கட்டிய பணத்தை வட்டியுடன் திரும்பப் பெற்றோம்!
அய்யாவின் அடிச்சுவட்டில் 160
அய்யா அவர்கள் யாரையும் எளிதில் நம்பிவிட மாட்டார்கள் என்பது உலகறிந்த உண்மை. பொதுக் காரியத்தில் குறிக்கோளில் அவர்களுக்குள்ள ஆழ்ந்த கவலையும், பொறுப்புணர்ச்சியுமே அதற்கு மூலகாரணம் ஆகும்.
அப்படி அவர்கள் சல்லடைபோட்டு சலித்துப் புடைத்துப் பார்த்ததில் முழு நியாயம் உள்ளது என்பதற்கு, அவர் கைப்பட எழுதி, பிறகு அவர்கள் அய்யாவுக்கு “துரோகி’களாகி-விட்ட பல பெயர்களை அடித்து மாற்றி எழுதியுள்ள குறிப்பே அதற்கு தக்க சான்றாகும். (இப்போது அதனை வெளியிடுவது நனி நாகரிகம் ஆகாது.)
அன்னை மணியம்மையார் அவர்களை, தந்தை பெரியார் அவர்கள் இயக்கத்திற்கு “ஒரு ஏற்பாடு ஆகத்தான் -_ திருமணம்’’ செய்தார்கள். அப்போதே அய்யா அவர்கள் தாம் எழுதிய “விளக்கம்’’ என்ற அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.
“திருமணம் என்பது சட்டப்படிக்கான ஒரு பெயரே தவிர, மற்றபடி அது இயக்கத்தின் பாதுகாப்புக் கருதி செய்யப்பட்ட ஒரு ஏற்பாடே ஆகும்’’ என்று தெளிவாக எழுதினார்கள்.
1952இல் உருவாக்கப்பட்டது
ஆனால், அரசியல் உணர்வுகளால் உந்தப்பட்ட நிலையில், 1949இல் அதையே ஒரு சாக்காகவும், வாய்ப்பாகவும் கருதி, இயக்கத்திலிருந்து அண்ணா போன்றவர்கள் வெளியேறி தனிக் கழகம் கண்டனர்!
அப்படி வெளியேறிவர்களேகூட, தனிப்பட்ட உரையாடலிலும், பிறகு ஒரு பெரிய மாநாட்டு நிகழ்ச்சியிலும் இந்த உண்மையை ஒப்புக் கொள்ளும் நிலையும் ஏற்பட்டது.
அதனால்தான் 1952இல் “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்’’ என்ற பெயரால் அய்யா அவர்கள், அதற்குரிய சமுதாயக் குறிக்கோள்கள், சட்டதிட்டங்கள், விதிமுறைகளோடு அதனைப் பதிவு செய்தார்கள்.
வெறும் சுயமரியாதை என்றால், அதன் பேரில்கூட பிறகு எதிர்காலத்தில் சிலர் குழப்பக்கூடும் என்பதால், தெளிவாகவும், திட்டவட்டமாகவும் இருப்பதற்காகவே “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்’’ என்ற பெயரில் பதிவு செய்தார்கள். அதை நடத்தியும் வந்தார்கள்.
நிறுவனத் தலைவர் அய்யா அவர்கள்தான் ஆயுள் தலைவர், அன்னை மணியம்மையார் தான் ஆயுள் செயலாளர். அதேபோல் நிறுவனத்தின் சொத்துக்களை நிர்வகிக்க மேலும் 3 நிர்வாக முழு ஆயுள் உறுப்பினர்-களையும் மற்றும் சில நிர்வாகக் குழு உறுப்பினர்களையும் போட்டு நடத்தினார்.
அண்ணா கட்சியைவிட்டு 1949இல் பிரியும்போது, 5 லட்ச ரூபாய் இருக்கிறதே என்று சிலர் கூறியபோது, அது அய்யாவிடமே இருக்கட்டும் என்று கூறிவிட்டுச் சென்றார்!
வருமானவரி என்ற ஆயுதம்!
அதை அய்யா பெருக்கிய நிலையில் 1963 வாக்கில் நிறுவனத்தின் சொத்துக்கள் ரூபாய் 15 லட்சம் பெருகியுள்ளது என்று வேலூர் போன்ற பற்பல ஊர்களில் பொதுக்-கூட்டங்களில் பேசும்போது கூறியுள்ளார். (ஆதாரம்: “எனது தொண்டு’’, ‘கழகமும் துரோகமும்)
அய்யா அவர்களுடைய காலத்தில் திராவிடர் கழகத்திலிருந்து 1963இல் வெளியேறிய விடுதலை முன்னாள் ஆசிரியர் திரு. எஸ்.குருசாமி அவர்களும், மத்திய கமிட்டி முன்னாள் தலைவர் வழக்குரைஞர் திரு.தி.பொ.வேதாச்சலம் அவர்களும் (இவர்கள் பெரியார் டிரஸ்ட்டாகிய பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருந்து, அய்யா அவர்களின் நம்பிக்கையை இழந்த காரணத்-தால், அவர்கள் வெளியேறுவதற்கு சில காலம் முன்னரே, அப்பதவிகளை ராஜினாமா செய்யும்படி கேட்டு, விலக்கும் அவசியம் ஏற்படுத்தாத வண்ணம் தந்தை பெரியார் அவர்கள் எழுதி வாங்கி விட்டார்கள்.) அதேபோல் வேறு சிலரிடம் அரசியல் கட்சிக்குத் தாவிய நிலையிலும், எழுதி வாங்கி, தன்னுடைய முழு நம்பிக்கைக்குரியவர்களை மட்டும் போட்டு, சாதி, மதம், சொந்த பந்தம் பார்க்காமல், லட்சிய நோக்கோடு நடத்தி வந்தார்கள்.
வருமானவரி துறையினருக்கே மனு எழுதியும், நேரில் பேசியும், பெரியார் வருமானவரி ஏதும் செலுத்துவதில்லை; கணக்கில் காட்டாத பணம் ஏராளம் வைத்துள்ளார் என்பதுபோல எழுதியும், கூறியும் விட்டனர்.
அப்போது முதல், வருமான வரித்துறை (அது ஒரு பெரிதும் மேல்ஜாதி ஆதிக்கத்துறை என்பதால்) அதுதான் சரியான வாய்ப்பு என்று கருதி எப்படியெல்லாம் “வருமானவரி’’ என்ற ஆயுதத்தினை ஏவிட முடியுமோ அப்படிச் செய்தார்கள்.
பெரியார் கணக்குகள் வைத்திருந்த முறை
ஒரு வரலாற்றினை உருவாக்கி, தானே ஒரு தனி வரலாறு ஆகும் தகுதி படைத்த மிகவும் புரட்சிகரமான சிந்தனைகளின் ஊற்றான தந்தை பெரியார் அவர்கள், நிதியைப் பொறுத்தவரை அவர், ஒரு தனி நிர்வாக அமைப்பு, தனி தணிக்கையாளர் (கிuபீவீtஷீக்ஷீ) என்று வைக்காது, வங்கிகளில் கணக்குகள், அடிக்கட்டைகளில் அவரே எழுதிய குறிப்பு, அவரது டைரியில் அவருக்கு விளங்கும் வகையில் குறிப்புகள் பதிவு _ இப்படித்தான் எழுதி வைத்திருந்தார்கள்.
திரு.கி.ஆ.பெ.விசுவநாதம் போன்றவர்கள் பிரிந்தபோதுகூட, தந்தை பெரியார் அவர்களைத் தாக்கி அறிக்கை விட்டபோது, அவரே எல்லாக் கணக்குகளையும் வைத்துக்கொள்ளுபவர் என்றே குறிப்பிட்டுள்ளார். அதற்குப் பதிலளித்த தந்தை பெரியார், “நான்தான் உருவாக்கினேன். நான் மற்ற யாருக்கும் கணக்குக் காட்டத் தேவையில்லை’’ என்கிற முறையில்கூட பல நேரங்களில் பதில் அளித்தார்கள்.
அவர்கள் அதோடு, வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஸ்டேட்மெண்ட் தாக்கல் செய்ததில், “என்னுடைய இயக்கச் சொத்துக்-கள் எனது சொந்த சொத்தினையும் சேர்த்துப் பெருக்கி நன்கொடைகளைப் பெற்று வளர்த்த சொத்துக்கள். நான் யாரையும் எளிதில் நம்பாதவன்; என் கூட இருக்கிறவர்களில்கூட பலருக்கு சபலபுத்தி இருக்கக்கூடும் என்றும் கருதுபவன். எனவே, நானேதான் நிதியைப் பொறுத்த-வரை, கையாளுபவன், கணக்கு வைப்பவனா-கவும் இருப்பேன். என்னிடம் ஒளிவு மறைவு ஏதும் கிடையாது என்பதால் எல்லாம் வங்கி கணக்குகளாக, மில்களில் போடப்-பட்ட தொகை, பெறப்பட்ட வட்டி _ இவைகளாகவே இருக்கின்றன’’ என்றே பதில் அளித்தார்.
இந்நிலையில் முறையான கணக்குகள் தேவை என்று வருமானவரித் துறையினர் கேட்டதற்கு இல்லை என்ற உண்மை பதிலையேதான் அவர்கள் பெற முடிந்தது _ அய்யா அவர்களிடமிருந்து.
இதை ஒரு வாய்ப்பாக ஆக்கிக் கொண்டு, தந்தை பெரியார் பெயருக்கு ஒரு வருமானவரி ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகை வரி; அவரது நிறுவனமான பெரியார் சுயமரியாதைப் பிரச்சர நிறுவனத்திற்கும் (இரட்டிப்பாக) அதே தொகை வரி, போடப்பட்டு வந்தது. கேட்டால், ஒன்று சட்டத்தில் நிற்காவிட்டாலும், மற்றொன்று மூலம் இலாகாவிற்கு வருமானம் _ பிடிப்பு _ இரண்டும் வரக்கூடும் என்ற வாதம் வருமானவரித் துறையினரால் எடுத்து வைக்கப்பட்டது!
தந்தை பெரியாரே எழுதியது...
தந்தை பெரியார் அவர்கள் 14.01-.1970இல் திருச்சியிலிருந்து “உண்மை’’ என்ற மாதம் ஒரு முறை ஏட்டினை துவக்கியபோது, அதன் முதல் இதழில் அவரே எழுதிய தலையங்கத்தில்கூட குறிப்பிட்டிருக்கிறார்.
“நான் பலமுறை சிறை சென்றிருக்கிறேன். வாழ்க்கையில் பல இன்னல்களை அடைந்திருக்-கிறேன். அரசாங்கத்தால் வெறுக்கப்பட்டிருக்கிறேன். இதற்காக ஏற்படுத்தப்பட்ட இயக்கத்திற்கு என் பெயராலும், இயக்கத்தின் பெயராலும், அரசாங்கத்தாலோ, அரசாங்கத்தில் உள்ள “மேல் ஜாதி’’ மக்களாலோ அல்லது இந்தக் கருத்துக்கு மாறுபட்டவர்கள் என்பவர்-களாலோ, எனது முயற்சியைத் தடுக்கவும், ஸ்தாபனத்தை ஒழிக்கவுமான, தன்மையாக ரூ. 15,00,000 பதினைந்து லட்ச ரூபாய்க்கு மேல் (கடந்த காலத்திற்கு என்று இன்கம்டாக்ஸ் வரி) போடப்பட்டிருக்கிறது என்பதுடன், நிகழ்காலத்திற்கும் ஒரு லட்சம் ரூபாய்க்கு போல் இன்கம்டாக்ஸ் போடப்பட்டது’’ என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
தந்தை பெரியார் மறைவுக்குப் பின்னர் அன்னை மணியம்மையார் தலைமை காலத்தில், இந்த வருமானவரி பாக்கி அளவு, 17 லட்சத்திலிருந்து (1976 நவம்பரில்) 57 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டது. (வருமானவரி, வட்டி, அபராத வட்டி எல்லாமே சேர்த்து இத்தொகை ஆகும்)
1978இல் (மார்ச்) அம்மா அவர்கள் மறைந்து, என்னை செயலாளராக்கிய பிறகு இந்த வருமானவரி பாக்கி சுமார் 80 லட்சமாக உயர்த்தப்பட்ட கொடுமைக்கு ஆளானோம்! (கூடுதல் ஆண்டுகள் அதனால் மேலும் தொகை பெருக்கம்)
தந்தை பெரியார் மறைவுக்குப் பின்னர் “எமர்ஜென்சி’’யை முழுமையாகப் பயன்படுத்தி, இலாகாவின் பார்ப்பன மேல் அதிகாரிகள் “சாமி ஆடி’’ பழிவாங்கும் தன்மையில் தம் இஷ்டம்போல் ஆட்டம் போட்டனர்.
சொத்துக்கள் மீது அட்டாச்செண்ட் (Attachment), டிரஸ்ட் சொத்துக்களிலிருந்து வரும் வாடகை வருமானத்தை முடக்கியும், வங்கி கணக்குகளில் உள்ள தொகைகள் பறிப்பு _ முடக்கம் இவ்வளவும் பெரியார் திடலிலேயே பகிரங்கமாக அட்டாச்மெண்ட் நோட்டீஸ் ஓட்டல் வேலை _ இவ்வளவும் நடந்தன.
டிரஸ்டை எதிர்த்து வழக்கு!
அதை எதிர்த்து மீண்ட நிலையில் அம்மா மறைந்து, நான் பொறுப்பேற்ற பிறகு கழகத்தினை விட்டு விலக்கப்பட்ட மூவர் சென்னை உயர்நீதிமன்றத்தில், டிரஸ்டினை எதிர்த்து வழக்குப் போட்டனர். (திருவாரூர் கே.தங்கராசு, டி.எம்.சண்முகம், சிதம்பரம் கு.கிருட்டினசாமி).
அரசே தலையிட்டு, வருமானங்களை எல்லாம் பெறுபவர் (Official Receiver) போட வேண்டும் என்றும், அரசே, இந்த அறக்கட்டளையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கோரினர்.
அன்று திராவிடர் கழகம் கலைஞர் கருணாநிதிக்கு (தி.மு.க.வுக்கு) ஆதரவாக இருக்கிறது என்ற நினைப்பில், அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள், அம்மாவால் விலக்கப்பட்டவர்களுக்கு முதலில் திரை மறைவிலும், பிறகு வெளிப்படையாகவும் ஆதரவு தந்து இம்மாதிரி செயல்களுக்கு வழக்குரைஞர் உதவி _ உபயம்கூட செய்தார்.
நான் பொறுப்பேற்று ஒரு வாரம்கூட ஆகாதநிலையில், உயர்நீதிமன்ற வழக்கு (O.S.No.1978), அதோடுகூட ஒரு சில மாதங்களில் வருமான வரித்துறை மேல்-முறையீட்டு (Income Tax Appellate Tribunal) மன்றம் முன்பு விசாரணைக்கு வந்தது.
நமக்குக் கிடைத்த இரண்டு முக்கிய வெற்றிகள்!
இதற்கு முதலில் வருமானவரித் துறை அதிகாரி, அதற்கடுத்து மேல் அதிகாரி, அதற்கடுத்த நிலையில் (Income Tax Assistant Commissioner) இப்படி பலரும் பழைய பாக்கியை உறுதி செய்து விட்ட நிலையில்தான், மூன்றாவது கட்டமாக இந்த அப்பீல், (Income Tax Appellate Tribunal)-ல் செய்யப்பட்டது.
அங்கு இரண்டு “மேல் ஜாதி’’ எனப்படும் நீதிபதிகள் விசாரித்தனர். ஆனால், மேல் ஜாதி உணர்வுக்கு ஆட்படாமல், அப்பெருமக்கள் நல்ல தீர்ப்பு 1978இல் வழங்கினர்.
1. ரூ.80 லட்சம் வருமானவரி போட்டது செல்லாது என்ற நமது வாதம் தீர்ப்பில் ஏற்கப்பட்டது.
2. பெரியாருடையது “அறக்கட்டளைதான்’’ என்று வருமான வரித்துறையினர் ஏற்றுக் கெள்ள வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது. இவை இரண்டும் மிக முக்கிய வெற்றிகளாகும்.
அதன் பிறகு கடந்த சுமார் 10 ஆண்டுகளுக்கும் (With retrospective effect) இதை அறக்கட்டளையாக (Public Charitable Trust) வருமானவரித்துறை அங்கீகரித்த ஆணைகளையும் பெற்றோம்.
கணக்குகள் முறையாக அளிக்கப்பட்டு வருகின்றன
அம்மா அவர்களின் தலைமைக் காலத்திலிருந்தே (1974 முதல்) கணக்குகள் முறையாக எழுதப்பட்டு, வருமான வரித்துறைக்கு ஆண்டுதோறும் சமர்ப்பிக்கப்-பட்டு வருகின்றன.
தனி தணிக்கையாளர்கள் (Auditors) தணிக்கை செய்து, இலாகாவுக்கு தாக்கல் செய்கிறார்கள்.
அறக்கட்டளையின் நிர்வாகக் கூட்டங்கள், முறையே சட்டப்படி எப்படி நடைபெற வேண்டுமோ அப்படி நடைபெற்று, அதற்குரிய ஆவணங்கள் (Records) செம்மையாக வைக்கப்-பட்டு நிர்வாகம் சரியானபடி நடைபெற்று வருகின்றது!
இயக்கத்தில் இருப்பவர்களில் சபலங்-களுக்கும், துரோக சிந்தனைக்கும், தன்முனைப்பு, சுயநலம் இவற்றிற்கு ஆளாகும் சிலர் துரோகிகளாக மாறும்போது, அவர்களது வழமை, இந்த அறக்கட்டளை மீது சேற்றை வாரி இறைக்கும் ‘திருப்பணியைச்’ செய்து-விட்டுப் போவதுதான்.
அவ்வப்போது ஒவ்வொரு காலகட்டத்திலும் வெளியேறியோ, அல்லது வெளியேற்றப்பட்டோ செல்லுபவர்கள், இதில் ஈடுபட்டு தரும் தொல்லைகளையும், பொது ஸ்தாபனமாக இது உள்ளபடியால் சந்திக்கவேண்டியே உள்ளது.
முதலில் உயர்நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்குக்கு ஆதாரமில்லை என்று தள்ளப்பட்டு, நாம் அங்கேயும் வெற்றி பெற்றோம் _ நியாய அடிப்படையில்.
பெரியார் - மணியம்மை கல்வி அறப்பணிக் கழகம் உருவாக்கப்பட்டது.
நமது பெரியார் அறக்கட்டளையின் இந்த சங்கடங்கள், வரித் தொல்லைகளையெல்லாம் பார்த்து மனம்புழுங்கி, வேதனைப்பட்ட அன்னை மணியம்மையார் அவர்கள் அவருக்கென இருந்த தனித்த சொத்துக்கள், அய்யா அவர்கள் அம்மா அவர்களின் தனி பராமரிப்புச் செலவுக்கென ஒதுக்கி வைத்த சொத்துக்களை (அய்யா அவர்களின் சொந்த பூர்வீக வருமானம் மூலம் கிடைத்த சொத்து) பொதுவுக்கு என ஆக்கி, பெரியார் மணியம்மை கல்வி அறப்பணிக் கழகத்தினை புதிதாக 1974லேயே தலைமை ஏற்று அன்னை மணியம்மையார் உருவாக்கிவிட்டார்! (பழைய பெரியார் டிரஸ்டுக்கும், வருமானவரித் துறைக்கும் பிரச்சினை இருந்தமையால், தனியே புது டிரஸ்ட் ஏற்பாடு செய்வதே சரியானதாகும் என்று சட்ட அறிஞர்கள், வழக்குரைஞர்கள் ஆலோசனைகளுக்கு ஏற்பவே அம்மா இதனை தனியே ஒரு அறக்கட்டளையாக, துவக்கம் முதல் வருமானவரித்துறை ஒப்புதலுடனேயே துவக்கினார்கள்) அவர்களது முழு நம்பிக்கைக்கும், நாணயத்திற்கும் உரியவர்களை போட்டு நடத்தினார்கள்.
எரிச்சல்காரர்கள் வெளியேற்றப்பட்டனர்!
இந்த அறக்கட்டளையில் தன்னை அம்மா போடவில்லை என்ற எரிச்சல் காரணமாக, சந்தர்ப்பம் பார்த்து வந்த தன்முனைப்பாளரான திரு.நாகரசம்பட்டி சம்பந்தம், டிரஸ்ட் வளருவதையும் புதிய அமைப்புகள் தோற்றுவிக்கப்-பட்டு, அதற்குப் பல புதியவர்கள், பெரியவர்கள் நிர்வாகம் ஏற்பதையும்கூட பொறுக்காமல் அவசியம் ஏற்பட்டபோது இதற்கு எதிரான சில “கீழறுப்பு’’ வேலைகளை நடத்தினார்.
உடனே எச்சரிக்கையாகி அவரை வெளியேற்றினோம். அவருடன் அவருடைய அத்தையான திருமதி விசாலாட்சி அம்மாளும் வெளியேற்றப்பட்டார் _ அவரது குரலாக அந்த அம்மையார் ஒலித்ததால்.
தி.மு.க. அரசு கொண்டு வந்த ஒரு சட்டம்!
பெரியார் அறக்கட்டளை மற்றும் அன்னை மணியம்மையார் பெயரில் உள்ள அறக்கட்டளை ஆகியவற்றை சட்டதிட்டப்படி ஆயுள் தலைவர், ஆயுள் செயலர், ஆயுள் உறுப்பினர் என்ற தகுதிகள் நிர்வாகக் குழுவில் உண்டு. இரண்டு அறக்கட்டளைகளுக்கும் தனித்தனியே பொதுக் குழுக்களும் உண்டு.
அது பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சங்கமாகிய அறக்கட்டளை யானபடியால் அச்சட்டத்திற்கு 1975இல் கலைஞர் தலைமையில் இயங்கிய தி.மு.க. அரசு ஒரு சட்டத்திருத்தம் கொண்டுவந்து, சட்டவிதிகளை மாற்றம் செய்தது.
அதன்படி ஆயுள் உறுப்பினராக எந்த சங்கத்திலும் இருக்க முடியாது என்று அச்சட்டம் திருத்தம் செய்யப்பட்டது.
பொதுவாக அறக்கட்டளை சட்டத்தின் (Trust Act) கீழ் ஒரு அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டால், அதில் ஆயுள் பூராவும், தலைவர், செயலாளர், உறுப்பினர் இருக்க வழிவகை உண்டு.
அதுவே இச்சட்டத்தின் சங்கப்பதிவு (Societies Act) கீழ் பதிவு செய்தால் ஏன் இந்த பேதம் என்று கேட்டும், 1975ஆம் ஆண்டு சட்டம் வந்தது. ஆனால், அது அமுலுக்கு வந்தது. பின்னோக்கிச் செல்ல முடியாத சட்டத்திருத்தம் என்பதால் 1979 முதல்தான் அமுலுக்கு வந்தது என்பதையும் எடுத்துக்காட்டி நாம் உயர்நீதிமன்றத்தில் அச்சட்டத்தை எதிர்த்து தமிழக அரசின் மீது வழக்குப் போட்டோம். அதனை விசாரித்த நீதிபதி திரு.நயினார் சுந்தரம் அவர்கள் அரசு சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்து நமது வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டார்.
அதன் பேரில் முதல் பெஞ்சிற்கு உயர் நீதிமன்றத்தில் நாம் அப்பில் செய்தோம். தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் ஆனந்த், நீதிபதி ஜஸ்டிஸ் ராஜீ ஆகியவர்கள் அமர்வு முன் 1990இல் அப்பீல் வழக்கு விசாரணைக்கு வந்தது!
தி.மு.க. அரசு அளித்த விதிவிலக்கு!
1990இல் தி.மு.க. ஆட்சி நடைபெற்றது. ஏற்கனவே இந்த டிரஸ்ட் அனுபவித்த சங்கடங்கள், தூண்டிவிடப்பட்டு நடைபெற்ற வழக்குகள் இவைகளையெல்லாம் உணர்ந்த நிலையில், “ரிட்’’ அப்பீல் தமிழக அரசின் சட்டத்திருத்தத்தை எதிர்த்து நடத்தாமல் இந்த இரு டிரஸ்ட்டுகளுக்கு _ அதனுடைய சிறப்பான நடத்தைகளை தெரிந்து, விலக்கப்பட்ட திருவாளர்கள் சம்பந்தம், விசாலாட்சி அம்மையார் கொடுத்த மனுக்களையும் ஆய்வு செய்து, அவை வெறும் “அக்கப்போர்’’ என்பதை உணர்ந்தே, தமிழக அரசு (கலைஞர் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. அரசு) மற்ற கட்சிகள், இயக்கங்களுக்கு விதிவிலக்கு உள்ளதால் இதற்கும் தருவதுதான் நியாயமானது என்பதால், அந்த சட்டத்தின் 54ஆவது விதிப்படி, இந்த இரு டிரஸ்ட் அமைப்புக்களுக்கு (G.O. மூலம்) முழு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. (G.O. M/s No.751 dated 31.12.1990, Commercial Taxes and religious Endowments Department)
அதை நீதிமன்றத்தில் முதல் பெஞ்ச் முன்னால் கூறி, இந்த அரசு ஆணையின் (G.O.) காரணமாக “ரிட்’’ அப்பீல் வழக்கினை வாபஸ் பெற்றோம்.
அதற்குப் பிறகு 1997இல் இயக்கக் கட்டுப்பாட்டை மீறிய காரணத்தால் கழகத்தி-லிருந்து நீக்கிவைக்கப்பட்ட திரு.பாலகுரு என்பவரும் அவருடைய கோஷ்டியினரும் அவர்களுக்கு மறைமுகமாக தொடர்ந்து உதவிவந்த வழக்குரைஞர் திரு.துரைசாமியும் நமது டிரஸ்ட்டுகளின் மீது வழக்கினை மற்றொரு ரூபத்தில் “ரிட்’’ ஆக, சென்னை உயர்நீதிமன்றத்தில் போட்டனர். அதை விசாரித்து தீர்ப்புக் கூறிய, நீதிபதி பத்மநாபன், இவர்களது வாதங்கள் ஏற்கக் கூடியவை அல்ல என்பதைச் சுட்டிக்காட்டி, அந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்ததோடு, அவ்வழக்கை அவர்களே, அதற்கு முந்தைய நீதிபதி கனகராஜ் அளித்த அனுமதியையும் கூட ரத்து செய்து தீர்ப்புக் கூறினார்.
இது 1996 _ 97இல் நடைபெற்று தீர்ப்பு வெளிவந்துள்ளது.
தொல்லைகள் வந்தாலும் வளர்ச்சிப் பணிகள் தொடர்கின்றன!
இந்த வழக்குகள் தொல்லை ஒரு புறம் தொடர்ந்து கொண்டே இருந்தாலும், நமது இரு அறக்கட்டளைகளின் சார்பில் துவக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்ற அமைப்புகள் மிகவும் நல்ல வளர்ச்சி பெற்று, சிறப்பான முன்னேற்றத்தை அடைந்துள்ளன.
தந்தை பெரியார் அவர்கள் காலத்தில், திருச்சியில் பெரியார் ஆசிரியர்ப் பயிற்சிப் பள்ளி, நாகம்மை ஆசிரியைப் பயிற்சிப் பள்ளி, பெரியார் நடுநிலைப் பள்ளி, நாகம்மை குழந்தைகள் இல்லம் மட்டுமே இருந்தன.
இப்போது அவைகளையும் உள்ளடக்கி 44 நிறுவனங்கள் (5 மருத்துவமனைகள் உட்பட) நடைபெற்று வருகின்றன.
பெண்களுக்கான தொழில் படிப்பு, அமைப்புகள், பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி மய்ய அமைப்பு உட்பட எல்லாம் சிறப்பாக நடைபெறுகின்றன.
இவற்றிற்கு ஒரு சில அமைப்புகளுக்கு மட்டுமே அரசு உதவி உண்டு. மற்றவை முழுக்க முழுக்க அறக்கட்டளை நிதி, நன்கொடைகள் இவைகள் மூலமே நடைபெற்று வருகின்றன.
தொடர்ந்து இந்த அறக்கட்டளைகளின் கணக்குகள், வரவு _ செலவுகளை ஆய்ந்த நிலையில் மத்திய அரசின் வருமான வரித்துறை-யிடமிருந்து 80நி வரிவிலக்கினை பெற்றுள்-ளோம்.
நிறுவனங்கள் பெருகியது மட்டுமல்ல, வருமானம் தராத சொத்துக்களை சுமையாக வைத்துக்கொண்டிராமல், அவைகளை விற்று அதன்மூலம் வந்த வருவாயானது புதிய கட்டிடங்கள், புதிய இடங்கள், புதிய சொத்துக்கள் வாங்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து 26.12.1996 அன்று சென்னையில் நடந்த திராவிடர் கழக மாநில மாநாட்டில் எனது உரையில் குறிப்பிட்ட ஒரு பகுதியை இப்போது நினைவூட்ட விரும்புகிறேன்.
“இங்கே நான் ஒரு சிறிய பத்திரிகை குறிப்பு வைத்திருக்கிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் அறக்கட்டளை சம்பந்தமானது அது. சகோதரர் நெடுமாறன் அவர்கள் இங்கே இருக்கின்றார். அருமை சகோதரர் ஜெகவீர-பாண்டியன் அவர்கள் இங்கே இருக்கின்றார். அவர்களுக்கெல்லாம் இந்த வரலாறு மிக நன்றாகத் தெரிந்ததே. பெருமைக்குரிய இந்திராகாந்தி அவர்களுடைய ஆட்சிக் காலத்திலே நிதி அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம் அவர்கள்,
தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை பற்றி அந்த அறக்கட்டளையின் நிர்வாக உறுப்பினர் என்கிற முறையிலே, ஒரு பேட்டி கொடுத்திருக்கின்றார். அதிலே அவர் ஒரு விளக்கம் சொல்லுகின்றார்.
தேனாம்பேட்டையில் உள்ள கட்டடங்களை வாடகைக்கு விடுவதிலும், நிலத்தை கண்காட்சிகள் நடத்த வாடகைக்கு விடுவதிலும் அறக்கட்டளைக்கு வருமானம் வருகிறது. இதன்மூலம் வருடத்துக்கு 5 லட்சம் ரூபாய் வருமானம் வருகிறது. இந்த வருமானம் அறக்கட்டளையின் நோக்கத்தை நிறைவேற்றப் போதுமானதாக இல்லை.
அறக்கட்டளை வருமானத்தைப் பெருக்க அரங்கம் கட்டமுடிவு செய்யப்பட்டு ரூ.2 கோடியே 78 லட்சத்தில் காமராஜர் பெயரில் அரங்கம் கட்டப்பட்டது. இதற்காக 3 வங்கிகளில் இருந்து 2 கோடியே ஒரு லட்சம் ரூபாய் கடனாகப் பெறப்பட்டது. அரங்கம் மூலம் அறக்கட்டளைக்கு வருமானம் வந்தாலும் வாங்கிய கடனுக்கு வட்டியும், அபராத வட்டியும் உயர்ந்து, வட்டி மட்டும் ரூ.86 லட்சத்து 35 ஆயிரம் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. அறக்கட்டளையை நிர்வகிக்க முடியவில்லை என்று சொல்லுகின்றார்.
இந்த அறக்கட்டளையில் உறுப்பினர்களாக இருக்கின்றவர்கள் யார் தெரியுமா? மத்திய அமைச்சரவையிலே நிதியமைச்சராக இருந்தவர், மத்திய அரசாங்கத்துடன் தொடர்புடையவர்கள், மத்திய அமைச்சரவையிலே செல்வாக்கு உள்ளவர்கள். இவ்வளவு சிறப்பானவர்கள் இந்த அறக்கட்டளையிலே இருந்தும் முடியவில்லை என்கின்றனர்.
ஆனால், இன்று நமது ஆண்டு வருவாய் 47 இலட்ச ரூபாய். (1996)
அய்யா காலத்திலே 15 லட்ச ரூபாய் சொத்துக்களை விட்டுவிட்டுப் போனார். அப்பொழுது இந்த அறக்கட்டளைக்கு ஆண்டு வருமானம் ஒரு இலட்சம் ரூபாய் பிறகு அம்மா அவர்களுடைய காலத்திலே இந்த அறக்கட்டளைக்கு வருமானம் 2 லட்சம் ரூபாய்.
நண்பர்களே, எங்களுடைய இயக்கம் திறந்த புத்தகம்தான். இப்பொழுது பெரியார் அறக்கட்டளைக்கு ஆண்டு வருமானம் மட்டும் எவ்வளவு தெரியுமா? ஒரு ஆண்டுக்கு 47 லட்சம் ரூபாயாக வருமானம் உயர்ந்திருக்கின்றது.’’
திறந்த புத்தகமாகவே நமது அறக்கட்டளைகள் இயங்கி வருகின்றன. இதில் பொறுப்பு வகிப்போர் சுயநலமற்ற பொதுநல உணர்ச்சியோடு செயல்படுவோர்களாகவே உள்ளனர்.
கட்டிய பணத்தைத் திரும்பப் பெற்றோம்!
வருமான வரித்துறையினர் ஏற்கனவே நமது வாடகைகளை 1976 அட்டாச் செய்து, எடுத்துக் கொண்ட தொகைகள், மற்றும் வரி பாக்கிக்காக முடக்கி வரவு வைத்துக்கொண்ட தொகைகளைத் திருப்பித் தரவேண்டும் என்பதற்காக _ 1978 டிரிபியூனல் தீர்ப்பின் அடிப்படையில் _ தொடர்ந்து முயற்சிகளை நாம் மேற்கொண்டு, பெரும்பகுதி தொகைகளை வட்டியுடன் திரும்பவும் நமது பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் பெற்றது என்பதைப் பெருமகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்.
அத்தொகைகள் வட்டியுடன் பெறப்பட்டு, புதுடெல்லி பெரியார் மய்யம் கட்டுமான செலவுக்கு துவக்க நிதியாகவே வைக்கப்பட்டன. இத்தொகை மாத்திரம் ரூபாய் 7,57,640 ஆகும்.
இன்னமும் எங்களுக்குத் தொல்லைகளும், அரசியல் கண்ணோட்டத் தொந்தரவுகளும் இல்லாமல் இல்லை!
-உண்மை இதழ்,16-31.8.16