Friday, 5 July 2024

விவேகானந்தர் மக்கள் பிரதிநிதிகளால் நிரம்பப் பெற்ற அமெரிக்க பாராளுமன்றத்தில் உரையாற்றவில்லை!

 

சிந்தனை : விவேகானந்தர் விளித்த “சகோதர சகோதரிகளே!’’ – ஒரு விமர்சனம்

உண்மை இதழ்

கார்க்கி குமரேசன்

விவேகானந்தர் அமெரிக்கா _ சிகாகோ நகரில், ‘உலக மதங்களின் பாராளுமன்றம்’ (Parliament of World’s Religions) என்னும் நிகழ்வில் ஆற்றிய உரை இன்றளவிலும் வியந்தோங்கி நிறுத்தப்படுகிறது.

அவரது உரையை நுண்ணோக்கினால், அவர் உரை ஆற்றிய சமகாலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை அறிந்துகொண்டால், அவ்வுரையில் வியக்க ஏதும் இல்லை என்பதும், முரண்களையும் பிற்போக்குத்தனங்களையும் உள்ளடக்கியது என்பதும் எளிதாக விளங்கும்.

பாராளுமன்றம்

“விவேகானந்தர் அமெரிக்க பாராளு-மன்றத்தில் உரையாற்றினார்’’ என்பது அவற்றில் குறிப்பிடத்தக்கது. அவர் மக்கள் பிரதிநிதிகள் நிறைந்த அவையில் உரையாற்றினார் என்றே பலர் கருதுகின்றனர். ‘பாராளுமன்றம்’ என்னும் சொல் நமக்கு அரசியல், அரசியல் அமைப்பு என்னும் பொருளிலேயே அறிந்துகொள்ளப்-பட்டதால் ஏற்பட்ட தவறான புரிதல்.

1893 உலக மதங்களின் பாராளுமன்றம் – சிகாகோ

‘உலக மதங்களின் பாராளுமன்றம்’ என்பது 1893இல் சிகாகோ நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்வு. கிறிஸ்டோபர் கொலம்பஸ்ஸின் அமெரிக்க வருகை(?)யின் 400ஆம் ஆண்டின் நினைவாக, சிகாகோ நகரின் வர்த்தக மேம்பாட்டிற்காக நடைபெற்ற மாபெரும் பொருட்காட்சி என்று அதைக் கொள்ளலாம். அந்நிகழ்வில் கேளிக்கை, கட்டுமானம், தொடர்வண்டி போக்குவரத்து, கட்டிடவியல், ஆயுதத் தளவாடங்கள் என்று பல்வேறு துறைகளுக்கான கூட்டங்களும், காட்சியகங்-களும் அமைக்கப்பட்டன. ‘உலக மதங்களின் பாராளுமன்றம்’ என்பது இவ்வாறு நடைபெற்ற கூட்டங்களுள் ஒன்று.

ஆக, விவேகானந்தர் மக்கள் பிரதிநிதிகளால் நிரம்பப் பெற்ற அமெரிக்க பாராளுமன்றத்தில் உரையாற்றவில்லை. மாறாக, ஓர் அமைப்பு, தான் நடத்தும் ஒரு கூட்டத்திற்கு அழைத்ததன் பெயரில் சென்று உரையாற்றினார். அவரைப் போன்றே, பல்வேறு மதங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் உரையாற்றினர்.

‘சகோதர சகேதரிகளே…!’ என்று அவர் விளித்தது, அந்நிகழ்வில் பங்கேற்றவர்களை ஈர்த்தது என்பதை மட்டும் பரப்புரை செய்தவர்கள், உரை முழுவதையும், பிற உரைகள் பற்றி அதிகம் விளம்பரம் செய்வதில்லை.

விவேகானந்தர் உரைகள்

அவ்வுரையில் அவர் கீதையை மேற்கோள் காட்டிப் பேசுகிறார். இந்து மதம் சகிப்புத்தன்மை உடையது என்கிறார். ஓர்மையின் விளைவாக ஏற்படும் பண்பாட்டு ஒழிப்பு பற்றி பேசுகிறார்.

அவரின் பேச்சு, இந்து சமயத்தை, பாதிக்கப்பட்டவர் நோக்கில் இருந்து பாதிப்பு ஏற்படுத்தியவர்கள் நோக்கியதாகவே பொருள் கொள்ள வேண்டி உள்ளது.

நம்முடைய திராவிட ஆசிரியர்கள் நமக்கு சிறப்பாக விளக்கிய, பார்ப்பனத் தந்திரங்களுள் முதன்மையான ‘உள்வாங்கிச் செரிப்பது’ என்பதைத்தான் விவேகானந்தரும் பேசுகிறார்.

என்ன வேறுபாடு என்றால், நாம் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால் அந்தத் தந்திரத்தைப் புரிந்துகொள்ள, எதிர்கொள்ள, முறியடிக்க ஒடுக்கப்பட்டவர்கள் பக்கம் நின்று பேசுகிறோம். விவேகானந்தர் அந்தத் தந்திரக்காரர்கள் பக்கம் நின்று, பாதிப்பு ஏற்படுத்தியவர்களின் வெற்றியாக, சிறப்பாக அந்தத் தந்திரத்தை வியக்கிறார்.

“ஒன்றன் பின் ஒன்றாக இந்தியாவில் பல்வேறு சமயங்கள் தோன்றி, வேத மதத்தின் அடிப்படையை ஆட்டம் காண வைத்தன. அவை பூகம்பத்தினால் ஏற்பட்ட ஆழிப் பேரலை, பின்னர் கடலினுள் சேர்வதைப் போல, ஆயிரம் மடங்கு வலுவுடன் தோன்றினாலும், அலை ஓய்ந்த பின் கடலினுள் இழுக்கப்-படுவதைப் போல _ அச்சமயங்கள் வேத மதத்தின் நம்பிக்கையினுள் உறிஞ்சப்பட்டு, உள்வாங்கப்பட்டு, செரிக்கப்பட்டன’’ என கவித்துவமாக, தத்துவார்த்தமாக அந்தத் தந்திரத்தை விவரிக்கிறார்.

கிறிஸ்டோபர் கொலம்பஸ், ஆயிரக் கணக்கிலான அமெரிக்க பூர்வகுடிகளைக் கொன்று குவித்ததை இவ்வாறு விவரிக்கிறார் _ “கொன்று குவிக்கப்பட்ட அவ்வுடல்களைக் கொத்தித் தின்ன கழுகுகள் வந்தபோது, வானம் கரு மேகங்களால் சூழப்பட்டதைப் போன்று காட்சி அளித்தது.’’ பூர்வகுடிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளும், அநீதிகளும், நடைபெற்ற கொலைகளும் கவித்துவ அழகியல் கொண்டு விவரிக்கப்படுவதை மனிதம் உடைய எந்த மனிதனும் இரசிப்பதில்லை.

விவேகானந்தர் விவரிப்புக்கும், கொலம்பஸ் விவரிப்புக்கும் வேறுபாடு ஏதும் இல்லை.

கொலம்பஸ்ஸின் அமெரிக்க வருகை(?)யின் 400ஆம் ஆண்டு நினைவாக நடைபெறும் நிகழ்வின் ஒரு பகுதிதான் விவேகானந்தர் கலந்துகொண்டது அல்லவா? அதனால் அந்த ஒற்றுமை ஒன்றும் ஆச்சரியப்படத்தக்கதல்ல.

அந்நிகழ்வின் ஒன்றுக்கும் மேற்பட்ட அமர்வுகளில் அவர் பேசுகிறார். அவரது உரைகளில் இந்து மதம், பார்ப்பன மதம், வேத மதம் ஆகியனவற்றை வேறுபாடின்றி ஒரே பொருளைக் குறிப்பதாய்ப் பயன்படுத்துகிறார்.

மற்றொரு குறிப்பிடத்தகுந்த பயன்பாடு என்னவென்றால், பாதிக்கப்பட்டவர் நோக்கில் பேசும்பொழுது இந்து, இந்தியர் என்று பொதுவாகப் பேசுகிறார். ஆனால், இந்து சமயத்தவர் மேன்மை, அறிவுத்திறன் எனும் நோக்கில் பேசும்பொழுது பார்ப்பனர் / பிராமணர் என்றே விளிக்கிறார்.

கிறித்துவ மதத்தை விமர்சிக்கும்போது, ஏழ்மை நிறைந்த இந்தியர்களுக்கு ரொட்டித் துண்டு தராமல் மதத்தைத் தருகிறீர்கள் என்கிறார்.

ஏன் அவர்கள் ஏழ்மை நிலையிலேயே உள்ளனர்? யார் அவர்களை தாழ்த்தப்பட்ட நிலையிலேயே வைத்திருப்பது? போன்ற கேள்விகளுக்கு அவரிடம் பதில் இல்லை. கேள்வியே அவரிடம் இல்லை.

இந்து மதத்தின் பெயரால் பார்ப்பனர் சுகவாழ்வுக்காக _ சூத்திரர்கள், சூத்திரர்-களாகவே வாழ வேண்டும், மடிய வேண்டும். அந்த இழிநிலையில் இருந்து அவர்கள் வெளியேறி மதமாற்றம் அடைவதே அவரது விமர்சனத்திற்குக் காரணம் என்றே பொருள் கொள்ள வேண்டி உள்ளது.

நாடார்களின் கமுதி ஆலய நுழைவு முயற்சி

1897ஆம் ஆண்டு, நாடார் சமூகத்தினர், கமுதி மீனாட்சி அம்மன் ஆலய நுழைவு (போராட்டம்!) முயற்சி மேற்கொண்டனர்.

அவர்கள் நுழைவால், ஆலயம் தீட்டாகி-விட்டது எனவும், அத்தீட்டை பார்ப்பனப் புரோகிதர்களைக் கொண்டு கழிக்க இரண்டாயிரத்து அய்ந்நூறு ரூபாய் வழங்க வேண்டும் எனவும், நாடார்கள் ஆலயத்தினுள் நுழைய நிரந்தர தடை விதிக்கக் கோரியும் வழக்குத் தொடுத்தவர் _ அன்றைய இராமநாதபுர சமஸ்தான மன்னர், திரு.பாஸ்கர சேதுபதி அவர்கள்.

அதன் தொடர்ச்சியாக, 1899ஆம் ஆண்டு, இரு தரப்பு ஒத்திசைவுடன், நாடார் சமூகத்தினர் கோயில் நுழைவு அனுமதிக்காக, முப்பதாயிரம் ரூபாய் பெற்றுக் கொள்வதாகவும், அதன் அடிப்படையில் அய்ந்தாயிரம் முன் பணம் பெற்றுக் கொள்வதாகவும் கையொப்பம் இட்டார்.

இவ்வொத்திசைவின் அடிப்படையில், நீதிமன்றத் தீர்ப்பு நாடார்களுக்குச் சாதகமானதாக வந்தால், சட்டம்_ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்கிற கருத்து நிலவியதால், ஒத்திசைவை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது.

அதன் காரணமாக அவ்வொத்திசைவை ரத்து செய்தார், திரு.பாஸ்கர சேதுபதி.

அன்றும் இன்றும்; நாளை மாறும்

ஒரு நீதிமன்ற வழக்கில், ஒரு சாரார் தரப்பில் முழு நியாயம் இருந்தும், சட்டப்படி அவர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வரும் சாத்தியக் கூறுகள் இருந்தாலும், எதிர் தரப்பினர் சட்டம்_ஒழுங்குப் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள், சமூக அமைதியைக் குலைப்பார்கள் என்கிற காரணத்தில், அநியாயமான, அறமற்ற தீர்ப்புகள் வழங்குவது, ஏதோ 2019இல் பாபர் மசூதி தீர்ப்பில், முதன்முறையாக நிகழ்வது அன்று; காலங்காலமாக நிகழ்ந்து வருவது, அதுவும் பெரும்பான்மை இந்துக்கள் நம்பிக்கை, நலன் என்கிற பெயரில் பார்ப்பனர் நலனுக்காகவே நிகழ்த்தப்படும் அநீதி.

நாடார்கள் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் அவர்கள் சார்ந்ததாகச் சொல்லப்படும் இந்து மதத்தில், அம்மதத்தின் பெயரால் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்குவதும், பின்னர் அவர்களையே கருவியாகக் கொண்டு பிற மதத்தினரை ஒடுக்குவதும், தோற்றுவிக்கப்பட்ட கடவுளர் பெயரால் அதை கட்டமைப்பதும், பார்ப்பனிய தந்திரங்களுள் குறிப்பிடத்தக்கது.

பின்னர் அவ்வழக்கில் இரு தரப்பு சாட்சியங்களையும் கேட்ட நீதிபதி, நாடார்கள் கமுதி கோவிலினுள் நுழைய அனுமதி இல்லை என்றே தீர்ப்பளித்தார். அவரது தீர்ப்பில், இந்து மதக் கோட்பாடு பிறப்பின் அடிப்படையில் நான்கு வருணங்களாக மக்களைப் பிரிக்கிறது. வெவ்வேறு விலங்கினங்கள் படைக்கப் பட்டதைப் போல வெவ்வேறு விதமான மக்கள் வருணத்தின் அடிப்படையில் படைக்கப் பட்டார்கள் என்று இந்து மதம் நம்புவதாகக் குறிப்பிடுகிறார்.

கமுதி ஆலய நுழைவு வழக்கில், வாதி தரப்பு சாட்சியாக அதாவது, திரு.பாஸ்கர சேதுபதி தரப்பு சாட்சியாக, நாடார்களுக்கு எதிரான சாட்சியாக, இந்து மத கோட்பாடுகள் என்ன என்பதை நீதிபதிக்கு தெளிவுபடுத்திய சாட்சியாக, நீதிபதியால் பெருமளவுக்கு நம்பப்பட்ட சாட்சியாக, விளங்கியவர், தமிழ்த் தாத்தா என்று கொண்டாடப்பட்ட திரு.உ.வே.சா என்று அறியப்பட்ட திரு.உ.வே.சாமிநாதய்யர்!

தொடர்பும் தொடர்பு எல்லைக்கு அப்பாலும்

இவ்வாறு இந்து மதத்தினர் என்று கூறப்படும் நாடார் சமூகத்தினர், கோயிலுள் நுழைந்தால் தீட்டு ஏற்பட்டு விட்டது என்றும், அதை போக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு அபராதம் விதித்து, அவர்கள் கோயிலினுள் நுழைய நிரந்தர தடை ஏற்படுத்தி அவர்களை இழிவுபடுத்திய திரு. பாஸ்கர சேதுபதிதான் விவேகானந்தர் சிகாகோ செல்ல பொருளுதவி செய்தவர்!

‘சகோதர சகோதரிகளே!’ என்று விளித்து பிற மதத்தவரையும் ஈர்த்தார் என்று கருதப்பட்ட விவேகானந்தர் இந்தியா திரும்பிய பின், திரு.பாஸ்கர சேதுபதி பாராட்டு விழா ஏற்படுத்தியதை ‘முரண்பாடு’ என்று எளிதாகக் கடக்க முடியாது. ‘கயமைத்தனம்’ என்றே கண்டிக்க வேண்டும்!

எந்த நிலக்கிழாரும், மன்னரும் தாங்கள் கொண்டு இருக்கும் பொருட்செல்வம், தோற்றுவிக்கப்பட்ட கடவுளரால், விண்ணைப் பிளந்து கொடுக்கப்பட்டதல்ல; உழைக்கும் மக்கள் உருவாக்கிக் கொடுத்ததே அச்செல்வம்.

அவ்வாறு பெற்ற செல்வத்தில் இருந்து, பொருளுதவி பெற்று, வெளிநாடு சென்று, அந்நாட்டினரை ‘சகோதர சகோதரிகளே!’ என்றழைத்து அறிவார்ந்து விளங்கும் விவேகானந்தருக்கு, அப்பொருளை ஏற்படுத்திய அம்மக்கள் ‘சகோதர சகோதரிகள்’ கூட அல்ல, வழிபடும் இடத்தில் கடவுளை வழிபடக்கூட தகுதியற்றவர்கள் என்று இழிநிலைக்கு ஆளாவதை அறியாது, தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தார் என்றால் அவரின் அறிவால் என்ன பயன்?

‘சகோதரி சகோதரிகளே’ என்று விவேகானந்தர் அழைத்தது, பெரும்பான்மை இந்தியர்களான சூத்திரர்களுக்குப் பொருந்தாது என்றும், இந்து மதக் கட்டமைப்பின் அடிப்படையான ஜாதிகளின் படிநிலைகளையும் கொடுமைகளையும் அறியாத வெளிநாட்டினருக்கு மட்டுமே பொருந்துவது என்றே கொள்ள முடிகிறது.

No comments:

Post a Comment