Friday, 27 January 2017

ஜாதி பிறப்பு அசிங்கங்கள்


16.11.1930- குடிஅரசிலிருந்து...

பொதுவாக ஜாதி என்பது இந்துக்கள் என்பவர் களுக்குள் ஆரியக் கொள்கைகளுக்கு அடிமைப் பட்டவர் களுக்குள் மாத்திரம்தான் கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டது என்கின்ற கொள்கையின் மீது நான்கு வருணங்களாக அதுவும் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. இவை முறையே ஒன்றுக்கொன்று தாழ்ந்ததாகவும் கடைசி ஜாதி என்பது மிக்க இழிவானதாகவும் கருதப்படுவதாக குறிக்கப்பட்டிருக்கின்ற விபரம் யாவரும் அறிந்ததேயாகும். இப்படி இருந்தாலும் இப்போது அநேக ஜாதிகள் இருப் பதற்கு என்ன காரணம் என்று கவனித்துப் பார்ப்போ மானால் அதற்குக் கிடைக்கும் சமாதானம் மிகமிக இழிவைத் தரத்தக்கதாகவே இருப்பதை உணர லாம். அதாவது ஆதியில் கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட நான்கு வருணத்தாரும் தங்களில் ஜாதி முறை தவறி கலப்பு விவாகம் செய்து கொண்டதாலும், கலப்பு விபசாரம் செய்து கொண்டதாலும் ஏற்பட்ட பிரிவுகளென்றும், அப்படிப்பட்ட பிரிவுகளுக்குப் பஞ்சம ஜாதியார்கள் என்று பெயர் கொடுக்கப்பட்டிருக்கின்றதென்றும் ஆதாரங்களில் இருக்கின்றன.

அப்படிச் சொல்லப்படுவதிலும் இப்பஞ்சம ஜாதிகள் என்பது இப்போது நமது நாட்டில் பெரும்பான்மையாய் இருக்கும் பல முக்கியமான ஜாதிக்காரர்கள் என்பவர்களே பெரிதும் இந்த விபசாரப் பெருக்கால் ஏற்பட்ட பஞ்சம ஜாதிகள் என்றே காட்டப்பட்டிருக்கின்றன. அந்த விபரத்தைத் தமிழ் அகராதியில் உள்ளபடி மற்றொரு பக்கம் பிரசுரித்திருக்கின்றோம். ஆகவே அதில் உதாரண மாக, இன்று தமிழ் நாட்டில் பிரபல ஜாதியும் பிரமுக ஜாதியும், என்று சொல்லிக் கொள்ளப்படுவதான வேளாள ஜாதியார் எனப்படுபவர்களே பஞ்சம ஜாதியில் சேர்ந்தவர்கள் என்றும், பஞ்சம ஜாதியிலும், பிராமணன் க்ஷத்திரிய குலப்பெண்ணைச் சோரத்தால் கலந்ததால் பிறந்தவர்கள் என்றும் குறிக்கப்பட்டிருக்கின்றன. இவர் களில் இந்தப் படியான வேளாளர் என்பவர்களில் விவசாயம் செய்பவர்களாயிருந்தால் அவர்களுக்குக் காணியாளர் என்று பெயர் என்றும், மற்றபடி சிற்றரசு, மந்திரித்துவம் முதலிய பதவிகளில் இருப்பவர்களாயிருந்தால் அவர்களுக்கு வேளான் சாமந்தர் என்கின்ற பெயர் என்றும், குறிக்கப்பட்டிருப்பதுடன் இவற்றிற்காதாரம் சுப்பரபோதகம், பிரம்ம புராணம், வைகாநசம், மாதவியம், ஜாதி விளக்கம் என்கின்ற நூல்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

தவிர மேல்கண்ட பிராமண ஜாதி ஆண், க்ஷத்திரிய ஜாதி பெண்ணை விவாகம் செய்து கொண்டதால் பிறந்த பிள்ளைகளே சவர்ணர் எனவும் தெலுங்கர் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அதாவது இது தெலுங்கு பாஷை பேசும் தெலுங்கு தேசத்தவரனைவரையும் குறிப்பிடத்தக்கதாகவே குறிக்கப்பட்டிருக்கிறது.

அதுபோலவே பிராமணன் வைசியப் பெண்ணுடன் கல்யாணத்தால் பிறந்த பிள்ளை அம்பட்டன் என்றும் சோரத்தால் பிறந்த பிள்ளைகள், குயவர் என்றும் நாவிதர் என்றும், குறிக்கப்பட்டிருக்கின்றது. அதுபோலவே பிரா மணன் சூத்திரப் பெண்ணுடன் கல்யாணத்தால் பிறந்த பிள்ளை பரதவர் அதாவது செம்படவர் என்றும், சோரம் செய்ததால் பிறந்தவர் வேட்டைக்காரர் அதாவது வேடுவர் என்றும் குறிப்பிடப் பட்டிருக்கின்றது. பிராமணப் பெண் ணுடன் சூத்திரன் விபசாரம் செய்ததால் பிறந்தவர்கள் சண்டாளர்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

பிராமணகுலப் பெண்களுடன் சண்டாளர் கூடிப் பிறந்த பிள்ளைகள் சருமகாரர் அதாவது சக்கிலிகள் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. க்ஷத்திரிய குலப்பெண்ணுடன் சண்டாளர் முதலியவர்கள் சேர்வதால் பிறந்த மக்கள் வேணுகர், (அதாவது வேணுகானம் செய்பவர்களும்) கனகர் (அதாவது தங்க வேலை செய்பவர்களும்) சாலியர் (அதாவது சாலியர் முதலிய நெசவு வேலை செய் வோர்களும்) ஆவார்கள் என்றும் கூறப்பட்டிருக்கின்றது.

இந்த மாதிரி கீழ் மேல் ஜாதிகள் கலந்து கலந்து வந்ததால் ஏற்பட்ட ஜாதிகளில் ஒன்றாகிய அயோவகச் ஜாதிப் பெண் இடம் நிடாதனுக்குப் பிறந்த பிள்ளைகள் பார்க்கவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இந்தப் படியே இப்போது அமலில் உள்ள ஜாதிகளை யெல்லாம் குறிக்கும்படியாகவே இன்னும் அநேக விஷயங்கள் காணப்படுகின்றன.

இதுபோலவே இன்னும் இரண்டொரு ஆராய்ச்சி நூல்களில் அதாவது அபிதான கோசம், அபிதான சிந்தாமணி முதலிய எல்லா இந்து பண்டிதர் களாலும் ஆதாரமாய் கொண்டாடும் புத்தகங்களில் மற்றும் பல ஜாதிகளை இதைவிடக் கேவலமாகவும் குறிக்கப்பட்டி ருக்கின்றதோடு 4 ஜாதி தவிர மற்ற ஜாதிகள் எல்லாம் மேல் கண்ட நான்கு ஜாதிக்குள் மேல் கீழாகவும், கீழ் மேலாகவும் கல்யாணம் செய்தும், விபசாரம் செய்தும் பிறந்த பிள்ளை களாக ஏற்பட்டவர்கள் என்றே கூறப்பட்டிருக்கின்றன.
செட்டியார்மார்களையும் ஆசாரிமார்களையும் பற்றி மிக மிக இழிவாகவே கூறப்படுகின்றது. ஆகவே ஜாதியை கட்டிக் கொண்டு அழுவது இவ்விழிவு களை மறை முகமாய் ஏற்றுக் கொள்ளுவதையே ஒக்குமென்பதைத் தவிர வேறில்லை.

உண்மையில் யாருக்கு யார் பிறந்திருந்தாலும் அதனாலேயே குற்றம் சொல்வதற்கில்லை என்பது நமது கொள்கையானாலும் ஒரு இழிவை கற்பித்து அதை நம் மக்கள் மீது சுமத்தி ஒரு பெரிய சமுகம் நிரந்தரமாய் அடிமையாயும் காட்டுமிராண்டியாயும் இருப்பதற்குச் செய்த காரியமே ஜாதிப்பிரிவும் பாகுபாடும் என்பதை எடுத்துக் காட்டவும் அவ்விதம் கொடுமையை ஒழிப்பதற் காகவுமே இதை எழுதுகிறோம்.
-விடுதலை,27.1.17

No comments:

Post a Comment