• Viduthalai
பஞ்சாபிலும் சமூகநீதி வெல்லும்!
திருச்சி, அக்.5 பெரியார் உலகத்திற்கு ஆதரவு தெரிவித்தால் மதிப்பு உயரும்; எதிர்த்தால் அவர்களின் உருவம் உலகத்திற்குப் புரியும்; பஞ்சாபிலும் சமூகநீதி வெல்லும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
3.10.2021 அன்று திருச்சி பெரியார் மாளிகையில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவ்விவரம் வருமாறு:
28 ஏக்கர் பரப்பளவில் 'பெரியார் உலகம்!'
திருச்சியையடுத்து 25 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள சிறுகனூரில் சுமார் 28 ஏக்கர் பரப்பளவில் பெரியார் உலகம் என்ற ஒரு சிறு உலகத்தை - அமெரிக்கா போன்ற நாடுகளில் இருக்கக்கூடிய 'டிஸ்ட்னி வேர்ல்டு' போல, குழந்தைகளுக்கும், அறிவியல் ஆர்வலர்களுக்கும் விளக்கம் அளிப்பதைப்போல, தந்தை பெரியார் அவர்களுக்கு 95 அடி உயர சிலையும், 40 அடியில் பீடமும் உருவாக்கி, அதற்கருகில், குழந்தைகளுக்கான நூல் நிலையம், பெரியார் கோளரங்கம், அறிவியல் கண்காட்சிகள், குழந்தைகள் படகு முகாம், பெரியார் ஒளி - ஒலிக்காட்சி ஒரு பக்கத்தில், சமூகநீதி, மகளிர், ஜாதி ஒழிப்பு, பண்பாட்டுப் படையெடுப்பை எதிர்த்து பெரியார் அவர்கள் நடத்திய பெரியாரின் போராட்டங்கள் இவையெல்லாவற்றையும் வரலாற்று ரீதியாகக் கொடுக்கப்படக் கூடிய அளவிற்கு, சிறப்புமிகுந்த பல்வேறு பகுதிகள் - பல அம்சங்களை உள்ளடக்கி, நான்கு அல்லது அய்ந்து கட்டங்களாக இந்த உலகம் நிர்மாணிக்கப்படவிருக்கிறது.
வரலாற்றுக் குறிப்போடு அமையவிருக்கிறது
அது வெறும் பெரியார் சிலை மட்டுமல்ல - தந்தை பெரியார் அவர்கள் 95 ஆண்டுகாலம் வாழ்ந்தார்கள் என்பதற்கான ஒரு வரலாற்றுக் குறிப்போடு அமைய விருக்கிறது. 40 அடி பீடம் அமைக்கப்பட விருக்கிறது.
அதைச்சுற்றிலும், பெரியாருக்கு முன் - பெரியா ருக்குப் பின் என்ற வரலாற்றை, சமூகநீதியிலும், பண்பாட்டுப் படையெடுப்பிலும் எப்படி திராவிட மாடல் ஆட்சி அமைந்தது போன்ற பல்வேறு காரியங் களுக்குப் பெரியார் கர்த்தாவாக - அடித்தள நாயகராக இருந்திருக்கிறார்கள் என்கின்ற வரலாற்றையும், மற்ற எல்லாவற்றையும் சுட்டிக்காட்டக் கூடிய அளவிற்கு மிகச் சிறப்பாக அமையவிருக்கிறது.
வாசிங்டனில்கூட, கருப்பின அமெரிக்கர்கள் தாங்கள் எப்படி அடிமைப்படுத்தப்பட்டோம் - பிறகு அந்த அடிமைத்தளையிலிருந்து எப்படி மீண்டோம்? எப்படி ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டு இன்றைக்கு மிகப் பெரிய அளவிற்கு, நாங்கள் கல்வியிலும், உத்தி யோகத்திலும் குறிப்பிட்ட அளவிற்கு வளர்ந்தோம் என்று காட்டுவதற்கு, ஒரு பெரிய வரலாற்றுப் பூங்காவை உருவாக்கியிருக்கிறார்கள்.
பகுத்தறிவுப் பகலவனின் 150 ஆம் ஆண்டு பிறந்த நாளில்...
அதுபோன்ற ஒரு வரலாற்று ஆவணமாகவும், பூங்காவாகவும், ஒரு சில மணிநேரத்தில் சுற்றிப் பார்க்கும்பொழுது, பல நூற்றாண்டுகால வரலாற்றை அவர்கள் புரிந்து கொள்ளக்கூடிய அளவிற்குக் காட்சிகளாகவும், அதேபோல, கருத்தியல்களாகவும் உருவாக்குவதற்கு, பல்வேறு நிபுணர்களின் ஆலோ சனைகளைப் பெற்று, பல்வேறு துறைகளில் இருக்கக் கூடிய பொறியாளர்கள், கட்டடக் கலைஞர்கள், எழிற்கலைஞர்கள், சிறந்த சிந்தனையாளர்கள், ஆவணத் துறையில் இருக்கக்கூடிய அனுபவமிக்கவர்கள் ஆகி யோருடைய அனுபவங்களையெல்லாம் பயன்படுத்தி, சுமார் ஏழு அல்லது எட்டாண்டுகளில் - அதாவது தந்தை பெரியாருக்கு 143 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இப்பொழுது கொண்டாடப்பட்டது. பகுத்தறிவுப் பகலவனின் 150 ஆம் ஆண்டு பிறந்த நாளில், பெரியார் உலகத்தின் பெரும்பணிகள் முடிந்து, நடைமுறைக்கு வரக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.
அதற்கான எல்லாவிதமான ஆணைகளையும் ஒன்றிய - மாநில அரசுகளிடமிருந்து பெற்றாலும்கூட, கடைசியாக ஒரே ஒரு தடையில்லா சான்றிதழும், ஆணையும் பெறவேண்டி, கடந்த நான்கு ஆண்டு களாக அக்கோப்பு கிடப்பில் போடப்பட்டு இருந்தது.
சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திராவிட முன்னேற்றக் கழக புதிய ஆட்சி - சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்புக்கு வந்த பிறகு, நான்கு ஆண்டுகாலம் தேங்கிக் கிடந்த கோப்பை எடுத்து, அனுமதி கொடுத்திருக்கிறார்கள். அதற்குரிய பணிகள் முறைப்படி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
தொடக்கவிழாவிற்கு உங்களையெல்லாம் அழைப் போம். அடிக்கல் நாட்டு விழா நடைபெறவிருக்கிறது. ஓரிரு மாதங்களில், முதற்கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெறும். இன்னும் அதற்கான தேதி உறுதி செய்யப்படவில்லை. தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளான டிசம்பர் 24 ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழா தொடங்கவிருக்கிறது.
ஏற்கெனவே அந்த இடத்தில் மாநாடு நடைபெற்றபொழுது, தமிழகம் முழுவதுமிருந்தும் தோழர்கள் அங்கே வந்திருக்கிறார்கள்.
திருச்சி - சென்னை முதன்மைச் சாலையில் அமைந்திருக்கின்ற காரணத்தினால், பலருடைய கவனத்தையும் ஈர்க்கக்கூடிய அளவில் இருக்கும்.
பெரியார் உலகம் வரலாற்றுச் சின்னமாகத் திகழும்
தமிழ்நாட்டு வரலாற்றுச் சின்னங்களில் எப்படி திருவள்ளுவர் சிலை இருக்கிறதோ, மாமல்லபுரம் இருக்கிறதோ அதுபோல, உலக வரைபடத்தில் மிகத்தெளிவாக சிறுகனூரும் இடம்பெறும்; பெரியார் உலகமும் வரலாற்றுச் சின்னமாகத் திகழும்.
செய்தியாளர்: இந்தத் திட்டத்திற்கு ஒரு சில அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்; இந்தத் திட்டத்தினுடைய பணிகளை எப்பொழுது தொடங்குவீர்கள்?
தமிழர் தலைவர்: யார் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்? ஆதரவு தெரிவித்தால், அவர்களுடைய தகுதி உயரும்; எதிர்ப்பைத் தெரிவித்தால், அவர்களுடைய உருவம் உலகத்திற்குப் புரியும்.
செய்தியாளர்: பஞ்சாபில் அரசியல் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறதே?
தமிழர் தலைவர்: உலகம் முழுவதும் சமூகநீதி காற்று அடித்துக் கொண்டிருக்கிறது. மேலே புறத்தோற்றம் அது அரசியலாக இருந்தாலும், பஞ்சாபிலும் ஜாதி முறைகள் உண்டு. காலங்காலமாக வாய்ப்பில்லாத ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர், இப்பொழுது முதலமைச்சராக வரக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்.
அழுத்தப்பட்டவர்களுடைய உரிமைக்குரலுக்கான போராட்டம்
ஏற்கெனவே அங்கே நடந்த போராட்டங்கள், வெறும் பதவிச் சண்டை மட்டுமல்ல - சமூகநீதிக்கான வாய்ப்புக் கிடைக்குமா? என்பதற்காக அழுத்தப்பட்டவர்களுடைய உரிமைக்குரலுக்கான போராட்டமாக இருந்தது.
அதை காங்கிரசினுடைய தலைமை அடையாளம் கண்டுகொண்டு வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்கள். அதைப் பொறுக்காத பா.ஜ.க., சித்து விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கின்றது. இந்த சித்து விளையாட்டு எந்த அளவிற்குப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
இதுவரையில் பா.ஜ.க. வளர்ந்தது, வளர்ந்தது என்று சொன்னதெல்லாம், அவர்கள், மற்ற கட்சிக்காரர்களை தங்களிடம் அழைத்துக்கொண்டு, அவர்களின் தோள்மீது ஏறி, அவர்களை கட்சி மாற வைத்துத்தான் வளர்ந்திருக்கிறார்கள்.
பஞ்சாபிகள் அவ்வளவு சுலபத்தில் ஏமாறமாட்டார்கள்
வடகிழக்கு மாநிலங்களானாலும், அதேபோல, கோவா, மணிப்பூர் போன்ற மாநிலங்களானாலும் என்ற வரலாற்றில், பஞ்சாபையும் சேர்க்க முடியுமா? என்று அவர்கள் முயற்சிக்கிறார்கள். அவர்களது முயற்சிகள் எந்த அளவிற்கு இருக்கும் என்பதற்கு மாறாக, பஞ்சாபிகள் அவ்வளவு சுலபத்தில் ஏமாறமாட்டார்கள்.
ஏமாந்தாலும், வருகின்ற சட்டமன்றத் தேர்தலை மனதில்கொண்டு, இந்தத் திட்டங்களை அவர்கள் உருவாக்கினாலும்கூட, விவசாயிகள் விழிப்போடு இருக்கிறார்கள்.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.
No comments:
Post a Comment