இயக்க வரலாறான தன் வரலாறு(244) : சி.பி.எஸ்.ஈ மதிப்பெண் ஊழல்!
அய்யாவின் அடிச்சுவட்டில் …
கி.வீரமணி
16.7.1992 அன்று கடிதம் ஒன்று வந்தது. அதில் “சி.பி.எஸ்.ஈ மார்க் ஊழலை வெளிக்கொணர்ந்த சீரிய செயல்’’ என்று எனக்கு டாக்டர் ஆர்.எஸ்.சிறீதர் அவர்கள் கீழ்க்கண்ட கடிதம் எழுதியிருந்தார்கள்.
சி.பி.எஸ்.ஈ. மார்க் ஊழலை வெளிக்கொணர்ந்த சீரிய செயல்
பொதுச்செயலாளருக்கு ஒரு டாக்டரின் கடிதம்
Dr.R.S.Sridhar, M.B.B.S.,
General Physician and Film Maker,
P.42, 6th Avenue, Anna Nagar, Madras – 600 040
Telephone: 614409 Date: 9.7.1992
பெருமதிப்பிற்குரிய திரு.வீரமணி அவர்கட்கு, வணக்கம்.
தங்களுக்கு என்னைத் தெரிந்திருக்க நியாயமில்லை. எனினும் அறிமுகப்படுத்திக் கொள்கிறேன். எனது தாய் வழிப் பாட்டனார் திரு.துரைசாமி (கவுண்டர்) தனது இன்வாழ்வை தந்தை பெரியாரின் கொள்கைகளுக்காக ஈந்தவர். வடஆர்க்காடு பெரியார் நூற்றாண்டு விழா செயற்குழு உறுப்பினராக இருந்தவர்.
அமெரிக்காவில் சில ஆண்டுகள் இருந்து விட்டுத் திரும்பியுள்ள எனக்கு சி.பி.எஸ்.ஈ. மார்க் ஊழலை வெளிக் கொணருவதில் தாங்கள் செய்துவரும் சிறப்பான பணி, என் மனதை பேருவகை கொள்ளச் செய்தது.
தங்களுக்கு ஒரு (முக்கியமான) வேண்டுகோள்:
ஜூலை 8 அன்று நடந்த வழக்கு மன்ற விவாதத்தில் சி.பி.எஸ்.ஈ. தேவையின்றி அனைத்து மாணவர்களுக்கும் மதிப்பெண்களை ஏற்றியதாக ஒப்புக் கொள்ளப்பட்டது.
ஆனால், சி.பி.எஸ்.ஈ. வழக்குரைஞர்கள் சி.பி.எஸ்.ஈ. மதிப்பெண்களை ஏற்றியதால், கல்லூரி நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே மாணவர்களைச் சேர்த்திட வேண்டும் என்று கூறியது. சி.பி.எஸ்.ஈ.யின் தவறுக்காக, தமிழ்நாடு மாநில கல்வி அமைப்பு மாணவர்களைப் பலிகடா ஆக்கும் செயலாகும் இது. சி.பி.எஸ்.ஈ.யின் தவறுக்கு சி.பி.எஸ்.ஈ. மட்டுமே பொறுப்பேற்றிட வேண்டும்! இதனால் சி.பி.எஸ்.ஈ. மாணவர்கள் பாதிக்கப்பட்டால் அதற்கு பொறுப்பு சி.பி.எஸ்.ஈ. தானே தவிர, தமிழ்நாடு மாணவர்களல்லர். பிளஸ் டூ.வில் தமிழ்நாட்டு அரசு கல்வி அமைப்பு மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை அங்கீகரித்து அவர்களை அம்மதிப்பெண்கள் அடிப்படையில் கல்லூரியில் சேர்த்திட வேண்டும்! இதைத் தடுக்க முயலும் சி.பி.எஸ்.ஈ.யின் சூழ்ச்சியினைத் தாங்கள் உறுதியாகத் தடுக்க வேண்டும்!
மேலும் ஆந்திராவிலும், கர்நாடகாவிலும் அந்தந்த மாநில மொழியினை இரண்டாம் மொழியாக அனைத்துப் பள்ளிகளும் கற்பிக்க வேண்டும், அனைத்து மாணவர்களும் (சி.பி.எஸ்.ஈ., மெட்ரிகுலேசன் மாணவர்கள் உள்பட) கற்றாக வேண்டும் என்று சட்டம் இருப்பது போன்று தமிழ்நாடு அரசும், தமிழ் மொழியினை அனைத்து மாணவர்களும் தமிழ்நாட்டில் கற்றாக வேண்டும், தமிழ் மொழியினை குறைந்த பட்சம் இரண்டாம் மொழியாகப் பயின்றிருந்தால்தான் தமிழகக் கல்லூரிகளில் அனுமதி தரப்படும் என்று அறிவிக்க வேண்டும். இதை அரசு உடனடியாகச் செய்ய வேண்டும். இதை அரசு செய்யாவிட்டால் இதற்காகத் திராவிடர் கழகம் போராட வேண்டும். ஆந்திரரும், கன்னடரும் ஏற்கெனவே சட்டமாக வைத்திருப்பதை தமிழ்நாடும் பின்பற்றுவதில் தடை என்ன?
தங்களது திராவிடப் பணிக்கும், செயல் மேன்மைக்கும் என் வாழ்த்து!
அன்பன்,
ஆர்.எஸ்.சிறீதர்.
18.7.1992 அன்று “சி.பி.எஸ்.ஈ. பள்ளிகளே கூடாது’’ என்கிற கிளர்ச்சி வெடிக்கும்! வெடிக்கும்! என்று முக்கிய அறிக்கை ஒன்று ‘விடுதலை’யில் வெளியிட்டிருந்தோம். அதில், பொய்யான தகவல்களைக் கூறியும், மிரட்டும் பாணியிலும் எழுதிய பார்ப்பன ஏடு, இன்று திடீரென்று ‘மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு’வான “இந்து’’ ஏட்டில் அண்ணா பல்கலைக்கழகம் நுழைவுத் தேர்வு முடிவுகளைத் தொகுத்து நீதிமன்றத்திற்கு அளித்ததில் ஏதோ மிகப் பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாக பெரிய புழுதிப் புரளியை பார்ப்பனர்களுக்கு உரிய மிரட்டல் தன்மையோடு உண்மைக்கு மாறாக அசல் புரட்டு வேலையைச் செய்துள்ளது.
முதலில் கூடுதல் மதிப்பெண்களே போடவில்லை என்று சி.பி.எஸ்.ஈ தரப்பில் கூறப்பட்டது. பிறகு நீதிமன்றத்தில், ஆம்! மதிப்பெண்கள் போடப்பட்டது உண்மைதான் என்பதை ஒப்புக் கொண்டு, அதற்குப் பல பெயர்களும் வியாக்கியானங்களும் அவர்கள் தரப்பில் கூறப்பட்டன.
‘மார்க் மாடரேஷன்’ (Mark Moderation), ‘ஸ்டாண்டர்டிசேஷன்’ (Standardisation) என்றெல்லாம் கூறப்பட்டது.
இதுபற்றி விசாரித்து உண்மையைக் கண்டறிய வேண்டும் என்று திராவிடர் கழகத்தின் சார்பில் வழக்கு போடப்பட்டுள்ளது. அவர்களது உள்நோக்கம் வெளிப்பட்டுவிட்டது. இன்னொரு நுழைவுத் தேர்வு வேறு யாரோ தனியார் ஏஜென்சியால் நடத்தப்பட வேண்டுமாம். இப்படி பாதிக்கப்பட்டதாகக் கூறி வழக்குப் போட்ட ஒவ்வொருவரும் கேட்டால் நிலைமை என்னவாகும்? என்று ‘இந்து’ ஏட்டின் செய்தியை சுட்டிக்காட்டி அந்த அறிக்கையில் விளக்கியிருந்தோம்.
அப்படிப்பட்ட சி.பி.எஸ்.ஈ.தான் இன்று ‘நீட்’ தேர்வு நடத்துகிறது என்பதிலிருந்து ‘நீட்’ தேர்வு எப்படிப்பட்ட மோசடித் தேர்வு என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
பெரியார் அஞ்சல் வழிக் கல்லூரியின் முதல்வர்
No comments:
Post a Comment