Tuesday 27 July 2021

பெரியார் கிராமம் "திருவிளையாட்டம்" !

பெரியார் கிராமம் "திருவிளையாட்டம்" !

-கி.தளபதிராஜ் (விடுதலை 27.7..2016)

"தீண்டாமை முற்றிலும் ஒழிக்கப்பட்ட கிராமமாக" திருவிளையாட்டம், தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி 2013-2014 ம் ஆண்டிற்கான விருதையும், பரிசுத் தொகை ரூ.10 லட்சத்தையும் மாவட்ட ஆட்சியர் திருவிளையாட்டம் ஊராட்சி மன்றத் தலைவரிடம் வழங்கி பாராட்டியுள்ளார். 

எந்த வித ஜாதி சச்சரவுகளுக்கும் இடம் தராமல் அனைத்து தரப்பினரும் சகோதரத்துவத்துடன் பழகும் கிராமமாக, பொதுச்சுடுகாடு, பொதுக் கிணறு, கோயில் என எந்தப்பாகுபாடுமின்றி எல்லோரும் புழங்கும் கிராமமாக திருவிளையாட்டம் இருந்து வருகிறது.

சுமார் முக்கால் நூற்றாண்டுக்கும் மேலாக, தீண்டாமை முற்றிலும் ஒழிக்கப்பட்ட கிராமமாக விளங்கும் இந்த ஊர், நாகை மாவட்டத்தில் (பழைய தஞ்சை மாவட்டம்) தந்தை பெரியார் அவர்களின் பாடிவீடான மயிலாடுதுறைக்கு அருகிலே உள்ளது.

இதற்கு முன் 1996-97 ஆம் ஆண்டிலும் தீண்டாமை கடைப்பிடிக்காத கிராமமாக இந்தக் கிராமம் தேர்வு செய்யப்பட்டு பரிசு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 இந்த கிராமம் இப்படிசிறப்பாக காட்சி தருவதற்கு  முக்கிய  காரியகர்த்தாவாக இருந்தவர்  தந்தை பெரியாரின் தொண்டராக, அனுக்க சீடராக விளங்கிய திருவிளையாட்டம் ஆ.சவுரிராஜன் (பிள்ளை) அவர்கள்.  திராவிடர் கழகத்தின் தீவிர  உறுப்பினராக, மயிலாடுதுறை வட்ட திராவிடர்கழக தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றிய அந்த சீலரின் சிறப்பான தொண்டு.

திருவிளையாட்டம் பஞ்சாயத்து போர்டு தலைவராக தொடர்ந்து பல ஆண்டுகள் பணியாற்றிய திரு.சவுரிராஜன்
சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்னரே திருவிளையாட்டத்தில் மையப்பகுதியில், ஜாதி இந்துக்கள் என்று சொல்லப்பட்டவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்த, பெரும் வருமானம் ஈட்டக்கூடிய, தனக்கு சொந்தமான பழத்தோப்பை அழித்து அங்கே வீடு கட்டி தாழ்த்தப்பட்ட மக்களை குடியமர்த்தியவர் . 

ஜாதிக்கு ஒரு சுடுகாடு எனும் நிலை இன்றைக்கும் முழுமையாக நீங்கியபாடில்லை. ஆனால் அனைத்து ஜாதி மக்களும் ஒரே சுடுகாட்டை பயன்படுத்தும் வழக்கத்தை அந்தக் காலத்திலேயே துணிந்து செயல்படுத்தி சாதித்துக் காட்டியவர். ஜாதிப்பாகுபாடு இல்லாமல் அப்பகுதி ஏழை, எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் தனது வீட்டை ஆரம்பப் பாடசாலையாக மாற்றினார். பின்னாளில் தனக்கு சொந்தமான மற்றொரு இடத்தில் புதிய உயர்நிலைப் பள்ளி ஒன்றையும் உருவாக்கினார். தற்போது அப்பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தந்தை பெரியார் அவர்கள் அவரது கல்விப் பணியைப் பாராட்டி அவரிடம் ஒரு சிறு தொகையை அன்பளிப்பாக வழங்கிய நிகழ்வும் உண்டு.

1940ன் பிற்பகுதியில் மயிலாடுதுறையில் சில ஆண்டுகள் வசித்தார். அவரோடு பழகிய பெரியார் தொண்டர்கள் அவரைப்பற்றிக் குறிப்பிடுகையில் மறந்தும் பார்ப்பனர்கள் நடத்தும் உணவு விடுதிகளுக்கு செல்ல மாட்டார் என்றும் தன் பிள்ளைகளுக் கெல்லாம் ஜாதிமறுப்பு திருமணமே செய்து வைத்தார் என்றும் கூறுவர்.

1957ல் ஜாதி ஒழிப்பிற்காக தந்தை பெரியார் அவர்கள் நடத்திய சட்ட எரிப்புப் போராட்டத்தில் திருவிளையாட்டத்தை உள்ளடக்கிய செம்பனார்கோவில் பகுதியிலிந்து நூற்றுக்கணக்கான தோழர்களுடன் கலந்துகொண்டு சிறைசென்றார்.

பஞ்சாயத்து போர்டு தேர்தலில் இப்போது நடைபெறும் அரசியல் சித்து விளையாட்டுகள் அப்போதும் நடப்பதுண்டு. பிரபல அரசியல் கட்சிகளெல்லாம் தேர்தல் நேரத்தில் பஞ்சாயத்து போர்டு தலைவர்களை கடத்தி மறைவிடத்தில் இருத்தும் பட்சத்தில் அந்தப்பகுதியில் அப்படி கடத்தப்படாத, கிட்டே நெருங்கக் கூட முடியாத இரண்டு தலைவர்கள் உண்டென்று சொன்னால் ஒருவர் திருவிளையாட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஆ.சவுரிராஜன். மற்றொருவர் திருவிளையாட்டத்தை அடுத்த பரசலூர் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.பி.கோதண்டபாணி. அதற்கு காரணம் அவர்கள் தங்கள் இயக்கத்திற்கும், கொள்கைக்கும் கட்டுப்பட்டவர்கள் என்பதே.  இருவருமே திராவிடர்கழக தொண்டர்கள் ஆயிற்றே!. 

 திரு ஆ.சவுரிராஜன் அவர்கள் 1892 ம் ஆண்டு அக்டோபர் 12 ம் நாள் பிறந்து, தன் வாழ்நாளில் பெரும் தொண்டாற்றி, தனது 81ம் வயதில் 18.3.1973 அன்று  இயற்கை எய்தினார். அதனைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு  18.3.1974 ம் தேதி திராவிடர் கழகத்தின் அன்றையப் பொதுச்செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திருவிளையாட்டத்தில் அவரது நினைவு மண்டபத்தை திறந்து வைத்து அவரது பெரும் பணியைப் பாராட்டி சிறப்புரையாற்றினார்.

திருவிளையாட்டம் போன்ற கிராமங்கள் இன்றளவும் ஜாதிப் பாகுபாடின்றி தீண்டாமை முற்றிலும் ஒழிக்கப்பட்ட கிராமமாக ஒளிர்விட்டுக் கொண்டிருப்பது  திராவிடர் இயக்கத்தின் தன்நிகரில்லா தொண்டு, தோழர் சவுரிராஜன் போன்ற பெரியார் தொண்டர்களின் ஒப்பற்றப் பணி  ஆகியவற்றின் விளைச்சல்!

No comments:

Post a Comment