Sunday, 1 January 2017

நம்ம தியாகராயர் நகர்!

-கோவி.லெனின்

நம்ம T.Nagar

எதுக்கு T.Nagarனு, நம்ம .T.Nagar அய்ச் சொல்றோம்? அது என்ன T? மசாலா டீயா? ப்ளாக் டீயா? க்ரீன் டீயா? இந்த  T இருக்கே, அது நம்ம மக்களை ஆட்டிப் படைச்ச வியாதிகளையெல்லாம் போக்கிய சுக்கு T. அந்த Tயைப் பற்றி அவசியம் நாம எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டும்.

T.Nagar.ல் உள்ள T.க்கு சொந்தக்காரர், தியாகராயர். இவர்தான் நம்ம சென்னை மாநகராட்சியின் முதல் தலைவர். அதாவது, இன்றைக்கு மேயர் என்று சொல்கிற பதவியை முதன்முதலில் வகித்தவர் தியாகராயர்தான். பெரிய பணக்காரர். நெசவு ஆலை, தோல் பதனிடும் தொழிற்சாலை, உப்பளம், சுண்ணாம்புக் காளவாய்னு நல்ல வருமானம்.

அந்தப் பணத்தை மக்களோட வளர்ச்சிக்காக கல்வித்துறையில் செலவிட் டவர்  தியாகராயர். சென்னை மாநகராட்சி சார்பில் ஏராளமான பள்ளிக்கூடங்களைத் திறந்தார். அந்தப் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை முதன் முதலில் கொண்டு வந்தவரும் நம்ம - T- தியாகராயர்தான். இலவசப் பாடப்புத்தகங் களையும் மாணவர்களுக்குக் கொடுத்தவர். ஏழைகளும் ஒடுக்கப்பட்ட மக்களும் படித்து  முன்னேறி, நல்ல வேலைக்கு வரவேண்டும் என்பதுதான் தியாகராயரின் இலட்சியம்.

நம்ம - T- ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில்தான் இருந்தார். ஆனால் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ்கட்சியில் இருந்த பார்ப்பன சமுதாயத்தினரே தியாகராயர், டி.எம்.நாயர், பனகல் அரசர் போன்ற பார்ப்பனரல்லாத காங்கிரஸ்காரர்களைத் தோற்கடித்து விட்டார்கள். அது  மட்டுமல்ல, தியாகராயர் பெரிய பக்திமான். திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவில், வண்ணாரப்பேட்டை ஸ்ரீராம லிங்க சவுடேஸ்வரி கோவில் இதற்கெல்லாம் நிறைய காணிக்கை கொடுத்திருக்கிறார்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் திருப்பணிக்காக அந்தக் காலத்திலேயே 10ஆயிரம் ரூபாய் கொடுத்தவர் நம்ம - T. ஆனால், கோவிலுக்கு குடமுழுக்கு நடந்த போது, அவரை விழா மேடையில் அமர அனுமதிக்கவில்லை. அவரைவிட குறைந்த  நிதி கொடுத்த, நிதியே கொடுக்காத பார்ப்பனர்களெல்லாம் கோபுரத்து மேலே நின்றுகொண்டிருந்தார்கள். நம்ம T கிட்டே பணியாளராக இருந்த ஒரு பார்ப்பனரே, நம்ம Tயை நீங்க சூத்திரர். அதனால இங்கு அனுமதி கிடையாது என்று சொல்லாமலே சொல்லி விட்டார். இந்த சாதிபேதத்தை எதிர்த்துதான் டாக்டர் நடேசனாரோடும் டி.எம்.நாயரோடும் சேர்ந்து திராவிடர் இயக்கத்தை (நீதிக்கட்சியை) உருவாக்கினார்  நம்மT.

அதே நேரத்தில், ஏழை பார்ப்பனர்கள் பலருக்குப் பண உதவியும் பொருளுதவியும் செய்தவர் தியாகராயர். அவர் வீட்டு தாழ்வாரத்தில் உட்கார்ந்து பார்ப்பனச் சிறுவர்கள் சமஸ்கிருதம் கற்றுக் கொள் வார்கள். யக்ஞராமன் என்கிற பார்ப்பனர், சேரிப்பகுதிக்குப்போய் தாழ்த்தப்பட்டவர் களுக்குத் தொண்டு செய்தார் என்பதால் அவரை அவரோட சாதிக்காரர்கள் ஒதுக்கி வைத்துவிட்டார்கள். நம்ம ஜி தான், அந்த யக்ஞராமனை ஆதரித்து அவருக்கு பச்சை யப்பன் கல்லூரியில் விரிவுரையாளர் பணி வாங்கிக் கொடுத்தார். சென்னை மாகாணத் துக்கு பிரிட்டீஷ் ஆட்சியின்போது 1920ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திராவிடர் இயக்கமான நீதிக்கட்சிதான் வெற்றிபெற்றது. அப்போது கவர்னராக இருந்த வெலிங்டன் பிரபு, தியாகராயரை ஆட்சி அமைக்கும்படி அழைத்தார். அதற்கு நம்மT   சொன்ன பதில் என்ன தெரியுமா?

இந்திய வரலாற்றிலேயே முன் எப் போதும் இல்லை என்னும்படி அரசியல் ஞானமற்ற பாமர மக்களை தட்டி எழுப்பிய பாவத்திற்காக என்னையும், அகால மரணமடைந்த என் அருமை சகத் தலைவர் டாக்டர் டி.எம்.நாயரையும் வெள்ளையனின் வால்பிடிப்பவர்கள் என்று காங்கிரஸ் தலை வர்களும் அவர்களுடைய பத்திரிகைகளும் தூற்றுகின்றனர். நான் இப்பதவியை ஏற் பேனேயானால் எனது புனிதமான கட்சிக்கு களங்கம் விளைவித்தவன் ஆவேன். அத னால் நான் பதவி ஏற்கமாட்டேன். மன்னிக்க வேண்டும் என்று, தேடி வந்த முதல் அமைச்சர் பதவியை ஏற்க மறுத்து பதில் அனுப்பினார் நம்ம T.

பதவிக்கு ஆசைப்படாமல் தன் சொந்தப் பணத்தை செலவழித்து, சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட-ஏழை மக்களுக்கு கல்வி யையும் அறிவையும் கொடுத்ததோடு அதற் காகவே ஓர் இயக்கத்தை உருவாக்கவும் துணை நின்ற பெருமகன்தான் நம்ம T- தியாகராயர். இப்ப சொல்லுங்க.. நம்மT , சூப்பர் T தானே! இந்த இடத்துக்கு . Tnagar என்பது பொருத்தம்தானே...   T என்றால் தியாகராயர். Tnagar என்றால் தியாகராய நகர். இனி நீங்க T குடிச்சாலும் தியாகராயர் ஞாபகம் வரணும். - T-Shirt போடும்போதும் தியாகராயர் நினைவுக்கு வரணும்.

(அவர் பெயரை மறைக்கவே தியாகராயர் நகரை டி.நகர் ஆக்கினர் பார்ப்பனர்கள் என் பதை மறவாதீர்!)

பனகல் பார்க்குல என்ன இருக்கு?

சைனீஸ் மொழி தெரிந்தால்தான் இன்ஜி னியரிங் படிக்க முடியும் என்று விதிமுறை இருந்தால், தமிழ்நாட்டில் எத்தனை பேர் இன்ஜினியரா இருந்திருப்போம்? விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படித்தான் ஒருகாலத்தில் சென்னை மாகாணத்தில், டாக் டருக்குப் படிக்கணும் என்றால் சமஸ்கிருதம் தெரிந்தால்தான் படிக்க முடியும் என்கிற நிலைமை இருந்தது. எம்.பி.பி.எஸ் படிக் கிறதுக்கு எதற்கு சமஸ்கிருதம் தெரியவேண் டும்? சாதாரண மக்களுக்கு எப்படி சமஸ் கிருதம் தெரியும்? அப்படி என்றால், ஏழை களும் சமுதாயத்தில் பின்தங்கியவர்களும் எம்.பி.பி.எஸ். படிக்கக்கூடாது, டாக்டர் ஆகக் கூடாதுங்கிறதுக்காகவே (பார்ப்பனர்கள்  மட்டுமே மருத்துவராகணும் என்கிற சூழ்ச்சி) இந்த சமஸ்கிருத நிபந்தனை இருக்கிறதா என்று யோசித்து, அதனை நீக்கியவர் சென்னை மாகாணத்தில் முதல் அமைச்ச ராக இருந்த பனகல் அரசர் என்கிற ராமராய நிங்கார். அதற்குப்பிறகுதான், பலரும் எம்.பி.பி.எஸ் படித்து டாக்டராக முடிந்தது.

சிவன் சொத்து குல நாசம் என்று நம்மை பயமுறுத்திவைத்துவீட்டு, கோவில் சொத்து களைத் தனிப்பட்ட சில சமுதாயத்தினர் கொள்ளையடித்துக் கொண்டிருந்ததைத் தடுக்கும்விதத்தில் இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக கொண்டு வந்தவரும் பனகல் அரசர்தான். அதுமட்டுமில்லை, தாழ்த்தப்பட்ட மக்களை சாதி பெயர் சொல்லி இழிவுபடுத்தும் வழக்கத்தை ஒழிக் கும் விதத்தில், அவர்களுக்கு ஆதிதிராவிடர் என்ற அடைமொழியை சட்டத்தில் இடம் பெறவைத்தவரும் பிரதம அமைச்சராக இருந்த பனகல் அரசர்தான்.  சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அமைவ தற்குக் காரணமாக இருந்தவர். நம்ம சென்னை மாநகரத்தை விரிவுபடுத்தியவர். நம்ம  T நகர் உருவாக காரணமாக இருந் தவர். மக்களுக்கானப் பல திட்டங்களை நிறைவேற்றியவர் திராவிடர் இயக்கமான நீதிக்கட்சியின் ஆட்சியில் முதல் அமைச்ச ராக இருந்த பனகல் அரசர். பெரிய ஜமீன் பரம்பரையைச் சேர்ந்தவர். வக்கீலுக்குப் படித்தவர். ஆனால், சாதாரண மக்களுக்காக சிந்தித்து திட்டங்களைத் தீட்டியவர். அவர் பெயரில்தான் பனகல் பார்க் இருக்கிறது.

இந்த பிஸியான ஏரியாவுல இவ்வளவு பெரிய பார்க் இருக்குதே.. இதை பார்க்கிங் ப்ளேஸா மாத்திடலாமே என்று ஆலோ சனை சொல்கிறவர்கள் இருக்கிறார்கள். அரசாங்கத்துக்கிட்டேயும் இதற்கான திட்டம் இருக்குது. பார்க், பார்க்கிங் ஆனாலும் அப்பவும் அதற்கு பனகல் பார்க்கிங் என்று தான் பெயர் இருக்கும்.  என்ற சொல் லிலேயே கிங் வந்துவிடுகிறது. கிங் என்றால் அரசர். அரசர் என்றால் பனகல் அரசர். மேலும்,  என்றால் நிலை நிறுத்துகிற இடம். நம்மையெல்லாம் இந்தளவுக்கு நிலைநிறுத்தி பட்டதாரிகளா, டாக்டர்களா நிமிர்வதற்கு காரணமானவர் பனகல் அரசர் ராமராய நிங்கார். பாண்டி பஜார்னு ஏன் சொல்றோம்?

யாருக்காவது ஈஸியா வழி சொல்ல ணும்னா, பாண்டி பஜார் ஸ்டாப்பிங்கில் இறங்கி ரைட்ல வாங்க, லெஃப்ட்ல போங்கன்னு சொல்லிடுறோம். அது என்ன பாண்டி பஜார்? யார் இந்த பாண்டி? அவர்தாங்க W.P.A. சவுந்திரபாண்டியனார். தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக வும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் உரிமைகளுக்காவும் போராடிய தென் மாவட்டத்துச் சிங்கம். சுயமரியாதை இயக்கத் தலைவர் ... சவுந்திரபாண்டியனார் என்றால் அந்தக் காலத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தி லிருந்து எல்லோருக்குமே தனி மரியாதை உண்டு. பெரியாருக்குப் பக்கபலமா இருந்து திராவிட இயக்கத்தை வளர்த்தவர். சுயமரி யாதைத் திருமணத்தை தன் சமூகத்திலும் தமிழக மக்களிடமும் பரப்பியவர். முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்குத் துணை நின்றவர். நாம் தலைநிமிர்ந்து நிற்பதற்காகப் பாடுபட்டவர். அதனால்தான் சவுந்திர பாண்டியனார் சிலை, பனகல் பார்க் பக்கத் திலே கம்பீரமா நின்றுகொண்டிருக்கிறது.

உஸ்மான் சாலை

பொங்கல், தீபாவளி, திருமண விழா இப்படி எதுவாக இருந்தாலும் cheap and best பொருட்கள் வாங்கவேண்டும் என்றால் நம்மதி.நகர் உஸ்மான் ரோட்டுக்குப் போனால் போதும் என்பது எல்லோருக்கும் தெரியும். கூட்டத்தில் நெருக்கியடித்து வெளியே வந்ததும் உஸ்..உஸ்..ன்னு மூச்சு விட்டுக்குறோமே அதனாலதான் உஸ்மான் சாலைன்னு பெயர் வச்சிருக்காங்கன்னு நினைத்துக்கொள்ளக்கூடாது.

கான் பகதூர் சர் முகமது உஸ்மான் என்ற பெருமகனின் பெயரில்தான் உஸ் மான் ரோடு, நார்த் உஸ்மான் ரோடு, சவுத் உஸ்மான் ரோடு இருக்கிறது. இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த முகமது உஸ்மான், திராவிட இயக்கமான நீதிக்கட்சியின் ஆட்சியில் உள்துறை அமைச்சரா இருந் தவர். அதுமட்டுமில்லை, சென்னை மாகா ணத்தின் தற்காலிக கவர்னராகவும் இருந்தார். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், நம்ம மாநிலத்தின்  கவர்னராக இருந்த முதல் இந்தியரும் முகமது உஸ்மான்தான். சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும் இருந்த பெருமைக்குரியவர். யுனானி டாக்டரான இவர் மருத்துவத் துறையிலும், பொதுவாழ்விலும் மக்களுக்குப் பல நன்மைகளைச் செய்தவர். அவர் பெயரில் உள்ள சாலைகளில்தான் நமக்கு  சீப் & பெஸ்டா பல பொருட்கள் கிடைக்குது. நம்ம T.Nagar always the best.

வாக்கிங் ஏரியா நடேசன் பார்க்

சுகர், பி.பி, கொலஸ்ட்ரால் கண்ட்ரோல் பண்ணுறதுக்காக பலரும் நடக்கிறதுனால இதற்கு நடேசன் பார்க்குன்னு பேர் வச்சிட் டாங்கன்னு நினைக்கிறீங்களா? ஒரு வகையில் அதுவும் கரெக்ட்தான். சமுதாயத் தில் ஒரு சிலருக்கு பாரம்பரியமா இருந்த கொலஸ்ட்ராலை அதாவது கொச்சையா சொல்லணும்னா கொழுப்பை அடக்குன வருதான் டாக்டர் நடேசன். நூறு வருசத் துக்கு முன்னாடி பிற்படுத்தப்பட்ட சமுதா யத்தைச் சேர்ந்த மாணவர்கள் சென்னை யில் தங்கி படிக்கிறதுக்கு இடம் கிடையாது. உயர்சாதிக்காரங்க சாப்பிடுற இடத்தில் காசு கொடுத்தாலும் இவங்களுக்கு சாப்பாடு கிடைக்காது. அதற்காக திருவல்லிக்கேணி யில் தன்னோட சொந்த செலவில்  மாணவர் களுக்கான விடுதியை உருவாக்கித் தந்தவர் டாக்டர் நடேசன். இதில் பல மாணவர்கள் தங்கிப் படிச்சி பட்டதாரியானாங்க. டாக்டர் நடேசன்தான் திராவிடர் சங்கம்ங்கிற அமைப்பைத் தொடங்கினாரு. அதுதான் பின்னாடி நீதிக்கட்சின்னு சொல்லப்படுற தென்னிந்திய நல உரிமைச் சங்கத்துக்கு அடித்தளமா அமைந்தது. பிறப்பால் உயர்ந்த ஒரு சிலருக்கு மட்டும்தான் கல்வி-வேலை வாய்ப்பு உரிமைங்கிறதை மாற்றி, எல்லா ருக்கும் அந்த உரிமையுண்டுங்கிற புரட்சி விதையைப் போட்டதில் டாக்டர் நடேச னுக்கு முக்கிய பங்கு உண்டு. அதனாலதான் இன்னைக்கு கிட்டத்தட்ட எல்லாருடைய வீட்டிலும் ஒரு இன்ஜினியரோ டாக்டரோ உருவாகியிருக்காங்க. கொள்ளுத்தாத்தா தலைமுறையில் கக்கத்துல துண்டை வச்சிக்கிட்டு, கையிலே செருப்பைத் தூக்கிக் கிட்டு போய்க்கிட்டிருந்த நிலை மாறி, இன்றைய தலைமுறை கோட்-சூட்டோடு நிமிர்ந்து நடக்குதுன்னா அதுக்கு டாக்டர் நடேசனும் காரணம். அதனாலதான் காலை யிலும் மாலையிலும் உடல் ஆரோக்கியத் துக்காக  நடக்குற பார்க்குக்கு டாக்டரோட பெயரை வச்சிருக்காங்க போல. அவர் சமு தாயம் நல்லா நடக்கணும்னு பாடுபட்ட வராச்சே!

நம்ம டி.எம்.நாயர் ரோடு

டீக்கடை நாயர்கள் பலரை நமக்குத் தெரியும். அதைவிட முக்கியமா டி.எம்.நாயரை தெரிஞ்சுக்கணும். அவர் அந்தக் காலத்தில் மிகப்பெரிய இ.என்.டி. டாக்டர். லண்டன் வரைக்கும் சென்று சிகிச்சை செய்தவர். ஆனா அவர் சமுதாயத்துக்கு செய்த சிகிச்சைதான் மிக முக்கியமானது. பிறப்பால் உயர்வு தாழ்வு இருப்பதை எதிர்த்து நீதிக்கட்சியின் சார்பில் தத்துவ முழக்கம் செய்த பெருந்தலைவர். பிரம்மனின் தலையிலிருந்து ஒரு சமுதாயம்  பிறந்தது,  அவரது  தோளிலிருந்து ஒரு சமுதாயம் பிறந்தது, தொடையிலிருந்து ஒரு சமுதாயம் பிறந்தது, காலிலிருந்து ஒரு சமுதாயம் பிறந்தது என்கிற தலைவிதியை டி.எம.நாயர் கடுமையாக எதிர்த்தார். இந்தியாவிலும் இங்கிலாந்திலும் நான் பல பிரசவங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இப்படிப்பட்ட டெலிவரி கேசுகளை இதுவரை நான் கண் டதும் இல்லை. கேட்டதும் இல்லை என்று சொன்ன நாயர், பிரம்மனால் படைக்கப் படாத ஐந்தாவது வர்ணம் எனப்படுகிற பஞ்சமர்கள்தான் இயற்கை முறைப்படி டெலிவரி ஆகியிருக்கிறார்கள் என்று சொல்லி, எனதருமை ஆதிதிராவிடத் தோழர்களே என அழைத்து அவர்களை அரவணைத்துக்கொண்ட மாபெரும் தலைவர். பிரிட்டிஷ் இந்தியாவில் ஒடுக்கப் பட்ட மக்களின் உரிமைகளுக்காக லண்டன் வரை சென்று வெள்ளைக்காரர்களிடம் உரிமைக்குரல் எழுப்பியவர். தனது முயற்சியில் சளைக்காமல் போராடி அங்கேயே உயிரைவிட்டவர் டி.எம்.நாயர்.

இன்னும் நம்ம.  தி.நகர்ல இல்ல... இல்ல... தியாகராயர் நகரில இருக்கிற பல சாலைகள் முக்கியமான தலைவர்களின் பெயரால உருவாக்கப்பட்டது. அதைத் தவிர பல முக்கிய நிகழ்வுகளின் நினைவிடமாகவும் இருப்பதுன்னு தனிச் சிறப்பு உண்டு. ஓ.தணிகாசலம் செட்டியார் சாலை, செ.தெ.நாயகம் பள்ளி, தந்தை பெரியார் சிலை, அப்புறம் 95 வயதிலேயும் மூத்திரச் சட்டியைத் தூக்கிக்கிட்டு மக்களின் விடிவுக்காகக் குரல் கொடுத்த நம்ம அய்யா மறையுறதுக்கு 5 நாட்களுக்கு முன்னால, துடிக்கிற வலியோட அவருடைய இறுதிப் பேருரையா அமைஞ்ச மரண சாசனத்தை பேசின இடம்னு எவ்வளவோ இருக்கு! வரலாற்றுக்கு முன்பிருந்தே இது நம்ம இடம். வரலாறா இருக்கிற நம்ம தலைவர்களின் பணியால செழுமைப்பட்ட இடமும் கூட! நம்ம விட வேற யாரு கொண்டாட முடியும்? கொண்டாடுவோம்... நம்ம சென்னை இது!

-விடுதலை,22.8.14

No comments:

Post a Comment