வியப்பே வியக்கும் வீரமணி!- புரட்சிக்கனல்
வியப்பே வியந்து போகும் வியப்பிற்குரியவர் வீரமணி என்பது வழக்கமாக மிகைப்படுத்திப் பேசும் பாராட்டுரை அல்ல. நூற்றுக்கு நூறு துல்லியமான மைக்ரோ தராசின் மதிப்பீடு! மதிப்பிற்குரிய எழுத்தாளர் சோலை அவர்கள் சொல்லியதுபோல “இமயம் இவரின் இடுப்பளவே!’’
இவரின் வாழ்வே சாதனை வாழ்வுதான்! அதுவும் சோதனைகளைத் தாங்கி, தாக்குதல்களை எதிர்கொண்டு சாதிக்கப்-பட்டவை.
கி.வீரமணி அவர்களே சொல்வதுபோல, தந்தை பெரியார் காலத்திய எதிரிகள் நாணயமான எதிரிகள்! ஆனால், இவர் காலத்து எதிரிகளோ அசல் ………………. (எவ்வளவு கேவலமாக நிரப்பிக்கொள்ள முடியுமோ அவ்வளவு கேவலமாக உங்கள் விருப்பப்படி நிரப்பிக் கொள்ளுங்கள்!) அப்படிப்பட்ட எதிரிகள் அதிகார, பதவி பலங்கொண்டு, சூழ்ச்சி, வஞ்சகம், கீழறுப்பு, மோசடி என்று அனைத்து அற்பச் செயல்கள் மூலமும் ஆதிக்கம் நிலைநாட்ட முற்படும் சூழலில், நேர்மையாக, சட்டப்படி, அதிகாரப் பலமோ, பதவிப் பலமோ இல்லாமல், போராடி சாதிப்பது என்பது எத்தகு சாதனை என்பதை எழுத்தால் உணர்த்த முடியாது என்பதால் உள்ளத்தால் மட்டுமே உணர்ந்துகொள்ள முடியும்.
இதோ அவரின் சாதனைகள் சலித்-தெடுக்கப்பட்ட பட்டியல்:
* பத்து வயதிலே பொது வாழ்வுக்கு வந்து மூடநம்பிக்கைக்கும், பார்ப்பன ஆதிக்கத்திற்கும் எதிராய் முழங்கியவர்.
* “தட்டுத்தடங்கலின்றி சரளமாக, பார்ப்பன ஆதிக்கத்தையும், ஏமாற்றுப் புராணப் புளுகையும், ஆபாசங்களையும், கடவுளையும் கிழி கிழி என்று கிழிப்பதை வாய்பிளந்து கொண்டு நானும் பார்த்தேன் -_ கேட்டேன்!’’ என்று எழுத்தாளர் ஜெயகாந்தனால் வியந்து பாராட்டப்-பட்டவர்.
* “திராவிட இயக்கத்தின் திருஞானசம்பந்தர்’’ என்று அண்ணாவால் புகழப்பட்டவர்.
* பதினொரு வயதிலே பெரியாரைச் சந்தித்து இயக்கப் பணி ஆற்றியவர்.
* மாணவர் பருவத்திலே ‘முழக்கம்’, ‘புதுமை’ என்ற கையெழுத்து ஏடுகளை நடத்தியவர்.
* பதினொரு வயதில் திருமணத்தில் வாழ்த்துரை வழங்கியவர்.
* பன்னிரண்டு வயதில் பொதுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கியவர்.
* பதிமூன்று வயதில் மாநாட்டுக் கொடி ஏற்றியவர்!
* பதினான்கு வயதில் படத் திறப்பாளர்!
* 21 வயதில் கலைஞர் வரவேற்புரையாற்ற, 11 வயதுச் சிறுவனாய் திருவாரூரில் சிறப்புரை ஆற்றிய பெருமைக்குரியவர்.
* பதினொரு வயதிலே பல இடங்களுக்கும் சிறப்புப் பேச்சாளராய்ச் சென்றவர்.
* அய்யா _- அண்ணா கருத்து வேறுபாடு களைய 14 வயதில் அண்ணாவிடம் தூது சென்ற சிறுவன் என்ற வரலாற்றுச் சாதனைக்குரியவர்.
* பதினாறு வயதிலே மாநாட்டுப் பொறுப்பாளராய் மாநாடு நடத்தியவர் (1950)
* 11 வயதில் பத்திரிகை தலையங்கத்தில் பாராட்டப்பட்டவர்.
* ஊர் ஊராய்ப் பிரச்சாரம் செய்துக் கொண்டே உயர் மதிப்பெண்கள் பெற்றவர்.
* வறுமையை வென்று வாகை சூடியவர்.
* துணை வேந்தரை உரையால் உருகச் செய்தவர்.
* பல்கலைக்கழகப் பரிசுகளை யாரும் பெறாத வகையில் பெற்று சாதனை புரிந்தவர்.
* கார் வேண்டாம் என்று பேருந்தில் சென்றவர்.
* அண்ணா பெறாத முழு உரிமையை அய்யாவிடம் பெற்றவர்.
* மிசா கொடுமையில் மீண்டு வந்தவர்.
* அய்யாவின் சரியான வாரிசாய் சரித்திரம் படைப்பவர்.
* இயக்க வாழ்வே தன் வாழ்வு எனக் கொண்டவர்.
* 9,000 ரூபாய் வருமான வரம்பு ஆணையை விலக்கவும், பிற்பட்டோர் இடஒதுக்கீடு 50 சதவீதம் ஆக உயரவும், நுழைவுத் தேர்வு நீக்கப்படவும் காரணமானவர்.
* 69 சதவீதம் பிற்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அரசியல் சாசனத்தில் சேர்க்கச் செய்தவர்.
* மண்டல் குழு பரிந்துரையை அமுல்படுத்தச் செய்து மத்திய அரசில் பிற்பட்டோருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு கிடைக்கச் செய்தவர்.
* ஜாதி ஒழிப்புக்கு பெரும்பயணம் மேற்-கொண்டு பிரச்சாரம் செய்தவர்.
* ஜாதி, மதம், இனம், மொழியற்ற மணவுறவுகளை தன் குடும்பத்தில் நிகழ்த்தி, “யாதும் ஊரே யாவரும் கேளிர்!’’ என்ற பழந்தமிழர் உயர் வாழ்வை வாழ்ந்து காட்டுபவர்.
* பொய் வழக்காட மறுத்த வழக்கறிஞர்.
* மாற்றுக் கொள்கையாளரை மதிக்கும் மாண்பாளர்.
* காட்சிக்கு எளியவர்! எல்லோரிடமும் எளிதில் பழகுபவர்.
* எடைக்கு எடை தங்கம் பெற்று அதைப் பொதுப்பணிக்கு அளித்த உலகின் ஒரே தலைவர்.
* “இந்தியா எங்கும் வழிகாட்ட வாருங்கள்’’ என்று தலைவர்களால் அழைக்கப்படுபவர்.
* கீதையின் கீழ்த்தரத்தை கிழித்து தோரணமாய்த் தொங்கவிட்டவர்.
* வாழ்வியல் சிந்தனைகளை வையகம் வியக்க, இரண்டாவது வள்ளுவமாய் வழங்கி வருபவர்.
* 75 ஆண்டுக் கால பொதுவாழ்விற்கு உரியவர்.
* மூன்று முறை இதய அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட நிலையில் 84 வயதிலும் ஓயாது உழைப்பவர்.
1. உலக சாதனைகள்!
* 11 வயதில் (29.-7.-1944)இல் மாநாட்டில் பேசிய சிறுவன்!
* 11 வயதில் திருமணத்தில் (11-.06.-1944) வாழ்த்துரை வழங்கிய சிறுவன்!
* 12 வயதில் பொதுக்கூட்டத்திற்கு (14.-04.-1945) தலைமை வகித்த சிறுவன்.
* 13 வயதில் (06.-01.-1946) மாநாட்டுக் கொடியேற்றிய சிறுவன்!
* 14 வயதில் (1947) அண்ணாவிடம் தூது சென்ற சிறுவன்!
* 14 வயதில் (21.-09.-1947) படத் திறப்பாளர்!
* 15 வயதில் (01.-05.-1948) மாநாட்டில் சிறப்புரை ஆற்றிய சிறுவன்!
2. உலகிலே அதிக நேரம் பேசியவர்!
3. உலகிலேயே அதிக நேரம் பிரச்சாரப் பயணம் செய்தவர்!
4. உலகிலே அதிகம் எழுதியவர்!
5. மூன்ற முறை இதய அறுவை சிகிச்சைக்குப் பின், அதிக நேரம் பயணம், பேச்சு, நிர்வாகம், இயக்கச் செயல்பாடு என்று பலவற்றையும் செய்பவர் உலகில் இவர் ஒருவரே!
6. உலகில் அதிக திருமணங்களை நடத்தி வைத்தவர்!
* யார் இவர்?
* அவர்தான் அய்யாவின் அசல் வாரிசான தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்!
இத்தகு ஒருவரை, உலகில் நீங்கள் அறிந்ததுண்டா? உலகில்தான் வேறொருவர் உண்டா? அவரைப் பின்தொடர்வதன்றோ இளைஞர்களுக்கு அழகு! ஆதிக்கம் அழிக்கவும், சமத்துவம் கிடைக்கவும், ஒடுக்கப்பட்டோர் உயர்வு பெற, உரிமை பெறவும் அதுதானே வழி! சிந்திப்பீர்; செயல்படுவீர்!
No comments:
Post a Comment