Tuesday 2 July 2024

ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு நடத்தப்பட்ட வெற்றிகர இதய அறுவை சிகிச்சை

 

இயக்க வரலாறான தன் வரலாறு(239) : அமெரிக்காவில் டாக்டர் டட்லி ஜான்சன் எனக்கு இதய அறுவை சிகிச்சை 4 மணி நேரம் வெற்றிகரமாக செய்தார்!

டிசம்பர் 01-15 2019

அய்யாவின் அடிச்சுவட்டில்…

கி.வீரமணி

எனது இதய அறுவை சிகிச்சை

16.4.1991 அன்று அமெரிக்கா சென்று என் உடல்நிலையைப் பரிசோதித்துக் கொள்ளவும், கழகப் பணிகளை மேற்கொள்ளவும் சென்றேன். அங்கு 18.4.1991 அன்று விஸ்கான்சின் மாநிலம் (Wisconsin State) மில்வாக்கி (Milwaukee) நகரில் உள்ள பிரபல செயின்ட்மேரீஸ் மருத்துவமனையில் பரிசோதனைக்குப் பின் பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் டட்லி ஜான்சன் அவர்கள் எனக்கு மாற்று இதய அறுவை சிகிச்சை செய்வார்கள் என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்பின் திட்டமிட்டபடி எனக்கு இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம் எல்லாம் நன்றாக இருக்கிறது. இரண்டு நாள்கள் தீவிர கண்காணிப்புப் பிரிவில் இருந்தேன். இச்செய்திகள் டாக்டர் சோம.இளங்கோவன் அவர்கள் மூலம் திராவிடர் கழக தலைமை நிலையத்திற்கும் அதன்வழி தமிழக மக்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.

எனக்கு நினைவு திரும்பி உடல்சரியான நிலையில், 16.5.1991 அன்று சிகாகோவிலிருந்து மருந்து சிகிச்சை குறித்தும், நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து அனைத்தும் விரிவாக ‘விடுதலை’யில் எழுதியிருந்தேன். அதில் சிகாகோவில் உள்ள பிரபல மருத்துவமனையான  St. Luke’s Roser  Presbyterian Medical Centre மருத்துவமனையில் உள்ள பிரபல டாக்டர் ஷப்லானி என்னை முதலில் பரிசோதித்தார்.  (Angiogram சோதனை)

அந்தப் பரிசோதனைக்குப் பின்னர் அறுவைச் சிகிச்சையே, மேற்கொள்ள வேண்டிய சிறந்த முறை என்று அவரும், அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று செய்துவரும் அருமை சகோதரர் சிகாகோ இளங்கோவன் அவர்களும் முடிவுக்கு வந்தனர். எனது துணைவியாரும், பிள்ளைகளும் அந்த முடிவை ஏற்றனர்.

என்னைப் பொறுத்தவரையில், துவக்கத்தில் இப்படி ஓர் அறுவைச் சிகிச்சைக்கு அவசியம் ஏற்படாது என்று நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால், மருத்துவர்களும், நண்பர்களும் அறுவைச் சிகிச்சை செய்து கொள்வதே நல்லது என்று கூறியதை ஏற்று அதன்படி இது நடந்தது.

துவக்கத்தில் ‘இந்த நேரத்திலா நாம் தமிழ்நாட்டை விட்டு வெளிநாடு செல்வது? நமது பணி தேவைப்படும் நேரமாயிற்றே’ என்கிற எண்ணமே என்னுள் மேலோங்கி நின்றது. நமது இனமானப் பணியும், தமிழினத்துக்கு நாம் கடமையாற்றுவதும் மிகவும் இன்றியமையாதது அல்லவா என்று நினைத்து கொஞ்சம் யோசித்தேன். மனத் தயக்கம் ஏற்பட்டது என்றாலும், நமது கழகத் தோழர்களின் கடமை உணர்வையும், தொண்டாற்றும் திறனையும் நன்கு அறிந்தவன் என்பதால் இயக்கப் பணிகள் தொய்வின்றி நடக்கும் என்கிற நம்பிக்கையில் அமெரிக்கா சென்றேன்.

டாக்டர்

சோம.இளங்கோவன்

டாக்டர் சோம.இளங்கோவன் அவர்கள் ஒவ்வொரு நாளும் அறுவைச் சிகிச்சை பற்றிய தகவலை தோழர்கள் அறியும்படி அனுப்பிக்கொண்டே இருந்தார். டாக்டர் இளங்கோவன் அவர்கள் மட்டுமா? அவரது மூத்த அண்ணன் வேலாயுதம், அவரது தம்பி டாக்டர் தமிழவேள் மற்றும் அவரது சகலை ஆரூயிர் சகோதரர் டாக்டர் சந்திரன் மற்றும் இவர்கள் குடும்பத்தினர், அட்லாண்டாவில் உள்ள சகோதரர் டாக்டர் நல்லதம்பி (தலைவர் நஞ்சய்யா அவர்களது அன்புச்செல்வன்), அவரது தம்பி டாக்டர் இன்ப வாழ்வு குடும்பத்தினர்) வாஷிங்டன் திரு.ராஜ் குடும்பத்தினர், டல்லாஸ் நகரில் உள்ள டாக்டர் இலக்குவன் தமிழ் குடும்பத்தினர், வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் நமது அறிவு ஆசான் அய்யா அவர்களுக்கு மருத்துவ உதவி செய்த காலத்திலிருந்து இன்று வரை உதவிடும் அன்புக்குரியவர்கள், மேலும் பாசத்திற்குரிய பலரும் எனக்கு அந்த நேரத்தில் அன்பும் ஆதரவும் தந்தனர்.

அறுவை சிகிச்சைக்குப் பின்

டாக்டர் டட்லி ஜான்சன் உடன் ஆசிரியர்

குறிப்பாக, ‘மாம்’ என்று நாங்கள் அன்போடு கடந்த பல ஆண்டுகளாக அழைத்து வரும் திருமதி வர்ஜினியா கிர்ச்னர் என்கிற 75 வயது மூதாட்டியார் அம்மையார் என்பாலும், குடும்பத்தினர்பாலும் அன்பைப் பொழிவார். அவரது அன்பு மகனாக என்னைக் கருதி பாசம் காட்டுபவர்; அவர் செய்தி அறிந்தவுடன் சுமார் 700 மைல் காரை ஓட்டிக்கொண்டு, அறுவை சிகிச்சைக்கு முன்பாக குடும்பத்தினரோடு வந்து இரண்டு நாள் தங்கி என்னை ஊக்கப்படுத்தி, குடும்பத்தினர்க்கு குறிப்பாக மோகனா, அசோக்_ சுபிதா, அருள்-_பாலு ஆகியோருக்கு நல்ல  ஆறுதல், ஊக்கத்தை_தெம்பை அளிக்க முன்வந்தனர்.

நீண்டகாலமாக குடும்ப உறுப்பினரான பாசத்திற்கும், அன்பிற்கும் உரிய சகோதரர், பண்பும் மாறாத டாக்டர் ஏ.சி.ஜான்சன் குடும்பத்தினர் அவரது சகோதரி, சகோதரர் அத்துணைப் பேரும் செயின்ட்லூயிஸில் உள்ள பேராசிரியர் பெரியார் பெருந்தொண்டர் டாக்டர் திருநாவுக்கரசு குடும்பத்தினர், அதுபோல மேரிலாண்ட் மாநிலத்தைச் சார்ந்த டாக்டர் சித்தானந்தம் தம்பதிகள், நியூஜெர்சியிலுள்ள சகோதரி அமுதா, நியூயார்க் நண்பர் மோகன், வாஷிங்டன் கோபாலசாமி, பிச்சுமணி, செல்லையா, தில்லைராஜா, விக்னராஜா, சிகாகோவில் உள்ள விசுவநாதன், கண்ணகி விசுவநாதன் அவர்கள் பெற்றோர் திரு. திருமதி பாலசுப்பிரமணியம், மோகன் குமார், பாபு குடும்பத்தினர், பாஸ்கரன் குடும்பத்தினர், கெனோஷாவில் உள்ள துக்காராம், சாந்தாராம், பாஸ்கரன், அய்ங்கிரன், பாலசண்முகம், நந்தா, மாதவ் சுரேஷ், மில்வாக்கியில் உள்ள வைரவன், விஜய்பால், ரவி குடும்பத்தினர் அவரது தாயார் உள்பட அனைவரது அன்பு விசாரிப்புகள் மிக்க ஆறுதல் அளித்தது.

டாக்டர் நல்லதம்பி தொலைதூரமான அட்லாண்டிக்கில் இருந்து வந்து  மருத்துவமனையில் மூன்று நாள்களுக்கு மேல் என்னுடன் தங்கி அவ்வப்போது, எனக்கும், என் குடும்பத்தினருக்கும் தெம்பையும், உற்சாகத்தையும் அளித்து வந்தார்.

-எல்லா ஏற்பாடுகளையும் முன்னின்று செய்து வந்த சிகாகோ டாக்டர் இளங்கோவன் அவர்களை, ‘மில்வாக்கி’ என்னும் நகரில் உள்ள செயின்ட்மேரீஸ் மருத்துவமனையில் (இது 200 ஆண்டுகளாக இயங்கும் மருத்துவமனை) பிரபல டாக்டர் டட்லி ஜான்சன் அவரது குழு டாக்டர்கள் சையத், காமத் ஆகியோர் குழுவில் மயக்க மருந்து தரும் டாக்டர் இளங்கோவன்தான்! (Anesthesist) (இவர் பெயரும் இளங்கோவன்தான். இவரின் தந்தையார் நாமக்கல்லில் உள்ளார். மாமனார் மதிப்பிற்குரிய திரு.இராமசாமி அவர்கள் சென்னை அக்கவுண்ட்டன்ட் ஜெனரல் ஆபீசர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திலும், பணியாற்றி ஓய்வு பெற்று இப்போது தமிழக மூதறிஞர் குழுவிலும் உறுப்பினராக உள்ளார்.) ஆகியோரும் பொறுப்பை ஏற்றனர்.

அறுவைச் சிகிச்சைக்கான தேதியையும் வாய்ப்பையும் விரைந்து பெற்று பல வகையிலும் சிறப்பாக உதவியவர் மயக்க மருத்துவ இயல் டாக்டர் இளங்கோவன் அவர்கள் ஆவார்கள்! இல்லையானால் பல மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும் நிலையே!

பிரபல அறுவை சிகிச்சை டாக்டர் டட்லி ஜான்சன், புன்னகையுடன் கொண்ட பணியில் முழு ஈடுபாடு காட்டி ஒரு நாளில் சில நேரங்களில் 22 மணி நேரம் கூட இரண்டு, மூன்று அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும் சிறப்பு வாய்ந்த டாக்டர் ஆவார். எனக்கு 4 மணி நேரம் எடுத்துக் கொண்டதாக என்னிடம் சொன்னார்கள்.

விஸ்கான்சின் மாநிலத்தைச் சேர்ந்த கெனோஷா என்னும் ஊரில் (மகள் அருள் இல்லத்திலிருந்து -_ மில்வாக்கி நகருக்கு) தங்கி முறையான பயிற்சிகளை மேற்கொண்டு எனது உடல்நலம் சீரடைந்து வந்தது.

இதற்கிடையே சென்னையிலும், சிங்கப்பூரிலிருந்தும், லண்டனிலிருந்தும், பாரிசிலிருந்தும் இந்த நல விசாரிப்புகள் உறுதிப்பாடுகள் மெய்சிலிர்க்கச் செய்தன. இதனால் எனக்கு வலி குறைந்து வலிமை கூடிற்று. அதனை, “தீராக் கடன்காரனாக்கி விட்டனர்’’  என்று அறிக்கையில் உள்ளம் நெகிழ எழுதியிருந்தேன்.

No comments:

Post a Comment