கொண்டுவந்த ஆலயப் பிரவேச மசோதாவை அமல்படுத்த தயங்கிய ராஜ கோபாலாச்சாரியாரை கடுமையாக எதிர்த்து குடிஅரசு, விடுதலை இதழ்களில் தொடர்ந்து எழுதினார் பெரியார்.
1939இல் எந்தவித முன்னறிவிப்புமின்றி யாருக்கும் தெரியாமல் கடைசி நேர இரவு பூஜைக்குப்பிறகு சில தாழ்த்தப்பட்டவர்களோடு மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் நுழைந்ததன் மூலம் அகில இந்தியப் பத்திரிகைகளில் தன்னை விளம்பரப்படுத்தி கொண்டு ராஜாஜி, காந்தி போன்றவர்களின் பாராட்டை பெற்றவர் வைத்திய நாத அய்யர்.அய்யர்வாளின் திடீர் ஆலயப் பிரவேசத்திற்கு அவசியம் என்ன?
தமிழகமெங்கும் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத் தினால் தலை தூக்கமுடியாமல் கிடந்தது காங்கிரஸ் கட்சி. அதோடு கோவில் நுழைவு மசோதாவை அமல்படுத்தாத ராஜாஜி அமைச்சரவை பார்ப்பனரல்லாதாரின் கடுங் கோபத்திற்கு ஆளாகியிருந்தது. அப்படி ஒரு மோசமான சூழலில் நடை பெற இருந்த மதுரை, இராமநாதபுரம் ஜில்லா போர்டு தேர்தல்களில் காங்கிரஸ் மண்ணைக் கவ்வாமல் இருக்க ஏற்படுத்தப்பட்ட ரகசியத்திட்டம்தான் வைத்தியநாத அய்யரின் திடீர் ஆலயப்பிரவேசம்!
No comments:
Post a Comment