Saturday, 31 December 2016

தந்தை பெரியார் அன்றே சொன்னார்!


யாரோ சில பிராமணர்கள், பெரியார் ராமசாமி நாயக்கர், இந்த நாட்டில் வாழவே கூடாது என்று கூறி வருகிறார். இவரை நீங்கள் எப்படி இங்கே கூப்பிட்டீர்கள் என்பதாகக் கேட்டார்கள் என்று ஒருவர் இங்கு சொன்னார். பிராமணர்கள் இந்த நாட்டில் வாழக்கூடாது என்றோ, இருக்கக்கூடாது என்றோ திராவிடர் கழகம் வேலை செய்யவில்லை _- திராவிடர் கழகத்தின் திட்டமும் அதுவல்ல- _ திராவிடர் கழகத்தினுடைய திட்டமெல்லாம் _ திராவிடர் கழகமும் நானும் சொல்வதெல்லாம், விரும்புவ தெல்லாம் _ நாங்களும் கொஞ்சம் வாழ வேண்டும் என்பதுதான். இந்த நாட்டிலே நாங்களும் கொஞ்சம் மனிதத் தன்மையோடு சமத்துவமாக இருக்க வேண்டும் என்பதுதான்.

இது பிராமணர்கள் இங்கு வாழக் கூடாது என்று சொன்னதாகவோ, இந்த நாட்டைவிட்டு அவர்கள் போய்விட வேண்டும் என்று சொன்னதாகவோ அர்த்தம் ஆகாது.அவர்களைப் போகச் சொல்லவேண்டிய அவசியமும் இல்லை.அது ஆகிற காரியம் என்று நான் கருதவுமில்லை. தவிரவும், பிராமணர்களுக்கும் நமக்கும் பிரதான பேதம் ஒன்றுமே இல்லை. அவர்கள் அனுசரிக்கின்ற சில பழக்க வழக்கங் களையும், முறைகளையும்தான் நாங்கள் எதிர்க்கின்றோம். இது, அவர்கள் மனம் வைத்தால் மாற்றிக்கொள்வது பிரமாதமான காரியம் இல்லை.

நமக்கும், அவர்களுக்கும் என்ன பேதம்? இப்போது அவர்களும், நாமும் ஒரு குழாயிலே தண்ணீர் பிடிக்கின் றோம்.ஒரு தெருவிலே நடக்கின்றோம். ஒரு தொழிலையே இருவரும் செய்கி றோம். காலமும் பெருத்த மாறுதல் அடைந்துவிட்டது. இந்த நிலைமையில் நமக்குள் மனித தர்மத்தில் பேதம் இருப்பானேன்? ஆகவே, உள்ள பேதங்கள் மாறி, நாம் ஒருவருக் கொருவர் சமமாகவும், சகோதர  உரிமை யுடனும் இருக்க வேண்டும் என்பதற் காகத்தான் நான் பாடுபடுகின்றேன். நம்மிடையில் பேத உணர்ச்சி வளரக் கூடாது என்பதில் எனக்குக் கவலை உண்டு. எனவே, முயற்சியில் பலாத் காரம் இருக்கக் கூடாது என்பதிலும் எனக்குக் கவலை உண்டு.

எப்போதுமே காலம் ஒன்றுபோல் இருக்க முடியாது. நம்மில் இரு தரப்பிலும் பல அறிஞர்களும், பொறு மைசாலிகளும் இருப்பதனாலேயே நிலைமை கசப்புக்கு இடமில்லாமல் இருந்து வருகின்றது. இப்படியே என்றும் இருக்கும் என்று நினைக்க முடியாது. திராவிடர் கழக பின் சந்ததிகளும், பிராமணர்களின் பின் சந்ததிகளும் இந்தப்படியே நடந்து கொள்வார்கள் என்றும் கூறமுடியாது. ஆதலால், அதிருப்திகளுக்குக் காரண மானவைகளை மாற்றிக்கொள்வது இருவருக்கும் நலம். அதை நண்பர் சிறீனிவாச ராகவன் அவர்களும் நன்றாய் விளக்கி இருக்கிறார். அதாவது, பிராமணர்களும் காலதேச வர்த்த மானத்துக்குத் தக்கபடி தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சொன்னார். அதுதான் இப்போது இரு தரப்பினரும் கவனிக்க வேண்டியது. சென்னை ராயப்பேட்டை பார்ப்பனர்களின் அமைப்பான லட்சுமிபுரம் யுவர் சங்கத்தில் -_ -தந்தை பெரியார் 5.1.1953

புல்லேந்தியவர்கள், வாளேந்தினால்- வாளேந்தியவர்கள் என்ன ஏந்து வார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்! விரல் உரல் ஆனால், உரல் என்னவாகும்? அப்புறம் உங்கள் கதி என்னவாகும்? என்பதையும் நினைத்துப் பாருங்கள். அனுதினமும், பார்ப்பனர் தாம் திராவிடர்களுக்குத் தொல்லை கொடுத்து வருவது என்பதை எல்லா மக்களும் உணர்ந்து கொள்ள வேண் டும். பார்ப்பனர்கள் வாழை இலைகள்! திராவிடர்கள் முட்செடிகள். வாழை இலை முள்ளின்மீது மோதினாலும், முள் வாழை இலைமீது மோதினாலும் வாழை இலைதான் அழிந்துவிடும். அதுபோல், பார்ப்பனர்கள் திராவிடர் கள்மீது மோதினால் அவர்கள்தான் அழி வார்கள். திராவிடர்கள் பார்ப்பனர் களை மோத ஆரம்பித்தார்களோ- _ அப்புறம் பார்ப்பனப் பூண்டே இந் நாட்டில் இருக்காது. இதைப் பார்ப் பனர்கள்உணரவேண்டும். பார்ப்பனத் தோழர்களே! எங்களை முட்டாள் களென்று கூறி உங்களைப் புத்திசாலி கள் என்று பெருமையடித்துக் கொள் ளாதீர்கள்.ஆணவப்பட்டு அழிந்து போகாதீர்கள். புத்திசாலிகளானால், புத்திசாலிகளாகவே பிழைத்துக் கொள்ளுங்கள்.

_ -தந்தை பெரியார்: 1948இல்

-விடுதலை ஞா.ம.,5.7.14

No comments:

Post a Comment